Advertisement

அத்தியாயம் – 14

 

நாளையோடு அவள் கடைசி பரீட்சை முடியப் போகிறது. இத்தனை நாட்கள் கல்லூரிக்கு சென்று வந்ததில் அவள் எண்ணங்கள் அவ்வப்போது தடைப்பெற்றிருந்தது.

 

இதோ படிப்பும் முடிந்துவிட்டது. அதன் பின் என்ன நடக்கும் என்று கொஞ்சம் கலக்கமாக கூட இருந்தது அவளுக்கு.

 

வீட்டிற்கு வந்தவர்களும் அவர்களிடம் விடைப்பெற்று கிளம்பிவிட்டனர். ஏமாற்றமாய் போனது முல்லைக்கு, அவனை பற்றி எந்த சேதியுமே தெரியவில்லையே என்ற கவலை.

 

அவளுக்கென்ன தெரியும் வந்தவர்கள் தான் எல்லாம் பேசி முடித்துவிட்டனர் என்று. அவர்கள் சென்ற பின்னே அபிஷேக் அன்னையிடம் வந்தான்.

 

“அம்மா அவங்க எல்லாம் எதுக்கு வந்தாங்க!! இத்தனை நாளா இல்லாம இப்போ என்ன புதுசா சொந்தம் கொண்டாடுறாங்களா!!” என்றான் காட்டமாய்.

 

“என்ன அபி பேச்செல்லாம் பெரிசா இருக்கு?? வயசுக்கு தகுந்த மாதிரி பேசு” கண்டிப்பாய் பேசினார் ராஜம்.

 

“என்னம்மா தப்பா கேட்டுட்டேன். இவங்களை எல்லாம் இப்போ தானே நாங்க பார்க்குறோம். இதுல அவங்க புள்ளை வேற அக்கா கழுத்துல தாலி கட்டிட்டு போவாரு”

 

“அதெல்லாம் பார்த்திட்டு சும்மா இருக்க சொல்றீங்களா!! நீங்களும் என்னன்னு கேட்கமாட்டீங்க நானும் கேட்காம பேசாம இருக்கணுமா”

 

“அக்காகிட்ட சொன்னீங்களாமே இவரு தான் நம்மவீட்டு மாப்பிள்ளைன்னு அப்படி என்னமா அவங்க உங்களுக்கு உசத்தியா போய்ட்டாங்க” என்று வீட்டின் ஆண்மகனாய் கேட்டவனை கொஞ்சம் பெருமையாய் தான் பார்த்தார் அன்னை.

 

தந்தையில்லாமல் இந்த பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்று எத்தனயோ நாட்கள் வாடியிருந்தவருக்கு இன்று பொறுப்பாய் உடன்பிறந்தவளுக்கு ஒன்று என்றதும் துடிக்கும் மகனைக் கண்டு பூரித்து போனது.

 

“என்னமா நான் பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க பேசாம இருக்கீங்க”

 

“என்ன சொல்லணும் அபி… ஏன் அபி உனக்கு அவங்களை தப்பா நினைக்க தோணுது. அவங்களை பத்தி உங்ககிட்ட சொல்லாம வளர்த்தது என்னோட தப்பு தான்”

 

“அதனால தான் இப்படி எல்லாம் நீங்க பேசறீங்க. என் தம்பி அவன் விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணது தவிர எந்த தப்புமே பண்ணலை”

“உங்க தாத்தா பாட்டிக்கு தான் ஜாதி பிரச்சனை. அதுவுமில்லாம கண்மணியோட அம்மா நம்ம வீட்டில வேலை செஞ்சவங்களோட பொண்ணுன்னு இன்னும் இளக்காரம்”

 

“அதனால கடைசி வரை உங்க தாத்தா அவங்களை ஏத்துக்கவே இல்லை. சாகறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் கொஞ்சம் மாறியிருந்திருக்காங்க!!”

 

“அவங்களுக்கு தான் பிடிக்கலை பேசாம இருந்தாங்க. உங்களுக்கு என்னம்மா வந்துச்சு நீங்க பேசியிருக்கலாம் தானே!!” குறுக்கு கேள்வி கேட்டான் அவன்.

 

“அபி நான் எப்படி உங்களுக்கு புரிய வைக்க, உங்கப்பா கூட இப்படி ஜாதி பார்க்கறவர் தான்டா. ஏன் நானுமே ஒரு காலத்துல இதெல்லாம் பார்த்தவ தான்”

 

“எப்போ இந்த ஊருக்கு வந்தமோ அப்பவே அதெல்லாம் விட்டொழிச்சிட்டேன் அபி. உங்கப்பாக்கு திடிர்னு நெஞ்சு வலி வந்தப்போ ஒண்ணும் புரியாம நின்னப்போ அக்கம்பக்கத்துல இருக்கவங்க தான் உதவி பண்ணாங்க”

 

“உங்கப்பா பலமுறை என்கிட்டே சொல்லியிருக்கார் அவங்ககிட்ட எல்லாம் பேசாதே!! அவங்க எல்லாம் கீழ்ஜாதின்னு. ஆனா அந்த நேரத்துல நமக்கு முழுக்க முழுக்க அவங்களாம் தான் உதவி பண்ணாங்க. அன்னையோட நான் மாறிட்டேன்”

“அப்புறம் தான் என் தம்பியை பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சு அவரோட தொடர்புல இருந்த ஒருத்தர்கிட்ட விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டது தான் மத்த விஷயம் எல்லாம்”

 

“ஏன்மா அப்பா போனதுக்கு அப்புறமாச்சும் நீங்க மாமாகிட்ட பேசியிருக்கலாம்லம்மா”

 

“நானே உங்கப்பா இறந்த துக்கத்துல இருந்தேன் அபி. அடுத்து என்ன பண்ணணும்ன்னு ஆயிரம் யோசனை, எல்லாத்துல இருந்தும் நான் வெளிய வர்றதுக்கு சில வருஷம் ஆச்சு”

 

“எல்லாத்தைவிட முக்கியமான காரணம் நான் அப்படி உங்க மாமா வீட்டோட தொடர்பு வைச்சிருந்தா உங்க தாத்தா பாட்டி என்னையும் ஒதுக்கியிருப்பாங்க”

 

“எனக்கு அதைப்பத்தி கவலையில்லைன்னாலும் அவங்களுக்கு நானும் புஷ்பாவும் தான் இருந்தோம்”

 

“உங்க சித்தப்பா வெளிநாடு போகவும் தான் புஷ்பா சொந்த ஊருக்குன்னு வந்து செட்டில் ஆகியிருக்கா. அதுக்கு முன்னாடி வரை அவளும் பூனாவில தானே இருந்தா”

 

“வயசான அப்பா அம்மாவை நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் சொல்லு அபி. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா உங்க பாட்டி கண்மணியை ஏத்துக்கிட்டாங்க தான். ஆனா முழுசா இல்லை, இப்போ நடந்த விஷயம் இது”

“உங்க அத்தை நம்ம வீட்டுல வைச்சு எல்லாருக்கும் காபி போட்டுக் கொடுத்தாங்க. உங்க பாட்டி அதை ஒரு வாய் கூட குடிக்கலை. கேட்டா தீட்டுன்னு சொல்லுவாங்க”

 

“அங்கெல்லாம் இப்படி தான். இன்னும் நம்ம ஊர் பக்கமெல்லாம் இந்த மாதிரி மூட வழக்கங்கள் இருக்கத் தான் செய்யுது அபி”

 

“ஆனா உங்க அத்தை நல்லா படிச்சவங்க. நல்ல காலேஜ்ல லெக்சரர். அவங்க பசங்க ஒண்ணும் சும்மாயில்லை. வேந்தன் எச்பில ரிஜினல் மேனேஜர், மகிழும் அங்க அதே கம்பனி தான்”

 

“அவங்களும் கை நிறைய சம்பாதிக்கறாங்க. நல்ல திறமைசாலிங்க அவங்க. இதுக்கு மேல ஒரு அம்மாவா என்னோட எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்ன்னு நீ நினைக்கிறே அபி”

 

“வேந்தன் செஞ்சது தப்பாவே இருக்கலாம். ஆனா ஏன் செஞ்சான் உறவுகள் வேணும்ன்னு தானே!!”

 

“அன்னைக்கு நம்மோட சொந்தக்காரங்க ஒருத்தரோட கல்யாண வீட்டுக்கு போனப்ப அம்மாவை முன்னிருந்தலைன்னு நீ வருத்தப்பட்டியே!!”

 

“அதே மாதிரி தானே வேந்தனுக்கும் இருந்திருக்கும். அத்தனை பேர் இருக்க இடத்துல கண்மணி மட்டும் வெளிய தனியா இருந்தா. அதை பார்த்து ஒரு மகனா வேந்தன் துடிக்கலைன்னா தான் தப்பா போயிருக்கும்”

அபிக்கு புரிந்தது இப்போது. அதையே அன்னையிடமும் சொன்னான்.

 

“அப்போ அக்காவை பத்தி என்னம்மா முடிவு பண்ணியிருக்கீங்க”

 

“அதை உங்கக்காகிட்ட தான் பேசணும் அபி”

 

“எதுவா இருந்தாலும் அவளுக்கு பிடிக்கணும்மா பார்த்துக்கோங்க. அவ கஷ்டப்பட்டா நமக்கு தான் வருத்தமாயிருக்கும்மா” என்றான் பெரிய மனிதனாய்.

 

ராஜமும் அந்த காரணத்திற்காக தானே இத்தனை நாட்களும் பேசாமல் இருந்தார். ஆனாலும் எதையாவது செய்து அவர்களை சேர்த்திட வேண்டும் என்று மட்டும் எண்ணினார்.

 

அதுவரை தமக்கைக்காய் பேசியவன் “நான் வேற அன்னைக்கு மாமா மேல கொஞ்சம் கோபமா பேசிட்டேன்” என்று அன்று நடந்ததை அன்னையிடம் பகிர்ந்தான்.

 

“விடு அபி அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்க. ஆனா நீ வேந்தனை பார்க்கும் போது மறக்காம மன்னிப்பு கேட்டிரு”

 

“ஹ்ம்ம் கண்டிப்பா கேட்கிறேன்ம்மா. அம்மா அக்கா உள்ள தானே இருக்கு. இப்போவே கூப்பிட்டு கேளுங்களேன்”

 

“அதெல்லாம் நான் பேசிக்கறேன். நீ உன் ரூமுக்கு போ” என்றுவிட்டு மகளின் அறையை நோக்கிச் சென்றார்.

 

அதுவரையில் வெளியில் காதை தீட்டி வைத்து நடந்ததை கேட்டிருந்த முல்லைக்கு இப்போது அன்னை வந்து கேட்டால் என்ன பதில் சொல்ல என்றிருந்தது…

____________________

 

“என்ன கண்மணி?? ஏன் ஒரு மாதிரியா இருக்கே??” என்றவாறே மனைவியின் கையை ஆதரவாய் பற்றினார் கரிகாலன்.

 

கண்மணியும் லேசாய் கணவன் தோள் மீது சாய்ந்துக்கொண்டு “பசங்களை பத்தி தான் யோசிக்கறேங்க…”

 

“மகிழ் வேற அமுதாவை தான் கட்டுவேன்னு சொல்றான். இப்போ தான் வேந்தனுக்காக போய் பேசிட்டு வந்திருக்கோம். அதுக்குள்ள இப்ப எப்படி அவங்களை கேக்க??” என்ற யோசனை அவருக்கு.

 

வேந்தன் அவன் அன்னையை போலவே. கண்மணி எப்படி கரிகாலன் கூப்பிட்டதும் பின் விளைவை யோசியாது அவருடன் சென்றாரோ. அதே போல் தான் வேந்தனும் சட்டென்று முடிவெடுப்பவன்.

 

அதன் பின்னர் அவனிடத்தில் எப்போதும் நிதானமிருக்கும். ஆனால் மகிழ் அவன் தந்தையை போல முடிவெடுக்கும் வரை தான் அவன் யோசனை எல்லாம் முடிவெடுத்துவிட்டால் செய்து முடிக்கும் வரை ஓயமாட்டான் அவன்.

 

“நீ கவலைப்படுறியா கண்மணி?? ஆனா எதுக்காக?? எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா இப்போ. நம்ம ரெண்டு பசங்களும் சொந்தத்தை விடாம இருக்கறதை பார்த்து…”

 

“எனக்கு மட்டும் சந்தோசமில்லைன்னு நினைக்கறீங்களா… கொஞ்சம் பயமாவும் இருக்கு, வேந்தன் பிரச்சனை முடிவுக்கு வந்திட்டா கூட பரவாயில்லை. அதுக்குள்ள இவன் வேற இப்படி சொல்றான்”

 

“நீ இப்படி யோசிச்சு பாரேன். மகிழ் கல்யாணத்துனால வேந்தன் பிரச்சனை சரியாகலாம் இல்லையா” என்றார் அவர்.

 

“நிஜமாவா சொல்றீங்க!! அப்போ போய் பேசலாம்ன்னு சொல்றீங்களா!!” என்றார் கண்மணி இப்போது ஆச்சரியமும் ஆர்வமுமாய்.

 

“கண்டிப்பா பேசித் தான் ஆகணும். நான் போய் மச்சானுக்கு போன் பண்றேன்” என்றவர் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.

 

அதோ இதோவென்று மறுநாள் பெண் பார்க்கும் வைபவமும் வந்தது. சென்னையில் தான் பெண் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான் மகிழ்.

 

அவன் செய்த அட்டுழியத்தில் வேந்தனை நல்லவனாக்கியிருந்தான் அவன்.

 

இரண்டு நாட்களுக்கு முன்னர் காலை உணவின் போது  “அம்மா வேந்தனை வரச்சொல்லிட்டீங்களா??” என்றான் டிபனை உள்ளே விழுங்கிக்கொண்டே!!

 

“அவன் எதுக்கு மகிழ் பொண்ணு பார்க்கறதுக்கு?? உனக்கு தானே பொண்ணு பார்க்க போறோம் நீ மட்டும் வந்தா போதும்” என்று முடித்தார் கண்மணி.

 

“கல்யாணம் எனக்கு தானே!! பொண்ணை நான் தானே பார்க்கணும், அப்போ நீங்க எதுக்கு??” என்று கேட்டவனை என்ன செய்ய என்பது போல் பார்த்தார் கண்மணி.

 

மகிழின் அருகில் அமர்ந்திருந்த கரிகாலனோ உணவோடு சிரிப்பையும் விழுங்கினார். எங்கே சத்தமாய் சிரித்தால் மனைவியிடம் அகப்பட வேண்டுமே என்ற எண்ணம் போலும்.

 

கண்மணி இப்போது வேந்தனுக்கு அழைத்தார். “சொல்லுங்கம்மா” என்றிருந்தான் அவன் எதிர்முனையில்.

 

பரஸ்பர நல விசாரிப்புக்கு பின் “வேந்தா மகிழ்க்கு அமுதாவை கேட்கலாம்ன்னு இருக்கோம்ன்னு சொன்னேன்ல”

 

“ஆமாம்மா சொல்லுங்க”

“வர்ற வெள்ளிக்கிழமை போகணும். நீ இங்க வந்திடறியா நாம சேர்ந்தே சென்னை போவோம்”

 

“அம்மா அவனுக்கு பொண்ணு பார்க்க நான் எதுக்கு??”

 

“வேந்தா இதை தான் நானும் சொன்னேன், பதிலுக்கு அவன் ஒண்ணு சொன்னான்” என்றவர் மகிழ் சொன்னதை சொல்ல வேந்தன் சிரித்துவிட்டான்.

 

“அம்மா அவன் அடங்கவே மாட்டானா?? என்ன சார் எதுவும் பெரிசா பிளான் போடுறாரா?? நான் பேசிக்கறேன்ம்மா அவன்கிட்ட” என்றான் வேந்தன்.

 

“இல்லை வேந்தா, அவன் சொன்னதுக்காக மட்டுமில்லை எனக்கும் நீ வரணும்ன்னு தான் விருப்பம். நீயும் கிளம்பி வாப்பா, உங்க அத்தைக்கிட்ட நேர்லவே கேட்டிறலாம் என்ன முடிவுல இருக்காங்கன்னு” என்றார்.

 

“அம்மா எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பேச வேண்டாம். நான் பண்ணது தப்பு, சோ எதுவா இருந்தாலும் அவங்க பேசட்டும் இனி. நீங்க போய் ஒரு முறை பேசிட்டீங்க தானே!! அதோட விடுங்க”

 

“அப்போ நீ சென்னை வரமாட்டியா??” என்றார் கவலை தோய்ந்த குரலில்.

 

வேந்தனுக்கு போக வேண்டும் என்று ஆசையே!! முல்லையை பார்த்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அவளை எந்தவிதத்திலும் அவனால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ராஜத்திற்கு போன் செய்து பேசலாம் என்று தோன்றுவதுண்டு. ஆனால் பேசமாட்டான், தவறாக எண்ணிவிடுவார்களோ என்று.

 

“வேந்தா இருக்கியாப்பா??” என்ற அன்னையின் குரலில் நனவுக்கு வந்தான்.

 

அன்னை உடன்பிறந்தவனிடம் பேசுவதை பார்த்திருந்த மகிழ் வேகமாய் அவரருகே வந்து கைபேசி பிடிங்கியவன் “என்னடா யோசனை வேண்டி கிடக்கு உனக்கு”

 

“உன்னை யாரும் வர்றியான்னு எல்லாம் கேட்கலை. ஒழுங்கா மரியாதையா வந்து சேரு. இல்லைன்னா பொண்ணு பார்க்கற வைபோகம் டெல்லில தான் நடக்கும்” என்றுவிட்டு போனை வைத்தான்.

 

‘இவன் என்ன இப்படி பரபரக்குறான்’ என்று பார்த்திருந்தார் கண்மணி. சோபாவில் அமர்ந்திருந்த கணவரோ சிரித்துக் கொண்டிருந்தார்.

 

“என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு. இவன் என்ன இப்படி பண்றான், இவன் போற ஸ்பீட் பார்த்தா எனக்கு தலை சுத்துது” என்றார்.

 

அதோ இதொவென்று பெண் பார்க்கவென்று சென்னைக்கு வந்து சேர்ந்தனர் வேந்தன், மகிழின் குடும்பம்.

 

ராஜத்தின் வீட்டில் தான் வைத்து பெண் பார்ப்பது என முடிவாதலால் ராஜத்தின் வீடு பரபரப்பாயிருந்தது.

 

ராஜமும் புஷ்பாவும் மணக்க மணக்க நெய் ஊற்றி கிளறிய கேசரியும், எண்ணையில் பொறித்துக் கொண்டிருந்த பஜ்ஜி, வடையின் வாசனையும் வீடு முழுக்க நிரம்பியது.

 

முல்லைக்கு இன்றாவது வேந்தனை பற்றி தெரிந்துக் கொள்ள முடியுமா என்று ஆர்வம்.

 

அவளின் இந்த ஆர்வத்தை எல்லாம் மீறி அவள் நாசியும் வயிறும் அவளை வேறு யோசிக்கவிடாமல் செய்தது.

ராஜதுரையும் அபியும் அருகே கடைக்கு சென்றிருந்தனர். அமுதாவை அறைக்குள்ளேயே இருக்க சொல்லிய முல்லை அவளுக்கு துணையாய் குமுதாவை விட்டு நேரே சமையலறை புகுந்திருந்தாள் அவள்.

 

“ம்மா வாசம் தூக்கி அடிக்குது போங்க. உங்க தம்பி வர்றார்னு நெய்யை ஊத்தி கவுக்கறீங்க போலவே” என்றவள் பேசிக்கொண்டே பஜ்ஜி இரண்டையும் வடை இரண்டையும் பாட்டியிடம் வடை திருடிய காக்கை போல அபேஸ் செய்து வெளியில் வந்தாள்.

 

பின்னே வந்தவர்களுக்கு கொடுக்காமல் இவள் முதலில் சாப்பிட்டால் அன்னை சும்மா விடுவாரா என்ன. கேட்டால் கொடுக்க மாட்டார் என்று தெரியும் அதனால் தான் சுட்டு வந்திருந்தாள்.

ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டு சாவகாசமாய் அவள் பஜ்ஜியை வாயில் அடைத்துக் கொண்டிருக்க வேந்தன் குடும்பம் உள்ளே நுழைந்தது.

 

அதை கவனிக்காமல் வெகு தீவிரமாய் அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்க சட்டென்று எழுந்த சலசலப்பு அவளை அலர்ட் செய்ய வாயில் அடைத்த பஜ்ஜியுடன் எழுந்து நின்றிருந்தாள் வந்தவர்களை வா என்று கூட அழைக்காமல்.

 

வேந்தனுக்கு அவளின் அந்த தோற்றம் கண்டு சிரிப்பு பீறிட்டெழுந்தது. ரயிலிலும் ஒரு நாள் இப்படி தானே நின்றிருந்தாள் என்று எண்ணிக்கொண்டான்.

 

எல்லோருக்கும் அவளின் வெகுளித்தனம் கண்டு சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. அவளே தன் தலையில் தட்டிக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அமுதா இருந்த அறைக்குள் நுழைந்திருந்தாள்.

 

அங்கு இவள் சித்தி மக்கள் இவளுக்கு மேல். “அடியே அக்கா நீ மட்டும் பஜ்ஜியை தனியா மொக்குறியா!! எங்க எனக்கு??” என்று முறைத்தார்கள் அமுதாவும் குமுதாவும்.

 

அவளோ எதுவும் சொல்லாமல் நிற்க அவள் கையில் இருந்த இரண்டு வடையை பார்த்தவர்கள் “இவளல்லவோ என் அக்கா” என்று சொல்லிக்கொண்டே ஆளுக்கொரு வடையை எடுத்து வாயில் திணித்தனர். (அந்த உப்புமா பேமிலி இவங்க தான்!!)

Advertisement