Advertisement

அத்தியாயம் – 5

 

தனுஷின்சிறு வயதிலேயே அவன் தாய் உடல்நலம் குன்றி இறந்துவிட்டார். தந்தையும் வேறு திருமணம் என்ற ஒன்றை நினையாமல் மகனுக்கு தாயுமானவராகிப் போயிருந்தார்.

 

அவர் வேலைக்கு சென்று விடும் சமயங்களில் அவன் பாட்டியிடம் தான் வளர்ந்தான். அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை. பாட்டியும் அவன் நான்காம் வகுப்பு படிக்கும் போதே இறந்து போனார் மூப்பின் காரணமாய்.

 

அதன்பின் வீட்டில் ஆண் மக்கள் இருவர் மட்டுமே. கொஞ்சம் வளர்ந்துவிட்டான் என்பதால் அவனும் வீட்டில் தனியாகவே இருக்க பழகிக்கொண்டான்.

 

தனுஷின் தந்தை வேணுகோபாலன் வங்கி ஊழியர். அவர்கள் அப்போது தஞ்சாவூரில் இருந்தனர். மகன் ஏங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காய் அவன் தந்தை அனைத்தும் பார்த்து பார்த்து செய்வார் எப்போதும்.

 

அவன் அன்னை, தந்தை, தோழன் யார் என்று கேட்டால் மூன்றுக்கும் ஒரே பதிலையே சொல்லும் அளவிற்கு இருவருக்கும் நெருக்கம். இருவர் மட்டுமே வீட்டில் என்பதால்அன்றாட நிகழ்வுகளை பரிமாறிக்கொள்வர் எப்போதும்.

 

வேணுகோபாலனும் மகனுக்கு புரிகிறதோ இல்லையோ அவர் அலுவலகத்தில் இது நடந்தது அது நடந்தது என்று எதையாவது சொல்லிக்கொண்டே தானிருப்பார். அது மகன் பெரியவனாகியும் கூட தொடர்ந்தது.

 

தனுஷ் அவன் விருப்பப்படி கேட்டரிங் டெக்னாலஜியை தேர்ந்தெடுத்திருந்தான். அவனுக்கு அது தான் விருப்பம் என்று அறிந்த பெற்றவரும் மகனை மறுத்ததில்லை. அவருக்கு பதவி உயர்வுடன் கோவைக்கு மாற்றலாகியது.

 

மகனை தஞ்சையில் தனியே விட்டுச்செல்ல மனமில்லாமல் பதவிஉயர்வு வேண்டாம் என்று அவர் இருக்க விஷயம் கேள்விப்பட்ட தனுஷ் அவரை கட்டாயப்படுத்தி ஊருக்கு அனுப்பி வைத்தான்.

 

“நான் என்ன இன்னும் சின்னப்பிள்ளையாப்பா… ஒரு வருஷம் தானே என் படிப்பு முடிஞ்சதும் நானும் ஊருக்கு வந்திட போறேன்…”

 

“உங்க பிள்ளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான்னு நீங்க கவலையேப்பட வேணாம். அதெல்லாம் நானே சமைச்சு நானே சாப்பிட்டுப்பேன்…” என்ற மகனை கோபமில்லாமல் முறைத்தார் அவர்.

 

“நீ சமைச்சு நீயே சாப்பிடுவியா… அப்போ நான் என்ன சாப்பிடுறது…” என்றார் அவர் சிறுப்பிள்ளைபோல்.

 

அவர் சொன்னதில் அவனுக்கு சிரிப்பு வந்திட “ஹா ஹா… அப்பா ஒரு வருஷம் தான்… சொடக்கு போடுறதுக்குள்ள ஓடிரும்… நான் லீவ்க்கு வந்து போறேன்… அப்போ சமைச்சு தரேன் போதுமா…” என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

 

சொன்னது போலவே படிப்பு முடிந்ததும் அவனால் கோவைக்கு செல்ல முடியவில்லை தஞ்சையிலேயே ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் சூழல் மேலும் ஒரு வருடம் அங்கேயே தங்க நேர்ந்தது.

 

அதன் பின் தான் கோவைக்கு வந்து சேர்ந்தான்.வந்தவனுக்கு அவன்தந்தையின் சிபாரிசின் பேரில் ரெசிடென்சி ஹோட்டலில் வேலையும் கிடைக்க அங்கு செல்ல ஆரம்பித்தான்.

 

உடன் அவன் நண்பனும்அவனுடன் பயின்றவனுமான யாகாஷையும் தன்னுடன் அழைத்துக்கொண்டான்.

 

இப்படிநாட்கள் மெதுவாய் சென்றுக் கொண்டிருந்த ஓர் நாளில் அவன் தந்தை அன்று அவன் திருமண பேச்சை எடுத்தார்.

 

“தேவா உனக்கு பொண்ணு பார்க்கட்டுமா…” என்றார் அவர் காலை உணவின் போது.

 

சட்டென்று அவனுக்கு புரையேறிக் கொள்ள“என்ன… என்னப்பா சொன்னீங்க??”

 

“எவ்வளவு நாள் தான் நாம ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தையே ஒருத்தர் பார்த்திட்டு இருக்கறது… உன் சமையலை சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கும் போரடிக்குது… அதான் உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்…”

 

“ஆஹான் என் சமையல் உங்களுக்கு போர் அடிக்குதா… அப்போ சரி ஒரு பொண்ணை பார்த்து உங்களுக்கு வேணா கல்யாணம் பண்ணிருவோம்…” என்றான் அவன்.

 

“டேய் நான் உன்னை சிக்க வைக்கலாம்ன்னு பார்த்தா நீ என்னடா தம்பி என்னை மாட்டி வைக்குறே… என் காலம் முடிஞ்சு போச்சு… நான் சீரியஸா தான் சொல்றேன்ப்பா உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா…” என்றார் அவன் முகம் பார்த்து.

 

“எனக்கு கல்யாணத்துக்கு இப்போ என்னப்பா அவசரம்…” என்றான் அவனும் விளையாட்டை விட்டு…

 

“உனக்கு இப்போ பார்க்க ஆரம்பிச்சா தானே சரியா இருக்கும்…”

 

“எனக்கு வயசு ஒண்ணும் அதிகமில்லையேப்பா…”

 

“இல்லை தான் ஆனா இந்த வீட்டில ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்ல… நீ என்ன சொல்ற?? உனக்கு லவ் கிவ்வுனு இருந்தா சொல்லிடு… உன் விருப்பம் தான்…”

 

“அப்படில்லாம் ஒண்ணுமில்லைப்பா… ஆனா கொஞ்சம் பொறுங்கப்பா நானே சொல்றனே… அதுவரைக்கும் நீங்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்…” என்றுசொல்லியிருந்தான் அன்று.

அவரிடம்அப்படிபேசிவிட்டு வந்த அன்று தான் முதன் முதலாய் புவனாவை பார்த்திருந்தான். இப்போது நினைத்து பார்த்தாலும் அவனுக்கு புரியவில்லை அவள் மேல் எப்படி தனக்கு ஈர்ப்பு வந்தது என்று.

 

ஒரு வேளை தந்தை பெண் பார்ப்பது பற்றி பேசியதாலோ அன்றி அவள் குரலோ எதுவோ ஒன்று அவனை ஈர்த்தது உண்மை.

 

தந்தையிடம் எப்போதும் எதையும் மறைத்ததில்லை தனுஷ். ஆனால் இந்த காதல் கள்ளம் கொண்டதாயிற்றே!! அது பெற்றவர்கள் உற்றவர்கள் அனைவரிடத்தும் இருந்து தான் பிரித்து வைக்குமே!!

 

அவரிடம் சொல்லக் கூடாது என்றெல்லாம் அவன் எண்ணவில்லை. இருவருக்கும் பிடித்தம் என்றானதும் சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தான் அவன்.

 

ஆனால் அதைபெற்றவர் கண்டுக்கொள்ளாமல் போவாரா என்ன!! கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டு தானிருந்தார் மகன் செய்யும் அலும்புகளை.

 

காலையில் அவன் நேரம் பார்த்து கிளம்புவதும் தன் உடையில் கவனம் கொள்வதும் அவரை மகனை பார்க்கச் செய்தது.

 

அவனாய் வாய் திறப்பானென்று அவரும் கண்டும் காணாமல் இருந்துக்கொண்டார்.

____________________

 

மகளையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் கனியமுது. என்றுமில்லா படபடப்பு இன்று அவளிடத்தில், உடன் சிறு நடுக்கமும்.

 

முகமோ குழப்பத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்தது. “இன்னைக்குஒருத்தன் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணினானே யார் அவன்… அதை நினைச்சு நீ டிஸ்டர்பா இருக்கியா??” என்று சரியாக பாயிண்ட்டை பிடித்து கேட்டார் அவர்.

 

தலையில் இருந்து கையை எடுத்தவள் நிமிர்ந்து “ம்மா…” என்றாள்.

 

“அம்மான்னா என்ன அர்த்தம், அதுதானே காரணம்…” என்று இழுத்தார் அவர்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை… லேசா தலைவலி அவ்வளவு தான்…” என்று சமாளித்தாள் அவள்.

 

“நீ தானே சொல்லுவ இது போல பப்ளிக் பிகரா இருந்தா சில நன்மைகள் சில கெட்டதுன்னு… இதெல்லாம் அங்க சகஜம்ன்னு நீ தானே சொல்லியிருக்க… அதை எப்பவும் போல ஒதுக்கி தள்ளிட்டு போக வேண்டியது தானே…”

 

“இதுக்கு முன்னாடி எல்லாம் அப்படி தானே புவனா செஞ்சே… இப்போ மட்டும் என்னம்மா யோசனை, எல்லாம் விட்டுத்தள்ளும்மா…” என்றார் அவர்.

 

ஒதுக்கி தான் தள்ளியிருப்பாள் அவள், சொல்லியது யாரோ முகம் தெரியா மனிதனாயிருந்தால்!! சொல்லியவன் யாரென்று அவளறிவாளே!! நன்றாய் பழகியவன் நண்பன் போல என்றவள் எண்ணியிருக்க அவன் காதலை சொன்னது அவளுக்குமே அதிர்ச்சியே!!

 

எப்போதும் போல் அதை ஒதுக்கி தள்ள முடியவில்லை, அது ஏனென்றும் புரியவில்லை… புரிந்துக்கொள்ள அவள் விரும்பவுமில்லை.

 

இது என்ன புது தலைவலி என்பது போன்ற பாவம் இப்போது அவளிடத்தில். தன் பாவனைகளையே பார்த்துக் கொண்டிருக்கும் அன்னையை நோக்கி திரும்பினாள்.

 

“ஒரு காபி கொடும்மா…” என்றிருந்தாள் இப்போது.

 

அவரும் ஒன்றும் பேசாது வெளியில் எழுந்து சென்றார். அவர் அப்புறம் செல்லவும் மீண்டும் தலையில் கையை வைத்துக்கொண்டாள்.

 

தவறு அவள் மீது தானே, சும்மா இருந்தவனை உசுப்பேற்றியது அவள் தான். தன்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லியவனை ஊரறிய சொல்ல வைத்தது இவள் தானே!!

 

நடந்தவைகள் கண் முன் வந்து சென்றது. தினமும் என்றில்லாமல் அவ்வப்போது தேவாவின் அழைப்பு அவள் நிகழ்ச்சிக்கு வந்துக் கொண்டு தானிருந்தது. வாரத்தில்மூன்றோ அல்லது நான்கு நாட்களோ அவன் அழைப்பு வந்தவண்ணம் இருந்தது.

 

அவள் மனமும் அவன் குரலை அவ்வப்போது எதிர்ப்பார்த்தது என்பதும் அவள்ஒத்துக்கொள்ள விரும்பாத உண்மையே!!

 

போனில் மட்டுமே கேட்ட குரலை நேரிலும் அவள் பார்க்கும் நாளும் விரைவிலேயே வந்தது ஓர் நாள். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பரிசு பெற்றவர்களுக்கு அப்பரிசை நேரிலேயே அழைத்துக் கொடுக்க முடிவு செய்திருந்தது அத்தொலைக்காட்சி.

 

அதிர்ஷ்டவசமாய் தேவ்தனுஷும் அன்று சரியாக பதிலளித்து இருந்ததால் அவனுக்கும் அழைப்பு வந்திருந்தது.

 

அந்த வார இறுதியில் கோவையின்ஃபன் மாலில் நடைபெறும் விழாவில் நேரில் வந்து அழைப்பிதழை காண்பித்து பரிசை பெற்றுக் கொள்ளுமாறு உடன் ஒரு குறிப்புடன் அழைப்பிதழ் இருந்தது.

 

அவனுக்கு இரு மனதாய் இருந்தது போகலாமா வேண்டாமா என்று. தான் நேரில் சென்றால் புவனா என்ன மாதிரி ரியாக்ட் செய்வாள் என்று எண்ணியவன் அங்கு செல்ல வேண்டும் என்று உறுதியாய் முடிவெடுத்துக் கொண்டான்.

 

விழா நாளும் வந்திருந்தது. தனுஷிற்கு அன்று விடுப்பு நாளாக இருந்ததால் அவன் விழா ஆரம்பிப்பதற்கு முன்பே மாலிற்கு சென்றுவிட்டான்.

 

உடன்வருவேன் என்று அடம் பிடித்த யாகாஷை விட்டுவிட்டு வருவதற்குள் பெரும்பாடானது அவனுக்கு. யாகாஷுக்கும் அன்று விடுப்பு தினமே.

 

சினிமாவிற்கு செல்லலாம் என்று அழைத்திருந்தவனை தான் கழற்றிவிட்டு வந்திருந்தான் அவன். விழா நேரம் தொடங்குவதாக இருக்க கீழே இறங்கி வந்திருந்தவன் அந்த மாலில் நடுநாயகமாய் அமைக்கப் பெற்றிருந்த சின்ன மேடையை நோக்கி நகர்ந்தான்.

 

தூரத்திலேயே அவன் வரவை கண்டுவிட்டாள் புவனா. ஏனோ தேவாவின் குரலை அவள் மனம் அவனுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

எதிரில் வந்தவன் அவளுடன் ஒரே நாளில் இரண்டு முறை பேசியிருக்கிறான். அன்று அவன் பேசியவைகள் மட்டுமே நினைவில்(?!) இருந்தவளுக்கு அவன் குரலை அடையாளம் காண முடியவில்லை.

 

‘இவன் எங்கே இங்கே?? ஒரு வேளை மாலை சுத்திப்பார்க்க வந்திருப்பானோ??’ என்று எண்ணியவளின் பார்வை அவனையே வட்டமிட்டது.

 

அதை உணர்ந்திருந்தவன் போல் தனுஷ் கீழே இருந்த கடை ஒன்றுக்குள் நுழைந்திருந்தான் இப்போது.

 

‘ஹப்பா நாம நினைச்ச மாதிரி இவன் சுத்திப்பார்க்க தான் வந்திருப்பான் போல… நாம நம்ம வேலையை பார்ப்போம்’ என்று எண்ணியவள் வேறு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

விழாவிற்கு பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு நடிக்க வந்திருந்த நடிகை கவிதாஸ்ரீ சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

 

விழாவும் ஆரம்பித்துவிட்டது, அவர்கள் தொலைக்காட்சியின் சின்ன அறிமுகம் பின்னர் சிறப்புவிருந்தினர்குறித்தும் நிகழ்ச்சி குறித்தும் சிறு உரை முடிந்த பின்னே பரிசு பெற்றவர்களை ஒவ்வொருவராய் அழைத்தனர்.

 

புவனாவிடம் வந்திருந்தவர்களின் பெயர்கள் அடக்கிய குறிப்பு கொடுக்கப்பட்டது. சிலர் முன்பே வரமுடியாது என்றிருந்தார்கள்.

 

இன்னும் சிலரோ வருகிறோம் என்று சொல்லி வாராமல் போயிருந்தனர். மொத்தம் இருபத்தியைந்து பெயரில் பதினெட்டு பேர் தான் வந்திருந்தனர்.

 

வந்திருந்தவர்கள் பெயர் பட்டியலில் நான்காவது பெயரே தேவாவினது பெயராய் இருந்தது. ஒரு சிறு புருவ முடிச்சு விழுந்தது அவளுக்கு. கவனிக்காமல் போனோமே அவனை என்று எண்ணிக்கொண்டு பெயர்களை அழைத்தாள்.

 

தேவாவின் பெயர் அழைக்கப்பட கடைசி வரிசையில் அமர்ந்திருந்தவன் எழுந்து வரவும் உள்ளே அவளுக்கு சுரம் தப்பியது.

 

அவள்உள்ளுணர்வு பொய்யாகாமல் அவள்நிகழ்ச்சிக்குதொடர்ந்து அழைத்த தேவாவின் குரலும் அவளுக்குஅறிவுரை செய்தவனும் ஒருவனே என்பதை உணர்ந்தாள்.

 

அவளை பார்த்தவனோ லேசாய் ஒரு புன்சிரிப்பை பரிசாக்கி பின் அவனுக்கு கொடுத்த பரிசை வாங்கிச் சென்றான்.

 

ஒருவழியாய் விழாவும் முடிய அவளை நோக்கி வந்தான் நம் நாயகன். “ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க??” என்றான் உள்ளார்ந்த குரலில்.

 

“ஹ்ம்ம் ந… நல்லாயிருக்கேன்…” ஏனோ வார்த்தைகள் திக்கியதுஅவளுக்கு அப்போது.

 

“உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு, அழகா பேசறீங்க… அழகா தொகுத்து வழங்குறீங்க…” என்றான்.

 

மீண்டும்அவளுக்கு சட்டென்று வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்கொள்ள ஒரு வழியாய் “தே… தேங்க்ஸ்…” என்றாள்.

 

ஆச்சரியமாய் அவளை பார்த்தவன் “பர்ஸ்ட் டைம் கேக்குறேன்…”

 

“எ… என்னது??”

 

“உங்க நன்றியை தான்…”

 

அவன் குரலில் கிண்டல் இருந்ததோ என்ற எண்ணம் அவளுக்கு. உடனே சுறுசுறுவென்று கோபம் எழுந்தது.அவள் மனசாட்சி தவறு அவள் மேல் என்று எடுத்துக் கொடுக்க இப்போது அவளுக்குள் லேசாய் குற்றவுணர்வும் தலைத்தூக்க “சாரி…” என்றிருந்தாள்.

 

“இதுவும் முதல் முறையா கேக்குறேன்…” என்றவன் லேசாய் இடைவெளிவிட்டான். அவள் முகம் சுருங்கிப் போனது.

 

“நான் எதையும் எதிர்பார்க்கிறது இல்லை… எதிர்ப்பார்ப்பு இருந்தா தானே ஏமாற்றம் வரும்… இந்த சாரி, தேங்க்ஸ் இதெல்லாம் அதுல அடக்கம் தான்… சரி கிளம்பறேங்க…” என்றுவிட்டு கிளம்பிச் சென்றும் விட்டான்.

 

‘இவன் என்ன மாதிரி மனிதன்’ என்ற ஆராய்ச்சி அவளுக்குள் இப்போது. அந்த சந்திப்பிற்கு பிறகு பேருந்து நிலையத்தில் சந்திக்கும் போது ஹாய், ஹலோ என்ற பரிமாற்றங்கள் அவர்கள் உறவில் ஒரு படி முன்னேற்றம் தான்.

 

தங்கள் எண்களை பகிர்ந்து கொள்ளுமளவிற்கு அவர்கள் உறவு வளர்ந்திருந்தது.தனுஷிற்கு அவள் பால் மனம் செல்கிறது என்பதை உணர்ந்ததுமே அதை அவளிடம் உடனே சொல்லிவிட வேண்டும் என்ற ஆவலும் உடன் எழுந்தது.

 

தக்க சமயத்தில் தன் மனதை அவளிடம் உரைக்க வேண்டும் என்று அவன் எண்ணியிருந்த நேரத்தில் ஒரு நாள் புவனாவே அவனை அழைத்தாள் அவனிடம் நேரில் பேசவேண்டுமென்று…

Advertisement