Advertisement

“ம்ம், ஒட்டிக்கிட்டு படுத்து என்ன பண்ண? கட்டிக்கிட்டு படுத்தா கூட பரவாயில்லை!” என்று மெல்ல அவனுக்கு அவனே பேசிக் கொள்வது போல முனகினான்.

“ஒட்டிக்காம எப்படி கட்டிக்கறதாம்?” என்று மெல்லிய குரலில் துளசியும் முனக,

“இப்படி!” என்று திரு திரும்பி அவளை அணைக்க,

“ஒட்டிக்கிட்டு தானே கட்டிட்கிடீங்க!” என்று இன்னும் கிசு கிசுப்பாய் துளசி ரகசியம் பேசினாள்.

“நான் எங்க ஒட்டிக்கிட்டேன், நீ தானே ஒட்டிகிட்ட, நான் கட்டிக்க மட்டும் தானே செஞ்சேன்!” என்றான் அவளைப் போலவே,

“அப்போ சரி, இன்னும் ஒட்டிக்கறேன்!” என்று துளசி அணைப்பிலேயே இன்னும் ஒரு நெருக்கம் கொடுத்தாள்.

“ஷ், துளசி! ஏற்கனவே தூக்கம் வரலை, இன்னும் என்னை தூங்க விடாம நீ செய்யப் போற போல!” என்று பேச,

“ஏன் தூக்கம் வராதாம்?” என்று துளசி கேட்ட போது, அவளின் குரலில் தானாய் ஒரு கொஞ்சல் வந்து அமர்ந்திருந்தது.

“ஒட்டிக்கிட்டு கட்டிக்கிட்டு எப்படி பேசாம படுக்கறதாம்” என்று திருவின் வாய் மொழிக்கு,

“நான் பேசாம படுங்கன்னு எப்போ சொன்னேன்?” என்றாள் சிணுங்கள் குரலில்.

“பேச்சிலயே கொல்றடி என்னை” என்று திரு சொன்ன போது,

“நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே” என்று துளசி பதில் கொடுக்க,

“ரொம்ப பேசுவியா நீ!” என்றான் திரு.

“ம்ம், ரொம்ப! சின்ன பொண்ணுல!”

“உனக்கு கல்யாணம் ஆகிற வரை” என்று திரு எடுத்துக் கொடுக்க,

“ம்ம்” என்று முனகினாள்.

“நீ எவ்வளவு பேசினாலும் நான் கேட்பேன்” என்று திரு பேச,

“அதெல்லாம் மறந்து போச்சு இப்போ” என்றாள் தயக்கமாக.

“ஞாபகப் படுத்திக்கோ!” என்றான் திருவும் விடாமல்.

“வருமான்னு தெரியலை!”

“எப்படி வராம போகுதுன்னு நான் பார்க்கிறேன்” என்று திரு வாய் மொழி பேசிக் கொண்டே அவளை விட்டு விலகி எழுந்தான்.

என்னவோ என்று துளசி பார்த்திருக்கும் போதே சென்று மீனாக்ஷியின் ரூம் கதவினை தாளிட்டு வர, துளசியின் முகத்தினில் ஒரு விரிந்த புன்னகை!

“சிரிக்கிற நீ!” என்று அவளை செல்லமாய் திட்டிக் கொண்டே வந்தவன்,

“அவ கிட்ட தனியா படுக்கணும்னு சொல்றதுக்குள்ள எவ்வளவு பயந்தேன் தெரியுமா?” என்று முறைத்தான்.

அவனின் பாவனைகளில் துளசிக்கு சிரிப்பு வந்து விட சிரித்து விட்டாள்.

“பேச்சை மட்டுமில்ல சிரிக்கக் கூட மறந்துட்ட போல” என்று சொல்லிக் கொண்டே திரு அருகினில் வர,

துளசி பேசவேயில்லை! அவளின் பார்வை எல்லாம் கணவன் மீது மட்டுமே, “என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது” என்ற எண்ணம், அது கொடுத்த உவகை கண்களில் கசிய, அதனைக் கொண்டே கணவனை காண,

“பேச்சுல மட்டுமில்ல பார்வைல கூட கொல்லபோறேன்னு சொல்றயா” என்று சொல்லிக் கொண்டே திரு நெருங்கியிருக்க,

கணவன் தொடுமுன்னே அவனின் தொடுகையை எதிர்பார்த்து துளசியின் கண்கள் மயக்கத்தில் மூடிக் கொண்டது.

திரு அவளை இதமாக அணைத்து படுத்தான். அந்த அணைப்பே துளசிக்கு சொல்லியது அவனுக்கே அதற்கு மேல் வேறு எந்த எண்ணமும் இல்லை என்று.

அவளை சுற்றி இருந்த திருவின் கைகளை துளசி பிடித்துக் கொண்டாள். அந்த பிடிப்பிலேயே ஏன் என்ற கேள்வி இருக்க “பக்கத்துல வரவே ஒரு வாரம் ஆச்சு, இதுக்கு மேல எல்லாம் இப்போதைக்கு முடியாது!” என்று திரு தன்னிலை விளக்கம் கொடுக்க,

அவனின் புறம் திரும்பிய துளசியின் கண்கள் “ஏன்?” என்ற பார்வையை தாங்கி நின்றது.

“என்னவோ தப்பு மாதிரி ஒரு ஃபீல்” என்று திரு பேச,

“என்ன தப்பு?” என்றாள் புரியாமல் துளசி.

“அது மீனாக்ஷி கிட்ட பேசி உன்னை இங்கே கூப்பிட்டுக்கிட்டேன் இல்லையா அதுக்கு. இது ரொம்ப சென்சிடிவ் விஷயம். இந்த ஏஜ்ல அவகிட்ட இதை பேசும் போது எதுவும் தப்பாகிடக் கூடாதேன்னு ரொம்ப டென்ஷன் ஆகிடுச்சு!”

“இப்போதைய குழந்தைகளுக்கு என்ன தெரியும்? என்ன தெரியாதுன்னு நம்மளால கணிக்க முடியாது! எல்லாம் எல்லா இடத்துலையும் வெளிச்சம் போட்டு காட்டுற தொலைதொடர்ப்பு சாதனங்கள் நிறைய!”

“நீ கன்சீவ் ஆகிட்டன்னு தெரிஞ்ச உடனேயே உன்னை கூட அழைச்சுக்கணும்னு நினைச்சேன், அதுக்கு முன்ன பத்தி பேச வேண்டாம் எனக்கு விருப்பமில்லை, ஆனா இப்போ நினைச்சேன்! முதல் குழந்தை உருவான போது அப்படி ஒன்னும் எனக்கு மெச்சுரிட்டி இல்லை, வேற சில குழப்பங்கள், ஆனா இப்போ ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கணும் நினைச்சேன்!”

“கூடவே குழந்தை பிறந்த பிறகு நீ மீனாக்ஷியோட படுக்க முடியாது. ராத்திரில எல்லாம் எழுந்து குழந்தைக்கு ஃபீட் பண்ற மாதிரி இருக்கும், குழந்தை அழும், அது எல்லாம் அவ தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணும்! அவ முன்ன உட்கார்ந்து உனக்கு ஃபீட் பண்ண முடியாது! அதையெல்லாம் விட அவ உன்னோட ரொம்ப க்ளோஸ். நீ இல்லாத போது அவ்வளவு கலாட்டா பண்ணிட்டா, ஹப்பா நினைச்சா இப்போ கூட கண்ணை கட்டுது!”

“குழந்தை பிறக்கற அந்த பீரியட்ல அவ உன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி தான் நிற்கணும். அப்போ இப்போ இருந்தே அவ தனியா படுத்து பழகணும், இதுக்கு எல்லாம் அவ தனியா படுத்து தான் ஆகணும்!”

“அப்புறம் ஏன் கதவை தாள் போட்டீங்க!”

“உன்னை கட்டி பிடிச்சு தூங்க, நாம தூங்கும் போது ஒரு வேளை தூக்கம் முழிச்சு எழுந்து வந்துட்டா”  

புன்னகைத்தவள் “தூங்கினா எல்லாம் எழ மாட்டா” என்று துளசி சொல்ல,

“இருந்தாலும் எனக்கு பயம்” என்று திரு சொன்னான்.

துளசியின் முகத்தினில் விரிந்த புன்னகை.

“இந்த மாதிரி இருக்கும் போது நிறைய நிறைய ஆசைகள் இருக்குமாமே உனக்கு எதாவது இருக்கா அப்படி?” என்று திரு கேட்க

“எந்த மாதிரி?” என்று இரு புருவம் உயர்த்தி துளசி வேண்டுமென்றே கேட்டாள்.

அணைப்பில் இருந்து கையை எடுத்து சேலையை விலக்கி அவளின் வெற்றிடையில் கைவைத்தவன் “இப்படி” என மெதுவாக தடவி கொடுத்து, “அசைவு எல்லாம் தெரியுமாமே, எப்போ தெரியும்?” என்றவனின் குரலில் அப்படி ஒரு ஆவல்.

“நானும் அப்போ ரொம்ப சின்ன பொண்ணு தானே, நிறைய வருஷமும் ஆகிடிச்சு! எப்போ தெரியும்னு தெரியலை? டாக்டர் கிட்ட போகும் போது கேட்டுட்டு வர்றேன்” என்றாள் அவனின் வருடலில் மயங்க ஆரம்பித்த மனதை அடக்கி.

“என்ன வேணும் உனக்கு?” என்றான் மீண்டும்.

“நீங்க அந்த இடத்தை என் பேர்ல வாங்க வேண்டாம், உங்க பேர்ல இல்லை மீனா பேர்ல வாங்கலாம் ப்ளீஸ்”  

“ம்கூம், உன்னோட இந்த ஆசை நிறைவேறாது, உன் பேர்ல தான் வாங்குவேன்!” என்றான் ஸ்திரமாக.

“ஏன் இவ்வளவு பிடிவாதம்”

“இப்போ முடிவு பண்ணலை, நீ என்னை விட்டு போன போது அம்மா கிட்ட பேசின தானே, அதை அம்மா வந்து என்கிட்டே சொன்ன போதே நான் முடிவு பண்ணினது”

அவனை பார்த்து கொண்டிருந்த துளசியின் கண்களில் ஒரு கலக்கம் எட்டி பார்த்தது.

திரும்ப அவளை அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அவளின் உடல் தளர அவனின் நெஞ்சில் அவளாக முகம் புதைத்துக் கொண்டு,

“ஏன் அப்படி நினைச்சீங்க, எனக்கு புரியலை?” என்று கேட்டாள்.

“நீ அம்மா கிட்ட சொன்னியாமே, நான் படிக்கலை, வேலைக்கும் போக முடியாது, எனக்கு போக இடமும் கிடையாது, அதனால வந்துடுவேன்னு!”

“அப்போ திரும்ப வந்தா அதுக்காக என்கிட்டே வருவியான்னு எனக்கு கோபம்! கூடவே உன்னோட வாழ்வாதாரத்துக்காக நீ என்னை கூட சார்ந்து இருக்க கூடாதுன்னு நினைச்சேன். அப்போவே முடிவு பண்ணிட்டேன், நான் உனக்கு செலவுக்கு பணம் கொடுக்காம, உனக்கு தனியா வருமானம் வர்ற மாதிரி பண்ணணும்னு” என்று திரு பேசப் பேச என்ன மாதிரி உணர்ந்தாள் என்று துளசிக்கே புரியவில்லை. பேசிய திரு அவளின் உச்சந்தலையில் ஒரு முத்தம் பத்திதான். 

அவனுள் புதைத்திருந்த முகத்தை விலக்கி அவனை பார்க்க, மிக அருகில் தெரிந்த அவளின் முகத்தை ஒரு சாந்தமான முகத்தோடு பார்த்திருந்தான்.

“எனக்கு உங்களை புரியவேயில்லை” என்று ஆதங்கமாக துளசி சொல்ல,

“வாழ்க்கை முழுசும் இருக்கு புரிஞ்சிக்க! ஆனா புரியணும்னு இல்லவே இல்லை பிடிச்சிருந்தா போதும்! என்றவனின் முகம் அத்த்தனை அமைதியாய் இருந்தது.

“எனக்கு உங்களை பிடிக்காதா என்ன?” என்று முறுக்கினாள்.

“எப்போ நான் அப்படி சொன்னேன் என்று மின்னலென அவளின் உதடுகள் முத்தம் பதித்து விலகினான்.

“ஆனா அப்போ ரொம்ப கோபப்பட்டீங்க”

“அப்போ ஏன் பட்டேன்னும் தெரியாது! இப்போ ஏன் படலைன்னும் தெரியாது! இனிமே படமாட்டேனான்னும் தெரியாது!”

“எவ்வளவு பட்டாலும் நான் பொருத்துக்குவேன்!” என்றவளிடம்,

“அதுதான் எனக்கு தெரியுமே! அதனால தானே கோபமே வருது!” என்றவனின் பாஷை புரியாமல் விழிக்க,

“அதெல்லாம் விடு, உனக்கு என்ன ஆசை சொல்லு!” என்று மீண்டும் கேட்டான்.

மெதுவாக அவனின் உதடுகளை தொட,

“முத்தமா” என ரகசியம் பேசினான்.

“இல்லை” என்பது போல தலையசைத்தவள் உதடுகளுக்கு மேல் தொட,

அப்போதும் திருவிற்கு புரியவில்லை,

“என்ன?” என்றான்.

“மீசை, நீங்க மீசை வெச்சிக்கங்க!” என துளசி சொல்லவும்,

திருவின் முகம் ஆச்சர்யத்தை காண்பித்தது!

“மீசை வெச்சிக்கங்க, கல்யாணத்துக்கு முன்ன உங்களை பார்த்த போது மீசை இருந்தது. கம்பீரமா இருக்கும் உங்களுக்கு, நீங்க ஏன் மீசை எடுத்துட்டீங்க?”

“எங்கப்பா எனக்கு கட்டாயமா கல்யாணம் செஞ்சு வெச்சார், ஷெரீனா வீட்டை கடத்தி வெச்சார். என்னால எதுவும் பண்ண முடியலை. அப்போ எனக்கு தோணிச்சு, உனக்கு எதுக்குடா மீசைன்னு அப்போ எடுத்தது தான், இன்னும் வைக்கலை!” என்று அன்றைய மனநிலையை மறைக்காமல் அப்படியே சொன்னான்.

எல்லாம் தெரிந்த உண்மை தான் என்றாலும் அதற்காக அவன் மீசை வைக்காமல் இருப்பான் என்று துளசி எதிர்பார்த்திருக்கவில்லை. திருவின் முகம் பார்க்காமல் அவனின் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

திருவும் அவள் இலகுவாக படுக்குமாறு அணைத்துக் கொண்டவன், “காலையில நீ எழுந்ததும் மீனாக்ஷி ரூம் கதவை மறக்காம உடனே திறந்து விட்டுடு!” என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டான்.

துளசியும் பதில் பேசாமல் கண்களை மூடி கொண்டாள். திரு அவள் இலகுவாக படுக்குமாறு இதமான அணைப்பில் வைத்திருக்க, துளசியோ இன்னும் நெருங்கி படுத்துக் கொண்டாள். திருவின் பதிலில் இத்தனை நேரம் இருந்த இதம் தொலைந்து இருக்க, நடந்ததை மாற்ற முடியாது என்று புரிந்த போதும், இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்று தெரிந்த போதும், ஏதோ ஒரு சஞ்சலம்!   

கணவனின் நெருக்கத்தில் அதனை தொலைக்க முயல, திருவிற்கு என்னவென்று புரியாத போதும் அவள் தன்னை தேடுகின்றாள் என்று புரிய, மீண்டும் ஒரு முறை மீனாக்ஷியின் ரூம் கதவை பார்த்தான் மூடி இருக்கிறதா என்று!

பின்னே மனைவியின் புறம் திரும்பியவன், இதழில் மென்மையாய் ஒரு முத்தம் பதிக்க, துளசியின் உடல் மொழியே இது தனக்கு போதாது என்று காண்பிக்க, மெதுவாக முன்னேற, துளசி தன்னுடைய சஞ்சலத்தை எல்லாம் அவனுள் கரைக்க முயன்று கொண்டிருந்தாள்.     

என்னவோ திருவின் வெகுநாளைய ஏக்கமான துளசி தன்னை கொஞ்சியதில்லை என்ற ஏக்கமும் அதில் கரைந்து கொண்டிருந்தது!    

Advertisement