Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :

இங்கே இருந்தால் அதையும் இதையும் செய்து கொண்டிருப்பாள் என்று திருநீர்வண்ணன் துளசியை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த இரண்டே நாட்களில் புண்ணியாதானம் செய்து அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்பியிருந்தான்.

ஆனால் மகனுக்கு பெயர் மட்டும் இன்னம் சூட்டவில்லை. அதுவரை அவனை குட்டி திரு என்றே எல்லோரும் அழைத்தனர் குழந்தை அவனை போலவே இருந்ததினால்.

இங்கே யாரும் வேலை சொல்லப்போவதில்லை, அவளிற்கும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற போதும், இங்கே இருந்தால் கணவனையும் மகளையும் கவனிப்பது தலையாய கடமை என்பது போல எப்படியும் ஓய்வு எடுக்க மாட்டாள் என்று புரிந்து தான் அனுப்பினான்.

இதோ இது மூன்றாவது மாதம், நேற்று தான் அகிலாண்டேஸ்வரி சொல்லிக் கொண்டிருந்தார், “மீனாக்ஷிக்கு பரீட்சை வருது, துளசியை கூட்டிட்டு வா. அப்போ தான் அவ கொஞ்சமாவது உற்சாகமா இருப்பா!”

“முன்ன மாதிரி கலாட்டா எல்லாம் இல்லைன்னாலும், புக் எடுத்து படிக்கறான்னாலும் வீடு வெறிச்சுன்னு இருக்கு, இவளும் வெறிச்சுன்னு இருக்கா!”

“சின்னதை பார்க்கறதை விட பெரியவளை பார், இப்போ அவங்கம்மா கூட இருக்கணும். என்ன தான் நீயும் நானும் நல்லா பேசினாலும் கவனிச்சாலும் அவளுக்கு துளசியோட தான் ஒட்டுதல் அதிகம், இப்போ மீனாக்ஷியும் கொஞ்சம் பொறுப்பா இருக்கறதால அம்மாவை கேட்கலை ஆனா ரொம்ப தேடறா” என்று நீளமாகப் பேசினார்.

“என்னம்மா நீ இவ்வளவு பில்ட் அப் குடுக்கற, வாரா வாரம் போய் பார்த்துட்டு வர்றோம் நானும் மீனாக்ஷியும், அப்புறம் என்ன?”

“இருந்தாலும்” என அகிலாண்டேஸ்வரி இழுத்தார்.

“என்னம்மா?” என்று திரு இழுக்க,

“எனக்கும் என் பேரனை கொஞ்சணும்” என்றார் பட்டென்று.  

“மா” என்று அவரை போலவே சொன்னவன்,

“நாம யாரும் சரியா மீனாக்ஷியை கொஞ்சினோமா தெரியாது. அப்பா மட்டும் தான் எப்பவும் அவளை வெச்சிட்டு சுத்துவார், அப்புறம் வெங்கடேஷ்!”

“இப்போ இருக்குறவனுக்கு கிடைக்கற ஒரு கவனிப்பு இவளுக்கு கிடைக்கலை, முதல்ல நாம அவளை பார்ப்போம்!”

“அப்படி சொல்லாதடா கவனிப்புன்றது கைல தூக்கி வெச்சு கொஞ்சி கேட்கறதெல்லாம் வாங்கி கொடுத்து இப்படி எல்லாம் கிடையாது!”

“நீ எப்பவும் வீட்ல இருக்கும் போது அவளை கண்பார்வைல வெச்சிருப்ப, அவ ஸ்கூல் போகும் போதும் அங்க உன் பொண்ணு என்ன பண்றான்னு எப்பவும் உனக்கு தெரியற மாதிரி தான் வெச்சிருப்ப, இதுக்கு மேல என்ன கவனிப்பு வேணும்”

“உன் பொண்ணு ஆசைப்பட்டு கேட்டு எதுவும் வாங்கிக் கொடுக்காம இருந்திருக்கலாம். ஏன்னா அவ ஆசைப் பட்டு கேட்கற அளவுக்கு எதுவுமே இல்லையே. எல்லாம் தான் முன்னமே அவளுக்கு கிடைக்கற மாதிரி செஞ்சிடுவியே”   

“மா” என அவரை அடக்கினான். ஆனாலும் அகிலாண்டேஸ்வரி பேசிக் கொண்டே போனார்.     

“மீனாக்ஷி பொறக்கற வரை நீ எந்த வேலையும் உருப்படியா செஞ்சது கிடையாது. வாழ்க்கைல ஒரு பிடிப்பில்லாம சுத்திட்டு இருந்த! ஏன்னு எனக்கு இன்னம் தெரியாது! உனக்கும் அப்பாக்கும் என்ன பிரச்சனை திடீர்ன்னு! ஏன் உன்னோட கல்யாணம் எதுவும் தெரியாது!”

“ஆனா நீ அவ பொறந்த பிறகு தான் சரியான, கொஞ்சம் முகமும் சரியாச்சு, நல்லா உழைக்க ஆரம்பிச்ச!”

“ஆனா இப்போ கொஞ்சம் மாசம் முன்ன வரை கூட உனக்கு துளசியை பிடிக்கும்னு எனக்கு தெரியவே தெரியாது. அதனால் நான் கூட அவளை தள்ளி தான் வைப்பேன், அதட்டுவேன், எல்லாம் பண்ணுவேன் தப்பு தானே!” என்றார்.

“அதுதான் இப்போ மாறிட்டல்ல” என்று அவன் சொல்ல,

“பின்ன இப்போ என் வேலையை நான் செய்யறேன். எனக்கு முடியாத போது என்னை யார் கவனிப்பா. உண்மையா அதுக்கு தான் அவளோட ராசியாயிட்டேன்” இதில் பொய் உரைக்க என்ன இருக்கிறது என்பது போல மகனிடம் அப்படியே உள்ளதை உரைத்தார்.

“அப்போ உன்னை அவ பார்த்துக்கணும்னு தான் இப்போல்லாம் நல்லா நடந்துக்கறியா” என திரு அவரை முறைத்தான்.

“உண்மையா அதுக்கு தான்! ஆனா அது மட்டும் இல்லை, ஏன்னா எப்படி இருந்தாலும் நீயோ வெங்கடேஷோ எங்களை விடப் போறதில்லை, ஏன் ராதாவே விட மாட்டா! ஆனாலும் உங்களை விட துளசி நல்லா பார்த்துக்குவான்னு தோணுது. ஏன்னா உங்களுக்கு எல்லாம் பொறுமை கம்மி!”

“மா, இதெல்லாம் ரொம்ப அநியாயம்” என்று சொல்லும் போதே மேகநாதன் இரவு உணவிற்கு டைனிங் டேபிள் முன் அமர்ந்தார்.

“மீனா” என்று திரு குரல் கொடுக்க, காரிடாரில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவள், எழுந்து உள்ளே வந்து “என்னபா?” எனவும், திரு கண் காட்டியதும் தாத்தாவிற்கு பரிமாற சென்றாள்.

“படிக்கற புள்ளையை ஏன் எழுப்பற?” என்று மேகநாதன் கடிந்தார்.

“என்ன எழுப்பறாங்கலாம்? படிப்பெல்லாம் அப்புறம், முதல்ல வாழ்க்கைல வேண்டியது பொறுப்பு, பணிவு, மனுஷங்களை புரிஞ்சிக்கிற தன்மை. என் பொண்ணுன்னு இதை சொல்லலை, என் பையனுக்கும் இதை தான் சொல்வேன்!” என திரு சொல்ல,

“ஆமா, இவன் இருந்துட்டான், இவன் சொல்றான்!” என்று அவரும் வார்த்தையை விட்டார்.

அவ்வளவு தான் சேரை தள்ளிக் கொண்டு திரு எழுந்த வேகத்திற்கு அங்கிருந்த அனைவரும் பயந்து விட்டனர்.  

“நான் பொறுப்பா இருக்கவும் தான் நீங்க எனக்கு என்ன பண்ணியிருந்தாலும் உங்களை விட்டு போகலை. உங்களை விட்டு போகாத ஒரே காரணத்துனால நிறைய பாவத்தை கூட சம்பாரிச்சிட்டேன். நீங்க எதோ பெருசா பண்ணிட்ட மாதிரி எப்பவும் பேசவேண்டாம்” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

முகத்தினில் அவ்வளவு கோபம் ஆவேசம் ஆக்ரோஷம்!  

 

ஒரே நொடியில் இன்னும் பெரிய சண்டை வந்திருக்கும். அகிலாண்டேஸ்வரி நடுவில் புகுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

“திரு அமைதியாயிரு, உங்கப்பா பெரிய பேச்சுன்னு உனக்கு தெரியாதா!” என்று மகனை அதட்டி,  

“உங்க பசங்களை நீங்க வளர்த்துட்டீங்க தானே! அவன் பசங்களை அவன் வளர்த்துக்குவான். உங்க வேலையை பாருங்க!” என்று கணவனை அடக்கினார்.

அப்படி எல்லாம் மேகநாதனிடம் யாரும் பேசிவிட முடியாது!

மனைவியை பார்க்க அகிலாண்டேஸ்வரியின் முகத்தினில் தெரிந்த கோபத்தில் அமைதியானார்.  

“அவருக்கு எப்பவும் அவர் சொல்றது தான் சரி!” என்று திரு இடத்தை விட்டு நகரப்போனான்.

“டேய் உட்காருறா” என்று அவனையும் அதட்டினார் அகிலாண்டேஸ்வரி.

இப்படியாக சண்டைகளும் சச்சரவுகளும் இருந்தாலும், மகனுக்கும் தந்தைக்கும் அதிகம் முட்டிக் கொள்ள அகிலாண்டேஸ்வரி விடவில்லை.

துளசி வரும் வரை தான் அவருக்கு இந்த கடமை, பின் துளசி பார்த்துக் கொள்வாள்.

“என்ன தாத்தா நீங்க? நானே எப்போடா இதை கீழ வைக்கலாம்ன்னு பார்த்தா, நீங்க அப்பாவை ஏத்தி விடறீங்க!” என்று மேகநாதனிடம் மீனாக்ஷி முறுக்கினாள்.

“என்ன புள்ளையை படிக்க சொல்றானா உங்கப்பன். உனக்கு சம்பாரிச்சி வைக்கறதை விட அவனுக்கு என்ன வேலை? நீ புக்கை அந்த பக்கம் வை கண்ணு!” என்று அவர் சொல்ல,

“அச்சோ தாத்தா, எங்கப்பாவை நீங்க திரும்பவும் சண்டைக்கு இழுக்கறீங்க போங்க!” என்று மீனாக்ஷி குறை படவும் தான் அமைதியாய் உண்ண ஆரம்பித்தார்.

இப்படியாக இங்கே ஓட, வீடு அடங்கியதும்,

“என்னை எப்போ கூட்டிட்டு போறீங்க?” என்று துளசி அலைபேசியில் கேட்டாள்.

“என்னடி அவசரம் உனக்கு?” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.

“எங்கம்மா கூட்டிட்டு வா சொல்றாங்க, நீ வர்றேன்னு சொல்ற. அப்போ நான் தான் கொடுமைக்காரனா. நீ இங்க வந்தா என்னை கொடுமை பண்ணுவ. அஞ்சு மாசத்துல வந்தா போதும்!” என்றான் ஸ்ட்ரிக்டாக.

“ஏன்?” என்று சோர்வான குரலில் மனம் சுணங்கியபடி துளசி கேட்டாள்.

“அவ்வளவு ஒன்னும் நான் நல்லவன் எல்லாம் கிடையாது. திரும்ப பேபி ஃபார்ம் ஆனா அப்புறம் நான் பொறுப்பில்லை. உன்னை பக்கத்துல வெச்சிக்கிட்டு அவ்வளவு கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. சும்மாவே கிடையாது, இப்போ என்னை நீ அநியாயத்துக்கு சைட் அடிக்கற. ஒழுங்கா அங்கேயே இரு, எங்களை நாங்க பார்த்துக்குவோம்!” என்றான் கடுப்பாக.

பின்னே அவனே கஷ்டப்பட்டு பிரிந்து இருந்தால், இவள் இப்படி பேசுகின்றாள் என்ற ஆற்றாமை.  

“ஆங்” என்று வாயை பிளந்தாள்.

சில நொடி தான், பின்னே அவனையும் விட அதிகமாக கடுப்பாக பேசினாள்.

“யாரு? நீங்க! உங்களுக்கு கட்டுப்பாடு கிடையாது! இதை நாங்க நம்பணும்! எதோ மிஸ் ஆகி பேபி ஃபார்ம், ஆனா எல்லா நேரமும் ஆகிடுமா?”

“அப்படியே என்னை பார்த்தவுடனே நீங்க கட்டில்ல பாஞ்சுடுவீங்க பாருங்க, சும்மா அலப்பறை! ஒழுங்கா வந்து என்னை கூட்டிட்டு போங்க! மீனாக்ஷி தினமும் எப்போம்மா வருவா கேட்கறா? அவ ஏங்கிட மாட்டாளா? முன்னயே ரொம்ப கலாட்டா பண்ணிட்டோம்! ஒழுங்கா பொண்ணை பார்க்கணும்!” என்று எகிறினாள்.  

அதற்க்கு சற்றும் குறையாமல் “ஏண்டி, நான் பாயாம தான் உனக்கும் பொண்ணும் பையனும் வந்துட்டாங்களா?” என்று திருவும் எகிறினான்.

“என்னமோ வருஷத்துக்கு ஒன்னு வந்த மாதிரி பேசறீங்க? இவ்வளவு பெரிய கேப் இருக்கும் போதே இந்த பேச்சு!” என்று துளசி நொடித்தாள்.

“அடிங்க, என் எதிர்ல மட்டும் நீ இருந்த…” என திரு பேச,

“இல்லன்னா என்ன? கார் எடுத்தா அஞ்சு மணிநேரம் வந்துடலாம். அப்புறம் நான் உங்க எதிர்ல தான் இருப்பேன்!” என்று துளசி உசுப்பேட்றினாள்.

“அம்மாடி பெரிய வாயாடி ஆகிட்ட, இவ்வளவு பேசுவியா நீ!” என்று திரு ஆச்சர்யம் போல வினவினான்,

“அதுதானே என்னை தானே பேசுவீங்க, ஆனாலும் வரவா போறீங்க, இல்லை பாயாவா போறீங்க!” என்று சொன்ன துளசிக்கு சிரிப்பு வந்து விட, சிரித்து விட்டாள், திருவும் சிரித்து விட்டான்.

கணவன் மனைவி இருவருமே சத்தமாக வாய்விட்டு சிரித்துக் கொண்டனர்.

பின்பு கனிவாகவே பேசினாள், “எனக்கு உங்களை பத்தி தெரியும், உங்க கட்டுப்பாடும் தெரியும். அதனால் பயப்படாம என்னை கூட்டிட்டு போங்க, புருஷன் பொண்டாட்டினா இந்த வேலை மட்டும் தானா, வேற வேலையே இல்லையா?” என்று கிண்டலடித்தாள்.

“ஹ ஹ” என்று இன்னம் சத்தமாக சிரித்தவன், “அதென்னவோ எல்லோரும் அப்படி தான் நினைக்கறாங்க போல, தினமும்ன்றாங்க, விடிய விடியன்றாங்க, ஒரு நாளைக்கு நாலைஞ்சு தடவைன்றாங்க” என்று ரகசியத்தை அம்பலமாக பேசினான்.

“அய்யே என்ன பேச்சு இது?” என்று முகம் சுளித்தவள், “முதல் பேஸ்ட் போட்டு வாயை விளக்குங்க” என்றாள்.

“நீயே என் பக்கத்துல இல்லை, உன்னை ஒரு கிஸ் கூட பண்ண முடியாது. அப்புறம் எதுக்கு இந்த நேரத்துல அந்த வேலை!” என்று திரு சரசமாக பேச,

“ஷ் பா, என்னால முடியலை! ஃபோன் வைக்கறேன்” என்று துளசி ஃபோனை வைக்கப் போக, “வெச்சிடாதடி” என்று அதட்டினான்.

Advertisement