அத்தியாயம் இருபத்தி மூன்று :

இரவு எட்டு மணியாகிவிட துளசி வாசலில் ஒரு பார்வை பார்ப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக சமையலைறைக்கும் கூடத்திற்கும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் தடுமாறி பின் தன்னை ஸ்திரமாக்கி கொள்ள, அப்போது பார்த்து அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்து விட்டார். அவருக்கு அப்படியே ரத்த கொதிப்பு எகிறி விட்டது.

சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு,   

“எதுக்கு இப்படி நடந்துட்டே இருக்க, பேசாம உட்கார்” என்று அகிலாண்டேஸ்வரி சற்று சத்தமாகவே அதட்டி விட்டார். அவளின் பெரிய வயிறை தூக்கி அவள் அங்கும் இங்கும் நடக்கும் போது பயமாய் இருந்தது.

விஷயம் ஒன்றுமில்லை! மதியம் உணவிற்கும் திரு வரவில்லை, மாலையும் வரவில்லை. அதனால் இப்படி வாசலிற்கும் உள்ளிற்கும் துளசி நடந்து கொண்டிருந்தாள்.

அகிலாண்டேஸ்வரி அதட்டவும் முகம் சுருங்கிவிட, அமைதியாய் ரூமின் உள்ளே போகப் போக,

“இங்கேயே உட்காரு, நான் சொல்றவரை எழுந்திரிக்கக் கூடாது. எழுந்திரிச்சே..” என்று மீண்டும் கடுமையாக அதட்டலிட்டார்.

அவளின் முகம் முன்பே வாடித் தெரிந்ததை கவனித்திருந்தார், இப்போது அதட்டலிடவும் அது அதிகமாகிவிட, தனியாக விட முடியவில்லை. பின்னே இன்றோ நாளையோ என்று தான் அவளின் பிரசவிக்கும் நேரம் சொல்லப் பட்டிருந்தது.

மீனாக்ஷியும் அங்கே தானிருந்தாள், மேகநாதனும் அங்கே தான் இருந்தார். ஷோபனாவும் கூட அங்கே தானிருந்தாள்.

மீனாக்ஷி அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவள், “எதுக்கு பாட்டி அம்மாவை திட்டுறீங்க” என்று நேரடியாய் முறைக்க,  

“ஆமா, எனக்கு வேற வேலை இல்லை பாரு” என்று மீனாக்ஷியையும் முறைத்தவர், “வேக வேகமாக அங்கயும் இங்கயும் நடக்கறா உங்கம்மா, எங்கேயாவது இடிச்சிக்கிட்டா, தடுமாறிட்டா, அதை நீ கவனிக்க மாட்டியா? உங்கப்பன் உன்னையா கேட்பான், அதை கூட பார்க்காம நீ எதுக்கு உயிரோட இருக்கேன்னு என்னை நிக்க வெச்சு கேட்பான். ராதாக்கு அப்படி தான் கேட்டான். அவன் தங்கைக்கே கேட்கும் பொது அவன் பொண்டாட்டிக்கு கேட்க மாட்டானா? பேசாமா உங்கப்பா வர்ற வரை உங்கம்மாவோட உட்காரு. அப்புறம் நான் எதுவும் வாயே திறக்க மாட்டேன்” என்று கோபமாய் கத்தி விட்டார்.

அங்கே ஒரு கணமான சூழ்நிலை!

“எதுக்கு இவ்வளவு கோபம்?” என்று மேகநாதன் பேசினார்.

“அந்த பக்கம் இந்த பக்கம் நடக்கிறா, எனக்கு பயமா இருக்கு! வழில சோஃபா இருக்கு, டேபிள் இருக்கு, கால் மிதி இருக்கு, வழுக்கிடுச்சுன்னா? எனக்கு பயமா இருக்கு!” என்று பேசினார். முதல் குழந்தைக்கு அம்மா வீடு அனுப்பிவிட்டனர். அதனால் இவருக்கு பதட்டமில்லை. ராதாவிற்கும் கூட இவ்வளவு பதட்டமில்லை. என்னவோ துளசியை கொண்டு அவ்வளவு பயம் அவருக்கு. அப்படி உடம்பு வந்திருந்தது. வயிறும் மிகவும் பெரியதாக இருந்தது.     

சரியாக அப்போது வாயிலில் கார் வந்து நிற்க, “யார்” என்று பார்க்க மீனாக்ஷி எழுந்து போக, வாயிலில் புத்தம் புது கரும் பச்சை நிற ஸ்கார்பியோ நின்றது.

உள்ளே ஓட்டுனர் இருக்கையில் வெங்கடேஷ் இருக்க, பக்கத்தில் திருநீர்வண்ணன்.

வேகமாக மீனாக்ஷி இறங்கி ஓடி வெங்கடேஷிடம் சென்றவள், “யாருது சித்தப்பா இது?” என்றாள்.

“உன்னோடது தான்!” என்று சொல்லியபடி இறங்கியவன், “உங்கப்பா புதுசா வாங்கியிருக்கான்!” என,

“ஹை” என்றவள், “எனக்கு எப்போ ஓட்டக் கத்துக் கொடுப்பீங்க” என்று வெங்கடேஷிடம் கேட்கும் போதே,

“ம்ம்ம், உனக்கு லைசன்ஸ் எடுக்கும் வயசு வந்ததுக்கு அப்புறம்!” என்று சொல்லிக் கொண்டே திருநீர்வண்ணன் இறங்கினான்.

“இப்படி தான் நீங்க என்னை டூ வீலர் ஓட்ட விடலை!” என மீனாக்ஷி குறைபட்டாள்.

வெங்கடேஷை தான் முறைத்தான் “உன்னை யாருடா கத்துக் கொடுக்க சொன்னா?” என்பது போல.

“எப்போ எது செய்யணுமோ, அப்போ தான் அதை செய்யணும். லைசன்ஸ் இல்லாம நீ இந்த காம்பௌன்ட் விட்டு வண்டியை இறக்கக் கூடாது!” என்று ஏறக்குறை மிரட்டல் தொனியில் பேசினான்.

அவனுக்கு தெரியும் இப்படி மகளிடம் பேசாவிட்டால் வண்டி ஓட்ட ரகளை செய்வாள் என்று.

ஆம்! ஷோபனாவிடம் ஒரு ஸ்கூட்டி இருக்க, அதனை சென்ற வாரம் தான் வெங்கடேஷ் அவளிற்கு கற்று கொடுத்திருந்தான். மீனாக்ஷி உயரமும் இருக்க, அவளால் எளிதாக ஓட்ட முடிய பழகியதில் இருந்து இந்த பாடு தினமும்!

அதனால் இன்று சற்று கடுமையாக பேசி உள்ளே செல்ல, அவன் அந்த பக்கம் சென்ற உடனேயே. நீ சொல்லிக் கொடுப்ப தானே சித்தப்பா” என்றாள்.

“ம்கூம், உங்கப்பா பெர்மிஷன் இல்லாம இந்த விஷயம் ஆகாது. ஏற்கனவே டூ வீலர்க்கே என்னை வெச்சு செய்யறான். எப்போ எப்போ கோபம் வருதோ, அப்போ எல்லாம் கூப்பிட்டு திட்டறான். அவனுக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் ரொம்ப முக்கியம். லைசன்ஸ் எடுக்கும் வயசு வந்தா தான் சொல்லி கொடுக்கணுமாம்!”

“கோபம் வந்தா உன்னையாவது திட்டுவான்? என்னை அடிப்பான்!” என்று சொல்லிக் கொண்டே அவனும் உள்ளே சென்று விட,

யாரோ என்னவோ சொல்லிக் கொள்ளுங்கள் என்று ஸ்கார்பியோவின் கதவை திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளே சென்று அப்பாவையும் அம்மாவையும் திரு அழைத்தவன், “வா ஷோபனா” என்று தம்பி மனைவியையும் அழைத்து, பின் துளசியை கண்களால் அழைத்தான்.

உள்ளே நுழைந்ததில் இருந்து அவனை தான் பார்த்திருந்தாள் துளசி. வந்தவுடனே திருவின் பார்வை அவளை தழுவினாலும், பின் அப்பாவிடம் அம்மாவிடம் என்று தாவி விட்டது!

இப்போது பார்வையால் அழைத்தபடி சில அடிகள் எடுத்து வைக்க, துளசி அந்த இடத்தை விட்டு எழாதது புரிய “வா துளசி” என்றான்.

அப்போதும் அவள் அந்த இடம் விட்டு எழாமல் இருக்க, “என்ன பண்ணுது?” என்று அவன் அவளிடம் சென்ற வேகத்திற்கு எல்லோரும் அவனை தான் பார்த்தனர்.

அருகில் வரவும் “அத்தை என்னை அவங்க சொல்றவரை எழுந்துக்க கூடாது சொன்னாங்க” என்று கொஞ்சம் முறைப்போடு சொல்ல,

“அம்மா ஏன் அப்படி சொன்னாங்க? நீ என்ன பண்ணின?” என்று பேச ஆரம்பிக்க, அவர்களை விட்டு எல்லோரும் காரை பார்க்க படியிறங்கி விட்டனர்.

“நான் அந்த பக்கம் இந்த பக்கம் நடந்தேன்” என்றவள், “அத்தை கிட்ட சொல்லி என்னை எழுப்பி விடுங்க, நான் போகணும்!” என்று ஒற்றை விரலை காண்பிக்க,

அவளின் பாவனையை ரசித்தாலும், சிரிப்பும் வந்து விட, சத்தமிட்டு சிரித்தவன், “மா” என்று அம்மாவை கத்தி அழைத்தான்.

“ஏன் கத்துறீங்க?” என்று பதட்டமானவள், “நீங்களே சொல்லுங்க” என,

“ம்கூம் நீயே கேளு” என்று சொல்லும் போதே அகிலாண்டேஸ்வரி வந்து விட்டார்.

“எதுக்குடா கத்துற?”  

திரு எதுவும் சொல்லாமல் துளசியை பார்த்தான். அதுவே சொன்னது நீதான் கேட்க வேண்டும் என்று.

“அத்தை நான் எழுந்துக்கடுமா?”  

“ம்ம்” என்று அப்போதும் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய் முகத்தை வைத்து சொன்னார்.

துளசி விட்டால் போதும் என்று உள்ளே சென்று விட்டாள்.

அம்மாவின் அருகில் சென்றவன் “எதுக்கு இவ்வளவு கோபம்? அப்படி என்ன செஞ்சா?” என்றான்.

“அந்த பக்கம் இந்த பக்கம் நடந்துட்டே இருக்கா, ஒரு இடத்துல தடுமாறிட்டா, விழுந்தா என்ன ஆகறது? அப்படி என்ன உனக்கு? அவ கிட்ட எப்போ வர்றன்னு சொல்ல மாட்டியா? கொஞ்சமாவது உனக்கு பொறுப்பிருக்கா!” என்று அவனை ஏகத்திற்கும் பிடித்து விட்டார்.

“மா ஒரு சர்பரைஸ் குடுக்கலாம்னு கார் வாங்க போயிட்டேன் மா. இவளும் இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கா. அப்புறம் அவசரத்துக்கு யார் கிட்டயாவது போய் நிக்கணும். எனக்கு அதுல இஷ்டமில்லை. என்னவோ தள்ளி போயிட்டே இருந்தது மூணு நாளா வாங்கியே ஆகணும்னு அலைச்சல்”   

“அது என்னன்னா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ரெஜிஸ்டரேஷன் முடிஞ்சு வர” என்று சமாதானாம் சொன்னான்.

“அவளை உட்காரு சொன்னா, எங்கம்மாவை ஏன் திட்டுறன்னு மீனாக்ஷி சண்டை போடறா?” என்று சொல்லும் பொது அவரின் குரல் சிறிது கலங்கிவிட, கண்களிலும் கண்ணீர் நின்றது.

“மா உன் பேத்தி எப்படி இருப்பா? உன்னை மாதிரி தானே!” என்று மீண்டும் சமாதானம் செய்து அவரை அழைத்துக் கொண்டு காரை பார்க்க போனான்.

அவர்கள் வாயிலில் நின்று கொண்டிருக்கும் போது, துளசி வர அவளை பார்த்து திரு முறைத்த முறைப்பில் அகிலாண்டேஸ்வரி சொல்லி விட்டார் என்று புரிந்தது.

“தெரியாமல் நடந்து விட்டது” என்ற பாவனையோடு துளசி பார்த்தாலும், “இன்று தன்னுடைய காது கேட்காமல் போனால் பராவயில்லை” என்று அவளிற்கு தோன்றியது.

பின் வெங்கடேஷை அழைத்து “ஒரு ரவுண்டு போயிட்டு வாடா எல்லோருரையும் கூட்டிகிட்டு” என்றான்.

ஷோபனா, அகிலாண்டேஸ்வரி, மேகநாதன் எல்லோரையும் அழைத்து துளசியையும் “அண்ணி வாங்க” என்று அழைத்தான்.

“வரவில்லை” என்று எப்படி சொல்வது என்று புரியாமல் திருவை பார்த்தால் துளசி. அவளுக்கு திருவோடு தான் போக வேண்டும்.

“நான் அப்புறம் துளசியை கூட்டிட்டு போறேன் நீ போ” என்றான் திரு.

மீனாக்ஷி ஸ்கார்பியோவில் அமர்ந்திருந்தவள், “நானும் உங்களோட வர்றேன்” என்று இறங்கி கொண்டாள்.

கார் கேட்டை விட்டு வெளியே சென்றதும் ஆரம்பித்தவன் தான் திரு, அம்மாவிற்கும் மகளிர்க்கும் “வொய் ப்ளட் சேம் ப்ளட்” தான்.