Advertisement

அத்தியாயம் – 16

 

மகிழ் அமுதாவை முன்பே பார்த்திருக்கிறான். ஒரு முறை அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த போது கண்டிருக்கிறான் அவளை.

 

அவன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் அப்போது.

 

அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த தருணம் அமுதாவின் குடும்பத்தினர் விடுமுறைக்கென்று வந்திருந்தனர் அங்கு.

 

கரிகாலனின் தந்தைக்கு தான் கோபம் மலையளவு இருந்ததே தவிர்த்து அவரின் அன்னைக்கு மகனை காண வேண்டும் என்ற தவிப்பு இருந்தது.

 

மருமகளை பார்க்க நினைக்கவில்லை ஆனால் மகனை தேடியது அவருள்ளம். இப்போது பேரனும் வந்து சென்றதில் இருந்து அவருக்கு அவனை பார்க்க ஆவலானது.

 

நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது கரிகாலனும் அங்கு வந்து செல்வார். வருடதிற்கு ஒரு முறையோ அல்லது இரு தரமோ வந்து செல்வார். அப்படி தான் சென்ற முறையும் இந்த முறையும் மகிழ் அவருடன் வந்திருந்தான்.

 

நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அமுதாவை கண்ட மாத்திரத்திலேயே அவனுக்கு பிடித்துப் போனது அப்போது. கூடுதலாக அத்தை மகள் என்ற எண்ணம் வேறு அவளை தொடர்ந்து பார்த்திருந்தான்.

 

அப்போது பதின்பருவ பெண்ணவள், தன்னை ஒருவன் பார்க்கிறான் என்ற ஆர்வத்தில் இவளும் பதில் பார்வை கொடுத்திருந்தாள் அவனுக்கு.

 

அவளின் பாட்டி சொல்லியிருந்தார் அவன் தான் அவளின் மாமன் மகன் என்று.

 

சொந்தத்தில் இப்படி ஒரு மாமன் மகனை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

வருடங்கள் சில தன்னைப் போல கடந்திருக்க அவள் மனதிலும் சரி அவன் மனதிலும் சரி ஒருவர் மீதான மற்றவரின் ஈர்ப்பு குறையவில்லை.

 

பூனாவில் இருந்து திருச்சிக்கே வந்துவிட்ட பிறகு ஒவ்வொரு விடுமுறைக்கும் அவளின் மனம் அவனைத் ஆவலாய் தேடி அலைந்திருந்தது.

 

அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஓர் நாள் மாலை கல்லூரி முடிந்து அவள் வந்துக்கொண்டிருந்த போது அவளை நோக்கி வந்தவனை கண்டு சுரம் தப்பியது அவளுக்கு.

 

‘இவரா?? இவர் எங்கே இங்க?? என்னை அடையாளம் தெரியுமா??’ என்ற யோசனையோடு அவள் நடக்க மகிழ் நேராய் அவள் முன் வந்து நின்றிருந்தான் இப்போது. (அப்பா பிள்ளைன்னு நிருப்பிக்கறான்…)

உடன் அவளின் தோழி ஒருத்தி மட்டுமே இருக்க அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

 

அமுதாவோ “என்னோட ரிலேஷன் தான் நீ முன்னாடி போ. நான் பேசிட்டு வர்றேன்” என்று சொல்லி தோழியை அனுப்பினாள்.

 

“அப்போ உனக்கு என்னை நல்லா அடையாளம் தெரியுது” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

 

உள்ளுக்குள் படபடப்பாய் இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல் “ஏன் தெரியாம??” என்றாள்.

 

“நான் லண்டன் போறேன் ஆபீஸ் வேலையா!!” என்றுவிட்டு இடைவெளி விட்டான்.

 

‘அதை சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தாராமா’ என்று கேள்வி கேட்டது அவளின் மனம். கொஞ்சம் வருத்தமும் அதில் இருந்ததோ என்ற சந்தேகம் அவளுக்குமே.

 

“பதிலே காணோம்”

 

“நீங்க என்கிட்ட குவஸ்டியன் கேட்கலையே… இன்பார்மெஷன் தானே சொல்லிட்டுக்கிட்டு இருக்கீங்க” என்ற அவளின் தெளிவான பதிலில் கொஞ்சம் அயர்ச்சி தான் அவனுக்கு.

 

“ரொம்ப தான் தெளிவு” என்று இடித்துக் கொண்டான்.

“ஊருக்கு போறதுக்கு முன்னாடி பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றான் மொட்டையாய்.

 

“தாத்தா பாட்டி பார்த்திட்டீங்க தானே!! அப்போ கிளம்ப வேண்டியது தானே!!” என்றாள் கொஞ்சம் சூடாக.

 

‘இவரு வருவாரு நம்மை வெறுப்பேத்துவாரு நாம பார்த்திட்டு சும்மா இருக்கணுமா’ என்ற கோபம் தான் அவளுக்கு.

 

“ஆமாமா பார்த்தாச்சு இனி என்ன கிளம்ப வேண்டியது தான்” என்றவன் ஒன்றும் சொல்லாமலே கிளம்பியும் சென்றுவிட்டான் அன்று.

 

அதன்பின் அவனை இன்று தான் பார்க்கிறாள். அவன் மேல் கொஞ்சம் கோபம் இருந்தாலும் மூச்சுமுட்ட அவன் நினைவுகளும் அவன் மீதான காதலும் நிறைந்திருந்தது அவளுக்கு.

 

வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க என்று ஆரம்பித்த போது லேசாய் ஒரு வலி எழத்தான் செய்தது.

 

மகிழ் வராததில் ‘அவருக்கு இஷ்டமிருக்கோ!! இல்லையோ!!’ என்று எண்ணிக்கொண்டு வீட்டினரிடம் பெரிதாய் தன் மறுப்பை காட்டியிருக்கவில்லை அவள்.

 

ஐந்து நாட்களுக்கு முன் அவள் தந்தை அவளிடம் மகிழுக்கு உன்னை கேட்கிறார்கள் என்று சொன்ன போது மனம் என்ன உணர்ந்ததென்று அவளுக்கே புரியவில்லை. நிச்சயம் அதில் மகிழ்ச்சி என்பது தெரியும் ஆனாலும் இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் வேறு.

 

வேந்தன் முல்லை பிரச்சனை வேறு இன்னும் முடிவுக்கே வரவில்லை. இதில் இது சாத்தியமா என்ற வினா வேறு அவளுக்கு.

 

எல்லாம் முடிந்தும் முடியாமலும் இருந்த நிலையில் இதோ அவன் முன்னிலையில் அவன் அணைப்பில் வேறு நிற்கிறாள்.

 

“விடுங்க…” என்று கூச்சத்துடன் அவனிடமிருந்து விலக முனைந்தாள். அவனோ அவளை இறுக்கிப் பிடித்திருந்தான்.

 

“முடியாது இவ்வளவோ வருஷமா இதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். கிடைச்ச சான்ஸ் என்னால மிஸ் பண்ண முடியாது” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க அவளுக்குள் ஜிவ்வென்றிருந்தது.

 

“எத்தனை வருஷமா??” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

 

“உன்னை எப்போ பார்த்தேனோ அப்போல இருந்து”

 

“அப்போ ஏன் அன்னைக்கு நீங்க சொல்லலை??”

 

“சும்மா உன்னை பார்க்கணும்ன்னு தோணிச்சு வந்தேன். உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்ல தான் வந்தேன்”

“அப்புறம் படிக்கற பொண்ணை டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு என்னையவே கண்ட்ரோல் பண்ணிட்டு போயிட்டேன். அதான் இப்போ வந்துட்டேன்ல” என்றவனின் குரலில் தாபமிருந்தது.

 

“விடுங்க எல்லாரும் வெளிய இருக்காங்க. போகணும்”

 

“போகலாம் இன்னும் கொஞ்ச நேரம்”

 

“வேணாம் எனக்கு பயமாயிருக்கு…” என்றவளின் உடலில் நடுக்கத்தை உணரவும் தான் அவளை விட்டான் அவன்.

 

“என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு தானே கூட்டி வந்தீங்க…”

 

“ஆமாம்…”

 

“என்னன்னு சொல்லுங்க…”

 

“அதான் செஞ்சு காமிச்சுட்டேனே…” என்று சொல்லி அவன் கண்ணடிக்க “உங்களை…” என்றவள் கையை ஓங்கிக் கொண்டு அவனருகில் வந்திருந்தாள்.

 

“எனக்கு தெரியும் நீயும் என்னை விரும்பினேன்னு அதனால தான் ரொம்ப தைரியமா எங்க வீட்டு ஆளுங்களை மிரட்டி கூட்டிட்டு வந்தேன்”

 

“சரி நம்ம விஷயத்தை விடுவோம். வேந்தன் பத்தி பேசணும். உன்னோட சிஸ்டர் எப்படி??”

“எப்படின்னா??”

 

“அவங்களுக்கு வேந்தன் பத்தி என்ன அபிப்பிராயம்??”

 

“அதை என்கிட்ட நீங்க கேட்குறது விட அவகிட்ட உங்க பிரதரை கேட்க சொல்லுங்க” என்றவளை முறைத்தான் மகிழ்.

 

“எதுவா இருந்தாலும் நேரடியா பேசறது தான் சரியா வரும். இடையில எல்லாம் யாரும் யாரைப்பத்தியும் அபிப்பிராயம் சொல்றதோ கருத்து சொல்றதோ சரியாவே வராது. நான் சொல்றது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன்” என்றாள் சேர்த்து.

 

அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. “சரி நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

பின் பெரியவர்கள் மற்ற விஷயங்கள் பேச ஆரம்பிக்க வேந்தனின் தெளிவற்ற முகத்தை பார்த்த ராஜதுரை அவர்கள் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.

 

“ஏன் மச்சான் இவங்க கல்யாணம் ஊரறிய செய்யப் போறோம். அப்படியே வேந்தன் தம்பிக்கும் முல்லைக்கும் செஞ்சுட்டா என்ன”

 

“யாருக்கும் தெரியாமலே நடந்ததை சொந்தபந்தம் அறிய நடத்திட்டா என்ன” என்று அவர் சொல்லவும் மகிழ் அவரை நன்றி பார்வை பார்த்தான்.

 

வாய் மெதுவாய் “தேங்க்ஸ் மாமா” என்று முணுமுணுத்தது.

 

அவர் அப்படி சொல்லவும் வேந்தன் திகைத்து எல்லோரையும் பார்த்து வைத்தான்.

 

முல்லையின் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் அவனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

 

“என்ன அண்ணி நீங்க என்ன சொல்றீங்க??” என்று ராஜத்தை பார்த்தார் அவர்.

 

“நீங்க சொன்னதும் சரி தான் அப்படியே செஞ்சுடுவோம்” என்றார் அவர்.

 

கண்மணி எப்போதும் போல் குட்டையை குழப்ப ஆரம்பித்தார். “எதுக்கும் பிள்ளைய ஒரு வார்த்தை கேட்டுக்கிடுங்க??”

 

“அதுக்கெல்லாம் அவசியமேயில்லை கண்மணி. கால நேரம் கூடி வந்திருக்கு. எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு. நல்லபடியா கல்யாணம் செஞ்சு நாங்க வசந்தியை அனுப்பி வைக்குறோம்” என்றார்.

 

வேந்தன் இப்போதும் அவள் முகத்தை பார்க்க அவள் உணர்ச்சிகளை தொலைத்து நின்றிருப்பதாய் தோன்றியது அவனுக்கு.

 

அவனுக்கு என்ன தெரியும் அவள் வெட்கத்தை மறைத்து தலை குனிந்து நின்றிருக்கிறாள் என்று. அவன் முன் தன் உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் பிரம்மப்பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனறியான்.

 

முல்லைக்கு தன் மாமாவும் அத்தையும் வந்து போன அன்று அன்னையிடம் பேசியது நினைவுக்கு வந்தது.

____________________

 

“வசந்தி”

 

“ம்மா…”

 

“என்னம்மா பண்ணுறே??”

 

“நாளைக்கு எக்ஸாம்க்கு படிக்கறேன்ம்மா…”

 

“சரி படிம்மா” என்றுவிட்டு வெளியே செல்லப்போனார்.

 

“என்னம்மா ஏதோ பேச வந்திட்டு திரும்பி போறீங்க”

 

“இல்லை நீ படி”

 

“என்னன்னு சொல்லிட்டு போங்க”

 

“இப்படி உட்காரு”

 

அவள் அமரவும் “இன்னைக்கு மாமா அத்தை உன் விஷயமா தான் பேச வந்திருந்தாங்க”

 

“ஹ்ம்ம்…”

“நான் என்ன சொல்லட்டும் அவங்களுக்கு”

 

“இதை எதுக்கும்மா என்கிட்ட கேட்கறீங்க??”

 

“நீ தான்மா முடிவு பண்ணணும்”

 

“நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் அதை தடுக்க மாட்டேன்ம்மா. உங்களுக்கு சரின்னுபட்டதை செய்ங்க” என்று சொன்னதில் தன் விருப்பத்தை மறைமுகமாய் தெரிவித்திருந்தாள். (உலகமகா நடிப்புடா சாமி!!)

 

“நல்லா யோசிச்சு தான் சொல்றியா வசந்தி”

 

“எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு தெரியாதாம்மா”

 

“அப்போ சரி அவங்ககிட்ட இதெல்லாம் சரிப்படாதுன்னு சொல்லிடறேன். மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை வக்கீலை வைச்சு பேசிக்குவோம்” என்று சொல்லிவிட்டு எழுந்தவரின் கையை அவசரமாய் பற்றினாள்.

 

“அம்மா என்னம்மா இப்படி சொல்றே?? நான் எப்போ சரியா வராதுன்னு சொன்னேன்” என்றவளை கேலியாய் பார்த்தார்.

 

“நான் உங்கம்மாடி என்கிட்டவே நீ ஆட்டம் காட்டுறியா!! ஒழுங்கா வாயை திறந்து சொல்லு. உனக்கு அங்க போக இஷ்டமா!! இல்லையா!!”

 

“அம்மா” என்ற அவளின் வெட்கம் கலந்த சிணுங்கலே அவருக்கு போதுமானதாயிருந்தது.

 

“எதுவா இருந்தாலும் நீ வாயை திறந்து சொன்னா தான்…” என்றார் அவர் வேண்டுமென்றே பிடிவாதமாய்.

 

“ம்மா…”

 

“பிடிச்சிருக்கா?? பிடிக்கலையா??”

 

“பிடிச்சிருக்கு” என்று ஒருவழியாய் சொல்லிவிட்டாள் வாய்திறந்து.

 

“ஹப்பா இப்போ தான் எனக்கு சந்தோசமாயிருக்கு. சரி சரி நீ படி!! மத்ததை நான் பார்த்துக்கறேன்”

 

மகள் கொடுத்த சம்மதம் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது. தங்கைக்கும் அவள் கணவருக்கும் அழைத்து மகளின் சம்மதத்தை சந்தோசத்துடன் பகிர்ந்தார் அவர்.

 

நேரம் வெகு நேரமாகிவிட்டதால் உடனே தம்பிக்கு அழைத்து சொல்லவில்லை. அடுத்தடுத்த நாட்கள் நல்ல நாளாக இல்லை என்று அவர் தள்ளிப்போட அதற்குள் மகிழின் விஷயம் முன்னால் வந்திருந்ததில் சொல்லாமலே விட்டிருந்தார்.

 

சரி எப்படியும் நேரில் வருகிறார்களே பேசிக்கொள்ளலாம் என்றுவிட்டிருந்தார் அவர்.

____________________

மகிழுக்கு பெண் பார்க்கும் படலத்தின் அன்று பெரியவர்கள் பேசி அடுத்த ஒரு மாதத்தில் கிடைத்த முகூர்த்ததில் ஊரைக் கூட்டி வேந்தனுக்கும் முல்லைக்கும் திருமணம் செய்தனர்.

 

வசந்தமுல்லையின் மனக்குறை தீர்ந்தது அப்போது. அவனுக்குமே அக்கணம் பெருந்த நிம்மதி தான் ஆனாலும் அவளருகில் அமர்ந்திருந்தவனோ கடனே என்றிருந்தான்.

 

அவன் மனதிற்குள் சந்தோசமிருந்தாலும் அவள் அவன் கொடுத்த பரிசை நிராகரித்ததில் தன்னையே வேண்டாம் என்று சொன்னதாய் தான் உணர்ந்தான்.

 

அவளை கட்டாயப்படுத்தி தான் இங்கு கூட்டி வந்திருப்பர் என்ற எண்ணம் அவனுக்கு. அன்று கூட அவள் முகத்தில் பெரிதாய் எந்த உணர்வுமில்லையே என்ற எண்ணம் தான் அவனுக்கு.

 

அதனால் நடந்துக் கொண்டிருந்த நிகழ்வில் பெயருக்காய் சிரித்தான், இடையிடையில் மகிழ் வேறு எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்.

 

ஒன்றும் அவன் கவனத்தில் இல்லை. எப்போதடா இதெல்லாம் முடியும் என்று தானிருந்தது அவனுக்கு. அவளை தனியாய் பார்க்கும் போது கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் வேறு.

 

அன்றைய இரவு மனைவியின் வரவிற்காய் வேந்தன் ஆவலாய் காத்திருக்க உள்ளே வந்ததோ மகிழ்…

Advertisement