Advertisement

அத்தியாயம் – 17

 

அறைக்குள் வந்த மகிழை மேலும் கீழுமாய் பார்த்தான் வேந்தன். எதுவோ சொல்ல வந்திருப்பானோ என்று அவன் எண்ண வந்தவனோ நேராய் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக்கொண்டான். (இப்படி ஒரு முதலிரவுடா வேந்தா உனக்கு… கிரகம்)

 

“டேய் மகிழ் நீ என்ன இங்க??” என்று கடுப்பாய் பார்த்தான் அவனை.

 

“என்னை எதுவும் கேட்காதே யாழ் நானே செம கடுப்புல இருக்கேன்”

 

“டேய் எனக்கு வரவேண்டிய கடுப்பு உனக்கு ஏன்டா வருது??”

 

“பின்ன என்ன என்னை உன் கூட வந்து படுக்க சொன்னா கடுப்பா இருக்காதா எனக்கு” என்று அவன் சொல்லிய தொனியில் வேந்தனின் முகம் விளக்கெண்ணை குடித்தது போலானது.

 

அவன் முகம் இப்போது சுருங்க “யார் சொன்னா??”

 

“அம்மாவும் அத்தையும்” என்று சொல்ல கொஞ்சம் அமைதி வேந்தனிடத்தில்.

 

அம்மா என்று மட்டும் சொல்லியிருந்தால் நிச்சயம் எழுந்து வெளியில் சென்று பேசியிருப்பான், உடன் அத்தையையும் சேர்த்து சொல்ல அமைதியும் யோசனையும் அவனுக்கு. தன் உணர்வுகள் கட்டுப்படுத்தி மீண்டும் கேட்டான்.

 

“எதுக்காம்??”

 

“உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமான நேரம் இன்னும் வரலையாம்… இதுல வளர்பிறை தேய்பிறைன்னு வேற ஏதோ சொல்லிட்டு இருக்காங்க. எந்த நாளும் அவ்வளவா நல்லா இல்லையாம்”

 

“நல்ல நாள் இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் அது பொருத்தமான தேதியா இல்லையாம். அப்படி இப்படின்னு அடுத்த பதினைஞ்சு நாள்ல ஆடி பிறக்குதாம்… அதுனால இன்னும் ஒன்றரை மாசம் கழிச்சு தானாம் எல்லாம்”

 

வேந்தனின் முகம் கோபத்தில் சிவந்தது. “ப்ரோ சாரி நான் சொல்லி பார்த்திட்டேன் யாரும் கேட்கற மாதிரி இல்லை”

 

ஒன்றும் பதில் பேசவில்லை அவன், பேசாமல் படுத்துக்கொண்டான்.

 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்பது அவனுக்கொன்றும் புதிததல்ல தான். ஆனால் இது ஊரறிய நடந்த திருமணம் என்பதில் அவ்வளவு மகிழ்ந்து போயிருந்தான்.

 

ஆயிரம் பிணக்குகள் இருந்தாலும் தன்னவள் தன்னுடன் இருப்பாள் என்ற எண்ணம் கொஞ்சம் மனதில் நிம்மதியை விதைத்திருந்தது. இப்போது அதற்கு பெரிய ஆப்பு, தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை.

 

கண்ணை மூடியவனுக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. சட்டென்று ஏதோ சந்தேகம் எழ “சரி இப்போ அவ வரலை ஓகே. நீ எதுக்கு இங்க வந்தே… உன் ரூம்ல படுக்க வேண்டியது தானே”

 

“நான் என்ன அப்படியே எழுந்து ஓடிருவனா என்ன” என்று மகிழை பார்த்து கேட்டான்.

 

“நீ ஓட மாட்டேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு” என்றுவிட்டு இடைவெளி விட்டான்.

 

“புரியலை எனக்கு”

 

“உன் பொண்டாட்டியும் என் பொண்டாட்டியும் ஒரே ரூம்ல சிறை வைச்சிருக்காங்க”

 

“எங்க நான் எழுந்து ஓடிருவனோன்னு உன்னை தான் எனக்கு காவலா வைச்சிருக்காங்க” என்று அலுத்து சலித்து அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டான் வேந்தன்.

 

‘என்னை பார்த்தா அவ்வளவு நல்லவனாவா தெரியுது’ என்று தன்னையே கேட்டுக்கொண்டான் அவன்.

 

“நல்ல வேளை எனக்கும் உனக்கும் ஒண்ணா கல்யாணம் நடக்கலை. நடந்திருந்தா நான் உன்னை மாதிரி சும்மா எல்லாம் இருந்திருக்க மாட்டேன்”

 

“நல்ல வேளையா போச்சு ஆடி முடிஞ்சு தான் எனக்கு கல்யாணம். இல்லைன்னா போங்கடா நீங்களும் உங்க சாங்கியமும்ன்னு சொல்லிட்டு என் பொண்டாட்டியை தள்ளிட்டு போயிருப்பேன்” என்று மகிழ் சொல்லவும் வேந்தன் நொந்தே போனான்.

 

“டேய்…” என்று பல்லைக் கடித்தான் மற்றவனை பார்த்து.

 

“சரி சரி டென்ஷன் ஆகாத படுத்து தூங்கு” என்றுவிட்டு மகிழ் அப்புறம் திரும்பி படுக்க வேந்தனுக்கு தூக்கம் தொலைந்து போனது.

 

‘அவளை நான் ஒண்ணும் பண்ண மாட்டேன். ஆனா பேசக் கூட விட மாட்டாங்களா??’ என்ற ஆதங்கம் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது அவனிடத்தில். அதை வாய்விட்டு கேட்டு அதற்கு ஒன்றை அவர்கள் சொன்னால் என்ன செய்ய என்று பேசாமல் விட்டான்.

 

திருமணம் திருச்சியில் நடந்ததால் மாப்பிள்ளை வீட்டில் கால் வைக்க வேண்டும் என்று மறுநாள் பிளைட்டில் பெங்களூர் வந்தடைந்தனர்.

 

பிளைட்டில் கூட அவளை அவன் பக்கம் அமரவைக்கவில்லை. ‘என்ன கொடுமையடா இது’ என்று அவனுக்கு ரத்தக்கண்ணீர் வராத குறை தான்.

 

ஏதோ போனால் போகட்டும் என்று எண்ணி காரில் அவனருகில் அமரவிட்டார்கள் அவளை. அவளுக்கு அடுத்து குமுதா அமர்ந்திருந்தாள்.

 

இந்தளவுக்காவது விட்டார்களே என்று பெருமூச்சு அவனுக்கு. வீட்டிற்கு வந்ததும் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆலம் சுற்ற அவனுக்கு சென்னை ஞாபகம் வந்தது.

 

திரும்பி முல்லையை பார்க்க அவள் இவனை பார்த்தாள் தானே!! ‘ரொம்ப முக்கியம் அதையே பாருடி’ என்று கோபம் தான் கனன்றது அவனுக்கு.

 

வாசல் வரை தான் இருவரும் சேர்ந்து நின்றது. வீட்டிற்குள் சென்றதும் அவளை கண்மணி தனியறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

 

வேந்தனின் பொறுமை உருகும் பனியாய் கரைந்தது. திருச்சி, சென்னை, பெங்களூர் என்று இரண்டு நாட்கள் அலைந்து மூன்றாம் நாள் பெங்களூருக்கே வந்து சேர்ந்தனர்.

 

அவளிடம் தனியே பேச அவன் எடுத்த முயற்சிகள் அத்தனையும் வீண். வீட்டில் யாராவது ஒருவர் அவளருகே இருந்து கொண்டே இருந்தனர்.

‘அடப்போங்கடா’ என்ற கோபமும் ‘இவளுக்காச்சும் என்கிட்ட பேசணும்ன்னு தோணுதா’ என்ற ஆத்திரமும் தோன்ற அவனும் எப்படியோ போங்க என்றுவிட்டு அன்று மாலையே டெல்லிக்கு பறந்துவிட்டான்.

கிளம்பும் தருவாயில் கூட அவளை பார்த்து தான் நின்றிருந்தான். முல்லை தலையை நிமிர்த்தினால் தானே!! இதற்கு மேல் நின்றால் தன் வாய் சும்மாயிருக்காது எதையும் பேசிவிடும் என்று எண்ணி கிளம்பிவிட்டான்.

 

டெல்லிக்கு சென்றதும் தான் அவனுக்கு ஒன்று தோன்றியது அவள் போன் நம்பராவது வாங்கியிருக்கலாமே என்று.

 

‘வேந்தா!! வேந்தா!! இப்படியாடா இருப்பே’ என்று தன்னையே திட்டிக் கொண்டான். நாளைக்கு போன் பண்ணி நம்பர் வாங்கிடணும் என்று எண்ணிக்கொண்டு இரவு உறங்கிவிட்டான்.

 

மறுநாள் காலையில் அவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அலுவலகம் சென்ற பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டான்.

 

அங்கு சென்றாலோ ஒரு வாரமாக இவன் இல்லாததில் வேலை மலை போல் குவிந்து கிடந்தது. எல்லாம் முடித்து அவன் சற்று ஆசுவாசமாக மதிய உணவு இடைவேளை இடையிட்டது.

 

உணவருத்திவிட்டு சற்று ரிலாக்ஸாக அமர்ந்தவன் ராஜத்திற்கு அழைத்து கேட்க சங்கடப்பட்டுக்கொண்டு அவனின் வீட்டு எண்ணுக்கு அழைத்தான்.

 

ஒரு வேளை முல்லையே போனை எடுத்தால் என்று ஒரு ஆவல் அவனுக்கு. அபியின் எண்ணும் அவனிடத்தில் உண்டு தான் என்றாலும் ஒருவேளை அவன் பள்ளிக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி அவனுக்கு அழைக்கவில்லை.

 

இங்கு முல்லைக்கோ பெரும் தவிப்பாய் இருந்தது. திருமணம் முடிந்த அன்று அவ்வளவு நிம்மதி அவளுக்கு.

 

எப்படியாவது இரவு அவனிடம் பேசி தன் மனதை அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவளின் எண்ணத்தில் வீட்டினர் அழகாய் இடியை இறக்கினர்.

 

‘அச்சோ பேசக் கூட முடியாதா!! அந்த மனுஷன் முகமே சரியில்லையே!! காலையில இருந்து என் முகத்தை கூட பார்க்காம ஏதோ கடமையா தானே இருந்தாரு’ என்று கவலை ஒட்டிக் கொண்டிருந்தது அவளுக்கு.

 

இதில் அவளுடன் அமுதாவும் குமுதாவும் அதே அறையில் அடைக்கலமாக மெதுவாய் அமுதாவின் காதை கடித்தாள்.

 

அவளும் அதற்கு மேல் ஏகக்கடுப்பில் பேச முல்லை ஒன்றும் செய்யாமல் படுத்துக் கொண்டாள். அதற்கு பின் வந்த நாட்களும் அவளால் அவனுடன் நேரடியாய் பேசவே முடியவில்லை.

 

யாராவது ஒருவர் அவளுடனே இருந்தனர். இருவருக்குமே புரியவில்லை யார் அருகில் இருந்தால் என்ன இவள் என்னவள் என்று அவனும் இவன் என்னவன் என்று அவளும் உரிமையாய் பேசியிருக்கலாம் என்று.

 

வேந்தன் தான் ஒரு முறை செய்த தவறுக்காய் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ள முடியாமல் தவித்திருந்தான் என்றால் முல்லைக்கு அவனாய் பேசுவான் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

 

இரண்டும் இல்லாமல் அவன் ஊருக்கு கிளம்பி சென்றது தான் மிச்சம்.

 

அதிலும் கிளம்பும் தருவாயில் அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கண்ணில் நீர் கட்டிக்கொண்டது.

 

கிளம்பும் அவனிடம் அதைக் காட்டிக்கொள்ள மனமில்லாமல் தான் அவன் எதுவும் நினைத்துக் கொள்ளட்டும் என்று தலை குனிந்து நின்றிருந்தாள்.

 

கொஞ்சம் ஏக்கமாக கூட இருந்தது. தன்னையே அவள் திட்டிக்கொண்டது தான் மிச்சம். ஒழுங்கா அவர் வந்து பேசும் போதே சரின்னு சொல்லியிருக்கலாம் போல என்று காலத்தாமதமாய் மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

 

வீட்டு பெரியவர்கள் மகிழுக்கு திருமணத்திற்கு நாள் குறிக்க வெளியே சென்றிருந்தனர்.

 

வீட்டில் மகிழ், அமுதா, குமுதா, முல்லை, அபிஷேக் என்று சிறியவர்கள் மட்டுமே.

வீட்டு தொலைப்பேசி அடிக்க வேகமாய் வந்து எடுத்தது அமுதா. “ஹலோ” என்று கேட்ட பெண் குரலை உள்வாங்கிய வேந்தனுக்கு அது அவளில்லை என்று தெரியவும் கொஞ்சம் கடுப்பாய் இருந்தது.

 

“நான் வேந்தன் பேசறேன். முல்லை எங்கே??” என்றான் எடுத்த எடுப்பிலே.

 

“இருங்க அத்தான் அவ உள்ள இருக்கா நான் கூப்பிடுறேன்” என்று சொன்னவள் ஆவென்று கத்தினாள்.

 

ஒரு நிமிடம் வேந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னாச்சு எதுக்கு கத்துறா’ என்று எண்ணி அதை கேட்கலாம் என்று நினைக்க மறுபுறம் இரு குரல்கள்.

 

“சும்மாவேயிருக்க மாட்டீங்களா நீங்க… உங்க அண்ணா கூப்பிடுறார் எங்க அக்காகிட்ட பேசணுமாம்” என்றவளின் குரல் தேய ஆரம்பித்தது.

 

“ஹேய் நான் பேசுறேன் அவன்கிட்ட” என்ற குரல் அருகில் இருந்தது யார் என உறுதிப்படுத்த ‘வாழுறான்’ என்று இம்முறையும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

 

“டேய் ப்ரோ என்னடா இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க, வீட்டில யாருமில்லைன்னு தெரிஞ்சு தான் கூப்பிட்டியா. இரு என் ஆளு உன் பொண்டாட்டியை கூப்பிட போயிருக்கா இப்போ வந்திருவா. என்ஜாய் பண்ணுடா யாழ்” என்றான்.

‘டேய் உன்கிட்ட பேசவாடா நான் போன் பண்ணேன்’ என்று சலித்துக் கொண்டான் வேந்தன்.

 

“என்னடா லைன்ல இருக்கியா??”

 

“இருக்கேன்… இருக்கேன்” என்று பல்லைக்கடித்தான்.

 

அவனின் மாறுப்பட்ட குரலை உணர்ந்த மகிழ் அவனை சீண்ட எண்ணி அங்கு அப்போது சென்றுக் கொண்டிருந்த அபியை நிறுத்தி “அபி வேந்தன் பேசுறான், பேசிட்டு என்கிட்டே கொடு” என்றான். (சத்திய சோதனைடா வேந்தா உனக்கு)

 

மகிழ் அருகில் இருந்தால் அவனை நொங்கெடுத்திருப்பான் அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு.

 

அதோ இதோ என்று அவனின் மனைவியும் வந்து போனை எடுத்தாள். ஏற்கனவே பயங்கரமான கடுப்பில் இருந்தவன் அவள் குரல் கேட்டதும் “இவ்வளவு நேரமா நீ வந்து போனை எடுக்க” என்று சிடுசிடுத்தான்.

 

“எதுக்கு இப்படி சொல்றீங்க?? இப்போ தான் அமுதா சொன்னா அவ சொன்னதும் வந்துட்டனே!!”

 

“ஆமா வந்துட்டா ஆடிக்கு வர சொன்னா அமாவாசைக்கு வந்து நிக்குற” என்றவனின் குரல் இன்னமும் இயல்பிற்கு வந்திருக்கவில்லை.

 

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?? எதுக்கு என் மேல பாயறீங்க… நான் என்ன செஞ்சேன் உங்களை” என்றவள் தன் பேச்சை வழக்கம் போலவே ஆரம்பித்திருந்தாள்.

 

“ஆமா பாயறாங்க உன் மேல. அப்படியே பாய்ஞ்சுட்டாலும்…” என்று அவன் முணுமுணுத்தது அவளுக்கு தெளிவாய் கேட்டது.

 

“என்ன சொன்னீங்க??”

 

“ஒண்ணும் சொல்லலை”

 

“அப்போ எதுக்கு போன் பண்ணீங்க??” என்று அவள் கேட்டதும் தான் அவளுக்கு அவன் எதற்கு அழைத்தான் என்ற ஞாபகம் வந்தது அவனுக்கு.

 

“உன் போன் நம்பர் சொல்லு”

 

“எதுக்கு??” என்று வீணே அவனிடம் பிடிவாதமாய் கேட்டாலும் ‘அப்பாடி இவருக்கு இப்போவாச்சும் இது தோணிச்சே’ என்ற நிம்மதி தான் அவளுக்கு.

 

“சொல்லுடி” என்று அவன் அப்புறம் பல்லைக்கடிக்க வேகமாய் தன் கைபேசி நம்பரை அவனிடம் சொன்னாள்.

 

“நான் நைட் உனக்கு கூப்பிடுவேன் ஒன்பது மணிக்கு. புது நம்பர்ன்னு எடுக்காம இருக்காதே” என்றவனின் குரல் முற்றிலும் இறங்கி தணிந்து கிட்டத்தட்ட அவளிடம் குழைந்து ஒலிக்க முல்லை முகம் சிவக்க ஆரம்பித்தது.

“ஹ்ம்ம்…” என்ற முனகல் மட்டுமே அவளிடத்தில்.

 

“சரின்னு சொல்லு”

 

“சரி…”

 

“நான் போனை வைக்கிறேன். எனக்கு இப்போ வேலையிருக்கு. டைம் கிடைக்கும் போது மெசேஜ் பண்றேன், வாட்ஸ்அப்ல இருக்கியா” என்று அப்போது தான் ஒவ்வொரு விபரமாக கேட்டான்.

 

“ஹ்ம்ம் இருக்கேன்…”

 

“நெட் இருக்கா…”

 

“இல்லை… அது வீட்டில நெட் உண்டு… அங்க…”

 

“அந்த தடியன் மகிழ்கிட்ட நம்ம வீட்டு நெட் பாஸ்வார்ட் வாங்கி போடு. இல்லைன்னா என்கிட்ட சொல்லு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை யாரோ அழைக்கக அவர்களுக்கு ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

‘இவருக்கு இந்த பாஷை வேற தெரியுமா. ஆனாலும் முல்லை நீ என்னடி செய்வ, உனக்கு இங்கிலீஷ் தெரியாது. ஹிந்தி தெரியாது. இதுல நீ அவர்க்கூட எப்படி குடித்தனம் நடத்தப் போறியோ அந்த ஊருக்கு போய்’

 

“ஓகே பை” சொல்லி அவன் போனை வைத்தான்…

Advertisement