அத்தியாயம் – 15
தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம் அதற்கு பதில் சொல்லாமல் இவன் என்ன செய்கிறான் என்று திரும்பி பார்த்தார் வேணுகோபால்.
“மாமா…” என்று சரியாய் அந்நேரம் அவள் அழைக்கவும் ஆச்சரியம் அவருக்கு.
“நீ என்னம்மா இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கறே??” என்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் கேட்டவர், “முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல நான் இவனை அனுப்பி இருப்பேன்ல… நேத்து போன் பண்ணும் போது கூட நீ ஒண்ணுமே சொல்லலையேம்மா…” என்றார் சற்று ஆதங்கத்துடனே.
“சர்ப்ரைஸா இருக்கட்டும்மேன்னு தான் சொல்லலை மாமா…” என்றவளின் பேச்சு மட்டுமே அவரிடத்தில் பார்வையோ தனுஷிடத்தில்.
‘என்னத்துக்கு இப்படி பார்க்குறா??’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவன் வெளியில் ஒன்றும் கேட்கவில்லை. கேட்க ஆயிரம் இருந்தாலும் ஒன்றும் கேட்க தோன்றவில்லை அவனுக்கு.
“தேவா… என்ன பார்த்திட்டே இருக்க அந்த பொண்ணு வெயிட் தூக்கிட்டு நிக்குது பாரு… அதை முதல்ல வாங்கு…” என்று வேணுகோபால் சொல்லவும் தான் தான் அவளையே வெறித்து நோக்குகிறோம் என்பதை உணர்ந்தான்.
‘ஆமா இவ ஏன் இவ்வளவு வெயிட் தூக்கிட்டு வர்றா… மொத்தமா மூட்டைகட்டிட்டு வந்த மாதிரி இருக்கு…’ என்று எண்ணவும் அவன் தந்தை அதை அவர் வாய்மொழியாகவே கேட்டுவிட்டார்.
“இங்கவே வந்திட்டேன் மாமா…”
“என்ன??” என்று இருவருமே வாய் பிளந்தனர்.
“என்னம்மா இங்க நிக்கறே?? அந்த பையை கொடு வண்டி நிக்குது காசு கொடுத்தாச்சா இல்லை நான் செட்டில் பண்ணிடவா…” என்று கேட்டுக்கொண்டே வெளியில் சென்றிருந்த யாகாஷ் உள்ளே வந்தான்.
“அதுல என்னோட பேக் இன்னும் இரண்டு இருக்கு… இன்னும் காசு கொடுக்கலை…”
“நீ உள்ள போம்மா நான் பேக் எடுத்திட்டு அமௌன்ட் செட்டில் பண்ணிட்டு வர்றேன்… எவ்வளவு பேசுனம்மா??”
“மூன்னூறு…”
தனுஷ் இன்னும் நின்ற இடத்தில் இருந்து அசையாமல் இருந்தான்.
“தேவா…” என்று இம்முறை வேணுகோபால் அழுத்தமாய் கூப்பிடவும் தான் அவளை நோக்கிச் சென்றான். அவள் கையில் இருந்து இறக்காமல் இன்னமும் வைத்திருந்த பெட்டியை வாங்கிக் கொண்டான்.
“உன் ரூம்ல வை தேவா…” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு வேணுகோபால் நகர அவனும் வேறு வழியின்றி அவனறைக்கே சென்றான்.
அவள் அங்கு இருந்த நாட்களில் முன்பு அவனும் யாகாஷும் தங்கியிருந்த அறையில் அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அவள் சென்னைக்கு சென்றதும் அவன் மட்டுமே அந்த அறையில் தங்கினான்.
யாகாஷ் பெரும்பாலும் ஹோட்டலில் தங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தான். வீட்டிற்கு வரும் நாட்களில் வேணுகோபாலுடன் இருந்துக்கொள்வான்.
தந்தை அவனுடைய அறையிலேயே எல்லாம் வைக்கச் சொல்லவும் அவன் மனம் உணர்ந்தது என்னவென்றே அவனுக்கு புரியவில்லை.
புரியாத அந்த உணர்வு அவனுடைய மனம் அந்த நொடியை ரசித்ததும் உள்ளூர மகிழ்ந்ததும் தான். ஆனால் அவன் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் புரியாதது போலவே இருந்தான்.
பின்னோடு அவளும் வருவாள் என்று அவன் எண்ணியிருக்க அவள் வரவேயில்லை. ‘என்னாச்சு இவளுக்கு ஆளை காணோம்…’ என்று எண்ணிக்கொண்டு வெளியில் வந்தால் அங்கேயும் அவளில்லை.
‘என்னடா நடக்குது இங்க, நாம கனவு எதுவும் கண்டிருப்போமோ இவ வர்ற மாதிரி… இல்லையே நான் பெட்டியை கூட வாங்கிட்டு போய் உள்ள வைச்சனே…’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே யாகாஷ் உள்ளே நுழைந்தான்.
“என்னடா நின்னுட்டே தூங்குறே??”
“ஆமா நீ எங்க போனே??”
“நாங்க எங்கடா போனேன் இங்க தானே இருக்கேன்…”
“சரி இப்போ எங்க இருந்து வர்றே??”
“வெளிய இருந்து உள்ள வர்றேன்…”
“டேய் ஒழுங்கா சொல்ல மாட்டியாடா… வெளிய எதுக்கு போனே, இப்போ உள்ள எதுக்கு வர்றே??”
“என்னடா ஆச்சு உனக்கு?? வெளிய போனா உள்ள வந்து தானே ஆகணும்… நீ எதுக்கு வர்றேன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்…” என்று யாகாஷ் சொல்லியதில் நிச்சயம் குழம்பித் தான் போனான் தனுஷ்.
அவன் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக தலை முடியை இருகைகளாலும் கசக்க “டேய் தனு உனக்கு என்னடா பண்ணுது…”
“நேத்து கூட நல்லா தானேடா இருந்தா… இதுக்கு தான்டா நேரம் கெட்ட நேரத்துல எப்.எம் ஸ்டேஷன்க்கு வேலைக்கு போகாதன்னு சொன்னேன் கேட்டியா… காத்து கருப்பு எதுவும் அடிச்சிருச்சோன்னு தெரியலையே…”
அப்போது அவள் உள்ளிருந்து கையில் காபி கோப்பை அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள். “காபி எடுத்துக்கோங்க” என்றவாறே.
‘அப்பாடா நடந்தது கனவில்லை, நிஜம் தான்…’ என்ற எண்ணம் அப்போது தான் வந்தது அவனுக்கு.
“எடுத்துக்கோங்க…” என்று அவன் முன் நீட்டியவாறே நின்றிருக்க அவன் தான் யோசனைகளில் பயணிக்க ஆரம்பித்திருந்தானே, ஒரு வழியாய் அதில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
“இல்லை எனக்கு வேணாம்…”
“ஏன்??”
“இன்னும் பிரஷ் பண்ணலை…”
“பண்ணிட்டு வாங்க…”
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்து வேகமாய் உள்ளே சென்றான்.
‘பார்றா பயபுள்ள பொண்டாட்டி சொல்லவும் நாய் குட்டி மாதிரி பம்மிட்டு உள்ளே ஓடுறதை’ என்று நினைத்தது யாகாஷே தான்.
“ஏன்மா வந்ததுமே கிட்சன்னுக்கு போயிட்டியா, போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல… நான் ஹோட்டல்ல இருந்து போட்டு வந்திருப்பேன்ல…” என்றான் யாகாஷ்.
“அதை தான் நானும் சொன்னேன்…” என்றார் வேணு.
“நைட் எல்லாம் ட்ரைன்ல தூக்கமே வரலை… அது கொஞ்சம் லேசா தலைவலி மாமா… அதான் வந்ததும் காபி போட்டு குடிச்சா நல்லா இருக்குமேன்னு…”
“ட்ரைன்விட்டு இறங்கி குடிச்சிருக்கலாம்ல…”
“வீட்டுக்கு வர்ற மூட்ல இருந்தேன், அதெல்லாம் எனக்கு அப்போ தோணலை மாமா…”
“சரிம்மா காலையில என்ன டிபன் எடுத்திட்டு வரட்டும்??” என்று கேட்டிருந்தான் யாகாஷ்.
“அய்யோ அண்ணா, இங்க வந்தாலே எனக்கு வீட்டுல இருக்கோமா இல்லை ஹோட்டல்ல இருக்கோமான்னு தோணுது…”
“எப்போ பார்த்தாலும் என்ன சாப்பிடுறன்னு நீங்க கேட்குறது எனக்கு அந்த பீல் தான் கொடுக்குது… எனக்கு ஹோட்டல் சாப்பாடே வேணாம், ஆளை விடுங்க சாமி…”
“பேசாம நீங்க எல்லாம் இனி வீட்டில சாப்பிடுங்களேன்… நான் வேணா சமைக்கறேன்…”
“ஹைய் இது நல்ல ஐடியாவா இருக்கே, எனக்கும் கூட இந்த தனு செய்யறது சாப்பிட்டு சாப்பிட்டு செம போர் அடிக்குது… நீயே செய்ம்மா…” என்றது வேணுவே.
“ஆமாமா எனக்கும் ஹோட்டல் சாப்பாடு பிடிக்கலை… அதுலயும் தனு தொல்லை தாங்கலை என்னை அதை செய் இதை செய்ன்னு உயிரை வாங்குறான்…”
உள்ளிருந்து பிரஷ் செய்துக் கொண்டிருந்தவன் இவர்கள் பேச்சு காதில் விழவும் ஒரு முறைப்புடன் வெளியே எட்டி பார்த்தான் அங்கிருந்தவர்களை.
“ஆமா ஹோட்டல் பன்னிரண்டு மணிக்கு தானே” என்றாள் புவனா.
“அந்த விஷயம் உனக்கு தெரியாதா… அதெல்லாம் நீ ஊருக்கு போனதுமே காலையில இருந்து சர்வீஸ் பண்ண ஆரம்பிச்சாச்சு…”
பின் வேணுகோபாலும், யாகாஷும் அங்கு நின்று வேறு பேசி பின் நகர்ந்து செல்ல அவள் காபியுடன் அறைக்கு சென்றாள்.
தனுஷோ அங்கு பல் துலக்கி குளித்து முடித்து வெளியில் வந்திருந்தான் அப்போது. இடுப்பில் கட்டிய துண்டுடனும் கையில்லாத பனியனும் அணிந்து செல்பில் எதையோ அவன் தேடிக்கொண்டிருக்கும் போது தான் அவள் உள்ளே சென்றாள்.
“காபி எடுத்துக்கோங்க ஆறிடும்…” என்ற அவள் குரலில் தூக்கிவாரிப் போட திரும்பினான்.
அரைகுறை ஆடையுடன் நிற்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு. “அங்க வைங்க நான் எடுத்துக்கறேன்…”
“பரவாயில்லை நான் வெயிட் பண்ணுறேன்…” என்றவள் அங்கிருந்த கட்டிலில் சாவகாசமாய் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அவனுக்கு தான் சங்கோஜமாக இருந்தது. ‘இதென்ன இவ இப்படி படுத்துறா, நான் எப்படி டிரஸ் மாத்துறதாம்’ என்று தனக்குள் சிணுங்கிக் கொண்டான்.
‘இவ இங்க இருந்து கிளம்புற மாதிரி தெரியலை நாம தான் இடத்தை மாத்தணும்’ என்று எண்ணியவன் அவனுக்கு தேவையான உடைகளை எடுத்துக்கொண்டான்.
அவள் கையில் வைத்திருந்த காபி கோப்பையையும் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
“போங்க போங்க எவ்வளவு நாளைக்கு ஓடி ஒளியப்போறீங்க… பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்படி இருக்க முடியுது உங்களால… வரவைக்குறேன் இந்த பூனைக்குட்டிய வெளிய வரவைக்குறேன்…” என்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டாள் அவள்.
அவள் ஊருக்கு வந்த விஷயத்தை அவள் தந்தையிடம் சொல்லியிருக்க அன்றே அவர் மனைவி மகன் சகிதம் வீட்டிற்கு வந்து அவளை பார்த்துச் சென்றான்.
அவளை வீட்டிற்கு அழைக்க அவள் தான் அங்கு செல்ல மறுத்துவிட்டாள். இன்னமும் அவள் அன்னையிடம் பேசியிருக்கவில்லையே… அவரின் மீதான அவள் கோபம் இன்னமும் அப்படியேயிருந்தது.
இந்நிலையில் புவனாவும் தனுஷ் தன்னிடம் ஊருக்கு வந்தது பற்றி எதுவும் கேட்பான் என்று எதிர்பார்த்திருக்க மாறாக அவன் வாயே திறக்கவில்லை அவளிடத்தில்.
அவனுக்கு கொஞ்சம் கோபம் தான் அவள் என்ன தான் சர்ப்ரைஸ் என்று சொன்னாலும் சொல்லிவிட்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம் தான் அவனுக்கு.
சர்ப்ரைஸ் வைத்து விளையாடும் அளவிற்கு இருவரும் ஒண்ணும் நெருக்கமாய் இல்லை தானே என்று நினைத்தான்.
அவனுக்கு தெரியவில்லை தான் அவளை நெருக்கமாய் உணரப்போய் தான் இதெல்லாம் எதிர்ப்பார்க்கிறோம் என்று.
முன் பகல் போல் ஹோட்டலுக்கு சென்றால் மதிய உணவிற்கு வந்து செல்வான் அதன்பின் அவன் வர இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிடும். அதன் பின் உறங்கினால் நன்றாய் விடிந்த பின்னே தான் அவன் எழுவது.
அவளுக்கு இன்னமும் தெரியாது அவன் இரவில் எப்.எம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது. தெரிந்தால் தான் அவளுக்கு சில விஷயங்கள் தெரிய வருமே!!
இன்றோடு அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. தினமும் காலையில் தனுஷ் தான் அவளை கோவை சென்றுவிட்டு வருவான். மாலை அவள் பேருந்தில் வந்துவிடுவாள்.
தனுஷிடம் அவள் கோவையில் உள்ள எப்.எம் ஸ்டேஷனில் பணிபுரியப் போவது பற்றி சொல்வதற்குள் அவள் தலையால் தண்ணீர் குடித்தாள்.
பின்னே அவள் அங்கு வந்து தன்னை போல் மூன்று நாட்கள் ஓடியிருக்க இவன் என்னவென்று கூட கேட்காமல் இருந்தால் அவளும் என்ன தான் செய்வாள்.
இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் அவள் உறங்கிய பின் அவன் வருவதும் அவள் எழுந்து சென்றபின் அவன் விழிப்பதும் என்று கண்ணாமூச்சி ஆட்டம் இருவருக்குள்ளும்.
அன்று ஒரு முடிவுடன் தான் அவனுக்காய் காத்திருந்தாள் அவன் வரும் வரை. மெதுவாய் அறைக்கதவை திறந்து அவன் உள்ளே வரவும் அங்கு அவள் கட்டிலில் சாய்ந்தமர்ந்து ஒரு புத்தகத்தை கையில் வைத்திருக்கும் கோலத்தை தான் பார்த்தான்.
‘இவ என்ன இன்னும் தூங்காம இருக்கா…’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும் வெளியில் ஒன்றும் சொல்லவில்லை அவன்.
வந்தான் அவனுக்கு தேவையான உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றான், உடை மாற்றி வந்து கட்டிலில் அவளுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொண்டான்.
அவன் உள்ளே வந்ததில் இருந்து அவள் பார்த்துக் கொண்டு தானேயிருக்கிறாள். எதுவாவது கேட்பான் கேட்பான் என்று அவள் பார்த்திருக்க அவனோ படுக்க சென்றதும் அவ்வளவு கோபம் வந்தது அவளுக்கு.
‘அழுத்தம்!! அழுத்தம்!!’ என்று மனதிற்குள் திட்டிக்கொண்டாள் அவனை.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றாள் அவனை நோக்கி திரும்பி அமர்ந்தவாறே.
அவனிடம் பதிலேதும் இல்லை. ‘என்ன பேசப்போறா…’ என்ற சிந்தனை ஒரு புறம் ஓடினாலும் எழுவதா வேண்டாமா என்ற தலையாய சிந்தனை வேறு அதற்கு முன்னாக ஓடியது.
“உங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னேன்… நீங்க இன்னும் தூங்கியிருக்க மாட்டீங்கன்னு தெரியும்… சோ ப்ளீஸ்…”
அவள் புறமாய் திரும்பியவாறே அவளை பார்த்தான். பதிலாய் அவளும் பார்க்கவும் எழுந்து அமர்ந்தான்.
“இப்போவே பேச வேண்டிய அவசியமென்ன… மனுஷன் வேலைக்கு போயிட்டு இப்போ தானே வர்றான் அவன் தூங்கட்டும்ன்னு நினைக்க மாட்டியா…” என்றான் கோபக்குரலில்.
“சரி உங்ககிட்ட எப்போ பேசலாம்ன்னு நீங்களே சொல்லுங்க… ஏன்னா காலையில் நீங்க பத்து மணிக்கு மேல தான் எழுந்துக்கறீங்க… எழுந்து குளிச்சு சாப்பிட்டு ஹோட்டல் போனா இந்நேரம் தான் வீட்டுக்கு வர்றீங்க…”
“இடையில் ஒரு முறை ரெண்டு முறை எதையாச்சும் எடுக்க கொடுக்கன்னு வர்றீங்க… அஞ்சு நிமிஷத்துக்கு மேல இருக்கறதில்லை… அப்போ நான் உங்ககிட்ட எப்போ தான் பேச முடியும்…”
“இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது…” என்றான் அவன்.
“என்ன தெரியணும்??”
“எனக்கு உன்கிட்ட பேச எதுவுமில்லைன்னு அர்த்தம்… எதையும் நான் பேச விரும்பலைன்னு அர்த்தம்…”
“ஏன்??”
“ஏற்கனவே உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்… மறுபடியும் என்னை பேச வைக்காதே…” என்று சிடுசிடுத்தான்.
“திட்டுறதுன்னா திட்டுங்க…”
“அதுக்கு எனக்கு என்ன உரிமையிருக்கு…” என்று உரிமையுள்ளவனான தனுஷ் சொன்னான்.
“உங்ககிட்ட வீண் விவாதம் செய்ய விரும்பலை… நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன், நீங்க அதை கேட்டா மட்டும் போதும்…”
அவன் இப்போது பதில் ஏதும் சொல்லவில்லை. அதையே அவள் சம்மதமாய் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நான் வேலையை இன்னும் விடலை. என் வேலையை இங்க ட்ரான்ஸ்பர் பண்ணச்சொல்லி தான் வந்திருக்கேன்…”
‘ஏனோ…’ என்ற அவன் மனதின் கேள்விக்கு அவள் பதிலாய் “நான் ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம் இருக்கறது எனக்கு பிடிக்கலை…”
‘பார்டா… இது எப்போ இருந்து…’ என்று நினைத்தான்.
“அதனால தான் வேலையை இங்க மாத்திக்கிட்டேன்… வர்ற திங்கள்கிழமையில இருந்து ஸ்டேஷன்ல ஜாயின் பண்ணணும்…”
“காலையில நீங்க தான் கூட்டிட்டு போய் விடணும்”
“நான் என்ன உனக்கு டிரைவரா??”
“ஆமா டிரைவர் தான்… என் வாழ்க்கை பயணத்தை உங்களோட தான் தொடங்கியிருக்கேன்… அப்போ நீங்க தானே என்னை டிரைவ் பண்ணணும்…”
“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா போகுது… அன்னைக்கு பேசினது எல்லாம் மறந்து போச்சா…”
“எதையும் மறக்கலை… மறக்கவும் மாட்டேன்… மறந்து போற மாதிரி ஒண்ணும் உங்க பேச்சில்லையே!!”
“அதுக்காக அப்படியே விட்டிற முடியுமா… நம்ம லைப் நாம வாழ்ந்து தானே ஆகணும்… என்னைக்காச்சும் மாறும்ன்னு நீங்க தானே சொன்னீங்க…”
“உங்ககிட்ட இருந்து அந்த மாற்றம் எப்போ வரும்ன்னு எனக்கு தெரியாது… அது வரும் போது வரட்டும்ன்னு நான் சும்மாயிருக்க விரும்பலை…”
“ஓஹோ!! அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு இருக்கே??”
“இனிமே நீங்க பேசினாலும் பேசலைன்னாலும் நான் பேசிட்டே தான் இருப்பேன்…”
‘என்னமோ பண்ணிக்கோ’ என்பது போல் ஒரு பார்வை கொடுத்தான். “அவ்வளவு தானா பேசி முடிச்சிட்டியா… நான் தூங்கலாமா…”
“இப்போதைக்கு அவ்வளவு தான்… திங்கள்கிழமைல இருந்து என்னை கூட்டிட்டு போறது…” என்று இழுத்தாள்.
“நீயா தான் போகணும்?? இல்லைன்னா ஆட்டோ வைச்சிட்டு போ…” என்று திமிராய் சொல்லிவிட்டு படுத்தான்.
ஆனால் திங்கள் காலை நடந்த கூத்தில் தானே அவனாக அவளை கூட்டிச் செல்வதாய் சொல்லி அழைத்தும் சென்றான்…