Advertisement

அத்தியாயம் – 11

 

தினமும் அவன் அங்கு நின்றது தான் மிச்சம் முல்லை வந்தபாடாயில்லை. ஆயிற்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகப்போகிறது. அவளை பார்க்கவே முடியவில்லை.

 

ஒரு வேளை இந்த பக்கமாக வரமாட்டாளோ என்ற எண்ணம் தோன்ற அருகே இருக்கும் கல்லூரி எதுவாயிருக்கும் என்ற யோசனை அவனுக்கு.

 

மறுநாள் அந்த பெரிய பேருந்து பணிமனைக்கு சென்றான். அவன் எண்ணம் சரியே என்பது போல் முல்லை உடன் ஒரு பெண்ணுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

 

உள்ளே ஏதோ புதுவித உணர்வொன்று பரவ அந்த உணர்வு அவனுக்குள் சந்தோசத்தை பரப்பியது. வேகமாய் சென்று அவள் முன் நின்றான்.

 

‘யாரு இது?? இப்படி முன்னாடி வந்து நிக்கறது??’ என்ற கடுப்பில் திட்டுவதற்கு நிமிர்ந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

 

கோமதியும் திட்டப் போனவள் அவனை அடையாளம் கண்டு “ஹேய் வசந்தி இங்க பாருடி. அன்னைக்கு நீ இவர் மேல தானே கால்குலேட்டர் தூக்கிப் போட்டே!! சாரி கேட்கணும்ன்னு நினைச்சேல இப்போ கேளு!!” என்று பேச்சு வாக்கில் சட்டென்று அவனிடத்தில் போட்டுக் கொடுத்தாள் அவள்.

‘பாவி இப்படியா போட்டுக் கொடுப்பா!! இவருக்கு கதை வேற மாதிரி தானே தெரியும்!! அய்யோ பார்க்குறாரே!! நான் என்ன செய்வேன்!!’ என்று எண்ணியவளுக்குள் சற்றே பயம் சுரக்கத் தான் செய்தது.

 

வசந்தமுல்லை தன் திடீர் திருமணம் பற்றி சொல்லியிருந்தவள் அந்த மாப்பிள்ளை இவன் தான் என்பதை சொல்லாமல் விட்டாள்.

 

மாமன் மகன் என்று தான் கோமதிக்கு தெரியும். இப்போது தோழியின் முறைப்பை பார்த்த கோமதிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற முல்லையின் முகத்தை பார்த்தாள்.

 

“ஹ்ம்ம் அப்போ அன்னைக்கு நீ தான் என்னை அடிச்சியா??” என்றவனின் குரலில் என்ன இருந்தது என்பது சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை.

 

“ஆ… இல்லை நானில்லை…” என்று தலையை பலவிதமாக உருட்டி மறுத்தாள் அவசரமாய்.

 

“ஏம்மா இவ சொல்றது உண்மையா இல்லை கொஞ்சம் முன்னாடி நீ சொன்னதா” கோமதியை கேட்டான் இப்போது.

 

“சாரிங்க அன்னைக்கு இவ உங்களை அடிச்சது தப்பு தான்” என்று அந்த உண்மை விளிம்பி ஒப்புக்கொண்டாள் தான் சொன்னதை.

 

“எதுக்காக அடிச்சே??” கேள்வியை வைத்தான் முல்லையிடத்தில்.

 

இப்போது அவள் சிலிர்த்துக் கொண்டாள். “எதுக்கா?? எதுக்கு உங்களுக்கு தெரியாது??” என்று முறைத்தாள்.

 

நிஜமாகவே அவனுக்கு தெரியவில்லை எதற்கு என்று. “தெரிஞ்சுக்க தானே கேட்குறேன்”

 

“தெரிஞ்சுக்கிட்டே கேட்குறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. வாடி கோம்ஸ் போகலாம்” என்று தோழியின் கையை பிடித்து நகர்ந்தாள்.

 

அவன் அவளின் முன்னே வந்து இடைமறித்து நின்றான். “எனக்கு தெரிஞ்சாகணும்” அவள் முறைத்தாள் அவனை.

 

“நீ சொல்லும்மா எதுக்காக??” என்றான் கோமதியை பார்த்து.

 

“அன்னைக்கு இவளோட பேரை கிண்டலா நீங்க பாட்டு படிச்சு…”

 

“இவளோட பேரையா??” யோசித்தவன் “வசந்தின்னு எதுவும் பாட்டு வருதா என்ன?? அப்படியே வந்தாலும் நான் எதுக்கு கிண்டல் பண்ணி பாடப் போறேன்” என்றான் புரியாமல்.

 

‘இவருக்கு இவளை தெரியுமா!! அப்போ இவர் தான் அந்த திடீர் மாப்பிள்ளையா!!’ என்று புரியவும் அவனின் நாகரீக தோற்றம் கண்டு சட்டென்று ஒரு மரியாதை வந்தது.

 

“அவளோட முழுப்பேரு உங்களுக்கு தெரியாதா அண்ணா!!” என்றவளை முல்லை கடுமையாய் பார்க்க அவனோ இப்போது சந்தோசமாய் பார்த்தான் கோமதியை.

 

‘திடுதிப்புன்னு உனக்கு எங்க இருந்துடி முளைச்சாங்க அண்ணாவெல்லாம்’ என்று தோழியை மனமார திட்டிக் கொண்டாள்.

 

வேந்தனோ கோமதியின் அண்ணாவிலே அகமகிழ்ந்து இவளை வைத்து தான் நம்மாளை கரெக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

 

எதிரிலிருந்தவளுக்கு பதில் சொல்லும் பொருட்டு வேந்தன் மறுப்பாய் தலையாட்டிய விதத்திலேயே அவனுக்கு தெரியாது என்பது புரிய “வசந்தமுல்லை” என்று பதில் கொடுத்தாள் கோமதி.

 

“வசந்தமுல்லை” சத்தம் வராமல் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.

 

“கட்டின பொண்டாட்டியோட பேரைக் கூட முழுசா தெரிஞ்சுக்காத ஒருத்தன் இந்த உலகத்துலயே நானா தான் இருப்பேன்”

 

“நான் உன்னை கிண்டல் பண்ணி பாடினதா எனக்கு ஞாபகம் வரலையே!!” என்றான் அவளிடம்.

“அன்னைக்கு பஸ்ஸ்டாண்ட்ல வைச்சு போக்கிரி படத்துல வர்ற பாட்டை பாடி நீங்க என்னை கிண்டல் பண்ணலை” என்றாள் அவனின் மக்கு மனைவி வசந்தமுல்லை.

 

“அடியேய் அவருக்கு உன் பேரே இப்போத்தான் தெரியுது!! அவரை போய் லூசு மாதிரி கேள்வி கேட்குற!! யோசிக்கவே மாட்டியா நீ!!” என்று கோமதி தோழியை முறைத்தாள் இப்போது.

 

“இதுக்கு தான் பலமுறை உன்கிட்ட சொன்னேன். யார் கிண்டல் பண்ணாலும் கண்டுக்காம போன்னு. நீ வேணாம் சொல்ல சொல்ல தான் எல்லாரும் செய்வாங்கன்னு சொன்னா நீ கேட்கலை”

 

“அண்ணன் சாதாரணமா அந்த பாட்டை கேட்டு பாடியிருப்பாங்களா இருக்கும். நீ உன்னை கிண்டல் பண்றாங்கன்னு நினைச்சு இப்படி பண்ணி வைச்சுட்டே!!”

 

“இருந்தாலும் உனக்கு கோபம் ரொம்ப தான் வருது. கொஞ்சம் கோபத்தை குறை அப்போ தான் சரி எது தப்பெதுன்னு தெரியும்” என்று நல்ல தோழியாய் அட்வைஸ் செய்தாள்.

 

கோமதியின் பேச்சு அவனுக்குமாய் சேர்த்தே சொன்னது போல் இருந்தது அவனுக்கு.

 

கோமதி சொன்ன பின்னே தான் முல்லைக்கும் புரிந்தது. ஆனாலும் அதை அவன் முன் ஒத்துக்கொள்ள பிரியமில்லை அமைதியாய் நின்றாள்.

“ஆமா உனக்கு ஏன் அந்த பேரு பிடிக்கலை. நல்ல அழகான பேரு தானே!!” என்றவன் “வசந்தமுல்லை” என்று வாய்விட்டு மெதுவாய் சொன்னதில் தன் பெயர் அழகாய் தோன்றியதுவோ!!

 

“அது ரொம்ப பழைய பேரு எங்கப்பா வைச்சது இந்த அபி எப்பவும் அந்த பழைய பாட்டு போட்டு என்னை வெறுப்பேத்துவான், அதான் பிடிக்காது”

 

“பேரு வைச்சது உங்கப்பாவா இருக்காது. தாத்தாவோட செலக்ஷனா தான் இருக்கும்”

 

“எப்படி சொல்றீங்க??” என்றாள் கேள்வியாய்.

 

“எங்களோட பேரும் அப்படி தான் தாத்தாக்கு பிடிக்கும்ன்னு அப்பா வைச்சது. இனிமே உன் பேரு பிடிக்கலைன்னு சொல்லாதே, ரொம்பவும் அழகான பேரு அது” என்று சிலாகிப்பாய் அவன் சொன்னவிதம் அவளுக்கு பிடித்தது.

 

“சரி நான் வந்த விஷயத்தை சொல்லிடுறேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று ஆரம்பித்தான்.

 

கோமதியோ “நீங்க பேசுங்க நான் அங்க உட்கார்ந்திருக்கேன்” என்று நாசூக்காய் நகரப்போக “இல்லைம்மா நீ இங்கவே இருக்கலாம்” என்றான்.

 

முல்லையும் தோழியின் கையை இறுகப்பற்றி போகாமல் தடுத்தாள்.

 

“சில விஷயங்கள் விருப்பமில்லாம நடந்து முடிஞ்சு போச்சு. எதையும் நான் நியாப்படுத்தலை. நடந்ததை இல்லைன்னு சொல்ல முடியாது”

 

‘செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்கவேயில்லை இப்போவரை பேச்சை பாரு!!’ திட்டிக்கொண்டாள் அவனை.

 

“என்னை மன்னிச்சுடுன்னு சொல்லி ஒரு வார்த்தையில முடிக்கலாம். ஆனா அது பெயருக்காக கேட்ட மாதிரி தோணும்”

 

“தெரிஞ்சே செஞ்சுட்டு ஈசியா சாரி சொல்லி நான் தப்பிக்க விரும்பலை” என்று அவள் மனதின் கேள்விக்கு பதில் சொல்லியிருந்தான் இப்போது.

 

‘ஹ்ம்ம் ஆமால இவரு சாரி சொல்லியிருந்தா நானென்ன சரின்னு மன்னிச்சி விட்டிருப்பேனா என்ன!!’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

“உனக்கு பிடிக்காத பந்தத்தில உன்னை சிக்க வைச்சது என்னோட தப்பு தான். அதுக்கு முழுப்பொறுப்பும் நான் தான். ஒரு விஷயம் உனக்கு தெளிவு பண்ணணும்ன்னு நினைக்கிறேன்”

 

“அன்னைக்கு யோசிக்காம செஞ்சது சரியில்லை தான். ஆனாலும் நான் தப்பைக்கூட சரியா தான் செஞ்சிருக்கேன் அதை நீ புரிஞ்சுக்கணும்” என்றான் பீடிகையாய்!!

 

“எப்படி நீங்க செஞ்சது சரின்னு புரிஞ்சுக்கணுமா??” வெடுக்கென்று கேட்டாள்.

 

“அப்படியில்லை”

 

“நீயும் அமுதாவும் ஒரே வயசு பொண்ணுங்க தானே!! உன்னைவிட வளர்த்தியா, அழகா, பார்க்க பளிச்சுன்னு இருந்த அமுதாவைவிட்டு உன் கழுத்துல ஏன் தாலி கட்டின்னேன்னு யோசிக்க சொன்னேன்”

 

‘என்ன?? என்ன சொல்றார் இப்போ இவரு?? அமுதா அழகான்னு சொல்ல வர்றாரா இல்லை நான் அழகா இல்லைன்னு சொல்ல வர்றாரா!!’

 

எது எப்படியாகினும் முல்லைக்கு அவன் பேச்சு சகிக்கவில்லை. பின்னே அமுதாவையும் அவளையும் ஒன்றாய் பேசிவிட்டானே!!

 

‘நானும் அவளும் ஒன்றா!!’ என்ற கோபம் அவளுக்கு.

 

‘அப்போ அவளுக்கே தாலி கட்டியிருக்க வேண்டியது தானே!! எனக்கு ஏன் கட்டினீங்க??’ என்ற பொருமல் அவளிடத்தில்.

 

தான் என்ன நினைக்கிறோம் என்று கூட அவள் யோசிக்கவில்லை. தனக்குள் பொறாமை உணர்வு ஒன்று எழுந்ததை கூட உணரவில்லை அவள்.

 

முகம் செவ்வென்றிருந்தது அவளின் முகக்கடுப்பில்.

கோமதிக்கு முதலில் இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று தோன்றினாலும் தோழியின் முகத்தில் தோன்றிய மாறுதலை பார்த்து புரிந்தது.

 

வேந்தன் வேண்டுமென்றே அவளை சீண்டவே அப்படி பேசியிருக்கிறான் என்று. அவள் மௌனமாய் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

விளையாட்டாய் பேசினாலும் அதில் உண்மையும் இருக்கத் தானே செய்தது. ஏன் அவன் அமுதாவை விட்டு தன்னை மணந்தான் என்று நிதானமாய் யோசிக்கத் தவறியது அவள் மூளை.

 

“ஏன் கட்டியிருக்க வேண்டியது தானே?? நானாச்சும் நிம்மதியா இருந்திருப்பேன்” எரிச்சலாய் சொன்னாளவள்.

 

“நடந்து முடிஞ்சதை பேசி எந்த பலனும் இல்லை. இப்போ நீ தான் என்னோட மனைவி. நான் ஊருக்கு போறேன், இப்போதைக்கு அங்க இருந்து வர்றதா உத்தேசமில்லை எனக்கு”

 

“நமக்கு ஒரு வருஷம் டைமிருக்கு!! நல்லா யோசி!! உனக்கு பிடிச்சா நாம சேர்ந்திருப்போம்”

 

“இல்லையா ஒரு வருஷம் கழிச்சு மியூச்சுவலா பிரிஞ்சுடலாம். அதை சொல்லத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு வந்த வேலை முடிந்தது என்பது போல் சென்றுவிட்டானவன்.

 

அவளோ ‘பே’ என்று விழித்துக் கொண்டு நின்றாள் அவன் பேச்சில். ‘ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள முடிக்கறதை பத்தி பேசுறாரு’

 

‘இவருக்கு எல்லாமே ஈசியா போச்சு!! நினைச்சா தாலி கட்டிட்டு போவாரு!! வேண்டாம்ன்னா டிவோர்ஸ்ன்னு சொல்லுவாரா!!’

 

‘என் லைப் என்ன இவர் உருட்டி விளையாடுற பகடைக்காயா இப்படி போட்டு என்னை விளையாடுறார்’ என்று அழுகை வந்தது அவளுக்கு.

 

தோழி அழத்தயாராய் இருப்பதை பார்த்து அவளை உலுக்கினாள் கோமதி.

 

“ஹேய் என்ன பண்ணுறே வசந்தி. பேசாம வா காலேஜ்க்கு டைம் ஆச்சு. இப்போ எதையும் யோசிச்சு குழப்பிக்காதே!!” என்றவள் தோழியை இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

____________________

 

இரண்டு நாட்கள் கடந்திருக்கும் வேந்தனை அழைத்தது அவன் அன்னை.

 

“சொல்லுங்கம்மா…” என்றவாறே போனை காதில் வைத்தான். பரஸ்பர நலம் விசாரிப்புக்கு பின் அவர் ஆரம்பித்தார்.

 

“வேந்தா தாத்தாக்கு நாளன்னைக்கு முப்பது கும்பிடணும். நீ ஊருக்கு வந்திடு” என்றார்.

 

“சாரிம்மா நான் ஊருக்கு வரலை” என்று இந்த புறம் இவன் சொல்ல கண்மணியோ அவர் அருகில் நின்றிருந்த கணவரிடம் புலம்பலை ஆரம்பித்தார்.

 

“நான் சொன்னேன்ல அவன் வரமாட்டேன்னு சொல்லுவான்னு. நான் சொன்னாவே அவன் கேட்க மாட்டாங்க” என்று அவர் போனை காதில் இருந்து எடுக்காமலே பேசுவது அவனுக்கு கேட்டது.

 

“கண்மணி நீ சும்மா புலம்பாதே!! நீ போனை குடு நான் பேசுறேன்” என்று அவர் கேட்க “ஓ!! அப்போ அவன் நீங்க சொன்னா தான் கேட்பானா நான் சொன்னா கேட்க மாட்டானா”

 

“நான் என்ன அவனுக்கு கெடுதலா செய்யப் போறேன்” என்ற அவரின் குரல் கேட்க வேந்தனுக்கு சலிப்பாய் இருந்தது.

 

“ம்மா!! சும்மா எதையாச்சும் பேசிட்டு இருக்காதீங்க!! இப்போ என்ன வேணும் உங்களுக்கு!! நான் ஊருக்கு வரணும் அவ்வளவு தானே வர்றேன் விடுங்க” என்றான்.

 

“நீ பாட்டுக்கு அன்னைக்கு காலையில கிளம்பி வராதே!! முதல் நாளே கிளம்பி வா!!” என்ற கண்மணியின் பேச்சில் இப்போது தான் ஆசுவாசம் தெரிந்தது.

 

“சரி வர்றேன்” என்று அவன் போனை வைக்கப் போக “இரு வேந்தா போனை வைக்காதே!! அப்பா பேசணுமாம்” என்று கணவரிடம் போனை கொடுத்தார்.

 

“வேந்தா எப்படிப்பா இருக்கே??”

 

“நல்லாயிருக்கேன்ப்பா நீங்க எப்படி இருக்கீங்க??”

 

“நாங்க நல்லாயிருக்கோம்”

 

“சொல்லுங்கப்பா”

 

“நீ கிளம்புறதுக்கு நானே டிக்கெட் போட்டிறேன் வேந்தா”

 

வேந்தனுக்கு ஒரு ஸ்பார்க் ஓடியது ‘ஒருவேளை அன்று போல் எங்கள் இருவருக்குமாய் இருக்குமோ!!’ என்று ஒரு நப்பாசை அவனுக்கு.

 

ஆனாலும் அதன் பின் நடந்தவைகள் மனதில் வேகமாய் வலம் வர தந்தையிடம் மறுத்தான். “வேண்டாம்ப்பா நானே வந்துக்கறேன்”

 

“சென்னையில் இருந்து பிளைட் புடிச்சு வந்திடறேன்”

 

கரிகாலனிடம் போனை கொடுக்கும் போது கண்மணி ஸ்பீக்கரில் போட்டிருந்தார் போலும். மகன் பிளைட்டில் வருகிறேன் என்றதும் அவர் பொரிய ஆரம்பித்துவிட்டார்.

 

“என்ன வேந்தா உனக்கு சம்பாதிக்கறோம்ன்னு நினைப்பு வந்திட்டு போல. காசை இஷ்டத்துக்கு செலவு பண்ண நினைக்கறியா??”

 

“நானும் உங்கப்பாவும் ஒவ்வொரு காசையும் கஷ்டப்பட்டு தான் சம்பாதிச்சோம். அதை வைச்சு தான் உங்களை படிக்க வைச்சோம்”

 

“காசிருக்குன்னு கண்டபடி செலவு செய்யத் தான் நீ படிச்சியா” என்று மண்டகப்படி நடத்த அய்யோவென்றானது வேந்தனுக்கு.

 

“அப்பா நீங்களே டிக்கெட் போடுங்க!! என்னை ஆளைவிடுங்க சாமி” என்றுவிட்டான் அவன்.

 

அவனுக்கு ஆயாசமாக இருந்தது இப்போது. தன் மேல் எப்போதும் பிரியத்தையும் அன்பையும் மட்டுமே காட்டும் அன்னை சமீபமாய் மாறிப் போயிருக்கிறாரே என்று அவனுக்கு வருத்தமே!!

 

தான் செய்த செயல் தான் அவரை இப்படி மாற்றிவிட்டதா!! எல்லாம் அவருக்காய் தானே செய்தேன்.

 

எனக்காய் காரணங்கள் இருந்தாலும் இந்த அவசரமென்பது அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதினால் தானே!!

 

கொஞ்சம் சலிப்பாகக் கூட உணர்ந்தான் அவன். மறுநாளே அவன் தந்தை அனுப்பிய டிக்கெட்டின் பிரதி அவன் கைபேசிக்கு வந்திருந்தது. முன்பு போல் அல்லாமல் நிறுத்தி நிதானமாய் பார்த்தான்.

 

டிக்கெட் பதிவு அவனுக்கு மட்டுமாய் இல்லாமல் மேலும் மூவருக்கு என்பதாய் இருந்ததும் கொஞ்சம் புரிந்தது.

 

அவர்களை இப்போது பார்க்க வேண்டாம் என்ற எண்ணம் வேறு. ஆனாலும் கண்மணியிடம் சொல்லியது போல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தான்.

 

அவர்களுக்காய் காத்திருக்க வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பம் வேறு. முதல் நாள் மாலை மீண்டும் அழைத்திருந்த கண்மணி சொல்லியே விட்டிருந்தார்.

 

ராஜமும் அவர் மக்களும் அவனுடன் வருவார்கள் என்று. வேறுவழியின்றி அந்த கோச்சின் முன் நின்றிருந்தான் அவர்களுக்காய்.

 

ரயில் கிளம்புவதற்கு இருபது நிமிடம் முன்பு ராஜம் அவனுக்கு அழைத்திருந்தார். “வேந்தா எங்கப்பா இருக்கே?? நாங்க ஸ்டேஷன்க்கு வந்திட்டோம்”

 

“அத்தை உங்ககிட்ட டிக்கெட் டீடைல்ஸ் இருக்கா??”

 

“இருக்குப்பா”

 

“அப்போ நேரா அந்த கோச் வந்திடுங்க நான் அங்க தான் இருக்கேன்”

 

மூவரும் அடுத்த ஐந்து நிமிடத்தில் தங்கள் உடைமைகளை சுமந்தவாறே இவனை நோக்கி எதிரில் வர வேகமாய் சென்று ராஜத்தின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டான்.

 

“எப்படியிருக்கீங்க அத்தை??” என்று பேச்சு அவரிடத்தில் இருந்தாலும் அவன் பார்வை கட்டுப்படுத்த முடியாமல் முல்லையை நோக்கி இருந்தது.

 

அதைப் பார்த்த அபிஷேக் பல்லைக் கடித்தான். ராஜம் அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டு வர அவர்களின் கோச்சில் ஏறி இருப்பிடம் பார்த்து அமர்ந்திருந்தனர்.

 

அவர்கள் மூவரும் ஒரு புறம் அமர்ந்திருக்க வேந்தன் அவர்களுக்கு எதிர்புறம் இருவர் அமரும் இருக்கையில் தனியாய் அமர்ந்திருந்தான்…..

 

Advertisement