Advertisement

அத்தியாயம் – 13

 

“கொஞ்சம் நில்லுங்க…” என்ற அவளின் குரலில் சென்றவன் திரும்பி நின்றான் அவளை நோக்கியவாறே.

 

புவனா அவனிடம் பேச வேண்டும் என்று சொன்னதுமே யோசனை இழையோட என்னவாம் என்ற எண்ணத்தோடே அவளுக்கு எதிரில் வந்து நின்றான்.

 

“ஏன் என்கிட்ட நீங்க சரியாவே பேச மாட்டேங்குறீங்க??” என்ற அவளின் கேள்விக்கு ‘அப்படியா’ என்ற ரீதியில் புரியாத ஒரு பார்வையை பதிலாய் கொடுத்தான் அவன்.

 

“முன்ன மாதிரி நீங்க பேசுறதில்லைன்னு சொல்ல வந்தேன்” என்று அவள் சொல்ல அதற்கும் அவன் அசையாது நின்றான்.

 

அவன் அமைதியாய் நிற்பது கண்டு அவளுக்கு கலக்கமாகிப் போனது. மேற்கொண்டு என்ன பேச என்று தெரியாது அப்படியே நின்றாள்.

 

இப்போது அமைதியாகி போனவளை கண்டு “என்ன பேசணுமோ அதையெல்லாம் பேசிட்டு தானே இருக்கேன்…”

 

“இல்லை உங்க பேச்சுல ஒரு ஒட்டாத தன்மை தெரியுது…”

 

‘நிச்சயம் தெரியும் தான், அது ஏனென்று கூட புரியாத அளவுக்கு அவள் முட்டாளில்லை என்பதை அவனறிவான். அவளும் தெரிந்தே தான் அவனிடம் பேசிவிடும் நோக்கோடு தான் பேச்சை ஆரம்பித்திருந்தாள்.

 

“அப்படியா??”

 

“பார்த்தீங்களா இப்போவும் அதே மாதிரி தான் பேசறீங்க…”

 

“நான் எப்படி பேசணும்ன்னு நீங்களே சொல்லுங்க…” என்றான் அவன். இப்படி கேட்டால் அவள் என்ன சொல்லுவாள் ஒன்றும் பேசமுடியாமல் பார்த்தாள்.

 

அவனே தொடர்ந்தான். “அதெப்படி எதுவுமே நடக்காத மாதிரி என்னால இயல்பா இருக்க முடியும்…”

 

“அப்போ என்னை எப்படி கல்யாணம் பண்ணீங்க??”

 

“எங்கப்பா சொன்னார்ன்னு பண்ணிக்கிட்டேன்…”

 

‘அப்பா சொன்னார்ன்னா யாரை வேணா கல்யாணம் பண்ணியிருப்பானா…’ என்று தோன்றியது அவளுக்கு. அவளும் தானே அவள் வீட்டில் சொன்னார்கள் என்று திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள் என்பதும் மறந்தாள் வசதியாய்.

 

தான் தான் அவனை மறுத்தோம் என்பதெல்லாம் எல்லாம் சுளுவாய் மறந்து அவன் தன்னை ஒதுக்குகிறான் ஏன் என்ற எண்ணம் தான் அவளுக்குள் இத்தனை நாளாய் விடாமல் துரத்தியது.

“உங்களுக்கு இந்த கல்யாணம் நடந்தது பிடிக்கலையா…” என்ற அவளின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான் ‘இப்போ தான் உனக்கு கேட்கணும்ன்னு தோணுச்சா…’ என்பது போலிருந்தது அவன் பார்வை.

 

“சொல்லுங்க உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணதுல சந்தோசம் இல்லையா…” என்றாள் மீண்டும்.

 

“இல்லை… நிச்சயமா இல்லை…” என்று தெளிவாய் வந்த அவன் பதிலில் இவள் தான் திகைத்திருந்தாள்.

 

“ஏன்??” என்று அவள் கேட்டது அவளுக்கே கேட்டிருக்குமா என்றறியாள். மெதுவாய் தனக்குள் அவள் கேட்டுக் கொள்வது போலிருந்தாலும் அவள் வாய் அசைப்பில் அவன் அதை உணர்ந்திருந்தான்.

 

எல்லாம் பேசிவிடும் வேகம் அவனுக்குள்ளும் வந்தது இப்போது. இருவருமே காயப்படுவோம் என்று தெரிந்தே பேச ஆரம்பித்தான்.

 

“எப்படி உன்னால இப்படி கேட்க முடியுது??”. மரியாதை குறைந்து போனது அவன் பேச்சில். கோபம் அதை குறைத்தது போலும்.

 

“ஏன் நான் கேட்க கூடாதா??” என்று சொல்லும் போதே குரல் லேசாய் பிசிறியது.

 

“எந்த உரிமையில?? இப்போ என்னோட மனைவிங்கற உரிமையிலயா??” என்று அவன் சொன்னது அவளுக்கு சுருக்கென்று தைத்தது. அவளுக்கு வலிக்க வேண்டும் என்பது போலவே இருந்தது அவனின் தொடர்ந்த பேச்சுகள்.

 

வாசல் வரை சென்றிருந்தவன் அங்கு நின்றிருந்தவாறே தான் அவ்வளவு நேரமும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது மெதுவாய் நடந்து வந்து அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த நீள சோபாவில் வந்தமர்ந்தான்.

 

அவனுக்குள் கோப உணர்வுகள் தலைத்தூக்கி கொண்டிருந்தன. அதை அடக்கும் வழியறியாது அங்கு சென்று அமர்ந்திருந்தான்.

 

அவள் மேலும் ஒரு வார்த்தை வளர்த்தாலும் அவன் கரையுடைத்து அனைத்தும் கொட்டிவிடுவான் போலிருந்தான்.

 

விதி தான் வலியதே அவள் அவனை பேச வைக்கவென அடுத்த வார்த்தையை விட்டாள்.

“எந்த உரிமையா இருந்தா என்ன… அப்போ நீங்க என்னை விரும்பினது எல்லாம் உண்மை இல்லைன்னு சொல்ல வர்றீங்களா…” என்று தைரியம் கூட்டி சொல்ல முயன்றாள். அவள் கேட்பது அபத்தம் என்று தெரிந்தே கேட்டாள்.

 

“ஓ!! அந்த கதையெல்லாம் உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா… அந்த முட்டாள் இன்னும் இருப்பான்னு நீ நினைச்சுட்டு இருக்க போல, அதான் இவ்வளவு தூரம் பேசுறியோ…”

 

“அப்படி நான் விரும்பின காலம் ஒண்ணு இருந்துச்சு. இப்போ அதை நான் நினைச்சுக் கூட பார்க்க விரும்பலை. சந்தோசம்ன்னா நினைக்கலாம், வருத்தத்தை தானே இவ்வளவு நாளும் சுமந்திட்டு இருந்தேன்…”

 

“இனியும் ஏன் அதை நான் சுமக்கணும்… நல்லா தெரிஞ்சுக்கோ இந்த கல்யாணம் என் அப்பா சொன்னதுனால மட்டும் தான் நடந்திச்சு… நிச்சயமா உனக்காக இல்லை… நீ இல்லாம அங்க வேற எந்த பொண்ணை காட்டி அப்பா தாலி கட்ட சொல்லியிருந்தாலும் நான் கட்டியிருப்பேன்…”

 

“நீயும் என்னைப் போல தான்னு எனக்கும் தெரியும். அப்போ உங்க வீட்டில பார்க்கறவங்களைத் தான் கட்டிக்குவேன்னு சொன்னவ தானே நீ… இப்போவும் அதானே நடந்துச்சு…”

 

“என்ன உங்கப்பா உனக்கு முதல்ல ஒரு சாய்ஸ் ரெண்டாவது ஒரு சாய்ஸ்ன்னு ரெண்டு பேரை காட்டிட்டார் அவ்வளவு தானே…” என்று அவன் சொன்னதின் அர்த்தம் அடி ஆழம் வரை சென்று அவளை காயப்படுத்தியது.

 

என்ன இருந்தாலும் நீ உன்னொருத்தனுக்கு மனைவியாக சம்மதிச்ச தானே என்ற மறைமுக குற்றச்சாட்டு அதிலிருந்தது.

“நான் உனக்கு அப்படி என்ன கெடுதல் செஞ்சேன்… அப்போவே சொல்லியிருக்கலாம்ல எனக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்குன்னு, நானும் பைத்தியக்காரன் மாதிரி எல்லாம் மாறிடும் மாறிடும்ன்னு நம்பி காத்திட்டு இருந்திருக்க மாட்டேன்ல…”

 

“இல்லை அது தெரிஞ்சா நீங்க வருத்தப்படுவீங்கன்னு…”

 

“என்ன பெரிய வருத்தம் நீ வேணாம்ன்னு சொன்னதைவிடவா அது இருந்திருக்க போகுது… என்ன ஒரு இருபது நாள் இல்லை ஒரு மாசம் இல்லை ஒரு வருஷமே ஆகட்டுமே மொத்தமா மறந்து தொலைச்சிருப்பேன்ல…”

 

“சோ நீ என்னை பைத்தியக்காரனா ஆக்கணும்ன்னு நினைச்சு தான் இப்படி செஞ்சிருக்கே அப்படி தானே… இப்போ மறுபடியும் நான் உன்னையே சுத்தி சுத்தி வரணும் அதுல உனக்கு ஒரு அல்ப சந்தோசம் அப்படி தானே…” என்று மேலும் மேலும் குத்தி பேசினான்.

 

அவள் கண்களில் குளம் போல் கட்டியிருந்த கண்ணீர் தன் கரையுடைத்து கன்னம் தொட்டு வழிந்தது. அதை காணாதது போல கண்டாலும் அவனாலும் பேச்சை நிறுத்த முடியவில்லை.

 

அவள் அவனை வேண்டாம் என்று சொன்னதைவிட வேறொருவனை மணக்க சம்மதித்தது தான் அவனுக்கு பெரிய வலியாக இருந்தது.

 

ஒரு வேளை அவள் அவனை மணந்தோ அல்லது வேறு யாரையாவது மணந்தோ நன்றாய் வாழ்ந்திருந்தால் கூட அவனுக்கு தெரிந்திருக்காதோ என்னவோ அவனே அவளை திருமணம் செய்யும் சூழல் வந்ததில் தான் அவன் வலி நீறு பூத்த நெருப்பாகிப் போனது.

 

அதை அப்படியே விட்டிருந்தாலும் காலப்போக்கில் சரியாகியிருக்கலாம், புவனா அவன் முன்பு போல் தன்னிடம் பேசவில்லை என்று எதுவுமே நடக்காதது போல கேட்டது தான் அவன் ஆத்திரத்தை அதிகப்படுத்தி கன்னாபின்னாவென்று பேச வைத்தது.

 

சோபாவில் இருந்து எழுந்திருந்தவன் “இனிமே இப்படி தான் இருப்பேன்… எனக்கு பிடிச்ச நான் விரும்பின பொண்ணு என்னை மறுத்துட்டு போய்ட்டா… அது பழைய கதை…”

 

“இப்போ நடந்த கல்யாணம் பெரியவங்க பார்த்து செஞ்சது… எல்லாமே உடனே மாறிடாது… எப்போ மாறுதோ அது வரைக்கும் எல்லாரும் காத்திட்டு இருந்து தான் ஆகணும்…”

 

“அப்படி காத்திட்டு இருக்க முடியாதுன்னா உங்க அப்பா வேற யாரையாச்சும் கையை காட்டுவார் நீங்க கட்டிக்கலாம்… நான் தடையா இருக்க மாட்டேன்…” என்று சொல்லிவிட்டு அவள் முகம் கூட பாராமல் வேகமாய் திரும்பி நடந்துவிட்டான்.

 

இருவருக்குள்ளும் பகிரப்படாத விஷயங்கள் இன்னமும் மீதமிருந்தன.

அன்று அவன் பேசிய பேச்சில் அவன் சென்றதும் அப்படியே அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவள் தான். அன்று அவளை பார்த்திருந்தவன் அத்தோடு பத்து நாட்கள் கழித்து தான் வந்தான் அவளை பார்க்கவென.

 

அவள் அவன் முகம் பார்க்காமலே இருக்க இவனோ பெயருக்காய் வந்திருந்தான். அவளிடம் நலம் விசாரித்தான், அன்று அவளை வெளியே அழைத்துச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் அவள் தங்கியிருந்த இடத்தில் விட்டு வந்தான்.

 

அவளுக்கு புரிந்தது இது அவனாய் செய்யவில்லை என்று. அவனின் தந்தையோ அல்லது தன் வீட்டினரோ எதுவும் சொல்லியிருக்கலாம் அதனால் அவன் வந்து போகிறான் என்று.

 

இந்த இரண்டு மாதத்தில் அவன் நான்கு முறை அவளைப் பார்க்கவென வந்து சென்றிருந்தான். அதிகம் அவளும் பேசவில்லை அவனும் என்னவென்றால் என்ன என்பது போல் தான் இருந்தான்.

 

தனுஷ் ஹோட்டலின் பிரான்ச் தொடங்கும் வேலையாய் மீண்டும் ஊட்டிக்கு பயணப்பட்டான். அங்கேயே பத்து நாட்கள் அவன் தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டி வந்தது.

 

அன்று காலை “தேவா” என்றழைத்தார் வேணுகோபால்.

“என்னப்பா??”

 

“நீ ரெண்டு நாள்ல ஊட்டிக்கு போறே தானே…”

“ஆமா…”

 

“ஹ்ம்ம்… நீங்க இன்னும் ஹனிமூன் கூட போகலை, பேசாம அந்த பொண்ணை ஒரு வாரம் லீவ் போட சொல்லிட்டு உன்னோட ஊட்டிக்கு கூட்டிட்டு போ…” என்றார்.

 

‘ஹனிமூனா…’ என்று தான் பார்த்திருந்தான் அவன். ‘இங்க எதுவுமே சரியில்லை, இப்போ அது ஒண்ணு தான் குறையா…’ என்ற எண்ணம் அவனுக்கு.

 

“இல்லைப்பா நான் ஹோட்டல் வேலையா போறேன்… டென்ஷன்ல சுத்திட்டு இருப்பேன்… இப்போ அவங்களை கூட்டிட்டு போகலை…” என்றான்.

 

“ஏன் தேவா அந்த பொண்ணு உன் பொண்டாட்டி இன்னும் வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்கே…”

 

சென்னையில் விட சென்ற அன்று கோபத்தில் அவளை ஒருமையில் அழைத்தது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

 

“ஹ்ம்ம் சரிப்பா…” என்று அவரிடம் சொன்னாலும் அவளை இன்னமும் உரிமையாய் அழைக்க முடியவில்லை அவனால்.

 

‘இவன் என்ன இப்படி இருக்கான், இதெல்லாமா நான் சொல்லணும்… இன்னுமா இவங்க சரியாகலை… பேசினா இந்நேரம் சரியாகி இருக்கணுமே…’ என்று அவர் யோசனைக்கு தாவினார்.

“அப்போ ஊட்டிக்கு??”

 

“நான் மட்டும் தான் போறேன்… அவளை இப்போ கூட்டிட்டு போகலை… அடுத்த முறை கூட்டிட்டு போறேன்…” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.

 

இன்னும் சில நொடிகள் நின்றால் அவர் மேலும் பேசி இவனை சம்மதிக்க வைத்துவிடுவார் என்று இவனுக்கு தெரியும். அதனால் தான் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

 

“என்ன புவனா ரொம்ப டல்லாவே இருக்கே இப்போலாம்…” என்று கேட்டவாறே சித்தார்த் அவளருகில் வந்து அமர்ந்தான்.

 

அவளின் திருமணத்தன்று அவன் ஏதோ முக்கிய வேலையாக வெளியூர் சென்றுவிட அவனால் வரமுடியாமல் போயிருந்தது. எனினும் அவளின் திருமணத்தில் நடந்த குழப்பத்தை மற்றவர்கள் மூலம் அவன் முன்பே அறிந்திருந்தான்.

 

அவள் அவனுக்கு பதிலொன்றும் சொல்லாமல் எதையோ வெறித்தவாறே அமர்ந்திருந்தாள்.

 

“புவனா ஐ யம் ஆஸ்கிங் யூ ஒன்லி…” அதில் கொஞ்சம் கலைந்தவள் “சார்…”

 

“என்னாச்சு உனக்கு?? எதுக்கு இப்படி டல்லடிக்கிற??வர வர உன்னோட ப்ரோக்ராம்ல கூட சுவாரசியம் இல்லை…”

“ஒண்ணுமில்லை சார்… நான் நல்லா தான் இருக்கேன்…” என்றவள் அவன் கடைசியாக ப்ரோக்ராம் பற்றி ஏதோ சொன்னானே என்று நினைவு கூர்ந்தாள்.

 

“ப்ரோக்ராம் நல்லாயில்லைன்னு யார் சொன்னாங்க…”

 

“நான் அப்படி சொல்லலை புவனா சுவாரசியம் இல்லைன்னு தான் சொன்னேன்…”

 

“ஏன்?? ஏன் அப்படி சொன்னீங்க?? நான் மத்த விஷயத்துல எப்படியோ வேலை விஷயத்துல சரியா தானே இருக்கேன்… அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க…” என்று கொஞ்சம் கோபம் கலந்த குரலில் கேட்டாள்.

 

“கூல்… கூல்.. நான் ஒண்ணும் சும்மா சொல்லலை… ரேட்டிங்ல உங்க ப்ரோக்ராம் கொஞ்சம் கீழ போய்டுச்சு அது தெரியுமா…”

 

“அப்போ நாம ப்ரோக்ராம்ல இன்னும் புதுசா எதுவும் செய்யணும்ன்னு அர்த்தம்… நம்மோட காம்படிடர்ஸ் அவங்க ப்ரோக்ராம்ல எதுவும் மாற்றம் செஞ்சிருப்பாங்க…”

 

“அதை தான் சொல்ல வந்தேன்… முன்னெல்லாம் நான் சொல்ல முன்னாடி நீயே அதெல்லாம் பார்த்து சேன்ஜஸ் சொல்லுவே… இப்போ அதில்லை அதை தான் சொன்னேன் நீ டல்லடிக்கிறேன்னு” என்றான் சித்தார்த்.

 

தான் நிஜமாகவே தன் வேலையில் கவனமில்லாமல் இருக்கிறோமா, எப்போதிருந்து இப்படி ஆகிப்போனோம். பிடித்த வேலையை கூட கவனமில்லாமல் செய்யும் அளவிற்கு எது என்னை பாதிக்கிறது என்ற சிந்தனைக்குள் மனம் சென்றது.

 

“புவனா…”

 

மீண்டும் நினைவுகளின் பிடியில் இருந்து மீண்டவள் “ஐ வில் டேக் கேர் சார்… சீக்கிரமே மாற்றம் வரும்…” என்று அவனுக்கு பதில் சொல்வது போல் தனக்குமே சேர்த்தே சொல்லிக் கொண்டாள் அதை.

 

தனுஷ் ஊட்டியில் இருந்து திரும்பி வந்திருந்தான். வந்தவன் சும்மா வரவில்லை ஒரு பெண்ணுடன் வந்திருந்தான். வீட்டிற்கு வரும் போதே தந்தைக்கு அழைப்பு விடுக்க அவர் எடுக்கவில்லை. உடனே யாகாஷுக்கு அடித்தான். “டேய் யாகாஷ் எங்கே இருக்கே??”

 

“இந்த நேரத்துல வேற எங்க இருப்பேன் ஹோட்டல்ல தான்…”

 

“அப்பா எங்க இருக்கார்?? இந்நேரம் பேங்க் க்ளோஸ் ஆகி இருக்குமே…”

“ஆமா க்ளோஸ் ஆகி தான் இருக்கும்…”

 

“போன் பண்ணேன்டா அவருக்கு எடுக்கவேயில்லை…”

 

“அதெப்படி எடுப்பாரு, அவரு தான் இங்க அவரு சம்மந்தியோட சமபந்தி போஜனத்துல இருக்காரே”

 

“என்ன?? என்னடா சொல்றே?? புரியற மாதிரி பேச மாட்டியா நீ…”

 

“உன் மாமனாரும் உன் பொண்டாட்டியோட மாமனாரும் ஒண்ணா பேசிக்கிட்டே சாப்பிடுறாங்கன்னு சொல்ல வந்தேன்…”

 

நிஜமாகவே யாகாஷின் பேச்சில் தனுஷிற்கு கடுப்பாக வந்தது. “அறிவுகெட்டவனே ஒழுங்கா பேசித் தொலை… நான் நல்ல மூட்ல இருக்கேன் அதனால நீ தப்பிச்சே…”

 

“அது வந்து உன் பொண்டாட்டியோட அப்பாவும் உன் அப்பாவும் இங்க ஹோட்டல்ல தான் சாப்பிட்டு இருக்காங்க…” என்றான்.

 

“அவர் எதுக்கு அங்க வந்தார்…”

 

“அது எனக்கெப்படி தெரியும்…”

 

“சரி மாமா கிளம்பினதும் எனக்கு சொல்லு, நான் அப்பாகிட்ட பேசணும்…”

 

“அப்படி என்ன தலைப்போற அவசரம் என்கிட்ட சொல்லு நானே சொல்லிடறேன்…” என்ற யாகாஷிடம் “நான் சொன்னதை மட்டும் செய்டா…” என்று சொல்லி போனை வைக்கப் போனான்.

 

“இரு இரு உன் மாமனார் கிளம்பிட்டாரு… நான் போனை அப்பாகிட்ட கொடுக்கறேன்…” என்றுவிட்டு வேகமாய் உள்ளிருந்து ஓடி வந்தவன் அவரிடம் விஷயம் சொல்லி போனை கொடுத்தான்.

 

“அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்”

 

“என்ன தேவா??”

 

“நேர்ல வந்து பாருங்க…” என்றுவிட்டு வைத்தான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டிலிருந்தார் வேணுகோபால். நிஜமாகவே அவருக்கு ஆனந்த அதிர்ச்சி தான் அங்கிருந்தவரை கண்டு.

 

“மிதிலா நீயா!! நீ எப்படி இங்க!! உன்னை திரும்ப பார்ப்பேன்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை…” என்றவரின் விழிகளில் ஆச்சரிய மின்னல்.

 

“தேவா மிதிலா யாரு தெரியுமா… என்னோட தி தி பெஸ்ட் பிரண்டு…” என்றார் அவர். அவன் மனமோ ‘இல்லைப்பா… அவங்க உங்க பிரண்டு மட்டுமில்லை…’ என்று சொல்லிக்கொண்டது…

Advertisement