Advertisement

அத்தியாயம் ஐந்து :  

ஆம்! திருவை இன்னும் அது துரத்துகின்றது.  அவனின் கடந்த கால காதல். இப்போது நிச்சயம் அவனுக்கு காதல் இல்லை. ஆனால் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கிறது.   

மேகநாதனை பார்த்து திருவிற்கு தான் பயம். அவளுக்கு இல்லை, ஷெரினா, அவளின் பெயர். அவளுடைய குடும்பத்தில் அப்பா, அவள், தம்பி மட்டுமே!

மேகநாதன் மூன்று பேரையும் சிறையெடுத்து அவசரமாகத் திருவின் திருமணத்தை முடித்தார். அவர்களை தொலைத்து விடுவேன் என்ற மேகநாதனின் மிரட்டல் எல்லாம் மகனிடம் மட்டுமே. மற்றபடி அவர்கள் ஷெரினின் வீட்டினரை எல்லாம் மிரட்டவில்லை.

மகளுக்காகத் தான் தாங்கள் சிறையெடுக்கப் பட்டிருக்கிறோம் என்பதே அவளின் பரிதாபமான தந்தைக்கு தெரியாது. ஏன் அவளுக்குமே தெரியாது. எதற்கு யார் என்று தெரியாமல் அவர்கள் குழம்பிப் போய் இருக்க, எப்படி அழைத்து செல்லப் பட்டார்களோ அப்படியே எந்த சேதாரமுமின்றி திரு துளசியின் கழுத்தில் தாலி கட்டியதுமே விடுவிக்கப் பட்டார்கள்.

திருவிடம் அவனின் தந்தை சொன்னது இதுதான், “விட்டுட்டேன்னு மட்டும் நினைச்சிடாதே திரும்ப ஏதாவது கோக்கு மாக்கு பண்ணின, உன்னை பயமுறுத்துறதுக்காக அடைச்சு வெச்சேன். ஆனா உண்மையா அவங்களை எதுவும் செய்ய நினைக்கலை. ஏதாவது செய்ய வெச்சிடாதே”

அப்பா செய்வார் எனத் தெரியும் , அவரின் தீவிரம் தெரிந்தவன். அதனால் தான் பயந்து திருமணதிற்கு ஒத்துக் கொண்டான். இருபத்தியொரு வயது இளைஞன் வீட்டை விட்டு வெளியுலகம் அதிகம் தெரியாதவன், அப்பாவின் கைக்குள் வளர்ந்தவன், அவனால் அவரை மீறி செயல் படமுடியவில்லை.

காதல், ஆனால் இதெல்லாம் பார்த்து வருவதில்லையே, வந்து விட்டதே. அதுவும் ஷெரீனா முதல் வருடம் இவன் மூன்றாம் வருடம் ஆனாலும் பற்றிக் கொண்டது இருபுறமுமே. 

இதோ விஷயம் தெரிந்ததும் மேகநாதன் விஷயத்தை முடித்து விட்டார்.

ஷெரீனாவைப் பொறுத்தவரை திருநீர்வண்ணன் அவளின் சூப்பர் ஹீரோ. வீட்டிற்கு வந்ததும் தாங்கள் கடத்தப்பட்டதை சொல்ல அவனை தான் தேடினாள். ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அவனின் திருமணம் கேள்விப்பட்ட போது அவளின் இயக்கமே நின்று விட்டது. என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. திருவை பார்க்கவும் முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து அவனின் வேறு ஒரு நண்பன் மூலம் வரவைத்து பேசியபோது தான் அவர்களை கடத்தியது அவனின் அப்பா என்பதே தெரியும்.

“உங்கப்பா விட மாட்டார்னா, வா, நாம செத்து போயிடலாம்” என்பதே அவளின் வாதமாக இருந்தது. திருவைப் பிரிவதை அவளால் கனவிலும் நினைக்க முடியவில்லை. இதற்கு வருடக் கணக்கான காதல் கூட இல்லை. மூன்றே மாத காதல். சேலத்தில் கல்லூரி இருக்க, தர்மபுரியில் இருந்து பேருந்தில் போகும் போது தான் ஆரம்பித்தது.

கல்லூரி உள்ளே மட்டும் என்றால் மேகநாதனிற்கு தெரிய வாய்ப்பில்லை. பேருந்து என்பதால் அவரின் காதிற்கு உடனே சென்று விட்டது.

பின்னே அவன் செல்லும் பஸ், அவர்களின் பஸ் கம்பனியினது. திருவின் முட்டாள் தனத்தின் உச்சம் இது. ஆனால் காதல் வந்த பின்னே அவனின் புத்திசாலித்தனம் மழுங்கி விட்டதோ? அல்லது காதலுக்கு கண் இல்லை என்பதோ? ஆம் சுற்றம் பார்க்கும் கண் அவனிடம் இல்லை.

ஷெரீனாவை அவளுக்கு தெரியாமல் மேகநாதன் பார்த்தார், அவருக்கு தோன்றியது பெண்ணின் அழகில் தான் திரு மயங்கியிருப்பான் என்பதாக.  வசதியில்லாதவர்கள் தான் ஆனாலும் அவர்கள் இனம் என்றிருந்தால் கண்டிப்பாய் மகனுக்கு பச்சை கொடி காட்டியிருப்பார். ஆனால் இங்கே முடியாது.

வேறு அவருக்கு சிறப்பாக ஷெரீனாவிடத்தில் எதுவும் தெரியவில்லை. அதன் பொருட்டே அவளை விட அழகான பெண் வேண்டும் எனப் பார்த்தார்.

யார்? யார்? என யோசித்த போது பதினேழு வயது துளசி தான் அவரின் கண் முன் வந்தாள். அதன் பொருட்டே, வேலையாளின் மகள் என்றும் பார்க்காமல் கொண்டு வந்தார்.

அவரின் ஊரின் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலின் பட்டயக்காரர் அவர், கோவிலின் தர்மகர்த்தா, இதையும் விட அனுதினமும் விஷ்ணு நாமம் உச்சரிப்பவர்.

அவரின் வீட்டிற்கு வேற்று இன மருமகள், அவரால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படி மட்டும் நடந்து விட்டால் உயிரை விட்டு விடுவார்.

ஷெரீனாவிற்கு திருவின் திருமணம் தெரிந்ததில் இருந்து, “வா செத்துப் போகலாம்” என,

“என்ன பைத்தியக்காரத்தனம் இது ஷெரின், இப்படி எல்லாம் பேசாதே, லவ் பண்ணினோம் நடக்கலை, விட்டுடு, யாருக்கும் தெரியாது, உன்னோட வாழ்க்கையைப் பாரு, நம்ம காதல் அதிகம் யாருக்கும் தெரியாது!”

“இனிமே நான் காலேஜ் வர மாட்டேன். அப்பா விட மாட்டார். அதனால யாருக்கும் இனிமே தெரிய வரவும் வாய்ப்பில்லை” எனத் தெளிவாக சொன்னான்.

“இல்லை, எனக்கு உன்னை விட்டு இருக்க முடியாது. உனக்கும் அப்படி தான், எனக்குத் தெரியும்” என்றவள்,

“அப்போ சாக வேண்டாம். வா! வந்துடு! நாம எங்கேயாவது போயிடலாம்! கல்யாணம் பண்ணிக்கலாம்!” என ஷெரீனா பிடிவாதம் பிடித்தாள்.  

“எனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு, புரிஞ்சிக்கோ!” என திரு எவ்வளவோ பேசியும்,

“இல்லை, உன்னால என்னை விட்டு இருக்க முடியாது! எனக்கு தெரியும், நீ வந்துடுவ, நான் உனக்கு காத்திருப்பேன்” என்று சொல்லிச் சென்றாள்.

பின் விடாது அவனுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்க, சொல்லிச் சொல்லி பார்த்தவன், ஒரு கட்டத்தில் அதனை எடுக்காமல் விட்டான்.

இந்த களேப்பாரங்களில் துளசி என்று ஒருத்தியை திருமணம் செய்தது ஞாபகத்தில் இருந்தாலும், அவளை கண்டு கொள்ள கூட மாட்டான்.

“நான் காதலிக்கிறேன் என்று சொல்லியும் என்னை திருமணம் செய்திருக்கிறாள் என்றால் அவளின் எதிர்பார்ப்பு என்ன? அவள் எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாள்” இப்படி தான் அவனின் தோற்றம் துளசியை பற்றி.

இவன் அலைபேசி எடுக்காமல் விட, ஷெரீனா தற்கொலை முயற்சி செய்ய, இவனுக்கு சர்வமும் ஆடியது.

எப்படியோ அவளின் அப்பா அவளை பிழைக்க வைத்து விட, அதன் பிறகே அவளின் அப்பாவிற்கு மகளின் காதல் தெரிய வந்தது.

யாருக்கும் தெரியாமலேயே முடிந்திருக்கக் கூட அவர்களின் காதல் விஷயம், அவளின் அப்பாவிற்கு முதன் முதலில் தெரிய வர, அந்த மனிதர் திக்கு முக்காடிப் போனார். இதற்கா மனைவி இறந்ததும் மறு திருமணம் கூட செய்யாமல் பெண்ணை கண்ணாக வளர்த்தேன். மிகவும் மனது விட்டார்.

பின் அவளுக்கு ஆயிரத்தி எட்டு புத்தி மதிகள் சொல்லி தேற்றிய போதும், மகளின் தற்கொலை முயற்சியால் பெரிய ஹாஸ்பிடலில் சேர்த்திருக்க, அதன் பில்லே கிட்ட தட்ட ஒரு லட்சம் வந்திருந்தது.

மகளை ஒரு பக்கம் தேற்றிக் கொண்டே பணத்திற்கு அவர் அலைய, விஷயம் தெரிந்த திரு அவருக்கு உதவினான்.

அது அவனின் இன்னொரு மிகப் பெரிய தவறாகிப் போனது.

இவன் என்னை விட மாட்டான் என்ற எண்ணம் ஷெரீனாவின் மனதினில் பதிந்தது. ஆனால் திரு செய்ததற்கு காரணம் அவனால் ஒரு உயிர் போய்விடக் கூடாது என்பது தான்.

ஆம்! காதல் எல்லாம் போய் ஒரு எரிச்சலில் இருந்தான். அப்பாவிடம் ஏற்கனவே தோற்று விட்டான். இதில் இவளிடம் படித்து படித்து சொல்ல, இப்படி செய்து வைத்தால் என்ன செய்வான். உயிர் என்ன அவ்வளவு ஈசியா. அதற்காக போராடுவோர் எத்தனை பேர்!  

பணம் கொடுத்து, ஷெரீனாவின் அப்பாவிடம் எல்லாம் விஷயத்தையும் சொல்லி விட்டவன், மன்னிப்பும் கேட்டு, பெண்ணை பார்த்துக் கொள்ள சொன்னான்.

ஆனாலும் என்னை இவன் விடமாட்டான் என்ற எண்ணம் தான் ஷெரீனாவிடம் ஸ்திரமாக இருந்தது.

அதன் பொருட்டே முகம் கூட சரியாகப் பார்க்காத துளசியிடம், அதுவரை ஒரு வார்த்தை கூட சரியாகப் பேசியிராத துளசியுடன் கூடி அவளை கர்ப்பமாக்கினான்.

கர்ப்பம் என்று தெரிந்த நிமிடம், ஷெரீனாவிடம் “பாரு, எனக்கு குழந்தை பிறக்கப் போகுது. இனி நாம சேர வாய்ப்பில்லை” என்றான் முடிவு போல.

இதை ஷெரினாவால் தாளவே முடியாமல் பித்து பிடித்தவள் போலானால்.

ஒன்றிரண்டு வருடங்கள் அவளுக்கு சிகிச்சையளித்து, தேற்றி, பின் அவளின் அப்பா அவளைத் திருமணம் செய்து கொடுத்தார்.

இதன் மொத்த செலவும் திருவின் தலையில் தான். இதற்கெல்லாம் செலவு செய்யும் அளவிற்கு வசதி கிடையாது. அதையும் விட அவளின் அப்பா வேலைக்கு செல்ல முடியாத நிலை.

வேலை சென்றால் இவளை அழைத்து கொண்டு ட்ரீட்மென்ட் அது இதென்று எப்படிப் பார்க்க முடியும். வீட்டில் இவளை எப்படி தனியாக விட முடியும்.  

விஷயங்கள் யாருக்கும் தெரிய வராமல் எப்படியோ அவளை சரி படுத்தி திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் அந்தோ பரிதாபம், திருமணம் ஆன உடனே, பெரிய உண்மை விளம்பியாக அவள் தன் கணவனிடம் தன்னுடைய கடந்த கால காதலை கூற, அப்போது ஆரம்பித்தது அவளுக்கு சித்ரவதைகள்! முட்டாள் பெண் அவளின் வாழ்க்கையை அவளே அழித்துக் கொண்டாள்.

ஷ்! அதன் பிறகு எல்லாம் தொடர் கதையாகிப் போக, ஒன்று போக எதோ ஒன்று அவளின் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்க, என்னால் தானோ என்ற குற்ற உணர்ச்சியின் பிடியில் முழுவதுமாக இருந்தான் திரு இதுவரையிலும்.

தொழிலில் இருக்கும் வெற்றி மட்டுமே அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. மற்றபடி வாழ்க்கையில் மிகவும் மோசமாக தோற்ற, தோற்றுக் கொண்டிருக்கும் மனிதன் என அவனுக்கு அவனே தெரிந்து இருந்தவன்.

துளசியின் முகம் தவிர்க்க காரணம், அவளின் அழகு முகம் மட்டுமே. தெரிந்து தானே வந்தாள் அனுபவிக்கட்டும் என்ற எண்ணம் தான் வாழ்க்கையை தொடங்கும் போது. அவள் கர்ப்பமான போது தானாகவே என் மனைவி என்ற எண்ணம் வந்திருந்தது.

ஆனாலும் பழைய எண்ணமும் மாறவில்லை. ஒரு வேளை இந்த ஷெரினாவின் வாழ்க்கை நன்றாக இருந்திருந்தால், அவனின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ. அதில் பிரச்சனைகள் எப்போதும் இருக்க, அது இவன் காதுகளில் எப்போதும் விழுந்து கொண்டே இருக்க, அந்த பெண் எப்படியோ இவனுக்கு விடுதலை என்பது இல்லாமல் போனது.

எது எப்படி இருந்தாலும் சில வருடங்களாக துளசியிடம் ஈர்ப்பு அதிகம் தான். அதனாலேயே இன்னம் தவிர்த்தான்.

அவரவர் வாழ்க்கை எப்படியோ அப்படித்தான்! அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று விட்டு போகாமல், தன்னால் தான் என்று வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கிக் கொண்ட மனிதன்.

ஆனால் அவன் செய்வது அவனுக்கே பிடிக்கவில்லை. எப்படி இதில் இருந்து வெளியில் வருவது என்றும் தெரியவில்லை. தொழிலின் வெற்றியோடு சேர்ந்து வாழ்க்கையின் தோல்வியும் அவனை முரட்டு மனிதனோடு முட்டாள் மனிதனாயும் ஆக்கி இருந்தது.

வாழ்க்கையை அனுபவிக்க அல்ல வாழ்க்கையை வாழவே தெரியாத முட்டாள் மனிதனாய்!

இதில் துளசி என்ற மனுஷி அவனை எந்த வகையிலாவது தொந்தரவு செய்திருந்தாலோ, நீ சரியில்லை என்ற சொல்லியிருந்தாலோ, வாழ்க்கை வாழ வேண்டு என்ற ஆசை, இல்லையில்லை எண்ணம் அதுதான் சரியான சொல் அது இல்லாமல் போயிருக்கும்.

மீனாக்ஷி! அவனின் ரத்தம், அவனின் மகள், எல்லாம் தெரிந்தாலும் புரிந்தாலும் அவளை கொஞ்சம் வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவனால் அதை செய்ய முடியாமல் ஒரு இயலாமை இருக்கும்.

மொத்தத்தில் ஒரு பைத்தியக்காரன் அவன்!

ஆயினும் அந்த பைத்தியக்காரன் மேல் பைத்தியமாய் இருந்த துளசி, அவனின் இந்த பாராமுகத்தை பதிமூன்று வருடங்கள் சகித்துக் கொண்டாள். ஒரு ஆயுள் தண்டனைக்கு சமானம்.

அவளுக்கு தெரியவே தெரியாது, ஷெரீனா என்ற பெண் இன்னம் அவனின் வாழ்க்கையில் எதோ ஒருவகையில் சம்மந்தப்பட்டு இருக்கிறாள் என்று. தெரிந்தால் அவளின் இந்த பைத்தியக்காரத்தனம் இருக்குமா? யாராலும் சொல்ல இயலாது. ஏன் அவளாளுமே!

அந்தோ பரிதாபம், மூன்று மாதத்தில் மகனின் காதலைக் கண்டு பிடித்த மேகநாதனால் அவனின் இந்த பதிமூன்று வருட தொடர்ப்பு தெரிய வரவேயில்லை.

காரணம் ஷெரீனா என்ற பெண் அவ்வபோது அலைபேசியில் மட்டுமே பேசுவாள். பல வருடங்களாக அதுவும் இல்லை. தொடர்ப்பில் இருந்தது எல்லாம் அவளின் அப்பாவும் தம்பியும் மட்டுமே.

மிகவும் சிதிலமடைந்த கதியற்ற மனிதர்கள், எதர்க்கெடுத்தாலும் திருவிடம் வந்து நிற்ப்பர்.

சிறையெடுத்து இருந்தாலும் ஆட்கள் மூலமாக என்பதால், மேகநாதனிற்கு ஷெரீனாவின் குடும்பத்தினரை தெரியவில்லை. ஷெரினாவை மட்டுமே தெரியும்.

அது முடிந்த கதை என நினைத்திருக்க, அது தொடரும் அத்தியாயம் என அவருக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் மொத்த குடும்பத்தையும் முடித்து மகனுக்கு நிம்மதியும் விடுதலையும் கொடுத்திருப்பார்.  

Advertisement