Advertisement

அத்தியாயம் – 6

 

எங்கிருந்தோ“தேவா” என்ற அழைப்பு அவனின் நினைவு சங்கிலியை அறுக்க அது தடைபடுவது விரும்பாதவன் போன்று அவன் கட்டிலில் திரும்பி படுத்தான். அவனருகே யாகாஷ் படுத்திருந்தான்.

 

யாகாஷ் சில மாதங்களாக அவர்களுடனே வசிக்கிறான்.சில மாதங்களுக்கு முன் அவன் தந்தையும் தாயும் ஒரு சாலை விபத்தில் பலியாகியிருக்க யாருமற்று தனித்திருந்த அவன் நிலைக்கண்டு தந்தையும் மகனும் அவனை தங்களுடனே இருத்திக்கொண்டனர்.

 

“தேவா…” என்று இம்முறை அழைப்பு பலவீனமாயும் வலியோடும் கேட்கவும் பதறிக் கொண்டு எழுந்தவன் அது தந்தையின் குரல் என்றுணர்ந்துகடந்த கால நினைவுகள் பற்றிய எண்ணத்தை பாதியிலேயே விட்டு அவசரமாய் கதவை திறந்து அடுத்த அறைக்கு ஓடினான்.

 

அங்கு வேணுகோபாலனோ கட்டிலில் நெஞ்சை பிடித்தவாறே அமர்ந்திருந்தார். “அப்பாஎன்னப்பா செய்யுது??” என்றவன் அவர் நெஞ்சை நீவிவிட்டான்.

 

அவர் முகமோ அதீத வலியை வெளிப்படுத்துவதை உணர்ந்தவனுள்ளே பதட்டம் அரும்பியது.அவருக்கு நெஞ்சு வலி என்பதை உணர்ந்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் ஓடவேயில்லை.

நல்லவேளையாக அவனுடன் படுத்திருந்த யாகாஷும் வேணுகோபாலின் குரல் கேட்டு அங்கே எழுந்து வந்திருந்தான்.

 

“யாகாஷ் நீ போய் வண்டி எடு… நான் அப்பாவை கூட்டிட்டு வர்றேன், நெஞ்சு வலி மாதிரி இருக்குடா…” என்று அவனை பார்த்து உரைக்க “சரிடா நான் போய் வண்டி எடுக்கறேன்” என்று அவனும் வெளியேறி இருந்தான்.

 

தனுஷுக்கோ பதற்றம் தொற்றிக்கொண்டது. சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்டவனுக்கு எங்கே தனக்கென்று இருக்கும் ஒரே உறவான தந்தையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் உள்ளே பரவியது.

 

என்றுமில்லா அதிசயமாய் மனம் கடவுளை நோக்கித் தொழுதது. ‘கடவுளே எங்கப்பாக்கு எதுவும் இருக்கக்கூடாது, அவர் நல்லாகிடணும்’  என்ற வேண்டுதல் வைத்தான்.

 

வெளியில் அடித்த ஹார்ன் சத்தத்தில் உயிர்பெற்றவன் “அப்பாவாங்க ஆஸ்பிட்டல் போகலாம்…” என்று சொல்லி அவரை கைத்தாங்கலாய் எழுப்ப அவர் நெஞ்சை இன்னமும் இறுக்கிப் பிடித்தார்.

 

“அப்பா உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா…” என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டவன் சட்டென்று அவரை இருகரங்களால் தூக்கிக்கொண்டு வெளியில் விரைந்து வந்தான்.

 

அவனை கண்டதும் யாகாஷ் கார் கதவை திறந்துவிட அவரை உள்ளே அமரவைத்து தானும் அவரருகே அமர்ந்துக்கொண்டான். யாகாஷ் வீட்டை பூட்டி வந்து காரில் ஏறி அருகிருந்த மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினான்.

 

அடுத்த பத்து நிமிடத்தில மருத்துவமனை வந்திருக்க வேணுகோபால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.வெளியில் நின்றிருந்த இருவரின் முகமும் இருண்டிருந்தது.

 

“தனு திடிர்னு என்னாச்சுடா அப்பாக்கு?? இதுக்கு முன்னாடி இப்படி ஆகியிருக்கா??”

 

“இல்லைடா இதான் முதல் முறை… எனக்கு ரொம்ப பயமாயிருக்கு…” என்று தன் மனதை உரைத்தான்.

 

“கவலைப்படாதடா அப்பாக்கு எதுவும் ஆகாது…” என்று நண்பனை தேறுதல் செய்தான் யாகாஷ்.

 

சில மணித்துளிகள் கடந்திருக்க எதிர்ப்பட்ட மருத்துவர் அவனை அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

“கொஞ்சம்டீடைல்ஸ்கேட்கணும், என்னோட வாங்க…” என்றவரிடம் தலையாட்டிவிட்டு யாகாஷைஐசியூ வாசலில் விட்டு அவருடனே சென்றான் தனுஷ்.

 

“நீங்க??”

 

“அவரோட பையன்…”

“உங்கம்மா??”

 

“அம்மா தவறிட்டாங்க டாக்டர்… அப்பாக்கு எதுவும் பிரச்சனையா?? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க டாக்டர்” என்றான் அவருடன் தொடர்ந்து நடந்தவாறே.

 

“சாரி…” என்றவர் அடுத்து சொல்லப்போகும் விஷயம் அவனுக்கு பேரதிர்ச்சியாய் இருக்கும் என்பதறியாதவனாய் அந்த அறைக்குள் நுழைந்தான். அவனை இருக்கையில் அமரச்சொன்னவர் தானும் அமர்ந்துக்கொண்டார்.

 

“அப்பாக்கு எப்படி இருக்கு டாக்டர்?? ஒண்ணும் பிரச்சனையில்லையே??” என்று மீண்டும் கேட்டான் லேசாய்எழுந்த பதட்டத்துடன்.

 

“மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்திருக்கு அவர்க்கு…” என்று முதல் குண்டை தூக்கிப் போட்டார் அவர்.

 

அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் பரவியது. “டாக்டர்…” என்று அவன் தொடருமுன்னே “உங்கப்பாக்கு இது எத்தனாவது அட்டாக்??” என்று அவர் கேட்ட கேள்வியில் இன்னமுமாய் அதிர்ந்து போனானவன்.

 

“புரியலை டாக்டர்…”

 

“என்ன புரியலை மிஸ்டர்…”

 

“தனுஷ்…”

“யா… தனுஷ் சொல்லுங்க என்ன புரியலை… ஹார்ட் அட்டாக்ன்னு சொன்னது புரியலையா இல்லை…”

 

“அதில்லை டாக்டர் எத்தனாவது அட்டாக்ன்னு கேட்கறீங்க?? ஏன் அப்படி கேட்டீங்க?? இது தான் முதல் முறை அப்பா நெஞ்சு வலியால துடிக்கறதை நான் பார்த்தேன்…”

 

“அப்போ உங்களுக்கு தெரியாம அவர்க்கு நெஞ்சு வலி வந்திருக்க முடியாதா என்ன??”

 

தனுஷ் புரியாமல் விழித்தான். “உங்கப்பாக்கு இதுக்கு முன்ன அட்டாக் வந்திருக்கும் நினைக்கிறேன். நிச்சயம் இது முதல் இல்லை…” என்றவர் சொன்னது அவன் நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தது போல் கனத்தது.

 

“இப்போ அவர்க்கு…” என்று இழுத்தவனிடம் “இப்போ ஒண்ணும் பிரச்சனையில்லை…ஈகேஜி மட்டும்எடுக்கணும்”

 

“அது எதுக்கு டாக்டர்??”

 

“உங்கப்பாக்கு ஹார்ட்ல ப்ளாக் இருக்கான்னு பார்க்க தான் அது…” என்று அவர் அடுத்தடுத்து சொல்லச் சொல்ல நெஞ்சின் சுமை கூடிக்கொண்டே போனதவனுக்கு.

 

ஓரிரு நாட்களில் மருத்துவர் சொன்ன டெஸ்ட் எடுக்கப்பட்டு அவர் இருதயத்தில் ஆறு அடைப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. மருத்துவர் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்றிருந்தார்.

 

இப்போ தான் தான் நெஞ்சு வலி வந்தது என்பதால் சில நாட்கள் ஓய்வுக்குப்பின் ஆஞ்சியோ செய்ய தேதி குறிக்கப்பட்டது அவருக்கு.குறித்த தேதியில் ஆன்ஜியோவும் செய்யப்பட்டு வீட்டுக்கும் வந்துவிட்டார்.

 

யாகாஷும் அவனுமாக மாற்றி மாற்றி அவரை பார்த்துக் கொண்டனர். அடுத்த ஒரு மாதத்தில் அவர் ஓரளவிற்கு தேறி வந்திருந்தார்.

 

தனுஷின் எண்ணத்தில் இப்போது அப்பா அப்பா மட்டுமே… புவனாவை பற்றியநினைவு அவனுக்கு துளிக்கூட இந்த நாட்களில் வந்திருக்கவில்லை…

 

தந்தையை காக்கும் எண்ணம் மட்டுமே அவன் சிந்தையை ஆட்க்கொண்டிருந்தது. ஓர் நாள் காலையில் வேணுகோபாலன் காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்த மகனை அழைத்தார்.

 

“தேவா…” என்று ஹாலில் இருந்து அவர் அழைக்கும் குரல் கேட்கவும் செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டு அடுப்பை அணைத்துவிட்டு வெளியில் வந்தான் அவன்.

 

“என்னப்பா??”

 

“கொஞ்சம் இப்படி உட்காருப்பா பேசணும்…” என்று அவர்சொல்லவும் அதை செய்தவன் அவர் முகத்தை ஏறிட்டான். என்ன சொல்வார் அவர் என்று.

 

“இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வரணுப்பா…”

 

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிய முகம் கடினத்தை சுமந்தது. அவர் முன் அதை காட்டிக்கொள்ள பிரியப்படாதவன் முகத்தை இயல்பாக்கி “நானும் அதே தான்ப்பா நினைச்சேன்…” என்றவனை உள்ளிருந்து வந்த யாகாஷ் ஆச்சரியமாய் பார்த்தான்.

 

“என்னடாஎன்னை ஆன்னு பார்க்குறே…” என்று நண்பனை பார்த்துச் சொன்னவன் “உண்மை தான் சொல்றேன்… எப்பவோ செஞ்சிருக்கணும்… இப்போவாச்சும்தோணுச்சே” என்று நிறுத்தினான்.

 

அவன் நிஜமாகவே திருமணத்திற்கு ஒத்துக்கொண்டானா இல்லை பொடி வைத்து பேசுகிறானா என்று யாகாஷுக்கு சுத்தமாய் புரியவில்லை.

 

ஏனென்றால் நண்பனின் நிலை என்னவென்பதை ஐயம்திரிபட உணர்ந்தவன் ஆயிற்றே அவன்!!

 

“அப்பா நான் சின்ன வயசா இருக்கும் போதே நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாம்… இப்போ மட்டுமென்ன உங்களுக்கு வயசாகிடுச்சா என்ன… எனக்கு அண்ணன் மாதிரி தான் இருக்கீங்க…”

 

“சட்டுப்புட்டுன்னு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாம்…” என்றான் முகத்தில் எந்தவித உணர்வும் வெளிப்படுத்தாதவனாய்.

 

யாகாஷ் அவனை பலமாய் முறைப்பதை திரும்பி பார்க்காமலே உணர முடிந்தது அவனால். தந்தையின் முகம் அவன் பேச்சை கேட்டு கவலை கொள்ள ஆரம்பித்தது.

 

“தேவா விளையாட்டு போதும்…” என்றார் சீரியஸ் குரலில்.

 

“நான் விளையாடலைப்பா…”

 

“நீ என்னை என்ன நினைச்சுட்டு இருக்கே தேவா… நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது உனக்காகன்னு நினைக்கறியா… உன்னை கொடுமைப்படுத்துவாங்களோ எதுவும் செஞ்சிடுவாங்களோன்னு நினைச்சு அப்படி செய்யாம இருந்தேன்னு நினைக்கறியா…”

 

தனுஷ் பதிலேதும் பேசவில்லை அமைதியாய் அவரை பார்த்தான். “ஒரு வேளை உன் நினைப்பு அதுவா இருந்தா இப்போ சொல்றேன் கேட்டுக்கோ உண்மை அதில்லை…”

 

“என்னை மீறி உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது அதுல எனக்கு எந்த சந்தேகமுமில்லை… இன்னொரு கல்யாணம் வேணாம்ன்னு நான் நினைச்சதுக்கு ஒரே காரணம் உங்கம்மாதான்…”

 

“அவளைத் தவிர வேற யாரும் என் மனசுல நுழையலை… அதுக்கு நான் அனுமதிக்கவும் இல்லை… உங்கம்மா சொல்லி நான் கேட்காத ஒரு விஷயம்”

 

“சாகும் போது என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி உங்கம்மா சொன்னதை மட்டும் நான் இன்னைக்கு வரைக்கும்கேட்கவேயில்லை… எங்கம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க…”

 

“என்னால உங்கம்மாவை இப்போவரை மறக்க என்னாலமுடியலை… உன்னோட ஒவ்வொரு செயல்லயும் அவளை நான் பார்த்திட்டே இருக்கேன்… நீ உங்கம்மா மாதிரியே தேவா…” என்றார் நீளமாய்.

 

தனுஷ் இப்போது யாகாஷை அர்த்தம் பொதிந்த ஓர் பார்வை பார்த்தான். யாகாஷோ‘இவரு பார்த்தா நான் புரிஞ்சுக்கணுமா…’ என்று லேசாய் தலையில் தட்டிக்கொண்டாலும் நண்பனின் எண்ணம் அவனுக்கும் புரிவதாய்.

 

என் அம்மாவை இப்போதும் மறக்காதா அப்பா, நான் மட்டும் அவளை மறந்து வேறு தேடுவதா என்பதே அவன் பார்வை உணர்த்திய பொருள் என்பதை நண்பனறிவான்.

 

“அப்போ வேற என்னப்பா செய்யலாம்?? இதோ இவனுக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் கட்டி வைச்சிருவோமா…”

 

‘அடப்பாவி அதுக்கு நான் தானாடா கிடைச்சேன் உனக்கு. நானே இப்போ தான் ரெண்டு மாசமா ஒரு பொண்ணை ரூட் விட்டுட்டு இருக்கேன்… என் பொழப்புல மண்ணள்ளி போடப் பாக்குறானே…’ என்று நண்பனை முறைத்தான் யாகாஷ்.

 

இப்போது அவர் பதில் சொல்லும் முன் யாகாஷ் குறுக்கிட்டான்… “டேய் அப்பா அவர் புள்ளைக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு விரும்பறார்… நீ எதுக்கு என்னை மாட்டிவிடுறே??”

 

“யாகாஷ் நீயும் எனக்கு பையன் தான்…” என்றார் அழுத்தமாய்.

 

“அப்பா நான் தப்பா சொல்ல வரலைப்பா, அவனுக்கு புரிய வைக்கணும்ன்னு சொன்னேன்…”

 

“எப்படி சொன்னாலும் சரி… நீயும் எனக்கு இன்னொரு மகன் தான் அப்படிங்கறதை ஞாபகம் வைச்சுக்கோ…” என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல யாகாஷ் வாயை இறுக மூடிக்கொண்டான் “சாரிப்பா…” என்றுவிட்டு.

 

“தேவா நீ சொன்னது சரி தான் யாகாஷ்க்கும் பொண்ணு பார்க்கத் தான் போறேன்… கூடவே உன்னோட கல்யாணமும் நடக்கணும்…”

“நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு இருப்பேன்னு எனக்கு தெரியலை… நான் இருக்கும் போதே உங்களோட வாழ்க்கை நல்லவிதமா அமைஞ்சு நீங்க சந்தோசமா இருக்கறதை பார்க்கணும்ன்னு நினைக்கிறேன்…”

 

“எதுக்குப்பா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க… உங்களுக்கு ஒண்ணும் ஆகாதுப்பா…”

 

“கடவுள் புண்ணியத்துல எதுவும் ஆகாதுன்னே வைச்சுப்போம்… ஆனாலும் உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்…”

 

“யாகாஷ் பத்தி பிரச்சனையில்லை நான் பார்க்கற பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிப்பான்…” என்று அவர் சொல்லவும் யாகாஷ் மென்று விழுங்கினான்.

 

அவனை பார்த்தவரை கண்டு அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்து வைத்தான். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?? அப்பா பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்…’

 

‘இனிமேகாந்திபுரம்பஸ் ஸ்டான்ட்ல பார்த்த அந்த பொண்ணை மறந்திட வேண்டியது தான்… நீஎங்கிருந்தாலும் வாழ்க!! வாழ்க!!’ என்று ஆரம்பிக்கவே இல்லாத காதலுக்காக வாழ்த்து வேறு பாடிக்கொண்டான் அவன்.

 

“இப்போ நீ தான் சொல்லணும் உன் கல்யாணம் பத்தி… நானும் ஒரு வருஷமா உன்கிட்ட சொல்லிட்டு தான் இருக்கேன்… நீ பிடிக்கொடுக்கவே மாட்டேங்குற…”

 

“என்ன பண்ணலாம்ன்னு இருக்கே?? நீயே சொல்லு, அந்த பொண்ணு வீட்டுல போய் நான் பேசணும்ன்னாலும்பேசறேன்…”

 

என்னவென்று சொல்வானவன் அப்பெண் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் என்றா… அவளையேஇன்னமும் நினைத்துக்கொண்டு தானிருக்கிறேன் என்று சொல்வதா…

 

“நீ சொல்லலைனாலும் எனக்கு தெரியும்,யாகாஷ்எல்லாம்சொன்னான். உனக்கு அந்த பொண்ணு தான் வேணும்ன்னா நான் அவங்க வீட்டில பேசறேன்…” என்றார் மீண்டும்.

 

அவனுக்கு அதில் பிடித்தமில்லை. தன் மேல் பிரியமில்லாத ஒருத்தியை வலுக்கட்டாயமாய் மணக்கவும் அவன் மனம் இடம் கொடவில்லை…

 

அவனால் அவளை மறக்கவும் முடியவில்லை… அவளுக்கு தன்னை நினைப்பிருக்கிறதா என்பதை அறியத்தான் அன்று அவளுக்கு போன் செய்து பேசினான்.

 

அவள் பேச்சில் அவனால் முழுதாய் எதையும் உணர முடியவில்லை. அவன் சிந்தை எதையதையோ நினைத்துக் கொண்டிருந்தது.

இன்னும் ஒரு முறை அவளை நேரில் பார்த்தால் போதும் அவளையும் கண்டு தன் மனதையும்முழுதாய் அவளிடத்தில் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

 

முதன் முதலில் தான் அவளிடம் தன் விருப்பத்தை உரைத்த போது அவள் அதை விளையாட்டாய் எடுத்திருப்பாள் என்று தோன்றியது இப்போது.

 

தானும் அப்படி விளையாட்டு போல ஊரறிய தன் விருப்பத்தை சொல்லியிருக்க கூடாது என்ற எண்ணம் வேறு எழுந்தது. தந்தை தன்னை அழைப்பதை கூட கவனியாமல் எண்ணம் உழன்றிருக்க “தேவா…” என்றார் அவர் இம்முறை அழுத்தி.

 

“ப்பா… என்னப்பா??”

 

“நீதான்ப்பா சொல்லணும்”

 

“கொஞ்சம் டைம் கொடுங்கப்பா… நானே சொல்றேன்…”

 

“எப்போ??”

 

“ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க…”

 

“சரிப்பா…” என்றுவிட்டார் அவரும்… மகனை விட்டுப்பிடிக்க எண்ணினார்.

 

வேணுகோபால் மீண்டும் வேலைக்கு செல்லவாரம்பித்திருந்தார். தனுஷ் வேண்டாம் என்று சொல்லியும் அவர் வங்கிக்கு செல்ல ஆரம்பித்தார். வீட்டில் இருந்தால் வெகுவாய் தனிமைப்படுத்தப்படுவதாக கூற அவன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

 

அவன் ஓட்டலுக்கு வருமாறு அழைத்துப் பார்த்தான். அதற்கு அவர் தான் ஒப்புக்கொள்ளவில்லை, தன்னால் முடிந்தவரை தன் காலிலேயே நிற்க விரும்பினார் அவர்.

 

“தனு டேய் தனு…” என்ற யாகாஷின் அழைப்பில் வெட்டிக்கொண்டிருந்த காய்கறியை வைத்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

 

“அப்பா சொன்னதைப்பத்தி என்ன முடிவு எடுத்திருக்கே??”

 

“உனக்கு தான் எல்லாம் தெரியும்ல…”

 

“அப்பாக்கும் கூட எல்லாம் தெரியும் தானே…”

 

“அப்புறமும் ஏன் அப்படி கேட்கணும்??”

 

“அது உன் வாழ்க்கை மேல அவருக்கு இருக்கற அக்கறை… ஒரு தகப்பனா தன் மகனோட விருப்பத்தை நடத்தி வைக்கணும்ன்னு நினைக்கிறார்… அதிலென்ன தப்பிருக்கு…”

 

“அவ இன்னும் ஒண்ணும் சொல்லவேயில்லையேடா…”

 

“ஓ!! அப்போ உனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கா அவ சரின்னு சொல்லுவான்னு…” என்றவன் நண்பனின் பார்வையில் “அவங்க சரி சொல்வாங்கன்னு…” என்றான்.

 

“தெரியாது…”

 

“அப்புறமும் காத்திருக்க நீ என்ன முட்டாளா தனு… நீ என்னை அடிக்கிறதுனாலும் அடிச்சுக்கோ என்னால கேட்காம இருக்க முடியலை…

 

“அவ என்ன பெரிய ரம்பையா உன்னை கொஞ்சம் கூட அவ கண்டுக்கவே இல்லை…” என்று கன்னத்தை இரு கைகளாலும் மறைத்துக்கொண்டே சொன்னான். (ஒரு முறை அடிவாங்கியதால் முன்னெச்சரிக்கையாம்)

 

“அப்பா ரொம்ப நாளா உன் கவலையாவே இருக்கார் தனு… உன்கிட்ட கல்யாணம் விஷயமா பேசச்சொல்லி பலமுறை என்கிட்டே சொல்லிட்டார்…”

 

“இவ்வளவு நாள்ல ஒரு முறை கூட நான் உன்கிட்ட அதைப்பத்தி பேசவில்லை… ஏன்னா உன் மனசு எனக்கு தெரியும் அதனால தான்… இனியும் என்னால அப்படி இருக்க முடியாதுடா…”

 

“அப்பா உடம்பு சரியில்லாத மனுஷன் அவருக்கு உன் கல்யாணம் பார்க்கணும் அப்படிங்கறது விருப்பம்… ஒரு மகனா அதை நீ நிறைவேத்துறதுல என்ன தப்பிருக்கு சொல்லு…”

 

“அந்த பொண்ணு வேண்டாம்ன்னா வேற பொண்ணு நாங்களே பார்க்கறோம்… நீ கல்யாணத்துக்கு சரின்னு மட்டும் சொல்லு…”

 

தனுஷ் ஒன்றும் பேசவில்லை அமைதியாயிருந்தான். இதுவரை யாகாஷ் அவனுக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை…

 

இது தான் முதல் முறையாய் அவனிடம் இவ்வளவு தூரம் எடுத்துச்சொல்லி பேசியிருக்கிறான்… அதுவும் அவன் வாழ்க்கைக்காக அதை மறுத்து பேச தனுஷால் முடியவில்லை.

 

திருமணத்திற்கான தன் ஒப்புதலை மறுநாளே அவன் தந்தையிடம் சொல்லியிருக்கஅவனேஎதிர்பாராமல்மறுவாரமே அவன் திருமணம் நடந்தது ஊரார் உற்றார் முன்னிலையில்…

Advertisement