Advertisement

பிரசன்னாவின் கைபேசியில் இருந்து தான் அழைத்தால். பிரசன்னாவின் நம்பர் திருவிடம் இருந்தது. மனைவியின் நினைவில் வெகு நேரம் உறங்காமல் இருந்தவன், மூன்று மணிக்கு மேல் தான் உறங்கியிருந்தான். அதனால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
விடாமல் இரண்டு மூன்று முறை அடித்த பிறகு தான் எடுத்தான். “ஹல்லோ” என்ற குரலிலேயே அவன் உறக்கம் தெளியவில்லை என்று துளசிக்கு புரிந்தது.
“நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன், நான் வர்றவரை மீனாட்சியை தனியா விட்டுட்டு எங்கயும் போக வேண்டாம்” என்ற துளசியின் குரல் கேட்க,
அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தான். பின் அழைப்பு எந்த நம்பரில் இருந்து என்று பார்க்க பிரசன்னாவின் நம்பரில் இருந்து.
“துளசி” என்ற அவனின் அழைப்பு உயிர்வரை தீண்டியது. அவளின் பேரை சொல்லி எப்போதாவது அழைத்தானா என்பதெல்லாம் ஞாபகமில்லை. இப்போது கேட்டதே அப்படி நெகிழ்த்தியது. உடலில் ஒரு சிலிர்ப்பு, கண்களை மூடிக் கொண்டாள்.    
“சே, சே, இவனை விட்டா இத்தனை நாள் தனியாக உட்கார்ந்து இருந்தேன்!” என்று தான் அந்த நொடி தோன்றியது.
பின் திரு அமைதியாகிவிட ,அவள் சொல்லியதெல்லாம் திரும்ப சொன்னாள்.
“நான் வந்துட்டு இருக்கேன், மீனாக்ஷியை படுத்திருக்க சொல்லியிருக்கேன், அவளை தொந்தரவு பண்ணவேண்டாம். படுத்திருந்தா தூங்கிடுவா, நீங்க அவளை விட்டு எங்கேயும் போகாதீங்க”
“மாமாவும் அத்தையும் திருப்பதி போனாங்கலாமே, போகக் கூடாது! அவங்களை திரும்ப வரச் சொல்லுங்க!” என்று பட படவென்று சொல்ல, புரிந்தது போலவும் இருக்க, புரியாதது போலவும் இருக்க,
“ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையில். 
“மீனாக்ஷி பெரிய பொண்ணாகிட்டா” என்றாள் தாழ்ந்த குரலில், அருகில் அமர்ந்திருந்த பிரசன்னாவிற்கு நன்கு கேட்டது.
“அதுக்குள்ளயா, பன்னண்டு வயசு தானே ஆகுது” என்றான் கவலையான குரலில் திரு.
“அது பத்தியெல்லாம் ஒன்னுமில்லை, ஒரு ஒருத்தர் ஒரு ஒரு மாதிரி!” என்று திருவிடம் சொல்லியவள், “அத்தையை திரும்பி வரச் சொல்லுங்க, காரணம் சொல்ல வேண்டாம், காரணம் சொன்னா அவங்க சின்ன அத்தைங்க கிட்ட எல்லாம் சொல்லிடுவாங்க! அவங்க உடனே மீனாக்ஷியை பார்க்க வீட்டுக்கு வந்துடுவாங்க!”
“நான் வர்ற வரை யாரும் அவளை தொந்தரவு பண்ண வேண்டாம். காலையிலயே ரொம்ப பயந்துட்டா! பயந்து தான் ஃபோன் பண்ணினா, இவங்க வந்து ஆர்ப்பாட்டம் பண்ணினா என்னவோ ஏதோன்னு நினைக்க போறா, நான் சொல்லி தான் இருக்கேன், நான் வந்துட்டே இருக்கேன்!” என்று சொல்ல,
“ம்ம், ம்ம்” என்று உம் கொட்டிக் கொண்டிருந்தான்.
துளசி பேசி முடித்த பிறகும் அவனுக்கு கைபேசியை வைக்க மனதில்லை, அப்படியே வைத்திருந்தான், “வெச்சிடட்டுமா?” என்று துளசி கேட்க,
அதற்கும் “ம்ம்” தான்.
தான் முன்பிருந்தே இப்படி அவனிடம் பேசி பேச வைத்திருக்க வேண்டும். அவனை தள்ளி தள்ளி நிற்க விட்டது என்னுடைய தவறு என்று தோன்ற ஆரம்பித்தது. இத்தனை நாட்கள் நடந்ததற்கு திரு வின் மேல் தப்பு சொல்லாமல் அவள் மேலேயே தப்பு சொல்லிக் கொண்டாள். புதிய முடிவாக அவள் மனதிற்குள் எப்போதும் திருவுடன் பேசுவதை இனி அவனுடன் நேராக பேச முடிவெடுத்துக் கொண்டாள். என்னவோ அந்த நிமிடம் தோன்றியது, “உன் வாழ்க்கை உன் கையில்! அவனிடம் முறைத்துக் கொண்டு முட்டாள் தனம் செய்யாதே!” என்று.   
இப்படி முடிவெடுத்த பிறகு மனது மிகவும் லேசாக உணர்ந்தது. இந்த சில மாதங்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் மாயமாய் மறைந்தது.    
பின் பிரசன்னாவிடம் திரும்பி “சாரி பிரசன்னா, அங்கே வீட்ல அத்தை இல்லை, அத்தை கிட்ட சொல்லாம இங்க அம்மா கிட்ட சொல்றது சரியில்லை. அத்தை கிட்ட இப்போவே சொன்னா நான் வீட்டுக்கு போறதுகுள்ளயே அங்கே பெரிய கும்பலே இருக்கும்!”
“என் பொண்ணை என்னை தவிர வேற யாரும் முதல்ல பார்க்கறதுல இஷ்டமில்லை அதான்!” என்றாள்.
“தட்ஸ் ஓகே கா” என்றவன், அவளின் கையை தட்டி கொடுத்து கண்களை மூடிக் கொண்டான். பின்னே என்னவோ ஏதோவென்று அவனும் பயந்து இருந்தான். இப்போது தான் மனது ஆசுவாசமாகியது. 
திருவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவன் வெளியில் இவன் படுக்கையில் படுத்திருக்க, மீனாக்ஷி அங்கே உள்ளே அம்மாவின் படுக்கையில்!
மெதுவாக எழுந்து உள்ளே சென்றான்.
மீனாக்ஷி தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள். ஏ சீ ஓடிக் கொண்டிருக்க, ஏ சீ யை அணைத்தவன் ஃபேன் போட்டு அங்கிருந்த ஜன்னலை திறந்து விட்டான். அப்போது தான் விடியத் துவங்கி இருந்தது.
தலை வரை போர்த்தியிருந்த போர்வையை முகம் தெரியுமாறு மெதுவாக எடுத்து விட்டான். அவன் எடுத்து விடவுமே கண்கள் திறந்து விட்டாள் மீனாக்ஷி.
அப்பாவை பார்த்ததும் “அப்பா நான் இன்னைக்கு ஸ்கூல் போகலை, அம்மா வர்றேன்னு சொன்னாங்க”  
“சரி போகவேண்டாம். அம்மா வரட்டும்” என்று முடித்து கொண்டான்.
திரும்ப மகள் போர்வையை எடுத்து முகத்தினை மூடிக் கொள்ள, “முகம் முழுசும் போர்த்தாதே, முகத்தை வெளில காட்டு, இல்லை தலை வலிக்கும்” என்று சொல்லியவனாக, “நான் வெளில தான் இருக்கேன், எதுன்னாலும் அப்பாவை கூப்பிடு” என்று சொல்ல,
“பா பசிக்குது” என்று உடனே மகள் பதில் சொல்ல,
“என்ன வேணும்?” என்றவனிடம்,
“பால் வேண்டாம் காஃபி கொடுக்கறீங்களா?” என்றாள் சலுகையாக.
“ம்ம்ம்” என்று தலையாட்டி வந்துவிட்டான்.
சமையலறை வந்து பார்த்தால் அங்கே எல்லாம் துடைத்து வைத்து க்ளீனாக இருந்தது.
பால் இருக்கா இல்லையா என்று தெரியவில்லை. பிரிட்ஜ் திறந்து பார்த்தால் அங்கே இருந்தது. எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்தான்.
முன்னே பின்னே அவன் சமையலறை வந்ததாக அவனுக்கு ஞாபகமே இல்லை. எப்போதும் எல்லாம் டைனிங் டேபிள் மேல் இருக்கும், துளசி இருப்பாள், அம்மா இருப்பார், அதனால் சமையல் அறைக்குள் அவன் நுழைவதே கிடையாது. அங்கே தனம் வேறு எப்போதும் இருப்பாள் அதனால் வரவே மாட்டான்.
ஒரு வழியாக பாலை காய்ச்சியவனுக்கு காஃபி தூள் எங்கே? சர்க்கரை எங்கே? என்று தெரியவில்லை. தெரிந்தாலும் அது எவ்வளவு போட வேண்டும் என்ற அளவு தெரியாது.
வேறு வழியில்லாமல் பிரசன்னாவின் கைபேசிக்கு அழைத்தான். அவனின் எண் பார்த்தவுடனே பிரசன்னா துளசியிடம் கொடுக்க,
துளசி எடுத்ததும், “இந்த தனம் இன்னும் வரலை, மீனா காஃபி கேட்டா, காஃபி தூள் சர்க்கரை எல்லாம் எங்கே இருக்கு” என்றான்.
திரு அழைத்தது ஆனந்தமாக இருக்க, திரு கேட்டதில் துளசிக்கு சிரிப்பு வந்தது. “தனம் வர இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு, நீங்க சமையல் கட்டுலையா இருக்கீங்க?” என்று ஆச்சர்யம் போல வினவியவள், “உங்களுக்கு அடுப்பையாவது பத்த வைக்க தெரியுமா?” என்றாள் புன்னகையுடன்.
“அதெல்லாம் தெரியும்” என்றான் மிடுக்காக.
“உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியாதே” என்று புன்னகையுடனே பதில் சொன்னவள், “உங்க தம்பி எழுந்தாச்சான்னு எட்டி பாருங்க, அவர் கிட்ட கேளுங்க எடுத்து தருவார், இல்லை அவர் கிட்டயே கலக்கி குடுக்க சொல்லுங்க” என்றவள்,
“ஆமாம், நான் தான் அவளை தூங்கச் சொன்னேனே, நீங்க எழுப்பிணீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை, போர்வை முழுசா போர்த்தியிருந்தா, முகம் தெரியுற மாதிரி எடுத்து விட்டேன்!” என்றவனிடம்,
“அதுதானே பார்த்தேன், அவ அப்படி செய்யாம இருந்தா தூங்கியிருப்பா, காஃபி குடுத்துட்டு அவளை தூங்க விட்டுடுங்க!” என்று சொல்ல,
இது தான் திருமணமானதில் இருந்து அவர்களுக்குள் நடந்த மிக நீண்ட பேச்சு வார்த்தை!
துளசி சொன்னது போல எட்டி பார்க்க, அப்போது தான் வெங்கடேஷ் எழுந்து வந்து கொண்டிருந்தான்.
“டேய், ஒரு காஃபி போடு, மீனா கேட்டா, எனக்கு போடத் தெரியாது!” என்றான் திரு.
“என்னது நீ பால் காய்ச்சினியா” என்று அவனும் ஆச்சர்யப் பட்டுக் கொண்டே அண்ணன் கேட்டதை செய்து கொடுக்க, எடுத்து போய் மகளிடம் கொடுத்து, அவள் குடித்ததும் டம்பளர் வாங்கியவன், “அம்மா உன்னை தூங்க சொன்னா!” என்றான்.
“நீங்க பேசினீங்களாப்பா” என்று கேட்ட மகளின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!
“ஆம்” என்பது போல தலையாட்டியவன், “தூங்கு” என்பது போலக் கை காட்ட,
“தூக்கம் வரலை, உங்க மொபைல் தர்றீங்களா?” என்று மகள் கேம் விளையாடக் கேட்க,
“அதெல்லாம் தூக்கம் வருமாம், உங்க அம்மா தான் சொல்றா! நோ கேம்ஸ், பேசாமா தூங்கு!” என்று கண்டிப்பான குரலில் சொல்ல, மீனாக்ஷி அவன் சொல் பேச்சு கேட்டு தூங்குவது போல கண்களை மூடி கொண்டாள்.
வெளியில் வந்து அமர்ந்தவன், அதன் பின்னே தான் அப்பா அம்மாவிடம் “திரும்ப வாருங்கள்” என்று சொல்லி துளசிக்காக வாசல் பார்த்து காத்திருந்தான். 

Advertisement