Advertisement

Tamil Novel

அத்தியாயம் மூன்று :

அதுவரை வேடிக்கை பார்த்திருந்த கமலநாதன் “நீ என்ன சொல்ல வர்ற திரு, தெளிவா சொல்லு!” என்று வாய் திறக்க,

“என்ன சொல்லன்னு தெரியலை சித்தப்பா அதுதான் அவளை அடிச்சேன், நீங்க என் மேல உள்ள அக்கறைல தான் பேசறீங்க இல்லைன்னு சொல்லலை, ஆனாலும் இப்படி பேசறது சரி கிடையாது சித்தப்பா”

“இவளை எங்கப்பா எனக்கு கட்டி வெச்சார் கட்டி வைக்கலை விடுங்க, ஆனா ஒரு பொண்ணை நீங்க இப்படி எல்லோரும் சுத்தி நிக்க அழவிடறது எந்த வகையிலையும் சரி கிடையாது. எனக்கும் அவளுக்கு ஆகுது ஆகலை, பேசறோம் பேசலை, ஆனா ஒரே வீட்ல தானே இருக்கோம், ஒரு பொண்ணை வேற பெத்து வெச்சிருக்கோம், இப்படி பேசறது அவளை மட்டுமில்லை என் பொண்ணையும் பாதிக்கும்!”

“எங்கப்பா மாதிரி ஊருக்குள்ள பெரிய மனுஷங்கன்னு மீசையை முறுக்கிட்டு சுத்தினா பத்தாது, இப்படி சுத்தி நின்னு யாரையும் அழ வைக்க கூடாது, என் வாழ்க்கையை எங்கப்பா எப்போவோ முடிச்சிட்டார், இனி அதை பேசி ஆகப் போறது ஒண்ணுமில்லை, நான் எப்படி நடந்துகிட்டாலும் நீங்க யாரும் அதை காட்டணும்னு அவசியமில்லை” என்று மிக நீளமாகப் பேசினான்.

எப்போதும் தொழில் என்று வந்து விட்டால் இப்படி கட் அன்ட் ரைட்டாக தான் பேசுவான், வீட்டில் எந்த அளவிற்கு பேச்சு இல்லையோ தொழிலில் அந்த அளவிற்கு இருக்கும். அது இந்த சில வருடமாக அவனின் வளர்ச்சி அபாரம் என்பதால், அந்த ஒரு வெற்றி அவனின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்த்திருக்க, மற்றவர் அவனை பார்க்கும் பார்வையில் தானாக ஒரு மரியாதை வந்திருந்தது.

வெற்றி கொடுக்கும் மரியாதை தனி தானே, சித்தப்பாக்களே அவனிடம் இப்போது “வா திரு, இங்க வந்து பாரு நம்ம இடம் தானே, வேற என்ன மாத்தலாம், தொழில் பெருக்கலாம்” என்று சொல்லியிருந்தனர்.

தன்னுடைய மக்களுக்கு திருவை தான் அடையாளம் காண்பிக்க ஆரம்பித்திருந்தனர். “அவனை பாருங்கடா” என்பது போல.

ஆனாலும் சிறியவர்களுக்கு அவனின் மனைவியோடு மண வாழ்க்கை அப்படி ஒன்றும் சிறப்பாக கண்களுக்கு தெரியாததால் “ம்ம், அவருக்கு என்ன வேலை? முழு நேரமும் தொழிலே கதின்னு கிடப்பார். அப்படி ஒரு வாழ்க்கை எல்லாம் எங்களால வாழ முடியாது” என்று சொல்லுவர். 

இளையவர்கள் சொல்லாதது “அவர் பைத்தியக்காரர் இவ்வளவு அழகான் பொண்டாட்டி இருக்கும் போது வீட்டுக்கு வராம மில்லுல இருக்கார்” என்று நினைத்துக் கொள்வர்.

மேகநாதன் தான் பெரியவர், அதன் பிறகே இரண்டு பெண்கள், அதன் பிறகே சத்தியநாதனும் கமலநாதனும். அதனால் அவர்களின் மக்கள் எல்லாம் இப்போது தான் திருமண வயதை எட்டி இருந்தனர். சத்தியநாதனின் மகனிற்கும் கமலநாதனின் மகளிற்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பெரிய அண்ணனின் வீட்டிற்கு பெண் எடுத்து பெண் கொடுத்திருந்த அவர்களின் தமக்கைகளால் மற்ற இரு தம்பிகளின் மக்களிடம் முடியவில்லை, “சொந்தம் எல்லாம் வேண்டாம்” என்று அவர்களின் மக்கள் தெளிவாக உரைத்திருந்தனர்.

வீட்டில் மட்டுமல்ல உறவுகளில் இருக்கும் அத்தனை பெண்களிலும் துளசி மிக மிக அழகானவள். அவள் வசதியற்றவள் என்பதையும் விட, அந்த வீட்டில் ஒரு எடுபிடி வேலை செய்பவரை போல இருந்தவரின் மகள் என்பதே யாரையும் அவளை நெருங்கி பழக விடவில்லை.

மற்றபடி துளசியிடம் சிறு குறையும் சொல்ல முடியாது!

திரு பேசிக் கொண்டே இருக்க அப்பாவின் கைப்பிடியில் இருந்ததால் மீனாக்ஷியின் முகத்தில் வலியின் சாயல் அதிகமாவதை காணவும், கண்களில் இருந்து திரும்ப நீரும் வர ஆரம்பித்ததையும் பார்த்த துளசி, திரு பேசிக் கொண்டிருக்கும் போதே படியேறி மகளை கை பிடித்து இழுக்க, திரு கைகளை விலக்கினான்.

திரு எப்படி அவளின் முகம் பார்க்கவில்லையோ அப்படி துளசியும் பார்க்கவில்லை. கோபமாக அழுகையாக எப்படியும் பார்க்கவில்லை.  

பின் அம்மாவும் மகளும் படியேறி வீட்டின் உள் சென்று விட்டனர். 

ரூமின் உள் சென்றதும் “மா வலிக்குது” என்ற மகள் உடனேயே “உன்னோட கன்னம் வீங்கிடுச்சும்மா” என்றும் சொல்ல,

அதனை சற்று கண்டுகொள்ளாமல் “நீ முதல்ல உன் காயம் எல்லாம் காட்டு” என்று மகளை ஆராய, கைகளில் சிராய்ப்பு, கை முட்டியில் சிராய்ப்பு, பின் காலில் தான் இரண்டு முட்டியிலும் நல்ல காயம் முட்டி பெயர்ந்து உள்ளே சதை தெரிந்தது.

அதனால் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று புரிந்தது. துளசி பார்த்ததும் பதறி விட்டாள், எப்படி இப்படி விழுந்த மீனா, “வா” என்று அவளை குளியலறை அழைத்து போய் பைப்பை திறந்து விட்டு காயத்தை கழுவ,

“மா விடும்மா, விடும்மா” என்ற அவளின் கதறல் வெளியே நன்கு கேட்டது.

வெளியில் இருந்தவர்களுக்கு மகளை போட்டு அடிக்கின்றாளோ என்ற பதைப்பே வர, மேகநாதன் வேகமாக வீட்டின் உள் போக, “அச்சோ பிள்ளையை அடிக்கிறாளோ” என்று அகிலாண்டேஸ்வரியும் போனார். குறும்பு செய்தால் மீனாக்ஷி அடி விழும் தான் ஆனால் சிறு வயதில் இப்போதெல்லாம் அடி இல்லை. துளசி மகளை அப்படி தாங்கினாலும் அதில் கண்டிப்பும் எப்போதும் இருக்கும் 

“திரு மீனா ஏன் இப்படி கத்தறா?” என்று பெரிய சித்தி கேட்க,

“காயத்தை கழுவுவாளா இருக்கும் சித்தி” என்று சரியாக கணித்தான் திரு.

ஆனாலும் மனது கேட்காமல் எல்லோரும் உள்ளே செல்ல, படுக்கை அறையில் இருந்து சத்தம் எனபதால் அகிலாண்டேஸ்வரியும் சித்திகளும் உள்ளே செல்ல, குளியறையில் தான் சத்தம்.

எட்டி பார்க்க காயத்திற்கு தான் அத்தனை ஆர்ப்பாட்டம் என்பது புரிந்தது.

“துளசி அவளை விடு” என்று அகிலாண்டேஸ்வரி அவளை வெளியில் அழைத்து வர, எல்லோரும் அவளின் காயம் பார்த்து அதிர்ந்து விட்டனர்.

ஆம் முட்டியில் மேல் தோல் பெயர்ந்து உள்ளே இருந்த சதையே தெரிந்தது.

அப்போது தான் உள்ளே வந்த திரு அந்த காயத்தை பார்த்ததும் மீனாவின் மீது பாய்ந்தான், “அறிவிருக்கா உனக்கு, உன்னை யாரு இறங்கி வர சொன்னா” என்று கத்த, மீனா அப்பாவின் கத்தலில் பயந்து திரும்ப அழுதாள்.

“எப்படி விழுந்த மீனா” என்று மேகநாதன் கேட்க,

“அப்பா என்னை க்ராஸ் செஞ்சு போனார் தாத்தா. என்னை பார்க்கலை. அவரை கூப்பிட்டிட்டே திரும்பினேனா, சைக்கிள் இடிச்சிடுச்சு, கீழ விழுந்துட்டேன்!” என்று தேம்பியபடி சொன்னாள்.

அப்போதுதான் வெங்கடேஷ் ஷோபனாவை எழுப்பி வெளியே வரச் செய்திருந்தான். “எல்லோரும் இருக்காங்க, நீ தூங்கற, உன்னை அப்புறம் தாளிச்சு எடுப்பாங்க” என்று சொல்லி அழைத்து வந்திருந்தான். சொல்லப் போனால் மணி காலை ஒன்பதை நெருங்கியிருந்தது.    

நைட்டியோடு அவள் எழுந்து வெளியே வர, ஒன்பது மணிக்கு அவளை அப்படி பார்த்ததும் அண்ணன் தம்பிகள் மூவருமே முகத்தினை சுருக்கினர்.

ஏதாவது பேசினால் “அந்த வேலை செய்யறவன் பொண்ணும், என் பொண்ணும் ஒன்னா?” என்று அவர்களின் உடன் பிறப்பு சண்டைக்கு வரும் பெண்கள் அனைவரும் அமைதி காத்தனர்.

எல்லோரும் இருந்தாலும் ஷோபனாவிற்கு தாய் மாமன்களும் அத்தைகளும் தானே, அருகில் சாவகாசமாக வந்தவள், காயத்தை பார்த்ததும் அகிலாண்டேஸ்வரியிடம் “ஒரு காயத்துக்கு எதுக்கு இவ்வளவு சத்தம் அத்தை” என மீனாவை பற்றி சொல்ல,

துளசியிடம் எப்போதும் ஷோபனா வம்பிற்கு இழுத்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் கடந்து விடுவாள். இன்று கடக்க முடியவில்லை பெண்ணின் காயம் மனதிற்கு வருத்தத்தை கொடுத்திருக்க இதில் ஷோபனா பேசியது ஒரு கோபத்தை கொடுத்தது. 

இனி ஒரு வார்த்தை அவள் பேசினால் திரும்ப பேசும் முடிவில் துளசி இருக்க, அதற்கு அவசியமில்லாமல் போனது.  

என்னவோ காலையில் இருந்து எரிச்சலின் உச்சத்தில் இருந்த திரு, கூடவே இப்போது துளசியை அடித்தது வேறு மனதின் ஒரு ஓரத்தில் உதைத்து இருக்க, மகளின் காயம் எல்லாம் சேர்ந்து அவனை பேச வைத்தது.

“டேய் ஷோபனாவை தள்ளி விட்டு காயம் பண்ணுடா, அவ கத்தறாளா இல்லையான்னு நான் பார்க்கறேன்” என்று திரு சொல்ல,

“என்னடா இவன் இவ்வளவு பேசறான் இன்னைக்கு” என்று தோன்றிய போதும் அவனை யாரும் அதட்டவில்லை, “நீ பேசினியா, நீ வாங்கிக்கோ” என்ற படி நின்றார்கள். ஏனென்றால் மீனாவின் காயம் அப்படி.  

“என்ன? என்னை தள்ளி விட சொல்றீங்களா மாமா?” என திருவிடம் சண்டைக்கு கிளம்ப,  

“உன் கிட்டயா சொன்னேன், அவன் கிட்ட தானே சொன்னேன், அவன் கிட்ட கேளு” என்று வெங்கடேஷை காட்டினான். வெங்கடேஷ் அவனை எதிர்த்து பேசமாட்டான். சிறு வயதில் இருந்தே. திருவின் வாயை விட கை அதிகம் பேசும். அப்போது வந்த பயம் இப்போது வரை சிறிது இருக்கும்.   

திரு உடனேயே “இல்லைனாலும் ஒன்னும் பிரச்சனையில்லை, அவன் விழுந்து எவ்வளவு வலிக்குதுன்னு உன்கிட்ட காட்டுவான்” என்ற பதிலில் “உன் பொண்டாட்டி பேச்சை நிறுத்தலை, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்ற செய்தி இருந்தது.

எதற்கும் எந்த பிரதிபலிப்பும் துளசியிடம் இல்லை. மகளின் காயத்தை அழுகையை பார்த்து நின்றாள். அவளின் கன்னம் வேறு வலியில் இழுத்தது.  

திரு என்னவோ அப்படி ஒரு கோபத்தில் இருந்தான். அவனுடைய் வாழ்க்கையின் தோல்வி அவனை முரடனாய் மாற்றி இருந்தது. அவனுடைய வெற்றிகள் அவனுக்கே சற்று மமதையை கொடுத்திருக்க, அதிகம் இப்போதெல்லாம் முரட்டுத்தனத்தை செயல்களில் வார்த்தைகளில் காண்பிக்க ஆரம்பித்திருந்தான்.  

வெங்கடேஷ் திரும்பி ஷோபனாவை முறைத்தவன், “கொஞ்சம் பேசாம இரு” என்று அதட்டினான்.

“என்னை தள்ளி விட சொல்றாங்க, யாரும் என்னன்னு கேட்கலை” என்று சொல்லியபடியே அவளின் ரூமின் உள் போக,

“அய்யோடா” என்றானது அனைவருக்கும், பின்னே அவளின் அம்மாவிற்கு சொல்லிக் கொண்டிருப்பாள், இன்னும் அரைமணிநேரத்தில் அவர்கள் இங்கே இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மட்டும்மல் அவருடைய இன்னொரு உடன் பிறப்பும் வரும்.

அக்காவும் தங்கையும் அவ்வளவு ஒற்றுமை, அகிலாண்டேஸ்வரியின் வாய்க்கு மட்டும் சிறிது தயக்கம் காட்டுவார்கள், மகள் என்று வரும் போது அதையும் கடந்து விடுவார்கள். அவர்கள் மட்டும் வரமாட்டார்கள் ராதாவையும் அழைத்து வருவார்கள், அவள் வேறு வந்து “மா இங்கே ஷோபனாவை பார்த்துக்கற மாதிரி தான் அவங்க என்னை பார்த்துக்குவேன்னு சொல்றாங்க” என்று டென்ஷன் கிளப்புவாள்.

இப்படியாக குடும்பம் ஜே ஜே என்றிருக்கும்..

எல்லோரும் அவரவர் எண்ணங்களில் இருக்க எதையும் துளசி கண்டு கொள்ளாது, நேரத்தை பார்த்தவள், மாமனாரை நோக்கி “மாமா, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்துடலாம்” என்றாள்.

“ஹாஸ்பிடல் வேண்டாம் ஊசி போடுவாங்க” என்று சிறு பிள்ளையாய் மீனாக்ஷி பேச,

“வாயை மூடு, நீ ரோட்ல நடக்க தெரியாம நடந்து இப்படியா விழுந்து வைப்ப” என்று மகளை கோபத்தில் அதட்டினாள். யார் இருக்கும் போதும் துளசியின் வாய் திறவாது தனிமையில் மட்டுமே மகளுடன் கோபமான பேச்சுக்கள். மற்றபடி யாரும் இருக்கும் போதும் அவர்களின் கவனத்தை கவராத பேச்சுக்கள் தான்.

இப்போது இவள் அதட்டவும் புருஷனுக்கும் பெண்டாட்டிக்கும் என்னவாகிற்று என்று வீடு அமைதியாக கிரகிக்க முற்பட்டது.

“மா வலிக்குதும்மா” என மீண்டும் தேம்ப,

“ஹாஸ்பிடல் போயிட்டு வந்தா கொஞ்சம் குறையும்” எனச் சொல்லி, அவள் குளிப்பதற்காக வேகமாக சென்றாள்.

தினமும் அவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தான் குளிப்பாள். இன்று அதற்கு நேரமே இல்லாமல் பல கலாட்டாக்கள்.

வேகமாக குளித்து தயாரான போதும், இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவரவர் அவரவர் வீட்டிற்கு சென்று இருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே.

வந்தவள் “வா நீ டிரஸ் மாத்துவியாம்” என்று அவளை ரூமிற்கு உள் அழைத்து செல்வதற்கு நடக்க வைப்பதற்குள் “ஷ் ஹப்பா” என்று ஆகிவிட்டது.

சென்று அவளுக்கு மாற்றி ரூமில் படுக்க வைத்து மகளுக்கு ஜூஸ் விட்டு கொடுத்து என வேலைகள் விரைவாக ஓட, நேரம் பத்தை நெருங்கிக் கொண்டிருக்க அப்போதுதான் தான் தனம் சமையலுக்கு ரெடி செய்து கொண்டிருந்தாள்.

“என்ன இவ்வளவு நேரம்?” என்று துளசி கேட்க,   

“அந்த மகராசி சொல்லுவாங்கன்னு சொல்லிட்டீங்க. அவங்க சொல்ற மாதிரி தெரியலை, அதுதான் ஏதோ ஒன்னு பண்ணிட்டு இருக்கேன்” என்று அவளும் நொடித்தாள்.

பின்னே அவளுக்கு வேலையாக வேண்டாமா?

“நீ எப்போவோ செய், இப்போ தள்ளு” என்ற துளசி, தோசை கல்லை வைத்து தோசை சுட ஆரம்பித்தாள். தோசை ஒரு பக்கம் சுட, சட்னி ஆட்ட முனைய,

“நான் ஆட்டறேன்க்கா” என்று தனம் அருகில் வர,

“நான் இந்த இடத்தை விட்டு நகர்ற வரைக்கும் நீ வரக் கூடாது” என்று மெல்லிய குரலில் என்றாலும் ஸ்திரமாக சொல்ல. தனம் நகர்ந்து நின்று கொண்டாள்.

Advertisement