Advertisement

அத்தியாயம் – 14

 

வேணுகோபால் தனுஷுடன் வந்த பெண்ணை கண்டு அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

“தேவா நீ மிதிலாவை எங்கே?? எப்போ?? எப்படி பார்த்தே?? ஏன் மிதிலா எவ்வளோ வருஷம் ஆச்சுல நாம பார்த்து…” என்று தேவாவில் ஆரம்பித்து மிதிலாவில் முடித்தார் அவர்.

 

“அப்பா அப்பா ரிலாக்ஸ்… நான் இவங்களை ஊட்டில தான் பார்த்தேன்… நான் ஹோட்டல்க்கு இடம் பார்க்க போனேன்ல அங்க பக்கத்துல தான் இவங்க வேலை பார்க்கற ஸ்கூல் இருக்கு…”

 

“ஆனா தேவா உனக்கு மிதிலாவை தெரிஞ்சிருக்க முடியாதே… உங்கம்மாவை கல்யாணம் பண்ணப்போ எங்க கல்யாணத்துக்கு கூட இவ வரலையே…”

 

“அந்த கதையை நீங்க உங்க பிரண்டுகிட்டவே கேட்டு தெரிஞ்சுக்கோங்க… அவங்க இனிமே இங்க தான் தங்கப்போறாங்க…” என்று தேவா சொல்லவும் வேணு சற்றே நிதானித்தார்.

 

‘என்ன இவன் இப்படி சொல்கிறான்… வீட்டில் வேறு பெண்கள் என்று இல்லாத நிலையில் தன் தோழியாகவே இருந்தாலும் ஒரு பெண்ணை எப்படி அனுமதிப்பது என்றே அவர் யோசனை சென்றது. ஆனால் அதை வாய்விட்டு வெளியில் சொல்ல தான் அவரால் முடியவில்லை.

அவருக்கு தான் தயக்கமெல்லாம் மிதிலாவிற்கு அப்படியொன்றும் இல்லை. “இல்லைப்பா நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னது தான் எனக்கு இங்க தேவை ஒரு வேலையும் தங்க ஒரு ஹாஸ்டலோ இல்லை வீடோ தான்ப்பா…”

 

“வேணு உங்க பையன்கிட்ட சொல்லுங்க ப்ளீஸ்…” என்று தன் தோழனையே உதவிக்கு அழைத்தார் அவர்.

 

வேணுவுக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. என்ன நடக்குது இங்க என்பதான பார்வை தான் இப்போது அவரிடம்.

 

“மிதிலா என்னாச்சு?? எதுவும் பிரச்சனையா??” என்று நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிட்டார்.

 

“அப்பா நான் கடைக்கு கிளம்பறேன்… நைட் டின்னருக்கு நீங்க ரெண்டு பேரும் கடைக்கு வந்திடுங்க…” என்றுவிட்டு அவன் தன் போக்கில் கிளம்பிச் சென்றும் விட்டான்.

 

மிதிலாவிற்கு அவன் அப்படி செய்தது சங்கடமாக இருந்தது. அவன் எதை குறித்து இப்படி செய்கிறான் என்பதும் அவரால் உணர முடிந்தது. அவன் சென்ற சிறிது நேரம் முகம் இறுகவே இருந்தார் மிதிலா.

 

மிதிலா அழகான நடுத்தர வயத்துடைய பெண். இன்றைக்கெல்லாம் அவள் வயது கூடிப்போனால் ஒரு நாற்பத்தி ஆறு மட்டுமே. ஆனால் முப்பதுகளின் தோற்றம் மட்டுமே அவருக்கு.

“என்ன மிதிலா?? என்ன நடக்குது?? உனக்கு என்ன பிரச்சனை?? நீங்க எப்படி மீட் பண்ணீங்க??” என்று எல்லா கேள்வியும் மொத்தமாகவே கேட்டு வைத்தார் அவர்.

 

“ரிலாக்ஸ் வேணு… எதுக்கு இப்படி கேள்வியா அடுக்கறீங்க??” என்றே கேட்டே விட்டார் மிதிலா.

 

“ஏன் மிதிலா உனக்கு என்ன பிரச்சனைன்னு நான் தெரிஞ்சுக்க கூடாதா??”

 

“கண்டிப்பா சொல்றேன்… ஒண்ணும் பெரிசா இல்லை…”

 

“உன்னோட ஹஸ்பன்ட் எதுவும் பிராப்ளம் பண்றாரா??”

 

“இல்லை…”

 

“உன் மாமியாரா??”

 

“இல்லை… எங்க அண்ணன்…”

 

“உங்கண்ணனா?? ஏன் அவர் என்ன பிரச்சனை பண்றார், உன் ஹஸ்பன்ட் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டாரா??”

 

“வேணு ப்ளீஸ் என்னை சொல்ல விடுங்க…”

 

“சொல்லு…” என்று அமைதியானார் வேணுகோபால்.

 

“உங்களுக்கே தெரியும் நாங்க ரொம்ப வருஷமா திருச்சியில இருந்தோம்ன்னு… நீங்களும் முதல்ல அங்க தான் இருந்தீங்க, அப்புறம் தான் நீங்க தஞ்சாவூர் போயிட்டீங்க…”

 

“அடிக்கடி நாம மீட் பண்ணிக்கறது இல்லைன்னாலும் கான்டாக்ட்ல இருந்தீங்க… கடைசியா உங்க கல்யாணத்தப்போ நாம மீட் பண்ணோம் அதுக்கு அப்புறம் இப்போ தான்…”

 

‘இதெல்லாம் தான் எனக்கே தெரியுமே… புதுசா எதுவும் சொல்லவேயில்லையே’ என்ற ரீதியில் இருந்தது அவரது பார்வை.

 

“என்னடா இவ ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயத்தையே சொல்றாளேன்னு நினைக்கறீங்களா… கண்டிப்பா உங்களுக்கு தோணியிருக்கும், அதுல தப்பேயில்லை…”

 

“ஹ்ம்ம் கரெக்ட் தான், இதுல உங்கண்ணன் என்ன செஞ்சாரு??”

 

“என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துனாரு…”

 

“என்ன?? உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா!!” என்றவரின் குரலில் இருந்தது ஆச்சரியமா அதிர்ச்சியா என்பதை பிரித்தறிய முடியா உணர்வுடன் இருந்தது. அதற்கு மிதிலாவின் தலை இல்லையென்பதாய் ஆடியது.

 

ஏன் என்ற கேள்வியுடன் மிதிலாவை பார்த்தார் அவர். “பிடிக்கலை?? எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலை… அதுனால பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்…”

 

“வாக்குவாதம் முத்திச்சு, நான் சரி தான்னு வீட்டை விட்டு போயிட்டேன்… கோவிச்சுக்கிட்டு போகலை, என்னால தேவையில்லாத குழப்பம் வேணாம்ன்னு தான் கிளம்பினேன்…”

 

“எனக்கு சென்னையில வேலை கிடைச்சுது, அதை சாக்கு சொல்லி கிளம்பிட்டேன்… அண்ணா எனக்காக அவங்க கல்யாணத்தை தள்ளி போட்டுட்டு வந்தாங்க… ரொம்ப சண்டை போட்டு பேசின்னு அவங்களை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன்…”

 

“அம்மா அண்ணாவோட இருந்தாங்க… எனக்கு லீவ் கிடைக்கும் போது நான் அவங்களை பார்க்க ஊருக்கு போவேன்… ஒரு நாலு வருஷம் முன்னாடி எங்கண்ணிக்கு வேலை ஊட்டிக்கு மாற்றல் ஆச்சு…”

 

“அண்ணனும் ஊட்டியிலேயே வேலை தேடிக்கலாம்ன்னு நினைச்சு அவங்களோடவே போனாங்க… என்னையும் ரொம்ப நாளா அவங்களோட வந்து இருக்கச் சொன்னாங்க… இப்போ தான் ரெண்டு வருஷம் முன்னாடி அங்க போனேன்…”

 

“எப்போவும் போல என் கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சாங்க… அதுல எங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் வந்திடிச்சு… அதான் அங்க இருந்து வந்திட்டேன்…”

 

‘இதான் நடந்தது’ என்பது போல் பார்த்தார் வேணுவை. அவரோ ‘இதுல தேவா எங்க வந்தான்??’ என்பதாய் பதில் பார்வை கொடுத்தார்.

 

“ரெண்டு மூணு நாள் முன்னாடி தான் உங்களோட பையனை நான் வேலை செய்யற ஸ்கூல் பக்கத்துல பார்த்தேன்… சின்ன வயசுல உங்களை பார்த்த மாதிரியே இருந்துச்சு வேணு…”

 

“நானா தான் போய் பேச்சு கொடுத்தேன், உங்கப்பா பேரு வேணு தானேன்னு… அப்புறம் பரஸ்பரம் அறிமுகம் செஞ்சுக்கிட்டேன்… ஒரு நாள் வீட்டுக்கு வரச் சொன்னேன்…”

 

“தனுஷ் வந்தப்போ தான் எங்க வீட்டில கொஞ்சம் பிரச்சனை அதிகமாகிடுச்சு… எங்கண்ணன் பேசுறது பார்த்திட்டு தனுஷ் தான் இங்க கூட்டிட்டு வந்துட்டார்…”

 

“இல்லைன்னாலும் நான் மறுபடியும் சென்னை போற முடிவுல தான் இருந்தேன்…” என்று சொல்லி முடித்திருந்தார் மிதிலா.

 

சில நொடி மௌனம் அங்கு ஆட்சி செய்தது. மிதிலாவே அதை கலைத்தார். “வேணு உங்க பையன்கிட்ட சொல்லுங்க… என்னால இங்க தங்க முடியாது… எனக்கு இப்போ வேண்டியது தங்கறதுக்கு ஒரு ஹாஸ்டலோ இல்லை ஒரு வீடோ தான்…”

“அடுத்தது ஒரு வேலை… அதை நானே தேடிக்குவேன்… எனக்கு வீடு மட்டும் கொஞ்சம் பார்த்து ஏற்பாடு பண்ணிக்கொடுத்தா போதும். அதுவரைக்கும் நான் ஒரு ஹாஸ்டல்ல தங்கிக்கறேன்…”

 

“மிதிலா போதும்… நியாயமா பார்த்தா நீ இங்க இருன்னு தான் நானும் சொல்லி இருப்பேன்… என் மனைவியோ இல்லை மருமகளோ இங்க இருந்திருந்தா… ஆனா…”

 

“எனக்கு தெரியும் வேணு…”

 

“சரி வீடு பிரச்சனை நான் பார்த்துக்கறேன்… எனக்கு உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் கேட்கலாமா??”

 

அவர் என்ன கேட்கப் போகிறார் என்பது மிதிலாவிற்கு முன்பே தெரிந்தது தான். இருந்தாலும் அவரே கேட்கட்டும் என்ற எண்ணத்தில் சரி கேளுங்க என்பதாய் ஒரு தலையசைப்பை கொடுத்தார்.

 

“நீ யாரையாச்சும் விரும்பறியா??”

 

“காலம் கடந்த கேள்வி…”

 

“ஏன்?? அப்போ விரும்பியிருக்க?? ஏன் அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டானா…”

 

“அப்படி எல்லாம் இல்லை வேணு… அவர்க்கு கல்யாணம் ஆகிடுச்சு… நல்லா வாழ்ந்திட்டு இருக்கார்…”

 

“அப்போ நீ மட்டும் ஏன் இப்படி இருக்கே?? நீயும் ஒரு கல்யாணம் பண்ணிட்டு லைப்ல செட்டில் ஆகி இருக்க வேண்டியது தானே… உங்கண்ணன் பேசினதுல எந்த தப்பும் இல்லையே… நீ ஏன் பிடிவாதம் பிடிக்கறே மிதிலா…”

 

“எனக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க தோணலை வேணு… என் மனசுக்கு பிடிக்கலை… ப்ளீஸ் இதைப்பத்தி மேல பேச வேண்டாமே… நான் பேசவும் பிரியப்படலை…” என்று பட்டுக்கத்தரித்தார் போலச் சொன்னார்.

 

அதற்கு மேல் வேணுகோபாலும் மிதிலாவை தோண்டி துருவவில்லை. மிதிலா வந்த அன்று மட்டும் ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்தவர் அவர் சொன்னது போல மிதிலா தங்குவதற்கு ஏற்பாடு செய்ததோடு நில்லாமல் வேலையும் வாங்கிக் கொடுத்தார்.

 

தனுஷிற்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை என்றாலும் மிதிலாவை அதிகம் தொல்லை செய்ய அவனும் விரும்பவில்லை.

 

சென்னையில்…

 

“மே ஐ கம் இன்” என்று லேசாய் கதவை தட்டி சித்தார்த்திடம் அனுமதி வேண்டி நின்றாள் புவனா.

 

“எஸ் எஸ் உள்ள வா புவன்… சிட் சிட் பைவ் மினிட்ஸ் இந்த மெயில் அனுப்பிடறேன்…” என்றுவிட்டு லேப்டாப்பில் முழ்கினான் அவன்.

அதுவரையில் புவனாவின் பார்வை நிலையில்லாமல் அங்குமிங்கும் அலைந்தது.

 

அதை கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டு தானிருந்தான் சித்தார்த்.

 

அவன் வேலை முடிந்ததும் லேப்டாப்பில் இருந்து தலையை நிமிர்த்தினான். “எஸ் புவன் சொல்லு என்ன விஷயம்?? ஏன் ரெஸ்ட்லெஸா இருக்கே??”

 

“நத்திங் சார்…”

 

“கால் மீ சித்தார்த்…”

 

‘இப்போ அது ரொம்ப முக்கியமா??’ என்று தோன்றிய போதும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் அவள்.

 

“என்னாச்சு புவனா பேசணும்ன்னு வந்திட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்…”

 

“என… எனக்கு ட்ரான்ஸ்பர் வேணும் சித் சித்தார்த்…”

 

“ட்ரான்ஸ்பரா??”

 

“ஹ்ம்ம் ஆமாம்… கோயம்புத்தூர் ஸ்டேஷன்க்கு அனுப்ப முடியுமா ப்ளீஸ்…”

 

சித்தார்த் அவளை ஏற இறங்க பார்த்தவன் “முடியாதுன்னா…”

 

“தேங்க்ஸ் சித்தார்த்…” என்றவள் அவனிடம் எதையோ நீட்டினாள்.

 

அதை வாங்காமல் “என்ன இது??” என்றான் அவன்.

 

“என்னோட ராஜினாமா லெட்டர்…”

 

“ஏன்மா மெயில் அனுப்ப நேரமில்லாம டைப் பண்ணி கொண்டு வந்திட்டியா??” என்றான் நக்கலாக.

 

“ப்ளீஸ் சித்தார்த் பீ சீரியஸ்…”

 

“நானும் அதான் சொல்றேன் புவனா… பீ சீரியஸ் என்ன நடக்குது இங்க… திடிர்னு ஏன் இந்த முடிவு??”

 

“என்ன திடிர்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன் எதுவும் ராங் பண்றானா… இல்லை உங்க வீட்டில எதுவும் டார்ச்சர் பண்றாங்களா??”

 

‘யாரும் எதுவும் சொல்லவில்லையே… அவளாகத் தானே இந்த முடிவெடுத்தாள். என்று அவள் அன்னை அவளைப் பார்த்து அப்படி பேசினாரோ அன்று முதல் அவள் அவரிடம் பேசவில்லை…’

 

அவள் தந்தையுடன் மட்டுமே பேசுவாள், அவளின் தம்பி பேசுவான். அவள் அம்மாவிடம் பேசச்சொல்லி கொடுத்தால் இவளிடமிருந்து வெறும் முனகல்கள் மட்டுமே பதிலாய் வரும்.

 

அவளின் கவலை தேவாவை பற்றியது. அவளின் தேவாவின் பாராமுகம் அவளை கொல்லாமல் கொன்றது… என்ன தான் அவன் மாதமிருமுறை அவளைப் பார்க்க வந்து சென்றாலும் அதில் ஒரு அந்நியம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது.

 

அவன் அக்கறையாய் வந்து பார்த்தது போல் தோன்றவில்லை அவளுக்கு. அவள் யாரென்றே தெரியாத போதே அவ்வளவு அக்கறை கொண்டு பேசியவன் இப்போது பேசும் பேச்சு எட்டியே வைத்தது அவளை.

 

“என்ன புவனா நான் கேட்டுட்டே இருக்கேன்… நீ என்ன யோசனையில இருக்கே??”

 

“நான் முடிவெடுத்திட்டேன் சித்தார்த்… இப்போ பதில் சொல்ல வேண்டியது நீங்க தான்…”

 

சித்தார்த் சில நொடி யோசனை செய்தான். “உன்னை இங்க இருந்து அனுப்ப எனக்கு இஷ்டமில்லை… நீ போய்ட்டா அந்த ப்ரோக்ராம் யார் பண்ணுவா??”

 

“நான் இல்லாதப்போ யார் செஞ்சாங்களோ அவங்களே தான் செய்வாங்க…” என்றாளவள்.

 

“புவனா…”என்றான் அவன் அழுத்தமாய்.

 

‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.

 

“ஓகே யூ கோஅஹெட் நான் கோயம்புத்தூர் ஹெட்கிட்ட சொல்லிடறேன்… நீ அடுத்த வாரமே அங்க போய் ஜாயின் பண்ணிக்கோ…”

 

“தேங்க்ஸ் சித்தார்த்… எனக்கு இன்னொரு ஹெல்ப்…”

 

“என்ன??”

 

“நாளையில இருந்து ஒரு வாரத்துக்கு எனக்கு லீவு வேணுமே…”

 

“என்ன சொன்னே??”

 

“லீவு…”

 

“ஒழுங்கா மரியாதையா போய்வேலையை பாரு…ஒரு வாரம் ப்ரோக்ராம் ஒழுங்கா முடிச்சுட்டு உன் வேலை எல்லாம் ஹேன்ட் ஓவர் பண்ணிட்டு போ…”

 

“ஹ்ம்ம் ஓகே…”

 

“என்ன ஓகே??”

 

“நான் நாளையில இருந்து மெடிகல் லீவ் போட்டாலும் போடுவேன்… உடம்பு வேற ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு…”

 

“புவன் இஸ் திஸ் யூ… என்னாச்சு உனக்கு, இப்படி போட்டு தாக்கறே இன்னைக்கு… இப்போ என்ன உனக்கு லீவ் வேணும் அதானே… தர்றேன் ஆனா ஒரு வாரத்துக்கு இல்லை நாலு நாளைக்கு மட்டும் ஒரு மூணு நாளைக்கு ஆபீஸ் வந்திடு ப்ளீஸ்…”

____________________

 

“தேவா நீ என்னைக்கு ஊருக்கு கிளம்புறே??” என்று காலையில் அவனறையில் இருந்து வெளியில் வந்த தனுஷிடம் கேட்டார் வேணுகோபால்.

 

அவனோ உறக்கம் இன்னும் கலையாதவனாக “என்னப்பா காலையிலேவா…”

 

“நீ ஊர்ல இருந்து வந்து ஒரு வாரம் மேல ஆச்சு… நீயே போவேன்னு பார்த்தேன், நீ கிளம்புற வழியை காணோம்… அதான் கேட்டேன்…”

 

“இப்போ தானேப்பா ஊட்டில இருந்து வந்தேன்… மறுபடியும் என்னை எங்க கிளம்பச் சொல்றீங்க??”

 

“சென்னைக்கு தான்… புவனாவை உன்னோட ஊட்டிக்கு கூட்டிட்டு போகச் சொன்னேன். அதான் முடியாதுன்னு சொல்லிட்டே, சென்னை போய் உன் பொண்டாட்டியை பார்த்திட்டு வரலாம்ல”

 

“ஹ்ம்ம் கிளம்பறேன்ப்பா…” என்றவனுக்கும் அவளை சென்று பார்க்க வேண்டும் என்று தான் தோன்றியது. அன்று கோபமாக பேசிவிட்டான் தான் இன்று வரை அதை நினைத்து வருந்தியும் கொண்டிருக்கிறான்.

 

அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்பது போல் மாதமிருமுறை அவளை சென்று பார்த்துவிட்டு தான் வருவான். வாரம் ஒரு முறை செல்லத்தான் ஆசை, அதற்கு அவன் ஈகோ அடியோடு ஒத்துழைக்காத காரணத்தால் மாதமிருமுறை சென்று வருகிறான்.

 

“எப்போ??” என்று வேணுகோபால் அவனை விடாது கேள்வி கேட்டார்.

 

“ஒரு ரெண்டு நாள் கழிச்சு…” என்று அவன் சொல்லி முடிக்கு முன்னே வாசலில் நிழலாடியது.

 

நிமிரிந்து பார்த்தால் அவன் நாயகி அங்கு கையில் பெரிய பெட்டியுடன் நின்றிருந்தாள்… அவளை கண்டதும் உடல் முழுவதும் ஒரு ஜில்லிப்பு ஓட எழுந்து நின்றிருந்தான் அவன்…

Advertisement