Advertisement

அத்தியாயம் –19

 

வெண்பாவின் தந்தைக்கு அருண் பேசிய வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “என் தங்கை இந்த கல்யாண பேச்சில் உங்கள் மகன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணம் வளர்த்துக் கொண்டாள். அது இல்லை என்று ஆகிவிட்டது. என் தங்கை பிற்காலத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்க்க என்னால் முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.

 

மேலும் “வெண்பாவுக்கு என்னை விட உயர்ந்த மனம் கொண்டவர், பொருத்தமானவர், அவர் மனதுக்கு பிடித்தவராக கண்டிப்பாக ஒருவர் வருவார். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றான் அவன்.

 

“பார்த்தியா குழலி அந்த தம்பி பேசினதை, ஒரு அண்ணன் தங்கை நல்வாழ்வை பற்றிக்கூட நினைக்காமல் தனக்கான ஒரு வாழ்வை அமைத்துக் கொண்டான். ஒரு அண்ணன் தங்கைக்காக தன் மனதுக்கு பிடித்த வாழ்வுகூட வேண்டாம் என்று மறுக்கிறார் என்று வெண்பாவின் தந்தை இரவில் அவர்கள் அறையில் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

 

“காவியன் ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னா நாம செஞ்சு வைக்காமலா போய்டுவோம். எனக்கு அவன் செஞ்சதில் கொஞ்சம் வருத்தம் தான் குழலி. ஆனாலும் தவறு என் பக்கமும் தான் அவன் விருப்பம் கேட்காமல் சம்மதம் சொல்லியிருக்க கூடாது.

 

“எப்படியோ வெண்பா வாழ்க்கை என்னாகுமோன்னு எனக்கு கவலையா இருந்துச்சு, அவ மனசுல இந்த மாப்பிள்ளையை நினைச்சுட்டு கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிடுவாளோன்னு பயந்துட்டு இருந்தேன். நம்ம பொண்ணு நம்ம விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து வேற மாப்பிள்ளை பார்க்க சம்மதிச்சுட்டா என்றார் மனநிம்மதியுடன்.

 

“என்ன குழலி ஏன் அமைதியா இருக்க, என்ன விஷயம் என்றார் அவர். “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்நான் ஒரு தப்பு பண்ணிட்டேன் என்றார் அவர் பிடிகையுடன். “சொல்லும்மா குழலி என்ன விஷயம் “ என்றார் அவர். நிமிர்ந்து புரியாமல் மனைவியை நோக்க “நம்ம பொண்ணுகிட்ட நாம சம்மதம் கேக்காம விட்டுட்டோங்க என்றார் குழலி.

 

“நான் தான் வெண்பாகிட்ட கேட்டனே குழலி அவ தான் வேற மாப்பிள்ளை பார்க்க சம்மதிச்சுடாளே என்றார் அவர். “முதல்ல நான் நடந்த விஷயம் என்னன்னு சொல்லிடுறேன், அன்னைக்கு காலையில நீங்க நெஞ்சு பிடிச்சுட்டு உட்கார்ந்தீங்கள்ள, அப்புறம் நீங்க கிளம்பி ஆபீஸ் போய்டீங்க.

 

“எனக்கு ஏனோ மனசே சரியில்லாம போச்சு. நம்ம பொண்ணோட கல்யாணம் உங்க நெஞ்சு வலின்னு எனக்கு பயத்தை கொடுத்துச்சு. ரொம்பவும் மனசு கஷ்டமா இருந்துச்சு, அன்னைக்கு ஒரு நாலு மணிக்கு நான் கோவிலுக்கு கிளம்பி போனேன். ஆண்டவா எங்களை இப்படி சோதிக்கறயேன்னு கண்ணீர் விட்டு கடவுள் கிட்ட அழுதுட்டு இருந்தேன்.

 

“அப்போ அந்த சித்தார்த் தம்பிய பார்த்தேன் என்று நிறுத்தினார். “சித்தார்த்னா நம்ம பொண்ணுக்கு ட்ரைனிங்ல உதவி பண்ணவர் தானே என்றார் அவர். “இம் ஆமாங்க, அவர் தான் என்றவரின் முன் அந்த நிகழ்வு கண்ணில் விரிந்தது.

______________________________

 

கோவிலில் கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டியாவாறு அமர்ந்து இருந்தார் குழலி, “கடவுளே இந்த மனுஷன் இப்படி திடிர்னு நெஞ்சு பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டார். இது போல இது முன்னயும் வந்து இருக்கு, எங்ககிட்ட சொன்னா வருத்தபடுவோம்ன்னு மறைச்சு இருக்கார்.

 

எங்க பசங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும், நாங்க நல்லா இருக்கும்போதே அவங்களுக்கு ஒரு நல்லது பண்ணி பார்த்துடணும். அவருக்கு நீங்க ஆயுளை கொடு ஆண்டவா என்று கண் மூடி வேண்டிக் கொண்டிருந்தார்.

 

யாரோ கூப்பிடுவது போல் தோன்ற கண் விழித்து பார்த்தார். சித்தார்த் எதிரில் அமர்ந்து இருந்தான். “என்னாச்சு ஆன்ட்டி ஏன் இங்க உட்கார்ந்து அழுதுட்டு இருக்கீங்க என்றான் அவன். “ஒண்ணுமில்லை தம்பி என்று கூறியவாறு தன் கண்ணீரை துடைத்தார்.

 

“ஒண்ணுமில்லாமலா நீங்க அழுதுட்டு இருக்கீங்க, என்னன்னு தயவு செய்து சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு ஆறுதலாகவாவது இருக்கும், அதற்காகவாவது சொல்லுங்கள், என்னை யாரோன்னு நினைக்காம உங்க கவலையை சொல்லுங்க ஆன்ட்டி என்றான் அவன்.

 

அவன் பேசியதில் மீண்டும் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய காலையில் நடந்த விஷயத்தை கூறினார். மகனுக்கும் மகளுக்கும் நடக்க இருக்கும் திருமணம் உடனே நடக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் அது நின்று விடக்கூடாது என்று அவர் நினைத்து வருந்துவதை கூறினார்.

 

“ஏன் ஆன்ட்டி உங்க பையனும் பொண்ணும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலையா என்றான் அவன். “எங்க மகன்கிட்ட அவர் பேசறேன்னு சொல்லிருக்கார். ஆனா என் பொண்ணு, இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து சரியாவே இல்லை. அதே எனக்கு மனசுக்குள்ள அரிச்சுட்டு இருக்கு.

 

“அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோன்னு கவலையா இருக்கு. அவங்க அப்பாவை நினைச்சு கவலை படறதா இல்லை புள்ளைங்களை நினைச்சு கவலைபடறதான்னு தெரியல. என் மனசு கிடந்து தவிக்குது, அவங்க அப்பா ஆபீஸ் போனதுக்கு அப்புறம் அவரோட நண்பருக்கு போன் செஞ்சு கேட்டேன்.

 

“ஆபீஸ்லயே அவர்க்கு ரெண்டு தடவை நெஞ்சு வலி வந்து இருக்கு, டாக்டர்கிட்ட செக் பண்ணதுக்கு அவங்க கொஞ்சம் கவனமா இருக்க சொன்னாங்களாம். நீங்களாவது சொல்லி இருக்கலாமேனு நான் அவரோட நண்பர் கிட்ட கேட்டேன். அவர் வீட்டில எல்லாரும் பயந்துடுவாங்க அது இதுன்னு சொல்லி என் வாயை அடைச்சுட்டான். நானும் சொல்லிருக்கணும்ன்னு சொல்லி வருத்தப்பட்டார்.

 

“இந்த வாரத்துல அவங்க வீட்டில இருந்து வந்து நிச்சயம் பண்ண வர்றேன்னு சொல்லி இருக்காங்க, என்ன நடக்க போதுன்னு எனக்கு ஒரே தவிப்பா இருக்கு என்று கூறி முடித்தார் அவர்.

 

அதுவரை பொறுமையாக அவர் சொல்வதை கேட்டவன், “ஆன்ட்டி நீங்க கவலை படாதீங்க, நீங்க இந்த பெருமாளை மனமார வேண்டி கொண்டீர்கள் இல்லையா, அவர் உங்களுக்கு நல்லதே நடத்துவார். நீங்க வீட்டுக்கு போங்க, உங்க பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்க, அங்கிள்க்கு எதுவும் ஆகாது. அவர் ரொம்ப வருஷம் நல்லா இருப்பார்.

 

“அவர் பொண்ணோட கல்யாணம் முடிஞ்சு அவங்க பேரன் பேத்தி எடுத்து அவங்களுக்கும் கல்யாணம் முடிச்சு வைப்பார். பாருங்க என்றான் அவன். அவன் பேசியதில் மனம் அமைதியடைந்தது, அவனுடைய பேச்சு புண்ணுக்கு புனுகு பூசியது போல் இருந்தது. மனம் சற்று தெளிவடைய அவனிடம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

______________________________

 

“நம்ம பொண்ணு மனசுலயும் ஒருத்தர் இருக்கார்ன்னு நான் நினைக்கிறன். என்றார் அவர். “என்னம்மா சொல்ற, அப்படி இருந்தா நம்ம பொண்ணு நம்மகிட்ட சொல்லியிருப்பாளே என்றார்.

 

“இப்படித்தான் நம்ம பையன் சொல்லியிருப்பான்னு நினைச்சோம், ஆனா என்ன ஆச்சு என்றார் குழலி. “நம்ம பொண்ணு நம்மகிட்ட மறைச்சு இருப்பான்னு எனக்கு தோணல, அப்படி இருந்தா இப்ப நான் கேட்டப்ப அவ மறுத்து சொல்லியிருக்கலாமே என்றார் நடராஜன். “நாம நம்ம பசங்கள சரியாவே புரிஞ்சுக்கலங்க, அவ உங்களுக்காக தான் சம்மதம் சொல்லியிருக்கா என்றார் அவர்.

 

“எதை வைச்சு அப்படி சொல்லற என்றார் அவர். நீங்க கல்யாணம் விஷயம் பேசும்போது உள்ள வேலையா இருந்தவ மூச்சிரைக்க வெளியே ஓடி வந்தா, நீங்க அருண் தம்பி கிட்ட பேசும் போது அவ அந்த தம்பிகிட்ட கண்ணால எதோ ஜாடை செய்ய அந்த தம்பி நான் பார்த்துக்கறேன்னு பதில் பார்வை பார்த்துச்சு, நான் நினைக்கிறது சரியா இருந்தா அருண் தம்பிக்கு நம்ம பொண்ணோட காதல் விவகாரம் தெரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன். நம்ம பொண்ணு அந்த சித்தார்த் தம்பிய தான் விரும்பறான்னு தோணுது.

 

“நான் தான் உங்களுக்கு உடம்பு சரியில்லாத மனநிலைய வைச்சு ஏதோ ஞாபகத்துல அந்த சித்தார்த் தம்பிகிட்ட நம்ம பொண்ணு கல்யாணம் பத்தி பேசினேன். இப்போ யோசிச்சு பார்த்தா தான் எனக்கு புரியுது. அந்த தம்பி கடைசியா சொன்னா வார்த்தைகள்.

 

“நீங்க வீட்டுக்கு போங்க உங்க பொண்ணு சம்மதிப்பாங்கன்னு அந்த சித்தார்த் தம்பி சொல்லுச்சு. அது இப்போ எனக்கு உறுத்தலா இருக்கு, நம்ம பொண்ணு சம்மதிச்சது எல்லாம் சேர்த்து பார்த்தா ஏதோ ஒரு குழப்பம். ஆனா ஒண்ணும் மட்டும் நிச்சயம் நம்ம பொண்ணு மனசுல காதல் இருக்கு, அந்த சித்தார்த் தம்பி மேல.

 

“இந்த கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே நம்ம பொண்ணு முகமே சரியில்லை, நீங்க சொன்ன மாதிரி அவ மனசுல யாராச்சும் இருந்தா அவளே சொல்லியிருப்பான்னு நானும் மெத்தனமா இருந்துட்டேன்.

 

“அருண் தம்பி வீட்டில இருந்து வந்து பேசும் போது கூட நம்ம பொண்ணு எதுவும் மறுத்து பேசாம இருந்ததுனால நான் நம்ம பொண்ணு மனசுல அப்படி ஒரு எண்ணம் எதுவும் இல்லையோன்னு நினைச்சுட்டேன். நாம நம்ம பசங்க மனச புரிஞ்சுக்காம நாம இருந்துட்டோங்க. பெத்த தாயா நானும் அவங்க கிட்ட பேசியிருக்கனும்.

 

“இன்னொரு விஷயம் சொல்ல மறந்துடேன்ங்க, சித்தார்த் தம்பி பேசும் போதெல்லாம் நம்ம பொண்ணோட முகம் பிரகாசமாக இருக்கறத நான் பார்த்துருக்கேன் என்றார் குழலி.

 

“என்னம்மா குழலி இவ்வளவு விஷயம் நடந்து இருக்கு, இதை நீ முதல்லயே என்கிட்டே சொல்லி இருக்காலாமே, எப்படியோ இப்பவாச்சும் சொன்னியே. நம்ம பையன் கல்யாணம் அவன் விருப்பப்படி அவனே நடத்திகிட்டான். நம்ம பொண்ணு கல்யாணம் அவ விருப்பப்படி நாம ஜாம் ஜாம்ன்னு நடத்திடுவோம். அந்த பையனோட வீடு எங்க இருக்குன்னு சொல்லு, நாளைக்கு முதல் வேலையா நீயும் நானுமா போய் அந்த பையன் வீட்டில பேசிவிட்டு வந்துடுவோம்.

 

“எனக்கு இப்ப தான் ரொம்ப நிம்மதியா, சந்தோசமா இருக்கு. என் பொண்ணு என் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து நான் பார்க்கற மாப்பிள்ளைக்கு சரின்னு சொன்னா, நான் அந்த மாப்பிள்ளைய அவ மனசுப்படி அமைச்சுகுடுக்க போறேன். எனக்கு நிறைவா இருக்கு குழலி, நான் தூங்கறேன்மா, நாளைக்கு நிறைய வேலை இருக்கு, நம்ம பொண்ணு கல்யாணம் விஷயம் பேசப்போகணும் என்று அளவில்லாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

அன்று இரவு நிம்மதியாக தூங்கினார், ஆனால் மறுநாள் காலையில் தான் தெரிந்தது அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார் என்று. காலையில் வழக்கம் போல் எழுந்த குழலி அருகில் இருந்த கணவரை பார்த்தார். எதுவோ தோன்ற அவரை தொட்டால் உடல் சில்லிட்டு போய் இருந்தது. இரண்டு முறை அவரை உலுக்கி பார்த்துவிட்டு மகளின் அறை கதவை தட்டினார்.

 

தூக்க கலக்கத்துடன் வந்து கதவை திறந்த மகளை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றார். கணவரின் கோலத்தை காட்டினார். தாயின் செயலில் எதுவோ உறுத்த தந்தையின் அருகே சென்று “அப்பா, அப்பா என்று தட்டி எழுப்பினாள். எந்த உணர்வும் இன்றி அவர் படுத்திருந்தது எதுவோ செய்தது. உடலும் சில்லிட்டு இருந்தது. இரண்டு வீடு தள்ளி ஒரு டாக்டர் வீடு இருந்தது. உடையை மாற்றிக் கொண்டு, அவரை சென்று அழைத்து வந்தாள்.

 

அவர் வந்து பார்த்துவிட்டு “உயிர் பிரிந்து பல மணி நேரம் ஆகிறது என்று இடியை இறக்கினார். தாயின் கண்ணீரை கண்டு சமாதானப் படுத்த முயன்று, தோற்று போய் தானும் கதறித் துடித்தாள். சத்தம் கேட்டு பர்வதம் மாமி ஓடிவர பின்னேயே அவர் மருமகளும் ஓடி வந்தார். நிலைமையை பார்த்ததும் வெண்பாவிற்கு ஆறுதல் கூறி அவளிடம் அடுத்து நடக்க வேண்டியதை பார்க்கச் சொன்னார்கள்.

 

காவியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்று மாலையே வந்து விடுவதாகக் கூறியவன், மனைவியையும் அழைத்துக் கொண்டு அடுத்து கிடைத்த விமானத்தில் ஏறி சென்னை வந்து சேர்ந்தான். அருண், இனியா மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவருமே வந்துவிட்டனர். காவியன் வந்ததும் மளமளவென வேலைகள் நடந்தது.

 

அருண் அனைத்தும் தயாராக வைத்திருந்தான். காவியன் வந்ததும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதான். தன்னால் தான் அவருக்கு இந்த நிலை என்று நினைத்தவனுக்கு துக்கம் பீறிட்டு எழுந்தது. அவரை நல்லபடியாக அடக்கம் செய்தனர். காவியன் அருணுக்கு நன்றிகள் பல உரைத்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். தன்னால் தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று கூறி வருத்தப்பட்டான். தன் தங்கைக்கு ஒரு நல்வாழ்வு கொடுக்குமாறு கேட்டான்.

 

அருண், காவியனிடம் அவன் தந்தையிடம் என்ன கூறினானோ அதே காரணம்  கூறி மறுத்துவிட்டான். வெண்பாவிற்கு இதை விட சிறந்த வாழ்க்கை இருக்கிறது. ஆதலால் தான் இவ்வாறு சோதனைகள் நடக்கின்றன எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

 

கிளம்பும் முன் வெண்பாவை தனியே அழைத்தான். “வெண்பா நான் கேட்கிறேன்னு தவறாக நினைக்காதீர்கள். சித்தார்த் ஏன் உங்கள் தந்தையின் இழப்பிற்கு வரவில்லை. உங்களுக்குள் ஏதாவது பிரச்சினையா, நான் வேண்டுமானால் போய் பேசிப் பார்க்கவா என்றான்.

 

“இல்லை வேண்டாம் அருண், நான் அவருக்கு முயற்சி செய்து பார்த்தேன், அந்த எண்ணை தொடர்பு கொள்ளவே முடியவில்லை, கடைசியாக அன்று என் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது எனக்கு அவர் போன் செய்திருக்கிறார். அன்று போன் சார்ஜ் போட்டு நான் வீட்டில் வைத்துவிட்டு போய்விட்டேன். அதற்கு மறுநாளில் இருந்து தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை என்றாள்.

 

“மேலும் எங்களுக்குள் நடந்தவைகளை  பற்றி பேச என் மனதிலும் உடம்பிலும் எனக்கு தெம்பில்லை. இதை பற்றி நான் மேலே எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறி வெளியே சென்றுவிட்டாள். அடுத்து வந்த நாட்களில் குடும்பம் கொஞ்ச கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

 

அப்போது தான் அது நடந்தது, வெண்பாவின் தந்தை பணியில் இருக்கும் போதே இறந்ததால் அவருடைய பணி குடும்ப உறுப்பினரில் ஒருவருக்கு என்றானது, அது யார் என்பதே அங்கு கேள்வியாக இருந்தது.

 

காவியன் உறுதியாக அது தனக்கு வேண்டாம் என்றும் தான் மீண்டும் வெளிநாடு செல்லப் போவதாகவும் கூறினான். குழலிக்கு என்ன செய்வதென புரியாத நிலை, வெண்பாவிற்கோ அந்த வேலைக்கு அண்ணன் செல்ல வேண்டுமென விரும்பினாள்.

 

அப்போது தான் காவியன் மனைவி ரோஸலின் மார்க்கரெட் பேசினாள். “என்னை தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது வெண்பா, மாமாவின் வேலை உனக்கு கிடைப்பது தான் முறை. அத்தையும் அவரும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இவ்வளவு நாளும் நீ அவருடனே இருந்திருக்கிறாய், இந்த வேலையும் உனக்கு கிடைப்பது தான் முறை, நீ தயவு செய்து இந்த வேலையை ஏற்றுக்கொள் என்றாள்.

 

வெண்பாவை தவிர அனைவர் முகமும் மலர்ந்தது. வெளிநாட்டில் வளர்ந்த கிருத்துவ தமிழ் பெண்ணான தன் மருமகளை நினைத்து குழலி பூரிப்படைந்தார். “அதுவும் சரி தான் வெண்பா அந்த வேலைக்கு நீயே போம்மா என்றான் காவியன்.

 

வெண்பாவிற்கு அதில் துளியும் இஷ்டமில்லை. தன் அண்ணன் தனக்காக விட்டுக் கொடுக்கிறான் என்று நினைத்தாள். மூவரும் சேர்ந்து வற்புறுத்தவே அவள் சரியென்று தலையாட்டினாள். காவியன் வேலையை தங்கைக்கு வாங்கி கொடுத்துவிட்டான்.

 

அடுத்த வேலையாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினான். வெண்பா அதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். “என்னம்மா அவ இப்படி சொல்றா, நீங்களும் எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க என்று சங்கடப்பட்டான். “குழலி அவனை நோக்கினாள், பின் “உன் வாழ்க்கையை நீ தானே முடிவு பண்ண, இது அவ வாழ்க்கை அவளே முடிவு பண்ணட்டும் என்று கூறிவிட்டார்.

 

காவியன் அடிபட்ட வலியை உணர்ந்தான். உடனே மகனை கனிவுடன் நோக்கி, “உன்னை காயப்படுத்த நான் அவ்வாறு கூறவில்லை, உண்மையை தான் கூறினேன். அவளை கேட்காமல் நாங்கள் அந்த திருமணத்திற்கு சம்மதம் கூறியது தவறோ என்று இன்று வரை நான் கவலைப்படாத நாளே இல்லை. இனியும் அப்படியிருக்க என்னால் முடியாது. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில், அவர்களே அவர்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது தான் முறை என்று கூறிவிட்டார்.

 

“அம்மா, நான் ஒண்ணு கேட்டா, தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்றான். “வெண்பா யாரையாச்சும் விரும்பறாளா என்றான். “இருக்கலாம் என்று கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அவர். அந்த வாரயிறுதில் காவியனும் அவன் மனைவியும் ஊருக்குச் சென்று விட்டனர். வெண்பாவுக்கு வேலை காஞ்சிபுரத்தில் கிடைத்தது. வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இருவரும் அங்கு உள்ள அரசாங்க குடியிருப்பில் சென்று தங்கிக் கொண்டனர்.

 

இப்படியே நாட்கள் மெதுவாக நகர் ஆரம்பித்தன. காவியன் ஊருக்கு வரும்போதெல்லாம் வெண்பாவின் திருமண பேச்செடுப்பான். அவளுக்கு வயதாகிக் கொண்டே போவதாகவும், தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என்று கூறி வருத்தப்பட்டான். அவனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. பெரியவன் நவீனுக்கு மூன்று வயதாகிறது, சின்னவன் ராகுலுக்கு ஆறு மாதம் ஆகிறது.

காவியன் ஊருக்கு வந்தால் குழலி அளவில்லாத சந்தோசம் அடைவார். பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதிலேயே நேரம் சரியாக இருக்கும் அவருக்கு. காவியன் ஊருக்கு கிளம்பும் முன் தன் தாயையும் தன்னுடன் வந்து தங்கி போகுமாறு கேட்டான். வெண்பாவும் போய் வருமாறு கூறினாள். இந்த விஷயத்தில் ரோஸ், குழலி இருவரும் பிடிவாதமாக இருந்தனர்.

 

ரோஸ் வெண்பாவிற்கு ஒரு நல்லது நடக்கும் வரை அத்தை இங்கு இருப்பது தான் முறை, நாமும் நம் வேலைகளை சிக்கிரம் முடித்துக் கொண்டு விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று காவியனிடம் கூறினாள். குழலியும் வெண்பாவை முன்னிட்டு வரமுடியாதென்று கூறிவிட்டார். காவியன் தான் தாயை தனியே அழைத்து பேசினான்.

 

“அம்மா நான் திரும்பவும் கேட்குறேன்னு நினைக்காதீங்க, வெண்பா யாரையாச்சும் விரும்பறாளா, சொல்லுங்க நாம போய் பேசி முடிச்சுடலாம் என்றான்.

 

“உன் தங்கை எதையும் என்னிடம் கூற மாட்டேன் என்கிறாளே, அவளுக்குள்ளே போட்டு புழுங்குகிறாள். நீ கவலைப்படாதே நிம்மதியாக ஊருக்கு போய் வா, நிச்சயமாக உன் தங்கையை பற்றிய நல்ல செய்தியை நான் விரைவில் உனக்கு சொல்கிறேன் என்று கூறி முடித்துவிட்டார்.

 

சில நாட்களாகவே குழலிக்கு அடிக்கடி உடல் நலம் குன்றி போனது, கவலையடைந்த வெண்பாவிடம் மருத்துவர் அவரை ஒரு நல்ல சுத்தமான இயற்கை காற்றும் இனிமையான சூழ்நிலையும் கொண்ட இடத்திற்கு அழைத்து செல்லச் சொன்னார், குறிப்பாக மலை பிரதேசம் நல்ல இயற்கை சூழ்ந்த இடம் அதனால் அவரை அங்கு அழைத்துச் செல்லுங்கள் அப்போது தான் அவர் நோய் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகும் என்று கூறினார். அதன்பின் தான்  வெண்பா வால்பாறைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தாள்.

 

அலுவலகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று பல ஊர்களின் பெயர்களை சொல்ல அவள் வால்பாறைக்கு தான் மாற்றல் வேண்டும் என்று கேட்டு பெற்றாள். அவனை நேரில் பார்க்கவேண்டும், அவனை பார்த்து நன்றாக நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

 

அவனை என்றாவது ஒரு நாள் பார்த்துவிட மாட்டோமா என்று நினைத்தவள், அதன் முதல் முயற்சியாக வால்பாறை மாற்றல் பெற்றாள். ஆனால் அப்படி கேட்டது தவறோ என்று நினைக்க ஆரம்பித்தாள், அவனை கண்டதும் அவள் மனம் தவிக்க ஆரம்பித்தது. நிலை கொள்ளாமல் அலைந்த மனதை அடக்க அவள் படாதபாடு பட்டாள்.

 

இது தான் விதி என்பதா, ஊருக்கு சென்ற முதல் நாளே அவன் கண்ணில் பட்டாளே, அதுவும் அவனிடமே உதவி கேட்க வேறு நேர்ந்தது விதியின் கொடுமை, அதற்கு மேலும் அவன் பேசிய பேச்சுகளை பொறுத்து கொண்டது அதை விட கொடுமை. தான் ஏன் அவன் பேச்சுகளை பொறுத்துக் கொண்டோம், என்று எண்ணிப் பார்த்தவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.

 

முன்பு பார்த்ததைவிட அவன் முகத்தில் தற்போது ஒரு கடினம் தெரிந்தது. இனி அவனை நேரில் பார்த்தால் அவனிடம் நன்றாக கேட்க வேண்டும், அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கக்கூடாது என்று எண்ணினாள். தூங்காமலே இருவர் இரவும் விடிந்தது, ஒரு நல்ல உதயத்திற்காக.

______________________________

 

வெண்பா, நரசிம்மன், கல்யாணியிடம் சென்று அந்து மதியம் கோவைக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு போவதாகவும், அம்மாவை அழைத்துக் கொண்டு மீண்டும் நாளை காலை சென்னையில் இருந்து ரயிலில் கிளம்பி கோவை வந்து அங்கிருந்து வால்பாறை வருவதாவும் கூறி கிளம்பினாள். கல்யாணி அவளிடம் “ஏன்மா, இப்படி உடம்பை போட்டு அலட்டிக் கொள்கிறாய். நீ வரும் போதே கையோடவே அவங்க கூட்டி வந்து இருக்கலாமே என்றார்.

 

“இல்லம்மா, அம்மா உடம்பு முடியாதவங்க, நானும் கூட சேர்ந்து வேலை செய்கிறேன் என்று உடம்பை கெடுத்துக் கொள்வார்கள். அதனால் தான் அவர்களை சென்னையில் உள்ள எங்க வீட்டிற்கு அனுப்பிவிட்டு, நான் காஞ்சிபுரத்தில் வீட்டில் காலி செய்து இங்கு வந்தேன். சென்னையில் உள்ள எங்கள் வீட்டில் பர்வதம் மாமியின் துணையுடன் தான் அவரை விட்டு வந்திருக்கிறேன் என்று கூறி கிளம்பினாள்.

 

நரசிம்மன் வந்து அவளை ரயிலேற்றி விட்டார். காரை எடுத்துக் கொண்டு மறுநாள் வந்து அழைத்து செல்வதக்கக் கூறிவிட்டு சென்றார். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம் என்று அவள் கூற அவர் கேட்க மறுத்துவிட்டார். சென்னையை அடையும் போது இரவு பத்து மணியாகிவிட்டது. வீட்டிற்கு வந்து அன்னைக்கு தேவையானதை எடுத்து பேட்டியில் அடுக்கி முடித்தாள்.

 

பர்வதம் மாமியிடம் பேசிக் கொண்டிருந்ததில் குழலி சற்று தெளிவானது போல் உணர்ந்தாள். மாமியிடம் விடைபெற்று இரவு உறங்க சென்றனர். அவர்கள் வந்து தங்கி போவதற்காக ஒரு அறை மட்டும் காலியாக விட்டு வைத்திருந்தனர். அதிலேயே தேவையில்லாத சாமான்களை போட்டு பூட்டிவிட்டு மாமியிடம் சென்று கூறிவிட்டு ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.

 

வெண்பா வால்பாறைக்கு செல்லலாம் என்று கூறியதில் இருந்தே குழலிக்கு மனம் கொள்ளவில்லை. காவியன் இந்த முறை வந்து போனதில் இருந்தே அவர் மனம்  புழுவாகத் துடித்தது. மகளே அவள் வாழ்க்கையில் முடிவெடுக்கட்டும் என்று அவர் கூறியது கூட அவள் தன் காதலை அப்போதாவது மனம் விட்டு கூறுவாள் என்று தான்.

 

அவள் சித்தார்த்தை தான் விரும்புகிறாள் என்று மனம் கூறியது. காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு முறை சென்னை வந்திருக்கும் போது அவர் சித்தார்த்தை தேடி அவன் வீட்டிற்கு போனார். அங்கு தான் பக்கத்தில் அவன் வீடு இருப்பதாக வெண்பா சுட்டிக் காட்டிய வீட்டிற்கு சென்று அவனை பற்றி விசாரித்தாள்.

 

அங்கு வினோத் தான் இருந்தான், அவன் தான் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்று கூறியிருந்தான். சித்தார்த் வேலையை விட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டான் என்று கூறினான். குழலியின் மனம் குற்றஉணர்வில் தவித்தது. தன்னால் தான் இது நிகழந்து இருக்கும் என்று அவர் மனம் பேதலித்தது.

 

காஞ்சிபுரத்தில் அதிக நாட்கள் தங்கிவிட சித்தார்த்தை பற்றி சரிவர அறிய முடியாமல் போனது அவருக்கு. கணவரின் இழப்பின் வேதனையில் அவரும் உழன்றிருந்ததால் அவரும் அது பற்றி மேலே நினைக்கவில்லை. காவியன் கடைசியாக வந்தபோது மிகவும் மனம் வருந்தி பேசிவிட்டு போயிருந்தபடியால் குழலி இனியும் தாமதிக்க வேண்டாம் என்ற நினைவில், ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

 

அப்போது தான் அவருக்கு சித்தார்த்தின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்ற ஞாபகம் வந்தது. அவனின் நண்பன் கூட வால்பாறையில் வங்கி மேலதிகாரியாக பணிபுரிவதாக அவன் கூறியது நினைவு வந்தது.

 

உடனே அவர் ஒரு திட்டம் தீட்டி அவர்கள் தங்கியிருந்த  அந்த குடியிருப்பில் அவருக்கு நன்கு தெரிந்த ஒரு மருத்துவரின் உதவியுடன்  அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போவதாகவும், இயற்கை சுழல் மாறினால் அவர் குணமாவர் என்று கூறச் செய்தார்.

 

அதற்கு கைமேல் பலன் இருந்தது. எங்கே மகள் வேறு ஒரு ஊருக்கு மாற்றல் வங்கிவிடுவாளோ என்று பயந்தாலும், அவள் வால்பாறை மாற்றல் என்று சொன்னதும் தான் அவர் மனம் சரியாகியது.

 

அத்தியாயம் –20

 

ரயில் கோயம்புத்தூர் நிலையத்தை வந்தடைந்தது. குழலியை கூட்டிக்கொண்டு ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தாள் வெண்பா. கல்யாணி ஓடி வந்தார், “வாங்கம்மா, நான் கல்யாணி உங்க மக என்னைப் பற்றி சொல்லியிருப்பாள் என்று நினைக்கிறேன் என்றார்.

 

“வணக்கம்மா, நீங்க மட்டும் தான் வந்தீங்களா, தம்பி வரலையா. வெண்பா உங்களை பற்றி கூறினாள், ரொம்ப சந்தோசம் நீங்க பெரிய உதவி செஞ்சு இருக்கீங்க என்றார் குழலி. “சரி வாங்கம்மா, அவர் காரோட வெளியே நிற்கிறார் அங்கு போகலாம் என்றார் கல்யாணி.

 

காரில் ஏறி பயணம் செய்தனர். போகும் வழியில் ஒரு ஓட்டலில் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடங்கினர். வால்பாறையை அடையும் போது இரவாகிவிட்டது. நரசிம்மன் வெளியே சென்று அனைவருக்கும் உணவு வாங்கி வந்தார். சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்று படுத்துவிட்டனர். பயணக் களைப்பில் விடிந்தது கூட தெரியாமல் தாயும், மகளும் உறங்கினர்.

 

குழலி தான் எழுந்து குளித்துவிட்டு வெண்பாவிற்கு காபி போட்டு வைத்துவிட்டு அவளை எழுப்பினார். பதறி எழுந்தவள் காலை கடனை முடித்துவிட்டு வந்து காபி அருந்தினாள். கல்யாணி சூடாக இட்லி அவித்து சாம்பார், சட்னி கொண்டு வந்திருந்தார். “நீங்க ஏன் பாவம் சிரமப்படுறீங்க, நான் செய்துக்க மாட்டேனா என்றார் குழலி.

 

“நீங்க என்னை கல்யாணின்னே கூப்பிடுங்க, நீங்க, வாங்கலாம் வேணாம். அப்புறம் இது எனக்கு சிரமமேயில்லை. உங்களுக்கு கொஞ்சம் பழகட்டும் அப்புறம் நீங்களே செய்ங்க என்றாள். நரசிம்மனும் வந்துவிட அவர்கள் பேசியபடியே சாப்பிட்டு வந்தனர். இதற்குள் நரசிம்மன் குழலிக்கு தம்பியாகி போனார். கல்யாணி குழலியை அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தார்.

 

வெண்பாவிற்கு விசித்திரமாக இருந்தது, அவள் தாயை பார்த்தால் உடல்நிலை சரியில்லாதவர் போலவே தோன்றவில்லை. ஒரு நாளில் அவர் சரியாகி போயிருந்தது மனதுக்கு உற்சாகமாயிருந்தது. வெண்பா திங்கள் அன்று தான் வேலையில் சேர இருந்தாள். ஆதலால் வீட்டிற்கு தேவையானவற்றை அவளும் குழலியும் கல்யாணியும் சென்று வாங்கி வந்தனர்.

 

அன்று மாலை அவர்கள் பாலாஜி கோவிலுக்கு சென்றனர். சனிக்கிழமை ஆதலால் கூட்டமிருந்தது, வெண்பாவிற்கு எப்போதும் போல் அவள் உள்ளுணர்வு எச்சரிக்க யாரோ தன்னை பார்ப்பது போல் இருந்தது,

 

திரும்பி பார்த்தால் முகத்தில் ஒரு கடினத்துடனும் கோபத்துடனும் சித்தார்த் நின்றிருந்தான். அவன் கோப முகம் காண அவளுக்கு என்னவோ போல் இருந்தது, உடனே கிளம்பலாம் என்று கூற அவர்கள் கிளம்பினர்.

 

குழலி மகளின் பார்வை போன திக்கை யதேச்சையாக கவனித்தார். அங்கு சித்தார்த் நின்றிருந்தான், அவருக்கு மனதுக்குள் ஒரு நிம்மதி வந்தது, நினைத்த காரியம் ஈடேறும் என்ற நம்பிக்கை வந்திருந்தது. வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் வெண்பா எதுவும் பேசாமலே இருந்தாள். குழலி சூடாக தோசை வார்த்து அவளை சாப்பிட அழைத்தார். வேண்டாம் என்று கூறியவளை கண்டித்து இரண்டு தோசைகளை சாப்பிடச் செய்தார்.

 

அங்கு சித்தார்த் கோபத்தின் உச்சியில் இருந்தான். அவளை காணாமல் இந்த இரண்டு நாளும் அவன்பட்ட பாடு அவனுக்கே தெரியும். அவள் போகும் வழி எங்கும் தேடி பார்த்துவிட்டான், அவள் வீட்டின் வாசலிலேயே மாலை வரை காத்திருந்து பின் கிளம்பிச் சென்றான்.

 

தான் ஏன் இப்படி உணர்கிறோம், அவளுக்காக ஏன் காத்திருக்க வேண்டும், அவளை பார்க்காமல் தானே இத்தனை வருடங்கள் கடந்தது, இப்போது மட்டும் என்ன என்று அவன் மனம் கூறினாலும், அதையும் மீறி அவனுக்கு அவள் இல்லாத அந்த இரண்டு நாட்கள் மட்டுமே கண் முன் வந்து போனது. இன்று கோவிலில் அவளை பார்த்தபோது தான் அவன் நிம்மதியடைந்தான்.

 

ஆனாலும் அவளை நேருக்கு நேர் பார்த்த போது இரண்டு நாட்களாக அலை கழித்து விட்டாளே என்ற கோபம் மட்டுமே அதிகமாக இருந்தது அவன் முகத்தில். அதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே சற்று நேரத்தில் மீண்டும் அவளை காணோம், அவன் அவளை பார்த்த அந்த தருணம் அவளும் அவனை பார்த்துவிட்டாள் என்பதை உணர்ந்தான்.

 

மனதுக்குள் ஒரு இதம் பரவ ஒரு கணம் வேறு புறம் திரும்பியவன் மீண்டும் அவளை பார்ப்பதற்குள் அவள் புயல் போல் கிளம்பி சென்றுவிட்டாள் என்று அவனுக்கு மேலும் கோபமாக இருந்தது.

 

அவளின் மேல் இருந்த கோபத்தை காட்டமுடியாமல் என்றும் இல்லாத திருநாளாய் தாயிடமே அன்று கோபத்தை காட்டிவிட்டான். “என்னாச்சு இந்த புள்ளைக்கு இன்னைக்கு இம்புட்டு கோபமா பேசுது, என்னங்க நம்ம புள்ள ஏன் இப்படி பேசுது என்றார் சரளா.

 

“அவன் ஏதோ வேலை பளுவுல இருப்பான் சரளா, நீ யாருடி இவ இதுக்கெல்லாம் போய் கவலைப்பட்டுகிட்டு என்றார் சுந்தரலிங்கம். “இல்லைங்க புள்ள ரெண்டு மூணு நாளாகவே ஒரு மாதிரியா தான் இருக்கான், நீங்க அப்புறமா என்னன்னு கொஞ்சம் விசாரிங்க என்றார்.

 

“சரி பார்க்கலாம் என்று ஆமோதித்தார் அவர். ‘என்ன திமிர் அவளுக்கு, என்ன பார்த்ததும் பொசுக்குனு கிளம்பி போய்ட்டா, இதுக்கு முன்ன அவ என்னை பார்த்ததில்லையா என்று பொருமினான் அவன். ‘உனக்கு இவ்வளவு இருந்தா எனக்கு மட்டும் என்ன சும்மா வா என்று நினைத்தவன் மறுநாள் அவளை பார்க்க செல்லவேயில்லை.

அவளை ஒரு வார்த்தை கேட்காமல் அவனால் இருக்கவும் முடியவில்லை. அடுத்த நாள் காலை எழுந்ததும் அவளை பார்க்கச் சென்றான். அவனால் அவளிடம் தனித்து பேசமுடியவில்லை. அவள் அலுவலகத்திற்கு நரசிம்மனுடன் சென்று அவருடனே திரும்பி வந்தாள். அவன் எதிர்பார்த்த அந்த தருணம் ஒரு வாரத்திற்கு பிறகு அன்று மாலை தான் அவனுக்கு கிடைத்தது.

 

நரசிம்மன் ஒரு வேலையாக வெளியே சென்றுவிட்டார். வெண்பா தனியே கிளம்பி வெளியே வந்தாள். அங்கிருந்து சில நிமிட நடையில் அவள் வீட்டிற்கு செல்லலாம் என்பதால் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அப்போது தான் அவன் அவளை வழிமறித்தான். அவள் சென்ற பாதையில் சற்று ஆள் அரவமற்றிருந்தது. “நில் வெண்பா உன்னிடம் பேச வேண்டும் என்றான் அவன்.

 

திரும்பி பார்த்தவளுக்கு தூக்கிவாரி போட்டது அவனை பார்த்து “என்ன விஷயம், சொல்லுங்க என்றாள்.  “ரெண்டு நாள் முன்ன எங்க போன, புதுசா ஒருத்தனை பார்க்க போய்டியா, ஆள் எப்படி நல்ல வசதியா என்று அவன் அவளிடம் சீறினான். அவள் காதுகளை பொத்திக்கொண்டான். “ஏன் இப்படி பேசுகிறீர்கள், இப்படி பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது என்றாள் அவள்.

 

“வேற எப்படி பேசணும் நினைக்கிற, நான் சொன்னது தானே சரி என்றான் அவன் மேலும் ஆவேசமாக. அவளை சீண்டினால் மட்டுமே அவள் பதில் சொல்லுவாள் என்று நினைத்து அவ சற்று ஆவேசமாக பேச அதே கோபம் அவளுக்கும் எழுந்தது.

 

அந்த நேரத்தில் அவளும் அவனிடம் பதிலுக்கு “ஆமாம், அப்படி தான், ஒரு பணக்காரனாக தேடிச் சென்றேன், போதுமா என்று முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் இடியொன்று விழுந்தது. கன்னம் எரிந்தது, சிறிது நேரம் அவள் புலன்கள் ஏதும் செயல்படாமல் இருந்தது போல் உணர்ந்தாள்.

 

அதிர்ந்து போய் நின்றவளை அவன் இழுத்து காருக்குள் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தான். அவளை அடித்துவிட்டோமே என்ற குற்றஉணர்வில் அவளை அணைத்து ஆறுதல் படுத்த முயன்றவனாக தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.

 

தன் கட்டுபாட்டை இழந்தவனாக அவளை அணைத்து திடிரென்று முத்த மழை பொழிந்தான். அவள் ஒருவாறு அப்போது தான் சுயஉணர்வுக்கு வந்தாள். அவனை பிடித்து தள்ளிவிட்டாள், கார் கதவை திறந்து வேகமாக வெளியேறி சென்றுவிட்டாள்.

 

பின்னேயே தொடர்ந்தவளை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்த்தாள், “இனிமே என்கிட்ட பேச முயற்சி பண்ணாதீங்க. இவ்வளவு நாளா எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க, போதும் இனி இப்படி செய்தீர்கள் நான்… நான் செத்துவிடுவேன் என்று கூறி விரைந்து சென்றுவிட்டாள். சித்தார்த் சிலையென சமைந்தான்.

சுதாரித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்று விட்டாளாவென்று அவளை பின் தொடர்ந்தான். வெண்பா வீட்டிற்குள் நுழைந்தாள், அவளை பார்த்ததும் குழலி பதறிப் போனார். “என்னம்மா கன்னம் வீங்கி இருக்கு, என்னடா ஆச்சு என்றார் கவலையாக.

 

“ஒண்ணும் இல்லம்மா, வரும் போது இருட்டில் கவனிக்காம வந்துட்டேன், குளவி கொட்டிருசும்மா, ஒரே வலியா இருக்கு என்றாள். குளவி கொட்டுவதற்கும், விரல் பதிவதற்கும் அடையாளம் தெரியாதா அவருக்கு, இருந்தும்  அவர் ஏதும் கூறவில்லை. இவர்களுக்குள் ஏதோ நடந்து இருக்கிறது, அதை சரி செய்து இவர்களை சேர்த்து வைக்க வேண்டும். ‘முருகா, நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார் அவர்.

 

வெண்பாவிற்கு அன்று இரவு உறக்கம் பிடிக்கவில்லை. சித்தார்த்தின் நிலையோ அதற்கு மேல் இருந்தது. வீட்டிற்கு வந்ததும் கதவை அடைத்துக் கொண்டு விட்டவன், சாப்பாடு கூட வேண்டாம் என்று கூறிவிட்டான்.

 

அவனுக்கு யோசிக்க வேண்டி இருந்தது, ஸ்ரீயிடம் கேட்க அவனுக்கு சங்கடமாக இருந்தது, அவன் அப்படி செய்தது தவறு என்று அவனுக்கு தெரியும் ஸ்ரீயிடம் எப்படி கேட்பது, மேலும் இது தனக்கும் அவளுக்குமான அந்தரங்கம் என்று நினைத்தான் அவன்.

 

அவன் அவளை இரண்டு நாளாக பார்க்காததில் இருந்த கோபத்தில் அவளை ஏதேதோ பேசிவிட்டான். அவன் பேசியது தவறு என்று அவனுக்கு தெரியும் அவளை சீண்டினால் தான் அவள் எங்கு சென்றாள் என்று கூறுவாள் என்று நினைத்தவன், அவளின் பதிலில் கொதித்து போனவனாக அவளை ஓங்கி அறைந்துவிட்டான். ஆனால் அவளை காயப்படுத்த வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.

 

அவள் கடைசியில் சொல்லிய வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் என்று வருத்தினான். அவளை பார்த்ததில் இருந்து அவன் உணர்வுகள் அவனை கொன்றுக் கொண்டிருந்தது. நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான், தனக்காகவே அவள் காத்திருப்பதும் அவனுக்கு புரிந்தது. அவள் அவனை பற்றி தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும், இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவேண்டி இருந்தது. அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

 

ஒரு வேகத்தில் அறைந்தவன், அது தாளமாட்டாமல் அவளை அணைத்து முத்தமிட்டு விட்டான். அவளால் அவன் மனஉணர்வுகள் அலை கடலென போங்க ஆரம்பித்தது. அவளை அணைத்தது மட்டுமே தனக்கு எந்த அளவிற்கு மனநிம்மதி கொடுக்கிறது என்று உணர்ந்தான்.

 

காதலில் தோற்றுவிடுவோமோ என்று பயந்தவன், அப்படி ஏதும் நிகழாமலேயே அவளை விட்டு ஒதுங்கியவன், இன்று தான் அதை உணர்ந்தான். அவன் வாழ்க்கையில் எவ்வளவோ இருந்தும் ஏதோ ஒரு வெறுமை அவனுள் இருந்தது, இதுவரை அவன் காதலை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தவனுக்கு அவளை மீண்டும் பார்த்தபின் தான் உணர்ந்தான் அவனுக்கு எல்லாமும் அவள் என்று.

 

அவள் இல்லாமல் அவனால் வாழ முடியும் ஆனால் அதில் ஒரு உயிர்ப்பு இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். யோசித்து யோசித்து அவனுக்கு தலை கனத்தது. ஒன்று மட்டும் புரிந்தது அவனும் சரி அவளும் சரி ஒருவரையொருவர் மறக்காமல் இருப்பது மட்டும் நிஜம். ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும் உண்மை.

 

அங்கு வெண்பாவின் மனநிலையும் அவன் மனநிலையை ஒத்திருந்தது. அவன் அடித்ததையும் மீறி அவன் கைகளுக்குள் அவள் அடங்கியிருந்ததை நினைக்க நினைக்க அவளால் நம்ப முடியவில்லை, அடித்த இடத்தில் அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் இருப்பது போல் தோன்ற லேசாக கன்னத்தை வருடினாள். தன்னையே மறந்து நின்றவள் சில கணங்களில் சுயஉணர்வுக்கு வந்தாள்.

 

அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, அது அவன் இன்னும் அவளை மறக்கவில்லை என்பது. அவளை தவிர வேறு யாரையும் அவன் நினைக்ககூட மாட்டான் என்பதும் உணர்ந்தாள். அது போல் அவளும் அவனை இன்னும் அடியோடு மறக்கவில்லை என்பதும் புரிந்தது. அவன் இதுபற்றி அவளிடம் நிச்சயமாக வந்து பேசுவான் என்று அவன் உள்மனம் கூறியது. அப்படி மட்டும் கேட்டுவிட்டால் அவள் என்ன செய்வாள்.

 

அவளால் அவனை மறக்கமுடியவில்லை, அவளை தவிர வேறு ஒருவரையும் மணக்கவும் துணிவில்லை. அதுபோல் அவனை மணக்கவும் அவளால் முடியாது. அவள் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல உயிருக்கு உயிரான தந்தையின் உயிர் போனதற்கு அவளால் என்ன ஈடு செய்யமுடியும். அவள் தாயை பார்க்கும் போதெல்லாம் அந்த குற்ற உணர்வு அவளை கொன்று போட்டது.

 

சித்தார்த்துக்கு அவள் தான் தான் வாழ்வின் ஆதாரம் என்று புரிந்தது. வேரில்லாமல் செடி இல்லை என்பது போல், அவள் இல்லாமல் அவனுக்கு உயிர்ப்பில்லை என்பதை உணர்ந்தான். தன்னிலை மறந்து நின்றவளை அணைத்து முத்தமிட்டது அவள் கன்னம் வருடியது, எதுவும் மறக்க முடியவில்லை அவனால், ஒரு முடிவெடுத்தவனாக விடியலுக்காக காத்திருந்தான்.

 

அவளும் ஒரு முடிவுடனே விடியலை எதிர்பார்த்தாள். அழகான விடியல், ஈரமான காற்று, மரங்களின் பச்சை வாசனையை நாசியால் உணர முடிந்தது. வீட்டின் பின் அழகான சிற்றோடை இருந்தது. காலையில் எழுந்து இதை ரசிப்பது வெண்பாவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றானது. அந்த சிற்றோடையில் கால் நனைப்பதே ஒரு சுகம்.

 

எதையோ யோசனை செய்தவாறே அந்த சிற்றோடையில் காலாற நடந்தாள். நீரை பார்த்துக் கொண்டே வந்தவள் எதிரில் வந்தவனை பார்க்கவில்லை. திடிரென்று நிமிர்ந்தவள் அவன் மேல் மோதி நின்றாள், லேசாக தடுமாறியவளை தாங்கி நிறுத்தினான். ‘இவன் எப்படி இங்கு வந்தான் என்று யோசித்தாள் அவள்.

 

அவன் கைகள் வீங்கியிருந்த அவள் கன்னத்தை தடவியது. “என்னை மன்னிச்சுடு கண்மணி என்றான். அவன் கையை தட்டிவிட்டு பேசாமல் திரும்பி நடந்து செல்ல அவள் முயல அவள் எதிர்பாரா தருணத்தில் அவளை அவனோடு இறுக்கி அணைத்தவன் கன்னத்தில் அவன் அடித்த இடத்தில் மென்மையாக முத்தமிட்டான்.

 

தன்னை மறந்தவள் அவன் மார்பில் சாய, சட்டென்று விழுந்த சிறு சாரலில் தன்னிலை உணர்ந்து முதலில் சுதாரித்தவள், அவனிடம் இருந்து விலகி வேகமாக வீட்டிற்கு சென்றாள்.

 

_________________

 

“என்னப்பா தம்பி காலையிலேயே எங்க போய்ட்ட, உனக்கு காபி போட்டு கொண்டு வந்தேன், நீ உன் அறையில் இல்லையே கண்ணா என்றார் சரளா. “அதான் தம்பி வந்துடுச்சு இல்ல, நீ போய் சூடா காபி போட்டு கொண்டு வா, எதுக்கு சும்மா கேள்வி கேட்குறவ என்று முடித்துவிட்டார் சுந்தரம்.

 

அவனுக்கு கைபேசியில் ஏதோ அழைப்பு வர எடுத்து பேசியவன், கோபமாக பேசி வைத்துவிட்டான். “என்ன தம்பி என்னாச்சு என்றார் சரளா. “ஒண்ணுமில்லைமா, ஒரு முக்கியமான ஒப்பந்தம் நான் தான் கையெழுத்து போடணுமாம், நான் போய் அவங்களை பார்க்கணுமாம். மேனேஜர் சொல்றார், அதான் சத்தம் போட்டேன், மாமாவை போய் பார்க்க சொல்லி இருக்கேன், என்னால இப்ப எங்கேயும் போக முடியாது என்று கூறிவிட்டு உடைமாற்றிக் கொண்டு அலுவலகம் சென்று விட்டான்.

“என்னங்க தம்பி போக்குல ஏதோ வித்தியாசம் இருக்குங்க, என்னன்னு எனக்கு புரியல. ஆனா நிச்சயமா சொல்றேன், ஏதோ நடந்து இருக்கு. நான் வேணா ஸ்ரீ தம்பிகிட்ட பேசட்டுமா என்றார் சரளா.

 

“ஆமாம் சரளா எனக்கும் அப்படி தான் தோணுது. நீ ஸ்ரீகிட்ட பேசு, அந்த தம்பி வந்து நம்ம புள்ளகிட்ட பேசட்டும். நாம அப்புறம் என்ன, ஏதுன்னு விசாரிக்கலாம் என்றார் சுந்தரம். “ஹலோ சொல்லுங்கம்மா, எப்படி இருக்கீங்க, என்னம்மா என்ன விஷயம், காலையிலேயே போன் பண்ணி இருக்கீங்க என்றான் ஸ்ரீ எதிர்முனையில்.

 

“ஹலோ நாங்க நல்ல இருக்கோம்ப்பா, பிள்ளைங்க பொண்டாட்டி, அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க என்றார். மேலும் “எல்லாம் உன் நண்பன் பற்றி தான் பேசணும்பா, தம்பிகிட்ட ஏதோ மாறுதல் இருக்கு, வர வர சரியா சாப்பிட மாட்டேங்குது, கலகலப்பா பேசுறது இல்ல. எப்போ பார்த்தாலும் அவன் அறையிலேயே அடைஞ்சுக்குது.

 

“எனக்கும் ஒண்ணும் புரியல. எப்பவும் கோபப்படாதவன் என்னமோ தெரியல என்கிட்ட கூட கோபமா பேசிடுச்சு. ஆபீஸ்ல இருந்து தம்பிக்கு யாரோ போன் போட்டாங்க, தம்பி வந்து தான் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து போடணுமாம், ஆனா தம்பி அதுக்கு கூட போக மாட்டேங்குது. அவங்கள் திட்டி போனை வைச்சுட்டான்.

 

“ஆபீஸ் விஷயத்துல தம்பி எபோதும் சரியா நடந்துக்குவான். அது தான் அவனுக்கு எல்லாமும்ன்னு அடிக்கடி சொல்வான். ஆனா இன்னைக்கு இப்படி பேசுறது ஆச்சரியாம இருக்குப்பா. அவனுக்கு எதாச்சும் பிரச்சனையான்னு தெரியலப்பா, நீ தான் இங்க வந்த நாளாச்சே, பசங்கள கூட்டிட்டு வந்து உன் நண்பனையும் எங்களையும் ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போப்பா, புள்ளங்களையும் பார்த்து நாளாச்சு. நீயும் அவன்கிட்ட என்ன ஏதுன்னு விசாரிப்பா, எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குது என்றார் அவர்.

 

“சித்தார்த் அப்படி இருக்க மாட்டானே, என்கிட்டயும் எதுவும் பேசல, சரிம்மா நான் இன்னைக்கு புறப்பட்டு வரேன் என்று கூறி போனை அணைத்தான் ஸ்ரீ. சிறிது நேரத்தில் ஸ்ரீக்கு சித்தார்த்திடம் இருந்து அழைப்பு வந்தது. “ஹலோ சொல்லுடா எப்படி இருக்க, இப்ப தான் உன்னை பற்றி நினைத்தேன். நீ பேசுகிறாய் என்று சந்தோசமாக கூறினான் ஸ்ரீ.

 

“நான் நல்லயிருக்கேண்டா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்டா, நான் உன்னை பார்க்கணும். உடனே கிளம்பி வா என்றான் சித்தார்த். ‘என்னடா இது அம்மாவும், பிள்ளையும் தனித்தனியா போன் போட்டு வரச்சொல்றாங்க என்று மனதுக்குள் யோசித்தான். “சரி சித்தார்த் நான் உடனே கிளம்பி வரேன். அம்மாகூட என்னை வரச்சொல்லிட்டே இருக்காங்க, அதுனால நான் இன்னைக்கு கண்டிப்பா வரேன் என்றான்.

 

ஐஸ்வர்யாவையும் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு உடனே கிளம்பினான், வரும் வழியில் நளினியின் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு கிளம்பினான். ராகவன் தானும் வால்பாறை தான் கிளம்பிக் கொண்டிருப்பதாகக் கூறி அவனும் ஸ்ரீயுடன் கிளம்பினான். “என்னாச்சு அண்ணா, ஏதாச்சும் முக்கியாமான விஷயமா, நான் வேணா அவன்கிட்ட சொல்றேன் என்றான்.

 

“ஒரு ஜெர்மன் ஒப்பந்தம், சித்தார்த் அங்கே சென்று தான் ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும், இது அவனே நேரில்  சென்று பார்க்க வேண்டிய வேலை மேனேஜரிடம் போக முடியாது என்று சொல்லியிருக்கிறான். அது தான் நான் நேரில் சென்று பேசினால் அவனுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதுவரை அவன் இப்படி நடந்ததில்லை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றான் ராகவன்.

 

ராகவனே நேரில் வந்து பேசியதும் சித்தார்த்தால் மறுக்க முடியவில்லை, மேலும் அவன் ஊருக்கு போவதற்கு ஏற்கனவே அவனுக்கு டிக்கெட், விசா என்று அனைத்தும் தாயராக இருந்தது. வெண்பாவை பார்த்ததில் அவனுக்கு எதுவும் சுத்தமாக நினைவில்லை.

 

அவன் கிளம்ப வேண்டிய நாள் அன்று தான் என்பதால் ராகவனும் உடனே கிளம்பி வந்து அவனுக்கு எடுத்துக் கூறினார். வேறு வழியில்லாமல் அவன் கிளம்ப ஆயத்தமானான்.கிளம்புவதற்கு சில மணி நேரம் முன்பு, ஸ்ரீயை தனியே அழைத்து பேசினான்.

 

“ஸ்ரீ உன்கிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன்டா. நான் ஊருக்கு போய்ட்டு வந்து தான் உன்கிட்ட மனசுவிட்டு பேசமுடியும்னு நினைக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி நான் இன்னொரு விஷயம் சொல்லிடுறேன் என்று பொடி வைத்து பேசினான் சித்தார்த்.

 

நண்பனை வியப்புடன் ஏறிட்டான் ஸ்ரீ. “வெண்பாவை பார்த்தேன்டா, இந்த ஊர்ல தான் இருக்கா என்றான் சித்தார்த். “என்னடா சொல்ற, இது உண்மை தானா, நீ எப்படி எங்க அவளை பார்த்த, சொல்லுடா என்றான் ஸ்ரீ அவசரமாக.

 

“இப்போது அது பற்றி உன்னிடம் விளக்க என்னக்கு நேரமில்லை ஸ்ரீ. நான் ஊருக்கு கிளம்பியாக வேண்டும், கிளம்பும் முன் அவளை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது, நீ என்னுடன் வா அவளை பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினார்கள் நண்பர்கள் இருவரும்.

 

கிளம்பி வெளியே வந்தால் ஸ்ரீயின் இளையமகன் ஆகாஷ் சித்தார்த்தின் மேல் சாய்ந்துக் கொண்டு தானும் வருவதாக கூறி அடம் பிடித்தான். “ஆகாஷ் நீ பாட்டிகிட்ட விளையாடு, இல்லைனா அம்மாகிட்ட போ என்றான் ஸ்ரீ. “சித்து நானும் வரேன், பாப்பா கூத்திட்டு போதமாட்டியா என்றான் குழந்தை மழலையில்.

 

“ஸ்ரீ குழந்தை தானேடா வா அவனையும் கூட்டிப் போகலாம் என்றான். மூவரும் காரில் கிளம்பிச் சென்றனர். அவள் வீட்டிற்கு செல்லும் வழியில் காரை செலுத்தினான் சித்தார்த். தெருவோரமாக காரை நிறுத்திவிட்டு மேட்டில் இருந்து கீழே இறங்கிச் சென்றான். ஸ்ரீயின் மகன் சாக்லேட் கேட்க ஸ்ரீ அவர்களை அங்கு நிற்குமாறு கூறிவிட்டு தெருவை கடந்து எதிர்புறம் உள்ள கடைக்குச் சென்றான்.

 

ஆகாஷ் உடன்சித்தார்த் விளையாடிக் கொண்டிருந்தான். தற்செயலாக வீட்டில் இருந்து வெளியே வந்த வெண்பா தூரத்தில் இருந்த அவர்களை கண்டுவிட்டாள். இவனுக்கு திருமணமாகிவிட்டதா, பிள்ளையோடு விளையாடுவதை பார்த்தால் என்று எண்ணும் போதே மனதில் ஒரு வலி எழுந்தது.

 

ஆகாஷ் உடனே அப்பாவிடம் செல்ல வேண்டுமென்று அடம்பிடித்தான்.  அப்பா அப்பா என்று என்று அழுது கொண்டிருந்தவனை தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்து அவனை சமாதானப்படுத்த முயன்றான். அவனும் சாலையை கடந்து ஸ்ரீயை நாடிச் சென்றான்.

 

அது சித்தார்த்தின் குழந்தையாக இருக்காதோ, நாம் தான் தேவையில்லாமல் யோசிக்கிறோம், என்று தன்னையே கடிந்து கொண்டவளுக்கு குழந்தையின் அப்பா என்ற குரல் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது. குழந்தை “அப்பா என்று அழைத்தது மட்டும் தான் அவள் காதில் நன்றாக விழுந்தது. அவளுள் ஏதோ பிசைவது போல் உணர்ந்தாள்

 

மனதில் ஓரம் ஒரு வலி எழ திரும்பி நடக்கலானாள். மெதுவாக நடந்து சென்று வீட்டின் பின்புறம் உள்ள சிறு ஓடையில் காலாற நடந்தாள். ஆகாஷை ஸ்ரீயிடம் கொடுத்துவிட்டு நடந்தவன், தூரத்திலேயே அவளை கண்டுவிட்டான். முகத்தில் வேதனை சாயல் தெரிய யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு அவளின் இந்த வேதனை முகம் மனதை பிசைவதாக இருந்தது.

 

ஒரு பெருமூச்சுடன் திரும்பியவனை ஸ்ரீ எதிர்கொண்டான். “என்னடா என்ன ஆச்சு, அது வெண்பா தானே, நான் போய் அவளிடம் பேசவா என்றான் ஸ்ரீ. “வேண்டாம் என்று ஒரு வார்த்தையில் தடுத்தவன், அவனையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து விரைந்தான். “இல்லடா, நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், பாவம் அவ, அவகிட்ட போய் இப்ப எதுவும் பேச வேண்டாம். நான் ஊருக்கு போய்ட்டு நேரம் கிடைக்கும் போது உனக்கு போன் போடுறேன்

“அவளை என்னால மட்டும் தான் சமாதானப்படுத்த முடியும். ஏன்னா தப்பு செய்தவன் நான் தான், நான் போய் அவகிட்ட என்ன ஏதுன்னு விளக்கமா எடுத்து சொன்னாதான் அவளுக்கு என்னை புரியும். நானே அவகிட்ட பேசி தெளிவு படுத்தறேன். அதுவரை யாரும் அவளிடம் போய் எதுவும் பேசி அவள் மனப்புண்ணை கிளற வேண்டாம் என்றான் அவன். ஸ்ரீக்கும் அதுவே சரியெனப்பட்டது. ஆதலால் அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

ஆனால் அவனால் அதற்கு மேலும் சும்மா இருக்க முடியவில்லை, நண்பனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும். தன்னை அண்ணனாக எண்ணிய வெண்பாவும் தன் நண்பனும் இணைய வேண்டும். அதற்கு தன்னால் என்ன செய்ய இயலுமோ அதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவன் சித்தார்த் ஊருக்கு சென்றதும் அதைப்பற்றி யோசனை செய்யலாம் என்று அந்த சிந்தனையை சற்று ஒதுக்கி வைத்து நண்பனுக்கு ஊருக்கு கிளம்புவதற்கு உதவிகள் செய்தான்.

 

ஏதோ நினைத்தவன் “ஸ்ரீ நீயே என்னை காரில் வந்து விமான நிலையத்தில் விட்டுவிடேன். எனக்கும் என் மனதில் இருப்பதை உன்னிடம் சொன்னது போல் இருக்கும் என்றான் சித்தார்த். ஸ்ரீயும் அப்போது அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். உடனே சரி என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவிடம் சொல்லிவிட்டு வருவதாகக் கூறிச் சென்றான்.

 

சித்தார்த் தாய், தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு ஸ்ரீயின் காரில் ஏறி அமர்ந்தான். அவளின் நினைவுகள் அலையாய் எழுந்து பொங்கியது. கண்மூடி அவளை மனக்கண்ணில் நிறுத்தியவன் அவளிடமும் விடைபெற்றுக் கொண்டு ஊருக்கு கிளம்பினான்.

 

போகும் போது அவளின் வீட்டு வழியே செல்லுமாறு நண்பனிடம் கேட்டுக் கொண்டான். அப்போது தான் கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தவள், யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்தாள். சாலையில் கார் ஒன்றில் சித்தார்த் செல்வது போல் தோன்றியது.

 

தோளை குலுக்கி அதை அலட்சியப் படுத்தியாவாறே ‘அவன் ஏன் வேறு காரில் செல்ல போகிறான், அவனுக்குத்தான் சொந்தமாக வாகனம் இருக்கிறதே, இது ஏதோ பிரமை என்று எண்ணி மேலே நடந்தாள்.

 

 

Advertisement