Advertisement

அத்தியாயம் – 10

 

டெல்லியில் யாழ்வேந்தனின் அறையில்

 

ஆயிற்று அவன் இங்கு வந்து தன்னைப்போல இரண்டு மாதம் ஓடிவிட்டது. மகிழ் லண்டனில் இருந்து வரப்போவதாக முதல் நாள் கண்மணி சொல்லியிருந்தார். அவனுக்குமே அவன் வரவை குறித்து சந்தோசமே!!

 

அவனுக்கு தெரியும் இந்நேரம் மகிழ் வீட்டில் இருப்பவர்களை ஒருவழி செய்திருப்பானென்று. ஏன் தன்னைத்தேடி அவன் இங்கேயே வரக்கூடும். அவன் எண்ணியது போலவே மகிழ் மறுநாளே வந்திருந்தான்.

 

இரவு அவனறையில் படுத்திருந்த வேந்தனை கலைத்தது அழைப்பு மணியோசை. எழுந்து வந்து கதவை திறக்க எதிரில் நின்றவனை பார்த்து சந்தோசம் அவனுக்கு.

 

உடன்பிறந்தவனை ஆரத்தழுவ அவனும் அணைத்துக் கொண்டான். வருவான் என்று தெரியும் இப்படி உடனே வந்து நிற்பான் என்று வேந்தன் எதிர்பார்க்கவில்லை.

 

“என்ன ப்ரோ வான்னு கூப்பிடாம அப்படியே நிக்குறே”

 

“ஹேய் வாடா மகிழ்… என்னமோ வீட்டுக்கு வந்த கெஸ்ட் மாதிரி வரவேற்க சொல்றே!! நீ என்னோட அண்ணன்டா”

 

“தம்பிடா”

 

“சரி சரி தம்பிடா”

 

“அது அந்த பயம் இருக்கட்டும்”

 

உள்ளே வந்தவன் அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். “பரவாயில்லை நீட்டா தான் வைச்சிருக்கே!!”

 

“சரி சாப்பிட்டியா மகிழ்??”

 

“எங்க உன்னோட சேர்ந்து சாப்பிடலாமேன்னு தான் வந்தேன். வெளிய போவோமா!!”

 

“நான் சாப்பிட்டேன்டா உனக்காக வர்றேன்” என்றவன் வேறு உடைமாற்றி வந்திருந்தான்.

 

“நடந்து போகலாம் ப்ரோ”

 

“ஹ்ம்ம் சரிடா” என்ற வேந்தனும் கதவை பூட்டிவிட்டு அவனுடன் நடக்க ஆரம்பித்தான்.

 

“அப்புறம்…”

 

“அப்புறம் என்னடா”

 

“அதை நீ தான் வேந்தா சொல்லணும்”

 

“அதான் என்ன நடந்திச்சுன்னு விளக்கமா கேட்டு தெரிஞ்சு தானே வந்திருப்பே அப்புறம் என்னடா கேள்வி என்னன்னு”

 

“தெரியும் இருந்தாலும் அது அவங்களோட கண்ணோட்டத்துல நான் தெரிஞ்சுகிட்டது. உன்னோட கண்ணோட்டத்துல என்னன்னு நீ தானே சொல்லணும்”

 

“எல்லாம் ஒண்ணு தான்”

 

“ஆனாலும் நீ சுத்த வேஸ்ட் ப்ரோ…”

 

“ஏன்டா நீயுமா?? நீ ஒருத்தன் தான் சொல்லிக் காட்டலைன்னு நினைச்சேன். செய்டா வந்த வேலையை சிறப்பா செய்” என்றவன் காதை துடைத்துக் கொண்டான்.

 

“எதுக்குடா வேந்தா காதை துடைக்கிற…”

 

“ஆல்ரெடி ரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுதுடா… நீ வேற ஆரம்பிச்சா அதான் துடைச்சுவிட்டுக்கறேன்”

 

“ப்ரோ போதும் மொக்கை காமெடி எல்லாம் பண்ணாத…” என்றவன் “ஆனாலும் உனக்கு சாமர்த்தியம் பத்தலை ப்ரோ”

 

“ஏன்டா அப்படி சொல்றே??”

 

“இதுவே நான் அங்க இருந்திருக்கணும். என்ன நடத்திருக்கும் தெரியுமா!!”

‘என்ன பெரிசா நடந்திருக்கும். அன்னைக்கே பெரிய கச்சேரி வைச்சு கலாட்டா பண்ணியிருப்பான். என்னைவிட கோபம் வருமே இவனுக்கு’ என்று எண்ணிக்கொண்டான் வேந்தன்.

 

“ப்ரோ… டேய் வேந்தா… எங்க கனவு காணப்போய்ட்ட!! என்னன்னு கேட்க மாட்டியா!! நீ கேளேன்”

 

“சரி என்னடா பண்ணியிருப்பே!!”

 

“அமுதாக்கு மட்டும் இல்லாம குமுதாக்கும் சேர்த்து தாலி கட்டியிருப்பேன்டா!!” என்று திரைப்பட பாணியில் சொல்லியிருந்தவனுக்கு கடுப்பான பார்வையை கொடுத்தாலும் அதையும் மீறி சிரிப்பு வந்துவிட சிரித்துவிட்டான் வேந்தன்.

 

“எதுக்குடா சிரிக்கிறே??”

 

“மூணு பொண்ணுன்னு சொல்லியிருப்பேன். அதான் நீ ஏற்கனவே தாலி கட்டிட்டியே!! அதான் அவங்களை விட்டுட்டேன்” என்றவனை முறைத்தான் வேந்தன்.

 

“அதான் உன் ஆளை சொல்லலையே அப்புறம் ஏன்டா முறைக்கிறே??”

 

‘எங்க சொல்லி தான் பாரேன்’ என்றது வேந்தனின் மனம் வெகு தீவிரமாய்…

 

“சரி அதெல்லாம் விடு. இப்போ கொஞ்சம் சீரியசா பேசுவோமா??”

 

“அப்போ அப்போலோ ஆஸ்பிட்டல் போகணுமாடா”

 

“டேய் வேந்தா எனக்கு மேல மொக்கை பண்ணுறேடா”

 

“சரி சரி சொல்லு” என்று பேசிக் கொண்டே வந்தவர்கள் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு மீண்டும் பேச்சை ஆரம்பித்தனர்.

 

“என்ன முடிவு பண்ணியிருக்கே?? நீ பாட்டுக்கு தாலி கட்டிட்டு பேசாம இங்க வந்து உட்கார்ந்தா என்ன அர்த்தம்??”

 

“என்ன அர்த்தம்ன்னு நீ தான் சொல்லேன்??”

 

“டேய்…” பல்லைக் கடித்தான் மகிழ்.

 

“உனக்கு இப்போ என்ன தெரியணும்?? அதை மட்டும் சொல்லு”

 

“அவங்களை கூட்டிட்டு வர்ற ஐடியா இருக்கா இல்லையா உனக்கு??”

 

“நெறைய இருக்கு…”

 

“என்னது??”

 

“ஐடியா இருக்கா இல்லையான்னு கேட்டியேடா அதான் இருக்குன்னு சொன்னேன்”

 

“அப்புறம் ஏன் சும்மாயிருக்கே!!”

 

“நான் சும்மாயிருக்கேன்னு யார் சொன்னது”

 

“புரியற மாதிரி சொல்லேன் வேந்தா. அம்மாகிட்ட நான் உனக்கு மந்திரிக்கறேன்னு சொல்லிட்டு வந்தேன். போற போக்கை பார்த்தா நான் தான் மந்திரிச்சு விட்ட மாதிரி ஆகிடப் போறனா”

 

“சரி சரி சொல்றேன்”

 

முல்லையை வீட்டில் விட சென்ற அன்றைய நிகழ்வுக்கு பின்னர் தான் வேந்தன் எங்காவது சென்றுவிடுவது என்ற முடிவிற்கே வந்திருந்தான்.

 

அன்றைய நாளின் நிகழ்வுகள் இன்று நடந்தது போல் அவன் மனக்கண்ணில் வந்து போனது. நடந்ததை மகிழிடம் சொல்ல ஆரம்பித்தான்.

 

முல்லையின் வீட்டை அடைவதற்கு முன் மீண்டுமொருமுறை அழைத்துவிட்டான் அபிஷேக்.

 

“ஹலோ ஹ்ம்ம் சொல்லுப்பா”

 

“எங்க இருக்கீங்க?? பக்கத்துல வந்துட்டீங்களா??”

 

“ஹ்ம்ம் இன்னும் பத்து நிமிஷத்துல வீட்டுல இருப்போம்… ஆமா எதுக்கு நீ இவ்வளவு விசாரிக்கறே?? என்ன விஷயம்??”

 

“எல்லாம் உங்க அத்தை பார்த்த வேலை தான். முதல்முறையா நீங்க வீட்டுக்கு வர்றீங்களாம். உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா நிக்க வைச்சு ஆரத்தி எடுக்கணுமாம்” என்றுவிட்டு போனை வைத்தான்.

 

‘இவன் குரல்ல ஏன் இத்தனை சலிப்பு?? ஒருவேளை என்னை பிடிக்கலியா??’ யோசனை அவனுக்குள்.

 

வீடும் வந்துவிட இருவரும் இறங்கினர். அவளின் உடைமைகளை கூட எடுக்காமல் வேகமாய் இறங்கியிருந்தாள் அவள்.

 

அவனே அதையும் எடுத்துக்கொண்டு வண்டிக்கு காசைக் கொடுத்து வர யாரோ ஒரு பெண்மணி கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். லேசாய் ஒரு சாரல் மனதில்.

 

“தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க”

 

“இல்லை அதெல்லாம் வேணாம்…” மறுத்தான் அவன்.

 

“அட என்ன நீங்க சும்மா நில்லுங்க. இதுக்கெல்லாமா வெட்கப்படுவாங்க…” என்று அவர் சொல்ல அவனோ திரும்பி முல்லையை பார்த்தான்.

 

அவள் முகமோ கடுப்பிலிருக்க “இல்லைங்க ப்ளீஸ் இதெல்லாம் வேணாமே!!” என்றான் மீண்டும்.

 

“ஏன்டி வரும் போதே புள்ளைய மிரட்டி கூட்டிட்டு வந்தியா?? உன் முகத்தை பார்த்திட்டு நிக்குது” என்றார் அவர் முல்லையிடம்.

 

“அத்தை நான் ஒண்ணும் சொல்லலை. நீ என்ன பண்ணணுமோ பண்ணு… அதான் எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்கல பண்ணுங்க… எல்லாம் என்னிஷ்டப்படியா நடக்குது”

 

அவன் அன்னையை போலவே அவள் பேச மனம் குறுகியது அவனுக்கு. சாதாரணம் என்று நினைத்தது பூதாகரமாய் தோன்றியது அவனுக்கு இப்போது.

 

முல்லையின் அத்தை அகிலா ஆரத்தி எடுக்க இருவரும் உள்ளே நுழைந்தனர். காம்பவுண்ட்டில் இருந்து வீட்டிற்கு சில அடி இடைவெளி இருந்தது.

 

அவன் காம்பவுண்ட் தாண்டி உள்ளே வரவும் அவன் கையில் இருந்த தமக்கையின் பையை அபிஷேக் வாங்கிக் கொண்டான்.

 

தம்பியை கண்டதும் ஏனோ கண்கள் கரித்தது முல்லைக்கு. அவள் கலங்கிக் கொண்டே உள்ளே செல்வதை பார்த்தவனுக்குள் வேந்தனின் மீது தீராத கோபமெழுந்தது.

 

முல்லை வேகமாய் வீட்டிற்குள் செல்வதை பார்த்து லேசாய் ஒரு வலி வேந்தனுக்குள். அபிஷேக்கை மெதுவாய் அவன் திரும்பி பார்க்க அவன் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை.

 

“இப்போ சந்தோசமா உங்களுக்கு??” என்று வெடுக்கென்று கேட்டான்.

 

அவன் சட்டென்று அப்படி கேட்பான் என்று எதிர்பாராத வேந்தன் முதலில் திகைத்து பின் “என்ன அபி??” என்றான்.

 

“உங்களுக்கு கூட பிறந்தவங்க இருக்காங்களா??” என்றான் சற்றும் சம்மந்தமில்லாமல்.

 

“ஹ்ம்ம் இருக்காங்க…”

 

“ஓ!!” என்றவன் “பொண்ணா??” என்றிருந்தான்.

 

‘இவன் எதுக்கு இதெல்லாம் கேட்கிறான்’ என்று யோசித்துக் கொண்டே “இல்லை என்னோட பிறந்தவன் மகிழ் வேந்தன்”

 

“உங்க வீட்டில எல்லாரும் பையனா போயிட்டீங்க!! அதான் எல்லாம் ஈசியா பண்ணிட்டீங்க!!” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

 

பின் “நான் பெரியவனா இருந்திருக்கணும், அப்போ தெரிஞ்சிருக்கும் சங்கதி” என்று அவன் சொல்ல ‘என்னடா பண்ணியிருப்பே??’ என்று கேட்கத் தான் தோன்றியது வேந்தனுக்கு.

 

அவ்வளவு கோபம் அவன் முகத்தில் தன்னைவிட வயதில் சிறியவன் எல்லாம் தன்னை நிற்க வைத்து கேள்வி கேட்பதா என்றிருந்தது.

 

அபியின் பேச்சு அவனுக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது. அவன் பேச்சில் இருந்த குத்தல் வேந்தனுக்கு புரியாமலில்லை. உனக்கும் கூடப்பிறந்தவள் இருந்திருக்க வேண்டும் அப்போது தெரியும் உன் சங்கதி என்ற மறைமுக எச்சரிக்கை தெரிந்தது அபியின் பேச்சில்.

 

சுருசுருவென்று வந்த கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான். இன்னும் ஓரிரு நிமிடம் நின்றாலும் ஏதாவது பேசிவிடுவோமோ என்றே தோன்றியது அவனுக்கு.

 

ஏற்கனவே தான் செய்து வைத்ததிற்கு தான் இவ்வளவு பேச்சு. இதில் வாய்விட்டு இன்னும் புண்ணாகிக்கொள்ள அவன் விரும்பவில்லை. வேந்தன் அபிக்கு ஒன்றும் சொல்லாமல் வாசலை நோக்கித் திரும்பினான்.

 

அகிலா தெருவில் யாரையோ பார்த்து பேசிக் கொண்டிருந்தவர் அப்போது தான் உள்ளே வந்தார் அவர்களை நோக்கி.

 

“உள்ள வாங்க தம்பி…” என்று வேந்தனை பார்த்து அழைத்தார்.

 

“இல்லைங்க நான் கிளம்பறேன், எனக்கு டைம் ஆச்சு மதியத்துக்கு மேல ஆபீஸ் வர்றேன்னு சொல்லியிருந்தேன்” என்றான்.

 

“ஒரு எட்டு உள்ள வந்திட்டு அப்புறம் கிளம்புங்க தம்பி. ஐஞ்சு நிமிஷத்துல எதுவும் ஆகிடாது” என்றார் அவர்.

 

“இல்லை பரவாயில்லை… நான் கிளம்பறேன், வர்றேன் அபி… பார்த்துக்கோ” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

 

அவனுக்கு சுயமரியாதை அதிகமுண்டு. அதனாலேயே அவன் அன்னையை உதாசீனம் செய்தார்கள் என்றெண்ணி வருத்தம் கொண்டு செய்யக் கூடாத ஒன்றை செய்துவிட்டான்.

 

அதன் பலன் தன்னை துரத்துவதை நன்றாய் அனுபவித்தான். அன்னை பேசிய போது கூட அவர்களுக்காய் தான் மன்னிப்பு கேட்டானே தவிர செய்தது தவறு என்று உணர்ந்து கேட்டிருக்கவில்லை.

 

இப்போது புரிந்தது செய்தது எவ்வளவு பெரிய தவறென்று. அவரவரின் நியாயத்திற்காய் தவறிழைப்பது மிகப்பெரிய தவறு.

 

தவறில் சின்னது பெரியது என்று எதுவுமேயில்லை. எல்லாமே ஒன்று தான், தனக்கு சின்னதாய் தெரிந்தது மற்றவர்களுக்கு மாபெரும் தவறாய் தானே தெரிந்திருக்கிறது.

 

கண்மணி அவனை பேசியதை விட இவர்கள் பேசியது எல்லாம் தான் இன்னமும் கஷ்டமாயிருந்தது அவனுக்கு.

 

‘போங்கடா’ என்று சொல்லி எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு போக அவனுக்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஆனால் சொந்தங்களை மதிப்பவன் அவன். இல்லாதவர்களுக்கு தானே அதன் அருமை புரியும்.

 

இத்தனை வருடத்தில் கண்மணியின் தாயாரை தவிர வேறு சொந்தத்தை அவர்கள் பார்த்ததில்லை. அவரும் கூட அவனின் சிறு வயதிலேயே உலகை விட்டு சென்றுவிட்டார்.

 

அவ்வப்போது கரிகாலன் ஊருக்கு சென்று தன் வீட்டினரை சமாதானம் செய்ய போய் வருவார். ஆனால் அவர்கள் மனம் தான் மாறிய பாடில்லை.

 

கொஞ்சம் நன்றாய் வளர்ந்த பிறகு மகிழையும் யாழையும் அழைத்துச்சென்று அவர்களிடம் காட்டினால் மாறுவார்களா என்ற நப்பாசையில் மகன்களை அழைக்க அப்போது இருவருமே வர மறுத்துவிட்டனர்.

 

இருவரும் பருவ வயதில் இருந்த போது ஏனோ மகிழுக்கு தந்தையுடன் ஊருக்கு சென்று பார்த்தால் தான் என்ன என்று தோன்ற அவருடன் சென்று வருவானவன்.

 

இப்படி சொந்தங்களே இல்லாத தனிமையில் இருந்தவர்களுக்கு சொந்தங்களின் அருமை தெரியாமல் இருக்குமா என்ன??

 

உறவுகள் இருந்தும் தங்களை சேர்க்காமல் இருந்தது தான் அவனுக்கு வருத்தமே!!

 

அதிலும் தன் அன்னையை குலம் பார்த்து சேர்க்காமல் இருந்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 

எப்படியாவது சொந்தங்கள் ஒன்றாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சட்டென்று முடிவெடுத்து அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டான்.

 

அபிஷேக் பேசியதை கேட்ட போது ஒரு புறம் அவன் மேல் கோபம் வந்தாலும் யோசிக்கும் போது அதில் நியாயம் தெரிந்தது அவனுக்கு.

 

இரண்டு மூன்று நாளாய் யோசனையிலேயே உழன்றிருந்தவன் ஒரு முடிவெடுத்து அலுவலகத்தில் ட்ரான்ஸ்பர் கேட்டான்.

 

ஆனால் அப்போது டெல்லியில் மட்டுமே வேகன்ட் இருப்பதாகவும் பெங்களூர் வேண்டுமென்றால் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்று கூற அவன் டெல்லிக்கு செல்ல மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டான்.

 

டெல்லிக்கு செல்லும்முன் வசந்தமுல்லையை பார்த்துவிட வேண்டும் என்று மனம் அடித்துக் கொண்டது.

 

அவள் எங்கு படிக்கிறாள் என்று கூட அவனுக்கு தெரியாது. அதனால் ஒரு அனுமானம் கொண்டு அவள் வீட்டிற்கு சற்று தள்ளியிருந்த பேருந்து நிறுத்தத்தில் அவளுக்காய் காத்திருந்தான்.

 

தான் கல்லூரியில் படிக்கும் போது கூட இப்படி எல்லாம் செய்ததில்லை இவளுக்காய் காத்திருக்கிறோம் என்ற நினைவு வந்து இதழில் குறுநகையை கொடுத்தது…

Advertisement