Advertisement

அத்தியாயம் ஒன்பது :
“என்னவாகிற்று எனக்கு?” என்று துளசி நினைக்காத நாளே இல்லை. ஆம்! அந்த நிமிடம் என்னவாகிற்று என்று தெரியவில்லை வீட்டை விட்டு வந்து விட்டாள். வந்து இதோ மூன்று மாதம் ஆகிவிட்டது.
வெங்கடேஷ் பின்னோடு வந்து அழைத்த போது கையினில் காசில்லாததால் “என்னை பஸ் வெச்சி விடுங்க” என்று மட்டும் சொல்ல,
“சரி வாங்க” என்று சொல்லி அவளிற்கு அவசரத்திற்கு ஒரு ஸ்லிப்பர் வாங்கி கொடுத்து பணம் கொடுத்து அனுப்பிவிட்டவன்,
“அது நான் ரொம்ப பணத்துக்கு அலைஞ்சேன், அதுக்காக கொடுத்தான்!” என்று விளக்கமும் கொடுக்க,
“கொடுத்தது பிரச்சனையில்லை, என்கிட்டே சொல்லவேயில்லை” என்று மட்டும் முடித்துக் கொண்டு பஸ் ஏறிவிட்டாள்.
இப்போது வீட்டை விட்டு வந்ததை நினைத்தால் சிறு பிள்ளைத்தனமாய் தோன்றியது!   
அவள் வந்த அடுத்த நாளே மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் அவளின் பின்னே வந்தனர். “வீட்டிற்கு வா” என அழைத்து. ஆனால் அவளுக்கு போக மனதில்லை. “வர மாட்டேன்” என்றும் சொல்லவில்லை.
“இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு வர்றேன் அத்தை, அப்படி என்னால இங்க ரொம்ப நாள் இருக்க முடியாது. எனக்கு வேற போக இடமும் கிடையாது, நான் படிக்கவும் இல்லை வேலைக்கும் போக முடியாது, படிக்காதவங்க எல்லாம் வேலை செய்ய முடியாதுன்னு கிடையாது அப்படி என் குடும்பத்தை விட்டு தனியா நிக்கிற அளவுக்கு எனக்கு மனப் பக்குவம் கிடையாது”  
“கொஞ்சம் நாள் இருந்து கொஞ்சமா எனக்குள்ள இருக்குற சூடு சொரணை எல்லாம் ஒழிச்சிட்டு வர்றேன். எனக்கு இப்போ ரொம்ப செத்து போகணும் போல இருக்கு, ஆனா என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகற வரையாவது நான் இருக்கணும் தானே” என அழுது கொண்டே சொல்ல,
அந்த பெரியவர்களுக்கு அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. “சீக்கிரம் வந்துடு, உன் பொண்ணு முகத்தை எங்களால பார்க்க முடியலை” என்றனர்.
“வந்துடறேன்” என்று தான் சொல்லி அனுப்பினாள். ஆனால் இதுவரை போக கால் வரவில்லை. அவளுள் ஒரு அதீதமான சோர்வு கூட. 
மகளின் ஞாபகம்! கூடவே திருவின் ஞாபகம்! “என்னை போ என்று கோபத்தில் சொல்லிவிட்டான் தான். ஆனால் இது வரை வா என்று கூட கூப்பிடவில்லையே” இப்போது அவளிடம் கைபேசியும் இல்லை. பிரசன்னாவும் மீராவும் “வாங்கி கொடுக்கவா” என்று கேட்டும் அவளுக்கு வைத்துக் கொள்ள மனதில்லை. 
திரு! அவனின் நிலை என்ன என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் அவன் எப்போதும் போல இருப்பது போலத் தான் தோன்றியது.
அம்மா சென்ற அன்று, அம்மாவின் பின் போக மகள் ஏகத்திற்கும் ரகளை செய்ய, மகளை விட்டான் ஒரு அரை! அதை பார்த்து மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் மீனாக்ஷியை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். “மனுஷனாடா நீ, இனிமே புள்ள மேலே கை வை பாரு!” என்று அகிலாண்டேஸ்வரி அவனை பிடித்து தள்ளினார்.
அம்மாவின் கோபம் பார்த்து தான் அடங்கினான். விட்டிருந்தால் மகனை அடித்திருப்பார்.  
“இந்த சண்டைகளை பார்த்த மீனாக்ஷி பின் அம்மாவிடம் போகிறேன்” என்று அப்பாவிடம் கேட்கவேயில்லை.
இந்த களேபாரத்தில் நடந்த நல்ல விஷயம் அகிலாண்டேஸ்வரியும் மீனாக்ஷியும் நெருங்கியது மட்டும் தான். ஆனாலும் அம்மாவின் நினைவு அவ்வப் போது வரும் போது அழ ஆரம்பித்து விடுவாள் மீனாக்ஷி.
அப்போது துளசியின் பேச்சு மட்டுமே அவளை தேற்றும். ஆம்! வீட்டின் அலைபேசியில் இருந்து அம்மாவிற்கு அழைத்து விடுவாள்.
“அம்மா சீக்கிரம் வந்துடுவேன், இப்படி அழக் கூடாது! கலாட்டா பண்ணக் கூடாது! நீ தானே அப்பாவை பார்த்துக்கணும்!” என்று சொல்வாள்.
“போ, போ, நான் யாரையும் பார்க்க மாட்டேன்” என்று அலைபேசியிலேயே கத்துவாள் மீனாக்ஷி.
“ஷ், அப்படி எல்லாம் பேசக்கூடாது, அம்மா சீக்கிரம் வந்துடுவேன்”  
“இப்படி தான் நீ எப்பவும் சொல்ற, ஆனா வரமாட்டேங்கற” என்றவள் அன்று அலைபேசி வைத்த பிறகும் வெகுவாக அழுது விட, அதிசயமாய் விரைவில் வீடு வந்த திருவிற்கு அதனை பார்த்து கஷ்டமாகப் போய் விட்டது.
மகள் அழுகிறாள்! அவன் அழவில்லை! அதுவே வித்தியாசம். முன்பிருந்தே யாரிடமும் எதுவும் காண்பித்து பழக்கப்படாதவன் என்பதால் எல்லோருக்கும் அவன் எந்த பாதிப்பும் இல்லாத கல் மனிதனாய் தான் தோன்றினான்.
ஆனால் உண்மையில் மனதளவில், உடலளவில் சிதலமடைந்து கொண்டிருந்தான். “போய் விட்டாளா? என்னை விட்டு போய் விட்டாளா? அவ்வளவு தானா நான் அவளிற்கு, போகட்டுமே! எனக்கு என்ன?” என்பது போல தான் வீராப்பு!       
இன்று மகள் தேம்பி தேம்பி அழவும், அப்படி கஷ்டமாய் போய் விட்டது. அவளுக்கு ஏழாம் வகுப்பு பள்ளி திறந்தும் ஒரு இரண்டு மாதம் ஆகியிருக்க, பிடிவாததிற்காகவே புத்தகம் என்ற ஒன்றை கையில் எடுத்து படிக்கவேயில்லை.
அம்மா வேண்டும் அழைத்து வாருங்கள் என்று அப்பாவிடம் கேட்கவேயில்லை. கேட்டிருந்தால் அதை சாக்கிட்டாவது சென்றிருப்பானோ என்னவோ? மீனாக்ஷி அம்மாவிடம் தான் வா வா என்று சொல்லி கொண்டிருந்தாள். பிடிவாதத்தில் அப்பாவை கொண்டு அப்படியே பிறந்திருந்தாள். 
ஸ்கூலில் எந்த நோட்டும் எழுதுவதில்லை. அவர்கள் கொடுக்கும் வேலையையும் செய்வதில்லை. எத்தனை பனிஷ்மென்ட் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறாள் என்று பள்ளியில் இருந்து அழைத்து சொன்னார். 
சீக்கிரம் சரி செய்து விடுகிறேன் என்று அவர்களிடம் சொல்லியிருந்தான், அதனால் தான் அன்று விரைவில் வீடு வந்திருந்தான். வந்த போது அம்மாவும் அப்பாவும் கோவில் சென்றிருக்க, தனம் சமையல் அறையில் இருக்க, ஹாலில் இருந்து இவள் துளசியிடம் அழைத்து பேசிக் கொண்டிருப்பது கண்களில் பட்டது.
பேசி முடித்து தான் அப்படி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்,  
மகளின் அருகில் போய் அமர்ந்தவன் “அழக் கூடாது மீனா” என்று சொல்ல,
“அப்போ என்னை அம்மா கிட்ட கொண்டு போய் விடறீங்களா?” என்றாள்.
“சரி” என்பது போல தானாக அவன் தலை ஆடியது.  
“எப்போ? எப்போ?” என்று மகள் கண்களை துடைத்து வேகமாய் கேட்க,
“நீ ஸ்கூல்ல எல்லா வொர்க்சும் செஞ்சு குட் கேர்ள்ன்னு அவங்க சொன்னா” என்று சொன்ன அடுத்த நிமிடம், என்னவோ இரண்டு மாத வேலையை அன்றே முடித்து விடுபவள் போல பள்ளியின் பையை எடுத்து அமர்ந்தாள்.
பார்த்தவனுக்கு தான் கண்கள் கலங்கி விடுமோ என்பது போல ஆகிற்று. “ஏண்டி உயிரை எடுக்கற, வந்துடுடி!” என்றான் மானசீகமாக. அது துளசியின் காதுகளை எட்டியதோ?
மகளின் அழுகை துளசியையும் அசைத்திருக்க, நாளை காலை கிளம்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
காலை கிளம்பலாம் என்று முடிவெடுத்து அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து குளித்து இருந்தவள், ஐந்து மணிக்கு பிரசன்னாவை எழுப்பி பஸ் வைத்து விட சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, துளசியிடம் இருந்த அவளின் அம்மாவின் கைபேசி அழைத்தது.
அதுவும் திருவின் வீட்டின் லேண்ட் லைனில் இருந்து, என்னவோ ஏதோவென்று துளசி எடுக்க,
“மா” என்ற மகளின் குரல் ஹீனமாய் ஒலித்தது.
“என்னம்மா?” என்று பதறி துளசி கேட்க,
“மா, எனக்கு எதோ டிசீஸ் வந்துடுச்சு. நான் செத்துப் போகப் போறேன்” என்றாள் அதே குரலில்.
மனம் அப்படி பதறிய போதும் “ஷ், உளறாதே!” என்று மகளை சப்தமாய் அதட்டிய துளசி, “என்ன? என்ன தெளிவா சொல்லு?” என்றாள்.
“மா” என்று மகள் தன் நிலையை சொல்ல,
“ஷப்பாடா” என்று மனம் ஆனா போதும், மகளுடன் தான் அப்போது இல்லாத நிலையை அறவே வெறுத்தவள், “அது ஒன்னுமில்லைடா, அது நல்ல விஷயம் தான்!” என்று மகளுக்கு விளக்கி,
“பாட்டி இல்லையா? பாட்டியை கூப்பிடு, அம்மா இப்போ கிளம்பி ஊருக்கு வர்றேன்” என்றாள்.
“இல்லை, பாட்டி இல்லை, தாத்தாவும் பாட்டியும் நேத்து நைட் திருப்பதி போனாங்க”
“சரி, ஒன்னும் பிரச்சனையில்லை, பயப்படாதே அம்மாவோட கபோர்ட்ல” என்று ஆரம்பித்து அவளுக்கு விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி, “பின்ன நீ போய் படுத்துக்கோ, அம்மா வந்துடுவேன் காலையில” என்றாள்.
“நிஜம்மா” என மகள் கேட்க, “நிஜம்மா” என்று சொல்லியவள்,
ஃபோன் வைத்தவுடன் பிரசன்னாவை எழுப்பி, “ஊருக்கு போகானும் வா” என்றாள்.
“பஸ் ஏத்திவிட சொன்ன அக்கா” என்றவனிடம்,
“இல்லை ஒரு அவசரம், எனக்கு போகணும்! டென்ஷனா இருக்கு, தனியா போக முடியாது, ஒரு டேக்சி பேசு” என்றவள்,
“அம்மா அப்பாவை எழுப்பாதே, நாம கிளம்பலாம், பின்ன சொல்லிக்கலாம்!” என்று அவனை தயாராக கூட விடாமல், அப்படியே அவனின் முக்கால் பேன்ட், டி ஷர்டில் உறங்கியிருந்தவன் முகம் மட்டும் கழுவ செய்து கூட்டி வந்தாள்.
“என்ன விஷயம்?” என்றவனிடம், “நீ வருவியா இல்லை நான் தனியா போகவா” என, அதன் பிறகு பிரசன்னா எதுவும் கேட்கவில்லை. 
காரில் வரும் போதே அவளின் அம்மா அழைத்தவர் “எங்க துளசி இருக்க?” என,
“மா, பிரசன்னாவோட ஊருக்கு போயிட்டு இருக்கேன். போயிட்டு கூப்பிடறேன். பிரச்சனை ஒண்ணுமில்லை” என்று மட்டும் சொல்லி வைத்து விட்டவள்,
பின்னே திருவை அழைத்தால்! ஆம், திருவை தான் அழைத்தால்!

Advertisement