Advertisement

Tamil Novel

வேகமாக சட்னி ஆட்டி, தோசைகளை வார்த்து டைனிங் டேபிளில் வைக்க, மேகநாதன் வந்தவர் உண்டு முடிக்க, பின்னே திருவும் வந்தவன் உண்டு முடிக்க,

பின்பு அடுப்பை அணைத்து, “இப்போ என்னவோ செஞ்சிக்கோ” என்று துளசி நகரப் போக,

‘உங்களுக்குக்கா” என்று தனம் கேட்க, “இல்லை பசிக்கலை” என்று சொல்லி நகர்ந்தாள்.

அதுவரையிலும் தனம் துளசியின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இப்படி பார்க்கற?” என்று துளசி அவளையும் மீறி அதட்ட,

“உங்க கன்னம்” என்று தனம் இழுக்க, அதற்கு பதிலே சொல்லாமல் நகர்ந்து விட்டாள் துளசி. அடிவாங்கியிருக்கிறார்கள் என்று தனத்திற்கு புரிந்தது. ஆனாலும் எதையும் காண்பித்து கொள்ளாமல் இப்படி வேலை செய்கிறார்கள். “மனுஷியா என்ன?” என்ற எண்ணம் தான் தனத்திற்கு ஓடியது. 

துளசி சமையலறை விட்டு வெளியே வந்த சமயம், வீட்டின் மூன்று பெண்மக்களும் உள்ளே நுழைந்தனர். மேகநாதனின் தங்கைகள் சாரதாவும் சித்ராவும், கூட அவரின் மகள் ராதா அதாகப் பட்டது திருவின் தங்கை. ராதாவிற்கு எட்டு வயதில் ஒரு மகன் இருந்தான். மீனாக்ஷி படிக்கும் பள்ளி தான் அவன் படிக்கின்றான்.  

“வாங்க சித்தி, வாங்க அண்ணி” என்று துளசி வரவேற்று, உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து உபசரிக்க, அகிலாண்டேஸ்வரி அவர்களை அப்போது தான் பார்த்தவர், “வா ராதா” என்று மகளை வரவேற்று விட்டு, “வாங்க அண்ணி” என்று அவரின் நாத்தனார்களை வரவேற்றார்.

மேகநாதன் வந்தவர் “வாங்க பொண்ணுங்களா” என்று அருகில் அமர்ந்தார்.

துளசி தண்ணீர் கொடுக்க, “இப்போ தான் குடிச்சிட்டு வந்தோம்” என்று சாரதாவும் சித்ராவும் மறுத்து விட, “எனக்கு தொண்டை சரியில்லை பச்சை தண்ணீர் வேண்டாம்” என்று நாசூக்காக ராதா மறுத்து விட,

துளசிக்கு நன்றாக தெரியும், அது தான் கொடுப்பதினால் அவர்கள் மறுக்கிறார்கள் என்று. ராதா பொதுவில் அப்படி செய்ய மாட்டாள் இன்று தனது அத்தைகளை கொண்டு செய்கிறாள் எனப் புரிந்தது.   

“கொடுப்பது என் கடமை நீ, குடித்தால் என்ன? குடிக்காவிட்டால் என்ன?” என்ற மனநிலை துளசிக்கு எப்போதும் உண்டு, பதில் பேசாமல் அந்த தண்ணீரை எடுத்து உள்ளே சென்றவள் அதனை அப்படியே வைக்காமல், கீழே ஊற்றி விட, என்னவென்று தெரியாத போதும் தனம் வேடிக்கை பார்த்து நிற்க, இப்படியாக தனம் நேரத்தை தான் கடத்திக் கொண்டிருந்தாள் ஒழிய சமையல் செய்வதாக காணோம்.

சட்னியும் இருவர் சாப்பிடும் அளவிற்கே துளசி அரைத்து இருந்தாள்.

தங்கைகள் வந்ததால் மேகநாதன் அவர்களோடு அமர்ந்து விட்டார். அவருக்கு தெரியும் அவர் நகர்ந்து விட்டால், வீட்டினில் பிரளயத்தையே உருவாக்கி விடுவர்.

“ஹாஸ்பிடல் எப்படி போற துளசி” என்று அவர் கேட்க, அதுவே சொன்னது “நான் வரவில்லை, நீ போ” என்று.

“நீங்க வந்தா உடனே விட்டுடுவாங்க, நான் போனா டோக்கன் போட்டு காத்துட்டு நிக்கணும். அரை மணிநேரம் வந்துடலாம்” என்றாள். எல்லாம் திருவின் அத்தைகளின் முன்னேயே. மகளின் வலி அப்படி பேச வைத்தது.

இதைல்லாம் ரூமின் உள் மில்லுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்த திருவின் காதினில் விழுந்தது. ரூம் இரண்டு பிரிவுகளாக இருக்கும், ஒரு ரூமின் உள் இருந்து இன்னொரு ரூம் போகலாம். உள் இருந்த ரூமில் துளசியும் மீனாட்சியும் உபயோகிக்க, வெளியே இருந்த ரூம் திரு இருப்பான். அவன் அங்கே தான் தயாராகிக் கொண்டிருக்க, சத்தம் நன்கு கேட்டது.   

“ஏன் கொஞ்சம் நேரம் இருந்து பார்த்துட்டு வரமாட்டியோ?” என சாரதா சொல்ல,

“வலிக்கு ரொம்ப அழறா சித்தி” என்று துளசி பதில் கொடுத்தாள்.

“என்னவோ என் பொண்ணை தள்ளி விடறேன்னு சொன்னானாமே உன் வீட்டுக்காரன், இதெல்லாம் கேட்டுட்டு என் கூடப் பொறந்தவங்களும் இருக்காங்க. என்ன புதுசா பாசம் பொண்ணு மேல உன் வீட்டுக்காரனுக்கு பொங்குது” என்று நேரடியாகப் பேசினார். உள்ளே திரு இருப்பது தெரிந்தே அவனின் காதில் விழ சத்தமாகப் பேசினார். 

“அப்படி கேளும்மா” என்றபடி ஷோபனா வர,

இதற்கு மேல் இவர்களிடம் ஆகாது என்று உணர்ந்த துளசி, ரூமின் உள் சென்றவள், திருவின் பர்ஸ் எப்போதும் இருக்கும் இடத்தினில் இருக்க, திரு எப்படியும் கவனிப்பான் என புரிந்து அதிலிருந்து ஹாஸ்பிடல் செல்ல பணத்தை எடுத்தாள்.

அதுவே தனியாகப் போகப் போகிறாள் என்று காண்பித்து கொடுக்க, துளசி கைபேசி எடுத்து ஆட்டோவிற்கு சொல்வதையும் கவனித்தான்.

மீனாக்ஷி படுத்தும் பாட்டிற்கு எப்படி தனியாக போய் வருவாள் என்று தோன்றிய போதும், “நான் அழைத்துப் போகிறேன் என்றோ, கூட வருகிறேன்” என்றோ சொல்லவில்லை. 

வெளியே மேகநாதன் “இப்படி எல்லாம் பேசாத சாரதா, நீ பேசறது சரியில்லை” என்று தங்கையிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அவன் பொண்ணு போய் விழுந்து எழுந்து வந்தா என் பொண்ணை அவன் தள்ளி விடுவானா, எப்படி அப்படி சொல்லலாம்” என்றார் கோபமாக.

“சும்மா பிரச்சனை பண்ணாத சாரதா, ஷோபனாவும் பார்த்து பேசணும். என் பேத்தி வலில அப்படி அழுதுட்டு இருக்கா, ஷோபனா ஒரு சின்ன காயத்துக்கு எதுக்கு இவளவு ஆர்ப்பாட்டம்னு பேசியிருக்க கூடாது, காயமும் அதிகம்” என்று சொல்ல,

ரூமின் உள் திருவின் காதினில் விழுந்தது.

“என்ன வேணா இருக்கட்டும், என் மகளை பேச அவன் யாரு” என,

அதுவரை ரூமின் உள்ளே இருந்த திரு வெளியில் வந்தவன், அத்தையை பார்த்து “நான் யாரா அத்தை” என்றான் சிறு அலட்சிய சிரிப்போடு.

கூடவே “உங்க பொண்ணுக்கு நான் யாரும் கிடையாது. ஆனா என் பொண்ணை பேசினா நான் பேசினேன். புதுசா என்ன பாசம்னு கேட்காதீங்க உங்க மாதிரி தப்புக்கு துணை போற பாசம் எனக்கு தேவையில்லை. உங்க கிட்ட என் பாசத்தை காட்டணும்னு எனக்கு அவசியமுமில்லை. ஆனா வேறு சிலதை காட்டி ஆகணும்னு காண்பிச்சிட்டீங்க” என அவன் சொல்லும் போதே வெங்கடேஷ் வந்தவன்,

“இதுகளுக்கு பட்டா தான் புத்தி வரும்” என்று அவன் பாட்டிற்கு வெளியில் சென்று விட்டான். வந்தவர்களை “வாங்க” என்று கூட சொல்லவில்லை. மனைவியை அடித்த கணவன் உணவை முடித்திருக்க, மனைவியை தாங்கி, அவள் என்ன டிஃபன் செய்ய வேண்டும் என்று சொல்லுவாள்” எனச் சொன்ன தான் பட்டியினோடு செல்கிறோம் என்பது அவனின் மனதிற்கு உரைத்தது.  

 ஷோபனா வெங்கடேஷ் அமருவான் என்று பார்க்க அவன் சென்றது ஒரு கோபத்தை கொடுத்தது.  

திரு மகளை கிளப்பிக் கொண்டிருந்த துளசியிடம் பேசாமல் “அம்மா மீனாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போக ஆட்டோ சொல்லியிருப்பா போல, வேண்டாம்னு சொல்லு, கார் வரச் சொல்றேன்” என்றவன்,

நேராக சாரதாவின் கணவருக்கு போன் அடித்தவன்,

“எப்படியிருக்கீங்க மாமா” என்று பேச்சை ஆரம்பித்து, “பணம் கேட்டிருந்தீங்க இல்லை , இருபது லட்சம் இப்போதைக்கு என்னால முடியாதுன்னு சொல்ல ஆசை. ஆனா எப்போவுமே முடியாது மாமா, எங்கப்பா தங்கச்சிங்க இங்க வந்து உட்கார்ந்துகிட்டு என்னை கேள்வி கேட்டுட்டு இருக்காங்க நான் யாருன்னு. நான் யாருமில்லை உங்களுக்கு”

“போன வருஷம் இங்க வீட்ல இருந்து எங்க கார் எடுத்துட்டுப் போனீங்க, இன்னைக்கு வரைக்கும் அதை கொண்டு வந்து விடலை. அதை உடனே அனுப்பிவிடுங்க” என்று பேசப் பேச,  

சாரதாவின் முகம் இருண்டு விட்டது.

எப்போது எது பேசினாலும் கண்டு கொள்ளாமல் போகும் திருவிடம் இப்படி ஒரு பரிமாணம் எதிர்பார்க்கவில்லை.

இந்த பேச்சுக்கள் இந்த ஆர்பாட்டங்கள் எதிலும் பாதிக்கப் படாதவளாக துளசி.

“கார் வர்ற வரைக்கும் காத்திருக்க முடியாது, நீங்க ஃபோன் செஞ்சு அந்த அட்டண்டர் கிட்ட எங்களை சீக்கிரம் உள்ள அனுப்ப சொல்லி சொல்லிடுங்க மாமா” என்று மாமனாரிடம் சொல்லி மீனாட்சியை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். 

பேச்சை நிறுத்தி துளசியை தான் கவனித்தான் திரு. பின்னே அவன் பேசப் பேச, துளசி அவனை பார்த்திருந்தாளே. அவன் பார்க்கும் வரை விடாது பார்த்திருக்க வேறு வழியில்லாமல் பார்த்திருந்தான். அந்த பார்வை “என்ன லூசு மாதிரி பேசற நீ” என்பதாக திருவிற்கு தோற்றம் கொடுத்தது. உடனே பேச்சை நிறுத்தி விட்டான்.

அந்த பக்கம் “திரு திரு” என்று கத்திய அவனின் மாமா உடனே இங்கே வீட்டிற்கு கிளம்பியிருந்தார்.   

மீனாக்ஷி விந்தி விந்தி நடக்க, “இதோ கொஞ்சம் தூரம் தான், வாசல் வந்திடும், அங்க இருந்து கொஞ்சம் தூரம் தான், ரோட் வந்திடும், நாம போறதுக்குள்ள ஆட்டோ வந்திடுவான்” என்று சொல்லி அழைத்து செல்வதையே பார்த்திருந்தான்.          

“எல்லோர் முன்னையும் அடிச்சிருக்கேன், அதுக்கான பிரதிபலிப்பு ஒன்னுமே இல்லாம அசராம வேலையைப் பார்க்கறா. சரியான திமிர். இதுல நான் பேசினா என்னை லூசுன்னு பார்க்கறா” என்று தோன்றியது.

இப்போது அவனின் கோபம் எல்லாம் அப்பாவின் மீது திரும்பியது. இத்தனை வருடங்களாக பேசாதவன் “எல்லோரையும் பேச விட்டு வேடிக்கை பார்க்கறீங்களா நீங்க?” என்று அவரிடம் சண்டைக்கு கிளம்பினான்.

“பரவாயில்லை துளசி கிளம்பிட்டா. இல்லை, உங்களை அடிக்க முடியாத பாவத்துக்கு அவளை தான் அடிச்சிருப்பேன்” என்று சொல்லிச் செல்ல, மேகநாதன் எல்லாம் எதற்கும் அசரவில்லை. என்னவோ பேசிக் கொள் என்ற பாவனையோடு இருந்தவர்,

எதுவும் நடவாதது போல “அப்புறம்” என்று தங்கைகளிடம் பேச, அவர்கள் யாராலும் பேச முடியவில்லை. மேகநாதனிடம் எல்லாம் இப்படி யாரும் பேச மாட்டர்.

அகிலாண்டேஸ்வரி தான் “திரு அப்பா கிட்ட என்ன பேசற” என்று அதட்டி கத்த, அது அவனின் காதில் கூட விழுந்திருக்காது, வெளியே விரைந்திருந்தான்.  

மேகநாதன் தங்கைகளையும் மகளையும் பார்த்தவர் “பிறந்த வீடு வேண்டும்னு நினைச்சா பார்த்து பேசணும் பார்த்து நடந்துக்கணும் திரு கிட்ட, என் பேத்தி கிட்ட, முக்கியமா துளசி கிட்ட. அவ தண்ணி குடுத்தா கூட நீங்க குடிக்க மாட்டீங்க. அப்போ இனிமே இந்த வீடு உங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம் அப்படி தானே” என்றார் ஸ்திரமாக.       

கூடவே ஷோபனாவை காண்பித்து “இவளுக்கு செய்யவே ஆள் வேண்டும், இதுல இவ உங்களுக்கு என்ன செய்வா, வாங்க தான் பார்ப்பா, செய்ய எல்லாம் மாட்டா, வேற வீட்ட்ல குடுத்திருந்தா இந்நேரம் உங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்திருப்பா, என் பையனாப் போகவும் குடும்பம் நடத்தறான்”   என்றே சொல்லி அவர் அந்த இடத்தை விட்டு எழுந்தவர்,

மகளை ஒரு பார்வை பார்த்தவர் பேசவே இல்லை அவளிடம், பின்னே துளசியிடம் நன்றாக நடக்க வேண்டும் என்று அத்தனை முறை அவர் சொல்லிக் கொடுத்திருக்க, இன்று அவள் தண்ணீர் கூட வாங்காதது அவருக்கு அப்படி ஒரு கோபத்தை கொடுத்திருந்தது.

எத்தனை வருடங்களாக எல்லோருக்கும் படித்து படித்து சொல்கிறார். ஆனாலும் எல்லோரும் திரும்ப திரும்ப பேசுவது அவருக்கு ஒரு எரிச்சலையும் ஆதங்கத்தையும் கொடுத்திருந்தது.  

“நான் ஹாஸ்பிடல் போறேன்” என்று பேத்தியை பார்க்கச் சென்றார்.   

  

Advertisement