Advertisement

அத்தியாயம் – 3

 

புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

 

புவனா இளையராஜாவின் இசைமழையில் நனைந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எப்போதும் எப்எம் கேட்பது தான் வேலையே.

 

காலையிலேயே அவளுக்கு மிகப்பிடித்த பாடலை கேட்டதில் மனம் மகிழ்ச்சியில் ததும்பிக் கொண்டிருந்தது. வெகு நேரமாக அன்னை அழைக்கும் குரல் கேட்டும் அவருக்கு பதில் கொடுக்காமல் பாடலிலேயே முழ்கி இருந்தாள் அவள்.

 

“புவனா மணியாகலையா உனக்கு?? பாட்டு கேட்டுக்கிட்டே இருந்தா உனக்கு உலகமே மறந்திடுமே??” என்றவாறே வந்து நின்றார் அவள் அன்னை கனியமுது.

 

“ம்… ம்… ம்மா கிளம்பிட்டே இருக்கேன், ஐஞ்சே நிமிஷம்மா… ரொம்ப பிடிச்ச பாட்டு ஓடுதும்மா, இதோ கிளம்பிட்டேன்” என்றவள் தன் கூந்தலை பின்னி கிளிப் அணிந்திருந்தாள் இப்போது.

 

“பா…பா… பாலாஜி எங்கம்மா??” என்றவாறே அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

 

“அவன் அப்போவே ஸ்கூல்க்கு கிளம்பிட்டான்…”

 

“அப்பா??”

 

“அப்பாவும் தான் அவன்கூடவே கிளம்பிட்டார் ஸ்கூல்க்கு… வாத்தியார் லேட்டாவா போவாங்க…” என்றார் அவள் அன்னை கனியமுது.

 

“ச… சரிம்மா நானும் கிளம்பிட்டேன்…” என்று தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டவள் வீட்டை விட்டு வெளியில் வர வெயில் மிக மந்தமாக இருந்தது.

 

எப்போதும் மழை வரலாம் என்பது போன்றான வெயில். மீண்டும் வீட்டிற்கு சென்று குடை எடுத்து வரலாமா என்ற யோசனையை கையில் தென்பட்ட கடிகார நேரம் புறந்தள்ள சென்றுவிடலாம் என்ற மிதப்புடன் பேருந்து நிலையம் நோக்கி நடைப்போட்டாள்.

 

மழைக்கு அவளை அதிகம் பிடித்ததுவோ அன்றி பூமியை முத்தமிட பிடித்ததுவோ அவள் கொஞ்சம் நடக்கவுமே சடசடவென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது,

 

இன்று புது வேலைக்கு இன்டர்வியூ செல்லவென கிளம்பியிருந்தவள் புது உடை எல்லாம் அணிந்து கிளம்பியிருக்க இப்போது மழையில் கொஞ்சம் நனைந்திருந்தாள்.

வேகமாய் கோவைப்புதூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து மழை நீர் மேலே விழாதவாறு ஓரிடத்தில் சென்று நின்றுக்கொண்டாள்.

 

அவள் செல்ல வேண்டியது கோவை அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலுக்கு.

 

அங்கு தான் அவளுக்கு இன்டர்வியூ நடக்க இருக்கிறது. இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளாக அவள் அங்கு இருக்க வேண்டும்.

 

ஆனால் பேருந்து இன்னமும் வந்தபாடில்லை. அருகில் நின்றிருந்த ஒருவரிடம் கேட்க வேண்டி “சா… சா… சார்…” என்று அவள் சொல்ல அவனோ இவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான்.

 

அதற்கு மேல் அவனிடத்தில் எதுவும் கேட்க அவளுக்கு தோன்றவில்லை. பேசாமல் பேருந்து நிலையத்தில் இருக்கும் அந்த சின்ன பூத்திலேயே சென்று கேட்டுவிட வேண்டியது தான் என்று மெதுவாய் நகர்ந்து அங்கு சென்றாள்.

 

“சா… சார் உக்கடம் பஸ் எப்போ வ… வரும்…” என்றிருந்தாள். அவர் என்ன எரிச்சலில் இருந்தாரோ “என்னம்மா கிண்டல் பண்றியா?? நாங்களே பஸ் ரொம்ப நேரமா வரலைன்னு பார்த்திட்டு இருக்கோம்”

 

“இதுல நீ வேற வந்து கிண்டல் பண்ணிட்டு இருக்கியா…” என்று வெடுக்கென்று அவர் கேட்டதில் வாயை மூடிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

சிறுவயதில் அவளுக்கு வெகு நாட்களாய் பேச்சு வராமல் இருந்தது. நான்கு வயதில் தான் அவள் கொஞ்சம் பேசவே ஆரம்பித்தாள்.

 

பேச்சும் சமயத்தில் அவளுக்கு திக்கி திக்கியே தான் வரும். பேச ஆரம்பித்துவிட்டால் தொய்விருக்காது. பதட்டம் கொள்ளும் வேளையில் சற்று அதிகமாய் திக்க ஆரம்பிக்கும்.

 

சில வேளைகளில் ஆரம்பம் மட்டுமே தகராறாய் இருந்தது அவளுக்கு. வெளியிடத்தில் அதனால் நிறைய சங்கடம் அனுபவித்திருக்கிறாள்.

 

திரும்பி வந்து பேருந்து நிலையத்தில் ஒதுங்கி நின்றிருந்தவள் மீண்டும் அருகில் நின்றிருந்த ஒருவரிடம் கேட்க எண்ணி “சா… சார் ப… பஸ் எப்… எப்போ வரும்??” என்றாள்.

 

அவரோ இவளை ஏற இறங்க இளக்காரமாய் பார்த்துவிட்டு அப்புறம் நகரவும் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

 

அவளுக்கு பதட்டம் வேறு சூழ்ந்துக் கொண்டது. கடவுளே இன்டர்வியூக்கே தாமதமாய் சென்றால் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் வேறு. முகம் அவளை அப்பட்டமாய் காட்டியது.

அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் அவளருகே வந்திருந்தான் இப்போது. “மழையினால பஸ் கொஞ்ச நேரமா இல்லை… எப்படியும் அடுத்த பஸ் வர்றதுக்கு ஒரு பத்து நிமிஷம் ஆகும்ன்னு சொன்னாங்க” என்று அவள் கேளாமலே பதில் சொல்ல அவனை நன்றியுடன் பார்த்தாள்.

 

“ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே??” என்றுவிட்டு நிறுத்தினான்.

 

என்னவென்று பார்த்தாள் அவனை. “எதுக்கு டென்ஷனா இருக்கீங்க??” என்றான்.

 

“இல்லை இன்னைக்கு எனக்கு இன்டர்வியூ இருக்கு… டைம் ஆகிட்டு இருக்கு, மழை வேற பெய்யுது… அதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு…” என்றவளின் பேச்சு இப்போது திக்கவில்லை.

 

இயல்பாகி இருக்கவே பேச்சு தடையில்லாமல் வந்தது. “எதுக்காக பதட்டப்படணும். ரிலாக்ஸ்டா இருங்க, ஒரு வேளை நீங்க போற இண்டர்வ்யூ இன்னைக்கு லேட்டா கூட தொடங்கலாம்… சோ எப்பவும் எதுக்கும் டென்ஷன் ஆகக்கூடாது…”

 

“எல்லாத்தையும் பாசிட்டிவாவே எடுத்துக்கோங்க… எது நடந்தாலும் அதுல இருக்கற நன்மையை மட்டும் தேடுங்க…” என்று அவளுக்கு நீளமாய் சொல்ல அவள் முகத்திலும் லேசாய் ஒரு தெளிவு.

 

அதை பார்த்தும் பார்க்காமல் இருந்தவன் “கோயம்புத்தூர் தானே போறீங்க… இன்டர்வியூ எங்க??” என்றான்.

 

தான் கேட்டது அதிகப்படி என்று அவனுக்கே தெரியும், இருந்தும் ஏதோவொரு ஆர்வம் கேட்டுவிட்டான். அவளோ அது “ஹோட்டல் ரெசிடென்சில” என்றுவிட்டு சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

இதெல்லாம் ஏன் இவனிடம் சொல்கிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டது அவளுக்கு. ‘அவன் பேசினால் பதிலுக்கு நீயும் எல்லாம் உளறிவிடுவாயா’ என்று தன் தலையில் குட்டிக்கொண்டவள் அவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் சற்று தள்ளி நகர்ந்து சென்றிருந்தாள்.

 

பேருந்து அவள் பொறுமையை சோதித்து மேலும் பதினைந்து நிமிடத்தை விழுங்கியே வந்து சேர்ந்தது. அவசரமாய் அவள் அதில் ஏறி சன்னல் இருக்கை ஒன்றை பிடித்து அமர்ந்திருந்தாள் இப்போது. அவனும் அதே பேருந்தில் தான் ஏறியிருந்தான். அவள் தான் அவனை கவனிக்கவில்லை.

 

காதில் ஹெட் செட் எடுத்து மாட்டியவளின் தினசரி பொழுதுபோக்கு பண்பலைவரிசை கேட்பதே. அவளுக்கு இது போல ஆர்ஜேவாகவா அல்லது வீஜேவாகவே ஆகவேண்டும் என்பதே ஆசை.

 

இன்றைய நேர்முகத்தேர்வு கூட ஒரு ஆர்ஜேவுக்கானது தான். கோவையில் புதிதாய் தொடங்கியிருந்த ஒரு பிரபலமான பண்பலைவரிசையின் ஆர்ஜேவுக்கான நேர்முகத்தேர்வு அந்த ஹோட்டலில் தான் நடந்துக் கொண்டிருந்தது.

 

அதற்காய் தான் அவள் கிளம்பியிருந்தாள். அவள் மாட்டியிருந்த ஹெட்செட்டின் வழியே அவளுக்கு மிகப்பிடித்த ஆர்ஜேவின் குரல் எப்போதும் போல் அவளை ஈர்த்தது.

 

உன்னிப்பாய் கேட்க ஆரம்பித்தாள் அந்த பண்பலையை. பேசுபவரின் ஒவ்வொரு வார்த்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள். எப்படி பேசுகிறார்கள், கேள்வி கேட்பவருக்கு எப்படி மறுமொழி சொல்கிறார்கள் என்பதை தீவிரமாய் கவனித்தாள்.

 

ஒருவாறு உக்கடம் பேருந்து நிலையம் வந்து இறங்கியவள் அங்கிருந்து வேறு பேருந்துக்கு மாறினாள் அந்த ஹோட்டல் செல்வதற்கு.

 

அப்போதும் கூட அவள் அவனை கவனித்திருக்கவில்லை. அவள் அந்த ஹோட்டல் செல்லும் நிறுத்தத்தில் இறங்கவும் மீண்டும் மழை பிடித்துக்கொண்டது.

 

வேகமாய் ஓடினால் கொஞ்சம் தான் நனைவோம் என்றெண்ணி பேருந்தில் இருந்து இறங்கியவள் சற்று ஓட்டமும் நடையுமாய் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்திருக்க அதற்குள் அவள் சற்று நன்றாகவே நனைந்து போனாள்.

 

‘கடவுளே!! இன்னைக்கு ஏன் என்னை இப்படி சோதிக்கறே?? நனைஞ்சுட்டனே என்ன செய்யப் போறேன்…’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் அவள்.

 

நம் நாயகனும் பின்னோடே வந்திருந்தான். ஆனால் அவன் வேறு வழியில் ஹோட்டலுக்குள் நுழைந்திருந்தான்.

 

அவன் அந்த ஹோட்டலில் தான் தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான். அவர்களுக்கு பிரத்யேக வழி உண்டென்பதால் அவ்வழியே வந்திருந்தான்.

 

நேரே வரவேற்பறைக்கு சென்றவன் “சாம்…” என்றிருந்தான்.

 

“எஸ் தனுஷ்…”

 

“அங்க ஒருத்தங்க வர்றாங்கல, அவங்க கொஞ்சம் நனைஞ்சுட்டாங்க… கொஞ்சம் பார்த்து ஹெல்ப் பண்ணுடா…” என்றவனை வித்தியாசமாய் பார்த்தான் அங்கிருந்தவன்.

 

ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை அவனிடத்தில். “எந்த பொண்ணு?? அந்த நீல கலர் டிரஸ் போட்டிருக்கே அந்த பொண்ணா??”

 

“அவங்களை பார்த்தா நனைஞ்ச மாதிரியா இருக்கு… அவங்க பின்னாடி வர்ற லெமன் எல்லோ சுடி…”

 

“என்னடா சொல்றே?? அந்த பொண்ணா?? கொஞ்சம் சுமாரா தான் இருக்கா, உன் டேஸ்ட் எப்படியோ இருக்கும்ன்னு நினைச்சேன்…” என்றவனை தனுஷ் முறைத்திருந்தான்.

 

“எப்பவும் அழகை முகத்தில தேடாத சரியா” என்று அவன் சொல்லும் போதே இடைமறித்தான் அந்த சாம் என்பவன்.

“அப்போ அழகை வேற எப்படி தேடணும்??” என்று குதர்க்கமாய் அவன் கேட்டு வைக்க அவன் முதுகிலேயே ஓங்கி ஒன்று வைத்தான் தனுஷ்.

 

“உன் புத்தியை கொஞ்சம் அடக்கி வை… அழகு அகத்தில தான் இருக்கணும், அதை முகத்திலே தேடாதே…” என்று விளக்கி அவன் நகர்ந்தான்.

 

“எக்ஸ்க்யூஸ் மீ…” என்று அதற்குள் அங்கு வந்திருந்தாள் புவனா.

 

“எஸ் ப்ளீஸ்…”

 

“இங்க பண்பலைவரிசையோட இண்டர்வ்யூ நடக்குதே அது எந்த ப்ளோர்ல??”

 

“மினி மீட்டிங் ஹால்ல நடக்குது… இண்டர்வ்யூ இன்னும் தொடங்கலைன்னு நினைக்கிறேன்… பிகாஸ் ஆப் ரெயின்…”

 

“ஓ!! ரொம்ப நன்றி…” என்றவள் நகரப் போக “ஒரு நிமிஷம்…” என்றான் அவன்.

 

“சொல்லுங்க…”

 

“நனைஞ்சு வந்திருக்கீங்க… கொஞ்சம் ட்ரை பண்ணிட்டு போங்க…” என்றவன் “காமினி ப்ளீஸ் ஹெல்ப் ஹர்…” என்று அருகில் நின்றிருந்த பெண்ணிடம் ஏதோ சொன்னான்.

 

“இட்ஸ் ஓகே… ஒண்ணும் பிரச்சனையில்லை…” என்று நாசூக்காய் மறுத்தாள் புவனா.

 

“நீங்க இண்டர்வ்யூ போறேன்னு சொல்றீங்க… இப்படியேவா போக முடியும்… ஒரு அஞ்சு நிமிஷம் தானே கொஞ்சம் ட்ரை பண்ணிட்டு போங்க… உங்க இண்டர்வ்யூ ஆரம்பிக்க இன்னும் அரைமணி நேரம் இருக்கு…” என்றான் அவன்.

 

அவனிடம் ஒரு புன்னகையுடன் “நன்றி…” என்றாள்.

 

அந்த காமினி என்பவள் அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள்.

ஒரு துவாலை ஒன்றும் அவளிடம் நீட்டப்பட சத்தியமாய் புவனாவிற்கு அந்த கவனிப்பு அதிகப்படி என்றே தோன்றியது.

 

‘இப்படியெல்லாம் கூட செய்வார்களா என்ன…’ என்ற எண்ணம் அவளுக்கு எழாமலில்லை. இதெல்லாம் தனுஷ் சொன்னதில் என்பது அவளறியவில்லை.

எப்போதும் அதிகப்படி பேசாத தனுஷ் தானாய் வந்து கேட்ட சின்ன உதவி இதுவென்பதால் தான் சாம் மறுக்காமல் அதை செய்தான்.

 

பத்து நிமிடம் கழித்து அறையில் இருந்து வெளியில் வந்தவள் சாம்க்கும் அப்பெண் காமினிக்கும் நன்றியுரைத்து மூன்றாம் தளம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

 

அவள் அப்புறம் நகர்ந்ததும் ஹோட்டல் கிச்சன்னுக்கு போன் செய்து தனுஷை அழைத்தான் சாம். “சொல்லு சாம்…”

 

“உன் ஆளை பத்திரமா அனுப்பி வைச்சாச்சுப்பா போதுமா…”

 

“டேய் அவ என் ஆளுன்னு நான் எப்போ சொன்னேன்?? ஓகே எனிவே தேங்க்ஸ்…”

 

“பின்னே அவ உன் ஆளு இல்லாம தான் ஸ்பெஷலா கவனிக்க சொன்னியா என்ன??”

 

“ஐ நோ ஹர் அவ்வளோ தான்… ஓகே எனக்கு வேலை இருக்கு…” என்று போனை கத்தரித்து வைத்தும் விட்டான் அவன்.

 

பின் கை தன் போக்கில் அன்றைய மெனுவில் முழ்க ஆரம்பிக்க காய்கறிகளை வெட்டவாரம்பித்தான்.

 

மூன்றாம் தளத்தில் தான் அவளுக்கு நேர்முகத்தேர்வு என்பதை அவனறிவான். அங்கிருப்பவர்களுக்காய் ஜூஸ் தயாரித்துக் கொண்டிருந்தான் இப்போது அவன்.

 

மதிய உணவும் அவர்களுக்காய் அங்கு தயாராகிக் கொண்டிருந்தது. அதன் மேற்பார்வை அவனே. ஏனோ அவனுக்கு அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.

 

சரி மேற்பார்வை பார்ப்போம் என்று எண்ணியவன் தயாரித்து முடித்த பழச்சாறை ஒருவரிடம் கொடுத்தனுப்பிவிட்டு மிச்சமிருந்த வேலையும் முடித்துவிட்டு மின்தூக்கி வழியே மேலேறினான்.

 

மூன்றாம் தளம் வந்து அந்த மினி மீட்டிங் ஹாலை ஒட்டியிருந்த சிறு அறைக்குள் நுழைந்தவன் அங்கு பஃபே முறையில் உணவு வைக்க ஏற்பாடாகி இருந்ததை கவனித்தான்.

 

இன்னும் சற்று நேரத்தில் கீழே தயாரான உணவு மேலே வந்துவிடும். ஒரு மணி நேரத்தில் உணவு வேளை தொடங்கிவிடும், எல்லாம் பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

 

வெளியில் இருந்த ரெஸ்ட் ரூமில் ஏதோ அழுகை சத்தம் கேட்பது போல இருந்தது அவனுக்கு. அது பெண்களுக்கான அறை, அதையொட்டி இருந்த ஆண்களுக்கான அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்தவாறே உன்னிப்பாய் கேட்க மீண்டும் ஒரு விசும்பல் கேட்டது.

யாருக்கும் எதுவும் பிரச்சனையாய் இருக்குமோ என்ற எண்ணி அவசரமாய் வெளியில் வந்தவன் “எக்ஸ்க்யூஸ் மீ… உள்ள யாரு?? எதுவும் பிரச்சனையா??” என்றான்.

 

முதலில் எந்த சத்தமும் இல்லை அவன் கேள்விக்கு. மீண்டும் கேட்டான் “என்ன பிரச்சனை??”

 

“இல்லை ஒண்ணுமில்லை…” என்று அழுகையோடு ஒரு பெண் குரல் கேட்டது.

 

“எனிதிங் ராங்?? நான் உள்ள வந்து ஹெல்ப் பண்ண வேண்டி இருக்குமா??” என்று தயக்கத்துடன் கேட்டான்.

 

“இல்லை வேணாம்… நானே வர்றேன்…” என்றவள் பத்து நிமிடம் கழித்தே வெளியில் வந்தாள்.

 

ஏனோ அவனுக்கு சட்டென்று அங்கிருந்து நகர தோன்றாததால் அங்கேயே ஒரு ஓரமாய் நின்றிருந்தான்.

 

வெளியில் வந்தவளை பார்த்ததும் புருவம் லேசாய் சுருங்கி பின் விரிந்தது அவனுக்கு. காலையில் பார்த்த அதே பெண். அவள் முகம் அழுது வீங்கியிருந்தது இப்போது…

Advertisement