Advertisement

அத்தியாயம்-1

 

சற்று முன் சுள்ளென்று காய்ந்த வெயில் வானிலை மாறி திடிரென்று மேகம் கருத்து மழை வருவதற்கான அறிகுறி தோன்றியது.மழை எங்கோ பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக மண் வாசனை நாசியை துளைத்துக் கொண்டிருந்தது.

 

பொள்ளாச்சியில் இருந்து கிளம்பிய பேருந்து ஆழியார் தாண்டி வால்பாறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வெண்பா அந்த வானிலை மாற்றத்தையும் அந்த ஆழியாறின் அழகையும் குரங்கு அருவியின் அழகையும் ரசித்தவாறு பயணம் மேற்கொண்டாள்.

 

இலக்கிய ஆர்வமுள்ள தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவள்… அந்த மனமொத்த தம்பதிகள் இணைந்து அவளுக்கு சூட்டிய பெயர் தான் வெண்பா… காவியன், வெண்பாவின் மூத்த சகோதரன், நன்றாக படித்தவன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

 

வெண்பாவுக்கு பேருந்து சன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது மிகவும் பிடிக்கும்.குரங்கு அருவியின் அழகை கண் குளிர கண்டவள் மனது, கடந்த காலத்தை அசை போட்டது. இந்த அருவிக்கு இதற்கு முன் வந்த நினைவுகள் அவளை சூழ்ந்தன, பல நினைவுகளை எழுப்புவதாய் அது அமைந்தது.

 

மழை வலுக்க ஆரம்பித்தது, பேருந்தை சற்று ஓரமாக நிறுத்தினார் ஓட்டுனர், ஏனெனில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது.அவள் மனதின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது போல் மழையும் அமைந்தது. அவளுள் அது பழைய நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தது.

 

____________________

 

 

வெண்பாவின் அப்பா நடராஜன் அரசாங்க பணியில் இருந்தார். மின்சாரத்துறையில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்தார், தாய் பூங்குழலி பொறுப்பான குடும்பத் தலைவி, தமையன்காவியன் அமெரிக்காவில் எம்எஸ் படித்துவிட்டு அங்கே பணியில் இருக்கிறான். அப்போது அவர்கள் சென்னையில் வசித்து வந்தனர்.

 

அவளின்  குடும்பம் உயர்தர நடுத்தர குடும்பம், வெண்பா கல்லூரி மாணவி, அவளின் துறை சம்பந்தமான ப்ராஜெக்ட் வேலைக்காக அவள் அப்போது அலைந்து கொண்டிருந்தாள்.

 

வெண்பாவிற்கு இனியா மற்றும் சுஜி (சுஜாதா) மிக நெருங்கிய தோழிகள். மூவரும் சேர்ந்தே ஒரு ப்ராஜெக்ட் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.இனியா சற்று மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவள், சுஜி சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், கல்லூரியில் இவர்களின் நட்பைக் கண்டு பலரும் பலவிதமான பொறாமை உணர்வு கொண்டிருந்தனர்.

 

இனியாவின் தந்தைக்கு தெரிந்த ஒரு குழுமத்தில் அவர்களுக்கு ப்ராஜெக்ட் செய்ய அனுமதி கிடைத்தது.

 

அந்த அலுவலகம் பழைய மகாபலிபுரம் சாலையை தாண்டி உள்ள கேளம்பாக்கத்தில் இருந்தது. இனியா அவர்கள் காரில் செல்லாம் என்று கூற மற்ற தோழியர்இருவரும் மறுத்து விட்டனர்.

 

பின் தோழியர் மூவரும் பேருந்தில் செல்ல திட்டமிட்டனர், அன்று வானிலை அறிக்கையில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தனர், அதையும் மீறி மூவரும் பயணம் மேற்கொண்டனர்.

 

மூவரும் சென்னை பாரிஸில் சந்தித்து கேளம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர். பேருந்தில் அவர்களை போல இன்னும் சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

 

அப்போது தான் அவள் அவனை முதன் முறையாக சந்தித்தாள்.ஆறடிக்கும் குறைவான உயரத்தில் அளவான தேகக்கட்டுடன் அடர்ந்து கருத்த மீசையும், சீராக வெட்டப்பட்ட சிகையும் அவனை பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தான் அவன்.

 

அப்போது வீசிய லேசான சாரல் காற்றில் அவன் கேசம் சிலும்பியது, அதை அழகாக அவன் வலது கை கொண்டு படியவைத்தான்.

 

தோழியர் மூவரும் ஏதோ சுற்றுலா பயணம் கிளம்பியது போல் நினைத்துக் கொண்டு அவர்களின் கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

 

இனியா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் பேருந்தில் இருந்த அனைவரையும் வம்பிழுப்பது போல் பாட்டு பாட ஆரம்பித்து விட்டாள்.

 

“ஹலோ! ஹலோ! சுகமா, ஆமா நீங்க நலமா

 

“என்ன பார்வை உந்தன் பார்வை என்று அவள் அவனை நோக்கிப் பாட, வெண்பாவும் அவளுடன் சேர்ந்து கலாட்டாவாக அவனை நோக்கி  “ஹலோ மிஸ்டர் ஹலோ மிஸ்டர் எங்கே போறீங்க என்று பாடி வைக்க, அவன் சலனமற்று அவர்களை நோக்கினான்.

சுஜி பாவம் அவள் அவனை பரிதாபமாக பார்த்து வைத்தாள். அவளுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.

 

“ஏய், சும்மா இருங்கடி என்று அவள் அவர்களை நோக்கி சத்தம் போட்டாள்.

 

இனியாவுடன் சேர்ந்து வெண்பாவும் கலாட்டா செய்ய அந்த சூழ்நிலையே கலகலப்பாக்கி கொண்டிருந்தனர் இருவரும்.

 

இவர்கள் அடிக்கும் லூட்டியை பார்த்து பிரயாணி ஒருவர் தலையில் அடித்துக் கொண்டு, “இது கலிகாலம் என்று முணுமுணுத்துக்கொண்டே கீழே இறங்கிவிட்டார்.

 

அவரையும் சும்மா விடாமல் இனியா அவரை பார்த்து “போதும் போதும் உன் பாட்டு, என்று பாடி வைத்தாள்.

 

பேருந்து கடற்கரை சாலையில் சீரான வேகத்துடன் செல்ல ஆரம்பித்தது. மழை புயலின் காரணமாக வலுத்துக்கொண்டிருந்தது.

 

நிகழ்காலத்துக்கு வந்த வெண்பா வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். பேருந்து வால்பாறைக்குச் செல்லும் ஊசி வளைவுகளை கடந்து சென்றுக் கொண்டிருந்தது.

 

மின்சாரம் அறுந்த ராத்திரியில்

மெழுகுவர்த்தி அழுவதுபோல்

ஓரோர் இரவில்

உனக்காய் அழுகிறேன்….

 

வைரமுத்துவின் கவிதைவரிகள் அவளுள் வந்து போனது.

 

அதே நேரம் அவன் கார்வால்பாறையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. 27வது கொண்டை ஊசி வளைவில் ஒரு பேருந்தும் அதன் வெளியில் சிலரும் நின்றிருந்தனர்.

 

பேருந்து பழுதடைந்து நின்றிருக்கும் என்று மனதுள் நினைத்தவாறாய் அதை கடந்து செல்ல எண்ணினான். ஏனெனில் யாராவது ஏறிக்கொண்டு வழியில் இறக்கிவிட சொன்னால் என்று யோசித்தான்.

 

யாருக்கும் உதவும் மனப்பான்மை உடைய தான் எப்போது இது போல யோசிக்க ஆரம்பித்தோம் என்று எண்ணி உள்ளுக்குள் வெட்கினான்.அவர்கள் நிறுத்தச் சொன்னால் நிறுத்தலாம் அல்லது கடந்து செல்லலாம் என்று யோசித்தவாறேஅவர்களை கடந்து செல்ல முயன்றவன் சற்று இடப்புறமாக பார்வையிட்டான். அப்போது தான் அவன் அவளைக் கண்டான்.

 

அவனின் கட்டுப்பாட்டில் இருந்த வண்டி அவனை அறியாமல் எப்போது நின்றது என்ற யோசனையுடன் வெளியே ஏறிட்டான்.

 

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் அவன் அருகில் வந்து “சார் இவங்கள கொஞ்சம் வால்பாறையில் விட்டுட முடியுமா சார், பஸ் பிரேக் டவுன் ஆச்சு. இவங்க எனக்கு தெரிஞ்ச பொண்ணு. தனியா வந்து இருக்காங்க, இந்த ஊரும் அவங்களுக்கு புதுசு சார்.

 

“கிட்டத்தட்ட எல்லோருக்கும் வேற பஸ் கிடைச்சுடுச்சு அந்த பஸ்ல எல்லாம் கூட்டம் அதிகம் இருந்ததால நான் இவங்கள ஏத்திவிடல சார், அது இப்ப ரொம்ப தப்பா போச்சு, இப்போது தான் பொள்ளாச்சியில் இருந்து போன் வந்தது, வர வழியில எங்கோ பிரச்சனையாம், பஸ் வரதுக்கு குறைஞ்சது 4 மணி நேரமாவது ஆகும்ன்னு சொல்றாங்க.

 

அவன் உடனே “நான் என்ன பண்ணனும் சொல்லுங்க சார்என்க, நடத்துனர்மேலும்“அதான்சார்கொஞ்சம்தயவுபண்ணிஅவங்களபாதுகாப்பாஇறக்கிவிட்டுடமுடியுமாசார்என்றார்.

 

உதவி வேண்டியது இவளுக்கு அதை இவ கேட்கமாட்டாலாமா என்று சற்று யோசித்தவன் சரி என்று கூற அவர் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது. ஆனால் அவள் மனமோ நிம்மதியை தொலைத்தது.

 

அவளுக்கு தான் யாரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று எண்ணினாளோ அவனை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி இருந்தாலும் பின் அவள் முகம் இறுகியது கடந்த காலத்தை நினைத்து…

 

அவளுக்கு எதிர்மறையான சிந்தனை அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது யாரை அவன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அவளையே பார்க்க நேர்ந்ததை எண்ணி வருந்தினான்.

 

வண்டியில் பின்புறம் ஏறச் சென்றவளை முறைத்துப் பார்த்துவிட்டு கோபத்துடன் அவளை நோக்கி வெடுக்கென்று “நான் என்ன உன் டிரைவரா என்று கேட்டு அவளை வைதான்.

 

ஒரு கணம் நெஞ்சம் உலர்ந்து போக எச்சில் கூட்டி விழுங்கியவள் சுதாரித்துக்கொண்டு உடைமைகளை வைக்கப்போவதாக கூறினாள்.

 

ஆனால் அவனுக்கு தான் அவளை குத்திக் கிழிப்பது என்றே குறியாக “அது தானே பார்த்தேன் நீயாவது மாறுவதாவது ஒரு நிமிடம் உன்னை நல்லவன்னு என்னை நினைக்க வைச்சுட்ட, எங்க கத்துகிட்ட இந்த வித்தை எல்லாம்என்றான்.

 

“அது எப்படி நீ தனியா எங்கேயாவது மாட்டிக் கொண்டு பிரச்சனையாகும் போதெல்லாம் நானே உனக்கு உதவி செய்யறேன். ஒரு வேளை அப்போதும் இப்போதும் அது உன்னோட ஏற்பாடாக இருக்குமோஎன்றான்மேலும்.

 

இதற்கு மேல் தாங்க இயலாமல் அவள் கண்ணீருடன் தன் உடைமைகளை எடுக்கலானாள். கோபத்துடன் வந்தவன் அதை எடுத்து டிக்கியை திறந்து உள்ளே வைத்தான். அவளை காரின் முன் இருக்கையில் அமருமாறு சைகை செய்தான்.

 

வேறு வழியில்லாமல் அவளும் காரில் ஏறி கதவை சாத்தினாள். அதற்கு மேல்அவன் அவளை ஏதும் கேட்கவில்லை, ஏதோ யோசனையிலிருந்தவன் வண்டியை வால்பாறை நோக்கி ஓட்டலானான்.

 

திடிரென்று அவள் அலறும் சத்தம் கேட்டதும் வண்டியை பிரேக் போட்டு நிறுத்தி என்னவென்று விசாரித்தான். அவள் காலில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்தாள், ஒருவாறு நெளிந்து அவள் காலை தடவிக்கொண்டிருந்தாள், என்னவென்று விசாரித்தவனிடம் ஒன்றுமில்லை என்பது போல் தலையாட்டினாள்.

 

“ஒண்ணும் இல்லாமலா சத்தம் போட்டஎன்றுகூறிஅவளைபார்த்தவன்அவள்பல்லைகடித்துஎதையோசமாளிப்பதுபோல்தோன்றியது. சட்டென்று அவள் புடவையை முழங்கால் வரை தூக்கியவன் இரண்டு மூன்று அட்டை அவள் காலில் ஏறி ரத்தம் உறிஞ்சிக் கொண்டிருந்ததை பார்த்தான்.

 

வண்டியில் வைத்திருந்த சிகரெட் லைட்டரை எடுத்து பொருத்தி அட்டை இருந்த இடத்தில் காட்டியதும் அது அப்படியே சுருண்டு விழுந்தது.சற்று மேலே ஏறி இருந்த அட்டைக்கு நெருப்பு காட்டவென்று அவன் புடவையை சற்று விலக்க அவள் கை இயல்பான கூச்சத்தில் அதை தடுத்தது.

 

அவனுக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற “நான் ஒண்ணும் உன்னை கடிச்சு திங்கமாட்டேன், போதும் கொஞ்சம் காட்டுஎன்றுசொல்லிவலுக்கட்டாயமாகஅவள்சேலைவிலக்கிநெருப்புகாட்ட அந்த அட்டையும் விழுந்தது.

 

“இதை என்கிட்ட சொல்லறதுக்கு என்னஎன்றுசிடுசிடுத்தான்அவன். அவள்முகம்பார்த்துஅமைதியானவன்“இங்கு அட்டை சகஜம் அது தான் பயந்து போய் இருக்கிறாய்என்றான்.

 

சுருண்டது அட்டை மட்டும் அல்ல என் மனதும் தான் என்று அவள் மனம் நினைத்தது.

காரை கிளப்ப எண்ணியவன் அவளை திரும்பி பார்த்த வண்ணம் எங்கு இறக்கிவிட வேண்டும் என்று கேட்டான்.

 

‘என்னை வால்பாறையில் கொண்டு விடுங்கள்என்றுசொல்லஎண்ணியவள், அவன்அங்கு,தான்எந்தஇடத்திற்குசெல்லவேண்டும்என்றுகேட்கிறான்என்பதைஉணர்ந்தாள்.

 

“நான்… நான்… இங்கு வேலை பார்க்க வந்திருக்கிறேன் மின்சாரத்துறையில். அதனால் அதற்கு சொந்தமான குடியிருப்பில் தான் இங்கு தங்க வேண்டும், அது பற்றி மேலும் விவரம் இங்கு பணிபுரியும் என் மேலதிகாரி நரசிம்மன் சாரிடம் தான் போன் போட்டு கேட்க வேண்டும் என்று கூறினாள்.

 

ஏதோ தோன்ற அவன் “ஏன் உன் கணவன் என்ன ஆனான் அவன் வேலை பார்த்து உன்னை காப்பாத்த மாட்டானா, அவன் வசதியானவன்னு தானே அவனை கல்யாணம் பண்ண நினைச்சஎன்றுசுருக்கென்றுதைப்பதுபோல்கேட்டான்.

 

மனதில் சட்டென்று ஒரு வலி எழுந்தது, உடனே சுதாரித்தவளாக “எனக்கு இன்னும் மணமாகவில்லைஎன்றுரைத்தாள்.

 

அவள் உதடுகள் அந்த வார்த்தை தான் உதிர்க்க வேண்டும் என்று அவன் மனமும் விழைந்தது. அவள் காலையும், கழுத்தையும் பார்த்தவனுக்கு, அது அவளுக்கு மணமாகவில்லை என்று உணர்த்தினாலும் அவள் உதடுகள் அதை சொல்ல வேண்டும் என்று அவன் மனம் எண்ணியது,

 

அவன் மனது சந்தோசப்பட்டாலும், அவளை நோகடிக்க வேண்டும் என்றே அடுத்த கேள்வியையும் கேட்டு வைத்தான்.

 

“ஒரு வேளை நான் வசதியா இருக்கேன்னு தெரிஞ்சு தான் வந்திருக்கிறாயாஎன்றுஅடுத்தஊசியைசெருகினான்அவள்உள்ளத்தில்.

 

அவன் வாழ்கையில் பட்ட அடிகளும் அவமானங்களும் அவனை அவ்வாறு பேசச் செய்தது. மனம் அவளை தேடினாலும், அவளால் அவன் பட்ட வலியின் ரணம் நீங்காமல் அவன் நெஞ்சை அழுத்தியது. அதுவே அவளை புண்படுத்த எண்ணியது.

 

அவளுக்கு அவன் வலி புரிந்தது, அதற்கு குறையாமல் அவளும் பல வேதனைகளை சுமந்தவள் தான், ஆனால் அவன் அவளின் தரப்பு நியாயத்தை யோசியாமல் இருந்தது அவளுக்கு வருத்தமாக இருந்தது.

 

வண்டி அடுத்த கொண்டை ஊசி வளைவில் திரும்பி மேலும் முன்னேறியது, அவள் ஏதும் பேசாமல் மௌனம் காத்தாள்.

அவனும் அவளிடம் ஏதும் கேட்க நினைக்கவில்லை, அவனுக்கு அவள் மணமாகாதவள் என்ற செய்தியே ஒரு இதம் கொடுத்தது.

 

அப்போது அவள் கைபேசி அழைக்க நரசிம்மன் தான் அவளை அழைத்திருந்தார், அவர் அவளை சித்தி விநாயகர் கோவிலுக்கு நேரே வந்துவிட சொல்லிக் கொண்டிருந்தார்.

 

அதை அவள் அவனிடம் தெரிவித்தாள். அவன் ஏதும் பேசவில்லை, லேசாக தலையை அசைத்து வைத்தான். அவன் மனம் தன்னையறியாமலே இளகத் தொடங்கிவிட்டது. அது அவளிடம் பேசுவதன் மூலம் வெளிப்பட்டு விடக்கூடாது என்று நினைத்தே அவன் ஏதும் பேசவில்லை.

 

அவள் கைபேசி மீண்டும் ஒலிக்க எடுத்து பேசியவள், பொருட்களை ஏற்றி வரும் வண்டிக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள். சித்தி விநாயகர் கோவில் அருகில் வந்து காத்திருக்கச் சொன்னாள்.

 

அதன் பின் இருவருமே பேசிக் கொள்ளவில்லை, அவள் சற்று திரும்பி அவன் பக்கவாட்டு தோற்றம் கண்டாள். அவன் முகத்தில் ஒரு கடினத்தன்மை தெரிந்தது, அவனின் அடர்ந்த மீசை அவன் ஆண்மையின் வடிவானவன் என்று உணர்த்தியது.

 

அவனிடம் அசைவை உணர்ந்தவள் பார்வையை வெளிப்புறம் திருப்பினாள். இப்போதும் கூட இவள் என்னை பார்க்காமல் வெளிப்புறம் பார்வையை செலுத்துகிறாளே என்று அவன் மனம் வெந்தான்.

 

அவர்கள் வண்டி வால்பாறையை வந்தடைந்தது, அந்த அதிகாலை பயணம் மிக சுகமாகவும் இனிதாகவும் இருந்தது.

 

அவன் காரை சித்தி விநாயகர் கோவிலுக்கு செலுத்தினான். அவள் கைபேசி வழியாக நரசிம்மனுக்கு தான் கோவிலை நெருங்கி விட்டதை கூறினாள். அவள் அவரை பார்த்தது இல்லை.

 

ஆனால் அவருக்கு அவளை தெரியும், அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த அவளின் விவரம் அவரை வந்தடைந்திருந்தது.

 

அவர்கள் கார் கோவில் அருகில் நின்றது அவள் இறங்கி கீழே நின்று கைபேசி எடுத்தாள், அவளை நோக்கி ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் ஒரு பெண்மணியும் வந்தனர்.

 

அவர் தன்னை நரசிம்மன் என்றும் தன் உடன் வந்த பெண்மணி தன் மனைவி கல்யாணி என்றும் அறிமுகப்படுத்தினார்.

 

கல்யாணி அவளை வாஞ்சையுடன் பார்த்தார், அவர்களுக்கு குழந்தை இல்லை அந்த ஏக்கம் எப்போதும் அவர்களுக்கு உண்டு, அவளை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாளோ என்று எண்ணம் அந்த தம்பதிகளுக்கு தோன்றியது.

 

நரசிம்மன் பக்கத்தில் இருந்த அவனை கேள்வியாய் நோக்க அவள் அதற்கு பதிலளித்தாள். வரும் வழியில் பஸ் பிரேக் டவுன் ஆகி நிற்க இவர் மட்டுமே தனக்கு உதவி புரிந்ததை அவள் அவருக்கு எடுத்துரைத்தாள்

 

அவர் அவனை நன்றியுடன் பார்க்க ‘இதுல என்ன இருக்குஎன்பதுபோலஅவன்பார்த்தான். அவனின் இயல்பான அந்த உணர்வு அவரை ஈர்த்தது. எவ்வளவு பெரிய உதவி செய்துவிட்டு அதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் இருந்த அவனை அவருக்கு பிடித்தது.

 

அவர் அவனை நோக்கி “சார் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா, இந்த ஊர் தான் உங்களுக்காஎன்றுகேட்டார்.

 

அப்போது தான் அவனுக்கு அது உரைத்தது, அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்று, அவன் தன்னை சித்தார்த் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

 

“ஹலோ சார் நான் சித்தார்த், எனக்கு பொள்ளாச்சியும் வால்பாறையும் தான் தொழில் செய்யும் ஊர், தற்போது வால்பாறையில் தான் தங்கி இருக்கிறேன், எங்களுக்கு இங்கு இரண்டு எஸ்டேட் இருக்கிறது, சித்தார்த் டீ எஸ்டேட், டீ ட்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்றான்.

 

“இங்கு எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது, இனிமேல் நான் இங்கு தான் வசிக்கப்போகிறேன் என்றான் அவளைப் பார்த்துக்கொண்டே தன்னையும்அறியாமல் தான் என்ன சொல்கிறோம் என்றும் யோசியாமல்.

 

அவர் மிகவும் வியந்து போனார். அவருக்கு அவனின் எஸ்டேட் நன்றாக தெரியும் அவ்வளவு பெரிய ஆளாக இருந்துக்கொண்டு இயல்பாக பேசிய அவனை கண்டு பிரமித்தார்.

 

அவர் அவனையும் வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார், அவர்கள் நேராக நரசிம்மனின் வீட்டுக்குச் சென்றனர். அவள் அவர்களிடம் அவளின் வீட்டுக்கு போகலாம் என்க அவர்கள் இங்கு குளித்துவிட்டு காபி அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்றனர்.

 

 

 

அத்தியாயம்- 2

 

அவர்கள் வீட்டுக்குச் சென்ற உடன் கல்யாணி அவளுக்கு விருந்தினர் அறையை சுட்டிக் காட்டி உள்ளே சென்று குளித்து உடை மாற்றிக் கொள்ளுமாறு பணித்தார்.

 

வெண்பா பெட்டியை திறந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து அவளுக்கு மிக பிடித்த இளம் பச்சை வண்ண ஜார்ஜெட் சேலையை உடுத்தி மிதமான ஒப்பனையுடன் வெளியில் வந்தாள்.

 

கோதுமை நிறத்தில் இருந்தவளின் முகம் இயற்கையின் ரசவாதத்தில் ஏனோ அவளின் நிறத்தை கூடுதலாக்கி காட்டியது. குளித்து தயாராகி வந்தவளை பார்த்த கல்யாணி கையால் அவளுக்கு திருஷ்டி கழித்து நெட்டி முறித்தார்.

 

வெளியே வந்தவளைஇமைக்க முடியாமல் பார்த்தான் அவன். அந்த பச்சைநிற சேலை அவளின் அழகை மேலும் கூட்டியது. வெளியில் இருக்கும் பசுமை வீட்டினுள்ளும் இருந்ததை போல் இருந்தது அவனுக்கு, அதன் பின் கிளம்புகிறேன் என்று கூறியவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு பால் காய்ச்ச சென்றனர்.

 

நரசிம்மனின் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருந்தது அந்த வீடு. சித்தார்த்தின் பார்வை அடிக்கடி வெண்பாவின் மீது படிவதை கல்யாணி கண்டுகொண்டார். இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்குமோ என்று லேசாக ஒரு யோசனை அதை ஒதுக்கி தள்ளி விட்டு கதவை திறந்து அவளை உள்ளே போகச் சொன்னார்.

 

அவளை முதலில் உள்ளே செல்லச் சொன்னவர் அவனையும் உள்ளே போகச் சொன்னார், அவர்களை முன்னே வீட்டுக்குள் செல்ல விட்டு இவர்கள் பின்னால் சென்றனர். அவனும் அவளுமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தது அவளுக்குள் ஒரு வித சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

 

அவனுக்கும் அந்த சூழ்நிலை இதமாக இருந்தது, இருவரும் ஒன்றாக உள்ளே கால் வைத்த பொது இருவரும் அறியாமலே அவர்களுக்குள் சொல்லொணாத ஒரு பிணைப்பை கொண்டு வந்திருந்தது. தன்னையறியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க அவள் முகத்தில் எதைக் கண்டானோ அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடுவதை உணர்ந்தான்.

 

அவள் பால் காய்ச்சி அனைவர்க்கும் கொடுத்தாள், அவனுக்கு பால் பிடிக்காது என்பதால் அவள் கல்யாணியிடம் சென்று “அம்மா அவருக்கு பால் பிடிக்காது. காபி, டீ தான் விரும்புவார், காபி தூள் கிடைக்குமா என்றாள்.

 

கல்யாணியின் உள்மனது நினைத்ததை வெண்பாவின் பேச்சு உறுதிபடுத்தியது. “சரிம்மா நீ இரு நான் போய் எடுத்து வரேன் என்று கூறி வீட்டிற்குச் சென்று காபி தூள் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்.

 

அவனுக்கு அவள் கையாலேயே காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள். அவன் மனம் இறக்கையில்லாமல் பறந்தது, அவள் அவனை இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கும் போதே அவனுக்கு இனித்தது.

 

அவனுக்கு அவளிடம் கேட்க நிறைய இருந்தது, சூழ்நிலை சரியாக அமையாததால் பேசாமல் இருந்தான். ஆனால் அன்று நடந்தது எதுவும் பொய் இல்லையே, என் கண்களும் காதுகளும் பார்த்ததும் கேட்டதும் நிச்சயமாக பொய் இல்லை, அவன் மனம் யோசித்து குழம்பியது.

 

ஏதேதோ நினைத்து அவன் முகம் குழப்பத்தை சுமக்க அவன் நினைவுகள் பின்னோக்கி சென்று நடந்த நிகழ்வை கண்முன் கொண்டு வர அவன் முகம் கருத்தது. அவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவனின் முகமாற்றம் கவலையை கொடுத்தது.

 

அவன் அவர்களிடம் விடை பெற்று கிளம்பினான். சித்தார்த்திற்கு அவளை விட்டுச் சென்றது உடலை விட்டு உயிர் பிரிந்தது போன்ற வலியுடன் இருந்தது. அவளுக்கோ ஒட்டுமொத்தமாக அந்த வீட்டின் வெளிச்சத்தை அவன் எடுத்துச் சென்று விட்டது போல் இருந்தது.

 

ஒரு கணம் எல்லாமே இருண்டது போல் இருந்தது. தான் ஏன் அவனை பார்த்தோம் என்றிருந்தது அவனை பார்த்ததில் பழைய நினைவுகள் சரம் கோர்க்க கண்ணில் நீர் கோர்த்து அவளுக்கு.

 

கைபேசி அழைக்க அதை எடுத்து காதுக்கு கொடுத்தாள், பொருட்களை எடுத்து வரும் வண்டி அருகில் வந்து விட்டதாக கூற அவள் நரசிம்மனிடம் கைபேசியை கொடுத்து வழி கூறச் சொன்னாள்.

 

நரசிம்மன் அன்று விடுமுறை எடுத்து இருந்தார், வண்டி வந்ததும் கல்யாணியும் அவருமாக இணைந்து அவளுக்கு உதவி புரிந்தனர், கல்யாணி இடையில் கொஞ்சம் வீட்டுக்குச்சென்று அவர்களுக்கு சமைத்துக் கொண்டு வந்தார்.

 

கல்யாணிக்கு அவளின் மேல் ஒரு பிரியம் ஏற்பட்டுவிட்டது, பிள்ளை இல்லாத அவர்களுக்கு அவளை மிகவும் பிடித்துப்போனது இனம் புரியாத பாசம் அவள் மேல் வந்தது. வாழ்கை மிக விசித்திரமானது, எப்போது ஒருவருக்கு ஒருவர் மேல் பிரியம் வரும் எப்போது வெறுப்பு வரும் என்பதை கூற இயலாது.

 

அவளுக்கு அவர்களை கண்டு வருத்தமாகிவிட்டது, தனக்காக அவர்கள் மாய்ந்து மாய்ந்து வேலை செய்தது அவளுக்கு வருத்தமாகவும் குற்ற உணர்ச்சியையும் எழுப்பியது.

 

அவளின் வருத்தத்தை அவர்களிடம் கூற, அவர்கள் இருவரும் புன்னகைத்தனர். அது தங்களின் பாக்கியம் என்றனர், அவளை தங்களின் மகளாக நினைப்பதாகக் கூறினர். வெண்பாவிற்கு எதுவுமே கூற இயலவில்லை.

 

நரசிம்மன் ஏற்கனவே வெண்பாவை பற்றி கல்யாணியிடம் கூறியிருந்தார். உடல் நலமில்லாமல் இருக்கும் தாயின் நலன் கருதியே அவள் இங்கு மாற்றல் வாங்கியிருப்பது முதலிலேயே அவருக்கு தெரிந்திருந்தது. அவள் வருவதற்கு முன்பே அவளை பற்றிய விவரங்கள் அனைத்தும் அவருக்கு தெரிவித்திருந்தனர், அவரே அவளின் நேரடி தலைமை அதிகாரி ஆவார்.

 

முதலில் கிளம்பி வந்த அவள் வீட்டை சுத்தம் செய்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தி சரி செய்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து ஊருக்கு சென்று அவள் தாயை அழைத்து வருவதாக ஏற்பாடு செய்திருந்தாள் அவள். மூவரும் சேர்ந்து வேலை செய்யவே வேலை சீக்கிரமாகவே முடிந்துவிட்டது.

 

அனைத்தும் சரி பார்த்து அந்தந்த இடத்தில் வைத்து எல்லாம் முடிக்கும் போது மாலையாகியிருந்தது, கல்யாணி மூவருக்கும் சூடான தேநீர் கலந்து எடுந்து வந்தார். நரசிம்மன் அவர்கள் சாப்பிட மாலை நேர சிற்றுண்டியாக சூடான பஜ்ஜியும், வடையும் வாங்கி வந்து கொடுக்க பேசியபடியே சாப்பிட்டனர். அவர்கள் அவளை பற்றி கேட்க அவளும் விபரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

பின் வெண்பா ஏதேனும் கோவிலுக்கு சென்று வரலாம் என்று கேட்க மூவரும் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றனர். வெண்பாவிற்கு கோவிலுக்கு வந்ததும் மனம் லேசாக இருந்தது போல் இருந்தது, கடவுளை வணங்கி மனம் உருக வேண்டினாள், மனதில் ஒரு அமைதி வந்தது போல் இருந்தது.

 

யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்றியது சட்டென்று திரும்பி பார்த்தாள் யாருமேயில்லை. இது பெண்களுக்கு மட்டுமான உணர்வு தன்னை யாரோ கவனிக்கிறார்கள் என்பதை மூளை அவர்களுக்கு உணர்த்திவிடும்.

 

இது எப்படி ஏற்பட்டது எப்போதும் கவனத்துடனும் எச்சரிகையாகவும்  இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு சிறுவயது முதல் போதனை செய்ததால் ஏற்பட்ட உணர்வு போலும், வெண்பாவிற்கு தோன்றிய உணர்வு பொய்யல்ல என்று சற்று நேரத்தில் புரிந்தது நரசிம்மனுடன் வந்தவனை பார்த்து.

 

நரசிம்மன் யாருடனோ பேசி கொண்டிருக்கும் குரல் கேட்டது, கல்யாணியும் வெண்பாவும் பிரகாரத்தில் அமர்ந்திருக்க அவர்  அவர்களை நோக்கி வந்தார்.

 

யாரை நினைத்து கோவிலுக்கு வந்தாளோ அந்த எண்ணத்தின் நாயகன் அவள் எதிரில் நின்றிருந்தான், அவள் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவுவதை கல்யாணி பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அவருக்கு அவர்கள் இருவருக்கும் இதற்கு முன் பழக்கம் இருந்தது உறுதியாக புரிந்தது, அதையும் மீறி ஏதோ இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறது என்றும் தெரிந்தது, அதையும் மீறி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருப்பதாய் தோன்றியது, சித்தார்த் கோவிலுக்கு வந்தது தற்செயலாக நடந்த செயல் போல அவருக்கு  தோன்றவில்லை

 

அவன் அவர்களிடம் விடை பெற்று சென்றுவிட்டான், அவளிடம் எதுவும் பேசவுமில்லை விடை பெறவுமில்லை, அதுவே அவளுக்கு உள்ளுர மிக பெரிய வருத்தமாக இருந்தது, அன்றைய இரவு அவளுக்கு தூங்காத இரவாக அமைந்தது.

 

மறக்க நினைத்தும் மறக்க முடியாமல் முட்டி மோதிக் கொண்டு பழைய நினைவுகள் இருவரின் உறக்கத்தையும் களவாடிச் சென்றது. எண்ணங்கள் கடந்த காலங்களில் முழ்க இருவரும் அதில் பயணம் சென்றனர்.

 

பேருந்தில் இனியாவும் வெண்பாவும் சேர்ந்து ரொம்பவும் கலாட்டா செய்துக்கொண்டு இருந்தனர். வெண்பா சும்மா இருக்காமல் இனியாவின் காதில் கிசுகிசுத்தாள்.

 

“ஏண்டி இனியா சார் ஒரு வேலை ஊமையோ, இங்க இருக்க ஒண்ணு ரெண்டு பேரு கூட நாம பண்றது பார்த்து சிரிச்சாங்க, ரசிச்சாங்க, திட்டினாங்க, சார் எந்த உணர்ச்சியும் காட்ட மாட்டேன்னு அமைதியா வர்றார், ஒருவேளை தவம் ஏதும் பண்றாரோ. எந்த மேனகை வந்தாலும் பரவாயில்லைன்னு தவத்துல இருக்கார் போலடி சரியான விசுவாமித்திரர் என்று அவனை பார்த்துக்கொண்டே இனியாவிடம் பேசினாள் அவள்.

 

அவள் பார்வையை அவன் கண்டு கொண்டான், அலட்சியமாக திரும்பி அவளை பார்த்தவன் மீண்டும் பார்வையை வேறு புறம் திருப்பினான். “ரொம்ப தான் கொழுப்பு என்று கறுவினாள் அவள். அவள் முணுமுணுப்பதை அவள் உதட்டசைவின் மூலம் கண்டுகொண்டான் அவன்.

 

பேருந்து கடைசி நிறுத்தத்தில் நின்றது, அவர்கள் இறங்கினர். பேசிக்கொண்டே

இறங்கியதில் அவன் எப்போது இறங்கினான் எங்கு சென்றான் என்று அவர்கள் கவனிக்கவில்லை.

 

அவன் அவர்களை கடந்து சென்றதை அவர்கள் பார்க்கவில்லை, செல்லும் பொது திரும்பி அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றான்.

 

சுஜி எதோ யோசைனையுடனே இருந்தாள், அவளுக்குள் ஏதோ ஒரு குழப்பம் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. சுற்றுசுழல் எதுவும் அவள் கவனத்தில் பதியவில்லை, இனியாவும் வெண்பாவும் அவள் தோளில் தட்டி அவளை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தனர்.

 

மூவரும் அருகில் இருப்பவர்களிடம் விசாரித்துக்கொண்டு அந்த தொழிற்சாலைக்கு சென்றனர். அந்த தொழிற்சாலைக்கு வேன் மட்டுமே செல்லும் என்றறிந்து அதில் ஏறிச்சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் இருந்து குறைந்தது 20 நிமிட பயணமாக அது அமைந்தது. அங்கு நிறைய தொழிற்சாலைகள் இருப்பதால் அந்த வேனில் நிறைய பேர் இருந்தனர்.

 

தொழிற்சாலைக்குச் சென்று இனியா அப்பாவின் நண்பரை சந்தித்தனர், அவர் தான் அந்த குழுமத்தை நிறுவியவர், அவர் இனியாவிடம் பொதுப்படையாக விசாரித்துவிட்டு அவர்களை அங்கு உதவியாள் போல இருந்தவரிடம் “ஆறுமுகம் இவர்களை பொது மேலாளரிடம் நான் சொன்னதாக சொல்லி விட்டுவிட்டு வா என்றார்.

 

தோழிகளை மூவரையும் பார்த்து “நீங்கள் செல்லுங்கள் நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

 

ஆறுமுகம் அவர்களை அழைத்து செல்லும் வழியில் ஒரு நிமிடம் என்று கூறி அவ்வழியில் வந்த ஒருவரிடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார். அந்நேரம் வெண்பாவிற்கு யாரோ தங்களை பார்ப்பது போன்ற உணர்வு தோன்ற சட்டென்று திரும்பி பார்த்தாள் யாரும் இல்லை, ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டாள்.

 

பின் திரும்பி வந்தவர் அவர்களையும் அழைத்துக்கொண்டு அந்த பொது மேலாளரிடம் கூட்டிச் சென்றார். உள்ளே சென்று அவரை சந்தித்த மூவருக்கும் அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

மூவரும் திகைத்து போய் நிற்குமாறு அங்கு இருந்தது வேறு யாருமல்ல, பேருந்தில் யாரை சீண்டி விளையாடிக் கொண்டிருந்தார்களோ அவனே தான், அவனை அங்கு சந்திப்போம் என்று அவர்கள் நினைக்கவில்லை, ஏன் அவனும் கூட நினைத்து பார்க்கவில்லை.

 

மரியாதையின் பொருட்டு கூட அவனிடம் பேசத் தோன்றாமல் மூவரும் நின்றதைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான். அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் வேறு பேச்சு பேசலானான்.

 

முதலில் சுதாரித்துக்கொண்டு அவனிடம் பேசலானாள் இனியா, “சாரி சார் நாங்க உங்களை இங்க பார்ப்போம்னு நினைக்கல, பஸ்ல நாங்க எதாச்சும் தப்பா பேசியிருந்தா மன்னிச்சுக்கோங்க சார் என்று தடுமாறியவாறே பேசினாள்.

 

அதை பற்றிய பேச்சை தவிர்த்தவன் “அதனாலென்ன விடுங்க, இப்ப உங்களை பற்றி அறிமுகப்படுத்திக்கோங்க, உங்களுக்கு நான் எந்த மாதிரி உதவணும்னு சொல்லுங்க கண்டிப்பா செய்யறேன் என்றான் சாதாரணமாக.

 

“சார் நான் இனியா, இவ வெண்பா, அவ சுஜாதா நாங்கள்  பொறியியல் மாணவிகள், எங்க ப்ராஜெக்ட் செய்யறதுக்காக தான் இங்க வந்தோம்என்றுவந்தவிஷயத்தைசொல்லிமுடித்தாள். மேலும்“நீங்கஇங்கஎன்னவாஇருக்கீங்கசார், உங்களபத்திநாங்கதெரிஞ்சுக்கலாமா, நான்படபடன்னுபேசுவேன், தப்பாஎடுத்துக்காதீங்கசார் என்றாள்.

 

“நீங்க பேசினது நான் தப்பா எடுத்துக்க மாட்டேன், அது உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும், என்னோட பேரு சித்தார்த் நான் இங்கு பொது மேலாளராக இருக்கிறேன் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

 

“நீங்க மட்டும் தான் பேசுறீங்க, மத்த ரெண்டு பேரும் எதுவும் பேச மாட்டங்களா, சுஜாதா அளவா தான் பேசுவாங்கன்னு நினைக்கிறேன், ஆனா இவங்க அப்போ நல்ல பேசுனாங்க இப்ப வாயே திறக்க மாட்டேங்குறாங்க என்று வெண்பாவை சுட்டிக் காட்டினான்.

 

‘இப்படி மாட்டிட்டு முழிப்பேன் தெரிஞ்சிருந்தா நான் அப்போ கண்டிப்பா அப்படி எதுவும் பேசி இருக்க மாட்டேன், இப்ப வேணும்னு என்ன கேள்வி கேட்டு, என்ன சொல்லணும் எதிர்பார்க்குறார் இந்த விசுவாமித்திரர் இல்ல இல்ல சித்தார்த், நல்ல பொருத்தமான பேரு தான் வைச்சு இருக்காங்க சரியான சாமியார் என்று மனதுக்குள் பேசிக்கொண்டாள்.

 

அப்போது சுஜாதா வாய் திறந்தாள் “சார் மன்னிச்சுக்கணும், நாங்க ஒண்ணா சேர்ந்துட்டாலே இப்படித்தான் கலாட்டா பண்ணுவோம், இனியா எப்போதுமே இப்படித்தான் வாய் ஓயாம பேசிட்டு இருப்பா.

 

“வெண்பா தனியா இருக்கும்போது ரொம்ப ரொம்ப அமைதின்னு பேரு வாங்குவா, எப்பவாவது இவ கூட சேர்ந்து கொண்டு இப்படி கலாட்டா செய்வா, நாங்க தெரியாம பேசிட்டோம் சார் எல்லார் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் சார், சாரி சார் என்றாள்.

 

இதற்கு மேல் பேசாமல் இருந்தால் நன்றாக  இருக்காது என்று வாயை திறக்க முயன்ற வெண்பாவிற்கு வார்த்தைகள் தந்தி அடித்தன, சமாளித்துக்கொண்டு அவனை நோக்கி “சாரி சார், நான் தான் ரொம்ப பேசிட்டேன் மன்னிச்சுடுங்க என்றாள் சங்கடத்துடன்.

 

“ஏன் நீங்கலாம் பேசலன்னு தான் நான் கேட்டேன், இப்படி எல்லாரும் மாறி மாறி சாரி கேட்டுடீங்க, கண்டிப்பாக உங்க எல்லாருக்கும் நான் சாரி வாங்கி தரேங்க போதுமா, என்று கூறி சூழ்நிலையை இயல்பாக்க முனைந்தான். “போதும் இதுக்கு மேல யாரும் சாரி கேட்காதீங்க, நம்மால தாங்க முடியாது என்று கூறினான்

 

மேலும் “நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், நீங்க பேசின எதுவும் நான் தப்பா எடுத்துக்கல, நாங்க பசங்க ஒண்ணா சேர்ந்து பெண்களை கேலி செய்ய மாட்டோமா, அது போல தான் இதுவும் நீங்க யார் மனசும் புண் படாம தான் பேசுனீங்க, இதோட இந்த பேச்சை விட்டுடுங்க, நாம ப்ராஜெக்ட் சம்பந்தமான வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம் என்று கூறி முடித்துவிட்டான்.

 

பின் அவர்களை அவனே நேரடியாக அழைத்துச்சென்று தொழிற்சாலையை சுற்றிக் காண்பித்தான், அது ஒரு சமையல் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, அதன் செயல் முறை விளக்கங்கள் பற்றி அவன் அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தான்.

 

அப்போது அவனை யாரோ கூப்பிட்டார்கள், அவன் சென்று அவர்களிடம் பேசிவிட்டு திரும்பினால் மூவரில் இருவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

அவன் இவர்களை நோக்கி திரும்பி வருவதை கண்ட வெண்பாவின் பார்வை வேறு திக்கை நோக்கியது, ஆனால் அங்கு அவனை பார்த்துக்கொண்டிருந்த சுஜியை புருவம் சுருக்கி அவன் பார்க்க, அவன் அவளை பார்ப்பதை கண்டதும் இயல்பாக மாறினாள்.

 

அவள் பார்வையின் பொருள் என்ன என்பதை யோசித்துக்கொண்டே வந்தவன் குழம்பினான். நேரம் மதியத்தை நெருங்க அவர்களை காண்டீனுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு வாங்கிக் கொடுத்தான்.

 

சுஜி யோசைனையில் ஆழ்ந்தாள், ஏதோ ஒன்று அவளை நெருடிக்கொண்டே இருந்தது அது என்ன என்பது அவளுக்கு புரியவில்லை, யோசித்து யோசித்து தலை வலிப்பது போல் தோன்ற தலையை ஆட்டி தன்னை சரி செய்தவள் நிகழ்காலத்திற்கு வந்தாள்.  அந்த ஏதோவொன்று எதுவென்று சொல்ல காலம் காத்திருந்தது

 

Advertisement