Advertisement

ஏனோ அன்று மனதே சரியில்லை. துளசி மீனாட்சியை எழுப்பி நிறுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, விரைந்து வந்து மகளை நிறுத்தியவன். அவளின் இரண்டு முட்டியிலும் பெரிய கட்டை பார்த்ததும் டென்ஷன் ஆகிவிட்டான்.

திரும்பவும் அவளை திட்டினான், “நீ பார்த்து வராமா பாரு எவ்வளவு காயம்னு” என்று அதட்டினான்.

துளசி அவளின் இன்னொரு பக்கம் பிடித்திருப்பதை பார்த்து எப்போதும் போல அவளின் முகம் பார்க்காமல் “கை எடு” என்றான்.

துளசி எடுக்கவும், அப்படியே இரு கையிலும் மகளை ஏந்திக் கொண்டவன் அவர்களின் ரூம் சென்றான்.

யாரையும் கவனிக்கவும் இல்லை, எப்போதும் இருப்பவர்கள் தானே எனச் சென்று விட்டான்.

ஆனால் அவனை பார்ப்பதற்கே அங்கே வந்திருந்த நாகேந்திரனுக்கு முகம் சுருங்கி விட்டது. எழுந்து சென்று விடுவோமா என்ற நினைப்பிற்கே வந்துவிட்டார்.

உண்மையில் திரு அவரை கவனிக்கவில்லை.  

உள்ளே சென்று மகளை விட்டவன் துளசி அருகில் இருக்கவும், முன்புறம் இருந்த அவனின் ரூமின் உள் வந்து படுத்து கொள்ள,

மீனாட்சியை சௌகர்யமாக படுக்க வைத்தவள் முன்புறம் வர, அங்கே திரு படுத்திருப்பதை பார்த்தாள். இப்படி பகலில் எல்லாம் லேசில் படுப்பவன் கிடையாது. வீடே வரமாட்டான், அது வேறு! இன்று வந்ததும் இல்லாமல் படுத்தும் இருக்கிறான்!

நாகேந்திரனின் முக மாற்றங்களை அவள் கவனித்து தானே இருந்தாள். நிச்சயம் திருவின் பேச்சு தான் இங்கே அவரை வர வைத்திருக்கும் என்று புரிந்தது.

“நாகேந்திரன் சித்தப்பா வந்திருக்காரு” என்றாள் மெல்லிய குரலில், அவன் பதில் சொல்ல மாட்டான் என்று தெரியும் ஆனாலும் பேசினாள், “உங்களை பார்க்கத் தான் வந்திருப்பாரு போல, அநேகமா பணத்துக்காகத் தான் இருக்கும். சாரதா சித்தி பத்தி தெரியாததா? அவங்களை கொண்டு உதவி செய்யாம இருக்க வேண்டாம்” என்று சொல்லி அவனின் முகம் பார்க்க கண்கள் மூடி கையை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான்

கேட்டிருப்பான் என்று புரிந்தது!

பின்பு அவள் பாட்டிற்கு வேலையை பார்க்க சென்று விட்டாள்.

“அந்த அடி எல்லார் முன்னையும் அடிச்சிருக்கேன். கொஞ்சமாவது இவளுக்கு சூடு சொரணை இருக்கா? என்னை பார்த்து எதுக்கு அடிச்சன்னு கேள்வி கேட்காம, நான் என்ன செய்யணும்னு சொல்லிட்டுப் போறா!” என்று கடுப்பாக நினைத்தான்.

ஆம்! அடித்து விட்டான் தான், என்னவோ மனது உதைத்தது அவன் செய்தது சரியில்லை என்று. அவள் சண்டை போட்டாலாவது நான் அப்படி தான் என எகிறலாம். ஆனால் அவளிடம் தான் அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லையே. முதல் முறை அடித்ததால் அதிர்ச்சியில் நின்று விட்டாள். அடுத்த முறை அடித்தால் அநேகமாக அடுத்த கன்னத்தையும் காண்பிக்க கூடும் என்று தோன்றியது.

அந்த நினைப்பு மனதில் இருந்த இறுக்கத்தை தளர்த்தியது. முகத்திலும் ஒரு புன்னகையை கொடுத்தது. ஆனாலும் சிறிது நேரத்தில் எழுந்து வெளியே வந்து விட்டான்.

பின் அவனின் மாமாவை பார்த்து “வாங்க மாமா!” என்றவன், “நான் நீங்க வந்ததை கவனிக்கலை” என்று சொல்லி அவரின் அருகில் அமர்ந்தான். கூடவே ஒரே யோசனை எதற்கு இத்தனை பேர் இன்னும் இங்கே என்பது போல,

அவரும் உடனே “என்ன மாப்பிள்ளை அப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட, பொண்ணுங்களை எல்லாம் தொழில்ல இழுக்கலாமா, வெளில ஆம்பளைங்க எவ்வளவு கஷ்டப்படறாங்க, தொழில்ல என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியாம சொகுசா இருக்குறாங்க. இதுல எனக்கு பிரச்சனை வேற இழுத்து விடறாங்க”

“மூணு வேலை உங்க அத்தை நல்லா கொட்டிக்கறா தானே அந்த திமிர் பேச வைக்குது” என்று அனைவர் முன்னும் சாரதாவைப் பேசினார்.

“விடுங்க மாமா, பணம் நான் ஏற்பாடு பண்றேன். இனி இதை பத்தி பேச வேண்டாம்” என்று விட்டான் முடிவாக.

அதற்கு பின் தான் அவரின் முகமே தெளிந்தது.

“ரொம்ப பயந்துட்டேன் மாப்பிள்ளை, பணத்துக்கு என்ன பண்றதுன்னு” என்று திரு வின் கை பிடித்து நன்றி சொல்ல,

அப்போது சொல்லியிருந்த உணவு வகைகள் வந்து விட, துளசி அதனை வாங்கி சரி பார்த்தவள், “இந்த பாத்திரம் எல்லாம் மாத்தி குடுத்துடு” என்று தனத்திற்கு பணித்தவள் திருவின் அருகினில் வந்தாள்.

எப்போதும் இந்த மாதிரி பொது விஷயங்கள் எனும் போது மேகநாதனிடம் தான் “பணம் கொடுத்து விடுங்கள் மாமா” என்பாள்.

ஆனால் இன்று என்னவோ திருவிடம் வந்தவள் எதுவும் பேசாமலேயே கை நீட்ட, உணவு வந்ததை பார்த்தவன் பணம் கொடுக்க தான் கைநீட்டுகிறாள் என்று புரிந்து, எவ்வளவு பணம் என்று கேட்கமால் பர்சை எடுத்து அப்படியே நீட்ட, அதனை வாங்கி கொண்டு வாசல் விரைந்தாள்.

எல்லோருமே இதனை பார்த்து தான் இருந்தார். “இவங்களுக்குள்ள தலையிட்டா நாம தான் ஜோக்கர் ஆகணும் போல” என்று தான் அவனின் சித்தப்பாக்களின் மனதில் தோன்றியது.

பின்பு உள்ளே வந்து விட்டவள், அகிலாண்டேஸ்வரியை தனியாக அழைத்து, “நான் பரிமாறினா அவங்க எல்லாம் எந்த அளவுக்கு சாப்பிடுவாங்க சொல்ல முடியாது. காலையில இருந்து இன்னைக்கு ஒரே பிரச்சனை. நீங்க சின்ன அத்தைங்க கிட்ட சொல்லி பரிமாறிக்கங்க, நான் மீனாட்சிக்கு சாதம் சாப்பிடக் கொடுக்கறேன்” என்று சொல்லி அவரின் பதிலை கூட எதிர்பாராமல் என் வேலை முடிந்தது என்பது போல நடந்து விட்டாள்.

எல்லோரும் உண்டு முடிக்கும் வரையிலும் வெளியில் வரவில்லை, வெளியில் என்ன நடந்தது என்றும் தெரியாது. திரு அவன் உண்டு முடித்து ரூமின் உள் வந்து பார்க்க மீனாக்ஷி உணவு உண்டு உறங்கியிருக்க துளசி அவளின் பக்கத்தில் வெறுமனே படுத்து இருந்தாள்.

திரு வந்து பார்த்ததும் எழுந்து அமர,

மகளின் அருகில் வந்து பார்த்தவன், பின்பு வெளியில் சென்று விட்டான். மில்லுகே சென்று விட்டான்.

எல்லோரும் உண்டு முடித்த பிறகு ஷோபனாவை குறித்த பஞ்சாயத்து ஆரம்பிக்க, துளசி எதனையும் கண்டு கொள்ளவில்லை. எல்லோரும் உண்டு விட்டார்கள் என்று தெரிந்த பிறகு சமையல் அறையில் நின்ற படியே உண்டு முடித்தாள். டைனிங் ஹாலில் அமர்ந்தாள், ஹாலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அங்கேயே உண்டு விட்டவள்,

“நாலு மணி போல எல்லோருக்கும் காஃபி வைக்கணும். கொஞ்சமா கீரை போண்டா போடு” என்று தனத்திற்கு பணித்து விட்டு அவளின் ரூமின் உள் புகுந்து கொண்டாள்.

அவர்களின் பேச்சினில் தலையிடவில்லை என்பதை விட என்ன பேசுகிறார்கள் என்பதனைக் கூட கவனிக்கவில்லை. இந்த முறை மேகநாதன் லேசில் விடவில்லை உடைத்து பேசிவிட்டார். ஆம்! அன்று திரு ஷோபனாவை பேசியிருக்கவும் அதனை பிடித்துக் கொண்டார்.  

“எதுக்கு கல்யாணம் பண்றது, என் பையன் பட்டினியா வெளில போய் வேலை பார்ப்பானா?”

“அப்படித் தான் பார்க்கணும்ன்னு நீங்க சொல்றீங்களா?” என்று தம்பிகளை கேட்க அவர்களால் வாய் திறக்க முடியவில்லை.

“காலையில சாப்பிடாம போன பையன் இன்னும் வீடு வரலை. யாராவது வாங்கன்னு கூப்பிட்டாங்களா கூடத் தெரியலை”  

காலையில் கணவன் எல்லோர் முன்பும் “வாயை மூடிட்டு இரு” என்று சொன்ன கோபத்தில் இருந்த ஷோபனா அவனை அதுவரை அழைக்கவில்லை. வீட்டினில் இப்படி தடபுடலாய் ஒரு விருந்து நடந்திருக்க அது கூட வெங்கடேஷிற்குத் தெரியவில்லை.

திரு மில்லிற்கு சென்றவன், வேலையாள் விட்டு வெங்கடேஷிடம் சொல்லி வீட்டிற்கு செல்லச் சொல்லியிருந்தான். அது தான் திரு!

இந்த கேள்வி கேட்கும் போதே வெங்கடேஷ் வீட்டினுள் நுழைய, “பாருங்க சொல்லாமையா மாப்பிள்ளை வர்றாரு” என்று சாரதா பேச,

“யார்ரா உன்கிட்ட வீட்டுக்கு வரச்சொன்னா?” என்று மேகநாதன் கேட்டார்.

“திரு தான் பா ஆளுங்க கிட்ட சொல்லி வீட்டுக்குப் போகச் சொன்னான்”  

மேகநாதன் பார்த்த பார்வையில் சாரதா கப்பென்று வாயை மூடிக் கொள்ள, யாராலும் எதுவும் பேசமுடியவில்லை.

“என்ன விஷேஷம் பா எல்லோரும் கூடியிருக்கீங்க” என்றபடி வெங்கடேஷ் அமர,

“முதல்ல நீ சாப்பிடு, சும்மா அத்தைங்க வந்தாங்கன்னு எல்லோரும் இருக்கோம்” என்றவர், “பசியா இருப்பான் சாப்பாடு போடு” என்று அகிலாண்டேஸ்வரியை பார்த்துச் சொல்ல,

“நீங்க உட்காருங்கம்மா” என்ற ராதா, “என்ன ஷோபனா போவியா மாட்டியா” என்று அதட்ட அதன் பிறகே ஷோபனா எழுந்து சென்றாள்.

இப்படியாக பலதும் ஓடினாலும் நான்கு மணிக்கு சரியாக காபி பலகாரம் என்று துளசி தன் கடமையை செய்ய, இந்த முறை வீடே சற்று அசந்து தான் அவளை பார்த்தது. 

எதோ பெரிய வீட்டில் வாழ வந்துவிட்டோம் என்ற பயத்தினில் கட்டாயத்தில் வேலை செய்கிறாள், அனுசரித்து போகிறாள் என்று நினைத்திருக்க, “அப்படி எதுவும் இல்லை, நான் நினைப்பதை தான் நான் செய்கிறேன்” என்பதாக தான் இருந்தது அவளின் செயல்கள்.  அடிவாங்கியும் கன்னத்தில் அதன் தடயங்கள் கூட மறையாத போதும், எதுவும் நடவாத மாதிரி இயல்பாக அவளின் வேலைகளை செய்வது அவள் எவ்வளவு உறுதியானவள் என்று காண்பித்து கொடுத்தது.  

ஆம்! அதுதான் துளசி என் கடன் பணி செய்வதே என இருப்பாள். இது தான் அவள். இந்த அவளின் குணங்களே திருவை அவளிடம் பிடித்து நிறுத்தியிருந்தது.  

ஆம்! பல சமயம் தனக்குள் சிக்கி சின்னாபின்னமாகி விடுவான் திரு.  அவனுடைய கடந்த கால காதல் அவனை துரத்தி கொண்டிருந்தது இன்னம். நான் அதிலிருந்து வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்றுக் கொண்டான்.

இன்று வரை துளசியின் முகம் பார்த்து பேசுவதில்லை. ஆனாலும் துளசி எந்த குறையும் சொல்லிக்கொள்ளாமல் காண்பிக்காமல் இருப்பதினால் தான் அவனால் வாழ்க்கையில் செயல் படவே முடிந்தது.   

 

Advertisement