Advertisement

 

Tamil Novel

 

அவனின் பின்னேயே துளசி விரைந்து செல்ல அதற்குள் பைக் கிளப்பி இருந்தான். அவன் செல்லும் வேகத்தை பார்த்தவள் “எதுக்கு இவ்வளவு வேகமா போறாங்க?” என்று நினைத்து நின்று கொண்டிருக்கும் போது தான், அண்ணன் தம்பிகள் மூவரும் வாக்கிங் முடித்து திரும்ப வந்தனர்.

மூவரும் முக ஒற்றுமையோடு இருந்தனர். பார்ப்பவர் அண்ணன் தம்பிகள் என்று சொல்லிவிடுவர். அதுவும் அவர்களின் முறுக்கு மீசை அவர்களின் அடையாளம் என்று கூட சொல்லலாம். எப்போதும் போல அவர்கள் மூவரையும் பார்க்கவும் “இவர் ஏன் மீசை வைக்கலை” என்று துளசி மனதிற்குள் திருவை நினைத்துக் கொண்டாள்.

தம்பிகள் இருவரும் இவள் நிற்பதை கண்டு அண்ணனோடு பேச்சை வளர்க்காமல் அவர்களது வீட்டிற்குப் போய்விட, “என்னமா எங்க வேகமா திரு போறான்” என்றார் மேகநாதன்.

அப்பாவிற்கும் மகனிற்கும் பேச்சு வார்த்தை திரு துளசி திருமணம் நடந்த போது இருந்து விட்டிருந்தது. திரு பேசுவதை நிறுத்தி இருந்தான். அவன் பேசாத போது நான் மட்டும் ஏன் பேச வேண்டும் என்று மேகனாதனும் நிறுத்தி இருந்தார்.

“மீனாக்ஷியை பஸ் ஸ்டாப் கொண்டு போய் விட்டார் மாமா, மறந்து அவளோட ஸ்கூல் பேக் எடுத்துட்டு வந்துட்டார் போல” என்றாள்.

“அச்சச்சோ புள்ள பயந்துக்குமே பேக் இல்லைன்னு” என்று அவருமே அங்கே இருந்த திண்டில் அமர்ந்து கொண்டார். மீனாக்ஷி தாத்தாவின் செல்லம்.

வேகமாக அவன் ரோட்டை பார்த்து ஓட்ட, ரோட்டின் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த மகள் கண்களில் படவில்லை.

ஆனால் திருவை பார்த்து விட்ட மீனாக்ஷி “அப்பா” என்று கத்த, திரு சென்ற வேகத்திற்கு அது காதில் விழவில்லை. அப்பா என்று திரும்ப கத்தி எதிரில் வந்த சைக்கிளை கவனிக்காமல் வேகமாக திரும்ப, சைக்கிள் வந்து வேகமாக மீனாட்சியை இடித்து விட்டது.

இடித்த வேகத்திற்கு அப்படியே ரோட்டில் விழுந்து விட்டாள். இரண்டு கையும் முன் ஊன்றி விழுந்ததினால் கையினில் சிராய்ப்பு, கால் முட்டி இரண்டிலும் நல்ல அடி ரத்தம் வர ஆரம்பித்தது.

வலியில் அழுகை வந்து விட அழுது கொண்டே எழுந்து நின்றாள், அதற்குள் சைக்கிளை எடுத்துக் கொண்டு இடித்தவன் பயந்து அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து எதோ ஒரு திருப்பத்தில் மறைந்தே விட்டான்.

இதற்குள் திரு பஸ்ஸினை பிடித்து இருந்தவன், டிரைவர்க்கு சைகை செய்து பஸ்ஸை நிறுத்த செய்தவன், நிறுத்தியதும் டிரைவரிடமே “பொண்ணு பேக் மறந்து விட்டுடேன், குடுத்துடுங்க” என்றான்.

ஹெல்பர் வந்து அதனை பார்த்து இருந்தவன் பார்வையால் பின்னே மீனாக்ஷி எப்போது அமரும் இடம் பார்க்க அங்கே அவள் இல்லை.

திரு கிளம்பப் போக, “சார் இருங்க” என்று அவசரமாக கத்தினான். “என்ன?” என்று திரு பார்க்க, பஸ் முழுவதுமே பார்வையால் ஆராய்ந்து “சார் உங்க பொண்ணு பஸ்ல இல்லை” என்று சொல்லவும்,  

திருவிற்கு அப்படியே மனதினில் ஒரு நடுக்கம், ஒரு பதட்டம், முதல் முறை. தன் கண் முன்னே தானே ஏறினாள்.

வேகமாக அவனே ஏறி வந்து பஸ்சின் உள் பார்க்க ஹெல்பர் “மீனாக்ஷி எங்கே?” என்று பக்கத்தில் இருந்த பெண்ணிடம் கேட்க, “அவ அப்போவே இந்த இடத்துல இருந்து எழுந்துட்டா” என்றாள்.

முன் சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் “அந்த அக்கா முன்னமே இறங்கிட்டாங்க” என,

ஹெல்பறை பார்த்து முறைத்தான் திரு, “சார், சத்தியமா அவங்க இறங்கினது தெரியாது” என்றான் திருவின் பார்வையில் சர்வமும் ஒடுங்க.

“இருடா உன்னை வந்து பார்த்துக்கறேன்” என்று வார்த்தைகளை கடித்து துப்பி விட்டு மகளை தேடி போனான்.

பைக்கை மெதுவாக எல்லா இடமும் பார்த்து பார்த்து வர, அதற்குள் காலை விந்தி விந்தி நடந்த படி வீடு வந்து சேர்ந்திருந்தாள் மீனாக்ஷி.

பேத்தியை இப்படி பார்த்ததும் ‘என்ன கண்ணு?” என்று மேகநாதன் பதற, துளசி “மீனா” என்று வேகமாக வர, அம்மாவைப் பார்த்ததும் “அம்மா” என்று கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

என்ன ஏதென்று புரியவில்லை, முட்டியில் இருந்த காயம் தெரியவில்லை, கைகளில் சிராய்ப்பு தான் தெரிந்தது.

“என்ன மீனா சொல்லு?” என்று அணைத்தபடியே மனம் பதற அதட்ட,

“விழுந்துட்டேன், வலிக்குது” என்று பெரும் குரலெடுத்து அழுதுகொண்டே சொன்னாள்.

அவளின் அழுகை சத்தத்தில் பக்கத்தில் சித்தப்பா வீட்டினில் இருந்து வெளியே வந்து விட்டனர், இங்கே வீட்டின் உள் இருந்து அகிலாண்டேஸ்வரி வெங்கடேஷ் எல்லாம் வந்து விட. அப்போது கூட வீட்டின் உள் சோபனா உறங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

“ஒன்னுமில்லை, சின்ன காயம் தான்” என்று மகளை துளசி சமாதானம் செய்து கொண்டே,

“அத்தை அவர் மீனா ஸ்கூல் பேக் கொண்டு போனார். இவளை காணோம்ன்னு தேடுவார், ஃபோன் செஞ்சு சொல்லுங்க” என்று துளசி சொல்லிவிட்டு மகளின் காயங்களை ஆராய்ந்தாள்.

“எதுக்கு நீ திரும்ப வந்த?” என்று மேகநாதன் பேத்தியிடம் கேட்கவும்,

“பேக் மறந்துட்டேன், பேக் இல்லாம எப்படி ஸ்கூல் போறதுன்னு இறங்கிட்டேன்” என்று தேம்பியபடி சொல்ல,

சத்தியநாதன் அதட்டினார் “இப்படி எல்லாம் இறங்கி வரக் கூடாது. ஸ்கூல் போயிட்டு அங்கே ஸ்கூல் ஆஃபிஸ்ல இருந்து போன் பண்ண வேண்டியது தானே” என்று சொன்னார்.

சிறு வலி என்றாலும் ஆர்ப்பாட்டம் செய்யும் மீனாக்ஷி இப்போது காயங்களினால் இன்னும் சத்தமாக அழ,

“அழாத மருந்து போடலாம்” என்று சமாதானம் செய்ய, மீனாக்ஷி இடத்தை விட்டு அசைந்தால் தானே.

துளசியை கட்டிக் கொண்டு அழுது கொண்டே இருக்க,

எல்லோரும் கூடி இருக்க, ஆளுக்கு ஒரு பேச்சாக பேச, இதில் அகிலாண்டேஸ்வரி, துளசி திருவிற்கு அழைத்து சொல்ல சொன்னதை மறந்தார்.

சாலை முழுவது தேடி ஒரு வேலை வீட்டிற்கு சென்றிருப்பாளோ என்று திரு வீட்டிற்கு வர,

கேட்டின் உள், வீட்டின் முன் எல்லோரும் கும்பலாய் இருக்க, மீனாக்ஷி அழுது கொண்டிருக்க, பதறி விட்டான். ஆனாலும் அதனை வெளியில் காண்பித்து விட்டால் திரு இல்லையே. “யாருக்கும் ஒரு ஃபோன் செஞ்சு சொல்லணும்னு தோணலை” என்ற கோபம் துளிர் விட ஆரம்பித்தது.

பேத்தியின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த மேகநாதன் “ஒரு நாள் புள்ளையை கொண்டு போய் ஸ்டாப் விட சொன்னா என்ன கலாட்டா?” என்று பொதுவாய் திருவை பார்த்ததும் சத்தமிட்டார். அதில் இன்னும் அதிகமாகியது.

வேகமாக அருகில் வந்தவன் மீனாட்சியை பார்க்க எங்கோ விழுந்து எழுந்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தது.

“சும்மா அவனை ஏன் சத்தம் போடறீங்க, யார் பேச்சையும் இவ கேட்டா தானே” என்று அகிலாண்டேஸ்வரி சத்தமிட்டார் மகனுக்கு பரிந்து பேத்தியை திட்டி,            

“என்னைக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைன்னு அக்கறையோட இருந்திருக்கான், எப்போ அவனுக்கு வீட்டு நினைப்பு இருக்கு, பொறுப்பில்லாதவன்” என்று அத்தனை பேர் முன்னும் மேகநாதன் சத்தமிட்டார்.

அப்படி ஒரு கோபம் பொங்கியது. முயன்று அடக்கினான். அது யாருக்கு புரியவில்லை. ஆனால் துளசிக்கு நன்கு புரிந்தது.

“அச்சோ, மாமனார் பேச்சை நிறுத்தினால் பரவாயில்லை” என்பது போல பரிதாபமாக பார்த்து நின்றாள். கூடவே கணவனை அத்தனை பேர் இருக்கும் போது கேள்வி கேட்பது அவளுக்கும் பிடிக்கவில்லை.

திரு எதற்கும் பதில் பேசாமல் அந்த இடத்தை விட்டு படியேறி வீட்டின் உள் செல்ல ஆரம்பித்தான்.

என்னவோ பேத்தியை அடிபட்டு இப்படி அழுகையோடு பார்த்ததும் மேகநாதனுக்கு அப்படி ஒரு கோபம்!

“டேய் நில்லுடா, நான் பேசிட்டே இருக்கேன் நீ போற” என்றார் அவ்வளவு கோபமாக.

அப்போது சத்தியநாதன் “சும்மா ஏன் அண்ணா அவன் மீது கோபப்படறீங்க. என்ன இல்லை நம்மகிட்ட? நீங்க ஏன் அவசரப்பட்டு இப்படி வசதி இல்லாத வீட்ல, அவனுக்கு பிடிக்காம பொண்ணு எடுத்தீங்க. அவனுக்கு பிடிச்சு தானே கட்டி வெச்சிருக்கணும் , இப்போ பொருப்பில்லைன்னு சொன்னா!” என்றார்.

“அவனுக்கு பிடிச்சு தானே கட்டி வெச்சிருக்கணும்” என்ற வார்த்தைகள் ஏதேதோ ஞாபகத்தை திருவிற்கு கொடுத்தது.

இத்தனை வருடங்கள் கழித்தும் தன்னுடைய திருமணம் விமர்சிக்கப்பட்டது முனுக்கென்று துளசியின் கண்களில் நீர் வரவைத்தது. அதுவரை அகிலாண்டேஸ்வரி அவளை திட்டிய போதும் ஒன்றும் தெரியவில்லை.

இப்படி எல்லோர் முன்னும் தான் விமர்சிக்கப் பட்டது மனதை அப்படியே தளரச் செய்தது.

“என்ன பேசற சத்தியா?” என்று மேகநாதன் தம்பியை அதட்ட,

“வேலைக்காரன் புள்ளையை கட்டி வெச்சா இப்படி தான்” என்று ஆளாளுக்கு முனுமுனுக்க, படி ஏறிக்கொண்டிருந்த திரு நின்று பார்த்தான்.

இது தான் சாக்கென்று அகிலாண்டேஸ்வரி “என் பேச்சை யார் கேட்கறா? நான் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன், கேட்டா தானே!” என்று பெரும் குரலில் பேசினார்.

எப்போது திரு படியிறங்கி துளசியின் அருகில் வந்தான் என்றே தெரியவில்லை, ஆளாளுக்கு சலசலவென்று அவர்களுக்குள் பேச்சு.   

எல்லோரும் பார்க்க துளசி கண்களில் நீரோடு நின்றிருக்க, திருவிற்கு பொங்கிய ஒரு கோபத்தில் ஆத்திரத்தில் அவளை அணைத்து பிடித்தபடி நின்றிருந்த மீனாட்சியை அவளிடம் இருந்து விலக்கி ஒரு கையால் இழுத்தவன், அடுத்த கையால் துளசியின் கன்னத்தில் ஓங்கி  ஒரு அப்பு விட,

இதனை அணுவும் எதிர்பார்க்காத துளசி தடுமாறி விழ இருந்தவள், சுதாரித்து நின்றுவிட்டாள். அதிர்ச்சியில் கண்ணீர் கூட நின்று விட்டது. அப்படியே ஸ்தம்பித்து விட்டாள்.

இப்படி திரு அடித்ததெல்லாம் இல்லை, ஏன் திட்டியது கூட இல்லை. பேசமாட்டான், கண்டு கொள்ள மாட்டான், அவ்வளவே.

அப்படியே கன்னத்தை பிடித்தபடி திருவை பார்த்து நின்றுவிட்டாள். ஆனால் திரு அவளின் பார்வையை சந்திக்கவே இல்லை.

“டேய் என்னடா பண்ற?” என்று கோபத்தில் மேகநாதன் கர்ஜிக்க,

திரு நிறுத்தி நிதானமாக “என்ன சித்தப்பா உங்க அண்ணா அப்படியே பொங்கறார், இத்தனை பேர் பேசும் போது வாங்கிட்டு தானே நிக்கறா இவ, என்னோட ஒரு அடியை வாங்கிட்டு நிற்க மாட்டாளோ?” என்று அப்போதும் துளசியின் முகம் பார்க்காமல் அவளிடம் பேசாமல் சத்தியானதனிடம் பேச,  

இப்போது சுற்றி இருந்தவர் ஸ்தம்பித்தனர்.     

Advertisement