Advertisement

அத்தியாயம் நான்கு :

திருவின் மாமா நாகேந்திரன் எந்த வேகத்தில் வந்தாரோ மேகநாதன் கிளம்பும் முன் அவரை பிடித்திருந்தார்.

“வாங்க மாப்பிள்ளை” என்ற மேகநாதனின் அழைப்புக்கு கூட செவி சாய்க்காமல் “திரு இல்லீங்களா மச்சான்” என்றார் அவசரமாக.

“இப்போ தான் கிளம்பினான்” என்று மேகநாதன் சொல்ல, அவர் தளர்வாக சோஃபாவில் அமர, எல்லோரும் அவரைத் தான் பார்த்திருந்தனர்.

ஒன்றுமே பேசாமல் நாகேந்திரன் தன் மனைவியைப் ஒரு பார்வை பார்க்க, சாரதாவிற்கு சர்வமும் நடுங்கியது.

“சும்மா பார்த்துட்டு நிக்கற, தண்ணி கொண்டு வா!” என்று மேகநாதன்  அகிலாண்டேஸ்வரியை அதட்ட, அவர் தன் கணமான சரீரத்தை தூக்கி கொண்டு போனார். அப்போதும் ராதாவோ இல்லை ஷோபனாவோ போகவில்லை.

அகிலாண்டேஸ்வரி உள்ளே சென்று தனத்தை அதட்டினார் “தண்ணிய மொல்லுறி”.  அவள் ஒரு க்ளாசில் கொடுக்க அதை கொண்டு வந்து நாகேந்திரனிடம் கொடுத்தார்.

“என்ன மச்சான் பிரச்சனை? திரு ஏன் அப்படி பேசினான்?” என்று நாகேந்திரன் கேட்க,

“மாப்பிள்ளை இப்ப வரைக்கு பசங்களை கைக்குள்ள தான் வெச்சிருக்கேன். ஆனா போன நிமிஷம் இருந்து வெக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். நானே கைக்குள்ள வெச்சிருந்தா நான் போன பிறகு உங்க யாருக்குமே இந்த வீடு இல்லாம போய்டும். இப்போ இருந்தே அவங்கவங்களுக்குறிய மரியாதை கொடுத்தா தான் எல்லாம் சரியா வரும்”

“திரு இன்னும் சின்ன பையன் கிடையாது” என்று நிறுத்தினார்.

“அவனை யாரு சின்ன பையன் சொல்றா?” என்று அவர் கேட்க,

“என் தங்கச்சிங்க பண்றது அப்படி தான் இருக்கு, அவன் இருக்கும் போது அவன் காதுபட கேட்டா கேட்கட்டும்ன்னு அவனைப் பத்தி பேசறாங்க, என் கிட்ட தான் அவங்களுக்கு உரிமை. என் பசங்க கிட்ட அவங்க மரியாதையா நடந்தா தான் அவங்க நடப்பாங்க, இதுல நான் ஒன்னுமே செய்ய முடியாது” என்று விட்டார். சாரதா அண்ணனின் பதிலில் “ஆங்” என்று விழித்தார்.  

எப்போதும் மேகநாதன் இப்படி பேசியது கிடையாது. மேகநாதனுக்கே இன்று என்ன பொண்ணு மேல திடீர் பாசம் என்ற வார்த்தை கோபப் படுத்தி இருந்தது.  

“என்னடி பிரச்சனை பண்ணின இங்க?” என்று நாகேந்திரன் சாரதாவை நோக்கி கர்ஜிக்க,

“நம்ம ஷோபனாவை தள்ளி விடறேன்னு சொல்லியிருக்கான், அதைத் தான் கேட்டேன்”  

“நீ யாருடி அதை கேட்க, உன் பொண்ணை கட்டி குடுத்துட்ட, இங்க அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா இங்க இருக்குற அத்தனை பேருமே கேட்பாங்க.  அப்படியும் அவங்க கேட்கலைன்னா இவ தான் எதோ தப்பா பேசியிருக்கா, அந்த அறிவு கூடவாடி உனக்கு கிடையாது”  

மேகநாதன் பொறுக்காமல் சொல்லியே விட்டார். “என் பேத்தி கீழ விழுந்து அடி பட்டு காயத்தோடு வந்து அழுதுட்டு இருக்கா, உங்க பொண்ணு ஒரு சின்ன காயத்துக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்னு கேட்கறா” என்றவர், கூடவே எல்லோரையும் விட மீனாக்ஷி அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் காண்பித்தார்.

அதாகப் பட்டது நாகேந்திரனிடம், “நீங்க ஷோபனாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் கொஞ்சம் புத்தி மதி சொல்லி அனுப்புங்க, உங்களுக்கு தெரியுமா? திரு காலையில துளசியை எல்லார் முன்னையும் அடிச்சான், ஆனாலும் அவ என் பையன் வயிறை வாட விடலை, அவனுக்கு உரியதை கவனிச்சிட்டு தான் பொண்ணை கூட ஹாஸ்பிடல் கூட்டிட்டிப் போறா”

“ஆனா என் இன்னொரு பையன் ஷோபனா என்ன சொன்னாலும் கேட்பான், பாருங்க அவன் சாப்பிடாம தான் போறான். இந்த வீட்ல உங்க பொண்ணுக்கு என்ன வேலை என் பையனுக்கு சாப்பாடு போடறதை தவிர. அதை கூடச் செய்ய முடியலைன்னா என்ன இருக்கு? அவ எதுக்கு இங்க இருக்கணும்?” என்று நாகேந்திரனிடம் கேட்டார்.

இப்படி எல்லாம் வரக் கூடும் என்று யாரும் நினைக்கவில்லை. எல்லோரும் ஸ்தம்பித்து இருக்க அகிலாண்டேவரிக்கே தன கணவரின் இந்த பரிமாணம் புதியது. தங்கைகள், மகள் என்று உருகுபவர் இப்படி பேசுவது “ஆ” என வாய் பிளந்து பார்த்தார்.

சாரதா இது தான் சாக்கென்று “எங்கண்ணன் இப்படி பேசுவாருன்னு நான் நினைச்சது இல்லையே. அண்ணனா இல்லையே எனக்கு அப்பாவா தானே இருந்தாரு” என்று புலம்ப ஆரம்பித்தார்.

இன்னொரு தங்கை சித்ரா “அண்ணா, ஒரு வேலைக்காரன் பொண்ணும் நம்ம ஷோபனாவும் ஒன்னா” என்று எப்போதும் படிக்கும் பாட்டினை படித்தார்.

இவ்வளவு பேசியும் இந்தப் பேச்சா என்று அப்படி ஒரு கோபம் மேகநாதனுக்கு வந்து விட, “என்ன வேலைக்காரன் பொண்ணு? அது நான் பார்த்து பண்ணி வெச்ச கல்யாணம்! அந்த மரியாதையை கூட உங்களுக்கு குடுக்க தெரியலைள்ள, எத்தனை முறை சொல்லியும் திரும்ப வேலைக்காரன் பொண்ணு பேசறீங்க. அதுக்கு மரியாதை குடுக்கலைன்றது எனக்கு குடுக்காததுக்கு சமம் தான்!” என்றவர்,

“முதல்ல தான் அவன் வேலைக்காரன் பொண்ணு, அவ கல்யாணம் நடந்த அடுத்த நொடி, திரு வோட பொண்டாட்டி. இந்த வீட்டுக்கு அவளும் ஒரு எஜமானி மறந்திட வேண்டாம்” என்றவர்,

“நான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடறேன்” என்று நாகேந்திரனிடம் சொல்லி கிளம்பினார்.

அதற்குள் கேட்டின் முன் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது. “இவ்வளவு விரைவாக எப்படி வந்தார்கள். இந்த கலாட்டாவில் நான் அட்டண்டரிடம் ஃபோன் செய்து சொல்லவேயில்லயே” என்று மேகநாதன் நினைக்க,

இரு கால் முட்டிகளிலும் கட்டோடு தடுமாறியபடி மீனாக்ஷி துளசியின் உதவியோடு கீழே இறங்க, தன்னுடைய வயதினையும் மறந்து மேகநாதன் ஓடினார் “பார்த்து பார்த்து” என்று.

பின் பேத்தியை பிடித்துக் கொள்ள, அவரின் உதவியோடு மீனாக்ஷி நடக்க ஆரம்பிக்க, துளசி ஆட்டோவை கட் செய்து உள்ளே வந்தாள்.

நாகேந்திரனை பார்த்தவள் “வாங்க சித்தப்பா” என்று அழைத்து, மீனாக்ஷி கால் கீழே விட்டு அமர்ந்திருப்பதை பார்த்தவள், அவள் கால் நீட்டி வைத்துக் கொள்ள வசதியாக ஒரு டீப்பாய் இழுத்து போட்டு அமரவைத்தாள்.

நாகேந்திரனுக்கு மனைவியை மகளை எல்லாம் முறைக்க மட்டுமே முடிந்தது. இவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்க ராதா எப்போதோ அவளின் ரூமின் உள் சென்றிருந்தாள்.

துளசி பின் சமையலறை சென்று நாகேந்திரனுக்கும் மேகநாதனிற்கும் காபி கலந்து எடுத்து வந்தாள். மேகநாதனின் பார்வை “பார் என் மருமகளின் லட்சணமும், உன் பெண்ணின் லட்சணமும்” என்று சாரதாவை குற்றம் சாடியது.

அவர்கள் தான் கொடுத்த தண்ணீர் கூட குடிக்காததினால் பெண்கள் யாருக்கும் துளசி காஃபி விடவில்லை. அதனால் அகிலாண்டேஸ்வரிக்கும் விடவில்லை.

“உங்களை பார்த்தவுடனே விட்டுட்டாங்களா” என்று மேகநாதன் துளசியிடம் கேட்க,

“நீங்க தானே ஃபோன் செஞ்சு சொன்னீங்க, ஐயா ஃபோன் பண்ணினாருன்னு அந்த அட்டண்டர் சொன்னானே”  

“நான் சொல்லலையே ம்மா” என்றவர், “ஒரு வேளை திரு சொல்லியிருப்பான்” என்றார்.

நாகேந்திரன் மீனாட்சியிடம் “ரொம்ப வலிக்குதா எப்படி விழுந்த?” என்று பேச்சு கொடுத்தார்.

துளசி அதற்குள் உள்ளே சென்று தனம் என்ன செய்தால் என்று பார்க்க மதிய சமையல் ஒன்றுமே ஆரம்பிக்கவில்லை.

அவளின் பார்வை புரிந்தே “காலையிலயே யாரும் சாப்பிடலை” என தனம் சொல்ல,

“நீ சாப்பிட்டியா இல்லையா?” என்று துளசி பாயிண்ட்டை பிடிக்க தனம் அசடு வழிந்தாள். அவளிடம் என்ன சமைக்க வேண்டும் என்று பட்டியலிட,

“இவ்வளவு எப்படி கொஞ்சம் நேரத்துல செய்ய முடியும்”

“ஒரு மணிநேரம் இல்லை ஒன்னரை மணிநேரம் உனக்கு கொஞ்சம் நேரமா? நீ தள்ளு சரிப்படமாட்ட” என்று துளசி தன் புடவையை இழுத்து சொருகினாள்.

“இல்லை, இல்லை பண்றேன்” என்று தனம் இறங்க, இருவருமாக சேர்ந்து சமைக்க ஆரம்பித்தனர்.

நாகேந்திரன் பணம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதை பதைப்போடு அப்படியே அமர்ந்திருந்தார். அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மேகநாதனிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்.

பெண்கள் அப்படியே அமர்ந்திருப்பதை பார்த்து “போங்க உங்க தம்பிங்க வீட்டுக்குப் போயிட்டு வாங்க” என்றவர், மகளிடம் “நீ போய் குளி” என நாகேந்திரன் அதட்ட அங்கே சபை கலைந்தது. 

அகிலாண்டேஸ்வரி மகளிடம் போய் விட, “அம்மா சாப்பிட ஏதாவது கொடும்மா” என்றாள் மகள், “காலையில சாப்பிடக் கூட இல்லை. இந்த அத்தைங்க இழுத்துட்டு வந்துருச்சுங்க”  

“அப்புறம் ஏண்டி துளசி தண்ணி கொடுத்தப்போ குடிக்கலை, குடிச்சிருந்தா இந்நேரம் வித விதமா பலகாரம் செஞ்சு கொடுத்திருப்பா, காலாட்டிட்டு சாப்பிட்டு இருக்கலாம். இன்னைக்கு உங்களால நானும் சாப்பிடலை” என்றார் அகிலாண்டேஸ்வரி.

“இந்த ஷோபனா ஒரு வேலை செய்யறது கிடையாது. அப்பா சொன்ன மாதிரி கொஞ்சம் நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டும்”  அங்கே அம்மா மகளுக்கு இடையினில் அரட்டை கச்சேரி ஆரம்பிக்க,

அவர்கள் இருவரும் மட்டும் இருப்பதை உணர்ந்த துளசி, தனத்திடம் அவர்களுக்கு காஃபியும் தீனி வகைகளும் கொடுத்து விட்டாள்.

பார்த்ததும் தான் “ஷப்பா” என்றானது அகிலாண்டேஸ்வரிக்கு.

“உன் வீடு தானே, நீ போய் என்ன வேணுமோ தனத்துக்கிட்ட சொல்ல மாட்டியா?” என ராதா வினவ,

“எனக்கு மட்டுமா சொல்ல முடியும்! உங்க அத்தைங்களுக்கும் சொல்லணும். நொட்டை நொல்லைம்பாங்க. அதுவுமில்லாம துளசி தண்ணி கொடுத்து வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் எழுந்து போனா உங்கப்பா அவ்வளவு தான்”

இவர்கள் பேச்சிற்கு தக்கமாதிரி, அங்கே தம்பியின் வீட்டிற்கு சென்ற தமக்கைகள், அங்கே அவர்களின் மனைவிமார்களிடம் “அண்ணா இப்படி சொல்லிட்டார். அப்படி சொல்லிட்டார். ஷோபனாவை திரும்ப கூட்டிட்டு போக சொல்லிட்டார்” எனப் பெரிய புகார் வாசிக்க,

“என்ன இது?” என்று அவர்கள், அவர்களின் கணவன்மார்களிடம் சொல்ல,

எல்லோரும் மதிய உணர்விற்கு வீடு வந்தவர்கள் மொத்தமாக “எப்படி நீங்க இப்படிச் சொல்லலாம்?” என்று அண்ணன் முன் நின்றனர். அதாகப் பட்டது ஷோபனாவை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்” என்று.

இவர்கள் தான் இப்படி பேசினரே தவிர ஷோபனா அசரவில்லை.

மேகநாதான் அவர்களுக்கு பதிலே சொல்லாமல் “சாப்பாடு ரெடியா பாரு, என்ன ஸ்பெஷல்? பொண்ணுங்களும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க” என அகிலாண்டேஸ்வரியிடம் கேட்க,

அவருக்கு தெரியாதே அவர் இன்னும் சமையல் அறை பக்கம் செல்லவே இல்லையே! கணவனை பார்த்து விழிக்க, “உன் சின்ன மருமக அவங்க அப்பா அம்மாவை வரவெச்சு இருக்காளே, என்ன ஸ்பெஷலாம்?” என்றார்.

அதற்கு ஷோபனா அலட்டிக்கொள்ளவில்லை, “அவர் போ என்று சொன்னால் நான் போய் விடுவேணா?” என்ற இறுமாப்பு தான், அவ்வளவு நேரத்திற்கும் குளித்து தயாராகி இருந்தாள்.

இதற்கு காலையில் இருந்து உணவு உண்ணவில்லை. ஆனால் சமையல் அறை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

“துளசி” என்ற மேகநாதனின் அழைப்புக்கு வந்த துளசியிடம், “சாப்பாடு ரெடியா?” என்றார்.

“வீட்ல எல்லாம் ரெடி மாமா. சித்தி சித்தப்பா அண்ணி வந்திருக்கிறதாலா வெளில அசைவம் கொஞ்சம் சொல்லியிருக்கேன். அது மட்டும் வரணும்” என்று அவள் சொல்லவும்,

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”  

“ஒரு அரை மணிநேரம்”  

“சரி” என்று அவர் சொல்லிவிட,

“மா தூங்கறேன்” என்ற மீனாவின் அழைப்பில் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டு மகளின் அருகில் வந்து அவளை எழுப்பி நிறுத்த முற்பட,அப்போதுதான் திரு வீட்டின் உள் நுழைந்தான்.

Advertisement