Advertisement

அத்தியாயம் – 13

 

முல்லைக்கு இப்போதெல்லாம் வேந்தனின் நினைவு தான். ஏனென்று புரியாவிட்டாலும் அவன் தன் கணவன் என்று மனதில் எங்கோ அழுத்தமாய் பதிந்தது.

 

அவளிடம் கடைசியாய் பேசிச்சென்ற பின் அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவன் ஊருக்கு சென்று ஒரு மாதமும் ஓடிப்போயிருந்தது அப்போது.

 

முல்லைக்கோ ஒரே குழப்பம் ‘நிஜமாவே ஊருக்கு போயிட்டாரா?? இல்லை என்னை சும்மா வெறுப்பேத்தி பார்க்க சொன்னாரா??’

 

‘இவ்வளவு நாளா ஏன் ஆளை காணலை’ என்று மனதிற்குள் கேள்விகள் எழத் தான் செய்தது அவளுக்கு. ஆனாலும் அதை வெளியே யாரிடமும் கேட்க முடியாதே!!

 

அதனாலேயே பேசாமல் இருந்தாள். அன்றைய ரயில் பயணத்தில் அவள் அன்னை அவளை திட்டிவிட கொஞ்சம் மனம் சோர்ந்து தான் போயிருந்தது.

 

அவன் முன்னே வேறு திட்டி விட்டார்கள் என்று அன்னையை மனதார கொஞ்சம் அர்ச்சனை வேறு செய்திருந்தாள்.

 

ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் வேந்தன் அவளுக்காய் வாங்கி வந்ததை பார்த்ததும் உள்ளே சிலிர்த்து தான் போனது அவளுக்கு. அவள் தந்தைக்கு பின் அவளை கவனிக்கும் ஒரு ஜீவன்.

 

அன்னையிடம் எப்போதுமே கண்டிப்பை மட்டுமே உணர்ந்திருக்கிறாள். அவளுக்கு செய்வதை கூட கண்டிப்பாய் செய்து தான் அவருக்கு வழக்கம்.

 

ஆனால் அவள் தந்தை அப்படியில்லை. பெண் பிள்ளைகளுக்கு அப்பா மீது எப்போதுமே பிரியம் தானே!!

 

அப்பாக்களுக்கும் பெண் பிள்ளைகளின் மீது அளவுகடந்த பாசம் உண்டு தானே!! முல்லையின் தந்தையும் அதற்கு விதிவிலக்கல்ல!!

 

அவர் இருந்தவரை மகளை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டார் அவர். ஊருக்கு செல்லும் தருணங்களில் ரயிலில் அவள் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுவார்.

 

அவள் எப்போது என்ன கேட்டாலும் யோசிக்காமல் செய்வார். திடீரென்ற அவரின் மறைவில் இருந்து அவள் வெளி வரவே சிரமப்பட்டு தான் போயிருந்தாள்.

 

ரயிலில் அவள் அன்னையும் “உங்கப்பா உனக்கு வாங்கி கொடுத்து கெடுத்து வைச்சுட்டார்” என்று சொன்னதும் அடுத்த சில மணிகளில் வேந்தன் அவளுக்காய் வாங்கி வந்ததை கண்டதுமே அவள் மனதில் சொல்லாமல் கொள்ளாமல் உட்புகுந்திருந்தான் அவளறியாமலே!!

 

இதுவரை அவனை அவள் அப்படி ஒரு பார்வையில் கண்டதேயில்லை. அவன் அவளின் மாமன் மகன் என்ற ரீதியில் கூட அவள் அவனை பார்த்திருக்கவில்லை.

 

முதல் முறையாய் அவனை எதிரியை போல் கோபமாயும், பின்னரோ ரயில் பயணத்தில் பயமாயும், அவன் அவள் கழுத்தில் தாலியை கட்டிய அன்று அதிர்ச்சியாயும் பார்த்திருந்தாள்.

 

அதுநாள் வரை அவனை யாரோவாய் தான் பார்த்திருந்தாள். மூன்றாம் முறை அவனோடான ரயில் பயணத்தில் தான் அவனை உரிமையாய் பார்த்தாள்.

 

பிறர் அறியாமல் அவனை பார்ப்பது ஒரு சுகமாய் தானிருந்தது அவளுக்கு.

 

வேந்தனை பற்றி அவள் நினைக்க ஆரம்பித்திருந்த நேரம், ஆனால் அவனோ அருகே இருக்கவில்லை அப்போது.

 

வீட்டில் அமுதாவிற்கு வரன் பார்ப்பது குறித்த பேச்சு எழுந்தது.

 

சென்னையில் இருந்து வரன் ஒன்று வந்திருப்பதால் விசாரிக்கவென்று ஊரில் இருந்து புஷ்பாவும் அவள் கணவர் ராஜதுரையும் வந்திருந்தனர் வீட்டிற்கு.

 

வெளிநாட்டில் இருந்து அவர் சொந்த ஊருக்கே திரும்பியிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது முல்லையை பற்றிய பேச்சும் எழுந்தது.

“ஏன் அண்ணி நம்ம அமுதாக்கு கல்யாணத்துக்கு பேசிக்கிட்டு இருக்கோம். இன்னும் நம்ம புள்ளையை பத்தி நீங்க எந்த முடிவும் எடுக்காம இருந்தா என்ன அர்த்தம்”

 

“முல்லையை பத்தி என்ன நினைச்சு வைச்சிருக்கீங்க. நானும் ஜாடைமாடையா மச்சான்கிட்ட கேட்டு பார்த்திட்டேன்”

 

“அவங்களுக்கு விருப்பமிருந்தாலும் அதை கேட்க அவங்க யோசனை பண்ற மாதிரி தெரியுது”

 

“தப்பை எங்க பேர்ல வைச்சுட்டு எப்படி பேசன்னுன்னு ஒரு எண்ணம் இருக்கும் போல. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சா நாம ஏதாச்சும் செய்யலாம் தானே!!

 

“எங்களுக்கும் முல்லையும் மக போல தானே. அமுதாக்குவுக்கு பேசின இடம் முடிஞ்சு போச்சுன்னா நாம கல்யாணத்தை பெரிசா தானே செய்யப் போறோம்”

 

“அப்படி பெரிசா செய்யும் போது முல்லையை அப்படியே விட முடியுமா. எங்களுக்கு மனசு கேக்கலை அண்ணி” என்றார் ராஜதுரை.

 

“எனக்கும் அந்த யோசனை தான், ஆனா அவங்க பேசாம நாம எப்படி முதல்ல பேச!! இவளும் எதுவும் பிடிக்கொடுத்து பேச மாட்டேங்கறா!! எனக்கும் அந்த கவலையே தான் அரிக்குது” என்று தாயாய் தன் மனதை வெளிப்படுத்தினார்.

“யாரு முதல்லன்னு இப்படி ரெண்டு பக்கமும் தயங்கிட்டே இருந்தா எதுவும் நடக்காது. நீங்க சொல்லிட்டீங்கல்ல நடுவுலே நானே ரெண்டு வீட்டு சார்பாவும் பேசறேன்”

 

“எங்க நீங்களும் உங்க தங்கச்சி மாதிரி ஜாதி எல்லாம் பார்த்திட்டு பேசாம இருக்கீங்களோன்னு கொஞ்சம்  பயந்துட்டேன்”

 

இப்போது புஷ்பா கணவனின் தோளில் இடித்தார். “அதெல்லாம் நான் அப்போவே மாறிட்டேன். சும்மா அதையவே சொல்லிக்கிட்டு”

 

“ஹ்ம்ம் அதானே நீ எப்படி மாறினே!! புள்ளைங்க எல்லாம் நல்லா படிச்ச புள்ளைங்க, கை நெறைய சம்பாத்தியம் அதை பார்த்து உனக்கு எல்லாம் மறந்திருக்கும்” என்று மனைவியை புரிந்த கணவனாய் உண்மையை உரைத்தார் அவர்.

 

புஷ்பா இல்லையென்றாலும் அது தான் உண்மையே!!

 

“சரி அண்ணி நீங்க கவலையை விடுங்க. நான் அவங்ககிட்ட பேசிட்டு என்ன பண்ணலாம்ன்னு பார்க்கறேன்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்புமணி ஓசையெழுப்பியது.

 

ராஜம் வாயிலுக்கு விரைய வந்தது கரிகாலனும் கண்மணியும். இனிய அதிர்ச்சி தான் ராஜத்திற்கு, வந்தவர்களை உள்ளே வரவேற்று அமர சொன்னார்.

ராஜதுரையும் புஷ்பாவும் அங்கிருப்பதை கண்ட கரிகாலனுக்கும் கண்மணிக்கும் தனித்தனியா எல்லோரிடமும் பேச வேண்டியதில்லை. இங்கேயே பேசிவிடலாம் என்ற எண்ணம்.

 

“நீங்களும் இங்க தான் இருக்கீங்களா நல்லதா போச்சு. இங்க வைச்சே பேசிறலாம்” என்ற கரிகாலனை அனைவரும் பார்த்திருந்தனர் என்ன சொல்லப் போகிறார் என்று.

 

“ஏன்க்கா மருமக விஷயமா என்ன முடிவெடுத்து இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா??” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார் அவர்.

 

அதுவரையில் அவர்கள் பேசவில்லை என்றிருந்த ராஜத்திற்கு இப்போது என்ன பதில் கொடுக்க என்ற யோசனை??

 

மகளிடம் பேசாமல் அவள் சம்மதியாமல் எதுவும் செய்ய முடியாதே!! ஆனாலும் ஏதாவது முடிவெடுத்ததாக வேண்டும் என்று மட்டும் புரிந்தது.

 

“என்ன அண்ணி?? அவங்களே வந்து கேட்கறாங்க… நீங்க பேசாம இருந்தா என்ன அர்த்தம்” சொல்லியது ராஜதுரை.

 

“அண்ணே அவங்க யோசிச்சு முடிவு சொல்லட்டும். தப்பை நாங்க வைச்சுக்கிட்டு இப்படி கேட்டதே எனக்கு சங்கடம் தான்” என்று இழுத்த கண்மணியை கரிகாலன் முறைத்தார்.

“சும்மா சும்மா தப்பு தப்புன்னு சொல்லாதே கண்மணி. நாம ஒண்ணும் நம்ம பிள்ளையை தப்பா வளர்க்கலை. எதையோ நினைச்சு இப்படி செஞ்சிட்டான். வேந்தனை பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பேசறியே!!” என்று வருத்தமாய் உரைத்தார் கரிகாலன்.

 

“கண்மணி காலன் சொல்றது சரி தான் இனிமே வேந்தனை பத்தி அப்படி சொல்லாதீங்க” என்று ராஜதுரையும் ராஜமும் ஒன்றாகவே சொன்னார்கள்.

 

“அண்ணி அவங்களுக்கு பதில்??” ராஜதுரை கேட்டிருந்தார் இப்போது.

 

“நான் வசந்திகிட்ட பேசறேன், சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்” என்று முடித்தார் ராஜம்.

 

வராதவர்கள் வந்ததில் வந்தவர்களுக்கு தடபுடலாய் விருந்து சமைத்து சாப்பிட வைத்து அதன்பின்னர் தான் அனுப்பினார் அவர்.

 

அவர்கள் செல்லும் முன்னேயே முல்லையும் அபியும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

 

அவர்களை கண்டதும் மனதின் ஓரத்தில் ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது முல்லைக்கு. வேந்தனை பற்றிய தகவல் எதுவும் கிடைக்குமா என்று.

 

பிரிந்துவிடலாம் என்று அவன் சொன்னதில் முதலில் அழுகை வந்தாலும் ரயிலில் அவன் பேசியது பின்னர் கடைசியாய் அவன் பேசிச் சென்றது எல்லாம் தன் மேல் அவனுக்கு இருந்த பிடித்ததை சொல்லியதை உணர்ந்தாள்.

 

மீண்டும் அவனே வருவான் என்று ஒரு நப்பாசை… வந்தான் தான்… ஆனால் அதையும் தானே தான் கெடுத்தோம் என்று மனசாட்சி வேறு குத்தியது.

 

பேருந்து நிலையத்தில் அவளிடம் பேசிச் சென்றவன் அவர்கள் திருச்சிக்கு சென்று வந்த பின்னே எதிர்பாராமலே அவளை அந்த வாரம் ஒரு மாலில் கண்டான்.

 

அவன் ஊருக்கு செல்வதால் அதற்கு பர்சேஸ் செய்ய வந்திருந்தான் போலும்.

 

அவளை கண்டுவிட்டு அப்படியே விட்டுச்செல்ல எண்ணமில்லாதவன் அவளை நோக்கி வந்தான். அவள் உடன் நிறைய தோழிகளுடன் அமர்ந்திருந்தாள்.

 

தூரத்திலேயே இவனை கண்டுவிட கைகால் எல்லாம் சில்லிட்டு போனது அவளுக்கு. அவளின் கல்லூரி நண்பர்களுக்கு அவளின் திருமணம் பற்றிய தகவல் தெரியாது.

 

கோமதி ஒருத்திக்கு மட்டுமே தெரியும். அவளருகில் அமர்ந்திருந்த கோமதியை யாரும் அறியாமல் சுரண்டினாள்.

 

“என்ன…” என்று திரும்பி பார்த்தவளுக்கு ஜாடை காட்ட திரும்பி பார்த்தவள் வேந்தனை கண்டுவிட்டாள். அவனும் இவர்களை நோக்கி வர முல்லை தோழியின் கையை இறுக பிடித்தாள்.

 

“எதுக்குடி இப்போ பயம் உனக்கு??” என்றவள் “சரி வா அங்க போகலாம்…” என்று தோழிக்கு மட்டுமே கேட்குமாறு சொன்னவள் மற்றவர்களிடம் “பிரண்ட்ஸ் ஒரு பைவ் மினிட்ஸ் இதோ வந்திடறோம்” என்று முல்லையை தனியே தள்ளிச் சென்றாள்.

 

அவர்களை நோக்கி வந்தவனோ “தேங்க்ஸ்மா” என்றிருந்தான்.

 

“பரவாயில்லை அண்ணா… நீங்க பேசுங்க” என்றவள் சற்று தள்ளி நின்றுக்கொண்டாள்.

 

“உனக்கு நல்ல பிரண்டு கிடைச்சு இருக்கா” என்று பாராட்டினான்.

 

கோமதி வேறு அவளை தனியே விட்டு தள்ளிச் சென்றதும் அவனுடன் தனித்து நின்றிருக்கிறோம் என்ற எண்ணத்திலும் கொஞ்சம் படபடப்பாய் இருந்தது அவளுக்கு.

 

“அப்படியா ரொம்ப சந்தோசம்” என்று வெடுக்கென்று சொன்னாள் அந்த படபடப்பிலேயே.

 

“சந்தோசமா சொல்ற மாதிரி தெரியலையே… கஷ்டமா சொல்ற மாதிரி இருக்கு” என்றான் நக்கல் குரலில்.

 

“என்ன வேணும் உங்களுக்கு… அதான் அன்னைக்கு ஏதோ பெரிசா பேசிட்டு போனீங்களே இப்போ எதுக்கு வந்தீங்க??” என்றவளின் பேச்சில் ‘போனியே, இப்போ மட்டும் என்ன??’ என்ற தொனியே இருந்தது.

 

“உன்னை தேடி வரணும்ன்னு எல்லாம் வரலை. இங்க உன்னை பார்த்தேன் சரி பொண்டாட்டியாச்சே ரெண்டு வார்த்தை பேசிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்”

 

அவன் பொண்டாட்டி என்று சொன்ன விதம் இதமாய் உள்ளே இறங்கிய போதும் கொழுப்பை பாரு என்று எண்ணியவள் “என்ன?? பொண்டாட்டியா??” என்று சொல்லி கடுமையாய் பார்த்து வைத்தாள்.

 

“பொண்டாட்டி தானே. நீ இல்லைன்னு சொன்னாலும் அது தானே உண்மை…” என்றவன் அவள் விழிவிரித்து அவனை பார்ப்பதை கண்டு லேசாய் கண் சிமிட்ட ஒரு விதிர்ப்பு அவளிடத்தில்.

 

கைக் காலெல்லாம் சில்லென்று ஆன உணர்வு. நெஞ்சுக்குள் எதுவோ அடைத்துக் கொண்டது புதிதான உணர்வில்.

 

“சரி வா” என்றுவிட்டு அருகில் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்தான்.

 

“எங்க தள்ளிட்டு போறீங்க, கோமதி தனியா…” என்றவளை லட்சியம் செய்யாது கடைக்குள் நுழைந்திருந்தான்.

 

விட்டால் அவள் ஒடிவிடுவாள் என்று எண்ணி அவள் கையை தன்னுடன் இறுகப்பற்றியிருந்தவன் விடவேயில்லை அவளை.

 

எதையோ எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவனை அவளும் கண்டுக்கொள்ளவில்லை. அவள் பார்வை வெளியில் நின்றிருந்த கோமதியிடத்திலும் அவன் கையில் இருந்து தன்னை விடுவிப்பதிலும் தானிருந்தது.

 

“முல்லை தேவையில்லாத சீன் வேண்டாம். நான் ஒண்ணும் உன்னை கடத்திட்டு எல்லாம் போக வரலை. ஒரு டூ மினிட்ஸ் அவ்வளவு தான் ப்ளீஸ்” என்றுவிட்டு பிடித்திருந்த அவளின் கையை விட்டான்.

 

“இந்த ரிங் உன் கையில போட்டு பார்க்கிறேன்” என்றவன் அவள் கைப்பிடித்து விரலில் மாட்டினான்.

 

“பொருத்தமாயிருக்கு அப்படியே போட்டுக்கோ” என்றவன் அதற்கு பில் போடச்சொல்லி பணத்தை செலுத்தினான்.

 

அவளோ ‘டேய் என்னடா பண்றே?? நீ பாட்டுக்கு பொசுக்குனு தாலி கட்டுனே, இப்போ மோதிரமா??’ என்று பல்லைக் கடித்தாள்.

 

“இதெல்லாம் வேணாம்” என்று கழற்றப் போனாள்.

 

“முதல் முறையா உனக்கு எதாச்சும் வாங்கிக் கொடுக்கணும்ன்னு ஆசைப்பட்டு வாங்கினது, கழட்டிடாதே!!” என்று அவன் சொன்னது தான் தாமதம் அதை கழற்றி அவனிடமே கொடுத்தாள்.

 

‘என் பிரண்ட்ஸ் பர்த்டே கிப்ட் கொடுத்தாலே எங்கம்மா என்ன ஏதுன்னு கேள்வி கேட்பாங்க. இதுல இதை வேறயா, எங்கம்மாக்கு யாரு பதில் சொல்ல’ என்ற எண்ணம் அவளுக்கு.

 

அந்த எண்ணத்தில் “எனக்கு வேணாம்!!” என்றுவிட்டு நகரப் போனவளை கோபமாய் பார்த்திருந்தான்.

 

“இது உனக்கு வாங்கினது. நீ போட்டாலும் சரி இல்லைன்னாலும் சரி…” என்று அழுத்தமாய் உரைத்துவிட்டு உள்ளங்கையில் அதை வைத்துவிட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றான்.

 

‘கொழுப்பு எல்லாம் கொழுப்பு. நினைச்சதை சாதிக்கிறாரு எப்பவும். எனக்குன்னு சொந்தமா விருப்பமில்லையா அப்போ!!’ என்று தோன்ற கண்ணீர் வரும் போல் இருந்தது.

 

கையில் இருந்ததை என்ன செய்வது என்று பார்த்திருந்தாள். அவளைக் கண்டு கோமதி அருகே வந்தாள்.

 

“என்னடி” என்றவளிடம் மோதிரத்தை காட்ட “அழகாயிருக்கு போட்டுக்கோ” என்றவளை வெட்டும் ஒரு பார்வை பார்த்தாள்.

 

“அப்போ தூக்கிப் போட்டிரு” என்று இரண்டு அர்த்தத்தில் சாதாரணம் போல் சொல்லிவிட்டு நகர்ந்தாள் கோமதி.

 

‘எல்லாரும் என்ன நினைக்கிறாங்க என்னோட லைப் பத்தி… தூக்கி போடணுமா!! எதை போடணும்!! எல்லாம் இவர் பண்ண வேலை. இதால தான்’ என்றவளின் கரம் தன்னைப் போல் கழுத்தில் இருந்ததை தடவியது.

 

அதன் பின்னர் வீட்டிற்கு வந்தவள் மோதிரத்தை பத்திரப்படுத்தினாள்.

 

தினமும் குளிக்கும் போது தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு அவளை பார்த்து கேலி பேசுவதாய் தோன்றும் அவளுக்கு. மனம் பாரமாகிப் போகும் அந்நேரம்.

 

விருப்பமில்லாமல் விருப்பம் கேட்காமல் அது தன் கழுத்தில் விழுந்திருந்தாலும் ஏனோ இப்போது அதை பார்க்கும் போது ஒரு மரியாதை வந்தது.

 

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?? இவரு நல்ல நாள் பார்த்து ஊரறிய கட்டியிருக்கலாம்ல’ என்ற தன் மனதின் போக்கு சற்று திகைப்பாய் தான் இருந்தது. தன் மனம் புரிவதாய்!! உடன் அவன் நினைவும்!!

 

Advertisement