Advertisement

அத்தியாயம் – 12

 

ரயிலில் ஏறியதில் இருந்து வேந்தனுக்கு ஒரே யோசனை. ரயிலுக்கும் நமக்கும் ஏதோ பெரிய பந்தம் இருக்கிறது போலும்.

 

இவளை நான் வெளியில் சந்தித்த நேரத்தை விட ரயிலில் இவளுடன் இருக்கும் நேரம் தான் அதிகமாக இருக்கிறது.

 

ராஜமும் அபியும் இருப்பதால் அவன் பார்வையை கையில் இருந்த மொபலை பார்ப்பதில் செலவழித்தான்.

 

கொஞ்சம் போரடிப்பது போல் தோன்ற எப்போதும் போல் மடிகணினியை எடுத்து வைத்து அதில் முழ்கினான்.

 

நேரம் போனதே அவனறியவில்லை. அவன் அலுவலக அழைப்புகளும் வேலையும் அவன் நேரத்தை விழுங்கியிருந்தன.

 

அவர்கள் மதிய ரயிலில் தான் கிளம்பியிருந்தபடியால் உணவருந்திய பின்னே தான் ஏறியிருந்தனர்.

 

ராஜத்தின் குரல் கேட்கும் வரையிலும் அவன் பார்வை இப்புறம் அப்புறம் திரும்பவில்லை.

 

முல்லை தான் ராஜத்திடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு மெல்ல திரும்பி பார்த்தான் வேந்தன்.

“ஏன்டி உனக்கு வேற வேலையே இல்லையா?? ட்ரைன்ல ஒருத்தன் இப்படி அப்படி போய்ட கூடாதே!! அதை வாங்கிக் கொடு இதை வாங்கிக் கொடுன்னு உன்னோட தொல்லையா போச்சு”

 

“எல்லாம் உங்கப்பாவை சொல்லணும். அவர் வாங்கி கொடுத்து பழகிவிட்டார். இப்போ நீ என்னை படுத்தறே?? பேசாம வா!!” என்று மகளை முறைத்தார் ராஜம்.

 

வேந்தனுக்கு கஷ்டமாக இருந்தது. ‘என்ன பெரிசா கேட்டுட்டா சின்ன பொண்ணு ஏதோ சாப்பிட கேட்டா அவ்வளவு தானே!!’

 

‘கண்டதும் வாங்கி கொடுன்னு பெரிய பெரிய பட்ஜெட்டா வைக்குற பொண்ணுங்களுக்கு மத்தியில இவ சாப்பிட தானே வேணும்ன்னு கேட்டா!!’

 

‘அதிலென்ன தப்பிருக்கு!! இந்த அத்தை வாங்கிக் கொடுத்தா தான் என்ன!!’ என்று யோசித்துக் கொண்டே அவன் முல்லையின் வாடிய முகத்தையே பார்த்திருந்தான்.

 

தமக்கையை வேந்தன் பார்ப்பதை பார்த்த அபியோ பல்லைக் கடித்தான்.

 

“ம்மா!! அக்கா இப்போ என்ன கேட்டுச்சுன்னு நீ சும்மா சத்தம் போடுறேம்மா!! அக்கா சாப்பிட தானே கேட்டுச்சு வாங்கி கொடுக்க வேண்டியது தானே!!” என்று அதிசயத்திலும் அதிசயமாக முல்லைக்கு பரிந்து வந்திருந்தான் அவன்.

அபியை முல்லை மட்டுமல்ல வேந்தனும் வியப்பாய் பார்த்தான். முல்லையோ ‘தம்பிடா’ என்று கெத்தாக பார்த்து வைத்தாள்.

 

“நீ என்னடா என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு உங்கக்காவுக்கு சப்போர்ட் பண்ணுறே?? ரெண்டு பேரும் எப்பவும் அடிச்சுகிட்டு தானே பஞ்சாயத்து பண்ணுவீங்க” என்று மகனையும் வாரினார் ராஜம்.

 

அவர்களின் உரையாடல் தள்ளியிருந்தவனுக்கு சங்கடமாய் இருந்தது. இப்போது வாங்கிக் கொடுத்தால் நன்றாகவும் இருக்காது, சும்மாவும் இருக்க மனம் கேட்கவில்லை.

 

அவன் மனைவியின் வாடிய முகம் வேறு அவனை இம்சை செய்தது. வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் மடிகணினியை எடுத்து மூடி வைத்தான்.

 

வண்டி விழுப்புரத்தை வந்தடைந்திருந்தது. “அத்தை பார்த்துக்கோங்க… நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றேன்” என்று எழுந்திருந்தான் வேந்தன்.

 

“எங்கப்பா தம்மா??”

 

“அய்யோ அந்த பழக்கமெல்லாம் இல்லை அத்தை… தலைவலிக்குது அதான் காபி சாப்பிடலாம்ன்னு” என்றான்.

 

“சும்மா தான் சொன்னேன்ப்பா நீங்க போயிட்டு வாங்க”

அவனும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்றான். அவரிடம் சொன்னது போலவே காபியை குடித்து முடித்திருந்தவன் ராஜம் மறுக்காதவாறு பழச்சாறும் இன்னும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறினான்.

 

வேந்தன் கீழே இறங்கும் போதே முல்லைக்கு புரிந்து போனது, அவன் தனக்காய் தான் இறங்கியிருக்கிறான் என்று.

 

உள்ளே லேசாய் ஒரு ஜில்லிப்பு அவளுக்கு உண்டாகத்தான் செய்தது. உடன் வீம்பும் எழ ஆரம்பித்தது.

 

பின்னே ‘இவர் என்ன எனக்கு செய்ய?? எனக்கென்று விருப்பமில்லையா?? எதிலும் என்னை கேட்காமல் இவரே முடிவு செய்கிறார்’ என்ற பொருமல் தான் வேறென்ன!!

 

‘அச்சோ!! அன்னைக்கு மாதிரி ட்ரைன் கிளம்பின பிறகு வந்து ஏறுவாரோ… இன்னும் ஆளைக் காணோமே!!’ என்று காரணமறியா பயம் வேறு.

 

‘அவன் எப்படி போனால் எனக்கென்ன?? தொலையட்டும்’ என்று புறம் அவள் மனம் நல்லவிதமாகவும் மாற்றியும் யோசித்து அவளை குழப்பியடித்துக் கொண்டிருந்தது.

 

ஒருவாறு ரயில் கிளம்பும் முன்னமே அவன் உள்ளே வந்திருந்தான்.

“அத்தை இதை வாங்கிக்கோங்க” என்று ராஜத்தின் முன் அவன் நீட்டியதை “எதுக்குப்பா இதெல்லாம்??” என்ற கேள்வியுடன் அவனை காக்க வைக்காமல் அதை வாங்கியிருந்தார் அவர்.

 

ராஜம் மறுக்காமல் வாங்கியதே அவனுக்கு திருப்தியாய். “அதுக்கென்ன அத்தை நான் அங்கவே சாப்பிட்டேன். அதான் உங்களுக்கு வாங்கிட்டு வந்தேன்” என்று அவன் பதவிசாய் சொல்ல அவருக்கும் திருப்தி தான்.

 

மக்களிடம் அதை கொடுக்க இருவருமே அதை வாங்க யோசித்தனர். அதிகம் மறுத்தால் அன்னையிடம் திட்டு விழும் என்று இருவருக்குமே தெரியும்.

 

சட்டென்று வாங்கிக் கொள்ளாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “என்ன அக்காவும் தம்பியும் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்??”

 

“அது வேணும் இது வேணும் கேட்டீங்க தானே!! ஒழுங்கா சாப்பிடுங்க” என்று மெது குரலில் மக்களிடம் முறைப்பாய் சொல்லி திணித்தார் அவர்.

 

சீட்டில் மெதுவாய் சாய்ந்த ராஜத்திற்கு இப்போது சற்றே ஆசுவாசம். அவர் மனதில் இருந்த சில விஷயங்கள் அவருக்கு தெளிவுபடுவதாய்!!

 

வேந்தன் ஏதோ ஒரு கோபத்தில் தான் மகள் கழுத்தில் தாலி கட்டிவிட்டான் என்று தான் அதுவரையிலும் அவர் எண்ணியிருந்தார்.

கோபத்தில் எடுக்கும் முடிவு ஒன்றும் சரியானதாய் இருக்காதே!! பின்னே அதை நினைத்து வருந்துவது போல் ஆகிவிடுமோ என்ற எண்ணம் அவருக்கு.

 

தம்பியின் மகனாய் வேந்தனை தெரிந்தாலும் மகளின் கணவனாய் அவன் எப்படியிருப்பான் என்று அவருக்கு யோசனை உண்டு.

 

அதன் பொருட்டே பெரியவர்கள் கூடிப்பேசி வேந்தனையும் முல்லையையும் ஒன்றாய் ஊருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

 

அவனின் பொறுப்பான குணம் அன்றே அவருக்கு புரிந்து போனது. அகிலாவும் வேறு நல்ல பையனாய் தெரிகிறாரே என்று சொல்லியிருக்க கொஞ்சம் திருப்தி தான் அவருக்கு.

 

தம்பி மகன் என்று பாதி நம்பிக்கை வைத்திருந்தவருக்கு அப்போது முக்கால்வாசி நம்பிக்கை வந்துவிட்டது.

 

இதோ இன்று அக்கறையாய் அவன் மனைவிக்கு என்று அவன் வாங்கி வந்திருந்தவைகளை பார்த்ததும் முழு திருப்தி அவருக்கு.

 

வேண்டுமென்றே தான் மகளை கொஞ்சம் கடிந்து பேசினார் அவர். அவன் எல்லோருக்கும் என்று சொன்னாலும் அவருக்கு தெரியாதா!! அவன் பார்வையும் செயலும், அனுபவம் வாய்ந்தவராயிற்றே!! புரிந்திருந்தார்.

நேரடியாய் தலையிடாவிட்டாலும் தான் அவளிடம் உரிமைப்பட்டவன் என்பதை வேந்தன் நிரூபித்த விதம் அவருக்கு பிடித்தது. இனி சீக்கிரமே இருவரையும் ஒன்றாக்க வேண்டும் என்ற வேண்டுதல் அவருக்கு.

 

மகளுக்கும் அவனை பிடிக்க வேண்டும் அதைவிட முக்கியம் வேந்தனை அவள் புரிந்து கொள்ள வேண்டுமே!!

 

யோசிக்காமல் சட்சட்டென்று பேசுபவள் தன் மகள் என்று அவருக்கு தெரியுமே!!

 

இப்படியே அவர் யோசனை உழன்றிருக்க திருச்சி வந்து சேர்ந்தனர். அந்த பயணத்தில் வேந்தன் முல்லையிடம் தானாய் சென்று பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 

முல்லையோ கேட்கவே வேண்டாம், அவனிருக்கும் பக்கம் கூட வருவதில்லை.

 

பெரியவர்கள் எதையாவது சாக்கிட்டு அவளை அவனிடத்தில் அனுப்பினால் அதை செய்து முடிக்க முன்னில் நின்றது அவளருமை தம்பி அபியே!!

 

கொஞ்சம் ஊன்றிப் பார்த்ததில் ராஜம் அதை கண்டுக்கொள்ள அடடா இவனையும் வேற மலையிறக்கணுமா என்று பெருமூச்சுவிட்டார்.

 

வேந்தன் தாத்தாவிற்கு சாமி கும்பிட்ட அன்று இரவே ரயிலில் ஊருக்கு கிளம்பிவிட்டான்.

வேந்தன் கொசுவத்தி சுருளை மகிழிடம் சுத்தி முடித்திருந்தான் இப்போது. “ஊருக்கு போயிட்டு வந்த பிறகு இங்க வந்திட்டேன், அவ்வளவு தான்டா நடந்துச்சு” என்று முடித்தான் அவன்.

 

“இதுக்கா ப்ரோ நீ ஊரைவிட்டு ஓடி வந்தே!!” என்ற மகிழை முறைத்தான் மற்றவன்.

 

“ஏன்டா அங்க இருந்து நண்டு சிண்டு எல்லாம் பேசுறதை கேட்டுகிட்டு இருக்க சொல்றியா?? அவகிட்ட பேசணும் நினைச்சேன் பேசிட்டேன்”

 

“அவளுக்கு என்னோட வாழணும்ன்னு விருப்பமிருந்தா அவளே வரட்டும். இதுக்கு மேல நான் என்ன செய்ய??” என்றவனின் முதுகில் ஒன்று வைத்தான் மகிழ்.

 

“ஓ!! துரைக்கு அவங்களே உங்களை தேடி வருவாங்கன்னு வேற நினைப்பிருக்கா!! நீ செஞ்சு வைச்ச வேலைக்கு அவங்களே எப்படிடா வருவாங்க??”

 

“டேய் அப்போ என்ன என்னை அவ கால்ல போய் விழச் சொல்றியா?? எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன், உன் விருப்பப்படின்னு சொல்லிட்டேன், இதுக்கு மேல நான் என்னடா செய்ய??”

 

“இதெல்லாம் நீங்க சொல்லிட்டா அவங்க உடனே வந்திடுவாங்களா?? அவங்க மனசை டச் பண்ணுற மாதிரி நீ என்ன செஞ்சே??” என்று கேட்டு வைத்தான் உடன்பிறந்தவன்.

 

“எனக்கு இதான் தெரியும்டா… எனக்கு எப்படி தோணிச்சோ அப்படி செஞ்சிட்டேன். பார்ப்போம் இதுக்கு மேல என்ன நடக்குதுன்னு. என்னால அவளை கம்பெல் பண்ணவெல்லாம் முடியாது”

 

“அவளுக்கும் என்னை பிடிக்கணும் அப்போ தான் நாங்க நிம்மதியா எங்க வாழ்க்கையை தொடங்க முடியும்” என்றவனை கிண்டலாய் பார்த்தான் மகிழ்.

 

“நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே யாழ். இந்த விஷயத்தை நான் எப்படி டீல் பண்ணுறேன் பாரு” என்று அவன் சொன்னவிதம் வேந்தனை கலக்க ‘என்னடா செய்யப் போறே??’ என்று கேள்வியாய் பார்த்தான்.

 

“நீ செஞ்ச இதே விஷயம் நான் செய்யறேன் பாரு. எல்லாரையும் ஆட்டியும் வைக்கறேன், என் பின்னாடியே வரவைக்கிறேன் பாரு” என்றவன் எதையோ முடிவெடுத்தவனாய் பேசினான்.

 

“இப்போ தான் ஒரு பிரச்சனை நடந்து முடிஞ்சிருக்கு. அதுக்கே இன்னும் ஒரு தீர்வும் காணோம். நீ வேற புதுசா எதுவும் ஆரம்பிச்சு வைக்காதே மகிழ்”

 

“எல்லாம் எனக்கு தெரியும் ப்ரோ. நான் பார்த்துக்கறேன் ஆனா நீ எதுவும் சொதப்பாம இருக்கணும், எனக்கு அதான் கவலையே!!”

 

“டேய் அப்படி என்ன தான்டா செய்யப் போறே?? எதுனாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்டா”

 

“எதுக்கு உன்கிட்ட சொல்லணும்?? நீ சொன்னியா?? உன் கல்யாணத்தப்போ நீ சொன்னியா?? இல்லை முடிஞ்சு வந்த பிறகாச்சும் நீ சொன்னியா??”

 

மகிழின் குரலில் லேசாய் வருத்தம் இருந்ததை வேந்தன் உணரவும் “உன்கிட்ட சொல்லி உன்னை கலவரப்படுத்த விரும்பலை மகிழ். அவ்வளவு தூரம் வேலைன்னு போயிருக்க, உன் நிம்மதி முக்கியமில்லையா??”

 

“அதுக்காக வீட்டில எல்லாரும் சேர்ந்து என்கிட்ட சொல்ல வேணாம்ன்னு முடிவெடுப்பீங்களா??” என்று கோபமாகவே கேட்டான்.

 

“அம்மா அப்பா ஏன் உன்கிட்ட சொல்லலைன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்லாம இருந்ததுக்கு இது மட்டும் தான் காரணம்”

 

“உன்னோட வேலை டென்ஷன் எனக்கு தெரியாதது இல்லை. அதெல்லாம் யோசிச்சு தான் சொல்லலை. நீ கோபப்படாதேடா!!”

 

“இனிமே கோபப்பட்டு என்ன நடக்கப் போகுது”

 

“இப்படி விரக்தியா பேசாதேடா”

 

“அடேய் நான் ஒண்ணும் அவ்வளவு சீரியஸா எல்லாம் பேசலை. இவன் வேற ஓவரா பேசி பேக்ல பேக்கிரவுண்ட் சோக மியூசிக் வாசிக்க விடுவான் போலவே!!” என்ற மகிழ் சாதாரணமாகியிருந்தான்.

 

மறுநாள் முன்பகலில் பெங்களூரு கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பிடித்து நான்கு மணி போல வீட்டிற்கும் வந்து சேர்ந்தான் அவன்.

 

அவன் அன்னையும் தந்தையும் யாழ்வேந்தனின் விஷயமாய் சென்னை சென்றிருந்தனர்.

 

அதனால் அவன் மட்டுமே வீட்டில் தனியே இருந்தான். மனதிற்குள் வேகமாய் சில திட்டங்களும் யோசனைகளும் அவனிடத்தில்.

 

அதன் சாதக பாதகங்களை அவன் யோசித்து முடிவான முடிவிற்கும் வந்த பின்னே தான் இரவு அவனால் நிம்மதியாக உறங்க முடிந்தது.

 

மறுநாள் காலையிலேயே வந்து சேர்ந்தனர் கண்மணியும் கரிகாலனும்.

 

மகிழ் அவர்கள் சென்று வந்த விபரம் பற்றி எல்லாம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் வந்ததுமே அவர்களிடத்தில் அவன் அணுகுண்டு ஒன்றை சாதாரணமாய் வீசினான்.

 

“எனக்கு அமுதாவை உடனே கல்யாணம் பண்ணி வைங்க”

 

‘என்ன??’ என்று வாய்பிளந்து பார்த்திருந்தனர் அவன் பெற்றோர்.

 

“என்னடா நினைச்சுட்டு இருக்கே நீ?? வேந்தன் பண்ணி வைச்சதே இன்னும் முடியாம இருக்கு. இதுல நீ வேற என்னடா இப்படி பேசிக்கிட்டு திரியற…”

 

“உனக்கு நாங்க வேற இடத்துல பொண்ணு பார்த்திருக்கோம் மகிழ். இந்திரா நகர்ல ஒரு பொண்ணு பார்த்திருக்கோம்”

 

“நாளைக்கு அங்க போகலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன் நீ என்னடா இப்படி சொல்லிட்டு இருக்கே??” என்றார் கண்மணி.

 

“எனக்கு வேற பொண்ணு எல்லாம் வேணாம். கட்டினா அமுதாவை தான் கட்டுவேன். நீங்களா போய் பேசி முடிங்க”

 

“இல்லைனா யாழ் மாதிரி தான் நானும் எதையாச்சும் செஞ்சு வைப்பேன்” என்று அதிரடியாக சொன்னவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் அவனறைக்கு சென்று மறைந்தான்.

 

“என்னங்க பேசறான் இவன்??” என்ற கண்மணிக்கு என்ன செய்வதென யோசனை. இவனும் வேந்தனை போலவே குழப்பம் செய்கிறானே என்றிருந்தது அவருக்கு.

 

“வேந்தன் முல்லையை கல்யாணம் பண்ணதுக்கும் இப்போ மகிழ் பேசுறதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை கண்மணி” என்ற கணவரின் பேச்சு அவரை இன்னமும் யோசனையாக்கியது….

Advertisement