Advertisement

அத்தியாயம் – 7

 

திருமணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் மணமகன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.

 

சந்தியா இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க ஜெயக்னா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்றால் ராகவோ எந்த உணர்ச்சியும் காட்டாது நின்றிருந்தான்.

 

ஜெயக்னாவிற்கு ராகவ் எப்படி திருமணத்திற்கு சம்மதம் சொன்னான் அதுவும் தான் கேட்கும் போது முடியாது என்று திமிராய் மறுத்தவன் எப்படி சரி என்றிருப்பான் என்ற எண்ணமே உழன்றது.

 

அவனருகில் நிற்கும் போது இவன் தன் தமக்கையை திருமணம் செய்ய வந்தவன் தானே என்ற எண்ணமே ஓங்கி அவளால் இயல்பாய் அவனருகில் நிற்க முடியவில்லை.

 

ஒரு வித அவஸ்தை, எரிச்சல், கோபம், இயலாமை எல்லாமாய் கலந்த ஓர் உணர்வு. இதெல்லாம் அவளுக்கு அவள் உடன் பிறந்தவளின் மீதோ அவளை இத்திருமணத்திற்கு வற்புறுத்திய தந்தை மீதோ தான் வந்திருக்க வேண்டும்.

 

மாறாய் அனைத்தும் ராகவின் மீதே திரும்பியது அவளுக்கு. தான் தான் தன்னை திருமணம் செய்துக்கொள் என்று அவன் முன் நின்றோம் என்பதெல்லாம் புறந்தள்ளிப் போனது.

இந்த நிமிடம் அவ்வளவு வெறுப்பாக உணர்ந்தாள். மற்றவர்களுக்காய் முகத்தை இயல்பாய் காட்டிக்கொள்ளவே பெரும்பாடாய் இருந்தது அவளுக்கு.

 

வீட்டிற்குள் வந்தவர்களுக்கு பால் பழம் கொடுத்தனர். கடமைக்காகவே அதை செய்தாள். அவள் வீட்டினரும் உடன் வந்திருந்தனர்.

 

அவர்களுக்காய் தனியறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவளையும் அங்கேயே ஓய்வெடுக்க சொன்னார் மீனாட்சி.

 

நல்லாதாய் போயிற்று என்று உள்ளே சென்றவள் அப்படியே கட்டிலில் சாயவும் அவளின் அன்னை வள்ளி அவளருகில் வந்தார்.

 

“ஜெயா…” என்ற அவர் அழைப்பில் நிமிர்ந்து அமர்ந்தாள். என்ன என்றெல்லாம் கேட்கவில்லை அவர் முகத்தை மட்டும் தான் பார்த்தாள்.

 

“உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கும்மா அதை நல்லபடியா காப்பாத்திக்க பாரு… உங்கக்கா மாதிரி எதையும் கிறுக்குத்தனமா செஞ்சிடாதே…”

 

“எங்க பேரை காப்பாத்து ஜெயா… இத்தனை வருஷத்துல உங்கப்பாவை இவ்வளவு கோவமா நேத்து தான் பார்த்தேன்…”

 

“எப்பவும் நீ செய்யறதுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டாலும் நீ செய்யறதை எல்லாம் எப்பவும் உங்கப்பா பெருமையா தான் சொல்லிக்குவார்… நேத்து அப்பா அப்படி பேசிட்டார்ன்னு உனக்கு வருத்தம் இருக்கும்”

 

“எனக்கு உன்னை புரிஞ்சுக்க முடியுது ஜெயா… ஆனா அவரை பத்தியும் நீ யோசிக்கணும்… போனது எல்லாம் போகட்டும், இனி எல்லாமே நல்லதாவே நடக்கும்”

 

“இது உன்னோட வாழ்க்கை… உனக்கு நல்ல கணவர், மாமியார், நாத்தனார்ன்னு சொந்தங்கள் அமைஞ்சு இருக்கு. அவங்ககிட்ட நல்லவிதமா நடந்துக்கோ…”

 

“முடிச்சிட்டீங்களா… இல்லை இன்னும் எதுவும் மிச்சம் மீதி இருக்கா நீங்க சொல்றதுக்கு…” என்றாள் அதுவரை நிதானமாய்(?) அவர் பேசுவதை கேட்டவள்.

 

“என்ன ஜெயா இப்படி பேசறே?? உன் நல்லதுக்கு…” என்று சொல்ல வந்தவரை கைக்காட்டி நிறுத்தினாள்.

 

“போதும் நீங்க எனக்கு செஞ்ச நல்லது எல்லாம் போதும்… அதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டீங்கள்ள…”

 

“இனிமே என் வாழ்க்கை நானே பார்த்துக்கறேன்… எந்த காரணம் கொண்டும் உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன் போதுமா…” என்றுவிட்டு கட்டிலில் அப்படியே குப்புற விழுந்தாள்.

 

மகளின் பேச்சில் திகைத்து பார்த்திருந்த வள்ளிக்கு கண்கள் கரித்தது.

கட்டுப்படுத்த முடியாமல் அழுகை பெருக சரியாக அதே நேரம் சரவணன் உள்ளே நுழைந்தார். அழுதுக் கொண்டிருந்த மனைவியும் எனக்கென்ன என்று படுத்திருந்த மகளையும் மாறி மாறி பார்த்தவருக்கு ஏதோ புரிவது போல்.

 

மனைவியை வெளியே வா என்று சைகையில் அழைத்தார். இருவருமாய் வெளியே சென்று பின்னால் இருந்த தோட்டத்திற்கு சென்றனர்.

 

“என்னாச்சு??” என்று மனைவியை கேட்க அவர் மகள் பேசியதை சொல்லவும் சரவணன் ஒன்றும் சொல்லவில்லை.

 

“சரி அவளை அப்படியே விட்டிரு… ஒண்ணும் சொல்லாத, நாம அட்வைஸ் பண்ணா அவளுக்கு பிடிக்காது…”

 

“என்னைக்காச்சும் அவளுக்கு தோணலாம் நாம அவளுக்கு நல்லது தான் செஞ்சிருக்கோம்ன்னு அப்போ அவ புரிஞ்சுக்குவா…”

 

“ஜெயாக்கு கோபமெல்லாம் என் மேல தான்… நானும் அவளை கட்டாயப்படுத்தி இருக்க கூடாது தான்… ஆனா வள்ளி உனக்கு புரியுதுல நான் ஏன் இப்படி செஞ்சேன்னு…” என்று கேட்டார்.

 

“என்னங்க நீங்க என்கிட்டே போய் விளக்கமெல்லாம் சொல்லிக்கிட்டு… உங்களை எனக்கு தெரியாதா… நீங்க ஒண்ணு செஞ்சா அது எப்பவும் தப்பா இருக்காது… தப்பாவும் போகாதுங்க…”

 

“நீங்க கூப்பிட்டதும் எதுவும் யோசிக்காம உங்களை நம்பி உங்க கையை பிடிச்சுட்டு வந்தேன்… அப்போவே நான் எதுவும் பேசலை, யோசிக்கலை, இப்போ மட்டும் நான் உங்களை தப்பாவா யோசிப்பேன்” என்றார் அவர்.

 

“இது போதும் வள்ளி… நான் போய் மாப்பிள்ளைக்கிட்ட பேசறேன், இவ வேற ஏற்கனவே அவர்கிட்ட தகராறு பண்ணி வைச்சிருக்கா… அவர் என்ன நினைச்சுட்டு இருக்கார்ன்னு புரியலை”

 

“நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டனோன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன யோசனை. அவர்கிட்ட பேசினா தான் நிம்மதி… நீ உள்ள போ, ஜெயா கூடவே இரு… அவ எது சொன்னாலும் கண்டுக்காத…” என்றுவிட்டு நகர்ந்தார் அவர்.

 

கட்டிலில் விழுந்த ஜெயாவிற்கு இரண்டு நாட்களாய் இருந்த சோர்வும், உறக்கமின்மையும் சேர்ந்து கொண்டிருக்க அடித்து போட்டது போல் உறங்கி போனாள் அவள்.

 

மீனாட்சி அவர்களை தேடி வந்தார். “ஜெயா பார்க்கலாம்ன்னு தான் வந்தேன்…”

 

“ஒரு நிமிஷம் அண்ணி அவளை எழுப்பறேன்…” என்ற வள்ளியை தடுத்தார் மற்றவர்.

 

“தூங்கட்டும் விடுங்க… எதிர்பார்க்காத நிகழ்வுகள் அதுல மனசு சோர்வாகி போயிருக்கும்… தூக்கம் வரும் போது தூங்குறது நல்லது தான்… எழுப்ப வேணாம்…”

 

“இல்லை அது வந்து… நீங்க…”

 

“ஜெயாவை பிடிச்சு தான் நாங்க எல்லாருமே சம்மதம் சொன்னோம்… நீங்க கவலையேப்படாதீங்க… உங்க பொண்ணை எங்க பொண்ணா தான் பார்த்துப்போம்…” என்று வள்ளிக்கு ஆறுதல் சொல்ல அவர் முகத்தில் நிம்மதி.

 

ஜெயா கண் விழித்து எழும் போது சூரியன் தன் வேலை முடிந்து கிளம்பியிருந்தான்… லேசான இருள்போர்வை படர ஆரம்பித்திருந்தது.

 

அடித்து பிடித்து எழுந்தவள் ‘ச்சே எப்படி இப்படி தூங்கிப் போனோம்’ என்று வெட்கினாள். எழுந்து சென்று அந்த அறையில் இருந்த குளியலறையில் முகம் கழுவி வந்தாள்.

 

‘ஒருவர் கூடவா என்னை எழுப்பவில்லை. இந்த அம்மா எங்கே தான் போனார்களோ’ என்று அறையை சுற்றி கண்ணை சுழலவிட்டாள்.

 

தான் அவரிடம் பேசியதெல்லாம் மறந்தே போனது அவளுக்கு. மெதுவாய் அறைக்கதவை திறந்து வெளியில் வர அங்கு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

அவர்களை கண்டதும் ஒரு மாதிரி குற்றவுணர்வு எழ எங்கு செல்வது என்று புரியாமல் அப்படியே நின்றிருந்தாள் அவள் அவஸ்தையாய்.

 

“வா ஜெயா…” என்று அவளருகே வந்து அழைத்த சந்தியாவுடன் சென்றாள் அவள். கண்கள் மட்டும் தன் அன்னையை தேடியது.

 

“அத்தை சமையல்கட்டுல அம்மா கூடவும் பாட்டி கூடவும் இருக்காங்க…” என்றாள் சந்தியா அவளின் பார்வை உணர்ந்து.

 

“ஹ்ம்ம்…”

 

“அம்மா ஜெயா வந்தாச்சு… சூடா ஒரு காபி கொடுங்க அவளுக்கு…” என்று இயல்பாய் தன்னை ஏற்றுக் கொண்ட சந்தியா அவளுக்கு கொஞ்சம் புதிது.

 

ஜெயக்னாவிற்கு தான் யாரிடமும் ஒட்டவும் முடியவில்லை. தாமரை இல்லை தண்ணீர் போல் நெளிந்து கொண்டிருந்தாள்.

 

“இல்லை அதெல்லாம் வேணாம் அ… அ… அண்ணி…” என்றாள் திக்கி.

 

“தூங்கி எழுந்தது கொஞ்சம் சூடா காபி குடிச்சா தெம்பா இருக்கும்…” என்றவள் அன்னை நீட்டிக் கொண்டிருந்த காபி தம்ளரை வாங்கி அவளிடம் கொடுத்தாள்.

 

அங்கு நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அன்னையின் அருகில் வந்து நின்றுக்கொண்டாள் ஜெயா…

 

“எங்கம்மா போனே??” என்று மெல்லிய குரலில் கேட்டவாறு.

 

ஒன்றும் சொல்லாமல் மகளை ஒரு பார்வை பார்த்தவர் “எங்க போயிடுவேன்… இங்க தானே இருப்பேன்…”

 

“எப்போம்மா வீட்டுக்கு போகணும்??” என்றவளை என்ன சொல்ல என்று தான் பார்த்தார் அவர்.

 

“அண்ணி நீங்க இன்னைக்கே அங்க போக வேணாம்… ராகவும் மாப்பிள்ளையும் சொன்ன மாதிரி இன்னைக்கு இங்கவே இருங்க… நாளைக்கு வீட்டுக்கு போய்க்கலாம்…” என்று ஆரம்பித்தார் மீனாட்சி.

 

“இல்லை அண்ணி… அது நல்லாயிருக்காது…”

 

“இப்போ நல்லது கெட்டது எல்லாம் பார்க்கற நேரமில்லை… இன்னைக்கு அங்க போனா உங்களுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும்… அதான் சத்யன் தம்பி போய் பார்த்திட்டு வர்றேன்னு சொன்னாங்கல”

 

“நீங்க கூடவே இருந்தா ஜெயாக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும்” என்று மீனாட்சி பேச ஜெயக்னாவிற்கு அப்போது தான் தன் நிலை புரிந்தது.

 

தூங்கி எழுந்ததில் மூளை சிறிது நேரம் வேலை நிறுத்தம் செய்திருக்க, தான் ஏன் இங்கு இருக்கிறோம் என்று ஆணியில் அறைந்தது போல் புரிய ஆரம்பித்தது.

 

“ஜெயா இதை ராகவ்க்கு கொடுத்திட்டு வர்றியாம்மா…” என்று அவளிடம் ஒரு கோப்பையை நீட்ட தயங்கிக்கொண்டே அவரை பார்த்தாள்.

 

“வெளிய தான்மா உட்கார்ந்திருக்கான்… உங்கப்பா கூட பேசிட்டு இருக்கான்… எல்லாரும் காபி குடிக்கும் போது அப்புறம் எடுக்கறேன்னு சொன்னான், நானும் வேலையில மறந்திட்டேன்…” என்றார் அவர்.

 

மீனாட்சியை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாமல் அவர் கொடுத்ததை கைநீட்டி வாங்கினாள்.

 

வெளியில் வந்து பார்க்க அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்தவன் தன் தந்தையிடம் குனிந்து பேசிக் கொண்டிருப்பது கண்ணில் விழுந்தது.

 

‘இவனுக்கெல்லாம் நான் சேவகம் செய்யணுமா??’ என்று நொடி எண்ணியவள் வேறுவழியின்றி அவனருகே சென்று கையில் இருந்ததை அவனை நோக்கி நீட்டினாள்.

 

அவன் அதை கவனித்தும் கவனிக்காதது போல் வெகு சீரியசாக தன் மாமனாரிடம் பேசிக் கொண்டிருக்க பல்லைக் கடித்தாள் ஜெயக்னா.

 

“காபி பிடிங்க…” என்றாள் மொட்டையாய்.

நிமிர்ந்து அவளை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் பேச்சில் முழ்க ‘இவனை’ என்று அவனை மனதிற்குள்ளாக அர்ச்சனை செய்தாள்.

 

சரவணன் அவளை நிமிர்ந்து பார்த்தவர் மகளிடம் கண்களால் ஏதோ சொல்ல விழைய “அப்பா உங்க மருமகனுக்கு காபி கொண்டு வந்திருக்கேன்…”

 

“மாப்பிள்ளை உங்களுக்கு…” என்று அவர் அவனை பார்த்தார்.

 

“இந்தாங்க…” என்று அவன் முன்பு நீட்ட அதற்கு மேல் அவளை சோதிக்காமல் அவளை பார்த்தவாறே வாங்கினான் அவன்.

 

அவள் உள்ளே செல்லப் போக சரவணனோ “ஜெயா நீ இங்க உட்காரு… மாப்பிள்ளை கூட பேசிட்டு இரு…” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.

 

நல்ல வேளையாக அங்கு யாருமில்லை அந்நேரம். அவள் எழுந்து வந்திருந்த போது சந்தியாவின் கணவன் முருகன், இன்னும் ஒரு சில ஆண்கள் அங்கிருந்தனர். இப்போதும் யாருமில்லை அங்கு.

 

சங்கடமாய் நின்றிருந்தவள் அமரவில்லை அங்கு. “உட்காரு…”

 

“எதுக்கு?”

 

“உன்கிட்ட பேசணும்…”

“உங்ககிட்ட பேசணும்ன்னு எனக்கு எதுவுமில்லை…” என்று அவள் உள்ளே நகரப் போக அதற்குள் காபியை குடித்து முடித்திருந்தவன் கையில் இருந்த கிளாசை கீழே வைத்துவிட்டு அவள் கைப்பற்றினான்.

 

“கையை விடு…”

 

“நீ ஒழுங்கு மரியாதையா உட்கார்ந்தா நான் பேசிடுவேன்… இல்லைன்னா…”

 

“இல்லைன்னா என்னடா செய்வே??”

 

“என்ன செய்வேன்னு சொல்லணுமா?? இல்லை செஞ்சி காட்டணுமா??” என்றான் அவன்.

 

“ஓ!! என்னை திருப்பி அடிக்க தான் பிளானா??”

 

“ஆமாடி என்ன செய்வே??”

 

“இல்லை வாங்கினது அதுக்குள்ளே மறந்து போச்சா… திரும்பவும் உனக்கு என்கிட்ட வாங்கணுமா??” என்றாள் கண்கள் உருட்டி.

 

“அன்னைக்கு தெரிஞ்சோ தெரியாமலோ தப்பா பேசிட்டேன்… அதனால தான் பேசாம விட்டேன்… இல்லைன்னா நீ கொடுக்கறது வாங்கிட்டு இருந்திருப்பேன்னு நினைச்சியா…”

 

“எனக்கும் திருப்பி கொடுக்கத் தெரியும்… இப்போ உன்னை என்ன பண்ணிட்டாங்கன்னு ஓடப் பார்க்கறே… உன்கிட்ட பேசத் தானே கூப்பிட்டேன்… ஒரு பத்து நிமிஷம் உட்காரு…”

 

“நீ சொல்லி நான் ஏன் கேக்கணும்??”

 

“இதையே நான் சொன்னப்போ நீ என்ன சொன்னே?? என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்கலை…” என்று அவன் சொல்லவும் தான் அவனிடம் யாசித்து நின்ற முட்டாள்த்தனத்தை நினைத்து எரிச்சல் கொண்டாள்.

 

“இப்போ என்ன வேணும்??”

 

“நீ தான்…”

 

“என்ன??”

 

“ரொம்ப ஓவரா கற்பனை எல்லாம் பண்ணாதே… உன்னை கண்ணே மணியேன்னு கொஞ்சுறதுக்கு எல்லாம் நான் கூப்பிடலை…”

 

“அப்போ என்னன்னு சொல்லு…”

 

“உட்காருன்னு சொன்னேன்…” என்றான் அவன் அழுத்தமாய்.

 

சுற்றி பார்த்தாள் அவனருகே ஓட்டிப் போடப்பட்டிருந்த அந்த ஒற்றை சோபாவில் தான் அமர்ந்தாக வேண்டும்.

 

“உன் பக்கத்துல எல்லாம் என்னால உட்கார முடியாது… என்னன்னு சொல்லு நான் நின்னுட்டே கேட்டுக்கறேன்”

 

அவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்து வைத்தான். சற்றும் யோசிக்காமல் எழுந்திருந்தவன் அவள் கரம்பற்றி அங்கிருந்த அவனறைக்குள் அவளை இழுத்துச் சென்று கதவை அடைத்திருந்தான்…

 

அடங்காத பசுவும்

அடங்காத காளையும்

ஒன்றாய்!!

இருவரில் யார்

அடங்கப் போவதோ

அடக்கப் போவதோ

அடங்குதலும்

அடக்குதலும்

கணவன்

மனைவிக்குள்

சகஜம் தானோ!!

 

Advertisement