அத்தியாயம் – 13

 

அவள் மூணாருக்கு வந்த நிகழ்வுகள் படம் போல் மனதில் ஓட இன்றைய ராகவின் பேச்சு மனதிற்கு இதமாய் இருந்தது அவளுக்கு. அன்று தமக்கையிடம் வீராப்பாய் பேசி வந்திருந்தாள் தான்.

 

ஆனாலும் மனதின் ஓரத்தில் ராகவிற்கு மேக்னாவின் மீது விருப்பம் இருக்குமோ அதை மனதில் கொண்டு தன்னை பார்க்கிறானோ என்றெல்லாம் தோன்றியது அவளுக்கு.

 

அவள் அன்று டிவோர்ஸ் பற்றி பேசியதும் கூட அவனுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்றால் அவனுக்கு பிடித்த மணவாழ்க்கை அவன் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணியே அதை சொல்லியிருந்தாள்.

 

அவனை பார்க்கும் போதெல்லாம் அவன் வாழ்வை மட்டுமல்லாது தன் வாழ்வையும் கெடுத்தோமோ என்ற குற்றவுணர்வு எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

அவன் முதல் நாள் பேசியதை அவளால் இன்று வரை மறக்கவும் முடியவில்லை. தான் எப்போதும் இரண்டாம் பட்சமாகவே ஆகிப்போகிறோம் என்ற எண்ணம் எழுவதும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

 

இன்றைய அவன் அணைப்பில் தானும் ஒரு நொடி கரைந்தது அவளைப் பற்றி அவளுக்கே நல்ல விதமாய் தோன்றவில்லை. தனக்கு அவனை பிடித்திருக்கிறதோ அதனால் தான் இப்படியெல்லாம் நடந்ததோ என்ற எண்ணத்தையே அவளிடத்தில் விதைத்தது.

 

அவனின் கோபம் வேறு அவளை லேசாய் கலங்கச் செய்திருந்தது. இங்கு வந்த இத்தனை நாளில் இருவரும் அதிகமாய் இழைந்து பேசிக்கொள்ளவில்லை தான். ஆனாலும் தினமும் அவனுக்கு முடிந்த நேரத்தில் வந்து செல்வான்.

 

சண்முகம் வேறு ஊரில் இல்லையென்பதாலும் இது சீசன் நேரம் என்பதாலும் அவனால் இரவு வீட்டிற்கு வர முடியாது என்பதை முதல் நாளே அவளிடம் சொல்லியிருந்தான்.

 

இன்று அவளாய் அழைத்து வீட்டிற்கு தங்க வந்திருந்தவனை தேவையில்லாமல் பேசி அனுப்பிவிட்டோமோ என்றே தோன்றியது அவளுக்கு.

 

இப்படியே தன் எண்ணத்தில் உழன்றவள் ஒருவாறு உறங்கிப் போயிருந்தாள். காலையில் எழுந்து அவசரமாய் குளியலை முடித்திருந்தவளுக்கு அவனை நேரில் சென்று பார்த்தால் என்ன என்று தோன்றியது.

 

அதனாலேயே நேரமாக எழுந்து கிளம்பியிருந்தாள். அவனிடம் போன் செய்து சொல்லவில்லை. அப்படி சொன்னால் எதுவும் சொல்வானோ என்று எண்ணி வீட்டை பூட்டி வெளியில் வந்துவிட்டாள்.

 

அவளுக்கு வீட்டிலிருந்து அவன் லாட்ஜிற்கு செல்லும் வழி தெரியாது. சரி ஆட்டோவில் செல்லலாம் என்று எண்ணி தெருமுனைக்கு வந்திருந்தவள் அங்கு கடந்து சென்ற ஆட்டோவை நிறுத்தினாள்.

 

லாட்ஜின் பெயர் சொல்லி அங்கு செல்ல வேண்டும் என்று இவள் சொல்ல ஆட்டோ டிரைவர் இவளை பார்த்துவிட்டு “நூறு ரூபாய் ஆகும்” என்றார்.

 

“அவ்ளோவா… இங்க இருந்து ரொம்ப தூரமா இருக்கா அந்த இடம்…” என்றாள்.

 

அவருக்கு இவளை பார்த்தால் ஏமாந்தவள் போல் தோன்றியது போலும் காசைக் கறக்க எண்ணினார் அவர். “ஆமாம்மா ரொம்ப தூரம் தான்” என்றார். (அவளைப்பத்தி தெரியலை உங்களுக்கு)

 

அவளும் ஆட்டோவில் ஏறி அவர் நன்றாய் ஊரை சுற்றி பிறகு அவளை கூட்டிவந்து லாட்ஜின் வாசலில் நிறுத்தினார்.

 

ராகவ் எப்போதும் காலையில் சீக்கிரம் எழும் வழமையுடையவன். ஏனெனில் சிலர் காலையிலே அறை பதிவு செய்ய வருவர் என்பதால் குளித்து சாமி கும்பிட்டு என்று எப்போது தயாராய் தானிருப்பான்.

 

முதல் நாளிரவே மழை சுத்தமாய் நின்றிருந்தது. வெளியில் வந்து அந்த குளிரை அனுபவிக்க எண்ணி நின்றிருந்தவன் ஆட்டோவில் வந்திறங்கியவளை கண்டதும் ‘என்னடா பத்திரகாளி காலையிலேயே பூஜை செய்ய வருதோ’ என்ற மனநிலை தான் அவனுக்கு.

 

ஆனாலும் அவள் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கும் முன் அங்கு வந்திருந்தவன் ஐம்பது ரூபாயை எடுத்து ஆட்டோ டிரைவரிடம் நீட்ட அவளோ “நூறு ரூபாய்” என்றாள்.

 

அவன் திரும்பி டிரைவரை பார்த்து முறைத்தான். இருவருக்கும் முன்பே பழக்கமிருந்தது. “எங்க வீட்டில இருந்து இங்க வர்றதுக்கு நூறு ரூபாயா ஆச்சு” என்றான் அவன்.

 

அவரோ ஒன்றும் சொல்ல முடியாமல் “அது வந்து தம்பி…” என்றவர் அவனை சைகையால் பார்த்து அதெல்லாம் கண்டுக்காதீங்க என்றார்.

 

“இது யாருன்னு தெரியாம நூறு ரூபா கேட்டு இருக்கீங்க… அப்போவே உங்களை பத்தி ஒண்ணு ரெண்டு பேரு கம்பிளைன்ட் பண்ணாங்க… நான் தான் சரி போனா போகட்டும்ன்னு பேசாம இருந்தேன்…”

 

“நீங்க இப்படி இருந்தா எப்படிண்ணே… நம்ம ஊருக்கு வர்றவங்ககிட்ட நாம நேர்மையா இருக்க வேணாமா… உங்க மாதிரி ஆளுங்களால தான் இங்க டூர்க்கு வர்றவங்க எல்லாம் தப்பா பேசிட்டு போறாங்க…”

 

“வெளிநாட்டுக்காரன் எல்லாம் எப்படி நம்மை மதிப்பான். உள்ளூர்லவே இப்படி கொள்ளையடிக்கறீங்களே…”

“இதுல நான் வேற நீங்க கூட்டிட்டு வர்ற ஆளுங்கக்களுக்குன்னு உங்களுக்கு தனியா கமிஷன் கொடுக்கறேன்…”

 

“நீங்க கடைசில என் மனைவிகிட்டவே அதிக காசு வாங்கறீங்க…” என்று அவன் கடைசியாய் சொல்லவும் அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!!

 

ஜெயக்னாவிற்கு அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று புரிந்தது. அவர் வேண்டுமென்றே சுற்றி வந்ததால் அவளும் தூரம் என்றே எண்ணி விட்டிருந்தாள்.

 

இப்போது அவள் திரும்பி ஆட்டோ டிரைவரை பார்த்த பார்வையில் அந்த குளிரையும் மீறி வியர்த்தது அவருக்கு.

 

“இனிமே நம்ம கணக்கை முடிச்சிக்கிடலாம்ண்ணே… இந்தாங்க நூறு ரூபாய்… இருந்தாலும் பாதிக்கு பாதி காசு மேல சொல்லியிருக்கீங்க, பார்த்து தொழில் பண்ணுங்க…” என்று அவர் கையில் காசை திணித்திருந்தான்.

 

“தம்பி… தம்பி…” என்ற அவரின் குரலை காதில் வாங்காமல் “வா” என்று அவளின் தோளின் மீது கைப்போட்டு அழைத்துச் சென்றான்.

 

அவனும் அவளை அணைத்திருப்பதை உணரவில்லை, அவளும் உணரவில்லை. உள்ளே சென்ற பின்னே தான் கையை எடுத்தான்.

“எனக்கு ஒரு வார்த்தை போன் பண்றதுக்கு என்ன… நான் வந்து கூட்டிட்டு போயிருக்க மாட்டேனா… அப்படி என்ன அவசரம்ன்னு இவ்வளவு காலையில இங்க கிளம்பி வந்தே??”

 

ஆஹா இதுக்கு தான் அவகிட்ட பதிலே இல்லையே… ‘நீ கோவமா இருக்கியேன்னு பார்க்க வந்தேன்னா சொல்ல முடியுமா… சிக்கிட்டியே ஜெயா…’ என்று எண்ணிக் கொண்டவள் அப்படியே நின்றாள்.

 

“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம்??”

 

“ஏன் உங்களை பார்க்க வந்தேன்னு நினைச்சீங்களா??” என்றாள் குதர்க்கமாய்.

 

“அப்படி நடக்க வாய்ப்பில்லைன்னு நல்லாவே தெரியும்” என்று அவளுக்கு தக்க பதில் சொன்னான் அவன்.

 

ஆனாலும் மனதிற்குள் இவள் தன் கோபத்தின் பொருட்டும் அதை குறைக்கும் பொருட்டும் தான் வந்திருக்கிறாள் என்று தோன்றாமலில்லை அவனுக்கு.

 

“அப்போ ஏன் வந்தே?? அதுவும் எட்டு மணிக்கெல்லாம்…” என்று மீண்டும் கேட்டான்.

 

‘அடடா இவன் பதில் சொல்லாம விடமாட்டான் போல…’ என்று எண்ணிக்கொண்டு “எவ்வளோ நாள் தான் வீட்டுல தனியா இருக்கறது… ரொம்ப போரடிக்குது…”

 

“ஒருத்தியை நைட்ல தனியா விட்டு வந்தோமேன்னு கொஞ்சமாச்சும் இருக்கா உங்களுக்கு…” என்றாள் அவள்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹோட்டலில் சமையல் செய்பவர் அங்கு வந்தார். இவன் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பது பார்த்து புருவம் உயர்த்தினாலும் என்னவென்று கேட்கவில்லை அவர்.

 

ராகவ் அப்படி அனாவசியமாய் யாரிடமும் பேச மாட்டான் என்றறிவார் அவர். “ராகவா டிபன் ரெடி சாப்பிட வாப்பா…”

 

“அண்ணே என் வைப்…” என்று அவருக்கு ஜெயக்னாவை அறிமுகப்படுத்தியவன் “இவரு ராஜு அண்ணன், இங்க குக்கா இருக்கார்…” என்று மனைவிக்கும் சொன்னான்.

 

இருவரும் பரஸ்பரம் பார்த்து வணக்கம் சொல்லி புன்னகைத்துக் கொண்டனர்.

 

“நீ சாப்பிட்டியா??” என்றான் இப்போது அவளைப் பார்த்து.

 

அவள் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று தெரிந்தே தான் கேட்டான். இல்லையென்ற அவள் தலையாட்டலில் “ஒரு அரைமணி நேரம் கழிச்சு நாங்க வந்து சாப்பிடுறோம், நீங்க கொஞ்ச நேரம் இங்க பார்த்துக்கறீங்களா…” என்று வரவேற்ப்பை பார்த்தான்.

 

“நீங்க போங்க தம்பி நான் பார்த்துக்கறேன்…”

ராகவ் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்த அவனறைக்கு கூட்டிச் சென்றான்.

 

“இது என்ன இடம் இங்க எதுக்கு??”

 

“ஹ்ம்ம் இது நம்மோட ரூம்…” என்று அவன் சொல்ல தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

 

‘என்னது நம்ம ரூமா…’ என்று மனதிற்குள் சொன்னதாக நினைத்து சத்தமாகவே சொல்லிவிட்டாள்.

 

“பின்னே யார் ரூம்ன்னு சொல்லணும், கல்யாணத்துக்கு முன்னாடி இது என்னோட ரூம்… இப்போ நம்ம ரூம்ன்னு தானே சொல்லணும்” என்று அவள் முகம் போன போக்கை சுவாரசியமாய் ரசித்துக் கொண்டே சொன்னான்.

 

‘ஆமாவா… இனி அப்படித்தான் சொல்லணுமா…’ என்று எண்ணிக்கொண்டவள் ஒன்றும் சொல்லவில்லை அவனிடம்.

 

“அப்புறம் ஏதோ வெளிய பேசிட்டு இருந்தோமே… என்ன கேட்டே?? ஹான் நைட் உன்னை தனியா விட்டு வந்தேன்னு சொன்னேல…”

 

“நான் ஏன் கிளம்பி வந்தேன்னு உனக்கு தெரியாதா…” என்று அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி கேட்க பதில் சொல்லாமல் அவன் பார்வை பொறுக்காமல் விழி தாழ்த்தினாள்.

 

“என்ன பதிலே காணோம்??”

 

“நீங்க விதண்டாவாதம் பேசுறீங்க??” என்று அவனையே திருப்பினாள். பின் சட்டென்று பேச்சை மாற்றினாள், “இந்த ரூம் நல்லாயிருக்கே??” என்று.

 

“ஏன் மத்த ரூம் ரூம் நல்லாயில்லையா என்ன??”

 

“அன்னைக்கு புக் பண்ணியிருந்த ரூம் அவ்வளவு ஒண்ணும் நீட்டா இல்லையே??”

 

“அது கஸ்டமர்ஸ் தங்குற ரூம்… ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு மாதிரி வைச்சிருப்பாங்க… நாம தினமும் கிளீன் பண்ணிட்டு தான் இருக்கோம்…”

 

“அப்போ இந்த ரூம் மட்டும் எப்படி இவ்வளவு நல்லாயிருக்கு??”

 

“எனக்கு எப்பவும் என்னோட ரூம் கிளீனா இருக்கணும்… நான் சுத்தமா தான் வைச்சிருப்பேன், அது போல தினமும் இங்க சுத்தம் பண்ணச் சொல்லிருவேன்…”

 

“இது உங்க ரூம்… ஆனா அது கஸ்டமர்ஸ் தங்குற ரூம் அப்படி தானே…” என்ற அவள் குரலில் இருந்ததை உணர்ந்தவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை.

 

“இந்த லாட்ஜ் யாரோடது??”

 

“நம்மோடது…”

“அப்போ அதுவும் நம்மோட அறை மாதிரி தானே…”

 

“இந்த ரூம் எப்படியிருக்கோ அது போல மத்த ரூமையும் பராமரிக்கலாம்ல…”

 

அவள் சொல்வதும் சரிதானே என்று தான் தோணியது அவனுக்கு. “நான் இங்க இருக்க எல்லா ரூமும் பார்க்கலாமா??”

 

“கெஸ்ட் எல்லாம் தங்கியிருக்காங்க…”

 

“எல்லா ரூம்லயுமா??”

 

“இல்லை ஆனா ஒரு பத்து ரூம் புக் ஆகியிருக்கு. அஞ்சு தான் காலியாயிருக்கு…”

 

“நான் பார்க்கட்டுமா…”

 

“சரி வா…” என்றவன் அவளை காலியாயிருந்த அத்தனை அறைக்கும் கூட்டிச் சென்றான்.

 

இரண்டாம் மாடியில் இருந்த அறையை பார்த்துவிட்டு அவர்கள் கீழே இறங்க “பார்த்து முடிச்சாச்சு… என்ன தோணுது உனக்கு??”

 

“ஹ்ம்ம் நான் எதாச்சும் மாற்றம் செய்யலாமா??” என்று அனுமதி கேட்டாள் அவனிடம்.

 

“நாம் லாட்ஜ்ன்னு சொல்லிட்டு என்கிட்டே அனுமதி கேட்கறே??”

“இவ்வளவு நாள் நான் இதை பராமரிக்கலையே… உங்ககிட்ட கேட்காம எப்படி செய்ய முடியும்…” என்று அவனை திருப்பியவளை மெச்சுதலாய் பார்த்தான் ராகவ்.

 

“என்ன செய்ய நினைக்கிறே??”

 

“நீங்க இதை டெவலப் பண்ண என்ன செஞ்சீங்க??”

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது… அப்பா போனதுக்கு அப்புறம் இதை பொறுப்பெடுத்து நடத்த ஆரம்பிச்சேன்… அவர் என்கிட்ட சொன்னதெல்லாம் ஒண்ணு தான்…”

 

“இந்த இடத்துக்குன்னு ஒரு பேரு இருக்கு அதை காப்பாத்தணும்ன்னு… ஏன்னா ஒரு முறை இங்க அப்பாவுக்கே தெரியாம தப்பான ஒரு காரியம் நடந்திருச்சு”

 

“அதுனால கொஞ்சம் பேரு கெட்டுப்போச்சு அப்போ… அதை திரும்ப மீட்டு எடுக்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாங்க… அதை எப்பவும் சொல்லிட்டு இருப்பாங்க…”

 

“அந்த விஷயத்துல நான் எப்பவும் கொஞ்சம் கவனமா இருப்பேன்… அன்னைக்கு உன்கிட்ட கூட அப்படி தான் தப்பா பேசிட்டேன், நிஜமாவே ரொம்ப சாரி” என்றான் உணர்ந்து.

 

“நான் அதெல்லாம் கேட்கலை… நீங்க என்ன செஞ்சீங்க புதுசா இங்க…”

“புதுசாவா… ஹ்ம்ம்…” என்று யோசித்தவன் “இங்க முன்னாடி கேரளா சமையல் மட்டும் தான் இருந்துச்சு, தமிழ்நாட்டு சமையலும் இங்க கிடைக்குற மாதிரி செஞ்சேன்”

 

“அப்புறம் சுத்தம்… தினமும் எல்லா ரூமும் கிளீன் பண்ணுவாங்க… விரிப்புல இருந்து எல்லாமே தினமும் மாத்துவாங்க… அவ்வளவு தான்…”

 

“அப்போ புதுசா எதுவும் செய்யலையா…”

 

“எனக்கு இவ்வளவு தான் தெரியும்… மேற்கொண்டு நான் எதுவும் யோசிச்சதில்லை…”

 

“நான் இதுல கொஞ்சம் மாற்றம் செய்யலாம்ன்னு நினைக்கிறேன்… நீங்க என்ன சொல்றீங்க, அதுனால நமக்கு நல்ல பேரு கிடைக்கும்… நிறைய புது வாடிக்கையாளர்கள் கூட கிடைப்பாங்க…” என்றாள் கண்ணில் ஆர்வம் மின்ன.

 

அவளின் ஆர்வம் அவனுக்கு புரிந்தது ஆனால் இதெல்லாம் இவளுக்கு தேவையா என்றும் கொஞ்சம் யோசித்தான் அவன்.

 

“என்னாச்சு பிடிக்கலையா??”

 

“அப்படி இல்லை… உனக்கு ஏன் வீண் சிரமம்ன்னு…” இழுத்தான் அவன்.

 

“நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா??”

அவள் ஏதோ படித்திருக்கிறாள் என்ற அளவு மட்டுமே அவனுக்கு தெரியும் என்ன படித்திருக்கிறாள் என்று அவனுக்கு எப்படி தெரியும். அவளிடம் தெரியாது என்பதாய் தலையசைத்தான்.

 

“முறைக்காதே… எனக்கு எப்படி தெரிஞ்சிருக்க முடியும்… நீ சொன்னா தானே எனக்கு தெரியும்…”

 

“ஹ்ம்ம் டூர் மேனேஜ்மெண்ட் படிச்சிருக்கேன்… எங்க ஊர்ல நான் தனியா ஆபீஸ் வைச்சு மெயின்டெயின் பண்ணிட்டு இருந்தேன், அதெல்லாம் கூட தெரியாதுல உங்களுக்கு” என்று சொன்னவளின் குரலில் உனக்கு என்னைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

 

அவனுக்கு அவளைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவள் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

 

“ஓ!!” என்றான் அவன் ஒற்றைச்சொல்லாய்.

 

“என்ன ஓ??”

 

“வேறென்ன சொல்ல, எனக்கு அதைப்பத்தி எல்லாம் அவ்வளவு ஐடியா இல்லை… எனக்கு படிப்பு மேலேயே ஆர்வமில்லை… நான் காலேஜ் முத வருஷமே பாதியில விட்டேன்…”

 

“நான் இப்படி தான், என்கிட்ட படிப்பை பத்தி விஷயத்துல அதிகம் எதிர்பார்க்காதே” என்றான் அவன்.

 

அவளுக்கு தான் அவன் படிப்பை பற்றி தெரியுமே, தந்தை மாப்பிள்ளை பற்றி சொன்ன போது அவன் படிப்பை கேட்டுவிட்டு அதற்காக ஒரு பிடி சண்டை போட்டவள் தானே அவள்.

 

‘இப்படி மாப்பிள்ளைக்கு மேகாவை ஏன் கட்டிக்கொடுக்க வேண்டும்’ என்று அந்த திருமணப்பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து அதை தடுத்துக் கொண்டிருந்தவள் அவள் தானே.

 

இன்று அவளே அவனுக்கு மனையாள் ஆவாள் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை.

 

“காலேஜ் முத வருஷம் போயிருக்கீங்க தானே… ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்றீங்க…”

 

“தெரியாதுன்னு இல்லை ஆர்வமில்லை அவ்வளவு தான்…” என்று பேசிக்கொண்டே அவர்கள் அறைக்கு வந்திருந்தனர்.

 

“உன்னிஷ்டம் நீ என்ன செய்யணும்ன்னு நினைக்கறியோ செய்!!” என்றான் அவளின் ஆர்வம் உணர்ந்தவனாய்.

 

“நிஜமாவா!!” என்று கண்களை விரித்து கேட்டவளையே இமைக்காமல் பார்த்தவனின் தலை மட்டுமே ஆடியது.

 

“தேங்க்ஸ்!!” என்றாள் அதீத மகிழ்ச்சியில்.

 

“எங்க என்னோட கனவெல்லாம் பாதியில நின்னிடுமோன்னு நினைச்சேன்… இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…”

 

“உன் கனவு நிறைவேறினா எனக்கென்ன தருவ??” என்றான் மனதில் ஒருவித எதிர்பார்ப்புடன்.

 

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள், ‘என்ன எதிர்பார்க்குறான் இவன் என்று’. அவன் பார்வையில் குறும்பை ஒளித்து கண்கள் சிரிக்க நின்றிருந்தவன் தோற்றம் குறும்புக்கண்ணனை நினைவுப்படுத்துவதாய்!!

 

நானே என்னில்

காணாமல் போக

நானே உன்னில்

தொலைந்து போக

என் நிழலும் உன்னில்

கலந்து போக

நீ என்னில்

கரைவது எப்போது??