Advertisement

அத்தியாயம் – 12

 

“என்ன யாகாஷ் சொல்றே?? அந்த மாப்பிள்ளை எதுக்கு ஓடினான்னு உனக்கும் தெரியாதா??”

 

“நீ என்னடா நான் தான் அவனை ஓட வைச்சேன் அப்படிங்குற மாதிரி கேட்கறே…”

 

“எனக்கு இப்போவரை புரியலைடா எப்படி கல்யாணம் நடந்துச்சுன்னு…”

 

“அவளுக்கு கல்யாணம் நடக்க போகுதுன்னு உனக்கு முன்னமே தெரியுமா… நீ தெரிஞ்சு தான் அங்க போனியா??”

 

“அடேய்!! அடேய்!! ஏன்டா!! அங்க போற வரைக்கும் கல்யாண பொண்ணு இவங்க தான்னு எனக்கு தெரியவே தெரியாதுடா…”

 

“அப்போ அங்க போன பிறகு உனக்கு தெரியும்…”

 

“ஹ்ம்ம் ஆமாம்…”

 

“அப்போ நீ தான் கல்யாண மாப்பிள்ளையை ஓடவிட்டியா??”

 

“அடேய்!! உனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது… இங்க பாரு எனக்கு தெரிஞ்ச அளவுல சொல்றேன். நல்லா கேட்டுக்கோ…”

 

“அங்க போனபிறகு தான் பொண்ணு புவனான்னே எனக்கு தெரியும்… நான் அப்பாவைவிட்டுட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்…”

 

“திரும்பவும் அவரை கூப்பிடறதுக்கு ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் அங்க போனேன்… அப்போ கூட எல்லாம் நல்லபடியா தான் போயிட்டு இருந்துச்சு அங்க…”

 

“காலையில நாங்க கல்யாணத்துக்கு போகும்போது தான் மாப்பிள்ளை காணாம போனது எங்களுக்கு தெரியும்… அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே…” என்று பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டான் யாகாஷ்.

 

“இருந்தாலும் என்னவோ எங்கயோ இடிக்குது யாகாஷ். அவன் ஏன் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னான்… அதெப்படி சரியா எனக்கும் நான் அவளுக்கும் கல்யாணம் நடந்துச்சு எனக்கு அது தான் புரியலை…”

 

“என் விருப்பத்தை நிராகரிச்சவ என்னை எப்படி கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா… எப்படி இது எப்படி நடந்துச்சு??”

 

‘ஆத்தி இவன் என்ன இப்படி யோசிக்கறான்… இது நல்லதில்லையே…’ என்ற எண்ணம் தோன்ற “இங்க பாரு தனு நடக்கிறது எல்லாம் விதிப்படி தான் நடக்குது…”

 

“இது தான் நடக்கணும்ன்னு கடவுள் சித்தம் போல அதுவே நடந்திருச்சு… நல்லது தானே நடந்திருக்கு இதுக்கு நீ கடவுளுக்கு நன்றி தானே சொல்லணும்…”

 

“இனிமே இதெல்லாம் யோசிக்கறதுவிட்டு உன் வாழ்க்கையை எப்படி நல்லவிதமா வாழ ஆரம்பிக்கறதுன்னு யோசி…” என்றான் யாகாஷ்.

 

“இருந்தாலும்…” என்று இழுத்தவனை நோக்கி கையெடுத்து கும்பிட்ட யாகாஷ், “என்னை ஆளைவிடு சாமி… எதுவா இருந்தாலும் உன் வாழ்க்கையை முடிவு பண்ண உங்கப்பாகிட்டயே பேசிக்கோ…” என்று எஸ்கேப் ஆக முயன்றான் யாகாஷ்.

 

“நான் அப்பாகிட்டையே கேட்கிறேன் என்றுவிட்டு இரவு உறங்கியவன் மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் முதல் வேலையாய் அவன் தந்தை வேணுகோபாலின் முன் தான் நின்றிருந்தான்.

 

காலையிலேயே கையில் காபியுடன் மகன் வந்து நிற்கவும் “நான் இன்னும் பிரஷ் பண்ணலை தேவா… ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு நாம எல்லாரும் சேர்ந்து குடிக்கலாம்…”

 

“மருமக எழுந்தாச்சாப்பா??”

 

“தெரியலைப்பா…”

 

“இதென்ன பதில் தேவா…”

 

“வேற என்னப்பா சொல்லணும்…”

 

“அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு புதுசு தேவா… இனிமே நீ தான் பார்த்துக்கணும் எல்லாம்…”

 

அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. “என்ன தேவா நான் என்ன சொல்றேன்னு…”

 

“புரியுதுப்பா… திடிர்ன்னு எல்லாம் மாறிட்ட மாதிரி இருக்கு… நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”

 

“பேசலாம்… முதல்ல நம்ம வீட்டு பொண்ணையும் கூட தங்கியிருக்கவங்களையும் கவனி…”

 

“நான் பார்த்துக்கறேன்…” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

சமையலறைக்கு செல்ல அங்கு இவனுக்கு முன்னே யாகாஷ் நின்றிருந்தான். “வாடா நீ வருவேன்னு தெரியும் அதான் பால் காய்ச்சு வைச்சு இருக்கேன்… காபி நீயே போட்டு உன் வீட்டம்மாவுக்கு கொடு…” என்று சற்று தள்ளி நின்றான் அவன்.

 

அவனை ஒரு முறை முறைத்துவிட்டு அவன் காபி தயாரித்தான். ‘இவன் எதுக்கு என்னை முறைக்கிறான், என்னமோ என் பொண்டாட்டிக்கு இவனை காபி போட சொன்ன மாதிரி…’ என்று நினைத்துக் கொண்டான் யாகாஷ்.

 

“இதை அவங்களுக்கு கொடு…”

“என்னது நானா…”

 

“நீ தான் போ… போய் சொன்னதை செய்…”

 

“என்ன விளையாடுறியா நான் மாட்டேன்ப்பா…” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

“நான் எப்படி…” என்று வாய்விட்டே முணுமுணுத்துக் கொண்ட தனுஷ் வேறு வழியில்லாமல் காபி கோப்பை அடங்கிய தட்டை எடுத்துக்கொண்டு அவர்கள் அறை வாயிலில் வந்து நின்றான்.

 

அவன் கதவை தட்டப்போக சரியாக அது திறந்தது. எதிரில் குளித்து முடித்து புதுப்புடவை உடுத்தி பளிச்சென்று நின்றிருந்தாள் அவன் மனைவி.

 

வேண்டாம் என்றாலும் அவன் பேச்சை கேளாமல் கண்கள் பார்வையை ஓட்டியது அவளின் மேல். சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்டவன் “காபி…” என்று நீட்டினான்.

 

“தேங்க்ஸ்…” என்று சொல்லி அதை கைநீட்டி வாங்கிக் கொண்டாள் அவள்.

 

அவனுக்குள் லேசாய் ஒரு பெருமூச்சு இருவரும் விரும்பி இந்த திருமணம் நடந்திருந்தால் இந்த காபி கோப்பையை இந்நேரம் அவள் கொண்டு வந்திருப்பாள் என்று தோன்றாமலில்லை அவனுக்கு.

 

திரும்பி நடக்கப் போனவன் சற்று நின்று அவளை நோக்கி திரும்பினான். காபி கோப்பையை வாங்கியவள் இன்னமும் அறைக்குள் செல்லாமலே நின்றிருந்தாள்.

 

ஏனென்ற எண்ணம் தோன்றினாலும் எதுவும் கேட்கவில்லை அவன். “உங்களுக்கு டிபனுக்கு என்ன செய்யட்டும்??”

 

“இல்லை நான் சமைக்கட்டுமா…”

 

“பரவாயில்லை நானே சமைக்கறேன்… எனக்கு பழக்கம் தான்…”

 

“இல்லை வந்து நான்…”

 

“வந்த முதல் நாளே எல்லாம் செய்யணும்ன்னு அவசியம் இல்லை… என்ன புடிக்கும்ன்னு…”

 

“எதுனாலும் ஓகே தான்…”

 

“காபி சாப்பிடுங்க…” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான்.

 

அவனின் ஒட்டாத இந்த பேச்சு அவளுக்கு எதுவோ போலிருந்தது.

 

‘என்னை விரும்புவதாக அவன் சொல்லியதெல்லாம் நிஜமில்லையா… இல்லை என்னை அடியோடு மறந்துவிட்டானா…’ என்று அடிமனதில் தோன்றி அவள் நெஞ்சில் பாரத்தை ஏற்றி வைத்தது.

 

‘தான் அவனை நேசிக்கிறோமா இல்லையா’ என்றறியாதவள் அவள் மீதான அவனின் நேசத்தை பற்றிய ஆராய்ச்சிக்கு சென்றாள்.

 

தேவாவின் வீட்டின் பின்புறத்தில் சிறிய தோட்டம் ஒன்று உண்டு. அதில் ஓரத்தில் அமைந்திருந்த புல்வெளியில் ஒரு வட்ட மேஜையும் இருவர் மட்டும் அமருவதற்கு வசதியாய் இருக்கையும் உண்டு.

 

அதில் தான் எதிரெதிரில் அமர்ந்திருந்தனர் தேவ்தனுஷும் வேணுகோபாலும்.

 

சில நொடி கனத்த மௌனம் அங்கு. இருவரும் யோசனைகளினூடே காபியை பருகிக் கொண்டிருந்தனர்.

 

“அப்பா…”

 

“ஹ்ம்ம்…” என்ற முணுமுணுப்பு அவரிடத்தில்.

 

“என்னாச்சுப்பா நேத்து?? எனக்கு தெளிவா சொல்லுங்க… உங்களுக்கு புவனாவை ஏற்கனவே தெரியுமா??”

 

“நீ விரும்புற பொண்ணு யாருன்னு கூடவா நான் தெரிஞ்சு வைச்சுக்க மாட்டேன் தேவா…”

 

“நான் உங்ககிட்ட காமிக்கவே இல்லையே…”

 

“ஊரறிஞ்ச ஒரு முகம் அதை நீ எனக்கு தனியா வேற காட்டணுமா என்ன… யாகாஷ் காமிச்சுட்டான்…”

‘இந்த யாகாஷ் சரியான முந்திரிகொட்டை எதுக்கு இப்படி பண்ணான்…’ என்று அவசரமாய் நண்பனை திட்டினான் மனதிற்குள்.

 

“நான் உங்ககிட்ட காட்டலைன்னு…”

 

“சக்சஸ் ஆகியிருந்தா செஞ்சிருப்ப, அதில்லாதப்போ நீ வேற என்ன செஞ்சிருக்க முடியும்… எனக்கு உன்னோட நிலைமை தெரியும்…”

 

“அதெல்லாம் போகட்டும்ப்பா நேத்து எப்படி நீங்க அங்க போனீங்க… புவனாக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சே தான் நீங்க போனீங்களா…”

 

“ஹ்ம்ம் தெரியும்…”

 

“அப்போ அந்த கல்யாணம் நின்னதுக்கு காரணம்…”

 

“அதுக்கு காரணம் அந்த மாப்பிள்ளை கல்யாணம் வேணாம்ன்னு போனது தான்…”

 

“எனக்கு புரியவேயில்லைப்பா ரொம்ப குழப்பமா இருக்கு… என்னமோ எல்லாம் திட்டம் போட்டு நடந்த மாதிரி இருக்கு… ஆனா அப்படில்லைங்கற மாதிரியும் இருக்கு… எது நிஜம் உடைச்சு சொல்லுங்கப்பா…”

 

“சக்திவேல் நிஜமாவே எனக்கு நண்பர் தான்… அவர் புவனாவோட அப்பான்னு தெரிஞ்ச பிறகு தான் எனக்கு நண்பராவே ஆனார்…”

 

“ஹ்ம்ம் உண்மை தான் தேவா… அவர்க்கு என்னோட பிரான்ச்ல தான் அக்கவுன்ட் இருக்கு… அவர் தான்னு தெரிஞ்ச பிறகு சும்மா பேசுவோம்ன்னு ஆரம்பிச்சது தான்… நாளடைவில நல்ல நட்பா மாறிச்சு”

 

“அந்த அடிப்படையில தான் அவர் பொண்ணோட கல்யாணத்துக்கு என்னை அழைச்சார்… நானும் போனேன்… அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் தெய்வச்செயல்…” என்றார் அவர்.

 

“நீங்க தெரிஞ்சே தான் அவர் கூட பிரண்ட் ஆனீங்களா?? எதுக்குப்பா?? அதுக்கு என்ன அவசியம்…”

 

“ஒரு வேளை உன் சைடு ஓகே ஆனா, அவங்ககிட்ட போய் பேச ஈசியா இருக்கும்ன்னு நினைச்சேன்… கடைசியில இந்த கல்யாணம் இப்படி நடக்கும்ன்னு நினைக்கலை தேவா…”

 

‘இவர் என்ன மனிதர்…’ என்று அவன் தந்தையை பற்றிய எண்ணம் தான் அவனுக்கு ஓடியது. மேற்கொண்டு எதையும் கேட்டு அவரை வற்புறுத்தவில்லை அவன்.

 

“என்ன தேவா உன்னோட டவுட்டு எல்லாம் கிளியர் ஆகிடுச்சா…”

 

“டவுட்டு எல்லாம் இல்லைப்பா… நடந்ததை என்னால நம்ப முடியலை… அதுனால தான் என்ன நடந்துச்சுன்னு உங்ககிட்ட கேட்டேன்ப்பா…”

 

“சரி தேவா இனிமே நீ நடந்ததை நினைச்சு எந்த குழப்பமும் வைச்சுக்காதே… இனிமே உன்னோட வாழ்க்கை புவனாவோட!!”

 

“நல்லா நினைவில வைச்சுக்கோ நீ ஆசைப்பட்ட பொண்ணோட உனக்கு கல்யாணம் நடந்திருக்கு… கண்டதும் யோசிச்சு உங்க சந்தோசத்தை கெடுத்துக்க வேணாம்…”

 

“எனக்கு சந்தோசமாயிருக்கா இல்லையான்னே புரியலைப்பா… ஏதோ ஒரு நிம்மதி மட்டும் தான்… மேற்கொண்டு என்னாகப் போகுதுன்னு எனக்கு தெரியலை… பார்ப்போம்…”

 

“விரக்தியா எல்லாம் பேசாத தேவா… நம்ம வீட்டுக்கு உன்னை நம்பி வந்த பொண்ணு அதோட சந்தோசம் நம்ம இனி உன் கையில தான்… எக்காரணம் கொண்டும் அந்த பொண்ணு வருத்தப்படக் கூடாது…”

 

“சரிப்பா…” என்று அவரிடம் தலையாட்டிவிட்டு நகர்ந்தான்.

 

ஆயிற்று அவர்கள் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு இரண்டு மாதம் ஓடிவிட்டது. அவளோரிடம் அவனோரிடம் என்று தனித்தனியே சென்றுக் கொண்டிருக்கிறது அவர்கள் வாழ்க்கை.

 

“ஹாய் ஹெலோ நான் உங்க பீ.எஸ்… இது நம்ம நிகழ்ச்சி தூங்காத விழிகள் ரெண்டு… வாங்க நேரடியா நேயரோட பேசலாம்” என்று ஆரம்பித்தாள் புவனா.

ஆம் புவனா இப்போது சென்னையில் தானிருக்கிறாள். வழக்கம் போல அவள் தங்கியிருக்கும் அதே இடம், அதே வேலை சுற்றியும் அதே மனிதர்கள்…

 

என்ன இப்போது அவள் திருமணமாவள் அது மட்டுமே புதிது. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது அவளை தனிமை பெரிதும் வாட்டியதாகவே அவளுக்கு தோன்றியது.

 

இரண்டு வருடத்திற்கு முன் அவளிடம் உரிமையோடு பேசிய அந்த தேவா தொலைந்து போயிருந்தான். இப்போது தன் கணவனாய் இருக்கும் இந்த தேவாவிடம் உயிர்ப்பில்லை.

 

அவன் பேச்சில் செயலில் ஏதோவொரு விலகல் தன்மையை அவளால் உணர முடிந்தது. அவன் அவளை இங்கு கொண்டு வந்து விடுவதற்கு முன் நடந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்து போனது.

 

அவர்கள் திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்திருக்கும். தனுஷ் தன் வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தான்.

 

இதுவரை அந்த வீட்டில் மூவராய் இருந்தவர்கள் போய் இனி நால்வர் அவ்வளவு தான் அந்த வித்தியாசம் என்பது போல் அந்த வீடு எப்போதும் போல் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

 

புவனாவிற்கு தனியே வீட்டில் இருக்க ஒரு மாதிரியாக தான் இருந்தது. தனுஷ் பத்து மணிக்கு மேல் தான் ஹோட்டலுக்கு செல்வான், வேணுகோபால் வங்கிக்கு ஒன்பது மணிக்கு முன்னதாகவே சென்றுவிடுவார்.

 

அவளுக்கு அந்த வீட்டில் சமைக்க கூட வழியில்லை. தனுஷ் ஹோட்டலில் சமைப்பதை அவளுக்கு வீட்டிற்கு அனுப்பிவிடுவான்.

 

காலையிலும் இரவிலும் அவனும் யாகாஷுமாக சமைப்பார்கள். என்னடா இது உப்புசப்பில்லாத வாழ்க்கை என்று தான் தோன்றியது அவளுக்கு.

 

இந்நிலையில் ஒரு நாள் காலை உணவின் போது யாகாஷ் “அப்பா நான் ரூம் பார்த்திட்டு போகலாம்ன்னு இருக்கேன்…”

 

என்ன?? எதுக்கு?? என்று ஒரு சேர்ந்தவாறே வேணுகோபாலும் தனுஷும் கேட்டார்கள்.

 

“எனக்கு பிரைவசி வேணும் அதான்…” என்றவனை தனுஷ் முறைத்த முறைப்பில் கப்சிப்பென்று ஆனான் அவன்.

 

வேணுகோபாலோ எதையோ தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். “ஹ்ம்ம் நீ சொல்றது சரி தான் யாகாஷ்… ஆனா நீ இப்போ தனியா போக வேண்டாம்…”

 

“உனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன்… உனக்கு கல்யாணம் முடிஞ்சதும் நீ தனியா போ…” என்றார் அவர் உறுதியான குரலில்.

 

“இல்லைப்பா அது வந்து வேணாம்ப்பா… முன்ன நாம மூணு பேரும் தான் நானும் யோசிக்காம வந்து தங்கிட்டேன்… இப்போ நீங்க எல்லாம் ஒரு குடும்பம் நான் என்னமோ…”

 

“வாயை மூடு யாகாஷ்…” என்று கத்தினான் தனுஷ்.

 

அதுவரை நடப்பதை ஒரு மூன்றாம் மனுஷியாய் பார்த்துக் கொண்டிருந்த புவனாவிற்கு தன்னை முன் வைத்து தான் அவன் அப்படி சொல்லியிருக்கிறான் என்பது புரிந்தது.

 

தான் இங்கு பேச வேண்டியதின் அவசியம் புரிய “நான் கொஞ்சம் பேசலாமா…” என்றவளை மூவரும் திரும்பி பார்த்தனர்.

 

“எனக்காக தான் நீங்க வேற இடம் போறீங்கன்னு நினைக்கிறேன்… அது ஏன்னு எனக்கு தெரியலை… இவர்க்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தா இப்படி தான் வீட்டை விட்டு போவாங்களா…”

 

“இல்லை தானே… நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்ஆ இருந்தா கூட மாமா உங்க ரெண்டு பேரையும் மகனா தானே பார்க்கறாங்க… இனிமே இந்த மாதிரி நீங்க பேச வேண்டாம் சரிங்களா…” என்று முடித்துவிட்டு அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

இங்கு மற்ற மூவரும் தான் பே என்று விழித்துக் கொண்டிருந்தனர் அவளின் பேச்சில்.

 

புவனா வீட்டில் தனித்து போரடித்து கொண்டிருப்பது கண்டு ஒரு முடிவுக்கு வந்திருந்தான் தனுஷ். அது அவளை மீண்டும் வேலைக்கு அனுப்புவது என்று.

 

அன்று மாலை நேரமாக வீட்டிற்கு வந்தவன் அவளிடம் பேச வேண்டும் என்று அவளறைக்கு வந்திருந்தான்.

 

“இனிமே நீ… நீங்க வேலையில ஜாயின் பண்ணலையா…”

 

“வேலையா… அது…” என்று இழுத்தாள் அவள்.

 

“வேலை தான் அதை கண்டினியூ பண்ணுங்க…”

 

“இல்லை வேணாம்… அப்பா…” என்று இழுத்தாள்.

 

“யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க… நீங்க வேலையில ஜாயின் பண்ணுங்க…” என்றுவிட்டு சென்றான்.

 

புவனா மீண்டும் வேலைக்கு செல்வதில் சக்திவேலுக்கும் பூரணிக்கும் சுத்தமாய் விருப்பமில்லை. வேணுகோபால் இப்போதே செல்ல வேண்டுமா என்று மட்டும் கேட்டார்.

 

அதிகம் இருவர் விஷயத்திலும் அவர் தலையிடவில்லை. தனுஷ் தான் விடாப்பிடியாய் நின்று அவள் மீண்டும் வேலையில் சேர உதவினான். அவனே சென்னை வரை கொண்டு வந்து அவளை விட்டுச் சென்றான்.

காலையில் கிளம்பியவர்கள் மதியம் சென்னை வந்தடைந்திருக்க மதிய உணவை முடித்துக்கொண்டு அவளை கொண்டுச் சென்று அவள் தங்கியிருந்த இடத்தில் விட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானான்.

 

“கொஞ்சம் நில்லுங்க…” என்ற அவளின் குரலில் சென்றவன் திரும்பி நின்றான் அவளை நோக்கியவாறே.

 

“உங்களுக்கு இந்த கல்யாணம் நடந்தது பிடிக்கலையா…” என்ற அவளின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தான் ‘இப்போ தான் உனக்கு கேட்கணும்ன்னு தோணுச்சா…’ என்பது போலிருந்தது அவன் பார்வை.

 

“சொல்லுங்க உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணதுல சந்தோசம் இல்லையா…” என்றாள் மீண்டும்.

 

“இல்லை… நிச்சயமா இல்லை…” என்று தெளிவாய் வந்த அவன் பதிலில் இவள் தான் திகைத்திருந்தாள்.

Advertisement