Advertisement

அத்தியாயம் : 16

இரவில் அந்த கல்யாண மண்டபம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தது. கூடியிருந்த சொந்தங்கள் அனைவரின் முகத்திலும் அந்த வண்ண விளக்குகளை ஒத்த ஒளி. ஆனால் கல்யாணப் பெண்ணை பெற்ற தந்தையின் முகத்தில் அத்தகைய ஒளி வீசியதா என்றால் இல்லை!! அவர் முகத்தில் பெற்ற ஒரே பெண்ணின் கல்யாணத்தை நடத்துவதற்குண்டான எந்த வித மகிழ்ச்சியும் இல்லை. மாறாக நிறைய கவலையும், துக்கமும் மட்டுமே இருந்தது.

தன் பெண்ணின் குண நலன்களை கொண்டே அவரின் கவலை. பெண்ணிற்கு கல்யாணம் செய்து கொடுக்கும் எண்ணம் தந்தையான கோபாலனிற்கு அறவே இல்லை. அவரின் மனைவி லட்சுமியின் வேண்டுகோளிற்காக மட்டும் தான் தன் பெண்ணிற்கு திருமணம் செய்துவிக்கும் முடிவை எடுத்திருந்தார். வேண்டாவெறுப்பாக திருமண முடிவை எடுத்திருந்தாலும், பெண்ணிற்கு நல்ல முறையிலே திருமணம்  செய்துவைக்க வேண்டும் என்று  நினைத்திருந்தவரை, கல்யாண பெண்ணான அனுஷா கோபப்படுத்தியிருந்தாள்.

திருமணமண்டபத்தில் இருந்த ஒரு அறையில் தன் மனைவி, மகளுடன் தனியே பேசிக்கொண்டிருந்தார் என்பதை விட தன் மனக்குறையை கோபமாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் கோபாலன் என்பது தான் சரி.

“நாளைக்கு உனக்கு கல்யாணம் மா. கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க பாரு அனுசா! இத்தனை நாள் அடுத்தவங்க பாராட்டுக்காகவே பகட்டாக ஒரு திமிரோட வாழ்ந்துட்டு இருந்த, உனக்கு உள்ள ஒரு முகமும் வெளிய ஒரு முகமும் இருக்கிறது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இனிமே உனக்குன்னு ஒரு குடும்பம் வந்துடும். அந்த குடும்பத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்க. வெளி வேஷத்தோட குடும்பம் நடத்த முடியாது. குடும்பத்துக்குள்ள அன்பும் பண்பும் மட்டும் தான் நிறைஞ்சு இருக்கணும். வெளி ஆட்களோட தலையீடு குடும்பத்துக்குள்ள வராம, கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சு போனா தான் குடும்பம் நல்லா இருக்கும்.

லட்சுமி அவளுக்கு நல்ல புத்திமதிய சொல்லு. இவ குணத்துக்கு எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கவே பயமா இருந்துச்சு. ஏதோ  காலாகாலத்துல அதது நடக்க வேண்டியது நடந்தா தான் நல்லா இருக்கும் அப்படி இப்படின்னு ஏதேதோ சொல்லி  என்னை சம்மதிக்க வச்சது பெருசில்லை லட்சுமி. உன் பொண்ணு அங்க நல்ல விதமா குடும்பம் நடத்தணும்.. அது தான் எனக்கு வேணும். நல்லா புத்திமதி சொல்லி அனுப்பு லட்சுமி!” என்று தன் பெண்ணிடமும், மனைவியிடமும் பேசினார் கோபாலன்.

“அப்பா, என் பேரு அனுஷாப்பா. சும்மா சும்மா அனுசா அனுசான்னு கூப்பிடாதீங்க. நல்லாவேயில்லை. இப்போ எதுக்கு இத்தனை அட்வைஸ்? என் ஹஸ்பன்டா வரப்போறவர் கிட்ட டைமென்ட் நெக்லஸ் கேட்டது தப்பா?”

“அது தப்பில்லைம்மா, உன் வீட்டுக்காரர் கிட்ட நீயா கேட்டு வாங்கிக்கிறதோ இல்லை அவரு ஆசையா செஞ்சு போடறதோதப்பே கிடையாது நல்ல விஷயம் தான்.ஆனா, உன்னோட சிநேகித புள்ளக விட்ட சவாலுக்காக கேட்கிற பார்த்தியா அது தான் தப்பு. கல்யாணம்ன்னா மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு குடும்பத்துக்கும் செலவு இருக்க தான் செய்யும். அவங்களும் உனக்கு நகைகள் போடப்போறேன்னு சொல்லி அதை சபைல போட்டும் விட்டாங்க தானே. மேற்கொண்டு வைர நெக்லசை போடும்போதே எனக்கு நெருடலா தான் இருந்துச்சு. என்னடா இவங்க சொன்னதுக்கு மேல செய்றாங்களேன்னு நினைச்சேன். அப்படியே ஆகிப் போச்சு.

மாப்பிள்ளைக்கிட்ட போய் அடம் பிடிச்சு இந்த நெக்லசை நீ வாங்கியிருக்கேன்னு  உன் மாமியார் சொன்னப்போ எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. உங்கப்பன் தான் உன்னை வைரத்தால இழைச்சு தான அனுப்பறேன். அப்புறம் என்ன? இந்த நகையை கொஞ்சநாள் கழிச்சு அவரே பிரியமா வாங்கி தந்திருந்தா உன் மாமியாரும் சந்தோசப் பட்டிருப்பாங்க.! இப்போ பாரு உன் மேல அவங்களுக்கு வருத்தமும், கோபமும் மட்டும் தான் இருக்கு.!”

“இதுல என்னப்பா அசிங்கம்? இப்போ பாருங்க அவரு போட்ட நகையை நம்ம சொந்தக்காரங்க எவ்வளவு பெருமையா பார்த்தாங்க? என்னோட பிரண்ட்ஸ் விட்ட சவால்லையும் நான் ஜெயிச்சுட்டேன். என் பிரண்ட்ஸ் மத்தில என்னோட இமேஜும் கூடி போச்சு தெரியுமா? சும்மா அட்வைஸ் பண்ணி என் மூடை கெடுக்காதீங்க. கல்யாண கனவுகள் எதுவும் வராம போயிட போகுது.” என்றவளை முறைத்தார் கோபாலன்.

“அறிவு கெட்டவளே!! பேசுறது உன் அப்பன் கூடங்கிற நினைப்பு இருக்கா, இல்லையா? குடும்பம் நடத்த தேவை பொறுமையும் பொறுப்பும் தான். உன்னோட இமேஜையும், சொந்தங்களோட பெருமையான பார்வையையும் தூக்கி குப்பைல போட்டா தான் நீ உருப்படுவ. கூடியிருக்கிற சொந்தங்களோட நிம்மதியா சந்தோஷமா பேசி சிரிக்க முடியாம, இதோ இப்படி தனியே கதவை அடைச்சுக்கிட்டு பேசிட்டு இருக்கேன்.

எந்த குடும்பமாவது இப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி தனியே பேசிகிட்டு இருக்குமா? உன்னை போல புள்ளைய பெத்துக்கிட்டா இப்படி தான் நடக்கும். திரும்பவும் சொல்றேன் கொஞ்சம் பொறுப்பா, குடும்பத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க பாரு.!” என்று கோபமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார். லட்சுமி அவரை சமாதானம் செய்ய அவரின் பின்னேயே சென்றார்.

அனுஷாவிற்கு தந்தை அறிவுரை செய்வது எப்போதுமே பிடிக்காது. அதனால் அவரின் அறிவுரையை பெரிதாக எடுத்துக்கொள்ளாது மணப்பெண்ணின் அறைக்கு சென்று கல்யாண கனவு காண ஆரம்பித்தாள்.

அனுஷா குழந்தையிலிருந்தே ஒரு சுயநலவாதி. எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்தாள். வளர வளர அனைவருக்கும் தான் எப்பொழுதும் தனியே தெரிய வேண்டும் என்ற பிடிவாத குணமும் சேர்ந்தே வளர்ந்தது. தனியே தெரிவதற்கு நன்றாக படித்து முன்னேறியோ, இல்லை ஏதேனும் ஒரு கலையை கற்று அதன் மூலம் நற்பெயர் வாங்கவோ அவள் சிறிதளவும் முயற்சிக்கவேயில்லை. எந்த வித கலையும் தெரியாது. படிப்பிலும் சுமார் ரகம் தான். ஆனால் வெட்டி பந்தாவிற்கு என்றுமே அவளிடம் குறைச்சலே இல்லை. ஒன்றுக்கும் உதவாத அந்த வெட்டி பந்தாவினால் கோபாலனுக்கு பணத்தாலும் மனத்தாலும் நிறையவே நஷ்டம்.

அவளை யாராவது உசுப்பேற்றினால் போதும், அவர்கள் சொல்லுவதை செய்தே தீருவாள். உதாரணமாக, ‘அந்த பிராண்ட் bag எல்லாம் ரொம்ப costly, நீ அதை வாங்கிட்டீன்னா, நீதாண்டி கெத்து.!’ என்று யாராவது சொன்னால், அன்றே அதை வாங்கி தன்னுடைய கெத்தை நிரூபிப்பாள். மற்றவர்கள் கூறி அவள் செய்தது ஏராளம்.  பணத்தால் அவருக்கு நஷ்டம் வந்ததை கூட பொறுத்துக்கொண்ட கோபாலன், தோழிகளின் உசுப்பேற்றலுக்காக புகையையும் மதுவையும் ருசித்த பெண்ணை கண்டு மனம் வெறுத்து தான் போனார். நல்லவேளை புகை மற்றும் மதுவின் சுவை பிடிக்காததால் மேற்கொண்டு அதை அவள் தொடரவில்லை. கோபாலன் செய்திருந்த ஏதோ ஒரு புண்ணியம் தான் அவளை இழிநிலைக்கு கொண்டு செல்லாமல் காப்பாற்றியது.

அவளின் மனம் என்றுமே ஒரு நிலையில் நில்லாது. இது அதை விட பெட்டர் அது இதை விட பெட்டர் என்று மாறிக் கொண்டே இருக்கும் மனம் அவளுடையது.ஸ்திர மனதில்லா பெண்ணான அனுஷாவை குறித்து எப்போதுமே மிகுந்த கவலை கோபாலனுக்கும் லட்சுமிக்கும்.

பெண்ணின் இந்த குணநலன்களை நன்கு அறிந்திருந்த கோபாலன், அவளுக்கு திருமணம் செய்து ஒரு குடும்பத்தின் நிலையை சீர்குலைக்க விரும்பவில்லை. தாய் லட்சுமிக்கோ ஒரே பெண்ணை நன்றாக திருமணம் செய்து கொடுத்து வாழவைப்பதே அவரின் ஆசையாக இருந்தது. அவரின் கெஞ்சுதல் ஒன்றிற்காக மட்டும் தான் பெண்ணை திருமணம் செய்துகொடுக்க சம்மதித்தார் கோபாலன்.

தன் பெண்ணைப் பற்றிய கவலையில் இருந்தவருக்கு தெரியாது தனக்கு மாப்பிள்ளையாக வரும் விசாகனும் அதே குணநலன்களை கொண்டவன் என்று. வேலை ஒன்றும் பெரிதாக இல்லாமல் போனாலும் பரம்பரை சொத்துக்கள் நிறையவே இருந்ததால் விசாகனுக்கும் வெட்டி பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

விசாகனை பெற்றவர்களுக்கும் திருமணம் செய்துவைத்தால் பொறுப்பு வரும் என்று நம்பி தான் அனுஷாவை பேசி முடித்திருந்தினர். அவர்களுக்கும் தெரியாது அனுஷாவின் குணங்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு திருமணம் செய்துவைத்து விட்டு எப்படி வாழ்வார்களோ என்று பதட்டத்துடன் தான் அந்த பெரியவர்கள் இருந்தார்கள். திருமணம் முடிந்து ஒரு ஆறு மாதம் எந்தவித பிரச்சினையும் வரவில்லை. இருவருமே பணம் சற்றே அதிகமாக செலவளித்தது தவிர எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. இரு குடும்பங்களிலுமே பரம்பரை சொத்து இருந்ததால் புதுமண தம்பதிகளுக்குள் பணப் பிரச்சினை வராமல் பார்த்துக்கொண்டார்கள் பெற்றவர்கள்.

ஏழாவது மாத தொடக்கத்தில் அனுஷா புது பிரச்சினையை கிளம்பினாள். ஒரு குழந்தையை தத்து எடுக்கப்போகிறோம் என்று வந்து நின்றவர்களை பார்த்து பெரியவர்கள்  சற்று அதிர்ந்து தான் போயினர். உங்களுக்கு வயதுதான் இருக்கிறதே பிள்ளைகள் பிறக்கும் கவலைப் படாமல் இருங்க என்று அறிவுரை சொன்ன பெற்றவர்களுக்கு கிடைத்த பதில் மேலும் அதிர்ச்சியை தான் கொடுத்தது.

“என்னோட பிரண்ட் ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணியிருக்கா. இப்போ எல்லாம் அவளை பத்தி மட்டும் தான் எங்க gang பேசுது. திரும்பவும் அவங்க என்னைப் பத்தி பேசணும்ன்னா நான் ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணியே ஆகணும். விசாகனுக்கும் இதுல சம்மதம் தான். அவரோட பிரண்ட் சர்கிள்ள கூட யாரோ குழந்தையை அடாப்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கே குழந்தை பிறந்ததாம். அதான் அடாப்சன் க்கு எழுதி கொடுத்துட்டு வந்துட்டோம். என் லாயர் பிரண்டு தான் எங்களுக்கு கைடு பண்ணியிருக்கா. அநேகமா இந்த மாசத்துல அனாதை ஆசிரமத்துக்கு போய் குழந்தையை எடுத்துக்கிட்டு வருவோம்.!” என்றவளை பார்த்து கோபாலனுக்கு கோபம் தான் பெருகியது.

“அனுசா!! கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து யோசிச்சு முடிவெடு. இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. எடுத்துக்கிட்டு வர குழந்தைய உசுர கொடுத்து பார்த்துக்கணும். அந்த அளவுக்கு பொறுமையோ பொறுப்போ உங்க ரெண்டு பேருக்கிட்டயுமே கிடையாது. இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.! என்று கெஞ்சினார் கோபாலன். அவரின் வார்த்தைகளையே வழி மொழிந்தார்கள் லட்சுமிமற்றும் விசாகனை பெற்றவர்கள்.

“அப்பா நாங்க பார்த்துக்கிறோம். இப்போ எதுக்கு ஓவர் ரியாக்சன்?” என்றாள் அனுஷா.

பெற்றவரை எதிர்த்து கேள்வி கேட்ட தன் மனைவியை காதலாகப் பார்த்தான் விசாகன். அவன் தந்தையிடம் ஒரு நாளும் எதிர்த்து பேசிவிட முடியாது, கையை நீட்டி விடுவார். அதனால் மௌனமாகவே தன் காரியங்களை சாதித்துக்கொள்ளவான்.

“என்ன அனுசா பேசற நீ? எங்க கிட்ட அனுமதி வாங்காம எழுதி கொடுத்துட்டீங்க, நாளப் பின்ன குழந்தைய பார்த்துக்க நாங்க வேண்டாமா? கொஞ்சம் யோசிச்சு பேசு!!” என்ற கோபாலனை நக்கல் சிரிப்புடனேயே பார்த்தாள் அனுஷா.

“என் வீட்டுக்காரர் கிட்ட பேசிட்டு நாங்க ரெண்டு பெரும் போய் தான் எழுதிக்கொடுத்துட்டு வந்தோம். நாங்க எதுக்கு உங்க கிட்ட பர்மிசன் கேட்கனும்?சும்மா  பொறுப்பில்லை ன்னு திட்ட மட்டும் செய்யக்கூடாது. குழந்தையை தத்து எடுத்தா நாங்க பொறுப்பா நடந்துக்குவோம். எங்களைப் புரிஞ்சுக்கங்க. எங்களை கொஞ்சமாவது நம்புங்க.!” என்றவளின் வார்த்தையை நம்பி குழந்தையை தத்து எடுக்க சம்மதித்தனர் பெரியவர்கள்.

ஒரு மாதம் கழித்து அன்பு இல்லத்திலிருந்து அழைப்பு வந்தது. விசாகனும் அனுஷாவும் அங்கு சென்று பார்த்த போது ஐந்து வயது நிரம்பியிருந்த  யதீந்திரனை பார்த்து மயங்கினார்கள். பழைய சட்டை அணிந்திருந்தாலும் முகத்தில் இருந்த  ராஜ களை அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதுமட்டுமில்லாமல் அவனை விட வயது குறைந்த குழந்தைகளை மிகுந்த பொறுப்புடன் பார்த்துக்கொண்டே  சிறு சிறு வேலைகளும் செய்த வண்ணம் இருந்த அந்த குழந்தையை தத்து எடுப்பது என்ற முடிவினை எடுத்தார்கள்.

அவர்களிடம் இல்லாத பொறுப்புணர்ச்சியை யதீந்திரனிடத்தில் பார்த்ததாலோ என்னவோ அவனையே தத்து எடுக்கும் முடிவை எடுத்தனர்.

அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள்அனைவருமே யாரையும் எதிர்பார்க்காமல் தங்கள் வேலையை தாங்களே செய்துக்கொண்டு தானே வளருவார்கள். கீழே விழுந்தால் கூட தூக்கி வைத்து சமாதானம் செய்ய சொந்தங்கள் இல்லாத சூழ்நிலை. எல்லா குழந்தைகளும் தானாகவே விழுந்து எழுந்து நடைபயின்றவர்கள். பாதி பருக்கைகள் கீழே விழ தானாகவே அரை வயிறு சாப்பிட்டு வளரும் குழந்தைகள். அன்பிற்காக மட்டுமே ஏங்கும் குழந்தைகள். கூடவே பொம்மைக்காகவும் புது துணிக்காகவும் ஏங்கியிருக்கும் குழந்தைகள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் யதீந்திரனும் அதேப்போல தான் வளர்ந்தான். யாதவனும் அங்கு தான் வளர்ந்தான். அன்று யாதவனும் அவனுடன் தான் இருந்தான். ஆனால் யதீந்திரனை தான் அவர்களுக்கு பிடித்தது.

சற்றே வளர்ந்த குழந்தைகளை தத்து எடுப்பது அபூர்வம் என்று அன்பு இல்ல தலைவரும் மனமுவந்து யதீந்திரனை தத்து கொடுத்தார். இவர்கள் தத்து எடுத்து முடிக்கும் வரை அனைத்து வித சட்ட நடவடிக்கைகளை அவர்களின் பிரண்ட் கார்த்திகாவும் அவள் கணவர் இளமாறனும் கவனித்துக்கொண்டனர்.

இந்த கார்த்திகாவும் இளமாறனும் தான் சுஜியை பெற்ற சட்ட வல்லூநர்கள்.

சற்று பெரிய குழந்தையுடன் வீட்டினுள் நுழைந்தவர்களைப் பார்த்து பெருமூச்சு வீட்டுக் கொண்டனர் பெரியவர்கள். கைக்குழந்தையை தூக்கி கொண்டு வராமல் இருந்ததே அவர்களுக்கு சந்தோஷம் தான். குழந்தையிடம் இருந்த அழகும் அவர்களை மயக்கியிருந்தது. குட்டி கண்ணனாகவே நினைத்து அவனை கொஞ்சி மகிழ்ந்தனர். யதீந்திரனுக்கும் தாத்தா பாட்டி கிடைத்தது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. அவர்களுடன் நன்றாகவே பொழுதை கழித்தான்.

அனுஷா மற்றும் விசாகனுக்கு நட்புக்களின் மத்தியில் அவர்களுக்கு மிகுந்த நற்பெயர் கிடைத்தது. வளர்ந்த குழந்தையை தத்து எடுப்பது சாதாரண விஷயமில்லை என்று சொல்லி சொல்லியே உசுப்பேற்றிக்கொண்டிருந்ததால் யதீந்திரனுக்கு நல் வாழ்வையே அளித்தனர்.

நல்ல உடைகள், சாப்பாடு, பள்ளி  நல்ல சொந்தங்கள் மற்றும் புதிதாக கிடைத்த நட்புகள் என்று இருந்த யதீந்திரனுக்கு அந்த காலங்கள் எல்லாம் இப்பொழுதும் வசந்தகாலமாகவே தோன்றும். அந்த வசந்தகாலத்தை நினைத்து இன்னமும் அவன் மனதில் சிறு ஏக்கமும் உண்டு.

யதீந்திரனை தத்து எடுத்து மூன்று வருடம் கடந்து போனது. அனுஷாவின் அம்மா மாரடைப்பால் காலமாகியிருந்தார். முற்றிலும் உடைந்திருந்த கோபாலனை யதீந்திரனின் கவனிப்பு தான் தேற்றியது.

அதிலிருந்து சற்றே மீண்டவரை விசாகனின் பெற்றவர்கள் சாலைவிபத்தில் பலியானது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அனைவரும் சேர்ந்து அனுஷா மற்றும் விசாகனை கவனிக்கும் பொறுப்பை இவரிடம் விட்டு சென்றனர். யதீந்திரனை கவனிக்க அவசியமே இல்லாமல் அந்த வயதிலேயே மிகுந்த பொறுப்புடன் நடந்துக்கொண்டான். யதீந்திரன் தான் கோபாலனை கவனித்துக்கொண்டான்.

அடுத்த வருடத்திலேயே அனுஷா கருவுற்றாள். அதனால் சற்று அவர்களின் வாழ்க்கை முறை மாறியது.

அவர்களின் வாழ்க்கை முறை மாறியதுமே அனுஷாவிற்கும் விசாகனிற்கும் மனஸ்தாபங்கள் வர தொடங்கியிருந்தன. அவர்களின் சண்டையைப் பார்த்து யதீந்திரனுக்கு பயம் அதிகமாகியது. ஏற்கனவே கோபாலனுடன் மட்டும் இருப்பவன் இவர்களின் சண்டையினால் அவரையே அதிகம் அண்டியிருந்தான்.

கோபாலன் எவ்வளவு தலையிட்டும் அவர்களை சமாதானம் செய்துவைக்க முடியவில்லை. அனுஷாவின் தோழி கார்த்திகாவின் மூலம் விசாகனிடம் இருந்து விவாகரத்துக்கு முயற்சி நடைபெற்றது.

 அனுஷா கருவுற்று ஆறாம் மாதம் ஸ்கேன் செய்து பார்த்த போது தான் குழந்தைக்கு கால்களில் வளர்ச்சி இல்லை என்று தெரிந்தது. டாக்டரின் கவனக்குறைவால் மிகவும் லேட்டாக தெரிய வந்ததால் அனுஷாவினால் அபார்சன் செய்ய இயலாமல் போனது.

ஊனமுற்று பிறக்கும் குழந்தையை தன்னால் பார்த்துக்கொள்ள முடியாது நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று விசாகனிடம் சண்டையிட்டாள் அனுஷா. விசாகன் எதையும் காதில் வாங்காது வீட்டை விட்டு வெளியே சென்று இருந்துக்கொண்டான். அந்த கோபத்தில் ஜீவானம்சமாக விசாகனின் பாதி சொத்தை வாங்கினாள். அவனும் எழுதி கொடுத்துவிட்டு, கோடீஸ்வர குடும்பத்திற்கு வீட்டோடு மாப்பிள்ளையாக ஆனான்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே விவாகரத்து கிடைத்ததற்கு முழு காரணமும் கார்த்திகா மற்றும் இளமாறனும் தான். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து விவகாரத்தை எளிதாக பெற்றுக்கொடுத்தனர்.

கோபாலனுக்கு விசாகனின் மறுமணம் அதிர்ச்சியை கொடுத்தது. அவருடைய உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அதனால் தன் சொத்துக்களை பெண்ணின் பெயருக்கு மாற்றினார். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த அவள் சிரம படக்கூடாது என்று நினைத்து அவர் சொத்துக்களை பெண்ணின் பெயருக்கு மாற்றி எழுதினார்.

ஆனால் அவர் பெண்ணோ பிரசவித்த குழந்தையை அவரின் கையில் கொடுத்ததோடு தனியே வீடு எடுத்து தங்கி கொண்டு மறுமணத்திற்கு மாப்பிள்ளை தேட தொடங்கினாள். விசாகனை விட தான் ஒருபடி மேல தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற நினைவு மட்டுமே அவளிடம்.

அனாதை ஆசிரமத்திலிருந்து எடுத்த குழந்தையோ, தான் பெற்ற குழந்தையோ இல்லை தன்னை பெற்றவரோ எதுவுமே அவளின் நியாபகத்தில் இல்லை. பிள்ளைப் பெற்று வீணாகி போய் இருந்த தன் உடல் அழகை பெருக்குவதிலேயே அவளின் கவனம் இருந்தது.

கோபாலனிற்கு மேலும் உடல் நிலை மோசமாக ஆரம்பித்தது. சொத்துக்களை பெண்ணின் பெயருக்கு மாற்றி எழுதிய தன்னுடைய முட்டாள் தனத்தை திட்டிக்கொண்டே குழந்தைகளை அன்பு இல்லத்திலேயே மறுபடியும் சேர்த்துவிட்டு மரணித்தார் கோபாலன்.

யதீந்திரனுக்கு பத்து வயது நிரம்பியிருந்ததால் ஓரளவிற்கு நடந்ததெல்லாம் புரிந்திருந்தது. தங்கையை அன்பிற்கு ஏங்க விடாமல் அவளை முழு நேரமாக அவனே பார்த்துக்கொண்டான். யாதவனும் தன் நண்பனின் தங்கையை தன் தங்கையாகவே பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான்.

யதீந்திரன் வளர வளர அவனை தத்து எடுத்தவர்களின் மீது கோபமும் வளர ஆரம்பித்தது. தன்னை விட்டது கூட அவனின் மனதிற்கு கோபத்தை கொடுக்கவில்லை. முடியாத குழந்தையான தன் தங்கையை விட்டது தான் அவனிற்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. தன்னைப் போல பெற்றவர்கள் யாரென்று தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அந்த பெரிய வீட்டில் ராணி மாதிரி வாழவேண்டிய குழந்தையை இப்படி அனாதை ஆக்கியது அவனுள் கோபத்தை பெருக்கியது.

ராணி போல வாழவேண்டிய தங்கையின் பேரிலாவது ராணி இருக்கட்டும் என்று அவன் தான் யுவராணி என்று பெயரிட்டான். தத்து எடுத்த பெற்றவர்கள் செய்த மறுமணத்தின் மூலம் வாரிசுகளை பெற்றது தெரியும் போது அவன் பள்ளி இறுதியில் இருந்தான். இந்த குழந்தைகளையாவது அநாதையாக்காமல் இருந்தால் சரி என்றும் நினைத்துக்கொண்டான். அவர்கள் மேல் இருந்த கோபம் வன்மமாக மாறாமல் இருக்க அன்பு இல்ல தலைவரும், யாதவன் மற்றும் யுவராணி பார்த்துக்கொண்டார்கள்.

யுவராணிக்கு யதீந்திரனை தத்து எடுத்துவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து திரும்ப ஆசிரமத்தில் சேர்த்ததை மட்டும் சொல்லியிருந்தார்கள். அதனால் அவளைப் பெற்றவர்களை அவள் அறியாமலே இருந்தாள்.

ஆனால் கார்த்திகாவும், இளமாறனும் அனுஷாவை யசோதரா இருந்த மருத்துவமனைக்கே வரவழைத்து இருந்தனர்.  யசோதராவிற்காக செய்திருந்த புகாரை யதீந்திரன் வாபஸ் வாங்கவில்லையென்றால் யுவராணியை அனுஷாவுடன் அனுப்பி வைத்து விடுவோம் என்று மிரட்டினாள் கார்த்திகா.

அவளின் மிரட்டல் கூட அவர்களுக்கு பயம் தரவில்லை. அதற்காக அவள் சொன்ன காரணம் தான் மிகுந்த பயத்தை கொடுத்தது.

“அண்ணன்களின் வற்புறுத்தலால் பாலியல் தொழிலுக்கு வந்த தங்கையை காப்பாற்றி தன்னிடம் பெண்ணை ஒப்படைக்க கேட்டு என்னிடம் மனு கொடுத்திருக்கும் தாய் அனுஷா!”என்று குரோதத்துடன் கூறினாள் கார்த்திகா.

“இதற்கெல்லாம் பக்காவாக சாட்சி ரெடி!! நீ மட்டும் கம்பளைண்ட் வாபஸ் வாங்காம மேற்கொண்டு என்னை பற்றி புகார் சொன்னா, விபச்சார வழக்கில் தங்கையும் மனைவியும் கைது. அதைப் பார்த்த கணவன் மனம் உடைந்து தற்கொலைங்கிற நியூஸ் தான் நீ பார்ப்ப யதீந்திரன்.

அது மட்டுமில்லை உன் காதலியும் அவளோட அக்காவும் கூட உன் தங்கையோட கைதாகி அசிங்கப்பட்டு தான் போவாங்க. செவ்வாய் கிரகத்திற்கு போக வேண்டியவளை களி திங்க அனுப்பமாட்டேன்னு நினைக்கிறேன். எதுக்கும் நல்லாயோசிச்சு முடிவெடு.!!” என்று விட்டு அனுஷாவுடன் வெளியேறினாள் கார்த்திகா.

கார்த்திகாவின் பேச்சை கேட்ட அதிர்ச்சியில் தன் சக்கரநாற்காலியை விட்டு இறங்க முயற்சித்த யுவராணி கீழே விழுந்தாள். விழுந்ததில் சுவரின் நுனி நீட்டிக்கொண்டிருந்ததால் அதில் இடித்து தலையிலிருந்து இரத்தம் வடிய தொடங்கியிருந்தது. அவளின் கால்களும் சக்கர நாற்காலியில் அடிப்பட்டதால் அங்கேயும் இரத்த கசிவு ஏற்ப்பட்டது.

 

Advertisement