Advertisement

அத்தியாயம் – 10

 

ராகவ் வெளியில் வரவும் அங்கிருந்த இருக்கையில் இருகாலையும் மடக்கி அமர்ந்திருந்தவள் அவனை முறைத்தவாறே எழுந்திருந்தாள் இப்போது.

 

அவனோ எதுவுமே நடவாதது போல அவளை தாண்டிக் கொண்டு போக “ஏன் இப்படி பண்ணே??” என்றாள் மொட்டையாய்.

 

“என்ன பண்ணேன்??”

 

“ஹ்ம்ம்… தெரியாத மாதிரி ஒண்ணும் நடிக்க வேணாம்…”

 

“நீ என்னன்னு உன் வாயால சொல்லு, நான் ஆமாவா இல்லையான்னு சொல்றேன்”

 

“உன்னை…” என்று பல்லை கடித்தவள் “நான் ஒண்ணும் மேக்னா இல்லை…” என்றாள்.

 

அவனுக்கு புரியவில்லை எதற்கு அதை சொன்னாள் என்று. அவன் பார்வையும் புரியாமலே அவள் மேல் படிந்தது.

 

“அப்படின்னா??”

 

“எப்படின்னா??” என்று அதற்கும் பாய்ந்தாள் அவள்.

 

“நீ என்ன தான் சொல்ல வர்றே?? உனக்கு என்ன பிரச்சனை இப்போ??” என்றான் இன்னும் விளங்காமல்.

 

“நீ தான் என் பிரச்சனை… என்னை எதுக்குய்யா கல்யாணம் பண்ணே??”

 

“என்னடி சும்மா சும்மா அதே கேள்வி கேட்குறே?? நானா உன் பின்னாடி வந்து என்னை கட்டிக்கோ கட்டிக்கோன்னு கேட்டேன்…”

 

“எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்கே??” என்று சொன்னவனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சலும் கோபமுமே.

 

“நீ என்னை மேக்னான்னு நினைச்சி தானே இப்படி…” என்று சொல்லும் போது அவள் குரல் பிசிறியதோ…

 

“என்ன சொன்னே??” என்று கண்கள் இடுங்க அவளை பார்த்தான்.

 

“போதும் இதெல்லாம் இனி வேண்டாம், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி டிவோர்ஸ் கொடுத்திர்றேன்… அவங்கவங்க வழியை பார்த்திட்டு போவோம்…”

 

“என்ன தான்டி நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?? ஆளாளுக்கு வந்து என் வாழ்க்கையை பூட் பால் மாதிரி எட்டி உதைச்சுட்டு இருக்கீங்க?? நானாடி உன்னை கல்யாணம் பண்ணணும்ன்னு தவம் இருந்தேன்”

 

“இல்லை கட்டினா இவளை தான் கட்டுவேன்னு ஒத்தைக்கால்ல நின்னேனா?? உங்கக்கா நான் வேணாம்ன்னு ஓடிப்போனா… இப்போ நீயும் அதே தான் செய்யப் போறே…”

 

“அப்புறம் என்ன இதுக்குடி என்கிட்ட வந்து பேசினே… உங்கப்பாக்கு அவமானம் வரக்கூடாதுன்னு எங்க குடும்பத்துக்கு தீராத அவமானத்தை தேடி தர்றது தான் உனக்கும் உங்கக்காக்கும் நோக்கமா…”

 

“நானும் பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு பார்த்தா என்னை நீ தான் பேச வைக்குறே… உன்னைய எல்லாம் அடிக்கணும் போல வருது எனக்கு…”

 

“ஹ்ம்ம் அடிப்பீங்க அடிப்பீங்க… பொம்பளைங்கன்னா இளக்காரம் உங்களுக்கு…” என்று அதற்கு மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு வந்தாள் அவள்.

 

“யாருக்கு இளக்காரம் உனக்கா இல்லை எனக்கா… உங்க குடும்பத்துக்கே என்னை கண்டா இளக்காரமா இருக்கு போல… அதான் என்னை வைச்சு விளையாடுறீங்க…”

 

“ஆமா அன்னைக்கு லாட்ஜ்ல வைச்சு நீ என்னை அடிச்சியே அதென்ன கணக்கு… அப்போ உனக்கு பொம்பளைங்கற திமிரா…” என்றான்.

 

“அன்னைக்கு உன்னை பேசினது தப்பு அப்படிங்கறதால தான் பேசாம போனேன்… அதுக்காக நீ என்ன வேணா பேசுன்னு பார்த்திட்டு இருப்பேன்னு நினைப்பா உனக்கு”

“உனக்கு என் கூட வாழ இஷ்டமிருக்கோ இல்லையோ எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலையேயில்லை. நீ தான் என் மனைவி. என்னோட நீ வாழ்ந்து தான் ஆகணும்”

 

“இனி ஒரு தரம் என்னை ஏன் கல்யாணம் பண்ணே, டிவோர்ஸ் பண்ணுறேன்னு பேசினே… ஓங்கி அப்பிருவேன் பார்த்துக்கோ…” என்று கத்திவிட்டு வண்டி சாவியை எடுத்துக்கொண்டு கோபமாய் வெளியில் கிளம்பிவிட்டான்.

 

ஜெயக்னாவோ அவன் கோபம் கண்டு திகைத்து அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

அவளுக்கு தன் மீதே கோபம் ஆனால் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவள் ஈகோ தடுக்க அந்த கோபத்தை அவன் மீதே பழியாக்கினாள்.

 

அவனோ சீறும் எரிமலையாகி வெடித்துவிட்டு சென்றுவிட்டான். இதை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

மனம் அவன் புறம் செல்கிறதோ என்ற குழப்பம், அவன் தன்னை மேக்னா என்று நினைத்து அவ்வாறு நடந்துக் கொண்டானோ என்ற எண்ணம், எல்லாம் சேர்ந்து அவளுக்கு ஒருவித மன அழுத்தத்தை கொடுத்தது.

 

இப்போதைய அவன் பேச்சு அவளுக்கு சற்றே ஆறுதல் தான். ஆனாலும் அவளின் மனம் இன்னமும் யோசனையில். மீண்டும் மின்சாரம் சென்று அறை இருளில் முழ்கிய போதும் அவள் இருந்த இடத்தைவிட்டு எழவேயில்லை.

 

லாட்ஜிற்கு வந்து சேர்ந்த ராகவின் உள்ளம் இன்னமும் உளைக்கலமாய் கொதித்துக் கொண்டுதானிருந்தது.

 

எதற்கு சம்மந்தமில்லாமல் மேக்னாவின் பெயரை இழுத்தாள் என்று இன்னமும் அவன் உணரவேயில்லை.

 

காலையில் வருவேன் என்று சொல்லிச் சென்றவன் சில மணி நேரத்தில் வந்திருக்கிறானே என்று பார்த்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை.

 

அவனிடம் அந்தளவிற்கு நெருங்கி எல்லாம் யாரும் பேசியதில்லை. எல்லாருக்கும் தேவையானதை செய்வான் தான் அவனின் பர்சனல் விஷயம் பேசும் அளவுக்கு அவன் யாரிடமும் வைத்துக் கொண்டதில்லை.

 

வந்தவன் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். லாட்ஜில் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் ஓடும் சத்தம் கேட்கவும் தான் சுயவுணர்வுக்கு கொஞ்சம் திரும்பினான்.

 

வீட்டிலும் மின்சாரம் போயிருக்குமே பயந்திருப்பாள் இந்நேரம் என்று தோன்றியது. ஒரு மனமோ பேசாமல் வீட்டுக்கு போயேன் என்று சொல்ல அவள் பேச்சின் வீரியம் மிச்சமிருக்க மறுமனமோ வேண்டாம் என்று சொன்னது.

நல்ல வேளையாக அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு இப்போது அவனிடத்தில்.

 

ஜெயக்னா ஏன் மேக்னாவின் பெயரை சம்மந்தமில்லாமல் இழுத்தாள் என்பதை சுற்றியே அவன் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

 

ஒரு வேளை அவளை நினைத்து இவளை பழிவாங்க திருமணம் செய்திருப்பேன் என்று நினைத்திருப்பாளோ, அவளாக எண்ணி இவளை அணைத்ததாக எண்ணியிருப்பாளோ என்று நினைக்கவும் தான் அவனுக்கு புரிந்தது அவளின் மனநிலை.

 

என்ன தான் பெற்றோர்களுக்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தாலும் அவள் சுயகவுரவம் புரிந்தது அவனுக்கு.

 

தன்னை மணப்பவனுக்கு தன்னை பிடிக்கவும் வேண்டும் என்று அவள் நினைப்பதில் தவறொன்றும் இல்லையே. நான் ஒன்றும் அவளுக்காய் பார்த்த மாப்பிள்ளை இல்லையே!!

 

அது தான் அவளை அப்படி பேச வைத்திருக்கிறது என்பது நிதானமாய் யோசித்த போது புரிந்தது.

 

மனம் கொஞ்சம் அவளுக்காய் பரிந்து வந்தது. தனக்கும் அவளைப் போல மனநிலை தானே இருக்கும், இதை அவளும் புரியலாமே!! என்று அவன் உள்ளம் சிணுங்கியது.

மீண்டும் வீட்டிற்கு செல்லும் எண்ணம் வரவில்லை. ஆனாலும் அவனால் அமைதியாய் இருக்க முடியவில்லை. போன் செய்யலாமா என்று அவன் யோசிக்கும் போதே அவன் கைபேசி அடித்தது.

 

அவசரமாய் எடுத்து பார்க்க அழைப்பு வீட்டில் இருந்து, இதழோரம் குறுநகை தோன்ற அதை எடுத்து காதில் வைத்தான்.

 

“ஹலோ இருக்கீங்களா??”

 

“ஹ்ம்ம்…”

 

“எங்க இருக்கீங்க??”

 

“லாட்ஜ்ல…” என்றான் இறுக்கம் தளராத குரலில் வேண்டுமென்றே.

 

“அப்போ திரும்ப வரமாட்டீங்களா வீட்டுக்கு…”

 

“இல்லை…”

 

“போடா…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.

 

நிஜமாகவே இப்போது அவன் வாய்விட்டு சிரித்தான் அவன். ‘இவளை…’ என்று எண்ணிக்கொண்டே அவளுக்கு அழைத்தான்.

 

“என்ன??” என்றாள் அவனைப் போலவே விட்டுக் கொடுக்காத குரலில்.

“நைட் வர மாட்டேன்… உனக்கு பிடிச்ச டின்னர் தான் ஒழுங்கா சாப்பிட்டு படு… கரண்ட் போறதுக்கு முன்னாடி ஹால்ல இருக்கற செல்ப்ல பாரு ஒரு இன்வர்ட்டர் இருக்கும்”

 

“அதை பவர்ல கனெக்ட் பண்ணி சார்ஜ் போடு… கரண்ட் போனா கூட மூணு லைட் ஒரு பேன் ஓடும்…”

 

எதிர்முனையில் எந்த சத்தமும் இல்லாமல் போக “இருக்கியா இல்லையா…”

 

“நான் எப்படி போனா உனக்கென்ன??”

 

“அப்படி எல்லாம் விடமுடியாதுன்னு சொன்னது மறந்து போச்சா பக்கி…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

அவளின் “என்னது நான் பக்கியா…” என்ற குரலை கேட்டும் கேட்காமல் வைத்திருந்தான்.

 

இரவு அதன் பிறகு மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்பதால் அவளுக்கு சற்று நிம்மதியே. ஏனோ உறக்கம் தான் அவள் வசப்படவில்லை.

 

இங்கு அவள் எப்படி வந்தாள் என்பதில் மனம் உழன்றது. இருபது நாட்களுக்கு முன்னர் ராகவ் அவளை அவன் வீட்டில் விட்டுவிட்டு தனியே மூணாருக்கு கிளம்பிச் சென்றிருந்தான்.

 

அவனில்லாத அந்த வீட்டில் அவளால் கொஞ்சம் இயல்பாய் நடமாட முடிந்தது. அவனிருந்தால் தான் இயல்பாய் இருந்திருக்க முடியாதோ என்று தோன்றியது. சந்தியா சாதாரணமாகவே பேசினாள்.

 

அவள் அம்மாவும் அப்பாவும் திருமணம் முடிந்த மறுநாள் கிளம்பியவர்கள் தான் ராகவ் ஊருக்கு கிளம்பிச் சென்ற மறுநாள் வந்திருந்தனர் மகளின் உடைமைகளோடு.

 

வந்தவர்களை வரவேற்று மீனாட்சி பேசிக் கொண்டிருக்க இன்னமும் பெற்றவர்களின் மீது உள்ள கோபம் தீராமல் தான் அமர்ந்திருந்தாள் மகள்.

 

சந்தியாவும் பாட்டியும் கூட வந்தவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசினர். சந்தியாவின் கணவனும் குழந்தைகளும் வெளியில் சென்றிருந்தனர். அதனால் வீட்டில் பெண்கள் மட்டுமேயிருந்தனர்.

 

வாவென்று அழைத்ததுடன் சரி வேறு ஒன்றும் பேசியிருக்கவில்லை அவள்.

 

வள்ளி மகளைத் தான் பார்த்திருந்தார் எதுவாவது பேசுவாள் என்று.

 

“நீங்க பேசிட்டு இருங்க…” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு “சந்தியா நீ ஊருக்கு கொண்டு போக தேன்குழல் கேட்டியே வா…” என்றவாறே மகளை அங்கிருந்து கூட்டிச் சென்றிருந்தார் அவர்.

 

“ஜெயா இதுல டிரஸ் எல்லாம் இருக்கு. உன்னோடதும், மேக்னாவோடதும்…” என்று வள்ளி சொல்லி முடிக்கவில்லை அவரை இறுக்கமாய் பார்த்து ஒரு முறை முறைத்தாள் அவள்.

 

“என்ன ஜெயா??”

 

“எதுக்கு அவளோட டிரஸ் எல்லாம் எடுத்திட்டு வந்தீங்க இங்க??”

 

“எல்லாமே புதுசு தான் ஜெயா, பழசில்லையே… உனக்குன்னு நாம அவ்வளவு டிரஸ் எடுக்கலையே… மேக்னாவோடது இனி வீட்டில வைச்சு என்ன செய்ய??” என்று அவர் இயல்பாய் தான் சொன்னார்.

 

“மேக்னா டிரஸ் வீட்டில வைக்க முடியாது. என்னையும் வீட்டில வைக்க முடியாதுன்னு தள்ளிவிட்டுடீங்களா”

 

“ஜெயா…”

 

“போதும்மா அவளோடது எனக்கு சரியா இருக்கும்ன்னு சின்ன வயசுல இருந்து அவ போட்ட டிரஸ், அவளோட வளையல், கம்மல்ன்னு எல்லாம் பழசு தான் நான் போட்டிருக்கேன் அதிகம்…”

 

“அப்போ எல்லாம் எனக்கு அவ்வளவு கஷ்டமா தோணினதில்லை. ரெண்டு பசங்க இருக்க வீட்டிலையும் ரெண்டு பொண்ணுங்க இருக்க வீட்டிலையும் இதெல்லாம் சகஜம்ன்னு நினைச்சேன்”

 

“ஜெயா அவளுக்கும் உனக்கு ஒரே அளவு தானே அதனால தான்ம்மா எடுத்திட்டு வந்தேன்… வேற எந்த உள்நோக்கமும் இல்லைடா” என்று மகளுக்கு புரிய வைக்கும் நோக்குடன் வள்ளி இடையிட்டார்.

 

“அதெல்லாம் அவளுக்கு பிடிச்சு எடுத்தது… அவளுக்கு பிடிச்சது எல்லாம் வாங்கினது எல்லாம் எனக்கும் பிடிக்கணும்ன்னு என்ன இருக்குமா… எனக்குன்னு சுயவிருப்பம் இல்லையா…” என்றாள்.

 

அவள் சொன்னதின் அர்த்தம் வள்ளிக்கு புரிந்ததோ இல்லையோ அருகே அமர்ந்திருந்த அவளின் தந்தை சரவணனுக்கு நன்றாகவே புரிந்தது. அவள் உடையை மட்டுமாய் சொல்லவில்லை என்று.

 

இருந்தாலும் மகளை பேசவிட்டு பார்த்துக் கொண்டிருந்தார் அவர் இடையில் ஒன்றும் குறுக்கீடு செய்யாமல்.

 

“அப்போ இதெல்லாம் என்ன செய்ய ஜெயா??” என்றார் வள்ளி பொறுமை விட்டுப் போன குரலில்.

 

“அவளோடது எதுவும் எனக்கு இனி வேணாம். என்னோடது மட்டும் போதும்…”

 

“உனக்கு அதிகம் சேலை இல்லையேம்மா… ஒரு பத்து தானே இருக்கு அதுல, பட்டுப்புடவை கூட ரெண்டு தான் இருக்கு ஜெயா… அது எப்படி பத்தும் உனக்கு??”

 

“வள்ளி அவளுக்கு புதுசு எடுத்துக்கலாம் விட்டிரு…” என்று அப்போது தான் இடையிட்டார் சரவணன்.

 

“என்னங்க நீங்க??” என்று ஆரம்பித்த மனைவியை “சொன்னதை மட்டும் செய் வள்ளி, அவளை கூட்டிட்டு போய் புதுசு வாங்கி கொடுக்கலாம்… நீ சம்மந்திகிட்ட பேசு, இன்னைக்கே கடைக்கு போயிட்டு வந்திடலாம்” என்றார் அவர்.

 

ஜெயக்னாவோ அவள் கருத்தை சொன்னதும் தன் வேலை முடிந்தது என்பது போல் அழுத்தமாய் இருந்தாள். தந்தையும் தாயும் பேசியது எல்லாம் யாருக்கோ என்பது போல் பார்த்திருந்தாள்.

 

வள்ளி எழுந்து உள்ளே செல்ல வெளியில் வரும் போது உடன் மீனாட்சியும் சந்தியாவும் வந்தனர்.

 

“என்ன ஜெயா கடைக்கு கிளம்புவோமா??” என்று வள்ளி இப்போது மகளை பார்த்து கேட்க அவளோ மாமியாரின் முகம் பார்த்தாள்.

 

சரியோ தவறோ அவள் தன் வாழ்க்கையை ஏற்க பழகிக் கொண்டாள் என்பதை அந்த பார்வை பரிமாற்றத்தில் உணர்ந்தார் சரவணன்.

 

அவர் மனதின் ஓரத்தில் ஒரு சிறு குற்றவுணர்ச்சி தன் மானம் காக்க தன் மகளின் வாழ்க்கையை பணயம் கொடுத்துவிட்டோமோ என்று. இப்போது கொஞ்சம் மனம் நிம்மதியாக உணர்ந்தது அவருக்கு.

 

ஜெயாவிற்கு கடைக்கு செல்லவெல்லாம் விருப்பமில்லை. உடை விஷயத்தில் தன் பிடித்தமின்மையை காட்ட நினைத்தாள் அவ்வளவே.

ஆனாலும் பெற்றவர்கள் தங்கள் கடமையை செய்ய நினைத்திருக்க அதை மறுக்க முடியாமல் வள்ளி அழைக்கும் போது மாமியாரை பார்த்திருந்தாள்.

 

சந்தியாவிற்கு கூட அவளின் இந்த பார்வை கொஞ்சம் ஆச்சரியமே… ‘அம்மாவை அனுமதி எல்லாம் கேட்கிறாள், இவள் பிழைத்துக் கொள்வாள்… ராகவின் வாழ்வும் நன்றாகவே இருக்கும்’ என்று எண்ணிக்கொண்டாள்.

 

மீனாட்சியும் மருமகளின் பார்வைக்கு சென்று வா எனும் விதமாய் கண்கள் மூடி அனுமதி கொடுத்தார்.

 

ஆனால் ஜெயக்னாவோ “இல்லை அத்தை அம்மாவும் அப்பாவுமே எடுத்திட்டு வரட்டும், நான் எதுக்கு…”

 

“என்ன ஜெயா பேசறே?? உனக்கு பிடிச்சதை பார்த்து எடுக்க வேணாமா…” என்ற வள்ளியின் பேச்சுக்கு திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தாள் மகள்.

 

‘எனக்கு பிடிச்சதை தான் கொடுக்கறீங்களா’ என்பது போல் இருந்தது அந்த பார்வை.

 

“அண்ணி நீங்களும் வாங்களேன் எல்லாருமா போயிட்டு வருவோம்…” என்று மகளை ஒரு பார்வை பார்த்து மீனாட்சியிடம் கேட்டார்.

 

“ஏன்மா சந்தியா நீயும் வரலாமே…” என்று சந்தியாவையும் பார்த்து வள்ளி கேட்டு வைக்க மீனாட்சிக்கும் போகலாம் என்றே தோன்றியது.

“சரி எல்லாரும் போயிட்டு வருவோம், நீ என்ன சொல்றே சந்தியா…” என்று மகளை பார்த்தார்.

 

“போகலாம்மா நானும் பசங்களுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு…” என்று அவளும் தலையாட்டினாள்.

 

“ஏன்மா ஜெயா உனக்கும் சம்மதம் தானே, எல்லாருமே போயிட்டு வருவோம்…” என்று மருமகளையும் கேட்க அவளால் இப்போது மறுக்க முடியாது போனது.

 

அவர்கள் மதிய உணவிற்கு பின் கிளம்புவதாக முடிவு செய்ய பின் சாப்பிட்டு மூன்று மணியளவில் கால் டாக்சியில் அவர்கள் கடைக்கு சென்று சேரவும் அங்கு அவர்களுக்கு முன்னமே வந்திருந்தான் ராகவ்.

 

‘இவர் எப்போ வந்தார்’ என்ற பார்வையோடு வண்டியில் இருந்து அவள் இறங்க அவன் இவள் புறம் திரும்பக் கூட இல்லை.

 

“நீங்க எப்போ வந்தீங்க மாப்பிள்ளை??” என்று சரவணன் மருமகனை ஆச்சரியமாய் நோக்க “நான் தான் வரச்சொன்னேன்” என்றார் மீனாட்சி.

 

“முத முத மருமகளுக்கு டிரஸ் எடுக்கப் போறோம். அவன் இல்லாம போனா நல்லா இருக்காது. நாங்களும் அவளுக்கு கொஞ்சம் டிரஸ் எடுக்கலாம்ன்னு, அப்படியே சந்தியா ஊருக்கு போறதுனால அவளுக்கும் குழந்தைகளும் எடுக்கணும்” என்று விளக்கம் கொடுத்தார் மீனாட்சி.

‘என்னது இவங்க எனக்கு டிரஸ் எடுக்க போறாங்களா… எதுக்கு?? நான் கட்டின கல்யாண புடவையில இருந்து தாலி வரை எனக்குன்னு வாங்கினது எதுவுமில்லை…’

 

‘இது மட்டும் ஏன்??’ என்ற மனதின் சிணுக்கத்தை மறைத்து அவர்களின் பின்னே நடந்தாள்.

 

மாற்றுவதென்பதும்

மாறுவதென்பதும்

வேறன்றோ!!

இயல்பாய்

ஒன்றலில்

மாற்றமும்

மாறுதலும்

நிகழுமன்றோ!!

 

Advertisement