Advertisement

 

Tamil Novel

 

அத்தியாயம் இரண்டு :

பஸ் ஸ்டாப்பில் மகளை இறக்கி விட்ட திரு அங்கே பார்க்க, பிள்ளைகளை விட அவர்களின் பெற்றோர்கள் தான் அங்கே அதிகமாக இருந்தனர்.

அதுவும் ஒரே அரட்டை வேறு, அதில் ஒருவன் திருநீர்வண்ணனைப் பார்த்ததும், “திரு சர், நீங்க எங்கே இங்கே?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான்.

“என் பொண்ணு டிராப் பண்ண வந்தேன்” என திரு சொல்ல,

“இவங்க உங்க பொண்ணா, தினமும் தனியா தான் வருவாங்க” என்று மிகவும் மரியாதையாக மீனாட்சியை சொன்னவன், “உங்களுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா?” என்றும் கேட்டான்.

அவள் தனியாக வருகிறாள் என்பது கவனிக்கப் படுகிறது என்பது ஏனோ திருவிற்கு பிடிக்கவில்லை. பார்ப்பதற்கு பெரிய பெண் போல தான் இருக்கிறாள். ஆனால் முகத்தில் இருக்கும் குழந்தை தனம் சிறு பெண் என்று காண்பித்து கொடுத்து விடும்.  

ஆயினும் “என்ன பண்றா இவ? இவளை வந்து விட்டுட்டு போகாம” என்று துளசியை பற்றிய எண்ணம் தான் ஓடியது.

உண்மையில் இந்த வருடம் தான் துளசி மீனாட்சியை தனியாக அனுப்ப ஆரம்பித்து இருந்தாள். மகள் ஆறாம் வகுப்பு வந்து விட்டாள், சுயமாக எல்லாம் செய்து பழக வேண்டும் என்ற எண்ணம் தான்.

ஆனால் பேசியவன் இந்த வருடம் தான் அவனின் மகனை இந்த பள்ளியில் சேர்த்திருந்தான்.  அதனால் அவனுக்கு தெரியவில்லை. மற்றபடி அங்கே ஸ்டாப்பில் உள்ள அநேகம் பேருக்கு துளசியையும் மீனாக்ஷியையும் தெரியும்.     

தொழில் முறை பழக்கம் பேசியவனுக்கு, அவன் திருவை விட பெரியவன், அவனுக்கே நான்காவது படிக்கும் மகன் தான்.

திருவிடம் ஒரு மென்னகை மட்டும், திருவின் ட்ராக் பேன்ட், டி ஷர்ட்டை பார்த்தவன், அவன் எதோ ப்ராக்டிசில் இருந்து வருகிறான் என்று புரிந்து பேச்சை வளர்க்க,

மீனாக்ஷிக்கு எரிச்சல் ஆனது. அப்பா வருவதே அபூர்வம். இதில் அவள் பேசலாமா இல்லை அப்பா பேசுவாரா என்று எத்ரிபார்த்திருக்க, இதில் யாரோ ஒருவன் பேசவும், அந்த எரிச்சல் முகத்தில் அப்படியே தெரிய, முகத்தை திருப்பி வேறு எங்கோ பார்த்து நின்று கொண்டாள்.

அவனிடம் பேசினாலும் திருவிற்கு மகளின் பார்வை புரிய, பேசிக் கொண்டிருந்தவனிடம், “எக்ஸ்கியுஸ்மி” என்று தவிர்த்தவன், மீனாட்சியின் அருகில் வந்து அவள் முதுகில் சுமந்திருந்த புத்தகப் பையை வாங்கி அவன் மாட்டிக் கொண்டு நின்றான்.

அதன் பிறகே மகளின் முகம் தெளிவானது. “ஸ்கூல்ல என்ன கலாட்டா பண்ணின?” என்றான் மெதுவாக. பொதுவாக அக்கறை காட்டுபவனோ கண்டிப்பவனோ கிடையாது. ஆயினும் நேற்று விஷயம் காதிற்கு வந்ததில் இருந்து, தன்னுடைய பெண் இப்படி பனிஷ்மென்ட் வாங்குவதா என்ற எண்ணம்.

கூடவே இதெல்லாம் அவள் துளசியிடம் சொல்கிறாளா இல்லையா என்ற எண்ணம் இருக்க அதற்காகவே இன்று ப்ராக்டிசில் இருந்து விரைவாக வந்தான்.

அதற்கு தக்கார் போல துளசியும் சொல்ல, மகளை அழைத்து கிளம்பினான். இதோ இப்போது கேட்டு விட்டான்.     

டபக்கென்று மீனாக்ஷி திரும்பி பார்க்க, “நேத்து காலைல கிரவுண்ட் சுத்தி பனிஷ்மென்ட்காக இருபது தடவை ஓடியிருக்க” என்றான்.

அப்பாவிற்கு தெரிந்து விட்டது எனவும் கடகடவென்று கண்களில் நீர் தளும்பியது. திரு மகளை பார்த்த பார்வையில் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும் என்று மகளுக்கு புரிய,

“என் ஃபிரண்டை அவன் அடிச்சான். அதனால நான் அவனை அடிச்சேன்” என்று ஒரு பையனை அடித்ததை ஒப்புக் கொண்டாள்.

அவளின் கண்களில் நீர் பார்த்தவன் “அழாதே”  என்று சிறு குரலில் அதட்டி, “எதுவானாலும் உங்க மேம் கிட்ட தான் கம்ப்ளயின்ட் பண்ணனும். நீ அடிக்கக் கூடாது. அண்ட் ஸ்கூல்ல எது நடந்தாலும் அம்மா கிட்ட சொல்லணும்” என்றவன் சில நொடி இடைவெளி விட்டு “அம்மா கிட்ட சொன்னியா” என்றான்.   

இல்லை என்பது போல தலையசைத்தவள் அப்பாவின் கூர்மையான பார்வையில் “அம்மா அடிப்பா” என பதில் சொன்னாள்.

“தப்பு செஞ்சா அடிக்க தான் செய்வாங்க. நீ யாரையும் அடிக்கவெல்லாம் கூடாது” என சொல்லும் போதே பஸ் வந்து விட,

பஸ் நின்றதும் இவனைப் பார்த்ததும் பஸ்சில் இருந்த ஹெல்பர் விரைந்து வந்து “சார் வந்திருக்கீங்க” என்றான் பவ்யமாக.

எப்போதும் தொழிலார்களுக்கு திரு கணக்கே பார்க்க மாட்டான். பண்டிகை என்றால் இவர்கள் அவனின் தொழிற்சாலை தேடி சென்று பண்டிகை பணத்தை வாங்கிக் கொள்வர். துளசியிடம் முதல் முறை கேட்ட போதே, “சாயந்தரம் அங்கே போங்க மீனா அப்பா இருப்பாங்க பாப்பா பஸ்ல இருக்கோம் சொல்லுங்க” என்று அவள் தான் சொல்லியிருந்தாள். அப்படி பண்டிகை விஷேசம் என்றால் ஆஜராகி விடுவார்கள். அதன் தாக்கம் தான் இந்த பவ்யம்.     

திரு பதில் சொல்லாமல் எப்போதும் போல ஒரு மென்னகை, கூடவே ஜோப்பில் இருந்து பணம் எடுத்து அவனிடம் நீட்டினான். யார்கும் தெரியாமல் அதை நிமிடத்தில் வாங்கி தன் ஜோப்பில் வைத்த ஹெல்பர் “பாப்பாவை பத்திரமா பார்த்துக்கறோம்” என்றும் சொல்ல,

“டிரைவர்க்கும் குடுத்துடு” என்றான் திரு.  

“சரிங்க சர்” என்றான் பணிவாக.

மீனாக்ஷி இதை பார்த்துக் கொண்டு தானிருந்தாள். அப்பா அதட்டியதில் ஒரு பயத்தில் இருந்தவள், அப்பா பார்த்து “கிளம்பு” என்பது போல தலையசைத்ததும் அவளின் பேக் மறந்து ஏறிவிட்டாள்.

இவனும் கவனிக்க வில்லை, அவனின் பின்புறம் ஷட்டில் பேக் இருக்கும் ஞாபகத்தில் அது மீனாட்சியின் பேக் என்பதை உணராமல் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்.

இரண்டு ஸ்டாப் தாண்டியதும் தான் பேக் இல்லாததை மீனாக்ஷி உணர்ந்தாள், “அச்சோ பேக் இல்லாமல் எப்படி போவது?” என்ற பதட்டத்தில் பஸ் அடுத்த ஸ்டாப்பில் பிள்ளைகளை ஏற்றுவதற்காக நின்றதும் யாரிடமும் சொல்லாமல் இறங்கி விட்டாள். பிள்ளைகள் ஏறியதும் டிரைவர் எதோ சொல்ல அதை கவனித்த ஹெல்பரும் இவள் சட்டென்று இறங்கியதை கவனிக்கவில்லை.

பஸ்சும் கிளம்பிவிட்டது. இவள் வீடிருந்த பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

அங்கே திரு வீடு சென்று பைக்கை நிறுத்தி, வீட்டின் உள்  நுழைந்தான். துளசியை அதுவரையிலும் “என்ன அது ஏதாவது சொன்னா நின்னு கேட்காம போறது, பதில் சொல்லாம போறது, இந்த பழக்கத்தை பிள்ளைக்கும் கத்துக் கொடுக்கறது” என்று அகிலாண்டேஸ்வரி கத்திக் கொண்டிருந்தார்.

துளசி பதில் எதுவும் பேசாமல் அவர் சொல்வதை எல்லாம் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். சமையல் வேலை செய்யும் தனம் பத்து நிமிடத்திற்கு முன்பே வந்து விட்டவள், என்ன செய்வது என்று துளசியை எப்படி கேட்பது என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த திருவின் கண்களில் அம்மா துளசியை திட்டிக் கொண்டிருப்பதும், அதை தனம் எட்டி எட்டி பார்ப்பதும் கண்ணில் பட,

அவர்களை கடந்து செல்ல இருந்தவன் சில நொடி அங்கே நின்றான். அடுத்த நிமிடம் பேசுவதை அகிலாண்டேஸ்வரி நிறுத்தினார். மேகனாதனால் கூட சில சமயம் அகிலாண்டேஸ்வரியை அடக்க முடியாது. ஆனால் திருவின் ஒரு பார்வை அவரின் வாய்க்கு பூட்டு போட்டு விடும்.

இடைவெளி கிடைத்ததும், “அக்கா! என்ன டிஃபன் பண்ணட்டும்” என்று வேகமாக அங்கே வந்த தனம் கேட்டாள். ஆம், மகளுக்கு காலையில், பின் மதியம் செய்து கொடுக்கும் வேலை மட்டும் தான் துளசிக்கு.

சமையலுக்கு எல்லாம் ஆட்கள் இருந்தனர். அவர்களது பெரிய குடும்பம். ஒரு கேட்டட் கம்யுனிட்டி போல ஒரு பெரிய காம்பவுண்டிற்குள் மூன்று பெரிய பங்களாக்கள். வரிசையாக இருக்கும், மேகனாதனிற்கும் அவரது தம்பிகள், சத்தியனாதனிற்கும் கமலனாதனிற்கும்.

நாதன் பிரதர்ஸ் என்றால் தர்மபுரியில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. ஏன் அவர்களின் தொழிலின் கிளைகள் சென்னையிலும் கோவையிலும் உண்டு.

பல தொழில்கள் அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, பஸ் கம்பனி , துணிக் கடை , கடைகளை லீசிற்கு எடுப்பது இப்படி பல. நாதன் பிரதர்ஸ் என்ற பேரில் எல்லாம் இயங்கினாலும் அண்ணன் தம்பிகள் மூன்று பேரின் தொழில்களும் வேறு வேறு. 

முக்கியமாக இதில் மேகனாதனது அரிசி ஆலையும் எண்ணெய் ஆலையும். பெரிய அளவில் ஏற்றுமதி உண்டு. பஸ் கம்பனி சத்தியனாதனிற்கும் துணிக் கடை கமலனாதனிற்கும். தம்பிகளை விட மேகனாதனது வசதி பல படி அதிகம்.

அது இந்த சில வருடங்களாக திருநீர்வண்ணன் தொழிலிற்கு வந்த பிறகு. அசுர வளர்ச்சி தான். முழுநேரமும் அவனின் நேரமும் தொழிலில். அதன் பலன் தான் இந்த வளர்ச்சி.

மேகனாதனிற்கு சில சமயம் கவலையாகக் கூட இருக்கு. இது தாங்கள் அண்ணன் தம்பிகளை பிரித்து விடுமோ என்று. ஒரு பெண் ஒரு ஆண் என்று ஆளுக்கு இரண்டு மக்கள் அவர்களுக்கு. திருவின் வீட்டில் தான் அவர்கள் மூன்று மக்கள். திருவோடு சேர்ந்து இரண்டு ஆண்கள் ஒரு பெண்.

இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. சொந்த அத்தையின் மக்களே, ஆம்! பெரிய அத்தை சாரதாவின் வீட்டிற்கு தங்கை ராதாவை கொடுத்திருக்க, இன்னொரு அத்தை சித்ராவின் பெண்ணை திருவின் தம்பி வெங்கடேஸ்வரனுக்கு கொண்டு வந்தது.

அத்தைகளை வேறு ஊரில் தான் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் எல்லோரும் இப்போது தர்மபுரியில் தான் இருந்தனர். அங்கேயே மேகநாதன் அவர்களுக்கும் தொழில் அமைத்துக் கொடுத்திருந்தார். எல்லோருமே சீரும் சிறப்புமாக இருந்தனர் நாதன் பிரதர்ஸின் தயவில்.

ஆனால் என்ன தான் இருந்தாலும், ஆங்காங்கே சில உட்கட்சி பூசல்கள் போல குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து கொண்டு தானிருக்கும். முக்கியமாக அகிலாண்டேஸ்வரியால். எல்லாம் என் கணவர் தான் என்ற திமிரில் சற்று எல்லோரிடமும் அதட்டி உருட்டி மிரட்டி பேசுவார். அது அவ்வப்போது பொங்கி குடும்பத்திற்குள் வெடிக்கும்.        

சொந்த பந்தங்கள் எப்போதும் மேகனாதனிற்கு மிகவும் முக்கியம் அப்படி எல்லோரையும் வீட்டின் பெரியவராக இழுத்து பிடித்திருப்பார். முக்கியமாய் பொதுவில் ஒரு செலவு என்றால் அவரின் பொறுப்பு தான் அனைத்தும். அதனால் அவரின் மனைவின் அட்டகாசங்களை அனைவரும் “அவங்க அப்படி தான்” என்று கடக்க கற்றுக் கொண்டனர்.

தனம் கேட்கும் போது தான் வெங்கடேஷ் எழுந்து வெளியில் வந்தான். தனம் என்ன சமைப்பது என்று கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்தவன், “நீங்க ஏன் இவங்ககிட்டயே எப்பவும் என்ன செய்யணும்னு கேட்கறீங்க, ஷோபனா கிட்ட கேட்கறதில்லை” என்று மனைவிக்காக உரிமை குரல் எழுப்பினான்.

அடுத்த நொடி துளசி “அவகிட்ட கேட்டுக்கோ தனம்” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

“எப்ப ஷோபனாக்கா எழுந்து வர்றது, எப்போ சொல்றது, எல்லோரும் அவங்க வர்றவரை பட்டினி இருப்பீங்களா?” என்று சொல்லிக் கொண்டே தனம் அந்த இடத்தை விட்டு சமையல் அரை உள் சென்று விட்டாள்.

துளசி உள்ளே திருவிற்கு குடிக்க பால் ஊற்றிக் கொண்டிருந்தாள். தனத்திற்கு அவளின் முகம் பார்த்தே பேச பயமாக இருக்க, தனம் அமைதியாக நின்று கொண்டாள்.

கணவனுக்கு பால் எடுத்துக் கொண்டு அவர்களின் ரூம் உள் போக, மகளின் பேகை கழற்றி படுக்கையில் போட்டு இருந்தான். அதுவரையில் அதனை உணரவில்லை. தன் தம்பி பேசியதில் தான் மனம் உழன்று கொண்டிருந்தது.

அப்போது தான் பேகை கவனித்த துளசி “என்ன இது மீனா பேக், இங்கே எப்படி?” என்று நேரடியாக அவனை பார்த்து கேட்காமல் அவளாக பேசுவது போல திருவின் கவனத்தை கவர்ந்தாள்.

அப்போது தான் திரு அதனை கவனித்தவன், “அச்சோ குடுக்க மறந்துட்டேன் போலவே” என்று அவனுக்கு அவனே பேசுவது போல சொல்லிக் கொண்டு திரும்ப அதனை எடுத்துக் கொண்டு பைக்கை நோக்கி விரைந்தான்.

Advertisement