Advertisement

அத்தியாயம் – 15

 

“ஏன்க்கா இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிறே??” கேட்டது குமுதா.

 

“அது ஆடு இல்லைடி வடை திருடுன காக்கா மாதிரின்னு சொல்லு” என்று தங்கையை திருத்தினாள் அமுதா.

 

முல்லையோ இன்னமும் ஏதோ யோசனையில் இருக்க அவளை பிடித்து அமுதாவும் குமுதாவும் உலுக்கினர்.

 

அவளோ ‘ச்சே எப்போ பார்த்தாலும் நான் சாப்பிடும் போதே இவர்கிட்ட மாட்டிக்கிறேன். என்னை பத்தி என்ன நினைப்பார்’

 

‘அவர்கிட்ட மட்டுமா மாட்டினேன், அத்தை, மாமா, கூட அவரு உடன்பிறப்பு வேற… அவமானம்டி முல்லை அவமானம், இது உனக்கு தேவையா…’

 

‘பஜ்ஜி இப்போ ரொம்ப முக்கியம்… அசிங்கப்பட்டாள் ஆட்டோக்காரின்னு ஆகிப்போச்சே!!’

 

‘இப்போ எப்படி வெளிய போவேன்??’ என்று இன்னமும் சிந்தனையிலேயே இருந்தவளின் கன்னத்தில் அமுதா பட்டென்று வைக்கவும் தான் சுயநினைவுக்கு வந்தாள் அவள்.

 

“என்னடி யோசனை உனக்கு??” என்றாள் அமுதா.

 

“அது… அது வந்து அவங்க எல்லாம் வந்திட்டாங்கடி!!” என்றாள்.

 

“அவ்வளவு தானா… அதுக்கா இப்படி வந்து முழிச்சுட்டு கிடந்த, நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன்”

 

“ஏன்டி உனக்கு இதுல சம்மதம் தானா?? அவங்களை பத்தி ஒண்ணும் தெரியாது. நீ பாட்டுக்கு இவ்வளவு கூலா இருக்கே??” என்றாள் முல்லை.

 

அமுதாவோ அவளுக்கு பதில் சொல்லாமல் அருகில் இருந்த தங்கையை பார்த்தாள். “குமுதா நீ அம்மாகிட்ட போ” என்று.

 

“எதுக்கு?? ஏன்?? நீங்க ரெண்டு பேரு மட்டும் அப்படி என்ன ரகசியம் பேசப் போறீங்க??” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“எதுவோ பேசிட்டு போறோம் உனக்கென்னடி?? நீ சின்னப்பொண்ணு ஒழுங்கா சொல்றதை கேளு போ…” என்று தமக்கையாய் மிரட்டினாள் அமுதா.

 

“எப்போமே இப்படி தான்… போங்க…” என்று சலித்துக்கொண்டு அவள் கதவை திறந்து அறைந்து சாத்தி போனாள் அவள்.

 

“சொல்லு அம்மு, உனக்கு பயமா இல்லையா…” என்று மற்றவளை ஊக்கினாள் முல்லை.

 

“எனக்கு பயமெல்லாம் இல்லை”

 

“எப்படிடி?? உனக்கு அவங்களை பிடிச்சிருக்கா?? இல்லை அன்னைக்கு சித்தப்பா கேட்டப்போ பெரியவங்க பார்த்து எது பண்ணாலும் சரின்னு சொன்னியே… அதுனால பிடிக்கலைன்னாலும் பேசாம இருக்கியா??”

 

“பிடிக்கலைன்னு யார் சொன்னது??” என்ற அவளின் பதிலில் முல்லை பே என்று விழித்தாள், ‘இவ என்ன சொல்றா’ என்ற ரீதியில்.

 

“அப்போ பிடிச்சிருக்கா??”

 

“பிடிச்சிருக்குன்னு நான் எப்போ சொன்னேன்??” என்று அவள் சொன்னதும் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் முல்லை அவளுக்கு.

 

“எதாச்சும் புரியற மாதிரி பேசுறியா நீ??”

 

“உனக்கு புரியாம இருக்கப் போய் தான் அத்தான் தனியா இருக்காரு” என்று முல்லைக்கு வார்த்தையால் குட்டு வைத்தாள் அமுதா.

 

“என்ன சொல்றே??”

 

“ஒண்ணும் சொல்லலை போ…” என்றுவிட்டு அவள் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

 

‘எல்லாத்துக்கும் என்னை பார்த்தா எப்படியிருக்குன்னு தெரியலை. என்னா பேச்சு பேசுறா இவ’ என்று எண்ணிக்கொண்டு அவளும் கட்டிலின் மறு ஓரத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

 

வெளியில் வந்தவர்களை ராஜமும் புஷ்பாவும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர். ராஜதுரையும் அபியும் அப்போது தான் உள்ளே நுழைந்தனர்.

 

“வந்துட்டீங்களா… கொஞ்சம் கடை வரைக்கும் போக வேண்டி இருந்துச்சு அதான் போயிருந்தேன். மன்னிச்சிருங்க” என்றவர் பொதுவாய் மன்னிப்பு கேட்டு பேச ஆரம்பித்தார்.

 

அபி இப்போது வேந்தனை பார்க்க அவனுக்கும் தான் இங்கு முதல் முறை வரும்போது நடந்த விஷயங்கள் ஞாபகத்திற்கு வர கொஞ்சம் இறுக்கம் அவன் முகத்தில்.

 

அதை சட்டென்று உணர்ந்து கொண்ட அபி மெதுவாய் வந்து சோபாவின் ஓரமாய் அமர்ந்திருந்த வேந்தனின் அருகில் வந்து நின்றுகொண்டான்.

 

வேந்தனை நோக்கி குனிந்தவன் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு “சாரி மாமா” என்று சொல்லவும் வேந்தனுக்கு ஆச்சரியம்.

 

ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தை பார்த்தவன் சுற்று முற்றும் ஒரு முறை நோக்கினான். மற்றவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க மெதுவாய் எழுந்து அபியின் தோளில் கைப்போட்டு வெளியில் சென்றான்.

 

“எதுக்கு அபி சாரி எல்லாம்??” என்றான்.

“இல்லை மாமா அது… அது வந்து அன்னைக்கு ஏதோ கோபம் திடுதிப்புன்னு இப்படியாகிட்டுன்னு மனசுக்கு ஒரு மாதிரியாகி போச்சு”

 

“அந்த கடுப்புல தான் உங்ககிட்ட கொஞ்சம் ஹார்ஷா நடந்துக்கிட்டேன். நான் செய்தது தப்பு தான்” என்று சொல்லி சங்கடத்துடன் பார்த்தான் மற்றவனை.

 

“அப்போ நான் செஞ்சது மட்டும் சரியா என்ன… விடு அபி பழசெல்லாம் பேச வேண்டாம். எல்லாரும் வேணும்ன்னு நினைச்சு தான் அப்படி செஞ்சுட்டேன்”

 

“தவிர உங்க அக்காவை நான் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன். இனிமே நாம எல்லாம் ஒண்ணா ஒற்றுமையா இருந்தா அதுவே போதும் எனக்கு” என்றான்.

 

“நிஜமா??”

 

“என்ன அபி??”

 

“எங்க அக்காவை நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா??”

 

லேசாய் ஒரு புன்னகையை கொடுத்தான் அவனுக்கு. “அத்தை மகளா பார்க்க முன்னாடியே ரயில்ல அவளை பார்க்கும் போதே லேசா பிடிச்சுது. அப்புறம் ரொம்ப பிடிச்சுது” என்றவனுக்கு லேசாய் வெட்கம் வேறு வந்தது அதை சொல்லும் போது.

 

இருவருமாய் இப்போது பேசிக்கொண்டே உள்ளே வந்திருந்தனர். மகிழ் இப்புறம் அப்புறம் திரும்பி திரும்பி பார்த்தான் யாரும் பேச்சை நிறுத்துவது போல் தெரியவில்லை.

 

வந்த வேலையை பார்க்காமல் இதென்ன வெட்டிப்பேச்சு என்று அவன் எண்ணம். சற்றும் யோசிக்காமல் “அமுதாவை வரச்சொல்லுங்களேன்” என்று கேட்டே விட்டான்.

 

கண்மணிக்கு தான் மானம் போனது. ‘இவன் என்ன இப்படி மானத்தை வாங்குறான்… எல்லாரும் என்ன நினைப்பாங்க…’ என்ற கவலை அவருக்கு.

 

ராஜம் தன் தங்கையை பார்த்து “அமுதாவை கூட்டிட்டு வா புஷ்பா” என்றார்.

 

“எதுக்கு அத்தை நீங்க போய்க்கிட்டு??” என்றவன் “குமுதா நீ போய் கூட்டிட்டு வாம்மா” என்றான்.

 

‘கடவுளே இவன் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போறானோ தெரியலையே’ என்று தானிருந்தது கண்மணிக்கு.

 

குமுதாவோ தன் தமக்கைகள் இருக்கும் அறைக்கு வந்தவள் “உங்களை வரச்சொன்னாங்க” என்றுவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

 

அவளுக்கு தன்னை அவர்கள் வெளியில் போக சொல்லிவிட்டார்களே என்ற கடுப்பு அதனால் விஷயத்தை சொல்லிவிட்டு அவள் தன் வேலை முடிந்தது என்ற ரீதியில் கிளம்பிவிட்டாள்.

 

அமுதாவோ இப்போது முல்லையை பார்த்தாள். “முல்லை வாயேன் போவோம்”

 

“அய்ய நான் எதுக்கு அமுதா, நீ போ… உன்னை தானே பொண்ணு பார்க்க வந்திருக்காங்க” என்றாள்.

 

“ப்ளீஸ் முல்லை எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, தனியா போக… நீயும் வாயேன் ப்ளீஸ்” என்று கெஞ்சலாய் கேட்க முல்லைக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

 

அவளுக்கும் போக வேண்டும் என்று லேசாய் ஒரு ஆசையும் ஆர்வமும் இருக்கத்தான் செய்தது. இது போல் பெண் பார்க்கும் நிகழ்வு தான் தனக்கில்லை என்று ஆகிப்போனது.

 

இதையாவது சென்று வேடிக்கை பார்ப்போம் என்ற எண்ணம் வேறு, தவிர வேந்தனை பார்க்கலாம் என்ற எண்ணமும் சேர்ந்துக் கொண்டது.

 

குனிந்து தன் உடையை பார்த்தாள் இப்போது. விருந்தினர்கள் வருகிறார்கள் என்பதால் நல்ல உடையை தான் அணிந்திருந்தாள் அவள்.

 

இருந்தாலும் வேறு அணிந்திருக்கலாமோ என்ற எண்ணம் அவளுக்கு. அருகில் இருந்த மற்றவள் இவளை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமலே தன்னை பற்றிய ஆராய்ச்சியில் இருந்தாள் அவள்.

 

“முல்லை… நேரமாச்சு ப்ளீஸ் போவோமே!!” என்று அழைக்க இப்போது முல்லைக்கு படபடவென்றிருந்தது.

 

“நான் கண்டிப்பா வரணுமா அம்மு. எனக்கு ஒரு மாதிரி பயமா வருதுடி” என்றவளை என்ன செய்ய என்று பார்த்தாள் அமுதா.

 

“என்னைத் தானே பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. எனக்கு இருக்க வேண்டியதெல்லாம் உனக்கு இருக்குன்னு சொல்லுற… பேசாம கூட வா தாயே!!”

 

“நீ கூட வந்தா மட்டும் போதும் நான் மேனேஜ் பண்ணிக்கறேன் ஓகே வா” என்றவள் எங்கே இதற்கு மேல் நின்றால் முல்லை முடியாது என்றுவிடுவாளோ என்று எண்ணி அவள் கையை பிடித்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

 

இப்போது முல்லைக்கு மட்டும்மல்ல அமுதாவுக்கு கொஞ்சம் இதயம் வேகமாய் துடிப்பது போல் இருந்தது.

 

“இங்க வந்து உட்காரு அம்மு” என்று சொன்னது ராஜம்.

 

‘அடடா அப்போ நான் எங்க போக இப்போ’ என்ற எண்ணம் முல்லைக்கு.

 

அமுதா அங்கிருந்த காலி இருக்கையில் அமர அவளுடன் சென்ற முல்லை அவள் அன்னையுடன் சென்று நின்றுக்கொண்டாள். அமுதா வந்ததில் இருந்து மகிழின் கண்கள் அமுதாவையே மொய்த்தது என்றால் வேந்தனின் கண்கள் முல்லையை தான் பார்த்தது.

 

‘இது போல தருணமெல்லாம் மிஸ் பண்ணிட்டனே!! மகிழ் கொடுத்து வைச்சவன்’ என்று தோன்றியது அவனுக்கு.

 

‘அப்போ மிஸ் பண்ணா என்ன இப்போ பார்த்திட்டு போறேன். இவனைவிட எனக்கு தான் இப்போ அதிக உரிமை, யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது’

 

‘என் பொண்டாட்டியை தானே நான் பாக்குறேன்’ என்ற எண்ணம் மிதப்பாய் வந்து ஒட்டிக்கொள்ள அது கொடுத்த தைரியத்தில் வைத்த கண் வாங்காமல் தன் மனைவியையே பார்த்திருந்தான் இப்போது.

 

ஆனால் அவளோ அன்னையுடன் நின்றிருந்தாலும் யாரையும் பார்க்காமல் தரையை பார்த்திருந்தாள்.

 

‘இதுக்கு பேரு வெட்கமா!! இல்லை யாரையுமே பார்க்க பிடிக்கலையா!! வேந்தா உனக்கு இதெல்லாம் தேவையா!!’ என்று மனசாட்சி கேள்வி கேட்டது.

 

‘இவ்வளவு அடக்க ஒடுக்கம் எல்லாம் இவளுக்கு கிடையாதே!!’ என்றும் தோன்றாமல் இல்லை.

 

வேந்தனுக்கு இங்கு தானும் பெண் பார்க்க வந்த உணர்வே இப்போது. ‘அடராமா பொண்ணு பார்க்க வர்றப்போ இப்படி தான் சுடிதார் போட்டிருப்பாங்களா என்ன!!’

 

‘ஆனா வேந்தா நீ தாலி கட்டும் போதே உன் பொண்டாட்டி சுடிதார் தானே போட்டிருந்தா!! இதெல்லாம் நீ எதிர்பார்க்குறது நியாயமே இல்லை!!’ என்று மனசாட்சி குத்திக் காட்டியது இப்போது.

 

அவன் செய்த செயலின் பின்விளைவு அவன் தவறவிட்ட அழகிய தருணங்கள் எல்லாம் வந்து அவனை பாடாய் படுத்தியது இப்போது.

 

காலச்சக்கரம் என்ற ஒன்றிருந்தால் நிச்சயம் பின்னோக்கிச் சென்று நடந்ததை மாற்றி அமைத்திருப்பானோ!! என்னவோ!!

 

உரிமையாய் அவளை பார்த்த போதும் அவளை அதே உரிமையுடன் தன்னுடன் அழைத்துச் செல்ல முடியவில்லை என்ற ஆதங்கம் பெரிதாகி போனது அக்கணம்.

 

இதற்கிடையில் இரண்டு மகன்களின் பார்வையை கண்ட கண்மணி தலையில் அடித்துக் கொண்டார். ‘நல்ல வேளை சொந்தக்கார பொண்ணுங்களா போய்ட்டாங்க’

 

‘வெளியில பொண்ணு பார்க்க போய் என் மானத்தை வாங்கலை’ என்று நிம்மதி பெருமூச்சு அவருக்கு இப்போது.

 

அங்கிருந்த அமைதியை கலைக்கும் விதமாய் “எனக்கு அமுதாகிட்ட தனியா பேசணும்” என்றான் மகிழ்.

 

“டேய்…” என்று அவன் தொடையில் வேந்தன் தட்ட கண்மணி மகனை நேராகவே பார்த்து முறைத்தார். ‘இன்னைக்கு எனக்கு நெஞ்சுவலி வரவைக்காம விடமாட்டான் போலயே!!’ என்ற நிலை அவருக்கு.

 

“பொண்ணு இங்க தானே இருக்கா பேசுங்க” சொன்னது புஷ்பா.

 

‘இவனுக்கு ஏத்த மாமியார் தான் டோய்!!’ இது வேந்தனின் மனக்குரல்.

 

“நான் தனியா பேசணும்ன்னு சொன்னேன்” என்றான் மகிழ் இப்போது அழுத்தி.

 

“இங்கவே நீங்க தனியா பேசுங்க” என்ற புஷ்பாவை அவள் கணவரும் ராஜமும் அடக்கினர்.

 

“அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா விடுவீங்களா இல்லை அப்பாவும் உங்க எல்லார் முன்னாடி தான் பேசணும் சொல்லுவீங்களா” என்று கேட்க வேந்தனுக்கு சிரிப்பு ஒரு பக்கம் மகிழை கட்டுப்படுத்தவென்று “டேய் கொஞ்சம் பேசாம இருடா” என்றான் அவன்.

 

“பின்ன என்னடா அவங்க பொண்ணை என்ன செஞ்சுடுவேன்னு இப்படி சொல்றாங்க. எல்லாரும் இங்க தானே இருக்காங்க” என்று அவன் காதை கடித்தான்.

“மகிழ் என்ன பேசறே??” என்று அதட்டல் கண்மணியிடத்தில் இருந்து வர கரிகாலன் ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தார்.

 

ராஜதுரை இப்போது “அமுதா மாப்பிள்ளையை கூட்டிட்டு உள்ள போய் பேசிட்டு வாம்மா” என்றிருந்தார்.

 

‘அப்பாடா இதுக்கு எம்புட்டு அலப்பறை??’ என்று எண்ணிக்கொண்டு எழுந்து நின்றிருந்தான் மகிழ் இப்போது. தன் மாமனாரை பார்த்து “தேங்க்ஸ் மாமா” என்றான்.

 

அமுதா முன்னே செல்ல அவள் பின்னே சென்றான் அவன். ‘வாழுறான்’ என்று எண்ணிக்கொண்டான் வேந்தன் மகிழை எண்ணி.

 

உள்ளே சென்று கதவை லேசாய் மூடிவிட்டு அவளை நோக்கி பார்த்திருந்தான் மகிழ். அவள் கூலாக நின்றிருப்பதை பார்த்து ‘என்னடா இவ கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் காணோம்’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“அமுதா”

 

“ஹ்ம்ம் சொல்லுங்க”

 

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா??” என்று அவன் சொல்ல “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க” என்று முறைத்திருந்தாள் அவள்.

 

‘ஹான் இவ என்ன நமக்கு மேல இருப்பா போல’ என்ற யோசனையினூடே “அது உனக்கு ரொம்ப கஷ்டம் போல” என்றான்.

 

“எனக்கில்லை” என்றாள் மொட்டையாய்.

 

“முன்ன பார்த்ததுக்கு இப்போ ஆளே மாறிட்ட!!” என்றவன் அவளை மேலிருந்து கீழாய் ரசனையாய் பார்த்து வைக்க அதுவரை அவனுடன் வாயாடியவள் முகம் சிவந்து போனது.

 

“என்… என்ன மாறிட்டேனாம்??”

 

“அப்போ பாவாடை சட்டை, இப்போ……..” என்று சொல்லாமல் பார்வையால் வருட அவளுக்கு வெட்கமாகிப் போனது.

 

“போதும்…”

 

“எனக்கு போதாது” என்றவன் நெருங்கி வந்தான்.

 

“வெளிய எல்லாரும் இருக்காங்க”

 

“இருக்கட்டும்” என்றவன் சமீபமாய் நெருங்கிவிட்டான் இப்போது. மூச்சுக்காற்று அவள் மேல் படும் அளவு நெருக்கம்.

 

அவன் நோக்கம் புரிந்து அவள் சட்டென்று அவனுக்கு முதுகுக்காட்டி நின்றுக்கொள்ள அவன் பின்னிருந்து அணைத்திருந்தான் அவளை இப்போது….

Advertisement