Advertisement

அத்தியாயம் எட்டு :
திருவின் முகத்தினில் ஒரு கோபமும் ஒரு இறுக்கமும் எப்போதும் தங்கி விட்டது. துளசியுமே முகத்தை தூக்கி வைத்து சுற்ற, அவர்களின் வீடே களையிழந்துவிட்டது. மேகநாதனிற்கும் சற்று உடல் நலம் குறைய, அது இன்னும் சூழலை கணப்படுத்தியது.
எப்போதும் போல வேலைகளை துளசி பார்த்துக் கொண்டாலும், செய்து கொண்டாலும் திருவிடம் ஒரு பாராமுகத்தை காண்பிக்க ஆரம்பித்தாள். அப்படியே திரு அதை அவளிடம் திருப்புவான் என்பதை மறந்து போனாள். வாழ்க்கையில் ஒரு சலிப்பு தட்டியது. அவளுள் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் கூட அதற்கு காரணமாய் இருக்கலாம்.
“இப்படியே என் வாழ்க்கை கழிந்து விடுமா?” என்ற பயம். “இன்றாவது உடல் ரீதியாய் ஒரு தொடர்பு, நாளை வயதாகி விட்டால், மகளும் திருமணமாகி சென்று விட்டால், எனக்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லையா?” என்னென்னவோ சிந்தனைகள்.
ஃபோன் உடைந்து இரண்டு மூன்று நாள் ஆகியிருக்க, அப்பா தான் உடைத்தார் என்று தெரியாத மீனாக்ஷி “அப்பா, அம்மா ஃபோன் உடைஞ்சிடுச்சு, புதுசு வாங்கணும்!” என்றாள்.
துளசியும் அங்கே தான் எதோ வேலையாய் இருந்தாள், மகள் கேட்பது நன்கு காதில் விழுந்தது. திரு அவளிடம், “அதுதான் லேண்ட் லைன் இருக்கே மீனா! அது போதும், அம்மாக்கு எதுக்கு ஃபோன், அம்மா தான் யார் கூடவும் பேசறது இல்லையே” என்றான்.
துளசிக்கு நன்கு புரிந்தது, அவனிடம் ஃபோனில் பேசாததற்கு தான் இந்த கலாட்டா என்று.
துளசி மகளிடம் பேசுவது போல அவளும் பதில் சொன்னாள், “அம்மாக்கு ஃபோன் தேவையில்லை மீனாக்ஷி. ஏன்னா அம்மா யார் கூடவும் பேசறதில்லைன்றதை விட அம்மா கூடவும் யாரும் பேசறதில்லை” என்றாள்.  
இந்த பதிலில் மகளிற்கு, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தான் ஏதோ என புரிந்து இருவரையும் பார்க்க, மகளின் முன் பேச விரும்பாதவனாக விருட்டென்று எழுந்து கிளம்பி விட்டான், அந்த இரவு நேரத்தில்!
கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து வந்த போது துளசி உறங்கியிருக்க, ஏனென்று தெரியாமல் ஒரு கோபம் கனன்றது. “நான் பைத்தியக்காரன் மாதிரி சுற்றினால் இவள் எதுவுமில்லாதது போல உறங்குவாளா?” என்று.     
கோபத்தை யார் மீது காண்பிப்பது என்று தெரியவில்லை. கோபம்! கோபம்! கோபம்! மட்டுமே பிரதானமாய். அவன் எப்படி இருந்தாலுமே துளசி எப்போதும் முகம் திருப்பியதில்லை. இப்படி ஏட்டிக்கு போட்டியாய் பேசியது இல்லை. அது அவனால் தாளவே முடியவில்லை. இப்படி ஒரு துளசியை அவன் பார்த்ததுமில்லை. இந்த துளசி அவனுக்கு பிடித்தமும் இல்லை. முதலிலிருந்தே துளசி இப்படி என்றிருந்தால் பழகியிருப்பானோ என்னவோ, இந்த தீடீர் மாற்றம் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   
அப்படியே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை. கோபம் சற்று மட்டு பட்டதும், தான் இவ்வளவு பலகீனமானவனா என்ற நினைப்பு ஓடியது. “இல்லை, நான் பலகீனமானவன் இல்லை” என்று சொல்லிக் கொண்டவன், அடுத்த நாள் இருந்து இன்னும் இறுக்கமாய் முகமூடி அணிந்து கொண்டான்.
ஆம், முகமூடி தான்! துளசியை பார்ப்பதில்லை, பேசுவதில்லை என்பது போய் தவிர்க்க ஆரம்பித்தான். வீடு தங்குவதே இல்லை. துளசியும் மிகவும் சோர்ந்து போனாள். கிட்ட தட்ட ஒரு மாதம்! பார்ப்பதில்லை என்பது போய் இந்த பாராமுகம் தாங்க இயலவில்லை.  
முடியவில்லை! அவளால் சத்தியமாய் முடியவில்லை. தன்னுள்ளே மிக அதிகமான போராட்டங்கள், அவனை பற்றி உனக்கு தெரியாததா? எதற்கு எதிர்பார்த்து உன்னுடைய நிம்மதி போய் அவனுடைய நிம்மதியும் கெடுக்கிறாய் என்ற மனோ பாவத்திற்கு வந்து விட்டாள்.
திருவின் இறுக்கமான முகம் அவளை மிகவும் இம்சித்தது. எதிலும் நாட்டமில்லை. மீனாக்ஷி மட்டுமே அவளிடம் வாய் கொடுக்கும் ஆள். மற்றபடி மேகநாதன் கேட்டாலும் அகிலாண்டேஸ்வரி கேட்டாலும் ஒற்றை வார்த்தை மட்டுமே பதில்.
ஷோபனாவையும் வெங்கடேஷையும் முற்றிலும் தவிர்த்து விட்டாள். அவர்கள் இருந்தாலே ரூமிற்குள் அடைந்து விடுவாள். ஷோபனாவும் அதிகம் எதுவும் வம்பிழுக்க வில்லை. வெங்கடேஷ் அவளை பயப்படுத்தி வைத்திருந்தான்.
இப்படி இருந்தால் உனக்கும் எனக்கும் சரிவராது பிரிவு தான் என்று. அதனால் அடக்கியே வாசித்தாள். அதையும் விட நாகேந்திரனுக்கு பணமும் அவன் தான் ஏற்பாடு செய்து கொடுத்தான். அதனாலும் அமைதியானாள்.  வீட்டில் சில சில வேலைகளும் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.    
ஆனாலும் வீடு ஏன் இப்படி ஆகிவிட்டது என்ற கவலை மேகநாதனுக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் அதிகமாகியது. இப்படி அவர்களின் வீடு இருந்தது இல்லை.
எப்போதும் கடவுளை வணங்கும் துளசி இப்போது கடவுளை கூட நாடுவதாக தெரியவில்லை. அவளின் நினைவில் திரு திரு என்ற மனிதன் மட்டுமே. மகள் கூட பின் தான்.
முன்பானால் மகளுக்கு தெரியாமல் கவலைகளை மறைத்து இருந்தவளுக்கு இப்போது அது கூட முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் இப்படி தான் என மகளின் மனதில் ஒரு பிம்பம் இருக்க, அதனால் அவர்களின் வாழ்க்கை முறையில் பெரிதாய் முன்பு வித்தியாசங்கள் அவளுக்கு தெரியவில்லை.   
ஆனால் இப்போது தெரிந்தது! துளசியிடமே, “அம்மா உனக்கு அப்பாக்கும் சண்டையா” என்று இரண்டு மூன்று முறை கேட்டு விட்டாள்.
“இல்லையே” என்று துளசி சொன்னாலும், “நீ பொய் சொல்ற” என்று சொல்லும் மகளிடம் என்ன சொல்வாள்.
“நீ இதெல்லாம் யோசிக்காதே, அப்படி எதுவும் இல்லை. அப்படி இருந்தாலும் சரியாகிடும்” என்று சொல்லியிருந்தாள்.
அதுவும் மீனாக்ஷி முழு ஆண்டு பரீட்சை லீவில் வேறு இருக்க, முழு நேரமும் அவளுக்கு அம்மாவை கவனிப்பது தவிர வேறு வேலை என்ன?
மகள் வீட்டில் இருப்பதால் அவளுடன் அதிக நேரம் செலவழிப்பதால் கொஞ்சம் யோசனைகள் குறைந்து இருந்தது. இல்லையென்றால் இன்னும் இன்னும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பாள்.   
ஆனாலும் இப்போதெல்லாம் திருவின் இந்த பாராமுகம் அப்படி வருத்தப்படுத்த ஆரம்பிக்க, “என்ன உனக்கு வீண் பிடிவாதம். அவனிடம் நல்ல மாதிரி நட” எனத் தோன்ற, என்ன நல்ல மாதிரி நடப்பது என்று கூடத் தெரியவில்லை.                       
சோர்ந்து ஓய்ந்து தெரிந்தாள். திரு அவளை பார்த்தால் தானே, அவளின் நிலை தெரிய. கடிவாளமிட்டது போல செல்பவனை யார் என்ன செய்ய முடியும்.
அவன் இப்படி பாராமுகம் காண்பிக்க, காண்பிக்க, “நான் யார் அவனிற்கு” என்ற எண்ணம் ஓங்க ஆரம்பித்தது.  
இந்த உளைச்சல்களுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல, அன்று காலையில் எட்டு மணிக்கே நாகேந்திரனும் சாரதாவும் அழைக்கக் வந்திருந்தனர். அவரின் தொழிலை விரிவு படுத்தி இருந்தார், அதற்கு பணம் போதாமல் வேலைகள் பாதியில் நிற்க, அதுவரை போட்ட பணமும் நஷ்டமாகும் சூழ்நிலை. அதற்காக தான் திருவிடம் பணம் கேட்டிருந்தார். வட்டியில்லா பணம், வட்டியோடு பணம் வாங்கினால் வட்டி கட்டவே சரியாகப் போய்விடும், லாபம் பார்க்க முடியாது.             
காலையிலேயே புது விஸ்தரிப்பின் பூஜைக்கு அழைக்க வந்தவர், வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்தார்.
வீட்டிற்கு வந்தவர் என்பதால் துளசி வந்து “வாங்க சித்தப்பா, வாங்க சித்தி” என்று மரியாதை வைக்க, அவரும் சாரதாவும் அவள் புறம் திரும்பக் கூட இல்லை.     
எல்லோரும் ஹாலில் இருந்தனர், மேகநாதன் அகிலாண்டேஸ்வரி, வெங்கடேஷ், ஷோபனா, மீனாக்ஷியும் அங்கே தான் அமர்ந்திருந்தாள். எல்லோரும் இதனை கவனித்தனர்.
திரும்பக் கூட இல்லாத போது அவளுக்கு அழைப்பு ஏது?   
ஆனால் துளசி அதனை எல்லாம் கண்டு கொள்ளவில்லை, “வாங்க” என்று அழைத்து விட்டு அவளின் ரூம் உள்ளே சென்று விட்டாள். அது ஒரு மாதிரி அவர்களை எரிச்சல் படுத்தியது. ஷோபனா வேறு துளசி தான் திருவிடம் பணம் கொடுக்க கூடாது என்று சொன்னாள் என்றும் சொல்லியிருந்தாள்.
திரு பணம் கொடுக்காத போது பணத்திற்கு நாயாய் பேயாய் அலைந்தும் பணம் பிரட்ட முடியவில்லை. கடைசியில் வெங்கடேஷ் தான் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். பணத்திற்கு அலைந்ததில் அப்படி ஒரு ஆத்திரத்தில் இருந்தார் திருவின் மேலும் துளசியின் மேலும்.    
அவர் அழைத்துக் கொண்டிருந்த போதே திருவும் அவரின் டென்னிஸ் ப்ராக்டிஸ் முடிந்து வந்து விட்டான்.          
“வாங்க மாமா” என்று அவனும் அழைக்க,
“அதான் வந்துட்டேனே மாப்பிள. நீ பணம் குடுக்கலைன்னாலும் இப்போ என்ன வேலை ஆரம்பிக்காமையா விட்டுட்டோம்” என்று அவனை பார்த்த உடனே ஆரம்பித்தார்.
“அச்சோ, இவர் எதுக்கு இதை பேசுகிறார்” என்று அங்கிருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகியது. ஷோபனாவிற்கே “இப்போ தான் இந்த அத்தை என்னை திட்டாம இருக்காங்க, இந்தப்பா என்ன செய்யறார்?” என்று தோன்ற ஆரம்பித்தது.
பின்னே அகிலாண்டேஸ்வரியா கொக்கா என்பது போல ஷோபனாவை பேசி பேசியே ஒரு வழியாக்கி இருந்தார்.
திரு ஒன்றுமே பேசவில்லை, “சந்தோஷம் மாமா” என்று சொல்லி இடத்தை விட்டு நகர ஆரம்பித்தான்.

Advertisement