Advertisement

“என்ன மாப்பிள சந்தோசம்ன்னு ஒரு வார்த்தைல முடிச்சிட்ட, உன் பொண்டாட்டி அந்த ஒண்ணுமில்லாதவ எனக்கு பணம் குடுக்க கூடாது சொன்னாலாமே” என்றும் பேச, திரு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். விட்டால் அவரை அடித்து விடும் கோபம் பொங்கியது. மிக முயன்று கட்டுக்குள் வந்தான். அவனின் முகம் அதனை நன்கு பிரதிபலித்தது.
பணம் ஏற்பாடு செய்து கொடுத்த வெங்கடேஷிற்கும் அப்படி ஒரு கோபம் பொங்கியது.     
மேகநாதன் “மச்சான் தேவை இல்லாதது பேசாதீங்க” என்று நேரடியாகவே நாகேந்திரனிடம் கோபப்பட்டார்.
“எப்படி நான் இதை விட முடியும், எனக்கு பணம் குடுக்க கூடாதுன்னு எவ்வளவு தைரியம் இருந்தா சொல்லுவா? இந்த வீட்டு மூத்த மாப்பிள்ளை நானு!” என்று எகிறினார்.
அவர் வரும் போதே முடிவோடு வந்திருக்கிறார் என்று அனைவருக்கும் புரிந்தது.           
“என் பொண்டாட்டி ஒன்னுமில்லாதவலா உங்களுக்கு” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டான் திரு.
அதற்குள் தான் அங்கே அடிபடுவதால் ரூமின் வாசல் அருகே வந்து நின்றாள் துளசி.
“ஆமா, இல்லையா பின்ன? ஒரு தோடு போட்டு அவ கல்யாணம் பண்ணி வந்தா, எங்க பொண்ணு அப்படியா?” என்று சாரதாவும் பேசினார்.
திரு இன்னும் நிதானமாகவே “தேவையில்லாதது பேச வேண்டாம். அவ உங்களுக்கு பணம் குடுக்க வேண்டாம்னு எப்பவும் சொல்லல. ஷோபனாவோட அம்மா அப்பாக்கு குடுக்க வேண்டாம் தான் சொன்னா” 
“அது மட்டும் சொல்லலாமா?” என்று அவர் பேசும் போதே,
“நீங்க பேசாதீங்க, பேசறது சரியில்லை!” என்றான் கோபமாய் வெங்கடேஷ். மாமனார் என்பதையும் விட பணம் அவன் தானே ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.
வீட்டுக்கு வந்த மாபிள்ளையை எப்படி வெளியே போ என்று சொல்வது என்ற யோசனைக்கே வந்து விட்டார் மேகநாதன். மகன்கள் இருவரும் பேசிக் கொள்ளும் போது தான் நுழைவது சரியல்ல என்று அகிலாண்டேஸ்வரி மௌனம் காத்தார்.
“அவங்கப்பாக்கு உங்க பொண்ணு மரியாதை குடுக்கலை, அதனால அவ பணம் கொடுக்க வேண்டாம் சொன்னா! அதனால் இப்படி இனி பார்க்கும் போதெல்லாம் தேவையில்லாமையோ, மரியாதை இல்லாமையோ பேச வேண்டாம்!” என்றான் கறார் குரலில் திரு.
“என்ன இவங்கப்பாம்மா பெரிய ஆளா? அவங்களுக்கு மரியாதை குடுக்கலைன்னு இவ எங்களுக்கும் குடுக்க மாட்டாளா?” என்று ஏகத்திற்கும் எகிற,
“சும்மா நானும் பார்த்துட்டே இருக்கேன், என்ன நீங்க அவ இவன்னு பேசறீங்க? யார் நீங்க? இல்லை யார் நீங்க? என் பொண்டாட்டியை மரியாதையில்லாம பேச! இது எங்கப்பாவோட வீடா போயிடிச்சு இல்லை முதல்ல வெளில போடான்னு சொல்லியிருப்பேன்!” என்று திரு தன் பொறுமையை விட்டு கத்தினான் .
“எங்க சொல்லிடுவியா? என்னை சொல்லிடுவியா?” என்று அவர் அவன் அருகில் வேஷ்டியை மடித்து கட்டி நெருங்க,
வெங்கடேஷும் மேகநாதனும் “என்ன பண்றீங்க நீங்க?” என்று நாகேந்திரனை நிறுத்தினர்.
துளசிக்கு அழுகை பொங்கியது “என்னடா இது?” என்பது போல,
“பணம் வந்த உடனே என்ன மாதிரி நடக்கறீங்க நீங்க என்ன மனுஷன்யா நீ” என்று திருவும் பேசிவிட்டான்.
“என்ன மனுஷன்னா கேட்கற நீ? உன்னை விட பெரிய மனுஷன்டா! ஒரு பணம் கேட்டா குடுக்கறேன்னு சொல்லிட்டு, அவ்வளவு கெஞ்ச வெச்சிட்டு, என்னை அசிங்கப் படுத்திட்ட நீ! அப்படி என்ன ஊரு உலகத்துல இல்லாத பொண்டாட்டி நீ கட்டியிருக்க, அவ சொன்னா குடுக்கமாட்டியா!” என்று கத்தினார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாதவராக மேகநாதன், “நீங்க பேசறது கொஞ்சமும் சரியில்லை. மச்சான்றதுக்காக எங்க பொண்ணை மரியாதையில்லாம பேசறதை நாங்க பொறுத்துக்க முடியாது. வாங்க, நாம சத்தியா வீட்டுக்கு போகலாம்” என்று அவர் பேச,
“நீ முதல்ல இங்க இருந்து வெளில போடா” என்றே சொல்லி விட்டான் திரு.
“நீ என்னடா சொல்றது? இது என்ன உன் வீடு மட்டுமா? என் பொண்டாட்டியோட பிறந்த வீடு, என் பொண்ணோட புகுந்த வீடு!” என்று அவர் அப்போதும் வாய் பேசி நின்றார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாக, “தப்பு தான்! என் தப்பு தான் இப்படி பேசறீங்க! உங்களுக்கு பணம் எப்படி வந்ததுன்னாவது தெரியுமா?” என்று வெங்கடேஷ் பேசப் பேச,
துளசி இருப்பதை பார்த்து “டேய் வெங்கடேஷ், பேசாம இரு!” என்று திரு அதட்டும் போதே,
“இவன் தான் கொடுத்தான், உங்க பொண்ணு எங்கப்பா ரொம்ப சிரமப்படறார்ன்னு கெஞ்சி கேட்டான்னு நான் பணத்துக்கு நாயா பேயா அலையறதை பார்த்து எங்கண்ணன் தான் கொடுத்தான். அவன் மூலமாவே பயனடைஞ்சிட்டு அவனையே இப்படி பேசறீங்களே நீங்க எல்லாம் சத்தியமா மனுஷனே இல்லை!” என்று சொல்ல,
அதை கேட்டிருந்த துளசி அப்படியே நின்று விட்டாள். 
“ஓஹ்! அப்போது என்னுடைய பேச்சிற்கு எந்த மரியாதையும் இல்லை, அதையும் விட பணமும் கொடுத்து விட்டு இத்தனை நாட்களாக என்னை திரும்பியும் பார்க்கவில்லை!”
“வேண்டாம்! இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று தோன்ற ஒரு நிமிடமும் யோசிக்கவில்லை,
மகளிடம் வந்தவள் ஆவேசமாக “எழுந்துரு மீனா!” என்றாள். இத்தனை நேரம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்திருந்த மீனாக்ஷி அம்மாவின் பேச்சை தட்டாமல் செய்ய,
அவளின் கை பிடித்தவள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் வாயிலை பார்த்து நடக்க,
“துளசி எங்க போற?” என்று அகிலாண்டேஸ்வரி கேட்க,
“போதும் அத்தை, எனக்கு இங்க இருக்கவே முடியலை, உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்தா என்னை யார் வேணும்னாலும் என்ன வேணா பேசலாம்னு இருக்கா?”
“அவ இவன்னு எப்படி பேசறாங்க, அதையும் கேட்டுட்டு இங்க எல்லோரும் இருக்கீங்க, இவர் யார் என்னை பத்தி பேச, முதல்ல இவர் பொண்ணு இப்போ இவர். எதனால் இதெல்லாம்? நீங்க, உங்க பையன், உங்களை சுத்தி இருக்குறவங்க, எனக்கு குடுத்த மரியாதை பார்த்து தான் இவங்களுக்கு என்னை இப்படி பேச தைரியம் வருது!”  
“இவர் தம்பி பணத்துக்கு அலையறார்னு பணத்தை தூக்கி கொடுத்தாரே, அந்த தம்பி ஒரு நாளாவது என்னை அண்ணின்னு கூப்பிட்டு இருப்பாரா? இருந்திருந்தா அவர் வீட்டுக்காரம்மா என்னை என் வீட்டு ஆளுங்களை பேசுமா?”
துளசி பேசப் பேச வெங்கடேஷிற்கு மனதிற்கு கஷ்டமாய் போய் விட்டது. ஆம்! துளசி சொல்வது சரி தானே! மரியாதை குறைவாய் எல்லாம் துளசியை நடத்தியது கிடையாது என்றாலும், துளசி சொல்வது போல தானே!  
அதிலும் திரு தம்பியை எங்கேயும் விட்டுக் கொடுத்தது இல்லை. இதோ பணத்திற்கு அலைகிறான் என்று தெரிந்ததும், அடுத்த நிமிடம் அவனாகவே அழைத்து கொடுத்தான். இப்போது அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்! அப்போதும் பல முறை சொன்னான் வெளில தெரியக் கூடாது என!      
“முதல்ல உங்க பையன் என்கிட்டே பேசறாரா? என் பேர் சொல்லி கூப்பிடுறாரா?” என்று ஆத்திரத்தில் பேசியவள், தங்களை பற்றி நடுசபையில் பேச விருப்பமில்லாதவளாக “போதும், எனக்கு உங்க வீட்ல இருந்தது போதும்!” என்று கிளம்ப,
துளசி தங்களைப் பற்றி எல்லோர் முன்னும் பேசியது அப்படி ஒரு கோபத்தை திருவின் உள் கிளப்பியது.
“ஏய், எங்கடி போற, ஒழுங்கா உள்ள போ!” என்று திரு ஆவேசமாக கத்தினான். இப்படி எல்லோர் முன்னும் அவள் செல்கிறேன் என்றது அவனுக்கு அவமானமாய் தான் தோன்றியது.  
அவனிடம் பதிலே பேசவில்லை, அவள் பாட்டிற்கு நடந்தாள்.  
“சொல்லிட்டே இருக்கேன் துளசி, உள்ள போ!” என்று திரு பேசப் பேச அவள் வாயில்படியை தாண்டி விட்டாள். அப்படி ஒரு கோபம் திருவிற்கு பொங்க, எதிரில் இருந்த சேரை எட்டி உதைக்க அது பறந்து சுவரில் பட்டு விழுந்தது.
எல்லோரும் அவனின் கோபத்தை பார்த்து அதிர்ந்து நின்றனர். 
மகனின் இந்த பரிமாணத்தில் பெற்றவர்கள் ஏறக்குறைய பயந்து தான் நின்றனர்.
பின் அவ்வளவு வேகமாக வந்து துளசி மீனாக்ஷியை பிடித்திருந்ததை இழுத்தவன், “நீ போறதானா போடி, என் பொண்ணை ஏன் கூட்டிட்டி போற, நீ போடி போ!” என்று சொல்லி மகளை மட்டும் வீட்டுக்குள், “அப்பா விடுங்க!” என்று மகள் கத்தக் கத்த, தர தர வென்று இழுத்து வந்தவன், அவர்களின் ரூமின் உள் இருந்த ரூமில் வைத்து பூட்டி விட்டான். பின் அவனின் ரூமில் கையை தலைக்கு கொடுத்து அமர்ந்து விட்டான்.
அப்படி ஒரு கண்மண் தெரியாத ஆத்திரம்!  
அகிலாண்டேஸ்வரியும் “என்னடா பண்ற திரு?” என்று கத்திக் கொண்டிருந்தார். மேகநாதன் துளசியிடம் விரைந்தார். 
துளசி ஒரு நிமிடமே தேங்கி நின்றவள், செருப்பைக் கூட போட்டுக் கொள்ளாமல் விறு விறு வென்று படியிறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
நாகேந்திரன் அருகில் வந்த வெங்கடேஷ் “உங்க பொண்ணைக் கூட்டிட்டு கிளம்பிடுங்க, இனிமே நீங்க யாரும் எங்க வீட்டு வாசல் படியை மிதிக்க கூடாது!” என்று சொல்லி வேகமாக அவன் தான் துளசியின் பின் படியிறங்கி ஓடினான். 
  

Advertisement