Advertisement

“தெரியலை, மாமா ஒரு மாதிரி இருக்குன்னு போய் படுத்துக்கிட்டார்” என்று வசுமதி சொல்லவும்,  

“ஏன், என்ன ஆச்சு?” என்றனர் இருவரும்.

நடந்தவைகளை சொல்ல “நேத்து தானே சொன்னோம் இவளுக்கு அறிவிருக்குதா இல்லையா” என்று எல்லோரும் நேரடியாக ஷோபனாவை திட்டினர்.

அதற்குள் நாகேந்திரன் சாரதாவோடு வந்திருந்தார், வந்தவரிடம் அகிலாண்டேஸ்வரி சண்டைக்கு கிளம்ப, திருவும் வெங்கடேஷும் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லப் பட்டிருக்க வீட்டிற்கு வந்தனர்.                                                        

அவரை பார்த்ததும் திரு, “சாரி மாமா, என்னால பணம் குடுக்க முடியாது, நேத்தே உங்க பொண்ணு பேசினதுக்கு பணம் குடுக்க கூடாதுன்ற முடிவுல தான் இருந்தேன். ஆனா துளசி தான் பணம் குடுக்க சொன்னா. அதனால தான் கொடுக்கறேன்னு சொன்னேன்”

“இன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. ஆனா துளசி ஷோபனாவோட அப்பாவுக்கு நாம பணம் குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டா. இனி என்னால ஒன்னும் பண்ண முடியாது, குடுக்க முடியாது!” என்று சொல்லி அப்பாவை பார்க்க செல்ல, ஒரு வார்த்தை கூட பேசாமல் ஷோபனாவை திரும்பியும் பார்க்காமல் அண்ணனின் பின்னோடு வெங்கடேஷும் சென்றான்.

கணவன் தன்னை திரும்பி கூட பார்க்காததில் கொஞ்சம் பயம் பிறந்தது ஷோபனாவின் மனதில். 

அப்படியே அமர்ந்து விட்டார் நாகேந்திரன், மிகப் பெரிய தொகை அப்படியே தொகையாக வட்டியில்லாமல் திரு மட்டுமே கொடுப்பான். வேறு யாராயிருந்தாலும் வட்டி கேட்பார். வட்டி மட்டுமே மாதத்திற்கு அறுபது அல்லது எழுபதாயிரம் வரும் ஒரு வருடம் என்றாலும் அதுவே ஆறேழு லட்சம், இப்போதும் தொழிலில் சிக்கல் அவரால் என்ன செய்வது என்று யோசிக்கக் கூட முடியவில்லை. ஷோபனாவிற்கு ஒரு தம்பி, அவன் இன்னும் கல்லூரி படிப்பை கூட முடிக்கவில்லை.

மனம் நொந்து விட்டார், பெண்ணை பார்த்த பார்வை “நீ எனக்கு பிறக்காமையே இருந்திருக்கலாம்” என்று சொல்லியது.

அதற்கும் அகிலாண்டேஸ்வரி சாரதாவை விட்டு அவரையே பிடித்தார், “பண கஷ்டம் வரும் போகும், அதல்ல இங்க பிரச்சனை, எப்படி மரியாதையில்லாம சாப்பிடறவங்களை பேசிட்டா, மூணு வேளையும் ஒரு வேலையும் செய்யாம கொட்டிக்கறா இல்லையா, அந்த திமிர் பேசுது.  என்ன அப்படி நீங்க ஒரு ஜமீன் குடும்பம் எல்லோரையும் அலட்சியமா பேச, ஆளும் அவளும், சொந்தம்னு இல்லைனா உங்க வசதிக்கும் இவ முகத்துக்கும் உங்களை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம்!” என்று ஏகத்திற்கும் பேச,

அப்போது தான் திரு அப்பாவை பார்த்து விட்டு வெளியில் வந்தவன்,

“என்ன பேசறீங்க நீங்க? முதல்ல வாயை அடக்குங்க!” என்றான் அதிகாரமாக. அவனின் சப்தத்திற்கு பிறகே அகிலாண்டேஸ்வரி பேசுவதை நிறுத்தினார்.

அதுவரை அவரை யாராலும் அடக்க முடியவில்லை.

“இப்போ தான் அவர் சுகர் லெவல் பார்த்தேன், அது கொஞ்சம் குறைவா இருக்கு. இன்னும் குறைவா இருந்திருக்கும், அதனால் அவருக்கு அப்படி இருந்திருக்கும். எழுந்த பிறகு வெங்கடேஷை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகச் சொல்லியிருக்கேன்” என்றவன்,

“அவர் பக்கத்துல போய் இருக்காம எதுக்கு இந்த கத்து கத்தறீங்க? வீடா என்ன இது? இப்படி இங்க இனிமே எந்த சத்தமும் யாராலையும் இருக்க கூடாது, உங்களை எல்லாம் பார்த்து என் பொண்ணும் வீணாப் போயிடுவா போல, மரியாதையான வார்த்தை பேசி எல்லோருக்கும் மரியாதை குடுத்து இருக்க முடிஞ்சா இருங்க, இல்லை யாரா இருந்தாலும் கிளம்பிட்டே இருங்க!”

“இந்த சத்தம் இந்த வீட்ல இருக்க கூடாது. நீங்கன்னாலும் சரி உங்க வீட்டுக்காரர்னாலும் சரி இல்லை யாரா இருந்தாலும் சரி” என்றான் சத்தமாக எல்லோருக்கும் பொதுவாக, அவன் சொன்னது என்னவோ ஷோபனாவிற்கு தான் ஆனாலும் அம்மாவை பார்த்தே சொன்னான்.

அதற்குள் நாகேந்திரன் அவனின் மற்ற இரு மச்சான்களிடமும் திருவிடம் சொல்ல சொல்லி தூது செல்ல,

அவர்களும் தட்ட முடியாது அவனிடம் சொல்ல, “இல்லை சித்தப்பா துளசியை மீறி என்னால செய்ய முடியாது” என்றான் தெளிவாக.

“எப்போ இருந்து நீ துளசிக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்க ஆரம்பிச்ச” என்று பொறுக்கமாட்டாமல் கமலநாதன் கேட்டே விட்டார்.

“எப்போ குடுக்கலை” என்றான் அவரிடம் பதிலுக்கு.

“நீங்க பேசியே நாங்க பார்த்ததில்லை” என்று அவர் சொல்ல,

“அதனால அவ எனக்கு முக்கியம் இல்லையா?” என்றான்.

இதற்கு என்ன பதில் சொல்வார்கள், இப்படியாக வீடு அல்லோலகல்லோலப் பட்டது. ஆனாலும் அவன் பணம் கொடுக்க ஒத்துக் கொள்ளவில்லை.

எது எப்படி இருந்தாலும் அப்பா எழுந்து வந்த போது அவரிடம் பேசாமல் வெங்கடேஷிடம் தான் ஹாஸ்பிடல் அழைத்து செல்லச் சொன்னான்.

“இவ்வளவு பேசற அப்பா கிட்ட ஏன்டா பேசறதில்லை” என்று சத்தியநாதன் கேட்க,

“எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும் சித்தப்பா, நான் ஏன் பேசறதில்லைன்னு அவரை கேட்க சொல்லுங்க” என்றான்.

யாரும் அவனிடம் பேச முடியாமல் பின் வாங்கினர்.

இப்படி இங்கே எல்லாம் ஓட, கிட்ட தட்ட ஐந்து மணி நேரத்தில் சென்னையில் அவர்களின் வீட்டை அடைந்தார்கள். 

வாடகை வீடு தான், ஆனாலும் சற்று பெரிய வீடு, பிரசன்னாவின் நண்பன் ஒருவனின் வீடு. அதனால் குறைந்த வாடகைக்கு விட்டிருந்தான்.

இவர்கள் வந்த போது நைட் டியூட்டி முடிந்து வந்த மீரா உறக்கத்தில் இருந்தாள். ஒரு வழியாக பெல் அடித்து அவளை எழுப்ப, இவர்களை பார்த்ததும் ஆச்சர்யம், கூடவே மீனாவை பார்த்தவள் “அச்சோ என்ன ஆச்சு” என்று பதறி அவளின் கை பிடிக்க,

“சைக்கிள் இடிச்சிடுச்சு, எனக்கு அடி பட்டுடுச்சு” என மீனாக்ஷி சொன்னாள்.

“எப்போ?” என்று பதறி மீரா விசாரிக்க,

அவளுக்கு தெரியாது என்று துளசிக்கு புரிய, அப்பாவிடம் “மீரா கிட்ட சொல்லலையா” என்றாள்.

“இல்லை அவ நேத்து காலையிலயே போயிட்டா, பிரசன்னா நைட் தான் சொன்னான். நாங்க விடியக் காலைல கிளம்பிட்டோம்”

“அவனுக்கு எப்படி தெரியும்” என்றாள் மீண்டும்.

“அதை அவன் கிட்ட தான் கேட்கணும்” என்று ரத்னா சொல்லவும் , அதற்குள் மீனாக்ஷி இடையிட்டாள்,

“மா அப்பா இதை உங்க கிட்ட குடுக்க சொன்னார்” என்று கொடுத்தாள்.

ஒரு சின்ன கவர், அதில் பணமும் அவனின் ஏ டி எம் கார்டும் இருந்தது. “பின் நம்பர் உங்க ஃபோன்க்கு மெசேஜ் பண்ணியிருக்காங்களாம்” என்றவள்,

“நாம ஷாப்பிங் போகலாம்மா” என்று ஆர்வமாகப் பேச,

“போகலாம்” என்று முணுமுணுத்து, “அம்மா பசிக்குது” என்றாள் அவரின் மகளாக. கூடவே “சாரிம்மா” என்றும் சொல்ல, “ஷ், என்ன இது? அது ஒரு பைத்தியக்காரி போல, அந்த கத்து கத்தறா, விடு!” என்று ரத்னா தான் மகளை சமாதானப் படுத்தும் படி ஆகிற்று.

மீரா என்ன என்று கேட்க, துளசி எதுவும் சொல்லவில்லை! ரத்னா சொல்ல ஆரம்பிக்க, இப்படியாக பல மாதங்களுக்கு பிறகு தாய் வீட்டிற்கு சீராட வந்து விட்டாலும் மனம் முழுவதும் திருவிடமே இருந்தது.

தான் ஏன் இப்போது இப்படி ஆகிவிட்டோம் என்ற யோசனையில் ஆழ்ந்தாள்! பதில் தான் பிடிபடவில்லை!         

வேண்டாம் எதிர்பார்ப்புகளை வைக்காதே, ஏமாற்றங்களை தாங்க இயலாது என தன்னை தானே சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

ஏன் போனா? ஏன் போனா? என்று திருவின் மனதை அரிக்க ஆரம்பித்தது. அவனால் இயல்பாக இருக்க இயலவில்லை. மகளின் காயங்கள் வேறு அவனை உறுத்த,  இப்போது எதற்கு கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்று துளசியின் மீது கோபம் வந்தது.

துளசி வர ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியது. மீனாக்ஷியின் கட்டு பிரித்த பிறகு தான் வந்தாள். ஆனாலும் காயங்கள் இன்னும் முழுதாக ஆறவில்லை. அந்த ஒரு வாரமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மனைவியின் அலைபேசிக்கு அழைக்க மகள் தான் எடுத்து பேசுவாள். இதுவே அவனின் இயல்புக்கு மாறானது.

அதுவே அவனை வெகுவாக கஷ்டப் படுத்தி இருக்க, இருந்த கோபமும் அதிகாமகியது, மீண்டும் துளசி வீடு வந்த போது , அவளின் ஃபோனை எடுத்து சுவரை நோக்கி ஒரு வீச வீசி சென்றான். 

துளசி ஸ்தம்பித்து பார்த்தாள், அவளுக்குள்ளும் ஒரு கோபம் துளிர் விட துவங்க, இருவருமே அவர்களின் இயல்பை தொலைத்து தான் இருந்தனர்.        

 துளசியை முகம் கொண்டு பார்க்காவிட்டாலும் பேசாவிட்டாலும் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் அவளை உணர்ந்து தானே இருப்பான். பேசுவதையும் பார்பதையும் விட உணருவது இன்னும் உன்னதம் அல்லவா!

எத்தனை மனைவிகள் பேசும் போது கணவர்கள் காது கொடுத்து கேட்டாலும், முகம் பார்த்தாலும் அதனை அப்படியே விட்டுவிடுவர். ஆனால் திரு எப்போதுமே அவளை அதிகம் உணருவான். அவள் நடப்பதை, இருப்பதை, அவள் மகளுடன் பேசுவதை, இப்படி பல!  

அவள் உறங்கும் போது முகம் பார்ப்பான் தானே!

அது இல்லாததால் ஒரு வெறுமை அவனுக்குள்!  அதற்காக அவளின் குரல் கேட்க அழைத்தால் அவளுக்கு பதில் மீனாக்ஷி தான் எடுத்தாள்.

“அம்மா எங்கே?” என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தால் அடுத்த நிமிடம் அம்மாவிடம் சொல்லியிருப்பாள் மீனாக்ஷி.

இல்லை “அப்பா என்னை கேட்டாரா?” என்று துளசி கேட்டிருந்தாலும் அடுத்த நிமிடம் திருவிடும் சொல்லியிருப்பாள் மீனாக்ஷி.

இருவருமே அதனை செய்யவில்லை!

அவனுக்கு பிடித்தால் எனக்கென்ன? பிடிக்காவிட்டால் எனக்கென்ன? எனக்கு அவனை பிடித்திருக்கிறது என்ற மனநிலையுடன் இத்தனை நாட்கள் இருந்ததினால் தான் எல்லாவற்றையும் அமைதியாக கடக்க முடிந்தது.

இப்போது புதிதாக திருவிற்கும் தன்னை பிடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு துளிர் விட, அதனைக் கொண்டே துளசியின் இந்த பரிமாணம்.

ஆனால் அது திருவை அத்தனை கோபப்படுத்த, அவளின் குரலை கூட கேட்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ஃபோனை எடுத்து வீசி உடைத்து சென்றான். துளசி அப்படியே விக்கித்து நின்று விட்டாள்!                  

       

 

Advertisement