Advertisement

அத்தியாயம் – 8

 

ஜெயக்னாவை இழுத்து அவனறைக்குள் நுழைந்து கதவை அடைத்து முடிக்கும் வரையிலும் பற்றியிருந்த அவள் கையை அவன் விடவில்லை.

 

ஒரு பக்க கதவில் அவளை சாய்த்திருந்தான், தானும் அவளை ஒட்டியே நிற்கிறோம் என்பதை முகத்திற்கு முன் தெரிந்த அவள் வதனம் கண்டே உணர்ந்தான்.

 

பார்வை தன்னை தள்ளிவிட துடிக்கும் அவள் கண்களை தழுவி பின் கொஞ்சமாய் கீழிறங்கி இப்போது அவள் இதழ்களின் மீது…

 

அவள் வாய் திறந்து பேசும் வரையிலும் அவளை விட்டு விலகி நிற்க வேண்டும் என்றே அவனுக்கு தோன்றவில்லை.

 

“ஹ்ம்ம்… தள்ளுங்க… தள்ளிப்போங்க…” என்று முக்கி முனகி அவனை தள்ளினாள்.

 

“என்ன வேணும் இப்போ உனக்கு??” என்று அவனை முறைத்திருந்தாள்.

 

“யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…” என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு முதுகுகாட்டி கதவை திறக்கப் போனவளின் கரம் பற்றி தடுத்தான்.

 

“கொஞ்சம் இரு… உன்கிட்ட பேசணும்ன்னு தான் உன்னை உள்ளே கூட்டிட்டு வந்தேன்…”

“ஹ்ம்ம்…” என்று முறைத்தவள் “தள்ளிட்டு வந்தேன்னு சொல்லு… யாராச்சும் பார்த்தா மானமே போகும்…”

 

“ஏன்?? அதெல்லாம் போகாது… நீயும் நானும் யாரோ இல்லை கணவன் மனைவி… அப்படி யாரும் பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்க…” என்று அவன் நிதர்சனம் உரைக்க அவள் வாய் மூடிக் கொண்டாள்.

 

“கை…” என்று பற்றியிருந்த அவன் கரத்தை உதறி அவனை முறைத்து நின்றாள்.

 

“கையை தானே பிடிச்சேன், என்னமோ கற்பே போன மாதிரி லுக் விடுறே… உன் கழுத்துல இதை கட்டியிருக்கேன், உன் கையை பிடிக்கிற எல்லா உரிமையும் எனக்கிருக்கு” என்று அவள் உள்ளே போட்டிருந்த தாலியை பற்றி வெளியில் போட்டான்.

 

அதில் லேசாய் உடல் அதிர நின்றவள் “என்ன வேணும் உனக்கு இப்போ?? எதுக்கு இப்படி அநாகரீகமா நடந்துக்கறே??”

 

“என்ன அநாகரீகத்தை கண்டுட்டே இப்போ நீ?? உன்னை நான் இப்போ என்ன செஞ்சேன்… பேசணும்ன்னு கூட்டிட்டு வந்தேன்…”

 

“ஏன் ரெண்டு நாள் முன்னாடி எல்லாரும் இருக்கும் போது என்கிட்ட தனியா பேசியே ஆகணும்ன்னு நீ சொன்னப்போ நான் அதை அநாகரீகம்ன்னு நினைச்சேனா” என்று குத்தினான் அவன்.

 

அந்த குத்தலில் அவள் முகம் சுருங்கிவிட அதை திருப்தியாக பார்த்துக் கொண்டவன் “நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டே!!”

 

“அப்போ நீ என்கிட்ட முடியாதுன்னு தானே சொன்னே…” என்ற அவளின் குரலில் இருந்தது அவளுக்கும் புரியவில்லை அவனுக்கும் புரியவில்லை.

 

“ஆமா சொன்னேன் ஆனா செஞ்சனா??” என்றான் கேள்வியாய்.

 

‘ஏன்??’ என்ற வார்த்தை சட்டென்று வாயில் வரவில்லை அவளுக்கு, மனதிற்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள்.

 

‘ஏன்னு கேட்டா இவளுக்கு முத்தா உதிர்ந்து போகும்…’ என்றது அவன் மனம்.

 

பதிலேதும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தாள் அவள். “நான் வெளிய போகணும்…”

 

“போகலாம் அப்புறமா…”

 

“எனக்கு இங்க இருக்கவே ஒரு மாதிரியா இருக்கு…”

 

“ஏன்??”

 

“எனக்கு பிடிக்கவே இல்லை… ஒரு மாதிரி அருவெறுப்பா இருக்கு…” என்று அவள் சொன்ன போது அவன் முகம் எந்த உணர்வையும் காட்டியிருக்கவில்லை.

“பிடிக்காம எதுக்கு என்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்டே??” என்று அழுத்தமாய் அவளைப் பார்த்து கேட்டான்.

 

“அய்யோ அது பெரிய தப்பு தான்… சும்மா சும்மா அதையே சொல்லிக்காட்டி என்னை அசிங்கப்படுத்தாதீங்க… அவமானமா இருக்கு…”

 

“ஒருத்தர் முன்னாடி போய் நின்னு என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்குற நிலைமை எந்த பொண்ணுக்கும் வரவே கூடாது…” என்றவள் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள் அங்கிருந்த கட்டிலில்.

 

அழுகை லேசில் வராது அவளுக்கு. இப்போதும் தொண்டை அடைத்தது ஆனால் கண்ணீர் வரவில்லை அவள் கண்களில்.

 

“அப்போ உங்கப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் நடந்துச்சா… அப்படி நடக்க வேண்டிய அவசியம் என்ன??”

 

“அதான் அன்னைக்கே சொன்னேனே… திரும்பவும் கேட்கறீங்க… என் அம்மாவும் அப்பாவும் அந்த நிலைமையில நிக்கும் போது அவங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தோணிச்சு…”

 

“இப்போ தோணுது, நான் உறுதியா இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்க கூடாதுன்னு…”

 

“என்கிட்டயும் வந்து பேசியிருக்க கூடாது…” என்று சேர்த்து சொன்னான் அவன்.

 

“ஆமா பேசியிருக்க கூடாது, என் வாழ்க்கையிலேயே நான் பண்ண மிகப்பெரிய முட்டாள்த்தனம் அது தான்…”

 

“சரி அதை எப்படி சரி பண்ணலாம்…”

 

“அ… அது… அது வந்து…” என்று முடிக்க முடியாமல் தடுமாறினாள் அவள். ‘அய்யோ தன்னுடைய இந்த இக்கட்டான நிலைக்கு அவள் தானே காரணம் என்று மீண்டும் தன் தமக்கையின் மீதான கோபம் அவளுக்கு கூடியது.

 

“வந்து என்ன பண்ணுறதா உத்தேசம்…” என்றான் அவன் தொடர்ந்து.

 

“அதான் அன்னைக்கே சொன்னேன்ல… உங்களுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க… நான் குறுக்க வரமாட்டேன்… டி… டிவோர்ஸ் கொடுத்திர்றேன்…” என்றவளை நிச்சலனமாய் பார்த்தான்.

 

“ஹ்ம்ம்… அப்புறம்…”

 

“அப்புறம் என்ன வேணும் உங்களுக்கு??” என்று இப்போது அவனை மிதப்பாய் பார்த்தாள். அவள் பேச்சில் அவ்வப்போது மரியாதை வந்து போய் கொண்டுமிருந்தது.

 

“நீ டிவோர்ஸ் தர்றேன்னு சொன்னதுக்காகவும், வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னதுக்காகவும் தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… அப்படி தானே….”

 

“வேற எதுக்காம்??” என்றவள் “எதுவா இருந்தாலும் எனக்கு அதைப்பத்தி கவலையில்லை… எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை… ஏதோ முள்ளு மேல நிக்கற மாதிரி இருக்கு…”

 

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்… இது நீயா தேடிக்கிட்டது தானே…” என்றான் அவன் பதிலுக்கு.

 

“ஆமா நான் தான் தேடிக்கிட்டேன்… அதான் நானா விலகிப்போறேன்… இப்போ என்ன பண்ணணும் அதுக்கு…”

 

“நீ விளையாட என் லைப் தான் உனக்கு கிடைச்சுதா… உன்னைப்பத்தி யோசிச்சவ என்னைப்பத்தி முதல்ல யோசிச்சிருக்கணும்…”

 

“எந்த தைரியத்துல என்கிட்டே வந்து பேசினே, என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு” என்று அவன் முறைக்கவும் அவள் வாய் மூடிக்கொண்டது.

 

திரும்ப திரும்ப இவன் அதிலேயே வந்து நிற்கிறானே, இவன் அதை விடவே மாட்டானா என்றிருந்தது அவளுக்கு.

 

இங்கிருந்து எங்காவது ஓடிவிடலாமா யாராவது தன்னை தேட மாட்டார்களா அழைக்க மாட்டார்களா என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது அவளுக்கு.

 

ராகவும் அவளை குத்திக்காட்ட வேண்டுமென்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் ஜெயக்னாவிடம் அப்படி பேசினால் மட்டுமே சரியாய் வரும் என்று தான் பேசினான்.

 

அவள் கெஞ்சினால் மிஞ்சும் ரகம் என்பதை உணர்ந்தவன் மிஞ்சியே பேசினான் அவளிடம். அது மட்டுமே அவள் வாயை அடைக்கும் என்பதை திருமண மண்டபத்தில் அவனிடம் பேச வந்த போதே தெரிந்திருந்தான்.

 

அவள் தர்மசங்கடமாய் அவன் முன் நின்றிருக்க அதை அவனுக்கு காட்டாது மறைக்கவும் வேறு பாடுப்பட்டாள். அவள் மனக்குரல் வெளியே கேட்டது போல மீனாட்சி அறைக்கதவை தட்டினார்.

 

“ராகவா… ராகவா…”

 

ஜெயக்னா வேகமாய் சென்று கதவை திறக்கப் போக “உன்கிட்ட பேசிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு கிளம்பினா என்ன அர்த்தம்…”

 

“அத்தை கூப்பிடுறாங்க…”

 

“எனக்கும் தெரியும் நான் பேசிக்கறேன்…” என்று அவளிடம் மெதுவாய் சொல்லிவிட்டு “என்னம்மா” என்றிருந்தான் சத்தமாய்.

 

“கதவை திறப்பா… ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வரலாம்ல…” என்று அவர் சொல்ல ஜெயக்னா வேகமாய் வந்து கதவை திறந்திருந்தாள் ‘நீ என்ன வேணா சொல்லிக்கோ போ’ என்று அவனை ஒரு பார்வை பார்த்து.

 

“நீயும் இங்க தான் இருக்கியாம்மா…” என்று அவர் அவளைப் பார்த்து சொல்லவும் ஒரு கணம் கூசியது அவளுக்கு. தன்னை என்ன நினைத்திருப்பார் என்று.

 

“இ… இல்லை ஏதோ பேசணும்…” என்று ஆரம்பித்தவள் “எந்த கோவிலுக்கு அத்தை??”

 

“பக்கத்துல இருக்க கோவில் தான்… எவ்வளோ பிரச்சனையோட கல்யாணம் முடிஞ்சிருக்கு, சரியோ தப்போ இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்”

 

“அந்த கடவுளுக்கு நன்றி சொல்லி உங்களுக்காக வேண்டிட்டு வாங்க… உங்க வாழ்க்கை நல்லபடியா தொடங்கணும்ன்னு” என்று முடித்தார் அவர்.

 

அவர் சொன்னதை புரிந்தும் புரியாமலும் தலையாட்டி கேட்டவள் “நான் போய் கிளம்பறேன் அத்தை…” என்று அவள் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

 

மீனாட்சி செல்லும் அவளைப் பார்த்தவர் அவள் தலை மறைந்ததும் “என்னாச்சு ராகவா?? இப்போவே பேசியாகணுமா??”

 

“வேற எப்போம்மா பேசறது…”

 

“அவளும் குழப்பத்துல தானே இருக்கா…”

 

“இருக்கட்டும்மா… ஆனாலும் இந்த கல்யாணம் யாருக்காக ஒத்துக்கிட்டோம்ன்னு அவளுக்கு தெரியணும் தானே… அவளுக்காக தானே சரின்னு சொன்னது…”

 

“அவ எனக்கென்னன்னு போறா…” என்று அவள் சென்ற வழியையே பார்த்தான் அவன்.

 

“ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க… உடனே எல்லாம் மாறிடாது… நாளாக ஆக எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறும்…”

 

“நான் எதையும் எதிர்ப்பார்க்கலைம்மா… இதை பத்தி பேச மட்டும் தான் அவளை கூப்பிட்டேன்… என்னமோ பேயை கண்ட மாதிரி என்கிட்ட இருந்து ஓடுறா…”

 

“விடு ராகவா விட்டுப்பிடி… ரொம்ப மரியாதையான பொண்ணுடா… கொஞ்சம் பிடிவாதம் உண்டுன்னு நினைக்கிறேன்…”

 

‘ஆமாமா இவ மரியாதையான பொண்ணு தான்… ரொம்ப மரியாதை கொடுத்து தான் பேசுவா…’ என்று மனதிற்குள் அவள் தன்னிடம் பேசியதை நினைத்து பார்த்துக் கொண்டான்.

 

“சரி ராகவா கிளம்புங்க…” என்று அவர் சொல்லவும் அறைக்குள் சென்றுவிட்டான் அவன்.

 

பெண்ணும் மாப்பிள்ளையும் கிளம்பியிருக்க உடன் சந்தியா குடும்பத்தினரும் அவளின் பெற்றோரும் அவர்களுடனே கிளம்பினர்.

 

“அம்மா நீங்களும் வாங்க…” என்று தன் அன்னையை பார்த்தான் ராகவ்.

 

“நீங்க போயிட்டு வாங்க… இங்க நைட்க்கு சமையலுக்கு பார்க்கணும், அத்தையோட சேர்ந்து அதை ரெடி பண்ணி வைச்சுடறேன்…” என்றார் அவர்.

 

“எல்லாரும் போவோம், நைட் கதையை வந்து பார்த்துக்கலாம்… பாட்டியை கூப்பிடுங்க…” என்றவன் அவனே அவரை அழைக்க அவரும் வந்துவிட எல்லோருமாக அருகிருந்த கோவிலுக்கு நடந்தே சென்றனர்.

 

ராகவின் அருகே நின்றிருப்பதே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘இதெல்லாம் ஏன் எனக்கு மட்டும் நடக்குது, நான் இருக்க வேண்டிய இடமில்லையே இது…’ என்ற குழப்பம் வேறு அவ்வப்போது அவளை தாக்கியது.

 

நிம்மதியாய் கடவுளை தரிசிக்க வந்த இடத்தில் கூட அவள் மனம் நிம்மதியில்லாமலே தவித்தது.

தானாய் சென்று சுழலில் மாட்டிக்கொண்ட உணர்வு அவளுக்கு. ‘கடவுளே இன்னும் ஒரு இரண்டு வருடம் நான் நிம்மதியாய் வேலை பார்த்திருப்பேனே’

 

‘என்னை இப்படி கொண்டு வந்து நிறுத்திவிட்டாயே’ என்று அவரிடம் குறைப்படித்தாள் அவள்.

 

உள்ளிருந்த வேலவனோ அமைதியாய் அவளைப் பார்த்து புன்னகைத்தார். உன் வேலையே இனி இவனிடத்தில் தானே… என்னிடம் வந்து குறைப்படிக்கிறாயே என்பதாய் இருந்தது அவர் புன்னகை முகம்.

 

எல்லோருக்கும் முன் சாமியை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த சன்னதிக்கு சென்றவளை ஒன்றும் சொல்ல முடியாமல் வள்ளி மற்றவர்களை பார்த்து சங்கடமாய் நெளிந்தார்.

 

“ஜெயா எதுக்கு இவ்வளவு அவசரம், மாப்பிள்ளையோட சேர்ந்து போ…” என்று சரவணன் கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டார்.

 

முகம் ஒரு கணம் சுருங்கிய போதும் அவன் அவளருகே வரும் வரை அங்கேயே நின்றிருந்தாள். அவனைவிட்டு அதற்கு மேல் நகர நினைக்கவில்லை அவள். அவனும் அதற்கு விடவில்லை அவளை கரத்தை தன்னுடன் சேர்த்து பற்றியிருந்தான்.

 

அவளுக்கோ அவனைவிட்டு விலகி நடந்தால் யாராவது அவளுக்கு அறிவுரை செய்கிறேன் என்று ஆரம்பிப்பார்கள் தேவையா அது, அவளிருக்கும் மனநிலைக்கு யாரையாவது குத்தவா கொல்லவா என்றிருந்தாள் அவள்.

 

வீட்டிற்கு வந்து இரவு உணவு முடியும் வரையிலும் கூட ஒன்றுமே தோன்றவில்லை அவளுக்கு. இயல்பாய் தன்னை காட்டிக் கொண்டிருந்தாள்.

 

நேரம் நெருங்கி அனைவரும் படுக்கச் செல்லலாம் என்று ஒருவர் மாற்றி ஒருவர் நகரவும் சந்தியா அவளருகே வரவும் திக்கென்றிருந்தது அவளுக்கு.

 

எதுவுமே தெரியாமல் இருக்க அவள் ஒன்றும் சின்னக் குழந்தையில்லையே… ஆனால் அவளைப் பொறுத்தவரை அந்த இரவு ஏன் வருகிறது என்ற மனநிலையே அவளுக்கு.

 

“ஜெயா குளிச்சுட்டு வேற புடவை மாத்திட்டு வா… நான் தலை சீவி விடறேன்…” என்று அவள் சொல்லவும் நெஞ்சில் நீங்கா பாரம் ஒன்று அமர்ந்தது.

 

அந்நேரம் ராகவ் கையில் பாய், தலையணை சகிதம் வெளியில் வந்தவன் “அக்கா நான் மாடியில படிக்க போறேன், மாமா அங்க தானே இருக்கார்…” என்று கேட்டான்.

 

“டேய் நீ எதுக்குடா இப்போ அங்கே போறே…” என்றவள் கண்களால் ஜெயாவை ஜாடை காட்டினாள்.

 

“இங்க பாரு ஒண்ணும் அவசரமில்லை, நான் அம்மாகிட்ட பேசிட்டேன்… எனக்கு தூக்கம் வருது, அவ அவங்க அப்பா அம்மாவோட இருக்கட்டும்…” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே சென்று விட்டான்.

 

“இவனை…” என்று பல்லைக் கடித்த சந்தியா அருகிலிருந்த ஜெயாவை ஏறிட்டாள்.

 

ஜெயாவின் நெஞ்சின் பாரம் அப்போது தான் இறங்கியது. “நீ அவனை தப்பா நினைக்காதே…” என்றாள் சந்தியா.

 

‘நான் எதுவும் நினைக்கலை’ என்றது ஜெயாவின் மனது.

 

“கல்யாணம் திடிர்னு நடந்து போச்சா, அதான் அப்படி சொல்லிட்டு போறான்னு நினைக்கிறேன்… எல்லாம் சரியாகிடும்…” என்று ஆறுதல் தொனியில் அவள் சொல்ல ஜெயா வெறுமே வாயை இழுத்து புன்னகைக்க முயன்றாள்.

 

“நீ போய் படுத்துக்கோ…” என்றுவிட்டு அவள் அன்னையை தேடித் போனாள்.

 

ஜெயாவோ அப்பாடா என்ற ரீதியில் அவள் அன்னை இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

 

“நீ என்ன ஜெயா இங்க??” என்று கேட்டவரிடம் அவள் மொத்த கோபமும் பாய்ந்தது.

 

“ஏன் எங்க போகணும்ன்னு நினைக்கறீங்க?? காலையில் கல்யாணம் முடிஞ்சது அப்படியே தண்ணி தெளிச்சுவிட்டாச்சு எங்காச்சும் போய் தொலையட்டும்ன்னு நினைச்சீங்களா” என்று வார்த்தைகளை கொட்டினாள் அவள்.

 

வள்ளிக்கு கண்கள் கலங்கி விழியை தாண்டி கன்னத்தில் இறங்கிவிட்டது. அப்போது தான் ஜெயக்னா அங்கு கீழே படுத்திருந்த தந்தையை கண்டாள்.

 

வாய் தன்னால் மூடிக்கொள்ள மேலே ஒன்றும் பேசாமல் கட்டிலில் சென்று விழுந்தாள்…

 

அடுத்த இரண்டாம் நாள் ராகவ் மூணாருக்கு செல்வதாக கூறி கிளம்பிவிட்டிருந்தான்.

 

மறுவீட்டிற்கு அழைத்த மாமனாரிடம் கொஞ்ச நாட்கள் கழித்து வருவதாக சொல்லிவிட்டிருந்தான்.

 

வடக்கும் தெற்குமாய்

எதிரெதிர் துருவமாய்

வாழ்க்கை அவர்களை

காந்தமாக்கி

இழுக்குமா?? விலக்குமா??

 

Advertisement