Advertisement

அத்தியாயம் –5

 

மாலையில் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. இனியாவிடம் சித்தார்த் முன்னமே அவர்கள் காரை வர வேண்டாம் என்று அனுப்பி விடுமாறு கூறினான்.  மாலையில் தானே, அவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறிவிட்டான்.

 

மூவரும் கிளம்பி வெளியே வந்தனர், அவனுடைய கார் அவர்களை நோக்கி வந்தது, இனியா முன் இருக்கையில்  ஏறி தன் தோழிகளிடம் பின்னாடி ஏறிக்கொள்ள சொன்னாள் அவள்.

 

வெண்பா, இனியாவின் காரில் தான் ஏறுவதாக நினைத்துக் கொண்டாள். சுஜியும் அவளும் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்ததும் சித்தார்த் வண்டியை கிளப்பினான்.

 

ரியர் வியூ மிரரை சரிசெய்தவன், வெண்பாவை பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டினான், தற்செயலாக கண்ணாடியை பார்த்தவளுக்கு அவனை பார்த்ததும் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போல் ஒரு உணர்வு, உற்சாகம்.

 

ஆனால் சட்டென்று அவன் கோபத்தை நினைத்து பார்த்ததும் அந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது. கண்ணாடி வழியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் முகமாற்றம் கவனித்தவனுக்கு மீண்டும் கோபம் துளிர்த்தது.

 

அவளுக்கு தன் மேல் இன்னும் கோபம் தீரவில்லை என்று புரிந்தது, ஆனால் அவளும் தான் காலையில் என்னுடன் வந்து இருக்கலாமே என்று தோன்றிய மனதை அடக்க முடியவில்லை. அவள் வருத்தம் புரிந்து அவன் கோபத்தை தள்ளி வைத்துவிட்டு அவளை பேசவைக்க முயற்சி செய்தான்.

 

இனியாவிடமும், சுஜியிடமும் திரும்பி “நீங்க நல்ல கலகலப்பா பேசிட்டே வரீங்க, அமைதின்னு நினைச்ச சுஜி கூட நல்ல பேசறாங்க. பஸ்ல என்ன போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குன உங்க தோழி வெண்பா இப்போலாம் வாயே திறக்க மாட்டேங்குறாங்க, அமைதியா பேசாம வராங்க, என்னோட வந்தது அவங்களுக்கு பிடிக்கலையா என்று கேட்டான்.

 

“அய்யோ, அப்படிலாம் இல்ல சார், அவளுக்கு ஏதோ ஒரு மூட் அவுட் அதான் சார் என்று உரைத்த இனியா, வெண்பாவை பார்த்து “ஏய், சார் தான் சொல்லறார் இல்ல ஏண்டி இப்படி உம்முன்னு வர என்றாள்.

 

“ஏங்க உங்க தோழி என்னை விசுவாமித்திரர்ன்னு சொல்லிட்டு அவங்க இப்ப பெண் விசுவாமித்திரர் ஆய்ட்டாங்க போல, இப்படியே போனா நான் நடனம்லாம் ஆடி தான் இவங்கள சிரிக்க வைக்கணும் போல இருக்கே.

 

“அய்யோ, எனக்கு வேற சரியா ஆடத்தெரியாதே, நான் வேணா கலா மாஸ்டர் கிட்ட போய் கத்துகிட்டு வரட்டுமா என்று கூற மூவருக்குமே தன்னை மீறி சிரிப்பு பொங்கி வந்தது.

 

வெண்பாவுக்கு வெட்கமாக போய்விட்டது, தான் அவனை விசுவாமித்திரர் என்று சொன்னதை இந்த இனியா லூசு அவனிடமே சொல்லி வைத்திருக்கிறாள் போலிருக்கிறதே என்று நினைத்தவள் அவளை முறைத்தாள்.

 

அவள் வேகமாக இனியாவிடம் திரும்பி “ஏண்டி பிசாசே இப்படி என் மானத்தை வாங்குற, நான் எதோ விளையாட்டுக்கு சொன்னதை போய் சார் கிட்ட சொல்லி வைச்சுருக்க, உன்னை என்ன பண்ணா தகும் என்று கூறியவாறே அவள் கைப்பையை தூக்கி இனியாவின் மேல் வீசினாள்.

 

அவர்கள் விளையாட்டை ரசித்தவாறே அவனும் காரை செலுத்தலானான். சுஜியையும், இனியாவையும் பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு அவர்கள் கார் வந்ததும் ஏற்றி அனுப்பிவிட்டு பின் அவர்களிடம் விடைபெற்றனர்.

 

வெண்பாவுக்கு அவனுடன் தனியே செல்ல பயமாக இருந்தது, அடி வயிற்றில் ஏதோ செய்தது, சந்தோசமாக இருந்தது போலவும் இருந்தது, அதே சமயம் கலக்கமாகவும் உணர்ந்தாள்.

 

அவர்கள் விடைபெற்றபின் ஸ்டைலாக திரும்பியவன் நேரே அவளை பார்த்தான், அவளால் அவன் கண்ணை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை அவன் விழிகளில் ஒரு காந்தம் இருந்தது.

 

அது கருவிழிகளாக அல்லாமல் காப்பியின் நிறத்தில் இருந்தது. அது அவளை சுண்டி இழுப்பது போல் இருந்தது தன்னை மீறி பார்த்தவள் பின் சுதாரித்துக்கொண்டு திரும்பயத்தனித்தவளிடம் போகலாமா என்றான். “இம் என்றாள் அவள்.

 

அவர்கள் இறங்கியதும் வெண்பா காரின் முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள், காரை திருப்பி அறைவட்டமடித்தவன், பின் சாலையில் கலந்தான். அவ்வப்போது அவனுடைய பார்வை அவள் மேல் படிந்து மீண்டது, அது அவளுக்கும் தெரிந்திருந்தது. எதையோ பேச வாயெடுத்தவன் எதுவும் பேசாமல் திரும்பினான்.

 

அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரிந்தவள், அவளே தொடங்கினாள். “சார்“ என்று அவள் ஆரம்பிக்க, அவன் அவளை முறைக்க “சாரி சித்து நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லாதது தப்பு தான், உங்க நம்பர் என்கிட்ட இருக்குன்னு நான் அவங்ககிட்ட சொல்லவே இல்ல

 

“நேற்று நீங்க என்கூட துணையா வரும்போது தான் உங்க நம்பர் என்கிட்ட குடுத்தீங்க, அவங்க அப்போ அங்க இல்ல என்கிட்ட மட்டும் கொடுத்தது தெரிஞ்சா என்னை ரொம்ப கலாட்டா பண்ணுவாங்கன்னு நினைச்சு தான் நான் வாயே திறக்கல. நான் ஒரு குறுந்தகவலாவது அனுப்பி இருக்கலாம் என்று காலையில் நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாள்.

 

அவள் விளக்கம் அவன் மனதில் சாரலாக இருந்தது. “நீ ஏதோ சொல்ல வரன்னு புரிஞ்சது அதான் நானும் அப்போ அது பத்தி மேல ஏதும் பேசல, சரி பரவாயில்லைவிடு, நானும் ரொம்ப கோபமா பேசிட்டேன்.

 

“ஏன் இப்படி நடந்துகிட்டேன் எனக்கே புரியல, நான் இப்படி எப்போதுமே இருந்தது இல்லை, இன்னைக்கு எல்லார்கிட்டயும் ரொம்ப கடுமையா வேற நடந்துகிட்டேன். அவன் அவளை ஒருமையில் அழைப்பதை அவசரமாக அவள் மனுதுக்குள் குறித்துக் கொண்டாள்.

 

“எனக்குள்ள ஏதோ மாற்றம் நடக்குது, அது என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் நானாவே இருப்பேன் நினைக்கிறேன், இப்பக்கூட இதை ஏன் உன்கிட்ட சொல்லறேன் கூட எனக்கு தெரியல, ரொம்ப குழப்புறேன்னு நினைக்கிறேன்.

 

தலையை சிலுப்பி இயல்புக்கு வந்தான், வெண்பாவுக்கு அவன் கூற வருவது புரிந்தது போலவும் புரியாதது போலவும் ஒரு சேர உணர்ந்தாள்.ஒரு பெருமூச்சுடன் அவன் வேறு பேசலானான், அவன் இனிக்க இனிக்க பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.

 

காரை ஓட்டிக்கொண்டே பக்கவாட்டில் திரும்பி பார்த்தவன் அவளை கண்டான், அவள் அப்போது தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும், தான் அதை கண்டவுடன் அவள் பார்வையை விலக்கிக் கொண்டதையும் கண்டான், மனசுக்குள் ஒரு புது வேகம் வந்தது.

 

கார் திருவல்லிக்கேணிக்குள்  நுழைந்தது, நேற்று அவர்கள் பிரிந்த இடத்திலேயே அவனை வண்டியை நிறுத்துமாறு கூறினாள், அவன் வீட்டிற்கே கொண்டு வந்து விடுவதாகக் கூறினான், அவள் அதை மறுத்துவிட்டாள்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் அவனுக்குள் கோபம் துளிர்த்தது, விறைத்து நின்றவன், “நீ காலையில் என்னுடன் ஏன் வரவில்லை என்று எனக்கு விளக்கம் தரவில்லை

 

“இப்போதும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு வீட்டில் விடுகிறேன் என்றால் வேண்டாம் என்கிறாய், என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது என்று கேட்டுவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் விரைந்து சென்று விட்டான்.

 

கேட்டை திறந்து காரை உள்ளே சென்று நிறுத்தினான், பக்கத்து இருக்கையில் சிதறிக்கிடந்த மல்லிகையை பார்த்தான், பதட்டத்தில் இறங்கியவள் கையில் இருந்த கைக்குட்டை கீழே விழுந்து கிடந்தது, அதை சேகரித்து எடுத்து பத்திரப்படுத்தினான்.

 

வீட்டிற்குள் சென்றவன் குளித்துவிட்டு தோழர்களுடன் சென்று உணவருந்திவிட்டு சற்று காற்றாட உட்கார்ந்தான், ஊதக் காற்று உடலை வருட தேகம் சிலிர்த்தது.

 

மனம் லேசாக திரும்பி பார்த்தவனின் எதிரில் ஸ்ரீ நின்றிருந்தான், அவனிடம் சில பொதுபடையான விஷயங்களை பேசிவிட்டு, வினோத் என்ன செய்கிறான் என்று வினவினான்.

 

“வினோத் அப்போவே தூங்க போய்ட்டான், நாளைக்கு ஏதோ முக்கியமான வேலையாம் சிக்கிரம் போகணும் சொல்லிட்டு போய் படுத்துட்டான் என்றான்.

 

அப்போது சித்தார்த்தின் கைபேசி சிணுங்கியது, அழைப்பவர் யார் என்று பார்த்து விட்டு அணைத்துவிட்டான்.

 

ஸ்ரீ எப்போதும் நேருக்கு நேராக பேசும் ரகம், இது தவறு, சரி என்று ஆராய்ந்து அவனுக்கு விளக்கிவிடுவான். அவன் எல்லோரிடமும் அவ்வாறே இருப்பான்.

 

இப்போதும் சித்தார்த்தை பார்த்து நேருக்கு நேராக கேட்டுவிட்டான். “உங்களுக்குள்ள என்ன பிரச்சனை என்றான். ‘இவன் வேற நம்ம முகத்தை பார்த்தே எல்லாம் கண்டுபிடிச்சுடறான், இருந்தாலும் இவன் இவ்வளவு புத்திசாலியாக இருக்க கூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சித்தார்த்.

 

“என்னடா, நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன், நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம் என்றான். சித்தார்த் நடந்தவற்றை சுருக்கமாக விளக்கினான், அனைத்தையும் கேட்டுவிட்டு “தப்பு உன் பேர்ல தான்டா இருக்கு என்றான்.

 

“எப்படி சொல்லற, காலையில என்னடானா நான் கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டா, நான் என்ன செஞ்சேன் நான் என்ன புலியா, சிங்கமா என்னை பார்த்து எதுக்கு பயப்படணும், சாயங்காலம் என்னடானா அவ்ளோ தூரம் வந்தவ, வீட்டுக்கு கூட்டிபோய் விடறேன் சொன்னா, வேணாம்கிறது, இதுல என்னோட தப்பு எங்க இருந்து வந்தது என்றான் கோபமாக.

 

“நீ எல்லாத்தையும் எப்போதுமே உன்னோட கண்ணோடத்துலயே பார்க்குற, அந்த பொண்ணு பத்தி கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா, இது அந்த பொண்ணு குடியிருக்கற ஏரியா.

 

“நீ தினமும் அவங்க வீட்ல போய் இறக்கிவிடுவியா அக்கம்பக்கம் என்ன நினைப்பாங்க, இவ்வளவு தூரம் அந்த பொண்ணு வந்ததே பெரிய விஷயம். இது அவள மட்டும் இல்லை அவளோட குடும்பதையே பாதிக்கும், நீ ஏன் இதை பற்றி யோசிக்காம இருந்த.

 

“அது மட்டும் இல்லாம உன்னை எத்தனை நாளா அந்த பொண்ணுக்கு தெரியும், நீ யாரு அந்த பொண்ணுக்கு, நீ எதுக்கு இவ்வளவு உரிமை எடுத்துக்கற, நேத்து நான் கேட்டதுக்கு நீ ஏதும் இல்லைன்னு சொன்ன, இப்போது மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது என்றான் அவன் முகத்துக்கெதிராக.

 

மேலும் அவன் அர்த்தமே இல்லாமல் அவள் மேல் கோபப்பட்டது தவறென்றும், அதை விட பெரிய தவறாக கைபேசியில் அந்த பெண்ணின் எண்ணைக் கண்டதும் அழைப்பை துண்டித்ததும் என்று கூறினான். இந்நேரம் அந்த பெண் எப்படி வருந்துவாள் என்று அதற்கும் வைதான்.

 

“சொல்லு சித்து நீ அவளை விரும்புகிறாயா, ஏன்னா நீ அவ மேல ரொம்ப அக்கறை எடுத்துகறதை பார்த்தா அப்படித்தான் தெரியுது, உன்னையே நீ ஏமாத்திக்காதடா என்றான்.

 

பதிலே பேசாமல் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தவன், அந்த மோன நிலையை கலைத்தான். “நானே என்ன நடக்குதுன்னு புரியாம தான்டாஇருக்கேன். எனக்கே தெரியுது நான் அப்படிலாம் நடந்துருக்க கூடாதுன்னு ஆனா அதையும் மீறி நான் அப்படி நடந்துக்கறேன்டா.

 

“என் மனசு முழுசா இது காதல்தான்னு ஒத்துக்கொள்ள மறுக்குது, பார்த்த ரெண்டு நாள்ல இது சாத்தியமான்னு, என் அறிவு என்னை கேள்வி கேட்குது

 

“கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு உனக்கே நல்லா புரியும், உன்னை நீயே குழப்பிக்காம, நான் கேட்குறதுக்கு பத்தி சொல்லு, அந்த பொண்ணு மேல கோபத்தை காட்ட நீ யாரு “ என்றான் ஸ்ரீ.

 

“நான்… நான்… என்று இழுத்துவிட்டு, “அவங்க என்கிட்ட தானே ப்ராஜெக்ட் பண்றாங்க, அவங்க தாமதமா வந்தா நான் கேள்வி கேட்க கூடாதா, கோபப்பட்டு ஒரு வார்த்தை சொன்னா தப்பா என்றான் சித்தார்த்.

 

“தாராளமா கேட்கலாம். ஆனா அந்த கோபம் உனக்கு மத்த ரெண்டு பேரு மேலயும் இருந்துச்சா, அந்த பொண்ணு மேல மட்டும் ஏன் இவ்வளவு உரிமை எடுத்துக்கற.

 

“நீ வீடு வரைக்கும் கூட்டி போய் விடறேன் சொல்லியும் அந்த பொண்ணு வேணாம் சொல்லிடுச்சுன்னு கோபப்பட்டியே அது ஏன். ப்ராஜெக்ட் பண்ணும் போது நீ கேள்வி கேட்கலாம், ஆனா இப்பவும் நீ கோவிக்கறயே அதுக்கு என்ன அர்த்தம்.

 

அவனிடம் அதற்கு பதிலில்லை, மனம் உண்மையை உணர ஆரம்பித்தது, கைபேசி சிணுங்க நண்பனை நிமிர்ந்து பார்த்தான். அவன் பேசுமாறு சைகை செய்துவிட்டு உள்ளே சென்று விட்டான். அவன் எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட்டது. அவனே அவளுக்கு போன் செய்தான்.

 

“ஹலோ என்றழைத்த அவனின் ஆண்மை கலந்த ஆழ்ந்த குரலில் தான் அவளுக்கு உயிரே வந்தது. அவளின் அழைப்பை நிராகரித்ததில் இருந்தே அவளுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை, தாமதமாக உணவருந்தியதால் பசியில்லை, சாப்பாடு வேண்டாம் என்று தாயிடம் கூறிவிட்டாள்.

 

அவள் அன்னைக்கு அவள் சாப்பாட்டை சாப்பிடாமல் திருப்பி எடுத்து வந்ததில் வருத்தம் தான், அதுவுமில்லாமல் வேலை கவனத்தில் அவள் மிக தாமதமாக உணவருந்தியதாக கூறியதில் மிகவும் வருந்தினார். அவளுக்கு சூடாக பாலை கொண்டு வந்து குடுத்து குடிக்குமாறு கூறி அருகில் இருந்து குடித்ததும் கிளம்பிச் சென்றார் அவள் அன்னை.

 

அவள் தலை வலிப்பதாக கூறி யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் நான் சிக்கிரம் தூங்க போகிறேன் என்று கூறி கதவை அடைத்து படுத்துவிட்டாள். அவன் போன் எடுக்காத வேதனையில் கட்டிலில் விழுந்து விசும்ப ஆரம்பித்தாள், அவனை போலவே அவளுக்கும் தான் ஏன் ஒரே நாளில் இப்படி ஆனோம் என்று குழம்பினாள், பலமுறை யோசித்தும் அவளுக்கு விடையே தெரியவில்லை. அவனில் பாராமுகமும், நிராகரிப்பும் மனதை அரித்தது.

 

கைபேசி எடுத்து மீண்டும் முயற்சி செய்ய கடைசி அழைப்பு வரை சென்றும் அவன் எடுக்காததில் கைபேசியை அணைத்தாள். சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது, கண்களில் ஒரு மின்னல் மின்ன முகத்தையும், குரலையும் சரி செய்து கொண்டவளாய் போனை காதுக்கு கொடுத்தாள்.

ஹலோ என்றவனுக்கு, பதிலுக்கு ஹலோ சொல்லிவிட்டு “சொல்லுங்க என்றாள். “என்ன போன் பண்ணியிருந்த, என்ன விஷயம் என்றான் விட்டுக் கொடுக்காமலே.

 

அவள் அவனிடம் மன்னிப்பு கோரினாள். வீடு வரை தினமும் வந்து அவன் அவளை விட்டுச் சென்றால் பக்கத்தில் உள்ளவர்கள் தவறாக பேசுவார்கள் என்றாள்.

 

என் வீட்டில் என்னையும், உங்களையும் தவறாக பார்க்க மாட்டார்கள், மேலும் உங்களை ஒரு நல்ல தருணத்தில் அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன்.

 

அவள் மனதில் ஒரு நாள் அவனை வீட்டிற்கு விருந்தாட அழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதையே அவள் சொல்லவும், ஏற்கனவே நண்பனின் அறிவுரையால் இளகி இருந்தவன், அவளின் விளக்கம் கேட்டு உருகிவிட்டான்.

 

அவளிடம் வேறு பேசலானான், அவர்களின் படிப்பு இந்த வருடத்துடன் முடிவதாக அவள் கூறினாள். பின் எதாவது வேலைக்கு போக வேண்டும் என்றும் ஆசை இருப்பதை தெரிவித்தாள்.

 

——————————

 

காலையில் இனியாவுடன் காரில் செல்பவர்கள் மாலையில் அவனுடைய காரில் திரும்பி வந்தனர். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன, சித்தார்த்துக்கு அவன் மனம் புரிந்தாலும் அவளிடம் ஏதும் சொன்னானில்லை. அவள் படிப்பு முடிந்ததும் அவன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து அவள் படிப்பு முடிய காத்திருந்தான்.

 

கிட்டத்தட்ட அவர்களின் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்தது. வெண்பாவின் மனம் அலைபாய்ந்தது. இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கிறது, அதன் பின் அவள் அவனை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்காது. எப்போதாவது அவனை பார்க்க நேரிடலாம் ஏனெனில் இருவரும் ஒரே ஏரியாவில் இருந்ததால் அது மட்டுமே சத்தியம் என்று நினைத்தாள்.

 

அவள் மனம் அவனை விரும்பியதை அவளும் உணர்திருந்தாள், ஒரு நேரம் சூரியன் போல் சுட்டெரிக்கும் அவன் அடுத்த நிமிடம் குளிர் நிலவாய் இருக்கும், அவன் மனம் கண்டு புரியாமல் அவள் குழம்பினாள்.

 

ப்ராஜெக்ட் முடிய இன்னும் இரு தினங்களே இருந்த நிலையில் அன்று காலை அவனே அவர்களை அழைத்து செல்வதாக கூறியிருந்தான்.

 

அன்று மூவரும் சேலை அணிவதாக பேசியிருந்தார்கள், நல்ல கரும்பச்சையில் லேசாக சரிகை இழையோடு இருந்த சேலையை எடுத்து உடுத்தினாள். கூந்தலை பின்னி, அவள் அன்னை தந்த மொட்டான மல்லிகையை வாங்கி தலையில் சூடினாள்.

 

 

அன்று அவன் அவர்களுக்கு விருந்தளிப்பதாக கூறியிருந்தான். தாய், தந்தை இருவரிடமும் விடைபெற்று வெளியில் வந்து நடக்க ஆரம்பித்தாள். பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும் அவனுக்கு போன் செய்தாள், அவன் போனை எடுக்கவில்லை.

 

சிறிது நேரம் நின்றவள் தவித்த தவிப்பை தொலைவில் காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன், காரை எடுத்துக் கொண்டு அவள் முன்னே சென்று நிறுத்தினான். முன்னிருக்கையில் ஏறி அமர்ந்தவள் அவனை ஏற இறங்க பார்த்தாள்.

 

அவள் கடுங்கோபத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது. அவள் போன் செய்தபோது ஏன் போனை எடுக்கவில்லை என்று கிட்டத்தட்ட அவனிடம் சண்டையிட்டாள் அவள்.

 

இவளுக்கு இவ்வளவு கோபம் வருமா அதுவும் தன்னிடம் என்று யோசித்தவனுக்கு, அவள் கோபமே தான் போனை எடுக்காதது தான் என்றபின் அவளை சமாதானப்படுத்தினான்.

 

என்றும் இல்லாமல் இன்று வெகு சீக்கிரமாக கிளம்பியவன், கம்பெனி காரை வீட்டில் விட்டுவிட்டு நண்பனின் காரை எடுத்துக்கொண்டு வந்தான். நேரே அவள் வீடு இருக்கும்  தெருவிற்கு சென்றவன். அவளின் வருகைக்காக காத்திருந்தான்.

 

ஏனோ என்றோ அவன் படித்த கவிதை ஒன்று அவசரமாய் அவன் நினைவுக்கு வந்து போனது

 

 

தோழிகளோடு…

தொலைவில்

இருக்கும் போதெல்லாம்

நம்….

இடைவெளியின்

கிழிசல்களைத்

தைக்கிறாய்

உன்..

கூர் விழி கொண்டு….

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவர்கள் ப்ராஜெக்ட் இருந்ததால் அவன் அவள் நெருக்கத்திற்காக காத்திருந்தான். இந்த சந்தர்ப்பம் இனி வாய்க்காது, ஏனெனில் அவர்கள் ப்ராஜெக்ட் முடிந்தபின் அவர்களை சந்திப்பது அரிதாகிவிடும், அதன்பின் அவர்கள் பரீட்சை முடியும் வரை அவன் காத்திருக்க நேரிடும். ஆதலால் அவன் அவளின் வரவை ஆவலுடன் எதிர் பார்க்கலானான்.

 

தூரத்தில் அவள் நடந்து வருவது தெரிந்தது, அந்த கரும்பச்சை வண்ண சேலை அவளுக்கு பொருத்தமாக இருந்தது, அவள் நிறத்தை அது அதிகப்படுத்தி காட்டியது போல் இருந்தது.

 

அவளையே தொடர்ந்தவன் பேருந்து நிழற்குடைக்கு சற்று முன்னால் சென்று காரை நிறுத்தி அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்ததுபோல் அவளும் கிளம்பி வந்தாள், அவனுக்கு போன் செய்தாள்.

 

அவன் வேண்டுமென்றே தான் போனை எடுக்கவில்லை, அவள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவும் மனம் கேட்காமல் காரை எடுத்துச் சென்று அவளருகே நிறுத்தினான்.அவள் அவனிடம் சீறி விழுந்ததை கண்டவன் பொறுமையாக கண்டு ரசித்தவன் பின் அவளை சமாதானம் செய்தான்.

 

அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் வாசம் அவனை கிறங்கடித்தது, ஒரு கணம் இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், முயன்று தன் பார்வையை வேறு பக்கம் செலுத்தினான், அதன்பின் அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை.

 

அவளால் ஈர்க்கப்பட்டவன் அவனுடைய உணர்வுகளை அடக்க போராடினான், மன்மதனின் மலர் அம்புகள் முதல் முறையாக அவனை நோக்கி வீசப்பட்டதில் கட்டுப்பாட்டை இழந்தது மனம்.

 

அறிவு உணர்வை அடக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்கு அவளை முத்தமிடவேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை அவசரமாக அவன் அறிவு அடக்கியது.

 

அவனுக்கு அவனையே முதலில் சமாதானம் செய்யவேண்டி இருந்தது, அவளருகில் அவன் மனம் கட்டவிழிந்த கன்றாய் அவளை நோக்கி சென்று கொண்டிருந்தது, அவள் படிப்பு முடியும் வரை அவளுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று நினைத்தான்.

 

காரை வேகமாக செலுத்தியவன், காத்திருந்த மற்ற இருவரையும் ஏற்றியபின் தான் சற்று தன்னுணர்வுக்கு திரும்பினான்.

 

ஹோட்டல் சங்கீதாவிற்கு சென்று உணவருந்தினர், அப்போதும் அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை, அவன் இனியா, சுஜியிடமே அளவளாவினான், சாப்பிட்டு கிளம்பியவர்கள் காரை நோக்கிச் சென்றனர்.

 

சுஜியை முன் பக்கம் ஏறுமாறு கூறினான். இனியாவும், வெண்பாவும் பின்னிருக்கையில் அமர்ந்தனர். வெண்பாவுக்கு அவனின் திடீர் பாராமுகம் வேதனையை அளித்தது.

 

அன்று முழுவதும் அவன் அவளுடன் எதுவும் பேசவில்லை, அன்று வீட்டிற்கு திரும்பும்போது கூட அவன் ஏதும் பேசவில்லை, அவள் அவனிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம், தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ அவன் பார்வையை வெளியே செலுத்தினான்.

 

அதற்குள் வீடு அருகில் வந்துவிட அவளை இறக்கிவிட்டவன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக விரைந்து ஓட்டிச்சென்றுவிட்டான்.

 

அத்தியாயம் –6

 

வீட்டிற்கு வந்தவன் சட்டையை கூட மாற்ற தோன்றாமல் நேரே குளியலறைக்கு சென்று ஷவரை திருப்பி விட்டு நின்றான். அப்போது தான் அவனுக்கு அவன் சட்டை பேண்ட்டை கூட கழற்றாமல் நின்றது உரைத்தது. அங்கிருந்த உலர்ந்த துண்டை எடுத்து உடுத்திக்கொண்டு அவன் துணிகளை அலசி பிழிந்து மாடி பால்கனியில் காயப்போட்டான்.

 

கைலியை கட்டிக்கொண்டு வெளியே வந்தவனை ஸ்ரீயின் சூடான தேனீர் வாசனை அழைத்தது, நண்பனுக்கு நன்றி உரைத்தவன் மாடிக்கு சென்று மெரினாவின் அழகை ரசித்தவாறே தேனீரை சுவைத்தான்.

 

அப்போது கைபேசி சிணுங்க அழைத்தது வெண்பா என்றறிந்ததும் கைபேசியை வெறிக்க வெறிக்க பார்த்தவன் அதை அணைத்துவிட்டான். பின்னோடு மாடியேறி வந்த ஸ்ரீ அவனை ஒருவிதமாக பார்த்தான்.

 

சித்தார்த் “வினோத் எங்கே, ஆளே பார்க்க முடியல என்றான்.

 

ஸ்ரீ “அவன் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் இரவு பகல் பாராமல் உழைக்கிறான். அவன் அலுவலகம் அருகிலேயே ஒரு வீட்டை எடுத்து தங்கிக் கொண்டிருக்கிறான், இனி வாரம் ஒரு தரம் தான் இங்கு வருவானாம் என்றான்.

 

“என்கிட்டே சொல்லவே இல்லை என்றான் சித்தார்த். “அவன் தான் நேற்றே உன்னிடம் சொன்னானே, நீ தான் இப்போதெல்லாம் கனவுலகில் சஞ்சரிக்கிறாயே உனக்கு எப்படி எங்களை நினைவிருக்கும் என்றான் ஸ்ரீ பதிலுக்கு.

உண்மையில் வினோத் வேலை அதிகமாக இருப்பதாக கூறிவிட்டு ஒரு வாரம் அவன் அலுவலகம் அருகில் உள்ள நண்பரின் வீட்டில் இருந்து போய் விடுவதாகவும், சித்தார்த்திடமும் கூறிவிடுமாறும் உரைத்துவிட்டு சென்றான். அதுவும் அவன் இன்று தான் சென்றான், சித்தார்த் வருவதற்கு சற்று முன்பு தான் வெளியேறினான்.

 

இது அறியாத சித்தார்த் எங்கே ஸ்ரீதர் மேலும் அவன் மானத்தை வாங்கிவிட போகிறானோ என்று நினைத்து “ஆமாம் அவன் கூறினான் தான், நான் தான் ஏதோ வேலை பளுவில் மறந்துவிட்டேன் என்றான்.

 

இதை கேட்ட ஸ்ரீதர் விழுந்து விழுந்து சிரித்தான். சிரிப்பினூடே நடந்த விஷயத்தையும் கூறினான். அதை கேட்ட சித்தார்த்தின் முகத்தில் அசடு வழிந்தது.

 

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா, நீயும் அதுக்கு ஆமாம் சாமி போடுற, என்னடா ஆச்சு உனக்கு இன்னைக்கும் எதாச்சும் வில்லங்கமா, உன் முகமும் சரி இல்லை, காலையில நீ ரொம்ப குஷி மூட்ல தானே இருந்த, இப்ப என்னாச்சு என்றான் ஸ்ரீ.

 

“என்னடா எப்போ பார்த்தாலும் என்னை கலாட்டா பண்றதே உனக்கு வேலையாய் போச்சு, நிஜமாகவே நான் ரொம்ப நல்லாத்தான் இருக்கேன், ஒரு பிரச்சனையும் இல்லை என்றான் சித்தார்த்.

 

“உண்மையை சொல்லுடா நீ காலையில எப்படி இருந்த, இப்ப எப்படி இருக்க நான் தான் பார்த்தேனே, எனக்கு உன்னை நல்லா தெரியும், உன் மனசை போட்டு குழப்பிக்காம நடந்ததை சொல்லு என்றான் ஸ்ரீ விடாகண்டனாக.

 

சித்தார்த் மீண்டும் “என்ன தெரியும் சொல்லுடா, உனக்கு என்ன தெரியும், நீ என்ன பார்த்த, சும்மா எல்லா விஷயத்தையும் போட்டு வாங்கலாம் நினைக்காதடா, எந்த குழப்பமும் இல்லை நான் நல்லாத்தான் இருக்கேன் என்றான் உண்மையை மறைத்தவாறே

 

“நான் என்ன பார்த்தேன்னு உனக்கு தெரியனும் அவ்வளவுதானே, இன்னைக்கு எனக்கு முன்னமே நீ கிளம்பிட்ட, அதுவும் யார்கிட்டயும் சொல்லிக் கொள்ளாமலே சரியா.

 

“நீ கிளம்பின கொஞ்ச நேரத்துல நானும் வேலைக்கு கிளம்பிட்டேன். வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது அந்த பொண்ணு நடந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் யாருக்காகவோ காத்திருந்தது. அவள் காத்திருந்தது உனக்காகத் தான்னு எனக்குத் தோணுச்சு

 

“ஏன்னா நீ தான் தினமும் அவங்களை அழைச்சுட்டு வருவேன் எனக்கு தெரியும், நானே நாலஞ்சு தடவை பார்த்து இருக்கேன். நீ முன்னமே கிளம்பிட்டேயே, அந்த பொண்ணும் யாருக்காக காத்திருக்கும், நீ எங்க போனேன்னு யோசிச்சுட்டு இருக்கும் போது நீ என்னோட கார்ல கொஞ்சம் தள்ளி நின்னுட்டு இருக்க, துரதிர்ஷ்டவசமாக நீ என்னை பார்க்கவில்லை

 

“உன் அலைபாயும் விழிகள் அந்த பொண்ணை ஒரு தாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது, இன்னைக்கு என்ன ஸ்பெஷலோ தெரியல அந்த பொண்ணு சேலை வேற கட்டி, பூ வைச்சு வந்திருக்கு, அதை பார்த்து நீ கிறங்கி போய் இருக்க, சரி தானே இல்ல இன்னும் சொல்லணுமா என்றான் ஸ்ரீ மூச்சுவிடாமல்.

 

‘போயும் போயும் இவன் கிட்ட தான் நான் மாட்டிக்கணுமா, இவன் வேற சமய சந்தர்ப்பம் இல்லாம என்னை சோதிக்கறான்.

 

“இருந்தாலும் நீ என்னை இப்படி தொடர்ந்து வந்து இருக்ககூடாதுடா என்றான் சித்தார்த் ஆதங்கத்துடன்.

 

“சித்து நீ சங்கடத்துல இருக்கும் போது என்னால எப்போமே நிம்மதியா இருக்க முடியாது, உன் வருத்தம், துக்கம், சந்தோசம் எதுவா இருந்தாலும் சொல்லுடா, நானும் காதலிச்சு இருக்கேன் என்னோட காதல் வாழ்கையில நடந்தது இப்போது உனக்கும் நடக்குது இதுல நான் ஒண்ணும் பெரிசா மை போட்டுலாம் பார்க்கல

 

“நான் பார்த்தது தற்செயலா நடந்தது, இப்போ சொல்லு உனக்குள்ள எதையும் வைச்சுட்டு மறுகாதடா, நீ எல்லாத்தையும் உள்ள வைச்சுட்டு சங்கடப்படக்கூடிய ஆளு அதான் திரும்ப திரும்ப கேட்குறேன், நான் உன்னை தொடர்ந்து வரணும்ன்னு நினைக்கலடா, சாரிடா என்றான் ஸ்ரீ உண்மையான வருத்தத்துடன்.

 

“ஏய், நீ எதுக்கு சாரி சொல்ற, உன்னை புரிஞ்சுக்காம இருந்தது என்னோட முட்டாள்தனம், நான் தான் உண்மையிலே உன்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டியவன், நான் மிகவும் கொடுத்துவைத்தவன் உன்னை போல் ஒரு உண்மையான நண்பன் கிடைத்ததற்கு என்றான் பெருமிதத்துடன்.

 

“இன்னைக்கு அவள பார்த்ததுல இருந்தே நான் நானா இல்லைடா, எப்படியாவது அவள என் கூடவே வைச்சுக்கணும், இப்பவே அவளை கல்யாணம் பண்ணிக்கணும் போல தோணுச்சு, என்னை நினைச்சு எனக்கே அவமானமா இருந்துச்சுடா. அதுக்கு அப்புறம் நான் அவகிட்ட பேசவே இல்லை இப்ப வரைக்கும். நாளைக்கு மட்டும் தான் அவங்க வருவாங்க, நாளை தான் அவர்களுக்கு கடைசி நாள், அவளை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன். நீ சொல்லும் போதெல்லாம் நான் புரிஞ்சுக்காம இருந்த மாதிரி காட்டிகிட்டேன்.

 

“ஆனா, நான் அவளை விரும்ப ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு, அவள எப்போ அந்த பஸ்ல திரும்பி பார்த்தேனோ அப்போதே அவள் என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டாள்

 

“அது தான் நான் அவர்களை என் அலுவலகத்தில் பார்த்த போது எந்த கோபமும் படாமல் இருந்திருக்கிறேன். அவளோட படிப்பு முடியற வரைக்கும் அவகிட்ட இது பத்தி ஏதும் பேசக்கூடாதுன்னு நினைக்கிறேண்டா, அவ நல்லா படிக்கணும், இதுனால அவளுக்கு  எந்த தொந்திரவும் வேண்டாம்னு நினைக்கிறேன்டா என்றான் சித்தார்த் தன் மனதில் இருந்ததை நண்பனிடம் பகிர்ந்தவனாய்.

 

ஸ்ரீதரன் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, சிறு மௌனத்தின் பின் “இந்த விஷயம் எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சு இருக்குடா, அவ படிப்பு கெட்டு விடக்கூடாதுன்னு நினைச்சு பாரு, உன்னை உண்மையாவே நான் பாராட்டுறேன்.

 

“நான் தான் ஐஸ்வர்யாவோட படிப்பு முடியறதுக்கு முன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன். நீ யோசிச்சு முடிவெடுத்தது எனக்கு ரொம்ப சந்தோசம்டா, அதுக்காக உன்னை நீ ரொம்ப வருத்திக்காதே என்றான்.

 

மேலும் அவன் இன்னும் ஒரு மாதத்தில் சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போவதாக கூறினான். மனைவி வேறு மாதமாக இருப்பதால் அவளை இனி பிரிந்திருக்க மனம் கேட்காமலே இந்த முடிவுக்கு வந்ததாக கூறினான்.

 

அவன் கீழே இறங்கிச் சென்றுவிட்டான். சித்தார்த் மட்டுமே மொட்டை மாடியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தான். தனக்கு அவ்வப்போது அறிவுரை சொல்லும் நண்பன் ஊருக்கு மாற்றலாகி போவது அவனுக்கு வருத்தமாக இருந்தது. வழி நடத்தும் உற்ற நண்பன் அவனே என்று கருதினான்.

 

திடிரென்று யோசனை செய்தவனாய் வெண்பாவுக்கு போன் செய்தான், அதற்காகவே காத்திருந்தாற் போன்று அவள் போனை எடுத்து “ஹலோ என்றாள்.

 

தேனாக கேட்ட அந்த குரல் அவனை அசைத்தது, சட்டென்று விரைப்புற்று “என்ன போன் செய்தீர்கள் போல இருக்கிறது என்ன விஷயம், கொஞ்சம் சீக்கிரமாக சொல்லுங்கள் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நீங்க கூட படிக்கணும் இல்லையா என்றான் கத்தரித்தார் போல்.

 

அவளுக்கு ஏதும் பேச வாய் வரவில்லை, ஒன்றுமில்லை என்று கூறி போனை வைத்து விட்டாள். மறுநாளும் முதல் நாள் போலவே செல்ல, விடை பேரும் தறுவாயில் அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, இனியா, சுஜி, வெண்பா மூவருக்கும் அந்த அலுவலகத்தில் உடன் ஒத்துழைத்த அனைவரும் பிரியாவிடை கொடுத்தனர்.

 

அவன் அவளை இறக்கிவிட்டபின் விடைபெறாமலே காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.

 

இப்போதெல்லாம் அவள்  போன் செய்தால் அவன் சரிவர பேசுவதில்லை, எப்போது போன் செய்தாலும் படிக்கவில்லையா, எனக்கு வேலை இருக்கிறது என்று கூறி போனை வைத்துவிடுவான்.

 

அவளும் இப்போதெல்லாம்  அவனுக்கு போன் செய்வதே இல்லை, இனியா, சுஜியிடம் அவனை பற்றி சொல்லலாம் என்று நினைத்தவள் அந்த எண்ணத்தை கைவிட்டாள்.

 

தன்னுள்ளே, காதலை வைத்து புழுங்கினாள், யாரிடமும் சரிவர பேசுவதில்லை, எப்போதுமே புத்தகமும் கையுமாக இருந்தாள். படிப்பில் தன் கவனத்தை கரைத்தாள்.

 

இரண்டு மாதங்கள் கடந்தது. ஸ்ரீதரன் ஊருக்கு மாற்றலாகி சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஏதோ ஒரு வெறுமை அவனை சூழ்ந்திருந்தது போல் உணர்ந்தான்.

 

மேலும் சில மாதங்கள் கடந்தன. அன்று விடுமுறை நாள் வேறு வீட்டிலிருந்தவன் அவளை எப்படி இன்று பார்ப்பது என்ற யோசனையிலிருந்தான். வாரத்தில் மற்ற ஆறு நாட்களில் அவள் கல்லூரிக்கு கிளம்பும் நேரம் பார்த்து கிளம்புவான்.

 

ஆதலால் எப்படியாவது அவளை பார்த்துவிட்டே செல்வான். ஆனால் அவனுக்கு விடுமுறை தினம் மட்டும் பிடிப்பதில்லை, அவளை அன்று பார்ப்பது அரிதான ஒரு விஷயமாகும்.

 

ஸ்ரீ இருந்தவரைக்கும் அவன் சித்தார்த்திடம் ஏதாவது கலகலப்பாக பேசி சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பான், இந்த வினோத் பாதி நாட்கள் இங்கு இருப்பதே இல்லை, ஆபீசே கதி என்று கிடக்கிறான்.

 

இந்த லட்சணத்தில் அவனுக்கு அவன் வீட்டில் திருமணம் உறுதி செய்திருக்கின்றனர். அவன் திருமணம் செய்து கொண்டு தனியாகப் போய்விடுவதாக நேற்று தான் சொல்லியிருந்தான்.

 

தனியாக இருக்கும் போது அவள் நினைவு அவனை வாட்டுவதாக இருந்தது. கடைசியாக அவன் அவளை சேலையில் பார்த்த அன்றைய பொழுது அவன் நினைவுக்கு வந்தது, எப்போது அவளை திருமணம் செய்வோம் என்று அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அவள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற உரிமை உணர்வு அவனுக்கு வந்திருந்தது.

 

அந்த நேரம் ஸ்ரீ போன் செய்தான், அவனிடம் இருந்து அழைப்பு வந்ததும் சித்தார்த் உற்சாகமானான். “இப்போது தான்டா உன்னை பத்தி நினைச்சேன். நீ போன் போட்டுட்ட “ என்றான்.

 

ஸ்ரீ “அப்படியா நெஜமாகத்தான் சொல்கிறாயா, நீ என்னை நினைச்சுட்டு இருந்த நான் அதை நம்பணுமா, எனக்கு காது குத்திட்டாங்க மச்சான் என்றான்.

 

“நீ சொல்றதும் சரிதாண்டா, அவளை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன், இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அவள பார்க்க முடியல, நீ இருந்திருந்தா எனக்கு போரடிக்காம இருந்திருக்கும். அதான் யோசிச்சுட்டு இருந்தேன்.

 

“இப்போலாம் தனிமை என்னை ரொம்ப வாட்டுதுடா. இந்த வினோத் வேற பாதி நாள் இருக்க மாட்டேங்குறான், மீதி பாதி நாள் இரவு வேலைக்காக போய் விடுகிறான். அவனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் வேற, அதுக்கு அப்புறம் அவனும் தனியா போய்விடுவான். நான் மட்டும் தான் தனியா இருப்பேன், அதான் ரொம்ப கவலையா இருக்கேன் என்றான்.

 

“அதுதானே பார்த்தேன், நீயாச்சும் என்னை தேடுறதாவது உனக்கு போரடிச்சா நான் தான் வேணுமா, போடா டேய் உனக்கு போய் நான் அக்கறையாய் போன் பண்ணேன் பாரு என்னை உதைக்கணும் என்றான் ஸ்ரீ.

 

“டேய் நீயும் புரிஞ்சுகலானா எப்படிடா, நான் உன்னை உண்மையிலே மிஸ் பண்றேண்டா என்னை புரிஞ்சவன் நீதானேடா என்றான் சித்தார்த் வருத்ததுடன்.

 

“ஏய் நீ என்னடா இன்னைக்கு ரொம்ப உணர்ச்சிமயமா பேசுற, என்னடா என்னாச்சு. நீ பேசாம அவகிட்ட நீ விரும்பறது பத்தி சொல்லிடு சித்து. உன் மனசை போட்டு அலட்டிக்காதே. அவள் உன்னை விரும்பறான்னு தெரிஞ்சாலாவது நீ கொஞ்சம் அமைதியாயிருப்பேன்னு தோணுது, நீ என்ன நினைக்கிறே என்றான் ஸ்ரீ.

 

ஸ்ரீயை நினைத்து வியந்தவனாக “எப்படிடா நான் மனசுல நினைச்சது நீ சொல்ற, அவகிட்ட சொல்லிட்டா மனசுல உள்ள பாரம் இறங்கும்ன்னு தான் நான் நினைக்கிறேண்டா, அதுக்கு அப்புறமா நான் அவளுக்காக ஆயுசு முழுக்க காத்துட்டு இருக்கவும் தயார் தான். ஆனா நான் காத்துட்டு இருக்கறத்துக்கும் ஒரு அர்த்தம் வேணும் இல்லையா, அவ மனசு தெரிஞ்சா நான்அவளுக்காக எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்னு தோணுதுடாஎன்றான்.

 

“சரி எப்போ, எப்படி சொல்ல போறடா அது பத்தி ஏதும் யோசிச்சியாஎன்றான்ஸ்ரீ. “இல்லடா இன்னும் அது பத்தி நான் யோசிக்கல பார்த்துக்கலாம், எப்படியும் நான் அவகிட்ட சொல்லிடணும் முடிவு பண்ணிட்டேன்.

 

“அதுக்கு முன்னாடி ஊருக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லி அவங்க சம்மதமும் வாங்கணும்னு நினைக்கிறேன். எங்கேயும் எந்த தப்பும் நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்டாஎன்றான்சித்தார்த்.

 

எந்த தவறும் நடக்கக் கூடாது; தான் அவளை எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விடக்கூடாது என்று அவன் மனம் எண்ணியது. ஆனால் காலத்தின் எண்ணம் வேறாக இருந்தது, அது அவர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்தது. அவர்களே அவர்கள் காதலுக்கு எதிரிகளானார்கள்…

 

ஸ்ரீயிடம் பேசிவிட்டு போனை துண்டித்தவன் கைபேசி மீண்டும் அழைத்தது. அதை எடுத்து பார்த்தவனுக்கு கோடி மின்னல் ஒன்றாக வந்தது போன்ற ஒரு பிரகாசம் வந்தது. அழைத்தது வேறு யாருமல்ல அவன் எண்ணத்தின் தேவதை வெண்பா தான்.

 

உற்சாகமாக கைபேசியை எடுத்து “ஹலோஎன்றான். அவளும்“ஹலோ, எப்படிஇருக்கீங்க, நல்லாஇருக்கீங்களாஎன்றாள்.

 

இம்மென்றவன் மேலே என்ன விஷயம் என்று வினவினான்.

 

“எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். உங்களுக்கு பொள்ளாச்சி சொந்த ஊருன்னு சொல்லியிருக்கீங்கள்ள, எனக்கு பொள்ளாச்சி பக்கத்துல இருக்கற வால்பாறைக்கு போகணும் நீங்க எனக்கு அதுக்கு உதவி பண்ண முடியுமா, எனக்கு தங்கறதுக்கு இடம் ஏற்பாடு செஞ்சு குடுக்கறீங்களாஎன்றாள்ஒருவிவரமும்இல்லாமல்.

 

சித்தார்த்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. “அங்க உங்களுக்கு என்ன வேலைன்னு சொன்னா, எனக்கும் புரியும், இப்படி தலையும் புரியாம காலும் புரியாம பேசுனா என்னக்கு ஒண்ணுமே புரியலஎன்றான்.

 

“மன்னிக்கணும் சொல்ல மறந்துட்டேன், எங்க கல்லூரியில நடந்த கேம்பஸ்ல நான் கலந்துகிட்டேன். அதுல நான் செலக்ட் ஆகிட்டேன். ஆனா முறைப்படியான சில தேர்வுகள் இருக்காம்.

 

“அதுக்கு நான் வால்பாறை வரைக்கும் வந்தாகணும் சொல்லி இருக்காங்க, நான் வர்றதுக்கான எல்லா ஏற்பாடும் அவங்களே செய்யறதா சொல்லிட்டாங்க, ஆனா எனக்கு அதுல இஷ்டமில்லை தெரியாத இடத்துல தங்கணும்னா கொஞ்சம் யோசனையா இருக்கு. அதான் உங்ககிட்ட கேட்கலாம்ன்னு தோணிச்சு.

“ஏன்னா எனக்கு அது தெரியாத ஊரு, தொந்தரவு பண்ணறதா நினைக்கவேண்டாம், நான் எங்க அம்மாவை ஒரு வழியா சமாதானப்படுத்தி வைச்சு இருக்கேன். நீங்க ஒரு நல்ல இடமா சொன்னீங்கன்னா அவங்ககிட்ட நான் தைரியமா பேசுவேன்

 

“நிச்சயமா செய்யறேன் இதுல தொந்தரவு எங்க இருந்து வந்தது, அது என்னோட கடமையும் கூடஎன்றான்உள்ளார்ந்தமகிழ்ச்சியுடன். மேலும்சுஜி, இனியாஎன்னவானார்கள்என்றுவினவினான்.

 

“சுஜியும், தேர்வாகி இருந்தாள், ஆனால் அவள் வீட்டில் அவளை வேலைக்கு அனுப்பும் உத்தேசமில்லை, ஆதலால் சுஜி வரவில்லை, இனியா வேறு கம்பெனியில் தேர்வாகினாள், அவளுக்கு வேலைக்கு போகும் அவசியமில்லை, ஆதலால் அவளும் வரவில்லை.

 

“இருந்தாலும் இருவரையும் நான் என்னுடன் துணைக்கு வருமாறு அழைத்து இருக்கிறேன். இனியா கண்டிப்பாக வருவதாகக் கூறி இருக்கிறாள். சுஜி அவள் பெற்றோரிடம் கேட்டு சொல்வதாக கூறி இருக்கிறாள். அதனால் நாங்கள் மூவரும் அங்கு செல்வதாக திட்டமிட்டுள்ளோம்என்றாள்.

 

“நீங்க மூணு பேரும் முப்பெரும் தேவியரா எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வீர்கள் போல இருக்கிறதுஎன்றான்அவன்கிண்டலாக.

 

வெகு நாளைக்குப்பின் அவன் குரலில் தெரிந்த கேலியில் மனம் துள்ளியது வெண்பாவுக்கு பதிலுக்கு அவளும் “அதில் உங்களுக்கு பொறாமை போல் தெரிகிறதேஎன்றாள்.

 

“எனக்கு ஏனம்மா பொறாமை, பார்க்க போனால் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. நீங்கள் இது போல் என்றும் இருங்கள், அதில் எனக்கு சந்தோசமேஎன்றான்.

 

“என்னோட நண்பன் ஸ்ரீ இப்போ அங்க தான் போஸ்டிங் ஆகி போய் இருக்கான், நான் அவன்கிட்ட பேசிட்டு, உன்கிட்ட விவரம் சொல்லறேன்என்றுகூறிபோனைவைத்துவிட்டான்.

 

உடனே ஸ்ரீக்கு போன் செய்தான். என்னடா இது இப்பதானே பேசினோம். உடனே கூப்பிடுகிறான் என்ன விஷயமோ தெரியலியே என்று நினைத்துக் கொண்டவனாக போனை எடுத்து “ஹலோஎன்றான்.

 

“ஸ்ரீ நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும், வெண்பா கேம்பஸ்ல செலக்ட் ஆகி இருக்கா, அது விஷயமா அவ வால்பாறைக்கு வர்றாளாம், அவ தங்கறதுக்கு இடம் ஏற்பாடு பண்ணனும்டா, அவகூட அவ தோழிகள் இருவரும் வருகின்றனர்என்றான்.

 

“சரி இது எப்படி உனக்கு தெரியும், அவ உனக்கு போன் பண்ணாளாஎன்றான். அதற்குசித்தார்த்இம்மென்றுபதிலளித்தான்.

 

“அவங்க ஏன் வேற எங்கயோ தங்கணும், எங்க வீட்டிலேயே தங்கிக்கலாமே. அம்மா, அப்பாக்கும் பிடிக்கும், எங்க வீட்டில தான் பெண் பிள்ளைகளே இல்லையே, அதனால் அவர்கள் மிகவும் மகிழ்ந்து போவார்கள் என்றான்.

 

“வேணாம்டா அவங்கள வீணா தொந்தரவு பண்ணக்கூடாது. ஐஷு வேற மாசமா இருக்கா, அவள பார்த்துப்பாங்களா. போடா நீ நான் சொன்ன மாதிரி வேற இடம் பார்த்து சொல்லுடா என்றான்.

 

ஸ்ரீக்கு கோபம் வந்துவிட்டது “என்ன, என்ன பெரிய கஷ்டம், என் மனைவியை பார்த்துகிட்டா அவங்களால கவனிக்க முடியாதா, என் தங்கச்சிய நான் பார்த்துக்க மாட்டேனா, இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது வேற இடம் பார்க்கணுமாம் வேற, இடம் பெரிய இவன்னாட்டம் பேசறான் என்று அவனை வைதான்.

 

“போடா மரியாதையாய் நான் சொல்றத கேளு, அவங்களை எங்கள் வீட்டில் மாடி அறை குடுத்து தனியாக தங்க வைக்கிறோம், நாங்க நல்லா பார்த்துப்போம், அதுக்கு மேல அவங்களுக்கு என்ன உதவி வேணுமின்னாலும் நான் பார்த்து செய்யறேன் போதுமா, இப்பவாச்சும் நீ நம்புறியா என்றான் மூச்சுவிடாமல்.

 

“ஏய், நான் உன்னை நம்பாம வேற யாரை நம்புவேண்டா என்று உணர்ச்சி வசப்பட்டான் சித்தார்த்.சித்தார்த்க்கு பெருமையாக இருந்தது, இவன் எப்படிபட்டவன், இவனை நண்பனாக அடைய நான் எந்த ஜென்மத்திலோ புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

 

எனக்காக தானே அவன் இதை செய்கிறான், எனக்கு அவளை பிடித்து இருப்பதால் அவன் தங்கையாகவே அவளை ஏற்றுக்கொண்டு விட்டானே. மிகவும் மகிழ்ந்து போனான் ஸ்ரீயின் வார்த்தைகளை கேட்டு, அவளை நல்ல இடத்தில் தங்கவைக்கிறோம் என்று நிம்மதியும் அடைந்தான்.

 

“என்னடா நான் பாட்டுக்கு கத்திட்டு இருக்கேன், நீ எதுவுமே பேசமாட்டேங்கற, லைன்ல தான் இருக்கியா, சொல்லுடா என்றான் ஸ்ரீ.

 

சுய நினைவு வந்தவனாக “சாரிடா, நீ சொன்னது கேட்டதும் சந்தோசமா இருந்துச்சு, சரிடா நான் அவங்ககிட்ட சொல்லிடுறேன். உன் விலாசம், உன் கைபேசி எண் அவங்க கிட்ட குடுத்துடுறேன் சரியா. அவங்க எண்ணும் உனக்கு அனுப்பி வைக்கிறேன், அப்புறம் அவங்க என்னைக்கு கிளம்புறாங்க எப்படி வராங்கன்னு தகவல் உனக்கு நாளைக்கு சொல்லறேன் என்று கூறி போனை வைத்தான்.

 

அதற்குள் அவனுக்கு இரண்டு மூன்று அழைப்புகள் வந்திருந்தன வெண்பாவிடமிருந்து, நண்பனிடம் பேசி கொண்டிருந்ததில் வேறு அழைப்பு வந்ததை சித்தார்த் கவனிக்கவில்லை. போனை அணைத்துவிட்டு பார்த்த போது தான் அவள் அழைப்பை கவனித்தான்.

 

உடனே போன் செய்து என்னவென்று விசாரித்தான். போனை எடுத்தவள் அவனிடம் மன்னிப்பு கோரினாள், அவன் என்னவென்று வினவினான் அவளிடம். அவளுடைய வீட்டில் அவளை தெரியாத ஊருக்கு அனுப்ப விருப்பமில்லையாம், ஆதலால் அவளை போக வேண்டாமென்று தடுத்து விட்டதாகக் கூறினாள்.

 

இதை கேட்ட சித்தார்த் கை முஷ்டியை இறுக்கினான். அவனுக்குள் கோபம் எட்டிப் பார்த்தது, சமாளித்துக்கொண்டு “நான் தான் பாதுக்காப்பான இடம் பார்க்கறேன்னு சொன்னேன்ல, அப்புறம் ஏன் இப்படி, நான் வேணா உங்க வீட்டில் பேசி பார்க்கட்டுமா என்றான்.

 

அவளுக்கும் அது நல்ல எண்ணமாகத் தோன்ற சரியென்றாள். அவன் அவளிடம் அன்று மாலை அவள் வீட்டுக்கு வருவதாகக் கூறினான்.

 

வெண்பாவின் ஆசை நிறைவேறுமா… அவள் வால்பாறைக்கு செல்வாளா….

Advertisement