Advertisement

“அப்பா சொல்றாங்க, ஒரு ரெண்டு நாள் நீ உங்க வீட்ல இருந்துட்டு வர்றதாம்” என்று வெங்கடேஷ் ஷோபனாவிடம் சொன்னான்.

“சொன்னா, நான் போகணுமா? யார் சொன்னாலும் போக மாட்டேன். முடிஞ்சா என்னை வெளில அனுப்பி பாருங்க” என்று அவள் கத்திய கத்தல் அங்கிருந்த அனைவருக்கும் கேட்க மேகநாதனால் தங்கையிடம் கடிந்து கொள்வதை தவிர வேறு முடியவில்லை.

எல்லோரும் கிளம்பிவிட, வீடு மிகவும் அமைதியாக இருந்தது. மீனாக்ஷி உறங்கி எழுந்தவள், “அம்மா டீ வீ பார்க்கறேன்” என நொச்சினாள்.

திரு இருக்கும் ரூமில் தான் டீவீ இருக்கும், அது விட்டால் ஹாலில். “ஹாலுக்கு வேணாம், அப்பா டீவி பார்க்கிறேன்” என மகள் சொல்ல, அவளை திருவின் படுக்கையில் வசதியாக அமர வைத்து, டீவீ கார்டூன் போட்டு விட, மகள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

மாலை ஆறு மணி வரை தான் தனம் இருப்பாள், பின்பு இரவிற்கு ஏதாவது செய்து வைத்து சென்றுவிடுவாள்.

“மா, எனக்கு இன்னைக்கு நூடுல்ஸ் வேண்டும்” என்று விட, அதற்காக பொடிப்பொடியாய் காய் நறுக்கி மகளுக்கு செய்து கொடுத்து, மாத்திரை கொடுத்து, அவளை அவர்கள் படுக்கும் இடம் போகலாம் என்று துளசி சொல்லவும்.  

“இல்லை, நான் இங்கயே படுக்கறேன், டீ வீ பார்த்துகிட்டே” என்று விட்டாள் மீனாக்ஷி.

மீனாக்ஷி வலியில் இருப்பதால் துளசியும் மறுக்க வில்லை. அங்கேயே படுக்க விட்டு அவளும் அருகில் படுத்துக் கொள்ள, சிறிது நேரத்திற்கு எல்லாம் மீனாக்ஷி உறங்கிவிட்டாள், கூடவே அருகில் படுத்திருந்த துளசியும்.

பத்து மணி போல தான் திரு வந்தான். ரூமின் கதவை திறந்து உள்ளே வந்தவனுக்கு மனைவியும் மகளும் அவனின் படுக்கையில் உறங்குவது பார்த்து அப்படியே நின்று விட்டான் சில நொடிகள்.

பின்பு மெதுவாக மகளின் புறம் வந்து நின்று அவளை பார்த்திருந்தான். அடிபட்டதில் முகம் வாடி ஓய்ந்து போய் தெரிந்தது. அப்பா சொன்ன மாதிரி ஒரு நாள் மகளை கொண்டு போய் விட்டு இவ்வளவு கலாட்டா இழுத்து வைத்து விட்டேனோ என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்தே மனைவியை பார்த்தான்.

அவன் அடித்த தடம் இன்னும் மங்கலாய் கன்னத்தில் தெரிந்தது. ஏன் அடித்தாய் அவளை என்று மனசாட்சி கேள்வி எழுப்ப, அதனை ஒதுக்கி தள்ளியவன், அவளின் முகத்தை பார்த்து நின்றான்.

துளசி பார்க்கும் போதோ அவள் விழித்திருக்கும் போதோ முகம் பார்க்காதவன், உறங்கும் போது சந்தர்ப்பம் கிடைத்தால் அவ்வப்போது ரசிப்பது தான்.

அவளின் முகத்தினை சிறிது நேரம் பார்த்திருக்க மனது அமைதியாய் உணர்ந்தது.

துளசியின் அருகில் படுத்திருந்த மீனாக்ஷி சிறிது அசைந்தாள். அந்த அசைவில் துளசி விழித்துக் கொள்ள, அவள் விழிக்க போகிறாள் என்று நொடிப் பொழுதில் உணர்ந்தவன், சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தான். என்னவோ அப்போது தான் வருவது போல.

துளசியும் அவனை பார்த்ததும் எழுந்து கொண்டாள். உணவு எடுத்து வைக்க வெளியில் செல்ல, இவன் உடை மாற்றி முகம் கை கால் கழுவி உணவு மேஜையின் முன் அமர்ந்த போது வீட்டில் யாரும் விழித்திருப்பதாய் தெரியவில்லை.

அவன் உண்ணும் அளவு தெரிந்து பரிமாற, அமைதியாக உண்டு, அங்கே இருந்த டி வீ போட்டு அமர்ந்து கொண்டான். துளசி உண்டு ஒதுங்க வைத்து வந்தவள், அவனிடம் “நாங்க இங்கயே தூங்கிக்கறோம். நீங்க உள்ள தூங்குங்க” என்று சொல்லி அவன் பதிலுக்காய் காத்திருந்தாள்.

“சரி” என்பதாய் தலையசைத்தான். பின்பு அவள் நடக்க துவங்க “சாரி” என்ற குரல் கேட்டது.

வேகமாக துளசி திரும்ப,அவளை பார்க்காமல் “சாரி, நான் அடிச்சிருக்க கூடாது” என்று எதோ சுவற்றிடம் சொல்வது போலச் சொல்ல,

“இதுக்கு இவர் சாரி கேட்காமலேயே இருந்திருக்கலாம்” என்று தோன்ற, நின்றவள் எந்த பதிலும் சொல்லாமல் திரும்ப நடக்க ஆரம்பித்தாள்.

“சரியான அழுத்தம்” என்று திருவிற்கு தோன்றியது. “இத்தனை நாள் என்னுடன் வாழ்ந்தும் இன்னும் வேலைக்காரன் மகள் என்கிறார்கள், நாளை என் மகளையும் வேலைக்காரன் பேத்தி என்பார்களா?”

இதற்கு என்றைக்கு துளசிக்கும் திருவிருக்கும் திருமணம் ஆகிற்றோ அன்றே அவளின் அப்பா வேலவன் இங்கே வேலையை விட்டு நின்று விட்டார். துளசிக்கு ஒரு தங்கையும் தம்பியும். மேகநாதன் அவர்களை சென்னைக்கு குடிபெயர்த்திருந்தார்.  

அங்கே அவர்களின் நிறுவனம் ஒன்றிருக்க, அதை பார்த்துக் கொள்ளும் பணி. சம்பளமும் அவர் முன்பு வாங்கி கொண்டிருந்ததை விட பல மடங்கு அதிகம்.

சம்மந்தி என்ற முறையில் அவரின் தரம் உயர வேண்டிய கட்டாயத்தில் இருக்க, அது கொண்டு இந்த ஏற்பாடு. அப்போதுதானே அவர் வர போக இருக்க, அவருக்கு மரியாதை இருக்கும் என நினைத்தார்.

ஆனால் அது அப்போதும் அவருக்கு கிடைத்த பாடாக இல்லாது போக, ஒரு  கட்டத்தில் “உங்களை பார்க்க வேண்டும் என்றால் நான் வருகிறேன். நான் சொல்லாமல் எப்போதும் நீங்கள் இங்கே வரக் கூடாது” என்று விட்டாள் துளசி.

அன்றிலிருந்து அவர்கள் இங்கே வருது நின்று போக ஏதாவது என்றால் வேலவன் மட்டுமே வருவார். துளசியாக அவர்கள் வீட்டிற்கு சென்றால் தான் உண்டு. அதிகம் செல்ல மாட்டாள், திருவிற்கும் தனக்கும் ஏற்கனவே பேச்சு வார்த்தை கிடையாது. அடிக்கடி அங்கே செல்வதினால் ஏதாவது இன்னும் இடைவெளி விழுந்து விட்டாள் என்ற பயம் அவளிற்கு.  

ஆனால் துளசி அம்மா வீட்டினரின் வாழ்க்கை தரம் இப்போது அதிகமாகியிருந்தது. தம்பி தங்கையின் படிப்பினால். இயற்கையாகவே படிப்பு இருவருக்கும் நன்றாக வர, தங்கை மீரா மருத்துவ படிப்பின் ஹவுசர்ஜனில் இருக்க, தம்பி பிரசன்னா எம் டெக் பவர் எலெக்ட்ரானிக்ஸ் முடித்து வேலையில் அமர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. பெரிய வேலை தான். அது மட்டுமே அவளுக்கு தெரியும்! என்ன சம்பளம்? என்ன விவரம்? இதெல்லாம் தெரியாது. அவளும் கேட்டதில்லை. அவனும் சொன்னதில்லை.

என்னவோ எல்லா இடத்திலும் தள்ளி நின்று விட்டது போல ஒரு உணர்வு.          

பிறந்த வீட்டினரின் நினைவு வர, படுத்திருந்த துளசிக்கு என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பு தட்டியது. அம்மாவை அழைத்து பேசலாம் என்றால் நேரம் பதினோன்றிற்கும் மேல் ஆகியிருந்தது. இப்போது எப்படி அழைக்க?

காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளால் மனது மிகவும் ஓய்ந்து போயிருந்தது. திருவின் அருகாமையை மனது என்னவோ அன்று வெகுவாகத் தேடியது. “உன்னை அடிச்சிருக்கான் உனக்கு கொஞ்சம் கூட ரோஷமே வரலையா?” என்று மனம் முரண்ட, “போடி வேலையை பார்த்துட்டு” என்று திட்டி அதனை தூர ஒதுக்கினாள்.

திரு உறங்க வரவும், அவனையே பார்த்து தான் படுத்திருந்தாள். எப்போதும் போல அவன் பார்த்தால் தானே, அவளை கடந்து உள்ளே இருக்கும் ரூம் சென்று விட்டான்.  

எழுந்து போய் அவனின் அருகில் படுக்க மனது உந்த எழுந்து கூட அமர்ந்து கொண்டாள். சென்று படுத்தால் அவன் எதுவும் சொல்லப் போவதில்லை. என்னவோ அவனின் ஒற்றை அணைப்பிற்காய் மனது வெகுவாக ஏங்கியது.    

செல்லவும் எதோ தயக்கம், அப்படியே அமர்ந்திருந்தாள். படுத்துக் கொண்டே போனை நோண்டிக்கொண்டு இருந்தவன், சார்ஜ் இன்னும் இரண்டு பர்செண்டே இருப்பதை உணர்ந்து ஃபோனை சார்ஜில் போட எழுந்து இந்த ரூம் வந்தவன் துளசி அமர்ந்திருப்பதை பார்த்தான்.    

எதற்கு அமர்ந்திருகின்றால் என்ற யோசனை வந்த போதும், சார்ஜர் எடுத்து உள்ளே சென்றான்.

அவன் பாட்டிற்கு வந்தது, பின் தான் அமர்ந்திருப்பதை பார்த்தும், அவன் பாட்டிற்கு சென்றது, அப்படி ஒரு இயலாமையை கொடுக்க, கண்களில் தானாக நீர் பெருக, அமைதியாக படுத்துக் கொண்டாள்.

கைப்பேசியை சார்ஜில் போட்டு விட்டவன், பின்பு திரும்ப வெளியே வந்து பார்க்க அவள் படுத்துக் கொண்டது தெரிந்தது. இவன் புறம் முகம் தெரியும் படி தான் படுத்திருந்தாள். கண்களில் தண்ணீர் வருவது போலத் தெரிய,

“தண்ணி வேணும்” என்றான் சற்று சத்தமாக, அவனுக்கு தண்ணீர் தேவையிருக்கவில்லை, அப்படியே இருந்தாலும் அவன் போய் எடுத்துக் கொள்வான், துளசி தனியாக அழுகிறாளோ என்று தான் கேட்டான்.

துளசி அன்று தண்ணீர் எடுத்து வர மறந்தும் இருந்தாள். எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து பார்க்க, அவன் ரூமின் உள் சென்றிருப்பது புரிந்தது.

சலிப்பாக இருந்தது. உள்ளே சென்று தண்ணீரை மேஜை மேல் வைத்து திரும்ப, திரு உள்ளே கதவை தாளிடுவது புரிய, சலிப்பான மனது அப்படியே படபடபிற்கு தாவியது.

“மீனாக்ஷி வலில முழிச்சிட்டா?” என துளசி மெல்லிய குரலில் சொல்ல,

“முழிச்சா கூப்பிடுவா?” என்றான் அமைதியான குரலில்.

“இல்லை, நான் போறேன்!” என்று துளசி சொல்லும் போதே குரல் கமறியது. அந்த குரல் திருவின் காதினை எட்டினாலும் அதனை ஒதுக்கி ரூமின் விளக்கை அணைத்து விடி விளக்கை போட்டு விட்டான்.

“இல்லை, நான் போறேன்!” என்ற துளசியின் குரல் மீண்டும் காதில் விழுந்த போதும் கண்டுகொள்ளாமல் அவளின் அருகில் நெருங்க, முடியாது என்பது போல துளசி அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். அருகில் வந்து திரு நிற்க,

துளசி அவன் முகம் பாராமல் எங்கேயோ பார்த்து நின்றாள். ஒரு டென்ஷன் கூட அவளின் முகத்தில்.

துளசியின் இந்த பிடிவாதம் திருவிற்கு புதிது. மௌனமாகவே எல்லாம் அவர்களுக்குள் முடிந்து விடும்.

இதுவரை அவனை மறுத்ததும் இல்லை, அவனுக்கு மறுத்ததும் இல்லை!  

அமைதியாக நின்றிருந்தால் விட்டு விடுவான் என்று நினைக்க, அவளே எதிர்பாராமல் அவளை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான். துளசி இதழ்கள் அப்படியே பூட்டு போட்டுக் கொண்டது.

திருவின் செய்கையில் மலைத்து விழித்து பார்த்தாள் அவனின் முகத்தினை. திமிறி இறங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. எப்படி அசால்டாக என்னை தூக்குகிறான் என்று தோன்ற, துளசிக்கு எல்லாம் மறந்து போனது மீனாக்ஷி உள்பட, நினைவில் நின்றது திரு மட்டுமே!   

துளசியின் முகம் பார்த்த திருவிற்கும் எல்லாம் மறந்து போனது. அவனின் சிக்கல்கள், எரிச்சல்கள், அவளிடம் அவன் பேசமாட்டான், அப்பா கட்டாயப் படுத்தி செய்து வைத்த திருமணம், இவளுக்கு எல்லாம் தெரிந்தும் இவள் ஏன் என்னை திருமணம் செய்ய வேண்டும் என்பது போல!

அவளை கைகளில் ஏந்தியவன் நான்கே அடி தூரத்தில் இருந்த கட்டிலுக்கு மிகவும் மெதுவாக நடந்து படுக்கையில் விட, துளசியின் கண்கள் தாமாக ஒரு மயக்கத்தில் மூடிக்  கொண்டது.    

நெற்றியில் முத்தமிட்டான், சிறு சத்தம் வந்தது! பின்பு கன்னத்தில் முத்தமிட்டான், அதுவும் சிறிது சத்தம் எழுப்பியது!

இதழ்களில் ஒரு நீண்ட ஆழ்ந்த முத்தம் பதிக்க, அதில் சத்தமே வரவில்லை. பிரிந்தால் தானே சத்தம் வரும்!                   

சத்தமின்றி முத்தமிட்டான்!

     

 

Advertisement