Advertisement

அத்தியாயம் – 10

 

வாயிலிலேயே முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்தார் வேணுகோபால் உடன் யாகாஷும். கையில் ஆரத்தி தட்டுடன் அவர்கள் ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணொருவர்.

 

தனுஷின் பார்வையில் தந்தை குறித்தான பெருமிதம் அவரின் உற்சாகம் அவனையும் தொற்றிக்கொண்டது. தன்னையுமறியாமல் அவன் பார்வை பின்னால் சென்றது பார்த்தீர்களா என்பது போல்.

 

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். தனுஷ் ஆலம் சுற்றியவருக்கு ஆயிரம் ரூபாயை தட்டில் வைத்தான்.

 

அந்த வீடு பெண்ணில்லாத வீடு என்று யாருமே சொல்ல மாட்டர். வீடு அவ்வளவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

 

வந்தவர்களை அழகாய் வரவேற்று உபசரித்தனர். அவர்கள் அமர இருக்கைகளும் போடப்பட்டிருந்தது. பெண்கள் அமருவதற்கு தனியாய் விரிப்பும் போட்டிருந்தனர்.

 

வேணுகோபால் மகனையும் மருமகளையும் நோக்கி “முதல்ல போய் விளக்கேத்தி சாமி கும்பிடுங்க…” என்று பொதுவாய் சொன்னவர் பின் மருமகளிடம் “இங்க பூஜை ரூம்ன்னு பெரிசா எதுவுமில்லைம்மா… இந்த ஷெல்ப்ல தான் சாமி படமும் விளக்கும் வைச்சிருக்கோம்…”

“அந்த படத்துக்கு எல்லாம் உன் கையால பூப்போட்டு அந்த விளக்கை ஏத்திடும்மா…” என்றவரிடம் சரி என்பதாய் தலையாட்டினாள் அவள்.

 

அந்த வீட்டின் ஹாலிலேயே ஒரு மூலையில் கிழக்கு நோக்கி அமைந்திருந்த அந்த ஷெல்பில் சில சாமி படங்களும் வேறு சில படங்களும் இருந்தன.

 

“தேவா ஹெல்ப் பண்ணு…” என்று மகனுக்கு ஜாடை காட்டினார் அவர்.

 

“வா…” என்று ஒற்றைச்சொல் உதிர்த்து அவளுடன் நடந்தான்.

 

அதற்குள் சக்திவேல் தன் மனைவியிடம் “கனி கூட போ…” என்றார்.

 

முதல் தட்டில் சாமி படங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் தட்டில் ஒரு பெண்மணியின் புகைப்படமும் அடுத்து கணவனும் மனைவியுமாக ஒரு புகைப்படமும் இருந்தது.

 

“இவங்க என்னோட தாத்தாவும் பாட்டியும்… என்னோட அப்பச்சி எனக்கு இன்னொரு அம்மா…” என்று சொல்லும் போது குரல் நெகிழ்ந்து ஒலித்தது அவனுக்கு.

 

“இவங்க என்னோட அம்மா…” என்று அடுத்த படத்தையும் சுட்டினான். விழியோரத்தில் லேசாய் ஈரத்தின் சாயல் அதை மறைத்து இயல்பாய் நின்றான். அங்கு இருந்த பூவை கனியமுது எடுத்துக்கொடுக்க அதை வாங்கியவள் படங்களுக்கு போட்டுவிட்டு விளக்கேற்றினாள்.

 

இருவரும் ஒன்றாய் கண்மூடி வேண்டிக்கொண்டனர். ‘விரும்பியும் விரும்பாமலும் நடந்துவிட்ட இந்த திருமணம் கடைசி வரை நிலைத்திருக்க வேண்டுமென்பதாய் இருந்தது அவன் வேண்டுதல்.

 

கண்ணை திறந்தவன் அருகில் நின்றிருந்தவளை பார்த்தான். அவளோ இன்னமும் கண் மூடியே நின்றிருந்தாள். ‘இவள் என்ன வேண்டுதல் வைத்திருப்பாள்’ என்று உள்ளே லேசாய் ஒரு குறுகுறுப்பு அவனிடத்தில்.

 

அதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு “அப்பா” என்றழைத்தான். அவன் அழைப்பில் அவளும் தன் வேண்டுதல் முடித்து கண் திறந்திருந்தாள்.

 

“சொல்லு தேவா…” என்றார் அவர்.

 

“கொஞ்சம் இப்படி வந்து நில்லுங்க…” என்றவன் அவர் முன்னே வரவும் “எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கப்பா…” என்றுவிட்டு அவளை ஒரு பார்வை பார்க்க அதை புரிந்தவளாய் அவளும் அவனுடன் அவரின் தாள் பணிந்து வணங்கினாள்.

 

மகனின் செயலில் நெகிழ்ந்து போனவர் இருவரையும் எழுப்பி நெற்றியில் விபூதி கீற்றிட்டார். பின் அவரின் கண்ணசைவில் யாகாஷ் வேகமாக உள்ளே சென்றிருந்தான்.

பின் மகனையும் மருமகளையும் தனியே அழைத்து “இன்னையில இருந்து நீ இந்த வீட்டு பொண்ணும்மா, நம்ம வீட்டுக்கு வந்தவங்களை நீங்க தான் உபசரிக்கணும்” என்று அவர் சொல்லி முடிக்கவும் யாகாஷ் சில கோப்பைகள் அடங்கிய தட்டுடன் வந்தான்.

 

“இதை வாங்கிக்கோம்மா…” என்று அவர் சொல்ல அவள் அதை வாங்கிக் கொண்டாள்.

 

“தேவா கூட போ…”

 

இருவருமாய் அனைவரையும் உபசரிக்க அந்த வாய் துடுக்கு சித்தியும் அவளுடன் இணைந்து கொண்ட அவளின் ஒன்றுவிட்ட அத்தையும் சும்மாயில்லாமல் “எங்க வீட்டு பொண்ணை வைச்சு எங்களுக்கே உபசாரமா…” என்று ஆரம்பிக்க அவளின் அத்தை தொடர்ந்தார்.

 

“எந்த வீட்டிலயாச்சும் இது நடக்குமா கல்யாணம் ஆகி வந்த முத நாளே எங்க வீட்டு பொண்ணை இப்படி வேலை வாங்குறீங்களே…” என்று அவரும் நொடித்தார்.

 

சக்திவேலுக்கும் கனியமுதுவிற்கும் இவர்களை ஏன் தான் தங்களுடன் கூட்டி வந்தோமோ என்றிருந்தது. தங்கள் பெண் ஒன்றும் சாதாரண வீட்டில் வாக்கப்படவில்லை நல்ல குணமானவர்களின் வீட்டில் தான் அவளை கொடுத்திருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவே உறவினர்கள் சகிதம் வந்திருந்தனர்.

 

சக்திவேல் வேணுகோபாலை முன்பே அறிவார். அவர் பணிபுரியும் வங்கியில் தான் அவரின் வங்கி கணக்கும் உள்ளது.

 

அவ்வப்போது பார்த்து பேசி என்று நல்ல நட்பாக பழகியிருந்தனர் இருவரும். நண்பர் குணத்தில் மட்டுமல்ல பொருளாதாரத்தில் எந்த விதத்திலும் குறைவில்லாதவர் என்பதும் அவர் முன்பே அறிந்ததே.

 

அதனால் தான் திருமணம் நின்று போய் செய்வதறியாது அவர் திகைத்து நின்ற போது நண்பர் தாமாய் முன் வந்து தன் மகனுக்கு அவர் பெண்ணை கொடுக்க கேட்டப்போது சற்றும் யோசிக்காமல் சம்மதம் சொன்னார்.

 

உறவினர்கள் அனைவரும் நின்று போன திருமணத்தை பற்றி கண்டதும் பேச எந்த உறவுமல்லாது தோழனாய் தோள் கொடுக்க வந்த வேணுகோபால் தெய்வமாய் தெரிந்தார் அவருக்கு.

 

தீடிரென்று முடிவெடுத்து நடந்துவிட்ட திருமணத்தையும் குறை கூறவென உறவினர் கூட்டமும் இருந்தது. ஏற்கனவே சக்திவேல் தன் பெண்ணை கூத்தடிக்க அனுப்பிவிட்டார் என்று தன் காதுபடவே பேசிய கூட்டமும் உண்டு. அதனாலேயே அவர் உறவினர்களுடன் அதிகம் ஒட்டுதல் இல்லாமலிருந்தார்.

 

குடும்ப நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது புவனா சென்னை சென்றதை கூட ஓரிருவர் பேசத்தான் செய்தனர் அப்போது.

அப்படி குறை பேசும் கூட்டத்தின் முன் தான் ஒன்றுமில்லா குடும்பத்தில் தன் மகளை கொடுக்கவில்லை என்று காட்டவே அவர்களை அழைத்து வந்தார்.

 

ஆனால் அதுவே வினையாகிப் போனதோ என்று எண்ணினார். நிலைமையை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு ஒன்றும் புரிபடவில்லை சட்டென்று மனைவியை தான் பார்த்தார்.

 

அவர் தான் பார்த்துக் கொள்வதாக கண்மூடி திறக்க அதில் சற்று நிம்மதியானார் அவர். “என்னண்ணி இப்படி சொல்லிட்டீங்க… புவனா இனிமே இந்த வீட்டு பொண்ணு தானே…”

 

“இந்த வீட்டு பொண்ணா வந்தவங்களை அவ தானே உபசரிக்கணும்… அது தானே முறையும் கூட” என்றார் கனியமுது.

 

“இந்த வீட்டு பொண்ணா இருந்தாலும் நம்ம பொண்ணுன்னு இல்லைன்னு ஆகிடுமா என்ன… நாங்களும் ஒத்துக்கறோம் அவ இனி இந்த வீட்டு பொண்ணு தான்னு…”

 

“அதுக்காக வந்த முத நாளே வேலை செய்ய வைக்குறாங்க…”

 

அதுவரையில் பொறுத்து பொறுத்து பார்த்திருந்த பொறுமையின் சிகரம் புவனா தன் பின் பாதி பெயரை போல் பொங்க ஆரம்பித்தாள்.

“அத்தை என் வீட்டில நான் வேலை செய்யறேன்… அதுக்கு உங்களுக்கு எங்க வலிக்குது… நீங்க என்னமோ எல்லா வேலையும் செய்யற மாதிரி அலுத்து சலிச்சுக்கறீங்க…”

 

“கல்யாணம் நின்னுப்போனப்போ எப்படி எல்லாரும் வாயை பொத்திட்டு இருந்தீங்களோ அப்படியே இப்பவும் இருக்கறது தானே…” என்று வெடுக்கேன்றே கேட்டு வைத்தாள்.

 

“புவி…” என்று மகளை அடக்கினார் கனியமுது.

 

“நல்லா தான் பேசுறடியம்மா… உனக்கு வாய் ஓயாம பேச சொல்லியா தரணும்… நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ… ஏங்க இப்படி தான் எங்களை கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்துவீங்களா…” என்று அவர் பொறிய ஆரம்பித்தார்.

 

பேச்சு எங்கெங்கோ போவதை உணர்ந்த வேணுகோபால் “எல்லாரும் மன்னிச்சுக்கோங்க புவனா உங்க வீட்டு பொண்ணா இருந்தாலும் இந்த வீட்டுக்கு அவ தான் மகாராணி…”

 

“இங்க வந்தவங்களை நல்லபடியா கவனிச்சுக்க வேண்டியது எங்க எல்லாரோடைய கடமை அதை தான் நாங்க செஞ்சோம்… இதுல எதுவும் தப்புன்னு மன்னிச்சுக்கோங்க…” என்று சொன்னார் அவர்.

 

அவரே வாய் திறந்து பேசவும் சக்திவேல் இப்போது தன் உறவினர்கள் லேசாய் முறைக்க ஆரம்பித்தார். “நம்ம பொண்ணை இங்க கொடுத்திருக்கோம்… அந்த மரியாதை எல்லாம் இல்லாம என்ன பேச்சு இது…”

 

“இங்க இருக்கவங்களை பேசுறதும் நம்ம பொண்ணை பேசுறது போல தானே இனி… நாம இங்க நம்ம பொண்ணை அவ வீட்டில விட்டுப் போக வந்திருக்கோம்… தேவையில்லாத பேச்சு இனி யாரும் பேச வேண்டாம்” என்று முடித்துவிட்டார் அவர்.

 

தனுஷ் நடப்பதனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானோ?? அன்றி வெடிக்க காத்துக் கொண்டிருந்தானோ?? அவனேயறிவான்.

 

அந்த பெண்மணி பேச ஆரம்பித்த போதே அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவனே நினைத்திருக்க புவனாவே அவர்களுக்கு பதில் கொடுத்தது கொஞ்சம் திருப்தி தான் அவனுக்கு.

 

இருந்தும் கடைசியாய் தன் தந்தை மன்னிப்பை வேண்டியதை அவன் விரும்பவில்லை. தவறொன்றும் செய்யாமல் ஏன் மன்னிப்பு வேண்ட வேண்டும் என்பதே அவன் எண்ணம்.

 

புவனாவின் தம்பி இப்போதும் முறைத்துக் கொண்டே தான் நின்றிருந்தான் அவனை பார்த்து. ‘இவன் என்னடா எப்போ பார்த்தாலும் என்னை முறைக்கிறான்…’

 

‘என்னமோ நான் வேணுமின்னே இவன் அக்கா கல்யாணத்தை நிறுத்தி நான் கல்யாணம் கட்டிக்கிட்ட மாதிரி என்னை முறைச்சு வைக்குறான்’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“என்னப்பா பாலாஜி அங்க தனியா நிக்குற?? இங்க வந்து உன் மாமாகிட்ட பேசிட்டு இரு…” என்று வேணுகோபால் அவன் கைப்பிடித்து அழைத்து வந்து தனுஷின் அருகில் நிற்க வைத்தார்.

 

“அதெல்லாம் ஒண்ணும்மில்லைங்க நா… நான் இங்கயே நிக்கறேன்…” என்று நெளிந்தான் அவன்.

 

“அப்பா அவனை அவன் போக்குல விட்டிருங்க… அவனுக்கு எல்லாத்தையும் ஏத்துக்க அவகாசம் கொடுங்க…” என்றான் தனுஷ்.

 

பின் அனைவருக்கும் சிற்றுண்டி கொடுத்து பின் கொஞ்சம் சாவகாசமாய் பேசிக்கொண்டிருக்க யாகாஷ் தனுஷை அழைத்தான்.

 

“என்னடா??”

 

“இன்னைக்கு நைட் எப்படிடா??”

 

“என்ன??”

 

“டேய் இன்னைக்கு நைட்க்கு எப்படின்னு கேட்டேன்??”

 

“எதை கேட்க வர்றே??” என்றவன் முறைத்தவாறே கேட்டிருந்தான்.

 

“நீ என்ன நினைக்கறியோ அதே தான்…”

 

“அறிவிருக்கா உனக்கு…”

 

“டேய் என்னை எதுக்குடா திட்டுறே?? உன்கிட்ட நேரடியா கேட்க முடியாம எல்லாம் என்னை தூதுவிட்டாங்க… நான் வெறும் அம்பு தான்டா… எதுவா இருந்தாலும் பெரியவங்களை கேளு…”

 

“யார் உன்கிட்ட கேட்க சொன்னா??”

 

“எல்லாரும் தான்…”

 

“எல்லாரும்ன்னா…”

 

“அப்பா, உங்க மாமனார் இவங்க தான்…”

 

“அதெல்லாம் எதுவும் வேணாம்ன்னு சொல்லு… நடந்த கல்யாணமே பெரிய அதிர்ச்சி, இதுல அதெல்லாம் வேறயா அது எதுவும் வேணாம்…”

 

“நடக்க வேண்டியது எதுவா இருந்தாலும் அது காலப்போக்குல இயல்பா நடக்கணும்…”

 

“அவ்வளோ நல்லவனாடா நீ!! ஊருக்குள்ள உனக்கு தான்டா சிலை வைக்கணும்… அப்புறம் வேறென்ன செய்யப் போறதா உனக்கு உத்தேசம்…”

 

“வேறென்ன??”

 

“உன் பொண்டாட்டி உன் கூட உன் ரூம்ல இருக்கலாமா இல்லை… அவங்க அவங்களோட அம்மா வீட்டுல இருக்கட்டுமா…”

 

“நீ தான் நல்லவனுக்கு நல்லவனாச்சே, காலம் மாத்தும் அது இதுன்னு பேசுவியே… பேசாம அவங்களை அவங்க அம்மா வீட்டில விட்டு வைச்சிருவோமா…”

 

“நான் அப்படி சொன்னேனா… சும்மா நீயே கண்டதும் பேசாத… இந்த நைட் சம்பிரதாயம் தான் வேண்டாம்ன்னு சொன்னேன்…”

 

“மத்தபடி என்ன முறையோ அதை அப்படியே செய்யட்டும்… நான் அதுக்கெல்லாம் எதுவும் சொல்லலை…” என்றுவிட புவனாவின் வீட்டினர் அவளை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் மட்டுமாய் கிளம்பிச் சென்றனர்.

 

புவனாவிற்கு தனியே இருக்க சங்கடமாய் இருக்கும் என்றெண்ணி கனியமுது முதலில் தயங்கினார். புவனாவின் முகமும் கலவரத்தை தான் சுமந்திருந்தது அந்நேரம்.

 

மறுநாள் விருந்துக்கு அழைக்க வருவதாகச் சொல்லி அவர்கள் கிளம்பும் தருணம் தனுஷே வாய்விட்டு கேட்டுவிட்டான்.

 

“மாமா இது அவங்களுக்கு புது இடம் தயக்கமா இருக்கும்… நீங்க யாராச்சும் கூட இருந்தா நல்லாயிருக்கும் இல்லையா…”

அவருக்குமே அது சரியென்றுபட்டது. இருந்தாலும் யாரை விட்டுச் செல்வது என்ற யோசனையாய். உறவினர் பெண்மணிகள் கண்டதும் பேசி அப்போது தான் பேச்சு ஓய்ந்திருந்தது.

 

ஒரு நிமிடம் யோசித்தவர் கனியமுதுவின் உடன்பிறந்த தங்கை சித்ராவின் பெண்ணை அவளுக்கு துணையாய் விட்டுச் சென்றனர்.

 

தனுஷ் அவனறையில் தனியே படுத்திருந்தான். நேற்று இந்நேரம் வரையிலும் கூட புவனா தன் மனைவியாவாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

 

நிஜமாகவே அவனால் நம்ப இயலவில்லை. அவ்வப்போது தன்னைத்தானே கிள்ளி பரிசோதித்துக் கொண்டான் அவன். யாகாஷும் அவனும் ஒரு அறையில் படுத்துக்கொள்ள புவனா அவள் தங்கையுடன் அடுத்த அறையில் தங்கினாள்.

 

அப்போது தான் தனுஷ் தன் கையை தானே கிள்ளிப்பார்த்து கொண்டிருந்ததை பார்த்தவாறே உள்ளே நுழைந்தான் யாகாஷ்.

 

“ஆஆ!! எருமை!! எதுக்குடா?? என்னை கிள்ளினே??”

 

“நீ தனியா உன்னை கிள்ளிப் பார்த்திட்டு இருந்த, நீயா உன்னை கிள்ளினா உனக்கு வலிக்காதுல அதான் நானே கிள்ளிவிட்டேன்… நம்புடா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு… அதுவும் நீ விரும்பின பெண் கூடவே…”

“அதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன் யாகாஷ்… இது எப்படி நடந்துச்சு?? இது இயல்பா நடந்துச்சா இல்லை எப்படின்னு எனக்கே புரியலை…”

 

“அப்பா தாலி கட்டச் சொன்னார் நானும் கட்டிட்டேன்… எனக்கு தெரிஞ்ச வரையில மாப்பிள்ளை ஓடிப்போயிட்டான்… எதுக்காகன்னு எனக்கு தெரியலை…”

 

“நேத்து நீ தானே அப்பா கூட போனே… அங்க என்ன நடந்திச்சு?? எப்படி இந்த திடீர் திருப்பம்??” என்றான் தனுஷ்.

 

யாகாஷ் முதல் நாள் தானறிந்த(?) வரையில் அவனிடம் சொல்ல ஆரம்பித்தான். அடுத்த அறையில் புவனாவும் உறங்க முடியாமல் அவள் ஊருக்கு வந்த பின்னில் இருந்து நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டாள்.

____________________

 

“புவி… இன்னைக்கு முகூர்த்த புடவை எடுக்க போகணும்… மாறனும் ஊர்ல இருந்து வந்திட்டான்… நீங்க பார்த்து நாளாச்சுல… இன்னைக்கு நாம எல்லாரும் சேர்ந்து தான் புடவை எடுக்க போறோம்…” என்றார் கனியமுது.

 

“என்ன புவனா நான் பேசிட்டே இருக்கேன்… நீ எதுவும் சொல்லாம இருக்கே??”

 

“என்னம்மா சொல்லணும்…”

 

“மாப்பிள்ளை வர்றார்டி, நாம புடவை எடுக்க போகணும்… நீ போய் உடனே புடவை கட்டிட்டு கிளம்பி வா… போன வருஷம் தீபாவளிக்கு எடுத்த பட்டுப்புடவை கட்டு, அது உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்…” என்றார்.

 

“ஹ்ம்ம் சரிம்மா…” என்றவள் சுரத்தேயில்லாமல் கிளம்பி வந்தாள்.

 

அதோ இதொவென்று அவர்கள் கிளம்பி புடவை கடைக்கும் வந்தாயிற்று. “ஹாய் புவன்” என்று இவளைக் கண்டு வேகமாய் அவளருகில் வந்தான் மாறன்.

 

“புவன் சும்மா சொல்லக்கூடாது… ஹ்ம்ம் செம போ… பணம் இருந்தா காக்காகூட கலரா மாறிடும்ன்னு ஏதோ ஒரு படத்துல சொல்லுவான்…”

 

“சென்னை போனதும் நீயும் ஆளு அம்சமாகிட்ட, சும்மா கும்ன்னு இருக்கே போ…” என்று காதுக்கருகில் பிறர் அறியாவண்ணம் அவன் பேசிய பேச்சு அவளுக்கு அறவே பிடிக்கவில்லை…

 

இரண்டு வருடத்திற்கு முன் அவன் எப்படி இருந்தான் என்று அவளுக்கு அதிகம் நினைவிலில்லை. ஆனால் இப்போதோ அவன் பேசும் நடவடிக்கையும் ஒன்றும் சரியாய் தோன்றவில்லை அவளுக்கு.

 

அவன் பேச்சுடன் நிற்கவில்லை. புடவை எடுக்கும் சாக்கில் அவன் கை தெரியாமல் பட்டது என்று அவள் நினைத்திருக்க அடுத்த முறையோ அது வேண்டுமென்றே பட்டதை அவள் உணர்ந்தாள்…

 

அத்துடன் அவன் வேலை நிற்கவில்லை… அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்தது வெவ்வேறு வடிவில்…

Advertisement