Advertisement

அத்தியாயம் ஏழு :

சரியாக அந்த நேரம் மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் வர, இவர்களை பார்த்ததும் “வா வேலா” என்றவர், “வாம்மா” என்றார் ரத்னாவையும் பார்த்து.

அகிலாண்டேஸ்வரியும் “வாங்க” என்றார், இல்லையென்றால் மேகநாதன் தொலைத்து விடுவார், அதையும் விட துளசி பின்னே அவருக்கு எந்த வேலையும் செய்து கொடுக்க மாட்டாள்.

அவர்கள் உண்டு கொண்டிருப்பதில் இருந்து எழுந்து நின்று கொண்டிருக்க, துளசியின் முகத்தினில் இருந்த இறுக்கம் எதோ சரியில்லை என்று காட்டியது.

ஷோபனா நைட்டியோடு அப்போது தான் சமையல் அறை வாசலில் நின்று கொண்டு இருப்பதை பார்த்த மேகநாதன் “என்னம்மா” என்றார் துளசியை பார்த்து.

இவர்கள் வராமல் இருந்திருந்தாலாவது கை கழுவி இருப்பர். இப்போது இவர்கள் இருக்கும் போது இப்படி கை கழுவது அவர்களுக்கு மரியாதை இல்லையில்லையா? ஆனாலும் உண்ணவும் மனதில்லை! அவர்களை பார்த்து புன்னகை புரியவும் முகம் ஒத்துழைக்கவில்லை.

ரத்னாவிற்கு வேறு ஏகமாகப் பதட்டம் ஆகியது துளசி “கோபிப்பாளோ” என்று. “இதுக்கு தானே உங்களை இங்கே வர வேண்டாம் சொல்றேன்” என்பதாகத் தானே அவளின் எண்ணம் இருக்கும்.

“என்னமா?” என்று மீண்டும் மேகநாதன் கேட்கவும்,

“ரொம்ப பேசறா மாமா” என்று ஷோபனாவை சொல்ல,

சூழ்நிலையின் இறுக்கமோ தாக்கமோ புரியாமல், “என்ன நான் பேசறேனா? என்ன பேசறேன்? இங்க வந்து கண்டவங்களும் சாப்பிடறாங்க, எனக்கு சாப்பிட முடியலை சொன்னேன்” என்று அவள் பேசியதை அப்படியே திரும்பச் சொல்லிவிட்டாள்.

அதிர்ந்தனர் மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் “என்ன பேசற நீ? என்று அகிலாண்டேஸ்வரியே அதட்டி விட்டார்.

“என்ன எல்லோரும் சேர்ந்து என்னை மிரட்டுறீங்களா?” என்று ஷோபனா அதற்கும் கத்த,

என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

“உனக்கு கொஞ்சமாவது மரியாதை தெரியுதா?” என்று மேகநாதன் சத்தமிட்டார்.

“எனக்கு தெரியும், ஆனா இவங்களுக்கு குடுக்கணும்ன்னு அவசியமில்லை” என்றும் சொல்லிவிட, துளசியின் கோபம் ஏகத்திற்கும் எகிறியது.

துளசி அவளிடமோ இல்லை மாமனார் மாமியாரிடமோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

வேலவனிடம் திரும்பி, “இப்ப நீங்க இங்க வேலை செய்யறவங்களா வந்திருக்கீங்களா இல்லை என்னோட அப்பா அம்மாவா வந்திருக்கீங்களா?” என்றாள் ஒரு புயலை உள்ளடக்கிய குரலில்.

“உன்னோட அப்பா அம்மாவா” என்று வேலவன் தயங்கி சொல்ல,

“அப்புறம் எதுக்கு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க, கிளம்புங்க முதல்ல!” என்றாள் அவர்களை பார்த்து.

“ஏன்? ஏன்? பேசாமா இரு!” என்று அகிலாண்டேஸ்வரி சூழலை கையினில் எடுத்து துளசியை பார்த்து சொல்ல,  

“போதும் அத்தை, நான் இந்த வீட்டுக்கு வந்து பதிமூணு வருஷம் ஆகிடுச்சு, எங்க வீட்ல நான் பதினாறு வருசம் தான் இருந்தேன். இன்னும் கொஞ்சம் வருஷம் போனா அங்க இருந்ததை விட இங்கே அதிகம். இன்னும் அவங்க பொண்ணா தான் என்னை பார்க்கறீங்க இந்த குடும்பத்துல எல்லோரும். என்னோட அப்பா அம்மாவா இவங்க பார்க்கப் படறது இல்லை. நீங்க எல்லோரும் அப்படி பார்க்கறதால அப்படி பேசறதால தான் இவ எல்லாம் பேசறா” என்று கை நீட்டி ஷோபனாவை குற்றம் சாட்டியவள்,

“போதும் இவங்களுக்கு இங்க கிடைக்கிற மரியாதை” என்று அகிலாண்டேஸ்வரியை பார்த்து சொல்லி,

“இனி நீங்க இந்த வாசப் படியை மிதிக்க கூடாது கிளம்புங்க” என்றாள் அப்படி ஒரு கடினமான குரலில்.

ரத்னாவிற்கு கண்கள் கலங்கி விட்டது. வேலவனின் கைகால்கள் எல்லாம் வெலவெலத்து விட்டது.

“ஏன் துளசி அவளை பத்தி உனக்கு தெரியாததா?” என மேகநாதன் மருமகளிடம் சமாதானம் பேசினார்.  

“அவளை பத்தி எனக்கு தெரியணும்ன்ற அவசியமே இனிமே எனக்கு எப்பவுமே இல்லை மாமா” என்றாள்.

அவள் வெளியே செல்லுங்கள் என்று சொன்ன பிறகும் மேகநாதனின் முகம் பார்த்து வேலவன் நிற்க, துளசிக்கு அப்படி ஒரு கோபம் பொங்க ஒரு இயலாமையுடன் பெற்றோரை பார்த்து நின்றாள்.

“வாங்க போகலாம்” என்று ரத்னா வேலவனை வறுபுறுத்தி அழைத்து சென்றார். இருவரும் கை கழுவ கூட இல்லை, மேகநாதன் துளசி பேசியதை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார். 

“இருக்க சொல்லு துளசி அவங்களை” என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல,

“வேண்டாம் அத்தை” என்றவள் கூடவே “நான் ஒரு ரெண்டு நாள் எங்க அம்மா வீட்டுக்கு போய் இருந்துட்டு வர்றேன்” என்றும் சொல்லிவிட்டாள்.

“இப்போ எப்படி போவ துளசி, மீனாக்ஷி கால்ல கட்டு போட்டு இருக்காங்க” என்று மேகநாதன் பதற,

“இல்லை மாமா நான் அவளை பத்திரமா கூட்டிட்டு போயிடுவேன். அங்க மீரா பார்த்துக்குவா, படிப்பை முடிக்க போறா, அவளும் இப்போ டாக்டர் தான், பார்த்துக்குவா!” என்று சொல்லியவள்,

“மீனா, அப்பாக்கு ஃபோன் பண்ணு” என்று துளசி சொல்ல,

துளசியின் தொலைபேசியில் இருந்து அழைப்பு என்றதும், அவளின் அப்பா வந்திருப்பதால் எதோ வேலையாக அழைக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு எடுத்து காதினில் வைத்தான்.

“அப்பா கிட்ட நானும் அம்மாவும் ரெண்டு நாள் ஊருக்கு போறோம்ன்னு சொல்லு” என்று துளசி சொல்லும் போதே,

“அப்பா இங்க ஒரே பிரச்சனை, சித்தி பேசினாங்க. அம்மா, தாத்தா பாட்டியை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லிட்டாங்க. இப்போ நானும் அம்மாவும் ரெண்டு நாள் போறோம்னு சொல்ல சொன்னாங்க!” என்று சுருக்கமாக மொத்த விஷயத்தையும் பகிர்ந்து விட்டாள்.

திருவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “இரு, நான் வீட்டுக்கு வர்றேன்” என்று கிளம்பியவன்,

விரைந்து வீட்டிற்கு வந்தான், வரும் வழியில் தான் வேலவனும் ரத்னாவும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்.

“அம்மா அவங்களை வீட்டை விட்டு போகச் சொல்லிட்டாங்க” என்ற மீனாக்ஷியின் வார்த்தைகள் ஞாபகத்தில் வர, பைக்கை நிறுத்தி அவர்களின் அருகில் சென்றான்.

ரத்னா கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிய, வேலவன் என்ற மனிதர் பாவமாக நின்று கொண்டிருந்தார்.

இவனை பார்த்ததும் இருவரும் விழிக்க, “எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் வீட்டுக்கு வாங்க” என்றான்.

திரு அவர்களிடம் பேசியதை ஒரு ஆச்சர்யத்துடன் உள் வாங்கினாலும் “இல்லை தம்பி வேண்டாம்” என்றார் வேலவன்.

“நான் சொல்றேன் வாங்க” என்றான் சிறு வற்புறுத்தலோடு, சகஜமாக பேசாத மருமகன் வந்து பேசும் போது அவர்களும் தான் என்ன செய்வர், போவதா வேண்டாமா என்று யோசித்து நிற்க,

ஒரு ஆட்டோ அழைத்தவன், அவர்களின் வீட்டை சொல்லி பின்னேயே இவனும் வர, ரத்னாவிற்கு வேலவனிற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் திரு சொன்னபடி செய்தனர்.

வீட்டின் முன் ஆட்டோ நிற்க, வீட்டிற்கு உள் திருவின் பைக் வர, அது தெரியாமல் துளசி உள்ளே அவளிற்கும் மீனாக்ஷிக்கும் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

ஷோபனாவிற்கு கண்ணெல்லாம் இங்கே தான், என்ன செய்கிறாள் துளசி என்பது போல, இத்தனை நாட்களாக துளசியின் வீட்டினரை பற்றிய வேலைகாரர்கள் என்ற உருவகம், கூடவே அவளின் அகங்கார குணம் அவளை அப்படி பேச வைத்திருந்தது.

பேசியது மட்டுமில்லாமல் பேசியதற்கான வருத்தமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் அவளுக்கு ஒரு பொருட்டே கிடையாது.

“உள்ள வாங்க” என்று திரு சொன்னாலும், “துளசி சொல்லட்டும்” என்று விட்டார் ரத்னா.

“அம்மாவை கூப்பிடு மீனா” என்ற படி திரு உள்ளே வர, இவர்கள் வந்ததை பார்த்தும் “என்ன வேலா அவ சொல்றதை பெரிசா வெச்சிக்க வேண்டாம், நீ வா” என்று மேகநாதனும் அழைத்தார்.

“துளசி கோவிச்சுப்பாங்க ஐயா” என்று விட்டார் அவருமே!

மீனாக்ஷியின் அழைப்புக்கு வெளியே வந்த துளசியிடம், “அம்மாவை தாத்தாவையும் பாட்டியையும் உள்ளே வரச் சொல்லு” என்றான் திரு.

“அவங்க வரமாட்டாங்க” என்ற துளசியின் குரல் ஸ்திரமாக ஒலிக்க, அதிர்ந்து துளசியை பார்த்தான் திரு. ஆனால் இப்போது துளசி அவனை பார்க்கவில்லை.

“நான் ரெண்டு நாள் ஊருக்கு போயிட்டு வர்றேன் இவளை அலைய வைக்க முடியாது, சௌகர்யமா கூட்டிட்டு போகணும். எனக்கு ஊருக்கு போக வண்டி வேணும்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

இப்படி ஒரு துளசியை திருமணமான நாளில் இருந்து இப்போது தான் பார்க்கிறான் திரு.

“ஊருக்கு தானே போகலாம், ஆனா அவங்களை உள்ள வரச் சொல்லு” என்றான் அப்போதும்.

“சொல்ல மாட்டேன் எனக்கு வண்டி சொல்லுங்க” என்றாள் குரலில் ஒரு ஸ்திரத் தன்மையோடு.

எல்லோர் முன்னும் சண்டையிட வாக்குவாதம் செய்ய விருப்பமில்லாதவனாக திருவும் வண்டிக்கு ஏற்பாடு செய்ய அலைபேசியை எடுத்தான்.

Advertisement