Advertisement

அத்தியாயம் – 2

 

அவன் பாடலை பாடி முடித்த பின்பு அவளிடத்தில் அசாத்திய அமைதி மட்டுமே. “மேடம் அப்படியே உறைஞ்சு போயிட்டீங்களா என்ன என் பாட்டை கேட்டு??”

 

“மன்னிக்கணும் டிடி!! உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு, நீங்க ரொம்ப வருஷமா பாட்டு கத்துக்கிட்டு இருக்கீங்களா??”

 

“இல்லை கேள்வி ஞானம் தான் பீ.எஸ்”

 

“ஓ!! சூப்பர் டிடி, நீங்க ஏன் இந்த பாட்டு ஷோ எல்லாம் ட்ரை பண்ணக்கூடாது??”

 

“இனிமேவா… அதெல்லாம் எனக்கு பெரிசா ஆர்வமில்லை… எனக்கானவளுக்கு நான் பாடுறது பிடிச்சா போதும்…”

 

“அப்போ இப்போ நீங்க பாடிட்டீங்களே”

 

“ஹ்ம்ம் ஆமாம் பாடினேன் அவளும் கேட்டுட்டு தானே இருந்தா…”

 

“நீங்க லைன்ல காத்திட்டு இருங்க… இதோ நீங்க கேட்ட பாடல்…” என்றதும் அவன் பாடிய அந்த பாடல் ஒலிக்கவும் அவனின் அழைப்பு வேறு கட்டாகியிருந்தது.

 

“லைன் கட்டாகியிடுச்சே” என்று முணுமுணுத்தாள்.

பாடல் முடியும் தருவாயில் அடுத்தொரு அழைப்பு வர அதை ஏற்கவும் மீண்டும் அதே குரல் “என்ன பீ.எஸ் மேடம் லைன் கட்டாகிடுச்சேன்னு நினைச்சீங்களா”

 

“எதுக்கு காசை வேஸ்ட் பண்ணிட்டுன்னு நான் தான் கட் பண்ணிட்டு மறுபடியும் கூப்பிட்டேன்…”

 

“சொல்லுங்க டிடி!! உங்களை இந்த ஏகாந்த வேளையில தூங்கவிடாம செஞ்ச உங்க மனைவியை பற்றி சொல்லுங்க…”

 

“ஊரறிய அவ இன்னும் என் மனைவியாகலை பீ.எஸ். இதை கேட்டா என்னை வந்து உதைப்பா அவ… இனிமே இப்படி அடிக்கடி உங்க மனைவின்னு சொல்லிறாதீங்க”

 

“ஹா ஹா என்ன சார் உங்க கதை பெரிய காதல் கதையா இருக்கும் போல இருக்கே!! கேட்கவே சுவாரசியம் பிறக்குது”

 

“சொல்லுங்க நீங்க எப்படி லவ் ப்ரொபோஸ் செஞ்சீங்க!! அதுக்கு அவங்க ரியாக்சன் என்ன??”

 

“நான் அவளை தேடிப்போய் எல்லாம் ஐ லவ் யூன்னு சொல்லவே இல்லை…”

 

“அப்போ எப்படி சொன்னீங்க??”

 

“நாரை விடு தூது, காக்கை விடு தூது, தமிழ் விடு தூது அந்த வரிசையில காற்றுவிடு தூது விட்டேன்…”

 

“என்ன காற்று விடு தூதா??”

 

“ஆமாங்க இது போல ஒரு வான் வழியா ஊரறிய சொன்னேன் என்னோட காதலை அவகிட்ட!! காற்றுன்னா ஒரு வகையில தென்றல்ன்னும் சொல்வாங்கல்ல…”

 

“நம்ம சங்க இலக்கியத்துல தென்றல் விடு தூது கூட இருக்கே!! அப்படியே சொல்லிக்கலாம்…”

 

“செம இன்ட்ரெஸ்ட்ங் டிடி!! அப்போ அவங்க தினமும் உங்க வீட்டுக்கு வருவாங்கன்னு சொன்னீங்க!!”

 

“ஆமா தினமும் வருவா… இப்போ சொன்னனே அதே மாதிரி தான் காற்றின் அலைவரிசை வழியா தினமும் படுக்கையறைக்கே வந்து எனக்கு தாலாட்டு பாடுவா” அனுபவித்து சொன்னான் அவன்.

 

அவன் படுக்கையறை என்றதும் சட்டென்று அவளுக்கு ஒரு மாதிரி இருக்க உடன் அவன் தாலாட்டு என்றதும் தான் கொஞ்சம் மூச்சு சாதாரணமானது அவளுக்கு.

 

இவன் அவன் தானா என்ற குழப்பம் மீண்டும் அவளிடம் தலைத்தூக்க அதை தெரிந்துக் கொண்டுவிடும் ஆவலும் உத்வேகமும் அவளிடத்தில்.

 

“நீங்க எங்க வேலை பார்க்கறீங்க டிடி??”

 

“உங்க மாதிரி தாங்க நானும் ஒரு ஆர்ஜே” என்றான் அவன்.

‘இது நிச்சயம் அவனில்லை…’ என்ற ஆசுவாசம் பின் ஆச்சரியம் “என்ன டிடி சொல்றீங்க?? எந்த பண்பலைவரிசை நீங்க??”

 

“கொங்குநாடு பண்பலைவரிசை”

 

“அப்போ நீங்க கோவையா??”

 

“ஹ்ம்ம் ஆமாங்க… ஓ!! ஆனா நீங்க எப்படி அங்க இருந்து இங்க போன் பண்ணுறீங்க?? உங்களுக்கு கோவை வரை எங்க அலைவரிசை கேட்காதே”

 

“ஹ்ம்ம் உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்… அதுனால…” என்று இடைவெளிவிட்டான் அவன்.

 

‘இவனும் மத்தவங்க மாதிரியே சொல்றானே’ என்ற எண்ணம் தான் அவளுக்கு.

 

‘அதே வழிசல்’ என்று அவள் எண்ணிக்கொண்டிருக்க அவனோ “உங்க வாய்ஸ் நல்லாயிருக்கு அதுனால தான் போன் பண்ணேன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்களா…”

 

“நிச்சயமா இல்லை இந்த நிகழ்ச்சி பற்றி கேள்விபட்டேன்… பிரண்ட்ஸ் சொன்னாங்க நானும் சென்னை வந்த டைம்ல கேட்டிருக்கேன், பிடிச்சுது…”

 

“இன்னைக்கு அவளோட எண்ணங்கள் என்னை தூங்கவிடாம பண்ணுச்சு… அதான் அவளை தூங்கவிடாம செய்யணும்ன்னு போன் பண்ணேன்…”

“யூ மீன் அவங்க சென்னையிலயா இருக்காங்க…”

 

“ஆமா அந்த ராட்சஸி அங்க தான் இருக்கா… நான் பேசுறதை கேட்டுக்கிட்டு தான் இருக்கா…”

 

“என்ன டிடி இவ்வளவு சலிப்பு உங்க குரல்ல… இங்க போன் பண்ணதுக்கு பதிலா உங்க ஆளுகிட்ட பேசியிருக்கலாமே”

 

“என் காதலை நிராகரிச்சவ, என்கிட்டே பேசுவாளா என்ன??” என்றான் அவன் ஒருமாதிரி குரலில்.

 

“உங்க காதலை அவங்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களா… நீங்க இவ்வளவு ரொமாண்டிக்கா பாடுறீங்க… உங்க காதலை ஊரறிய சொல்லியிருக்கீங்க…”

 

“அப்படியிருந்தும் அவங்க ஏன் அப்படி சொன்னாங்க… அன்லக்கி அவங்க…”

 

“அன்லக்கி தான் அவ மட்டுமில்லை நானும் தான்… அவ எனக்கு கிடைக்கலைங்கறதுக்காக வெக்ஸ் ஆகியெல்லாம் இதை சொல்லலை…”

 

“இத்தனை வருஷத்துல அவளுக்கு என் ஞாபகமே வரலையே… நான் எங்கயோ தவறியிருக்கேன் தானே…” என்றவன் சட்டென்று அமைதியானான்.

 

அதற்குள் புவனா அவனை இரு முறை அழைத்துவிட்டாள். “மன்னிக்கணும் பீ.எஸ், சரி நான் வைக்கறேன்… இன்னுமொரு பாட்டு எனக்காக போடுவீங்களா…”

 

“கண்டிப்பா போடுவோம் டிடி சொல்லுங்க உங்க விருப்பமான பாடலை… பாடிக்காட்டினா இன்னும் நல்லாயிருக்கும்” என்று தன்னையுமறியாமல் அவனிடம் அதிகம் வளவளத்தாள் அவள்.

 

அந்த அமைதியான இரவில் அவன் குரலில் குழைந்து ஒலித்தது அவன் குரல். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலின் இடையில் இருந்து பாடினான் இப்போது.

 

பக்கத்தில் நீயுமில்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

சுவாசிக்க ஆசையில்லை

 

என்று அவன் மனதில் இருந்து அவன் பாடிய பாடல் நேரே அவள் இதயத்தை துளைத்து உள்ளே இறங்கியது போன்ற உணர்வு அவளுக்கு.

 

அவன் பேசிவிட்டு வைத்துவிடவும் அவன் கேட்ட பாடலை போட்டுவிட்டவளுக்கு அடுத்து வேறு யாரிடமும் பேசும் எண்ணமே வரவில்லை.

 

அவள் மனதில் இப்போது மீண்டும் அந்த முகமே நினைவிற்கு வந்து இம்சை செய்தது. இவனைப் போல தானே அவனும் அத்தனை பேர் கேட்க அவன் மனதை என்னிடம் பகிர்ந்தான்.

‘நான் தானே அவனை மறுத்தேன்’ என்ற எண்ணம் அவளை கொல்லாமல் கொன்றது. ஊரைவிட்டு வந்த இந்த இரண்டு ஆண்டுகளும் அவன் நினைவில்லாமல் தானே இருந்திருக்கிறாள்.

 

பல நாட்களுக்கு பின் இன்று தானே அவன் முகம் தோன்றுகிறது. ‘ஒரு வேளை நான் அவனை மறக்கவே இல்லையோ… நினைக்காமல் இருந்திருக்கிறேன் ஆனால் மறந்திருக்கவில்லை…’

 

‘அதனால் தான் இன்று அவன் என்னையுமறியாமல் வெளியே வந்திருக்கிறான்’ என்று தான் தோன்றியது அவளுக்கு.

 

அங்கிருந்த போன் வெகு நேரமாய் அடித்துக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தவள் அதை எடுத்து “ஹலோ” என்க “என்னாச்சு புவன் லைவ் ஷோ போயிட்டு இருக்கு…”

 

“இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க… ஐஞ்சு நிமிஷமா காலர் லைன்ல இருக்காங்க அட்டென்ட் பண்ணாம அப்படியென்ன யோசனை உங்களுக்கு”

 

“அப்போவே கேட்டேன்ல உடம்பு சரியில்லையான்னு… இப்போ ப்ரோகிராம் ஆரம்பிச்சதும் ஏன் இப்படி எங்க உயிரை எடுக்கறீங்க…” என்று எதிர்முனையில் சித்தார்த் கொஞ்சம் ஹார்ஷாக பேசினான்.

 

கண்ணில் மளமளவென்று நீர் கோர்த்துவிட்டது அவளுக்கு “சாரி… சாரி சார்… கண்டினியூ பண்றேன்”

“சீக்கிரம்…” என்று எரிச்சலாய் அவன் மொழிந்தான்.

 

அங்கு வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வேகமாய் தொண்டைக்குள் சரித்தாள். மனம் இன்னமும் குளிர்ந்திருக்கவில்லை.

 

கொதிநிலையிலேயே இருந்தது, சித்தார்த் பேசியது அவ்வளவு வருத்தியது அவளை. இதுவரை அவள் ஷோவில் இது போல் நடந்ததேயில்லை…

 

ஒரு  நிமிடத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவள் ஷோவை தொடர்ந்தாள் எப்போதும் போல்.

 

ஒரு மணி நேரத்திற்கும் மேலேயே கடந்திருக்க பின் எழுந்து வெளியே வந்தவள் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு தயாராய் நிற்க சித்தார்த் வந்தான் மீண்டும்.

 

“கேப் காத்திட்டு இருக்கு பார்த்து கிளம்பு… உடம்புக்கு முடியலைன்னா முன்னாடியே சொல்லு புவன்…”

 

“ஹ்ம்ம் ஓகே சார்…” என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு மின்தூக்கியில் இறங்க ஆரம்பித்தாள்.

 

அவள் எண்ணத்தை இன்னமும் அந்த டிடியின் பேச்சே ஆக்கிரமித்தது. வெளியில் வந்து அலுவலக வண்டியில் ஏறி அமர்ந்த பின்னும் அவள் யோசனையிலேயே இருந்தாள்.

 

இங்கிவளை யோசிக்கவிட்டு அங்கொருவன் நிம்மதியில்லாமல் அவளைப் போலவே எண்ணங்கள் அலைக்கழிக்க உடன் அவனும் அங்குமிங்கும் வேகமாய் நடந்துக் கொண்டிருந்தான்.

 

“என்னாச்சு தனு??” என்று எதிரில் வந்து நின்றவரை பார்த்து முறைத்தான்.

 

“இந்த நேரத்துல உனக்கு என்னடா யோசனை??” என்று மீண்டும் தொடர்ந்த குரல் நம் நாயகன் தேவ் தனுஷின் நண்பன் யாகாஷ்.

 

“ஒண்ணும்மில்லைடா…”

 

“இன்னைக்கு மறுபடியும் உன் ஆளு ஞாபகமா??”

 

“அதென்ன மறுபடியுமா… மறந்தா தானே ஞாபகப்படுத்தணும்… நான் தான் இன்னும் மறக்கவேயில்லையே”

 

“இன்னும் எவ்வளவு நாளைக்கு??”

 

“எவ்வளவு நாள் நான் இந்த உலகத்துல இருப்பனோ அவ்வளவு நாள்…” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் அவன்.

 

“இவன் திருந்த மாட்டான்… வேண்டாம்ன்னு சொல்ற பொண்ணையே நினைச்சு என்னத்தை சாதிக்கப் போறான்னு தெரியலை… அவ என்ன பெரிய உலகழகியா??” என்று யாகாஷ் முடித்திருக்கவில்லை அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் தனுஷ்.

 

“இப்படி பேசி பேசித்தான்டா அவ எதுவும் வேணாம்ன்னு போய்ட்டா… என்னடா குறை அவளுக்கு?? பொண்ணுங்க எல்லாருமே உலகழகியா தான் இருக்கணுமா…”

 

“உங்க கண்ணுக்கு அவ எப்படி தெரியணும்ன்னு அவசியமில்லை. எனக்கு அவ தான் அழகி, ஆமா உலகழகி அவ தான் எனக்கு போதுமா…”

 

“இனி யாராச்சும் அவளைப்பத்தி வாயை திறந்தீங்க அந்த வாய் உங்களுக்கு சாப்பிடுறதுக்கு மட்டும் தான் உபயோகப்படும், பேச முடியாம குரவளையை நெரிச்சிடுவேன்” என்று கத்திவிட்டு நகர்ந்தான் அவன்.

 

‘எனக்கெதுக்குடா வம்பு…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே அடிவாங்கிய தன் கன்னத்தை பிடித்துக்கொண்டே நகர்ந்தான் அவன்.

 

தேவ் தனுஷ் நம் கதையின் நாயகன் தற்போதைய வசிப்பிடம் கோவை. கொங்குநாடு பண்பலைவரிசையில் பகுதி நேரமாக ஆர்ஜே வேலை.

 

முழு நேர வேலை அவனின் தேன்சுவை உணவகத்தில். ஆம் சொந்தமாய் அவனுக்கு ஓர் உணவகம் உண்டு. அவன் அதற்கான படிப்பினை தான் படித்து முடித்திருந்தான்.

 

அன்னையில்லை அவனுக்கு தந்தை மட்டுமே. அவன் வீடு இருக்கும் அதே தெருவில் ஒரு இடத்தை பிடித்து தன் விருப்பமாய் சிறிய அளவில் ஆரம்பித்த உணவகம் தான் தேன்சுவை.

வருமானத்திற்கு குறைவில்லாமலும் நல்ல முறையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. தேன்சுவை உணவகத்தின் சிறப்பு என்னவென்றால் அங்கு தமிழகத்தின் பல ஊர்களின் ஸ்பெஷல் உணவுகள் கிடைப்பதே.

 

உதாரணத்திற்கு கடம்பூர் போளி, ஆம்பூர் பிரியாணி இப்படி செல்லும் வரிசையில் அந்தந்த ஊர்களின் சிறப்பான உணவுகளை கற்று அதை அப்படியே செய்து தருவதில் வல்லவன் அவன்.

 

இன்றைய மெனு என்று தினமும் ஒரு ஊரின் மெனு வகைகளை வரிசைப்படுத்திவிடுவான். அவன் கடைக்கென்று பிரத்தேயகமான வாடிக்கையாளர்கள் அவனுக்கு எப்போதும் உண்டு.

 

அப்படி அவனுக்கு தெரிந்தவர் தான் கொங்குநாடு பண்பலைவரிசையின் நிர்வாக அலுவலர். இவன் பேச்சும் நிதானமும் குரலும் பிடித்துப் போனவர் அவனிடம் ஒரு நாள் கேட்டேவிட்டார்.

 

தங்களின் பண்பலைவரிசையில் ஓர் நிகழ்ச்சி செய்து கொடுக்குமாறு. பகுதி நேரமாக செய்தால் கூட போதும் என்று கோரிக்கை வைக்க முதலில் யோசித்தவன் பின்பு சரியென்றிருந்தான் ஏதோவொன்றை மனதில் எண்ணி.

 

இரவு பன்னிரண்டு மணியில் இருந்து ஒரு மணி வரை அவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தான். உணவகத்தின் வேலைகள் பத்து மணிக்கே முடித்துவிடும் பின்பு பாத்திரங்கள் கழுவுதல் மறுநாளைக்கு தேவையானவை எடுத்து வைத்தல் இப்படி மேலும் ஒரு மணி நேரம் கடந்துவிடும்.

 

அதனாலேயே இரவு பன்னிரண்டு மணியை அவன் தேர்வு செய்திருந்தான். தினமும் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் அவன் உணவகத்தை திறப்பதே!!

 

அதனால் ஒரு மணிக்கு வேலை முடிந்து உறங்க வருபவன் மறுநாள் காலை ஒன்பதரை மணி வரை உறக்கத்தின் வசம் தானிருப்பான்.

 

மறு நாளைக்குரிய வேலைகளை முதல் நாளே பெருமளவு முடித்திருப்பான் அதனால் நேரம் எப்போதும் அவன் பிடியிலே!!

 

மனம் மட்டுமல்ல அவன் கண்களும் இன்று உறக்கத்தை தழுவும் என்று தோன்றவில்லை அவனுக்கு.

 

சோர்வு முற்றிலும் துரத்தியடிக்கப்பட்டிருந்தது, வெகுநாளைக்கு பின்னாய் அவளுடன் பேசியிருக்கிறான். இதயம் வேகமாய் துடிக்கத்தான் செய்தது.

 

ஆனாலும் பேச்சில் நிதானமாய் தானிருந்தான். தான் இவ்வளவு பேசியும் அவளுக்கு ஒரு மூலையில் கூட தன்னை பற்றி நினைவு எழவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இல்லாமலில்லை.

 

அவனெங்கே அறிவான் அவள் பேசுவதற்கு முன்பே அவள் நினைவில் அவன் பிரசன்னமாகிவிட்டானென்று.

 

அவனுக்கு ஷோவிற்கு நேரமாகிவிட நேராக அங்கு புறப்பட்டு சென்றான். “வணக்கம் நான் உங்க தனுஷ் பேசறேன்… இரவின் குளிரில் நிலவின் மடியில் நிகழ்ச்சியை ஆரம்பிச்சுடலாமா…”

 

“இன்னைக்கு நேயர்கள் கோவிக்கக்கூடாது, நீங்க கேட்ட பாடலுக்கு நடுவுல எனக்கு பிடித்த சில பாடல்களையும் சேர்க்கலாம்ன்னு இருக்கேன்…”

 

“கண்டிப்பா உங்களுக்கும் அந்த பாடல்கள் எல்லாம் பிடிக்கும் நேயர்களே… இப்போ நாம நிகழ்ச்சிக்கு போகலாம்… முதல் பாடல் நம்ம அவினாசியை சேர்ந்த முத்துவேல் கேட்டிருக்கார் ஆயிரம் நிலவே வா… என்ற பாடலுடன் சிறப்பாய் நிகழ்ச்சியை தொடங்குவோம்…”

 

அடுத்த ஒரு மணி நேரமும் அவனுக்கு பிடித்த பாடல்களும் நேயர் விருப்பமாய் வந்த பாடல்களையும் சிறப்பாய் தொகுத்து வழங்கி முடித்திருந்தான் அவன்.

 

“நேயர்களே நான் கிளம்புற நேரம் வந்தாச்சு… கிளம்புறதுக்கு முன்னாடி நிகழ்ச்சியோட கடைசி பாடல் எனக்கு பிடித்த பாடலோட நிறைவு செய்யறேன்…” என்றவன் அந்த பாடலின் வரிகளை பாடவாரம்பித்தான்.

 

தூரத்தே இருப்பவளுக்கு அவன் உயிர் உருகும் குரலில் தன் மனதை குழைத்து பாடும் பாடல் கேட்டுவிடாதா என்று பாடுவது போலவே இருந்தது அந்த பாடல்…

வானம் எங்கும் உன் பிம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்

வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி

என்னை செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே

ஓடோடி வா…

 

தேவ் கடைசி பாடல் ஒலிக்கவிட்டு தன் பணி முடித்து கிளம்பியிருந்தான்.

 

புவனா அங்கு அவளறையில் உறக்கமில்லாமல் புரண்டுக் கொண்டிருந்தாள், உறக்கம் வசப்படவில்லை அவளுக்கு.

 

அவளின் எண்ணங்கள் மூன்று வருடத்திற்கு முன்பு பயணிக்க ஆரம்பித்திருந்தது இப்போது…

Advertisement