Advertisement

ஆசை!!!

 

“போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து, தன் மழலை குரலால் திரும்ப திரும்ப சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளின் நட்புக்களும் சேர்ந்து கொண்டிருந்தது.

குழந்தைகளின் விளையாட்டை ரசித்தபடி இருந்த லோகநாதன் வீட்டினுள் நுழைந்தார்.

திலகா தன் அப்பா வீட்டினுள் நுழைவதை கண்டதும் “நான் வீட்டுக்கு போறேன்..கயலு நீ வரியா எங்கூட?”

“அடியே மாரி, நான் தில்லு கூட அவுங்க வீட்டுக்கு போறேன். அம்மா நேரமான திட்ட போவுது.! நீ போய் சொல்லு புள்ள!!” என்று தன் அக்கா மாரியம்மாவிடம் சொன்னவாறே திலகாவுடன் சென்றாள் கயல்விழி.

திலகா வீட்டினுள் நுழையும்போது லோகநாதன் காபி அருந்திக்கொண்டிருந்தார்.

“ப்பா! இன்னா திருழாப்பா (திருவிழா) நடக்குது? காலைலேர்ந்து எம்புட்டு பேரு வந்தாங்க தெரியுமா?” என்று கேட்ட திலகாவை ஆமோதிப்பதாக தலையாட்டினாள் கயல்.

“ஆமா மாமா, அந்த பாட்டைக்கூட நாங்க பாடுவோமே!! டி தில்லு எங்க சொல்லு.! போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தைப்பார்த்து!” என்று பாடிய குழந்தைகளை சிரிப்புடன் பார்த்தார் லோகநாதன்.

குழந்தைகள் இருவரும் கைகளை குவித்து கும்பிட்டு பாடுவதுஅந்த அரசியல்வாதிகளைப் போன்றே இருந்தது. காபி டம்பளரை கீழே வைத்துவிட்டு, இரு குழந்தைகளையும் கைகளில் அள்ளிக்கொண்டார் லோகநாதன்.

“கண்ணுகளா! இது திருவிழா இல்ல! அடுத்த மாசம் வரப்போற எலக்ஸன்க்கு பிரச்சாரம். அதுக்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்!”

“எச்சனா? அப்டின்னா?” என்றாள் திலகா.

“தேர்தல்ம்மா?”

இவர்களின் பேச்சு கயலுக்கு சலிப்பை ஏற்படுத்த வெளியே ஓடி சென்றாள்.

அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த தந்தையை தன் புறம் திருப்பி, “ப்பா நீ சொல்லு? தேர்வுன்னா பரிச்சை(பரீட்சை) தான? மாரியாக்கா கூட அட்டை எல்லாம் எடுத்துட்டு போகுமே அதான?”

“கொஞ்சம் அது மாதிரி தான் திலகா.!” என்று மிக சாதாரணமாக பதில் அளித்த லோகநாதன் அன்றைய இரவு உணவுக்கு மனைவி அழைத்ததால் திலகாவையும் அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றார்..

குழந்தையின் வயதை கருத்தில் கொண்டே அவர் அந்த பதிலை அளித்திருந்தார்.

அடுத்த அடுத்த நாட்களில் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த ஆரவாரத்துடன் நடந்தது. தினமும் ஏதேனும் ஒரு கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டு அந்த தொகுதியை மிகுந்த பரபரப்புடனே வைத்திருந்தது.

சின்னத்துக்கு தகுந்த மாதிரி கொடுத்த பரிசுகள், இனிப்புகள் மறைத்து கொடுக்கப்பட்ட பண கவர்கள், கலர் கலராக அவர்கள் அணிந்து வந்த துண்டுகள் மற்றும் தாரை தப்படையுடன் அந்த தொகுதி வேட்பாளரை அழைத்து வந்தது என்று அனைத்தையும் திலகா ஒரு பிரமிப்புடனே பார்த்திருந்தாள்.

அன்று தேர்தல்!!

ஒவ்வொருவராக சென்று வாக்களித்து விட்டு வந்தனர். சிலர் தங்கள் கைகளில் இருந்த மையைக் காட்டி ஏதோ பேசியபடி சென்றனர். அதையும் குழந்தை திலகா பார்த்தாள்.

கையில் அந்த மை வைத்தப் பிறகு பெரியவர்களின் முகத்தில் ஒருவித பெருமிதம் கலந்திருந்ததாக அந்த குழந்தைக்கு தோன்றியது.

தன்  கையிலும் அந்த மையை அப்பிக் கொள்ளவேண்டும் என்ற ஆசை  அவளுக்கு அன்று உதித்தது!!

திலகா பத்து வயதானபோது அடுத்த சட்டமன்ற தேர்தல் வந்தது.

மீண்டும் அதே மாதிரியான பாட்டுக்கள், வசனங்கள், கொண்டாட்டங்களால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டம், சத்தம்  மற்றும் கொடுக்கப் பட்ட பரிசுகள் என்பது அங்கிருந்த வாக்காளப் பெருமக்களுக்கு சலிப்பைக் கொடுத்தாலும் குழந்தை திலகாவிற்கு அது அடுத்த திருவிழாவாகவே தோன்றியது.

தந்தை லோகநாதனிடம் தேர்தல் குறித்த சந்தேகங்களை மீண்டும் கேட்டறிந்தாள் திலகா.

தந்தையின் விளக்கம் இப்பொழுதும் அந்த குழந்தைக்கு புரியவில்லை தான். ஆனால் ,

கையில்  ‘மை’ வைக்கும் ஆசை மட்டும் குறையாமல் மிகுந்திருந்தது.

அடுத்த இருவருடங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடந்ததையும் குழந்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் உடல் வளர்ச்சியோடு, மனதில் இருந்த அந்த ‘மை’ ஆசையும் கூடவே வளர்ந்தது.

அடுத்தடுத்து வந்த பிறந்தநாட்களில் சில இடை தேர்தல்களையும் திலகா கண்டிருந்தாள்.

தேர்தல் என்ற திருவிழாவை அவளின் குழந்தை மனம் எதிர்பார்க்க தொடங்கியது.

கையில் மை தடவிட வேண்டும் என்ற ஆசையும் பெருகியது.

அவளின் பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தாள். இப்பொழுது தேர்தல் என்றால் என்ன என்று புரிந்திருந்தது. அரசியலும் புரிய ஆரம்பித்திருந்தது.

“ஏங்க புள்ளைக்கு பதினெட்டு வயசாச்சு, அடையாள அட்டை எடுக்கணுமுங்க!” என்ற அம்மா லக்ஷ்மியை கட்டிக்கொண்டாள் திலகா.

“ம்மா,நெக்ஸ்ட் இயர் வர எலக்ஸன் ல நான் வோட் பண்ணலாம். என்னோட பிங்கர்லையும் கருப்பு மை வைக்கப் போறாங்க.!” என்று குதூகலித்தாள் திலகா.

“எவடி இவ கூறு கெட்டவ!! இப்போ நீ ஓட்டு போட்டு தான் நாட்டோட தலையெழுத்தை மாத்தப் போறியாக்கும்? அடையாள அட்டை எடுத்துவச்சுக்கிட்டா நாளப் பின்ன பாஸ்போர்ட் எடுக்க கொள்ள வசதியாப் போகும். அதுக்கு தான் எடுக்க சொல்றது. எப்பப் பாரு கையி, மையின்னு புலம்பிக்கிட்டே இருக்காதே திலகா. போய் அடுப்புல இருக்கிறதை கிளறி விடு. நீ எல்லாம் ஒட்டு போட்டு என்னத்தை சாதிக்கப் போற?” என்று கோபித்தார் லக்ஷ்மி.

அவருக்கு அவர் கவலை. அடுத்த வீட்டில் வசித்த கயல்விழிக்கு அடையாள அட்டை எடுத்து பாஸ்போர்ட்டும் எடுத்த ராசியோ என்னமோ நல்ல இடத்தில் சம்பந்தம் அமைந்து இருந்தது. மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்கிறார். அதேப்போல தன் மகளுக்கும் அமையவேண்டும் என்ற ஆசை அவருக்கு.

எல்லோருக்கும் உரிமை இருக்கிறது ஆசைப் பட!!

ஆசைகள் பலவிதம்.!! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

மறுநாள் திலகாவின் பிறப்பு சான்றிதழ், புகைப்படங்களுடன் பக்கத்தில் இருந்த அரசுப் பள்ளிக்கு சென்று வாக்காள அடையாள அட்டைக்கு பதிந்துவிட்டு வந்தனர். இன்னும் இரண்டு மாதத்திற்குள் அடையாள அட்டை கைக்கு கிடைத்துவிடும் என்கிற சந்தோஷத்தில் இருந்தாள் திலகா.

இரண்டு மாதங்கள், மூன்று நான்கு என்று கடந்ததே தவிர அவள் கைக்கு வாக்காள அடையாள அட்டை மட்டும் கிடைத்தபாடில்லை. 

அடுத்து நடக்கவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கூட ஆரவாரத்துடன் ஆரம்பித்தது. திலகாவின் கைக்கு மட்டும் அடையாள அட்டை வரவில்லை.

அந்த தேர்தலும் நடந்து முடிந்தது அவளின் கையில் ‘மை’ வைத்தே ஆகவேண்டும் என்ற ஆசையுடன்..

அதுவரை வாடகை வீட்டில் குடியிருந்த திலகா குடும்பத்தினர் சொந்த வீடு வாங்கி வேறு ஏரியாவுக்கு குடிபுகுந்தனர்.

குடும்பத்தினர் அனைவரின் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் குடியிருப்பு விலாசத்தை மாற்றும் போது மீண்டும் திலகாவிற்கு புதிய அடையாள அட்டைக்கும்  விண்ணப்பித்தனர்.

ஐயோ பாவம்.!! குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களின் அடையாள அட்டை கொடுக்கப் பட்டது. மீண்டும் திலகாவின் பெயர் விடுபட்டு போயிருந்தது.

கோபம் இருந்தாலும் அவளின் ‘மை’ ஆசை மட்டும் போகவில்லை.

வருடங்கள் பல கடந்து, தேர்தல்களும் பல கடந்திருந்தன. ஆனால் திலகாவின் ஆசை மட்டும் நிறைவேறவேயில்லை.

அவளிடம்  பான் கார்டு ,ஆதார் கார்டு , பாஸ்போர்ட், ட்ரைவர்ஸ் லைசென்ஸ் என்று அனைத்து விதமான அடையாள அட்டைகளும் இருந்தன. ஒன்றை தவிர. வாக்காளர் அடையாள அட்டை இன்னும் கிடைக்க பெறாமல் இருந்தாள் திலகா. இப்பொழுது அவளின் வயது நாற்பத்தி ஆறு.

அசோக்குடன் திருமணம் முடிந்து துபாயில் சில வருடங்கள் இருந்து விட்டு திரும்பவும் தாய் நாட்டிற்கே குடும்பத்தினருடன் குடியேறி இருந்தாள்.

இப்பொழுது அவளின் மகனுக்கே ஓட்டு போடும் வயது ஆகி இருந்தது.

வரும் தேர்தலிலாவது ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருக்கிறாள் திலகா.

மகனுக்கும் சேர்த்தே விண்ணப்பித்திருந்தார் திலகாவின் கணவர் அசோக்.

இந்த முறையும் மகனுக்கு மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை கிடைத்து ஓட்டு போட்டிருந்தான். அவனின் கையில் இருந்த மையை பார்த்து  பொறாமை கொண்டார்.

முருகதாஸ் தான் ‘ஒரு விரல் புரட்சியே’ என்று பாடி கள்ள ஓட்டை நல்ல ஓட்டாக திருத்த முயற்சிக்கிறாரே, தன்னைப் போல ஓட்டே இல்லாதவர்களுக்கென்று ஒரு படம் எடுக்க சொல்லவேண்டும்!!’ என்று தன்னுடைய ஆசையை மாத்திக்கொண்டாள் திலகா.

அத்தனைக்கும் ஆசைப் படலாமே!!!

Advertisement