Advertisement

அத்தியாயம் – 11

 

“ஜெயா நீ பார்த்து எடு…” என்று வள்ளி மகளிடம் சொல்ல அவளோ வீட்டில் கட்டுவதற்கு என்று பத்து புடவைகளும், கொஞ்சம் வெளியில் கட்டவென்று ஐந்து சேலைகள் என்று மொத்தமே சில ஆயிரத்துக்குள் எடுத்து முடித்திருந்தாள்.

 

அதற்குள் சந்தியாவின் குடும்பத்திற்கு உடைகள் எடுத்து வந்து சேர்ந்தனர் மற்றவர்கள். “அவ்வளவு தானே கிளம்பலாம்…” என்று ஜெயக்னா சொல்ல“இவ்வளோ தானாம்மா எடுத்தே??” என்று கேட்டார் மீனாட்சி.

 

“ஹ்ம்ம் போதும் அத்தை…” என்று அவள் சொல்ல மீனாட்சி மகனை பார்த்தார்.

 

“நாங்க எதுவும் உனக்கு எடுக்கலையே…”

 

“இதே போதும் அத்தை… ஏற்கனவே என்கிட்ட கொஞ்சம் சேலை இருக்கு…” என்று மறுத்தாள்.

 

“ராகவா…” என்று மகனை பார்க்க “வா…” என்று அவள் கைப்பற்றி டிசைனர் புடவைகள் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றான்.

 

அவன் அன்னை அவனை வரச்சொல்லி போன் செய்ததுமே எப்படியும் பத்தாயிரத்திற்கு மேல் செலவாகும் என்று எண்ணி சலித்துக் கொண்டே தான் வந்தான் அவன்.

 

அவனுக்கு அனாவசிய செலவுகள் எப்போதும் பிடிப்பதில்லை.சிக்கன பேர்வழி அவன், தேவைக்கு மட்டுமே செலவழிப்பவன் அவன்.

 

சந்தியாவின் குடும்பத்திற்கு உடைகள் எடுக்க வேண்டும் என்று அன்னை சொன்னதும் “இப்போ எதுக்கும்மா, கல்யாணத்துக்கு தான் எல்லாருக்கும் எடுத்தோம்ல”

 

“அவ இங்க வந்து போனா நாம எடுக்கறது தானே ராகவா…”

 

“கல்யாணத்துக்கு எடுக்கலைன்னா பரவாயில்லை… இப்போ இது அவசியமா…”

 

“இல்லைப்பா ஜெயாக்கும் எடுக்கணும்… நாம அவளுக்குன்னு எதுவும் எடுக்கலை”

 

அன்னை கடைசியாய் சொன்ன காரணம் கொஞ்சம் மனதிற்கு சரியாய்பட “ஹ்ம்ம் சரி வர்றேன்” என்று சொல்லி தான் வந்திருந்தான்.

 

இங்கு வந்து பார்க்க அவன் மனைவி சிக்கனமாய் வாங்கி இருந்தது கண்டு ஆச்சரியமாய் அவளை தான் பார்த்திருந்தான்.

 

சந்தியா எப்போது உடை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் சில ஆயிரங்களை செலவழிக்க வைத்துவிடுவாள்.

 

அவளுக்கு மட்டுமே நான்கைந்து எடுத்துவிடுவாள். பின்பு குழந்தைகளுக்கு என்று சில உடைகள் என்று அவள் ஒவ்வொரு முறையும் தம்பியின் காசை கொஞ்சம் கரைத்து செல்வாள் எப்போதும்.

 

சந்தியாவின் கணவன் மட்டும் இதில் விதிவிலக்கு. தனக்கென்று எதுவும் வேண்டாமென்று விடுவான் எப்போதும்.

 

சந்தியாவிற்குஉடைகள் மீது விருப்பம் ஒரு பக்கம் என்றாலும், தன் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு செல்லும் ஒவ்வொன்றுமே சிறப்பு தான்.அதை எப்போதும் அவள் விரும்புவாள்.

 

உடன்பிறந்தவளின் எண்ணம் கொஞ்சம் அறிந்தவன் என்பதாலும் தந்தை இல்லாத இடத்தில் தான் உடன்பிறந்தவனாய் மட்டுமல்லாது தந்தையாயும் நடக்க வேண்டும் என்பதாலும் ஒன்றும் சொல்ல மாட்டான் ராகவ்.

 

ஆனால் அவன் மனைவி அவளின் பெற்றவர்களுக்கே அதிகம் செலவு வைக்காமல் உடைகளை தேர்வு செய்திருந்த விதம் அவனை கவர்ந்தது.

 

அதனால் தான் அன்னை சொல்லவும் அவளை அழைத்துக் கொண்டு மேலும் சில உடைகள் வாங்க தனியே கூட்டிச் சென்றான்.

 

“கையை விடுங்க, எனக்கு இப்போ எடுத்ததே போதும்…” என்றாள்.

“அது உங்க வீட்டில எடுத்தது… இது நம்ம வீட்டில எடுக்கறது” என்று சொல்லி அவள் மேலும் சில சேலைகள் எடுத்த பின்னே தான் விட்டான்.

 

எல்லாம் முடிந்ததும் ராகவ் அங்கிருந்தே மூணாருக்கு கிளம்பிவிட்டான். சண்முகம் வேறு அவன் மாமியார்வீட்டிற்கு சென்றிருப்பதால் அவனின் இருப்பு அங்கு அவசியமாக அவன் சென்றுவிட்டிருந்தான்.

 

சந்தியா அந்த வாரம் ஊருக்கு கிளம்புவதால் அந்த சனிக்கிழமை வீட்டிற்கு வந்திருந்தான் அவன். மறுநாள்ஞாயிறு அன்று சந்தியா குடும்பத்தினர் கிளம்பிவிட அவனும் மூணாருக்கு கிளம்பிவிட்டான்.

 

மூணாருக்கு சென்றடைந்த சில மணி நேரத்தில் அன்னைக்கு அழைத்துவிட்டிருந்தான் அவன்.

 

‘என்ன இவன் இந்த நேரத்துல போன் பண்ணுறான்…’ என்று எண்ணிக்கொண்டே போனை ஆன் செய்து காதில் வைத்தார் மீனாட்சி.

 

“சொல்லு ராகவ்…”

 

“அம்மா அவ இருக்காளா??”

 

“யாரை கேட்குறே ராகவா??”

 

“உங்க மருமக…”

 

“என்னாச்சு?? அவளுக்கு போன் பண்ண வேண்டியது தானே… அவ நம்பர் இல்லையா உன்கிட்ட”

 

‘அவ நம்பர் எங்க இருக்கு என்கிட்டே’ என்று எண்ணிக்கொண்டே “கொஞ்சம் அவகிட்ட பேசணும்மா அவசரம்…” என்ற அவன் குரலில் மேற்கொண்டு எதையும் கிளறாமல் மருமகளின் அறைக்கதவை தட்டினார் அவர்.

 

“இதோ வர்றேன் அத்தை…” என்றவள் கதவை திறக்கவும் “ராகவ் பேசுறான்ம்மா…” என்று கைபேசியை அவளிடம் கொடுத்தார்.

 

யோசனையாக அதை வாங்கி காதில் வைத்தவள் “ஹ்ம்ம்…”

 

“அம்மா போன்ல என் நம்பர் இருக்கும், அதை பார்த்து உன் நம்பர்ல இருந்து உடனே எனக்கு கூப்பிடு” என்றான்.

 

“எதுக்கு??”

 

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…”

 

“அப்படி என்ன தலை போற அவசரம், எதுவா இருந்தாலும் இப்போவே சொல்லுங்க…”

 

“ஹ்ம்ம் உங்க அக்கா பத்தி பேசணும், இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு உன்கிட்ட சொல்லணும்… எனக்கு உடனே கூப்பிடறியா…” என்றுவிட்டு வைத்துவிட்டான் அவன்.

 

‘மேக்னா பத்தியா… அவ தான் எங்கயோ ஓடிப்போயிட்டாளே… அவளை பத்தி எனக்கெதுக்கு??’ என்று அவள் மனம் கேட்டது.

 

மாமியாரின் கைபேசியில் இருந்த அவன் எண்ணை தன் கைபேசியில் அழுத்தினாள் இப்போது.

 

முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவன் “ஹலோ நீ தானே…”

 

“ஹ்ம்ம்சொல்லுங்க”

 

“உங்க அக்காவும் அவங்க கணவரும் நம்ம லாட்ஜ்ல தான் தங்கியிருக்காங்க…” என்று அவன் சொல்ல முதலில் அசுவாரசியமாய் கேட்டவளுக்கு அவன் சொல்லி முடிக்கவும் தூக்கி வாரிப்போட்டது.

 

‘எவ்வளவு கொழுப்பு அவளுக்கு, செய்வதெல்லாம் செய்துவிட்டு அதே லாட்ஜில் அறை எடுத்து தங்க…’ என்ற ஆத்திரம் எழுந்தது ஜெயக்னாவிற்கு.

 

‘இவளை எல்லாம் சும்மா விடக்கூடாது’ என்று எண்ணிக்கொண்டு “எதுக்காக வந்திருக்காங்க??” என்றுகேட்டாள்.

 

“ஹனிமூன் கொண்டாட”

 

“என்ன??” என்று அதிர்ச்சியாய் கேட்டவளுக்கு உடன்பிறந்தவளை ஒருவழியாக்கிடும் வேகம்.

 

“எனக்கு அவளை பார்க்கணும்…”

 

“எதுக்கு??”

 

“அவகிட்ட பேசணும் எனக்கு??” என்று பல்லை கடித்து பேசுவதிலேயே அவனுக்கு புரிந்து போனது அவள் வில்லங்கமாய் ஏதோ செய்யக் காத்திருக்கிறாள் என்று.

 

“மாமாக்கு கூட நான் எதுவும் சொல்லலை, உன்கிட்ட சொல்லணும்ன்னு தான் கூப்பிட்டேன்.உனக்கு தெரிஞ்சிருக்கணும்ன்னு தான் உடனே சொன்னேன்…”

 

“அவங்க இது நம்ம லாட்ஜ்ன்னு தெரிஞ்சு தான் தங்கினாங்களா இல்லை தெரியாம தங்கினாங்களான்னு எனக்கு தெரியலை…”

 

“சனிக்கிழமை தான் இங்க வந்திருப்பாங்க போல, நான் அங்க காலையிலவே வந்திட்டதால எனக்கு உடனே தெரியாம போச்சு… இப்போ தான் அவங்களை நேர்ல பார்த்தேன்”

 

அவன் சொன்னதை கேட்ட ஜெயாவுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

 

‘இவனால் எப்படி இவ்வளவு சாதாரணமாய் என்னிடம் பேச முடிகிறது. அவளை ஒரு வாங்கு வாங்காமல் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறானே’ என்று தோன்றாமலில்லை அவளுக்கு.

 

“நான் இப்போ அவளை என்ன பண்ணிடுவேன்னு நினைக்கறீங்க… இதுக்கு மேல நடக்க என்ன இருக்கு… நான் அப்பாகிட்ட எதுவும் சொல்லலை… ஆனா எனக்கு அவளை பார்க்கணும்”

 

“நான் உடனே கிளம்பி வர்றேன், அவளை எங்கயும் போக விடாம பார்த்துக்கோங்க…” என்றாள்.

 

‘இதேதடா வம்பாகி போனதே’ என்று தான் இருந்தது அவனுக்கு.

 

“தேவையில்லாத பிரச்சனை எதுக்கு??அவசியம் நீ வரணுமா…”

 

“ஆமாம்” என்றாள் அவன் மனைவி அழுத்தந்திருத்தமாய்.

 

“நாளைக்குகாலையில வேணா கிளம்பு, இப்போஅம்மாகிட்ட போனை கொடு…” என்று அவன் சொல்லவும் தன் மாமியாரிடம் போன் கொடுத்தாள் அவள்.

 

“சொல்லு ராகவா…”

 

“அம்மா ஜெயா இங்க வரச்சொல்லி இருக்கேன்… அவநாளைக்கு காலையில கிளம்பட்டும், என்னவிஷயம்ன்னு அப்புறம் உங்களுக்கு போன் பண்றேன்” என்றான் அன்னையிடம்.

 

“ராகவா அதென்ன அவளை தனியா வரச் சொல்றது… நீயே வந்து கூட்டிட்டு போ, அங்க இருக்க நம்ம வீட்டை ரெடி பண்ணி வைக்க சொல்லு…”

 

“அவளை தனியா எல்லாம் இங்க இருந்து அனுப்ப முடியாது…” என்று திட்டவட்டமாய் மறுத்தார் அவன் அன்னை.

 

“அம்மா… நான் இப்போ தான்மா இங்க வந்தேன், மறுபடியும் வண்டி ஓட்டிட்டு வரணுமா… புரிஞ்சுக்கோங்கம்மா…”

 

“நீ தானே உன் பொண்டாட்டியை வரச்சொன்னே, அப்போ நீயே வந்து கூட்டிட்டு போ…” என்றார் அவரும் விடாமல்.

 

ராகவ் நேரத்தை பார்க்க மணி இப்போதே பத்தரை இனி கிளம்பி அய்யோவென்றிருந்தது அவனுக்கு. இவளுக்கு நாளையே போன் செய்திருக்கலாம் போல என்று தான் எண்ணத் தோன்றியது அவனுக்கு.

 

“சரிம்மா இப்போ கிளம்பி வர்றேன்” என்றான்.

 

“நாளைக்கு காலையில வாயேன்டா, என்ன அவசரம் இப்போ…”

 

“நான் வந்து பேசறேன்ம்மா…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

“இப்போ வர்றேன்னு சொன்னான்ம்மா… நாளைக்குஉன்னை அவனோட கூட்டிட்டு போறானாம்…”

 

“நீ போய் உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சுக்கோ…” என்றார் அவர்.

 

“அத்தை நான் போயிட்டு உடனே வந்திடறேன் அத்தை… அதுக்கு எதுக்கு டிரஸ் எல்லாம்…” என்று இழுத்தாள் அவள்.

 

“ஜெயா நீ இங்க அவன் அங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க… எனக்கு தான் அந்த குளிர் ஒத்துக்கலை இங்க இருக்கேன்…”

 

“நீ அவனோட இரும்மா, அங்க நமக்கு சொந்த வீடு இருக்கு… நீயும் அவனும் ஒண்ணா இருக்கறது தான் சரி, நீ போய் பேக் பண்ணு…” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் அவர்.

 

‘கடவுளே இதில் இப்படி ஒன்று இருக்கிறதா… அவனுடன் நான் தனியாகவா… என்னாகப் போகிறதோ…’ என்று எண்ணிக்கொண்டு தன் உடைமைகளை எடுத்து வைத்தாள்.

 

இரவு தாமதமாய் வீடு வந்து சேர்ந்தவன் அன்னையிடம் பேசிவிட்டு அவனறைக்கு வந்தான். ஜெயக்னா உறங்காமல் விழித்திருந்தாள்.

க்கும் என்று அவன் தொண்டையை செறும ஏதோ கவனமாயிருந்தவள் அவனை கண்டதும் அறையில் இருந்து வெளியேறப் போனாள்.

 

“இப்போ எங்கே போறே??” என்று அவள் கைப்பிடித்தான்.

“நீங்க படுக்க வேணாமா??”

 

“ஆமாம் அதுக்காக…” இழுத்தான் அவன்.

 

“நான் அந்த ரூம்ல படுக்க போறேன்…”

 

“எத்தனை நாளைக்கு??” என்றான் அவள் கையை விடாமல்.

 

“எப்போமே…” என்று சொல்லும் போதே அது அபத்தமாகப்பட்டது அவளுக்கு.

 

“இப்போ அம்மா எதுக்கு என்னை இங்க வரச்சொன்னாங்கன்னு தெரியுமா…”

 

அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். “நீ தனியா வரக்கூடாதாம், அதுமட்டுமில்லாம உன்னை அங்கவே கூட்டிட்டு போகணும்ன்னு சொன்னாங்க”

 

“இவ்வளவு நேரம் அதான் பேசிட்டு இருந்தாங்க…உடனேஇதெல்லாம் ஏத்துக்கறது கஷ்டம் தான், ஆனா நாமும் கொஞ்சம் அதுக்கு ஒத்துழைக்கணும்…”

 

“இனிமே நீ தனியா நான் தனியா படுக்கறது எல்லாம் வேணாம்… என்னை நம்பி இங்க படுக்கலாம், அது போல உன்னை நம்பி நானும் இங்க படுக்கறேன்… படுக்கலாம் தானே…” என்று வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க ஜெயக்னா அவனை முறைத்தாள்.

 

மறுநாள் அவளை கூட்டிக்கொண்டு பாட்டியிடமும் அன்னையிடமும் சொல்லிக்கொண்டு காலையிலேயே கிளம்பிவிட்டான் அவன்.

 

ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் சொல்லி அவன் வீட்டையும் சுத்தப்படுத்தி வைக்கச் சொல்லியிருந்தான். வாரம் ஒரு முறை சுத்தம் செய்யும் வீடு என்பதால் அதிக வேலையில்லை அங்கு.

 

அடுத்த சில மணி நேரத்தில் மூணாருக்கு வந்து சேர்ந்தனர் அவர்கள். முதலில் அவளை அவர்களின் வீட்டிற்கு தான் அழைத்துச் சென்றிருந்தான்.

 

“இது தான் நம்ம வீடு…”

 

வீட்டிற்கு சென்று தன் உடைமைகளை வைத்ததும் அவள் முதலில் சொன்னது “மேகாவை பார்க்கணும்…”

 

“மேகா…”

 

“எங்கக்கா…”

 

“இவ்வளவு காலையில அவங்களை தொல்லை பண்ணணுமா…”

“என்னது ஒன்பது மணி அதிகாலையா??”

 

அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை அவன், அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தவன் யாருக்கோ அழைத்தான்.

 

“யாருக்கு போன் பண்ணுறீங்க??”

 

“உங்க மாமாக்கு…”

 

“மாமாவா??”

 

“உங்க அக்கா வீட்டுக்காரர் மாமா தானே உனக்கு…”

 

“அப்படி யாரும் எனக்கில்லை… அக்காவே இல்லை இதுல மாமா எங்க இருந்து…” என்றவளின் பார்வையில் அவ்வளவு உஷ்ணம்.

 

“அவங்களுக்கு எதுக்கு போன்??”

 

“பின்னே லாட்ஜ் வைச்சு நீ அவங்ககிட்ட சண்டை போடவா… லாட்ஜ்க்கு வர்றவன் போறவன் எல்லாம் என்ன நினைப்பான்…” என்ற அவன் கூற்று நியாயமாய் படவே வாயை மூடிக் கொண்டாள்.

 

“இங்க வர சொல்லப் போறீங்களா…”

 

“இல்லை வெளிய வேற இடத்துக்கு…”

 

லெட்ஜரில் இருந்து எடுத்த மேக்னாவின் கணவனின் எண்ணுக்கு அழுத்தினான் ராகவ். அடுத்தஅரை மணி நேரத்தில் அவன் சொன்ன இடத்துக்கு வருவதாக மேக்னாவின் கணவன் சொல்ல இரு தம்பதிகளும் அங்கு சென்று சேர்ந்திருந்தனர்…

 

விலகிப் போனாலும்

விலக்கிப் போனாலும்

விலகாத உறவிதுவே!!

 

விளக்கிப் போனாலும்

விளங்கப் படித்தாலும்

விளங்காத உறவிதுவே!!

நம் உறவதுவே!!

Advertisement