Advertisement

அத்தியாயம் – 11

 

புடவை எடுத்து வந்த மறுநாள் இரு குடும்பமும் கல்யாண பத்திரிகை எடுத்துக்கொண்டு மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றனர் வழிபாடு செய்ய…

 

இருவீட்டின் சார்பாய் கடவுளுக்கு முதல் பத்திரிகை வைத்து வழிபாடும் முடிந்தது. இரு குடும்பமும் ஒரே வரிசையில் நின்றிருக்க மாறன் அவளருகில் வந்து நெருக்கமாய் நின்றுக்கொண்டான்.

 

பார்ப்போருக்கு அது இயல்பான ஒன்றாய் தோன்றினாலும் அவளால் அதை முழுதாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் பெரும் தவிப்பே!!

 

மதிய உணவை வெளியில் முடித்துக்கொண்டு ஒருவாறு அவர்கள் வீடு திரும்பினர். மாறன் அவ்வப்போது அவள் கை தொட்டு பேசுவது தோள் திருப்புவது என்று இருந்ததை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

 

வீட்டிற்கு வந்ததும் தலைவலி என்று அமர்ந்திருந்தவளுக்கு சூடாய் காபி கொண்டு வந்து கொடுத்தார் கனியமுது.

 

“என்னாச்சு புவி ஏன் டல்லாவே இருக்கே?? இந்த கல்யாண பேச்சு வந்ததுல இருந்தே நீ இப்படி தான் இருக்கே??”

 

“எங்களை எல்லாம் விட்டுப் பிரிய போறோம்ன்னு கவலையா இருக்கியாடா??” என்ற அன்னையின் கனிவான பேச்சில் விழியோரம் லேசாய் ஈரம் துளிர்த்தது.

 

“ஒண்ணுமில்லைம்மா…” என்றாள் பலகீனமான குரலில்.

 

“என்னடா…” என்றவர் அவள் முகம் பார்த்து அருகே வந்து தலைக்கோத அவரின் இடுப்பை கட்டிக்கொண்டு அப்படியே சாய்ந்துக் கொண்டாள்.

 

“என்னன்னு சொல்லு புவிம்மா??”

 

“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கணுமான்னு இருக்குமா… என்னமோ பயமா இருக்குமா…”

 

“நாம ஏற்கனவே பேசி வைச்சது தானே புவிம்மா… உனக்கு இப்போ என்ன பிடிக்கலை சொல்லு…”

 

“என்னன்னு சொல்லத் தெரியலைம்மா??”

 

“உன் மனசுல எதுவோ கவலைன்னு நினைக்கிறேன், என்னன்னு சொன்னா தானேம்மா தெரியும்…” என்றார் அவரும் விடாமல்.

 

சிறிது தயங்கியவள் பின் அதை உடைத்து “எனக்கு பிடிக்கலைம்மா… மாறன் என்னை தொட்டு தொட்டு பேசறான்மா எனக்கு என்னமோ போல இருக்கு…”

 

கனியமுதுவிற்கு திக்கென்றிருந்தது இது எப்போது நடந்தது என்று எண்ணி… ‘இல்லையே இவள் இங்கு வந்து இரண்டு மூன்று நாட்கள் தானே ஆகிறது… மாறனை பார்த்தும் அதே நாட்கள் தான் இருக்கும்…’

 

‘முதலில் புடவை எடுக்க சென்ற சமயம் பின் கோவிலுக்கு சென்றது… அங்கு தான் எல்லோருமே உடனிருந்தோமே!!’

 

‘ஒரு வேளை அவன் இவளை, தான் கட்டிக்கொள்ள போகும் பெண் தானே என்று உரிமையாய் தொட்டு பேசியிருப்பானாய் இருக்கும் அதை இவள் இப்படி எடுத்துக் கொண்டாளோ’ என்று எண்ணியது அவர் மனம்.

 

ஏனெனில் அவனை இவள் பார்த்த தருணம் அனைவருமே உடனிருந்ததால் தான் அவரால் அவ்வாறு நினைக்க முடிந்தது.

 

“புவி அவர் நீ கட்டிக்க போற பொண்ணு தானேன்னு உரிமையா பழகி இருப்பார்ம்மா…”

 

“இதென்னமா புதுசா… இந்த வீட்டுக்கு எத்தனை முறை அவர் வந்திருக்கார்… ஒரு முறையாச்சும் நான் இப்படி சொல்லி இருக்கேனா…”

 

“இப்போ கல்யாணம் பிக்ஸ் ஆகிட்டா தொட்டு பேசறதா…” என்று விடாமல் பேசியவளை கண்டு அவருக்கு அழுவதா சிரிப்பதா என்பதே தெரியவில்லை.

 

ஆகாத மாமியார் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்ற நிலை தான் அங்கு… அவளுக்கு திருமணம் பிடிக்கவில்லை அதற்கு இப்படி ஏதாவது ஒன்றை சொல்லுகிறாள் என்றே தான் அவருக்கு தோன்றியது.

 

திருமணம் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்றே எண்ணினார் அவர். “புவி அதே தான் நானும் சொல்றேன்… இவ்வளோ நாள்ல ஒரு முறை கூட அப்படி நடந்துக்காதவர் இப்போ மட்டும் அப்படின்னா ஒரு உரிமையில தானேம்மா செய்யறார்…”

 

“அதை ஒரேடியா தப்புன்னு சொல்ல முடியாதே… இதெல்லாம் தப்புன்னு சொல்ல நீ அந்த காலத்து பொண்ணும் இல்லையே… இந்த காலத்துல இதெல்லாம் சகஜம் தானேம்மா…”

 

“எனக்கும் உங்கப்பாக்கும் கல்யாணம் பேசி முடிச்ச பிறகு என்னை பார்க்கிற சாக்கில உங்கப்பா எத்தனை முறை வீட்டுக்கு வந்திருக்கார் தெரியுமா… தவிர நான் டைபிங் கிளாஸ் போவேன்னு தெரிஞ்சு அங்கயும் வந்து என்னைப் பார்த்து பேசி இருக்கார்…” என்று அவர் தன் கதையை சொல்ல புவனா சட்டென்று அமைதியானாள்.

 

அவளுக்குமே இதெல்லாம் புரிந்திருந்தது. ஆனால் மாறனின் தொடுகையை அவளால் ஏனோ அனுமதிக்க முடியவில்லை, இயல்பாகவும் எடுத்துக் கொள்ள இயலவில்லை.

 

மகளின் அமைதி கண்டு யோசனையானவர் “சரி புவி இனிமே மாறனும் நீயும் கல்யாணம் முடியற வரை அதிகம் பார்த்துக்காத மாதிரி நான் பார்த்துக்கறேன்… அப்படியே பார்க்க வேண்டி வந்தாலும் நான் கூடவே இருக்கேன் போதுமா…” என்று மகளை சமாதானம் செய்தார்.

 

அதுவே அந்நேரம் போதுமானதாக அவளுக்கு இருந்ததுவோ?? என்னவோ?? ஆனால் அந்த நிம்மதி மறுநாள் வரை கூட நீடிக்கவில்லை.

 

மாப்பிள்ளை வீட்டின் சார்பாய் அவர்கள் பெண் வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் வருவார்களென்று மகளை புடவை எல்லாம் கட்டச் சொல்லியிருந்தார் கனியமுது.

 

அவளும் பிடிக்கிறதோ இல்லையோ தயாராகித் தான் நின்றிருந்தாள். “என்ன புவனா டல்லா இருக்கே??” என்று ஆரம்பித்தார் அவளின் அத்தை.

 

“வேறென்ன எல்லாம் கல்யாண கவலை தான் அவளுக்கு. அம்மா அப்பா விட்டு பிரிஞ்சு வேற வீடு போறோமேன்னு கவலை தான் அண்ணி…” என்று மகளுக்கு முன்னே பதில் சொன்னார் கனியமுது.

 

“நல்லா சொன்னே போ கனி… மருமவ வேற எங்கிட்டாச்சும் போனா கவலைப்படலாம்… அவ நம்ம வீட்டுக்கு தானே வரப்போறா… சொந்த அத்தை வீடு தானே அதுக்கு எதுக்கு வருத்தப்பட்டுக்கிட்டு…” என்றார் அவளின் அத்தை.

வந்தவர்களை கனியமுதும் புவனாவுமாக உபசரித்து முடிக்க அவர்கள் கிளம்பும் தருணமும் வந்தது. மாறன் தன் அன்னையிடம் ஏதோ கண்ஜாடை காட்டுவது தெரிந்தது.

 

அவரும் பதிலுக்கு நீயே பேசு என்பது போல் ஜாடை காட்ட தொண்டையை லேசாய் செருமியவாறே “மாமா…” என்றிருந்தான் அவன்.

 

“சொல்லுப்பா…”

 

“நான் புவனா கூட்டிட்டு வெளிய போயிட்டு வரட்டுமா… அவளுக்கு ஒரு கிப்ட் வாங்கணும்ன்னு ஆசை, அவளை கூட்டிட்டு போய் வாங்கி கொடுக்கலாம்ன்னு…”

 

சக்திவேல் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகச்சுளிப்பே உணர்த்தியது. இருந்தாலும் மறுக்கவா வேண்டாவா என்ற நிலை அவருக்கு. தாமே ஏன் முடிவெடுக்க வேண்டும் என்று எண்ணி மனைவியை ஒரு பார்வை பார்த்தார்.

 

கனியமுது வேண்டாமென்பதாய் கண்ணசைவில் சொல்ல அது புரிந்தவர் “மாறா அதெல்லாம் வேண்டாமப்பா… இதெல்லாம் பழக்கமில்லை…”

 

“ஆனது ஆகிப்போச்சு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு கல்யாணத்துக்கு… அதுக்கு பிறகு அவளுக்கு நீ வாங்கி தரணுமோ வாங்கிக்கொடு…”

 

“சக்தி நீ எந்த காலத்துல இருக்கே… இப்போ எல்லாம் பொண்ணு மாப்பிள்ளை இப்படியா இருக்காங்க… அவன் தான் ஆசைப்படுறான்ல போயிட்டு வரட்டுமே…” என்று மகனுக்காய் வக்காலத்து வாங்கினார் மாறனின் தாய்.

 

“எந்த காலமா இருந்தா என்னக்கா ஆண் ஆண் தான் பெண் பெண் தான்… அதுல எந்த மாற்றமும் இல்லையே… எனக்கு இதுல அவ்வளவு இஷ்டமில்லை… தவிர நிச்சயம் பேசி முடிச்சாச்சு…”

 

“இனி அங்கிட்டு இங்கிட்டு வெளிய போறது நல்லதுமில்லை… அவ்வளவு தான் சொல்லுவேன்…” என்று முடித்துவிட்டார் அவர்.

 

“சரி ஓகே மாமா உங்க இஷ்டம்… எனக்கு ஒரே ஒரு விருப்பம்…” என்று சொல்லி நிறுத்தினான்.

 

என்னவென்பது போல் அவனை பார்த்தார் அவர். “புவனா கூட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும் இப்போ… போன் பண்ணா அவ என்கிட்ட ஒழுங்காவே பேச மாட்டேங்குறா…”

 

சக்திவேலுக்கு இதென்னடா இது சோதனை என்பதாகத் தான் இருந்தது. இதையும் வேண்டாம் என்று சொன்னால் நன்றாக இருக்காது என்றெண்ணியவர் “சரி பேசுங்க…” என்றுவிட்டார்.

 

மகளிடம் திரும்பி “புவிம்மா மாறன் ஏதோ பேசணுமாம்… மாடிக்கு கூட்டிட்டு போய் பேசிட்டு வா…” என்று அவர் சொல்ல இவளுக்கு உள்ளுக்குள் எரிந்தது.

தவிப்புடன் அன்னையை அவள் பார்க்க “ஒண்ணும் ஆகாது புவி நீ போயிட்டு வா…” என்று மெதுவாய் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் நம்பிக்கை கொடுத்தார் அவர்.

 

மாடியில் அவர்கள் இருவர் மட்டும், சில நொடி மௌனம் ஆட்சி செய்து கொண்டிருந்தது அங்கு. புவனா அங்கிருந்த அறைக்குள் செல்லாமல் வெளியிலேயே ஒரு பக்க சுவரோரமாய் நின்றுக் கொண்டாள்.

 

மாறனும் அவளுக்கு எதிரில் வந்து நின்றிருந்தான். ‘இவன் என்ன பேசப் போறான் இப்போ என்கிட்ட, பேசுவானா மாட்டானா எதுக்கு இப்படி இம்சை பண்றான்’ என்று அவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள்.

 

“என்ன புவி எதுவும் பேசவே மாட்டேங்குற??”

 

“என்ன பேசணும்??” என்றாள் சற்றே எரிச்சல் மண்டிய குரலில்.

 

“போன்ல பேச மாட்டேங்குற, நேர்ல வந்தாலும் பேச மாட்டேங்குற…”

 

“என்ன பேசன்னு எனக்கு தெரியலை…”

 

“நமக்கு கல்யாணம் ஆகப்போகுது புவனா…”

 

‘அதுக்கு ஆஹான்னு வந்து இழைஞ்சுக்கணுமோ…’ என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.

“உன்கிட்ட பேசலாம் உன்னை பார்க்கலாம்ன்னு எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா… உன்னைப்பார்த்தா என்னளவுக்கு கூட சந்தோசமே தெரியலையே…”

 

“இப்போ என்ன சொல்ல வர்றீங்க??”

 

“உனக்கு என்னை பிடிக்கலையா??”

 

‘பிடிக்கலைன்னா மட்டும் என்ன பண்ணப்போறே…’ என்று எண்ணிக்கொண்டு “எதுக்காக அப்படி கேட்கறீங்க??” என்று பதில் கேள்வி கேட்டாள்.

 

“அதான் சொன்னேனே என்கிட்ட பேச மாட்டேங்கறேன்னு…”

 

“அப்படி எல்லாம் எதுவுமில்லை…”

 

“அப்போ என்னை உனக்கு பிடிக்குமா…”

 

இதற்கு என்ன பதில் சொல்ல என்று பார்த்திருந்தாள். “சொல்லு புவனா…”

 

“பிடிச்சிருக்கா இல்லையா இதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியலை… இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் நடந்திருக்கலாம்ன்னு தோணிச்சு… மத்தப்படி வேற எதுவுமில்லை…”

 

“அவ்வளோ தானா நான் ரொம்ப பயந்துட்டேன் உனக்கு வேற லவ் கிவ்வுன்னு எதுவும் இருக்குமோன்னு…”

“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு… இனிமே என் கூட போன்ல ஒழுங்கா பேசு சரியா… எப்போடா உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு இருக்கு…” என்று அவன் சொல்வதை அவளால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.

 

அவள் இடக்கரத்தை இயல்பாய் தன் வலக்கரம் கொண்டு அவன் பற்றிக்கொள்ள அவள் உள்ளும் புறமும் தீயாய் தகித்தது.

 

மெதுவாய் அவன் கரத்தினின்று விடுபட முயல அவன் இறுக்கமாய் பற்றியிருந்தான் அவளை.

 

அவன் பிடித்திருந்த அவள் கரத்தை தன் உதட்டருகே அவன் கொண்டு செல்லும் தருவாயில் கடவுளைப் போல அவளின் அன்னை அழைத்திருந்தார் அவளை.

 

“புவனா இன்னுமா பேசிட்டு இருக்கீங்க கீழே வாங்க…” என்று குரல் கொடுக்க அவன் பிடி அதில் லேசாய் தளர்ந்திருந்ததை சாதகமாய் கொண்டு அவன் கையை உதறி “நான் கீழே போகணும்…” என்றுவிட்டு சென்றே விட்டாள்.

 

அதோ இதொவென்று கல்யாண நாளும் நெருங்கி வந்திருந்தது. விடிந்தால் திருமணம் என்றிருக்க முதல் நாளே மண்டபத்திற்கு வந்திருந்தனர் அனைவரும்.

 

ரிஷப்ஷன் நடக்க ஆரம்பிக்கும் தருணம் தன் அறையில் தயாராகிக் கொண்டிருந்த புவனாவிற்கு கண்கள் ஏனோ கரித்தது. அந்நேரம் அறைக்குள் நுழைந்த அவள் அன்னையை பார்த்தாள்.

 

மகளின் பார்வை உணர்ந்து அவளை நெருங்கி வந்து “என்னடா புவி??”

 

“எனக்கு கல்யாணம் வேணாம்மா…” என்றாள் மெதுவான குரலில்.

 

மகளின் பேச்சை கேட்டு திடுக்கிட்டவர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் அவர்களை கவனிக்கவில்லை என்று உணர்ந்ததும் “நீங்க எல்லாம் கொஞ்சம் வெளிய இருக்கீங்களா… புவனாக்கு புடவை அட்ஜஸ்ட் பண்ணணுமாம்… நான் பண்ணிட்டு கூப்பிடுறேன்…”

 

“நாங்க பண்றோம் ஆன்ட்டி…” என்ற ஒரு பெண்ணிடம் “இல்லைம்மா நானே பண்றேன்…” என்று நாசூக்காய் மறுத்து அவர்கள் வெளியே சென்றதும் கதவடைத்தார்.

 

“என்ன புவனா இப்படி பேசிட்டு இருக்கே… அன்னைக்கும் இப்படி தான் சொன்னே, என்னவோ புரியாம பேசறேன்னு நினைச்சேன்…”

 

“கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம்ன்னு நினைச்சேன்னு நீ சொன்னப்போ அதுனால தான் அப்படி சொல்றியோன்னு யோசிச்சேன்…”

 

“இன்னைக்கும் அதையே சொல்றியே… நாளைக்கு கல்யாணம் வைச்சுட்டு என்ன பேச்சு இதுன்னு யோசிச்சு பார்த்தியா… உங்கப்பாக்கு தெரிஞ்சா என்னாகும் சொல்லு…”

 

“ஏற்கனவே உங்க சின்ன அத்தை கல்யாண சமயத்துல ஓடிப்போனதுல உங்கப்பாக்கு ரொம்பவும் அவமானப்போச்சு… உனக்கே தெரியும் அந்த கதை எல்லாம்…”

 

“இப்போ நீ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க… ஒரு வேளை நீயும் உங்க அத்தை மாதிரியே யாரையாச்சும் விரும்ப…” என்று முடிக்காமல் நிறுத்தினார் அவர்.

 

அவர் கேள்விக்கு பதிலொன்றும் சொல்லாமல் “எனக்கு நெஞ்செல்லாம் அடைக்குற மாதிரி இருக்கும்மா… கல்யாணம் வேணாம்ன்னு தோணுது அவ்வளோ தான்…”

 

“இவ்வளோ தூரம் சொல்லிட்டேன் அப்பவும் உங்களுக்கு புரியலைன்னா என்ன சொல்லன்னு எனக்கே தெரியலை… உங்க இஷ்டம் போலவே நடக்கட்டும்… அது தான் என் தலைவிதின்னு ஏத்துக்கறேன்…” என்று கொஞ்சம் கோபமும் இயலாமையுமாய் சொல்லி அமைதியானாள் அவள்.

 

“அப்போ நீ யாரையும் விரும்பலைல…” என்று அவர் அதிலேயே நின்றார்.

 

“ரிஷப்ஷன்க்கு நேரமாச்சும்மா நான் வெளிய போறேன்…” என்றவள் அப்போதும் அதற்கு பதிலளிக்கவில்லை.

ஒரு வழியாய் ரிஷப்ஷன் முடிந்தது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் விடிகாலையே மண்டபம் விழிப்படைந்தது.

 

அப்போது தான் அது நடந்தது. மாப்பிள்ளையை காணவில்லை என்று அவளின் அத்தை அவர்கள் அறைக்கு தேடி வந்திருந்தாள்.

 

புவனாவிற்கு அது தான் புரியாத புதிராய் இருந்தது இந்த நிமிடம் வரை. மாறன் ஏன் மண்டபத்தை விட்டு ஓடினான், முதல் நாள் கூட அவளிடம் அப்படி வழிந்துக் கொண்டிருந்தவன் திருமணம் வேண்டாம் என்று ஓடியிருப்பான் என்பதை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

 

“என்னக்கா சொல்றே??” என்று சற்றே சூடேறிய குரலில் தமக்கையிடம் வினவினார் சக்திவேல்.

 

“என்னன்னு தெரியலை சக்தி… நைட் கூட அவன் பிரண்ட்ஸ் கூட தான் இருந்தான், நம்ம ஜானகி பையன் கூட அவனோடவே தான் இருந்தான்… காலையில சீக்கிரம் எழணும்ன்னு சொல்லிட்டு தான் வந்தேன்…”

 

“சரின்னு மண்டையை ஆட்டினானே… ஆனா இப்போ இப்போ அவனை காணோம்…”

 

“காணோம்ன்னா என்ன அர்த்தம்… எல்லா இடமும் தேடி பார்த்தாச்சா…”

 

“அதுக்கெல்லாம் அவசியமே இல்லாம போச்சு சக்தி…” என்று மென்று விழுங்கியவாறே அவன் எழுதி வைத்திருந்த துண்டு காகிதத்தை காட்டினார் அவர்.

 

“எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை… நான் செல்கிறேன்…” இவ்வளவு தான் அதில் எழுதி இருந்தது.

 

“இது மாறனோட கையெழுத்து தானா…”

 

“ஆமா…”

 

அவர் கைபேசியை எடுத்து மாறனின் எண்ணை அழுத்தினார்.

 

“போன் ஆப்ல இருக்கு சக்தி…” என்று அவர் தமக்கை சொன்னதும் அவரை எரித்துவிடும் பார்வை பார்த்தார்.

 

“அக்காவும் தங்கச்சி சேர்ந்து என்னை அவமானப்படுத்தணும்ன்னே நினைச்சீங்களா… எத்தனை நாள் திட்டம் இது சொல்லுங்க…”

 

“கல்யாணம் வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போக வைக்குறது தான் உங்க திட்டமா…. என்னை என்ன கேணப்பயன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா…” என்றவரின் குரல் கோபத்தை அப்பட்டமாய் பிரதிபலித்தது.

 

ஒரு புறம் அவமானம், ஒரு புறம் மகளின் திருமணம் கேள்விக்குறியாய் நிற்கிறது என்ற கவலை எல்லாம் சேர்ந்து அவரை மிருகமாக்கியது அக்கணம்.

எல்லோரும் இருக்கிறார்கள் என்று கூட பாராமல் உடன்பிறந்த தமக்கை என்றும் பாராமல் அவரின் கழுத்தை பிடித்து நெறிக்கவே ஆரம்பித்துவிட்டார்.

 

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்காங்கே சலசலப்புகள் எழ ஆரம்பித்தது. உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர்.

 

சக்திவேல் யாருக்கும் எதற்கும் கட்டுப்படவில்லை. எங்கிருந்து தான் வந்தாரோ அவர், சக்திவேலை அவர் சமாதானம் செய்ய ஆரம்பிக்கவும் தான் சற்றே மட்டுப்பட்டார் அவர்.

 

பின் என்ன நடந்ததோ அவர் தொடர்ந்து என்ன சொன்னாரோ அவளின் தந்தை அவளிருந்த அறைக்குள் வந்தார். அதன்பின் நடந்தெல்லாம் கனவு போல நடந்தேறிவிட்டது.

 

கனியமுதுவிற்கு மாறன் தன் மகளால் தான் ஓடிவிட்டானோவென ஒரு எண்ணம். அதை தனுஷின் வீட்டிற்கு கிளம்புவதற்கென மகள் அறைக்குள் தயாராகி கொண்டிருந்த போது அறைக்குள் வந்திருந்தவர் அவளிடம் கேட்டே விட்டார்.

 

“புவனா மாறன் கல்யாணம் வேணாம்ன்னு போனதுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமுமில்லையே” என்று அவர் கேட்க பதிலுக்கு அவள் பார்த்த பார்வையை சளைக்காமல் எதிர்கொண்டவர் அவள் வாய் திறந்து சொல்லும் சொல்லுக்காக காத்திருந்தார்.

 

“நான் தான் மாறனை ஏதோ சொல்லி அனுப்பிட்டேன்னு நீங்க நினைக்கறீங்களாம்மா…”

 

“நான் அப்படி சொல்லலை புவனா… நீயும் ஒரு காரணமான்னு எனக்கு தெரியணும்… நாளைக்கு அது வேற யார் மூலமாச்சும் தெரிஞ்சா உங்கப்பா என்ன செய்வார்ன்னு தெரியாது…” என்றார்.

 

“என் மேல உங்களுக்கு அவ்வளவு தான் நம்பிக்கையா… அப்பா மேல சத்தியமா நான் எதுவும் செய்யலைம்மா…” என்று அவள் சொல்லவும் மகளை அணைத்துக் கொண்டார் அந்த தாய்.

 

“எனக்கு தெரியும் புவி, இருந்தாலும் அதை உன் வாயால கேட்டு தெரிஞ்சுக்க தான் நினைச்சேன்…” என்றார்.

 

“போதும்மா என்னைப்பத்தி நீங்க எவ்வளவு உயர்வா நினைச்சு இருக்கீங்க… அதை நினைச்சா எனக்கு பூரிப்பா இருக்கு…” என்றாள் அவள் நக்கல் குரலில்.

 

“என்ன சொல்றே புவனா??”

 

“மனசுவிட்டு போச்சும்மா நீங்க இப்போ கேட்ட கேள்வியில…” என்றவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள் அப்போது.

 

அதன்பின் புவனா கனியமுதுவிடம் முகம் கொடுத்து எதுவும் பேசினாலில்லை. நடந்ததனைத்தும் படுக்கையில் சாய்ந்தவாறே அசைப்போட்டு முடித்திருந்தாள் அவள்.

 

மாறன் ஏன் திருமணம் வேண்டாம் என்று சென்றிருப்பான் என்று இந்த நிமிடம் வரை கூட அவளுக்கு தெரியவில்லை. அவன் நடந்து கொண்ட விதம் பார்த்தால் அது நம்ப முடியாததாகவே தோன்றியது அவளுக்கு.

 

இனி அவனைப்பற்றி சிந்தித்து அவளுக்கு என்ன ஆகப்போகிறது. காலம் தான் அவளின் விதியை மாற்றி வைத்திருக்கிறதே…

 

தேவா இதை எப்படி எதிர்கொள்வான் என்ற எண்ணத்திற்கு அவள் சிந்தனை செல்ல வாரம்பித்தது…

Advertisement