Advertisement

அத்தியாயம் – 4

 

ஜெயக்னா அவனை குரோதமாய் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள். ராகவிற்கு புரிந்து போனது இனி இந்த விழா நடந்தது போல தான் என்ற எண்ணம் அவனுக்கு.

 

அதற்கேற்றார் போல் சரவணனும் உள்ளே சென்றார் மகளின் அழைப்பை கேட்டு. உள்ளே வந்தவரிடம் எடுத்த எடுப்பிலேயே “அப்பா இந்த மாப்பிள்ளை வேணாம்ப்பா, இந்த நிச்சயம் வேணாம்ப்பா” என்றாள் அவள்.

 

அவருக்கு வந்ததே கோபம் “நீ பேசாம இருக்க மாட்டே, எப்போ பார்த்தாலும் எதாச்சும் சொல்லிட்டு… உன் இஷ்டப்படி உன்னை விட்டது ரொம்ப தப்பா போச்சு… வாய் ரொம்ப கூடிட்டுது உனக்கு” என்றார் அவர்.

 

வள்ளியோ அவருக்கு ஒரு படி மேலே போய் “நல்ல நாள்ல என்னடி அபசகுனமா பேசிட்டு” என்று அவள் முதுகில் ஒன்று வைத்தார்.

 

நல்ல வேளையாய் மணப்பெண் அந்த அறையில் இல்லை. சும்மாவே பயந்த சுபாவம் கொண்டவள் தங்கை சொன்னதை கேட்டு அவள் மனம் கண்டதையும் யோசிக்குமே…

 

மூத்தவள் அடுத்த அறையில் இருந்ததால் ஒரு நிம்மதி பெருமூச்சு வள்ளிக்கு.

 

“அப்பா, அம்மா…” என்று குரல் கொடுத்தவள் “நான் ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கேன். ரெண்டு பேரும் என்னை திட்டுறீங்க…”

 

“உன்னை திட்டாம கொஞ்ச வேற செய்வாங்களா…” முறைத்தார் அன்னை.

 

“நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசுங்க… அந்த மாப்பிள்ளையை நான் ஏற்கனவே பார்த்திருக்கேன். அவன் என்னை என்னவெல்லாம் சொன்னான்னு தெரியுமா உங்களுக்கு” என்றவள் அன்று நடந்ததை சொல்லி முடித்தாள்.

 

அதுவரையிலும் யோசனையோடு இருந்த சரவணன் முகத்தில் இப்போது முழுத்தெளிவு. மகளை பார்த்து முறைத்தார் இப்போது.

 

‘நான் இவ்வளோ சொல்றேன், இவரு இப்பவும் என்னையவே முறைக்கிறாரு’ என்று தான் பார்த்தாள் அவள்.

 

“இந்த விஷயத்தை நீ ஏன் அன்னைக்கே சொல்லலை??”

 

“சொன்னா என்னை தான் திட்டுவீங்க…”

 

“இதுக்கு தான் உனக்கு இந்த வேலை எல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன்… சொல்ல சொல்ல கேட்காம உன்னிஷ்டமா செஞ்சா இப்படி தான்”

 

“அப்பா என்னைய எதுக்கு திட்டுறீங்க??”

“உன்னை தானே திட்ட முடியும்… அன்னைக்கு நீ தனியா போறேன்னு தான் சொன்னே… அவரை எங்க பார்க்கறேன்னு யார்கிட்டயாச்சும் சொன்னியா…”

 

“சொல்லியிருந்தா உனக்கு வேற யாரையாச்சும் துணைக்கு ஏற்பாடு பண்ணி அனுப்பியிருப்பேன்ல… ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிப்போனா யாருக்கு நட்டம்” என்று பொரிந்தார் அவர்.

 

‘இவர் என்ன லூசாட்டம் என்னை திட்டுறார் அவனை திட்டாம என்று கடுப்பாய் வந்தது அவளுக்கு.

 

“என்னை அப்புறமா திட்டுங்க, முத போய் இந்த நிச்சயத்தை நிறுத்துங்க… அவன் பேசினது தப்பு தானே…” என்றாள் அவள் தன் பிடியில் உறுதியாய். அவனை அறைந்ததை மட்டும் சொல்லவில்லை அவள்.

 

“இதுக்கு மேலே பேசினே அறைஞ்சிடுவேன் பார்த்துக்கோ. ஒரு சின்னதப்பு கூட அவர் இடத்துல நடக்கக் கூடாதுன்னு நினைச்சிருக்காரு அவரை போய் தப்பா சொல்றியா…”

 

“உன்னைப்பத்தி தெரியாம அவர் பேசினது வேணா தப்பா இருக்கலாம். அவர் லாட்ஜ்ல எந்த தப்பும் நடக்கக் கூடாதுன்னு அவரு நினைக்கறதுல என்ன தப்பிருக்கு”

 

“நான் கூட கொஞ்சம் யோசனையா தான் இருந்தேன். எல்லாரும் நல்ல மாதிரி சொல்றாங்க, நாமும் நேர்ல பார்த்து விசாரிச்சாச்சு ஆனாலும் லாட்ஜ் எப்படியோ என்னவோன்னு…”

“இப்போ நீ சொன்னது கேட்கும் போது மனசுக்கு நிம்மதியா இருக்கு. இவர் தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை… வள்ளி இவ சொல்றதை எல்லாம் காதுல போட்டுக்காம நீ போய் வேலையை பாரு…”

 

“பங்க்ஷன் தொடங்கலாம் நேரமாகிட்டு, மேக்னாவை கூட்டிட்டு வா…” என்றுவிட்டு அவர் வெளியில் சென்றுவிட்டார்.

 

ராகவிற்கு இன்னமும் யோசனையே உள்ளே சென்றவர் இன்னும் வரவில்லையே என்று. இப்படியே கிளம்பிவிட்டால் அவமானப்படாமலாவது செல்லலாம் என்று தோன்றி விட்டது அவனுக்கு.

 

சத்யன் அவனையே கூர்ந்திருந்தான் போலும். “மச்சான் நீங்க இன்னும் ஜெயக்னா சொன்னதையே நினைச்சுட்டு இருக்கீங்களா…”

 

“அவ எப்போமே இப்படி தான் படபடன்னு கொட்டுவா… மேக்னா அப்படி இல்லை ரொம்ப சாது. அதிர்ந்து கூட பேசமாட்டா…” என்று அவன் சொல்லவும் அதிர்வது ராகவின் முறையானது.

 

“என்ன மேக்னாவா??”

 

“ஆமா மேக்னா தான் நீங்க கட்டிக்கப் போற பொண்ணு. என்னோட பெரிய தங்கை…” என்றான் அவன் விளக்கமாய்.

 

‘அட செவிட்டு கிழவி மூக்கம்மாள் இப்படி சொதப்பிட்டியே!! பொண்ணு பேரு என்னன்னு கேட்டதுக்கு மேனகான்னு சொல்லிட்டியே… இத்தனை நாளா அந்த பேரை தானே சொல்லிட்டு திரிஞ்சேன்…’ என்று எண்ணி தன் தலையில் தானே தட்டிக்கொண்டான்.

 

‘இந்த கிழவிக்கு வீட்டில போய் வைச்சுக்கறேன் கச்சேரியை’ என்று திட்டிக்கொண்டான்.

 

இரு வீட்டு பெரியவர்களும் முன்னில் வந்து அமர்ந்தனர். மணப்பெண் வரவழைக்கப்பட்டாள் ராகவிற்கும் மேக்னாவிற்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர் பெரியவர்கள்.

 

ராகவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. அந்த ராங்கி இந்நேரம் தன்னைப்பற்றி தன் வீட்டினரிடம் அளந்து விட்டிருப்பாளே அதைக்கேட்டுமா இதெல்லாம் நடக்கிறது என்ற ஆச்சரியம் அவனுக்கு.

 

அவன் எண்ணங்கள் ஜெயக்னாவை சுற்றி சுற்றியே வந்ததில் அவன் தன்னை பார்க்கவில்லையே என்ற எண்ணத்தில் அங்கு நின்றிருந்த மேக்னா கொஞ்சம் விசனப்பட்டு தான் போனாள்.

 

ஒரு வேலை அவருக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று கவலை அவளை தொற்றிக்கொண்டது. பெண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து புகைப்படம் எடுக்கச் சொல்லலாம் என்று சந்தியா சொல்ல சரவணன் மறுத்துவிட்டார்.

 

“அதெல்லாம் கல்யாணத்துல பார்த்துக்கலாமே…” என்று நாசூக்காய் கூறிவிட்டார் அவர்.

 

‘அடப்பாவி மனுஷா இதுக்கே இப்படின்னா, பொண்ணு கூட என்னை பேசக் கூட விடாமாட்டாரு போலவே இவரு’ என்று தான் பார்த்திருந்தான் ராகவ்.

 

சத்யன் அவனருகில் நெருங்கி “மச்சான் மேக்னாகிட்ட தனியா போன் இல்லை இப்போதைக்கு… வீட்டில போன் இருக்கறதுனால சித்தப்பா அவளுக்கு போன் வாங்கி கொடுக்கலை”

 

“உங்களுக்கு அவகிட்ட பேசணும்ன்னா என் நம்பருக்கு கூப்பிடுங்க… எனக்கு இங்க பக்கத்துல தான் ட்ராவல்ஸ் ஆபிஸ், நான் உடனே வந்து அவகிட்ட கொடுக்கறேன்” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்.

 

‘அப்பா இந்த வீட்டில இவனுக்காச்சும் கொஞ்சம் அறிவு இருக்கே’ என்று தான் எண்ணிக்கொண்டான் ராகவ்.

 

மேக்னாவை நேரில் பார்க்கும் ஆவலில் தான் அவன் கிளம்பி வந்திருந்தான். ஆனாலும் இந்த நிமிடம் வரை அவளை பார்க்கவே தோன்றவில்லை அவனுக்கு.

 

ஏனென்று புரியவில்லை அவனுக்கு. தன்னையே அவள் நோக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை கூட அவன் உணரவில்லை.

அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்த ஜெயக்னாவின் கடுகடுத்த முகம் தான் அவன் கண்ணில்ப்பட்டது.

 

‘இவளுக்கு ஏன் என் மேலே இத்தனை காண்டு… அன்னைக்கு தெரியாம பேசினது தப்பு தான் அதுக்காகவா இப்படி…’ என்று ஆயாசம் தான் அவனுக்கு.

 

நிச்சயம் முடிந்ததும் அங்கு உணவருந்திவிட்டு இன்னும் இரண்டு மாதத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்காய் மேலும் பேச வேண்டிய சில நடைமுறைகள் எல்லாம் பேசிவிட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

 

நாட்கள் அதன் போக்கில் விரைந்து சென்றிருக்க இன்னும் இரண்டு நாளில் திருமணம் நடக்கவிருந்தது.

 

ராகவ் திருமணத்திற்காய் இந்த முறை பத்து நாட்கள் விடுப்பு எடுத்திருந்தான். திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவும் பின்னதாக ஒரு வாரமும்.

 

இதற்கிடையில் சண்முகத்தின் திருமணம் முடிந்து அவன் விடுப்பெல்லாம் எடுத்து முடித்து திரும்பி வந்திருந்தான்.

 

லாட்ஜை தான் பார்த்துக்கொள்வதாக அவன் உறுதியளித்திருக்க ராகவ் நிம்மதியாய் உணர்ந்தான். கல்யாண மாப்பிள்ளை என்று அவனை எங்கும் நகரவிடவில்லை வீட்டினர்.

 

அவன் கிளம்பினால் அவனை பிடிக்க முடியாது என்று ஒரு பயமாக கூட இருக்கலாம். அவனும் பெரிதாய் எங்கும் வெளியில் செல்ல ஆர்வம் காட்டவில்லை.

 

சந்தியாவின் மக்களுடன் விளையாடுவதும் முருகனை சீண்டுவதுமாய் தன் பொழுதை இனிமையாகவே கழித்தான்.

 

மறுநாள் மதியமே வீட்டிலிருப்பவர்களை பரபரப்பு தொற்றிக்கொண்டது. இன்னும் சற்று நேரத்தில் மண்டபத்திற்கு கிளம்ப வேண்டும்.

 

வந்திருந்த விருந்தினர்களுக்கு மதிய உணவு நடந்து கொண்டிருந்தது அங்கு. இது முடிந்ததும் நாலு நாலரை போல அவர்கள் கிளம்ப வேண்டும்.

 

சந்தியாவும், மூக்கம்மாளும், முருகனுமாய் விருந்தினர்களை கவனித்தனர். மீனாட்சிக்கு உடைகள் எடுத்து வைப்பதும் சமையல்காரருடன் பேசுவதுமாக நேரம் சென்றது.

 

“அம்மா இன்னும் என்னம்மா சமையல்காரரை போட்டு தொல்லை பண்ணிட்டு இருக்கீங்க… நம்ம ஹோட்டல்க்கு செய்யறவர் தானே…”

 

“அதெல்லாம் நல்லா தான் செய்வாரு… நமக்கு எப்பவும் காய்கறி சப்ளை பண்றவங்களை தான் அரேன்ஜ் பண்ணியிருக்கேன். நீங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிக்கறீங்க” என்று வந்து நின்றான் அவர் முன்.

 

“நீ சொல்றது எல்லாம் சரி தான் ராகவா… ஆனாலும் எல்லாம் சரியா தான் இருக்கான்னு நாமளும் ஒரு பார்வை பார்த்துக்கணும் தானே…”

 

“வந்தவங்களுக்கு ஒரு குறையும் இருக்கக்கூடாது. உங்கக்கா கல்யாணத்துல தான் என்னால எதையும் உருப்படியா கவனிக்க முடியலை…”

 

“அப்போ சின்ன பையன் உன் தலையில தான் எல்லாம் விடிஞ்சது… ஒத்தையா நீயே தான் எல்லாம் பார்த்தே… உன் கல்யாணத்துல அப்படி இருக்ககூடாதுன்னு தான் நாங்க எல்லாம் பார்த்து பார்த்து செய்யறோம்…”

 

“சரி தான்…” என்றவன் “அம்மா என் பிரண்ட்ஸ் எல்லாம் நேரா மண்டபத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டாங்க… நாம இங்க இருந்து எத்தனை மணிக்கு கிளம்பணும்”

 

“நாங்க இவங்களை எல்லாம் ஏத்திட்டு நாலரை மணிக்கெல்லாம் இங்க இருந்து கிளம்பிருவோம் ராகவா… நீ ராசைய்யா மாமா கூட கிளம்பி வா, ஒரு அஞ்சரை மணிக்கு கிளம்பினா போதும்” என்றார்.

 

“ஹ்ம்ம் சரிம்மா…” என்றவன் போனை எடுத்து யாருக்கோ அழைத்துக்கொண்டே சென்றான்.

 

மாப்பிள்ளை வீடு இங்கு இப்படி பரபரப்பாய் இருக்க அதற்கு சற்றும் குறையாமல் பெண் வீடும் இருந்தது.

 

வள்ளி மூத்த மகளுக்கு அறிவுரையை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவளோ எல்லாவற்றும் சரி என்பது போல் அமைதியாகவே காட்சியளித்தாள். மேக்னா அமைதியான சுபாவம் என்பதால் அவளின் இப்போதைய அமைதி கூட அவர்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

 

அப்படி அவளை ஊன்றி கவனித்திருந்தால் நடக்கப் போகும் அவமானத்தில் இருந்து தப்பித்திருப்பார்களோ!! என்னவோ!!

 

இந்த ஒரு மாதமாக அவள் அவளாக இல்லாமல் போனதை யாருமே கவனித்திருக்கவில்லை. ராகவை இனி தான் அத்தான் என்றோ மாமா என்றோ அழைக்க வேண்டுமே என்ற கவலை ஜெயக்னாவிற்கு.

 

அதனால் அவள் நடக்கும் இந்த திருமண நிகழ்வை பிடிக்காதவளாக வேண்டா வெறுப்பாக வீட்டினருக்காக பெயருக்காய் வேலை பார்த்தாள்.

 

என்னயிருந்தாலும் நடக்கப் போவது அவள் உடன்பிறந்தவளின் திருமண நிகழ்வாயிற்றே!! அதை அவள் கவனித்தாக வேண்டுமே என்று விதியே என்று தன் கடன் செய்தாள்.

 

வள்ளிக்கும் சரவணனுக்கும் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பது கோவிலுக்கு செல்வது, திருமண வேலைகள் பார்ப்பது என்றே பொழுது ஓடியது.

 

பெண் அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வீட்டில் இருந்து வேன் வந்திருந்தது. சந்தியா தன் கணவனுடன் வந்திருந்தாள்.

அங்கிருந்து பெண்ணழைத்து கொண்டு அவர்கள் மண்டபத்திற்கு வர மாலை ஆறு மணியாகி போயிருந்தது.

 

இன்னும் சற்று நேரத்தில் ரிசப்ஷன் தொடங்கிவிடும். கல்யாணப்பெண் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. சந்தியா அதை ஊன்றி கவனித்தாலும் சாதாரணமாய் எடுத்துக் கொண்டாள்.

 

திருமண டென்சன், பயம், தன் வீட்டினரை பிரியப்போகும் சோகம் எல்லாம் இருக்கத் தானே செய்யும் என்று எண்ணி தன்னை சமாதானம் செய்துக் கொண்டாள்.

 

மணப்பெண்ணுடன் அவளின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர். வீட்டு மனிதர்கள் யாரும் வரவில்லை.

 

அவளின் பெற்றோர் மேலும் சில உறவினர்களை அழைத்துக்கொண்டு மொத்தமாய் பின்னால் வந்துவிடுவதாக கூறியிருந்தனர்.

 

ஜெயக்னாவை மேக்னாவுடன் கிளம்பத்தான் சொன்னார் வள்ளி. அவளுக்கு இந்த திருமணம் நடப்பதிலேயே விருப்பமில்லையே. இதில் அந்த வீட்டு மனிதர்களுடன் பிரயாணம் செய்வதாவது.

 

“இல்லைம்மா நான் உங்க கூடவே வர்றேன்… நாம பின்னாடியே தானே கிளம்பப் போறோம்… அக்கா என்ன அங்க தனியாவா இருக்கப் போறா”

“அதான் சரசு சித்தி, லீலா அத்தை எல்லாம் கூடவே இருக்காங்களே… என்ன அத்தை அக்காவை பார்த்துப்பீங்க தானே…” என்று அவர்களை பார்த்து வேறு கேட்டு வைத்தாள்.

 

சரவணனுக்கு இளைய மகளின் சாகசம் நன்றாகவே புரிந்தது. வெளியில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை அவர். திருமணம் முடியட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டார்.

 

“நீ போகலைன்னா விடு… நீட்டி முழக்கி நீ எந்த காரணமும் சொல்லத் தேவையில்லை…” என்று மகளை முறைத்தார்.

 

அதெல்லாம் கண்டுக்கொள்பவளா அவள்… அப்பாடா நிம்மதி என்ற மனநிலை அவளுக்கு…

 

ஏழு மணி போல் மேக்னாவின் பெற்றோர் மீதமுள்ள விருந்தினர்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்தனர். அனைவருமே வந்திருக்க ரிஷப்சன் தொடங்க வேண்டி பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்து வர சென்றனர்.

 

ராகவ் சந்தியாவின் கணவன் முருகனுடன் வந்து மேடையில் நின்றிருந்தான். ஆனால் இன்னமும் மேக்னா தான் வந்திருக்கவில்லை.

 

திடிரென்று ஒரு சலசலப்பு கூட்டத்தில்… வண்டியில் இருந்து முதலில் இறங்கி வந்த ஜெயக்னா தன் தமக்கையை தேடி வந்தவள் அவளின் அறை முன்பு நின்று கதவை தட்டினாள்.

 

வெகு நேரமாய் பெண்ணின் அறைக்கதவை தட்டிப்பார்த்தும் திறக்காததால் பதட்டமாகி வெளியில் விருந்தினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த தந்தையை தேடி ஓடினாள்.

 

அவளின் ஓட்டம் கண்டு அவளருகில் விரைந்து வந்தார் சரவணன். “அப்பா… அக்கா… ரூம் கதவை தட்டிட்டே இருக்கேன், திறக்கவே மாட்டேங்குறா…”

 

“அங்க ரிசப்ஷனுக்கு நேரமாகிடுச்சு, மாப்பிள்ளை வந்து நின்னுட்டாரு… என்னமோ பயமாயிருக்குப்பா…” என்றவளை கடுமையாய் பார்த்தார் அவர்.

 

“என்னாச்சுங்க…” என்று கேட்டுக்கொண்டே வள்ளியும் அருகே வர ஜெயக்னா சொன்னதை கேட்டு அவருக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது.

 

“என்னங்க இவ இப்படி சொல்றா??” என்று அவர் கணவனை பார்க்க “உன் பொண்ணுக்கு வேலையே இல்லை, முதல்ல மாப்பிள்ளை வேணாம்ன்னு சொன்னா…”

 

“இப்போ இவ அக்கா இப்படி பண்ணுறா அப்படி பண்ணுறான்னு நம்மகிட்ட சொல்றா… இவ சொல்றதை நீ நம்பறியா… மேக்னா நம்ம கிழிச்ச கோட்டை தாண்டாத பொண்ணு” என்று சொல்லி இருவரையும் முறைத்து உள்ளே சென்றார்…

இன்னார்க்கு இன்னார்

என்பது இறைவன்

போட்ட கணக்காய்!!

 

அதை மாற்றியெழுத

அவன் மனிதன் மனதில்

செய்யும் பிணக்காய்!!

 

உனக்கும் எனக்குமான

உறவென்பது

ஆமணக்காய்!!

 

Advertisement