Advertisement

அத்தியாயம் – 1

 

ராகவை ஓங்கி அறைந்திருந்தாள் ஜெயக்னா. பின் அவனை நோக்கி “இட்ஸ் நன் ஆப் யூவர் பிசினெஸ், மைன்ட் இட்…” என்று கோபமாய் அவனிடம் மொழிந்துவிட்டு அவனை முறைத்து வெளியில் சென்றுவிட்டாள் அவள்.

 

ஒரு கணம் ஒன்றுமே ஓடவில்லை ராகவிற்கு. இவளை போன்ற பெண்களுக்கே இவ்வளவு திமிரென்றால் இன்னும் நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு எவ்வளவு இருக்கும் என்று தான் அவனுக்கு தோன்றியது.

 

அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று அவள் அவனை கடந்து சென்ற பின்னே தோன்றியது அவனுக்கு.

 

வரவேற்பை சுற்றி முற்றி பார்க்க அங்கு நல்லவேளையாக யாருமில்லை. தான் அடிவாங்கியது யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டான் அவன்.

 

ராகவ் பிரசாத் மூணாரில் அவனுக்கு சொந்தமாய் சுற்றுலா விடுதியொன்று உள்ளது. அவன் தாத்தாவின் காலம் தொட்டு அவர்களுக்கு சொந்தமாயிருந்த அந்த இடத்தை அவன் தந்தை தன் காலத்தில் விடுதியாக்கியிருந்தார்.

 

தந்தையின் இறப்பிற்கு பின் ராகவ் தான் அதனை பொறுப்பெடுத்து நடத்துகிறான். மிகப்பெரிய விடுதி என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவிற்கு நல்ல விடுதியே.

 

மொத்தம் பதினாறு அறைகளே கொண்ட விடுதி. ராகவ் தான் அதன் முழுப் பொறுப்பையும் பார்த்துக் கொள்கிறான்.

 

மூணாரின் சீதோஷ்ண நிலை அவன் அன்னைக்கு ஒத்து வராததால் அவர் தேனியில் தனியாக வீடு எடுத்து தூரத்து உறவினரான மூக்கம்மாள் பாட்டியுடன் வசிக்கிறார்.

 

அதனால் ராகவ் மூணாரிலேயே தங்கிக் கொள்வான். விடுதியின் பதினைந்து அறைகள் வாடகைக்கு விட்டிருந்தாலும் அதிலிருந்த பதினாறாவது அறை அவனுக்கானது.

 

அது ஒரு மழைக்காலமென்பதால் விடுதியில் அவ்வளவாக கூட்டமில்லை.

 

இந்த ஜெயக்னா என்பவள் முன்தினம் தான் அங்கு அறை பதிவு செய்திருந்தாள். முதல் நாள் அவள் வந்த போது பார்க்க நாகரீகமாய் தோன்றிய அவள் தோற்றம் அவனை கவர்ந்தது.

 

முன்பதிவிற்கு தேவையான விபரங்களை சேகரித்துக் கொண்டான். அந்த அறையை விக்டர் என்ற பெயரில் பதிவு செய்திருந்தாள். யாருக்கு என்ற போது தெரிந்தவர் என்று சொன்னவள் அவன் கேட்ட மற்ற விபரங்களை கொடுத்திருந்தாள்.

 

இன்று காலையில் அவளும் இன்னொருவனுமாக அங்கு வந்திருந்தனர். இருவரும் பேசி சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.

 

ராகவிற்கு இருவரையும் ஒன்றாய் பார்த்ததும் கொஞ்சமல்ல அதிகமாகவே தப்பாக மனதிற்குள் ஒரு எண்ணம் விழுந்தது.

 

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன். உடன் வருவதாலேயே ஒருவரை தவறாக எண்ணக் கூடாது என்பதை அறிந்தவன் தானே அவனும்.

 

அந்த விக்டர் என்பவரின் அடையாள அட்டை எல்லாம் வாங்கி சரி பார்த்தவன் தேவையானவற்றை லெட்ஜரில் பூர்த்தி செய்து அறைசாவியை அவர்களிடம் நீட்டினான்.

 

இருவருமாக அறைக்குள் சென்றவர்கள் தான் மதிய வேளையில் தான் வெளியில் வந்தனர்.

 

ராகவிற்கோ இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்றிருந்தது. இதென்ன அது போன்ற லாட்ஜா என்ன நடக்கிறது இங்கே என்ற கோபம் அவனுக்கு.

 

பேசாமல் அறைக்கதவை தட்டி என்ன இது என்று கேட்டுவிடலாமா என்ற எண்ணம் அவனுக்கு.

 

வெளியில் சென்றவர்கள் நான்கு மணி போல் மீண்டும் அறைக்குள் வந்தார்கள், அதே கதை ஆறு மணி வரை அறைக்கதவு திறக்கப்படவில்லை.

 

பின் இருவருமாய் வெளியில் வந்தார்கள். வந்தவர்களின் முகத்தில் அதீத களைப்பை உணர்ந்தான் அவன்.

 

ச்சே என்றிருந்தது அவனுக்கு, அவளுடன் வந்த விக்டர் என்பவன் அவளிடம் காசைக் கொடுத்துவிட்டு வெளியில் எட்டிப்பார்க்க அவன் செல்வதற்கு வண்டி வந்து காத்திருந்தது அங்கு.

 

“பை டியர் யூ ப்ளீஸ் டேக் கேர், ஐ ஹாவ் டு கோ…” என்றுவிட்டு அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

அந்த நேரத்தில் ராகவின் வாய் சும்மாயில்லாமல் அவளை கேள்வி கேட்டிருந்தது.

 

அவளிடம் காசை வாங்கி உள்ளே வைத்தவன் லெட்ஜரில் அவளிடம் கையெழுத்து வாங்கி முடிந்த பின் “இது அந்த மாதிரி லாட்ஜ் இல்லை, இனிமே இது போல விஷயத்துக்கு எல்லாம் இங்க புக் பண்ணாதீங்க”

 

“அதுக்குன்னு வேற இடம் இருக்கு அங்க போங்க… நெக்ஸ்ட் டைம் நீங்க வந்தா நானே உங்களுக்கு ரூம் கொடுக்க மாட்டேன்…”

 

“வாட்?? என்ன சொன்னே??” என்றாள் அவள் கோபமாய்.

 

“வாட்டு பூட்டு எல்லாம் வேணாம், நான் சொன்னது உன் காதுல சரியா தான் விழுந்துச்சு… இனிமே இந்த பக்கம் வந்திறாதே!!”

 

“யூ இடியட்!! உன் இத்து போன லாட்ஜ்ல ரூம் போட்டா உன் இஷ்டத்துக்கு என்ன வேணா பேசுவியா… ஹவ் டேர் யூ கேன் சே லைக் தட்!!” என்று அவள் ஆங்கிலத்தில் கத்த ஆரம்பித்தாள்.

 

“ஹலோ உங்க இங்கிலீஷ் எல்லாம் உங்களோடவே வைச்சுக்கோங்க… இப்போ இடத்தை காலி பண்ணுங்க, இனிமே இங்க உங்களை பார்த்தேன் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

 

“ஒரு ஆம்பிளையும் பொம்பளையும் ரூம்குள்ள போயிட்டு எவ்வளவு நேரம். சீய்!! பார்க்க நல்லா குடும்ப பொண்ணு மாதிரி இருந்திட்டு பண்ணுற வேலையை பாரு” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை அவனை ஓங்கி ஒரு அறை விட்டாளவள்.

 

“இட்ஸ் நன் ஆப் யூவர் பிசினெஸ், மைன்ட் இட்…” என்றுவிட்டு கண்களில் அனல் பறக்க அங்கிருந்து நகர்ந்திருந்தாள் அவள்.

 

ராகவிற்கு அவள் அடித்ததே பெரிய அவமானமாக இருந்தது. இவ எல்லாம் எப்படி என்னை அடிக்கலாம் அடுத்த முறை அவளை பார்த்தா சும்மா விடக்கூடாது என்பதே அவன் எண்ணம்.

 

மனம் சஞ்சலமாகிப் போனது அவனுக்கு. இன்று அவன் தேனி செல்ல வேண்டிய நாள், வாரத்தின் ஆறு நாட்கள் விடுதியில் கழிப்பவன் சனிக்கிழமை மாலையானால் தேனிக்கு கிளம்பிவிடுவான் அன்னையை பார்க்க.

 

பின் ஞாயிறு இரவு தான் அவன் விடுதிக்கு திரும்பி வருவான். விடுதியின் துணை காப்பாளர் சண்முகத்தை அழைத்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவன் ஜீப்பை எடுத்துக் கொண்டு தேனிக்கு கிளம்பிவிட்டான்.

 

மனம் இன்னமும் ஆறவேயில்லை அவனுக்கு. ஒரு பெண் என்னை அடிப்பதா என்று.

 

அவன் மனதை விடுத்து நாம் அவனைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம். ராகவின் தந்தை சுந்தரம் ஏழு வருடத்திற்கு முன்பு நெஞ்சுவலியில் காலமாகிப் போனார்.

 

அப்போது ராகவ் கல்லூரியில் முதலாமாண்டு தான் படித்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே படிப்பில் அதிக நாட்டமில்லாமல் இருந்தவன் அத்தோடு படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டான்.

 

ராகவின் உடன் பிறந்தவள் அவனுக்கு மூத்தவள் சந்தியா திருமணமாகி சென்னையில் இருக்கிறாள். அவன் தந்தை இறந்த போது அவளுக்கு திருமண நிச்சயமாகியிருந்தது.

 

ராகவ் தான் தந்தையின் மறைவுக்கு பின் தமக்கையானவளுக்கு தந்தையாய் இருந்து அவளுக்கு நல்லபடியாய் மணமுடித்து அனுப்பி வைத்தான்.

அவன் அன்னை மீனாட்சி எவ்வளவோ சொல்லிய போதும் படிப்பை மட்டும் அவன் தொடரவேயில்லை. அவன் நிறைய விஷயங்களில் அவன் தந்தையை கொண்டிருந்தான்.

 

அவன் தந்தை சுந்தரம் மிகவும் கண்டிப்பானவர், ஒழுக்கமானவர், கொஞ்சம் முன்கோபி, தான் நினைப்பதே சரியென்று நினைப்பவர்.

 

பெண்கள் என்பவர்கள் வீட்டு வேலை செய்வதற்கும் புருஷர்களை கவனிப்பதற்கும் என்ற எண்ணம் அவருக்கு அதிகம் உண்டு.

 

அவருக்கு பெண்ணின் மேல் பிரியம் உண்டு, ஆனால் அதை காட்டத் தெரியாது அவர்க்கு… பெண்ணின் மீது மட்டுமல்ல பிள்ளையின் மீதும் அப்படியே…

 

சந்தியா பன்னிரண்டாம் வகுப்பை முடித்ததுமே அவளுக்கு திருமணத்திற்கு பார்க்க ஆரம்பித்துவிட்டார். மீனாட்சி தான் மகளுக்காய் கணவனிடம் கெஞ்ச போனால் போகட்டும் என்று தொலைதூர வழி கல்வியில் படிக்க ஒப்புக் கொண்டார்.

 

அவள் படிப்பை முடிக்கும் தருவாயில் வந்த வரனை பேசி முடித்தும் விட்டார். அவளின் திருமணம் பார்க்கும் முன் அவர் நெஞ்சு வலியில் உலகைவிட்டு நீங்கியும் போனார்.

 

ராகவிற்க்கு தந்தையின் அத்துணை குணமும் உண்டு. என்ன ஒன்று பெண்கள் விஷயத்தில் அவன் தந்தையை போல் அல்ல. அம்மா, உடன்பிறந்தவள் என்ற பாசம் அவனுக்கு உண்டு. அதை அவர்களிடம் அவன் காட்டத் தவறியதில்லை.

 

மழை நேரமென்பதால் அவன் வீட்டிற்கு வந்து சேர மூன்று மணி நேரம் பிடித்திருந்தது. வாயிலில் கேட்ட ஜீப்பின் சத்தத்தில் கதவை திறந்து ஓடி வந்த மீனாட்சி அவசரமாய் கேட்டை திறந்துவிட்டார்.

 

“அம்மா இப்போ எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க… நான் தான் சாவி வைச்சிருக்கேன்ல திறந்து வரமாட்டேனா??” என்றவாறே திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே நுழைந்திருந்தான்.

 

“உனக்காக தான்யா காத்துட்டு இருக்கேன்… நீ வரும் போது வந்து கதவை திறந்து விடுறதுல எனக்கு சந்தோசம்ய்யா” என்றார் அவர்.

 

“வர்ற வழி எல்லாம் மழை அதான் கொஞ்சம் லேட் ஆகிட்டு… இங்க மழையில்லை போல இருக்கே…” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றான்.

 

“ஆமாய்யா இங்க மழையில்லை, சாயங்காலம் போல மோடம் போட்டிருந்துச்சு மழை வரும் பார்த்தா மேகமெல்லாம் விலகிட்டு”

 

“பாட்டி எங்க?? தூங்கிட்டாங்களா??” என்றவன் சோபாவில் சரிந்திருந்தான்.

 

“உன்னைய பார்க்காமலா” என்று சிரித்தார் அவர்.

“உனக்கு பிடிக்குமேன்னு ஆட்டுக்கால் குழம்பு வைச்சிருக்காங்க… உன் வண்டி சத்தம் கேட்டுச்சுல குழம்பை சூடு பண்ண போயிருப்பாங்க…”

 

“நீ வேற டிரஸ் மாத்திட்டு வா, சூடா ஆப்பம் கொண்டு வர்றேன்” என்று நகர்ந்தார் அவர்.

 

அவனறைக்கு சென்று ஹீட்டர் ஆன் செய்து சுகமாய் ஒரு வென்னீர் குளியல் போட்டு வந்தவனை மூக்கம்மாள் செய்த ஆப்பமும் ஆட்டுக்கால் குழம்பும் வரவேற்றது.

 

“ஹ்ம்ம் பாட்டி செம வாசனை போ… சூட சூட இப்படி சாப்பிடுறதும் ஒரு சுகம் தான்…” என்றவன் அவர்கள் உண்டார்களா என்பதை கூட விசாரிக்காமல் சில பல ஆப்பத்தை வேகமாய் உள்ளிறக்கினான்.

 

சாப்பிட்டு முடித்த பின்னே தான் “நீங்க சாப்பிட்டீங்களா??” என்றான்.

 

“அம்மாவுக்கு பிளஷர் இருக்குல அதான் அப்போமே சாப்பாடு கொடுத்திட்டேன் அவங்களுக்கு. நாந்தேன் நீ வாரவும் சாப்பிடலாம்ன்னு இருந்தேன்” என்றார் அவர்.

 

“அது பிளஷர் இல்லை பிரஷர்…” எங்க “என்ன ஷரோ என் வாயில என்ன வருதோ அதேன் அதுக்கு பேரு” என்றார் பாட்டி.

 

“அது சரி, ஏன் பாட்டி எனக்காக வெயிட் பண்ணே, போ… போ… முதல்ல நீ சாப்பிடு… உனக்கென்ன எங்கம்மாவை விட வயசு குறைவுன்னு நினைப்பா… நேரா நேரத்துக்கு சாப்பிடறது தானே” என்றான் அவன்

 

“தினமும் தானே நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடுறோம்… வாரம் ஒரு நாள் தானேய்யா உனக்காக காத்திட்டு இருக்கறது அதுல என்னாகிட போகுது… இந்த கிழவிக்கு நீங்க தானே எல்லாமே…” என்று கண் கலங்கியது பாட்டி.

 

“பாட்டி…” என்று அவரை அதட்டவும் மீனாட்சி ஆப்பத்துடன் வரவும் சரியாய் இருந்தது.

 

“நீங்க சாப்பிடுங்க அத்தை… அவன் இப்படி தான் பேசிக்கிட்டே இருப்பான்…” என்று மகனை லேசாய் முறைத்து அவரிடம் தட்டை நீட்டினார்.

 

ஒருவழியாய் அவர்கள் சாப்பிட்டு உறங்க இரவு பதினோரு மணிக்கும் மேலானது.

 

காலையில் நேரம் கழித்தே எழுந்திருந்தான் ராகவ். அவன் வீடு ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாய் மலையை பார்த்தவாறே இருக்கும்.

 

காலைக்கடன் எல்லாம் முடிந்து அவன் ஹாலிற்கு வர மீனாட்சி அவனுக்கு காபியை கொடுத்தார்.

 

அதை எடுத்துக்கொண்டு வீட்டின் பின் புறம் சென்றவன் அங்கிருந்த படியில் அமர்ந்துக் கொண்டு அந்த மலையின் அழகை ரசித்தவாறே அதை பருகி முடித்தான்.

மூணாரில் குடியிருக்கும் அவனுக்கு தினமும் இது போல வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் தேனிக்கு வரும் போது இவ்வாறு செய்வான்.

 

பொழுது நன்றாய் விடிந்திருந்த போதும் வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது. தூரத்தில் தெரிந்த மலையை பனி மூட்டம் போல் மேகம் மறைத்தும் மறைக்காமல் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது எங்கே என்னை கண்டுபிடியேன் என்பதை போல்.

 

மீனாட்சி அவனருகே வந்து அமர்ந்ததை திரும்பிப் பார்க்காமலே உணர்ந்தான் அவன்.

 

“என்னாச்சு ராகவா??” என்ற அன்னையின் கேள்வியில் திடுக்கிட்டு அவர் முகம் பார்த்தான் அவன்.

 

“இல்லை ராவுலயே கேக்கணும்ன்னு நினைச்சேன். உன் முகமே சரியில்லையே என்னாச்சு??” என்று மகனின் மனதை படித்தவர் போல் கேட்டார்.

 

யாரும் பார்க்கவில்லை என்று அவன் நினைத்திருந்தாலும் அவன் கன்னத்தில் அவளின் மூவிரல் நன்றாய் அழுத்தமாய் பதிந்திருந்தது.

 

இரவு நேரமென்பதால் அவன் அதை சரியாய் கவனித்திருக்கவில்லை. அன்னையாயிற்றே அப்போதே அதை கவனித்துவிட்டார்.

 

நேரடியாய் என்னவென்று கேட்காமல் பொத்தாம்பொதுவாய் அவனை கேள்வி கேட்டார்.

“திடிர்னு ஏன்மா அப்படி கேட்கறீங்க??”

 

“உன் முகம் வாட்டமா தெரியுதுய்யா…”

 

“அது ஒண்ணுமில்லைம்மா…” என்றவன் முதல் நாள் நடந்ததை சொல்லி முடிக்கவும் சப்பென்று அவனை அறைந்திருந்தார் ராகவின் அன்னை மீனாட்சி…

 

ஹாலில் இருந்த டிவியில் மூக்கம்மாள் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா சேனலில் காமெடி ஒன்று அவன் சூழ்நிலைக்கு சரியாய் ஓடியது…

 

“சேத்துலையும் அடிவாங்கியாச்சு… சோத்துலையும் அடிவாங்கியாச்சு…”

 

கண்டதெல்லாம் காட்சியுமல்ல

கொண்டதெல்லாம் கோலமுமல்ல

காலம் மட்டுமே

உண்மை விளக்கும் கண்ணாடி!!

 

Advertisement