Advertisement

அத்தியாயம் பதினெட்டு :

அருகில் வந்தவன் “என்ன” என்றான்.

துளசி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் “ஒன்னுமில்லையே” என்றாள் அவசரமாக.

சில நொடிகள் அவளை உற்று பார்க்க, துளசியின் தலை தானாகக் கவிழ்ந்தது.

பின்பு மீனாவின் புறம் திரும்பியவன் “சாப்பிட போகலாமா” என்றான்.

“மா வா” என்று துளசியின் கைபிடித்தாள் மீனா.

துளசி திருவின் முகம் பார்க்க, “போ” என்பது போல தலையசைதவன், “நீயும் போ மீரா” என்று அவளையும் அனுப்பியவன், அவர்களோடு அவனும் வந்தான்.

பந்தி நடக்கும் இடம் வந்த போது இவர்களின் நெருங்கிய சொந்தம் மட்டுமே அங்கே, வெங்கடேஷும் ராதாவும் தான் மேற்பார்வை பார்த்து இருந்தனர்.

தருணும் அங்கே தன் மகனோடு இருந்தான்.

மேகநாதன் அங்கேயே அமர்ந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்த்திருந்தார். அவரின் உடன் பிறப்புகள் அவரோட அமர்ந்திருந்தனர். வேலவனும் ரத்னாவும் கூட அங்கே தான் பார்த்து இருந்தனர்.

மீரா பிரசன்னா எங்கே என்பது போல பார்க்க, ஓரிடத்தில் பிரசன்னா யாரிடமோ பேசி நிற்பது போல தெரிந்தது.

“இந்த பிரசன்னாவை கேட்டுட்டு வான்னு சொன்னா அரட்டை அடிச்சு நிக்கறான்” என சொல்ல,

துளசியும் திருவும் அங்கே பார்த்தனர்.

சத்தியநாதன் தான் பிரசன்னாவிடம் பேசிக் கொண்டிருந்தார். சித்தப்பாவாக யாரிடமும் பேச மாட்டாரே என்ற யோசனையோடு திரு பார்த்திருந்தான்.

“மீரா நீ மீனாக்ஷியோட சாப்பிட உட்காரு, நான் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்துட்டாங்களான்னு பார்த்துட்டு வந்த பிறகு துளசி உட்காரட்டும். யாராவது வந்து கூப்பிட்டாலும் அவர் வரட்டும்ன்னு சொல்லு” என்று சொல்லிப் போனான்.

பின்னே இது அவர்களின் விஷேசம். எல்லோருக்கும் முன்னே துளசி அமர்ந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அது அவளிற்கே தெரியும். ஆனாலும் துளசி சற்று கவனமற்று இருப்பாதாக தான் அவனுக்கு தோன்றியது.

பிரசன்னா இருக்கும் இடம் போக, அவன் ஒரு கட்டாயத்தில் தான் நின்று கொண்டிருப்பதாக அவன் முகம் பார்த்தே தோன்றியது.       

“சித்தப்பா” என்று அழைத்து அவரின் அருகில் போக, பிரசன்னாவிற்கு திருவை பார்த்ததும் ஆசுவாசம்.

அவனின் முகம் பார்த்தே உணர்ந்த திரு, அப்புறம் சித்தப்பா, “பிரசன்னா என்ன சொல்றான்?” என்று அவனின் தோள் மேல் கை போட, தனது அக்காள் கணவனின் இந்த பரிமாணத்தில் நெளிந்தான் பிரசன்னா.

“தம்பி எங்க வேலை பார்க்கறார், என்ன சம்பளம்ன்னு பேசிட்டு இருந்தேன்?” 

“என்ன இவர் பொண்ணா குடுக்கப் போறார், இவனை வேலை சம்பளம் எல்லாம் கேட்டுட்டு இருக்கார்” என்று நினைத்தவன், நொடியில் யோசித்து பார்வையை சுற்ற விட, நிருபமா நகத்தை கடித்தபடி பார்வையை இவர்களிடம் வைத்திருப்பது புரிய, அப்படியோ நினைத்தான்.    

பின்பு எதுவும் அனுமானிக்காதவன் போல சகஜமாக “என்ன பிரசன்னா சொல்லிட்டியா?” என,

திருவை  ஒரு பார்வை பார்த்தவன், “சம்பளம் எல்லாம் சொல்லுவாங்களா மாமா” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான், இருவர் காதிலும் தெளிவாக விழுந்தது. பிரசன்னா அலட்சியமாக சொல்லவில்லை ஒரு தயக்கத்தோடு தான் சொன்னான்.

“சொல்லணும் பிரசன்னா சொல்லணும். பொண்ணு பார்க்கறப்போ கேட்டா சொல்லணும் தானே”  

“அது பார்க்கறப்போ பார்த்துக்கலாம் மாமா” என்று அதற்கும் முணுமுணுப்பாய் சொன்னான்.

“அதை தான் எங்க சித்தப்பா செய்யறார் போல” என்று மனதிற்குள் நினைத்தாலும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. பார்வை நிருபமாவிடம் சென்று சென்று மீள அவளோ பதட்டமாய் இங்கே பார்த்திருப்பது புரிந்தது.

திருவிற்கு சிரிப்பு வந்தது, “சாப்பிட்டீங்களா சித்தப்பா வாங்க” என்று கூப்பிட,

“நீ போ திரு நான் வர்றேன்” என்றார் அவர். முகம் சரியில்லாதது போலத் தோன்ற,

“அட வாங்க சித்தப்பா” என்று பிரசன்னாவை விட்டு அவரை அழைத்து போனவன்,

எல்லாரையும் அமர வைத்து, பின் பிரசன்னா மீராவுடன் மாமியார் மாமானாரை அமர வைத்து, என பம்பரமாய் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான். வீட்டினில் எல்லோரையும் பார்த்து பார்த்து கவனிக்கும் துளசி எதுவும் செய்யாமல் இங்கே அமைதியாக அமர்ந்திருந்தாள்.

பின்பு அவனின் வீட்டினர் எல்லோரையும், கூட அவனின் அத்தை வீட்டினரையும் அமர வைக்க, அகிலாண்டேஸ்வரி அமரும் போது துளசியை கூப்பிட்டார். சாதாரணமாய் மருமகள் எனும் போது இப்படி கவனிப்பு இருக்காது.

இப்போது பிள்ளைதாச்சி அல்லவா. அதனால் எப்போதும் துளசியின் மேல் ஒரு கண் வைத்திருந்தார் என்பது மிகையல்ல.   

“என்னோட சாப்பிடட்டும் மா” என்று விட்டான்.

“ஏன் உன் பொண்டாட்டியோட மட்டும் தான் சாப்பிடுவியா?” என்று ராதா அமர்ந்திருந்தவள் எழுந்து கொள்ள, “அதுதானே” என்று வெங்கடேஷும் எழுந்தான்.

சண்டையோ என்பது போல எல்லோரும் பார்த்தனர். தம்பியும் தங்கையும் தன்னை வம்புக்கு இழுக்கிறார்கள் என்பது புரிய திருவின் முகத்தினில் ஒரு மென்னகை கூடவே “ராதா நமக்குள்ள சண்டைன்னு உன் வீட்ல பார்ப்பாங்க” என்று எடுத்துக் கொடுத்தான் திரு.  

“சண்டையா? யார் போடுவா? நீ போட்டாலும் நான் போடமாட்டேன் ஒழுங்கா என்னோட உட்காரு” என வார்த்தை வளர்க்க, பிரசன்னாவும் மீராவும் எல்லாவற்றையும் “ஆங்” என பார்த்திருந்தனர்.

இவ்வளவு கூட்டம் அவர்களுக்கு புதிது!

ஒரு வழியாக விஷேஷம் முடிந்து வீடு வந்தனர்.   ஆய்ந்து ஓய்ந்து தெரிந்தால் துளசி, இவ்வளவு பேச்சு வார்த்தைகள் நடந்த போதும் எந்த பேச்சும் துளசியிடம் இல்லை. எல்லாவற்றிற்கும் திருவே ஈடு செய்தான்.

வந்தவுடன் துளசி தன் அம்மா வீட்டினர் இருப்பதை பார்த்து உறங்க யோசிக்க, “போய் தூங்கு துளசி, நான் இருக்கேன், மீனா இருக்கா பார்த்துக்குவா!” என்றவன் திரு.  

“பார்த்துக்குவ தானே!” என மகளிடம் கேட்க,

“ம்ம்” என்று மீனா தலையசைத்தாள்.

மகளை அழைத்து போய் அவளுக்கு உடை மாற்ற உதவி பின்பு ஹால் அழைத்து வந்த துளசி,  மீராவிடம் “பார்த்துக்கொள்” என்று சொல்லி, அப்பாவும் மகளும் என்னவோ செய்யட்டும் என்று இதுதான் சாக்கென்று என்று உள்ளே சென்று படுத்துக் கொண்டாள். ஒரு உற்சாகமற்ற தன்மை அவளிடம் தானே தங்கியது.

திரு அங்கே இருந்த ஒரு அறையை காண்பிக்க, அவர்கள் நால்வரும் கூட உறங்க சென்று விட, மற்ற வீட்டினரும் உறங்க சென்று விட, மீதம் இருந்ததது திருவும் மீனாவும்.

அவர்கள் எல்லோரும் சென்ற உடன் மீனா அம்மாவிடம் செல்லப் போக, “மீனா” என்று அழைத்தவன், “உட்காரு” என்றான்.

“என்ன?” என்ற பார்வையோடு மகள் அமர்ந்தாள்.

“அம்மாக்கிட்ட மண்டபத்துல என்ன சொன்ன?” என்றான்.

மீனா அமைதியாக இருக்க, “என்னவோ நீ சொல்லியிருக்க, என்ன?” என்றான் மீண்டும் சற்று அழுத்தமான குரலில்.

அப்போதும் சற்றும் பயமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.

“நாம ஏதாவது செஞ்சா அதை ஒத்துக்குற தைரியம் வேணும். அது சரியா இருந்தாலும் சரி, தப்பா இருந்தாலும் சரி” என்று மகளை கூர்மையாக பார்த்தான்.

அந்த பார்வை சற்று அசைக்க, “அம்மா சொன்னாங்க அப்பா சொன்னா கேட்கனும்னு, நான் சொன்னேன் கேட்க மாட்டேன்னு” என்று சொல்ல,  

“ம்ம், அப்புறம்” என்றான்.

“இதுதான் சொன்னேன்” என்று அலட்சியமாய் தோள் குலுக்கினாள்.

“இதை சொன்னா எல்லாம் உன்னோட அம்மா முகத்துல அவ்வளவு கோபம் தெரியாது” என்று ஆழ்ந்த அமைதியான குரலில் கேட்கவும்,

“கேட்கலைன்னா என்ன பண்ணுவார்? திட்டுவார்! அடிப்பார்! திட்டட்டும், அடிச்சிக்கட்டும்ன்னு சொன்னேன்!” என சொல்லி, இவ்வளவு தான் சொன்னேன் என்றாள் முறுக்கிய முகத்தோடு.

ஆனால் அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை.

“என்னை பாரு” என்றான் அமைதியான ஆழ்ந்த குரலில். அந்த குரலில் அப்பாவை நோக்கி திரும்பவும்,

“எத்தனை தடவை உன்னை திட்டியிருக்கேன், அடிச்சிருக்கேன், சொல்லு!” என்றான் மகளை நேருக்கு நேர் பார்த்து.

மீனாக்ஷி இப்போது அப்படியே வாயை மூடிக் கொண்டாள். பார்வை அப்பாவை பார்க்காமல் தாழ்ந்தது.

“ஒரு தடவை அடிச்சிருக்கேன் , திட்டின மாதிரி எனக்கு ஞாபகமே இல்லை!”

“அம்மாவை எப்பவும் திட்டுறீங்க அடிக்கறீங்க” என்றாள் குறைபட்ட குரலோடு.

“இது அதைவிட பெரிய பொய். ஒரே ஒரு தடவை அடிச்சிருக்கேன், ஒரு ரெண்டு மூணு சண்டை வந்திருக்கு. இப்போ ஒரு சில மாசமா தான் அது கூட. ஆனா அதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை, வீட்டை விட்டு போக நினைக்கறது, போறது, எல்லாம் ரொம்ப தப்பு. அப்போ அப்படி தான் நான் ரியாக்ட் பண்ணுவேன்!”

“அண்ட் உனக்கு அம்மா எவ்வளவு முக்கியமோ எனக்கும் அப்படி தான். அம்மா மட்டுமில்லை நீயும் தான்”

“இப்படி பேசாதே, அப்படி பேசாதேன்னு, எதுவும் அப்பா சொல்ல மாட்டேன். உனக்கு எது சரின்னு தோணுதோ செய்!” என்று அதுவரை அமைதியாய் பேசிக் கொண்டிருந்தவன்,

“ஆனா வீட்டை விட்டு போகணும்ன்ற நினைப்பு கூட வரக் கூடாது!” என்று கோபமாய் பேசியவன்,

“அப்பா கிட்ட கோபம்னா சண்டை போடு, அம்மா கிட்ட அதை தானே செய்வ, அம்மாவை விட்டுட்டு போகலாம்னு சொல்வியா, இந்த மாதிரி ஒரு ஆட்டிடுயுட் வளர்க்காதே!” என தீர்க்கமாய் பார்த்தான்.

அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் மீனாக்ஷி, ஆனால் அப்பாவின் பார்வையில் வார்த்தைகளில் மனதில் ஒரு பயம் எழ அதை முகம் காண்பித்து கொடுத்தது.

“நாளைக்கு ஸ்கூல் போகணும், ஸ்கூல்ல போய் எந்த கலாட்டாவும் இருக்கக் கூடாது. எதுன்னாலும் வீட்ல அம்மாக்கிட்ட இல்லை, என்கிட்டே மட்டும் தான் பண்ணனும். வெளில போய் நீ ஒரு கெட்ட பேர் வாங்கறதை பொறுத்துக்க முடியாது. புரியுதா! எந்த கலாட்டாவும் இருக்கக் கூடாது!”

மகள் “செய்யாவிட்டால் என்ன செய்வாய்?” என்ற பார்வை பார்க்காத போதும்,  

“மனசுக்குள்ள செய்யலைன்னா என்ன பண்ணுவேன்னு எல்லாம் யோசிக்கக் கூடாது. ஏன்னா என்ன செய்யன்னு நான் யோசிக்க போறதே இல்லை. ஏன்னா நீ அப்படி பண்ண போறதில்லை!” என்று நீளமாய் பேசி மகளை பார்க்க, மீனாக்ஷி இப்போது அப்பாவை பார்த்திருந்தாள்.

“சொல்றது எல்லாம் சொல்லிட்டேன், திரும்பவும் நான் சொல்றது ஒன்னு தான். உனக்கு எது சரின்னு படுதோ செய்!” என்றவன் அந்த சோபாவிலேயே நன்றாக சாய்ந்ந்து அமர்ந்து கைகளை கட்டிக் கொண்டவன் கண்மூடிக் கொள்ள,

சிறிது நேரம் அப்பாவை பார்த்திருந்த மீனாக்ஷி தோளை குலுக்கியவள் அப்பாவை போலவே கைகளை கட்டி, நன்றாக சோபாவில் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள்.

அப்பாவும் மகளும் என்னவோ செய்து கொள்ளட்டும் என்று விட்டு போனாலும் துளசிக்கு உறக்கம் பிடிபடவில்லை. எழுந்து வந்து பார்த்தால் அப்பாவும் மகளும் ஒன்று போலவே கை கட்டி சாய்ந்து கண் மூடி இருக்க, பார்த்தவுடனே சோர்வையும் மீறி ஒரு உற்சாகம், வேகமாக மொபைல் எடுத்து வந்து ஒரு ஃபோட்டோ எடுத்தவள் பின்பு சென்று படுத்துக் கொண்டாள்.  

மீனாக்ஷி சில நிமிடங்கள் கூட இருக்காது உறங்கியும் விட்டாள். சிறிது நேரம் கழித்து கண் திறந்து திரு பார்க்க, மகள் அவனை போலவே அமர்ந்து இருப்பதை பார்த்து தானாக முறுவல் தோன்ற ஊன்றி பார்த்தால் உறங்கி இருந்தாள். 

அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்து மனைவி என்ன செய்கிறாள் என்று பார்க்கச் சென்றான். படுத்திருந்தால் ஆனால் கண்களை மூடியிருக்கவில்லை, திரு உள்ளே வந்ததும் அவனைப் பார்க்க, பட்டு வேஷ்டி, வெண்பட்டு சட்டையில் இருந்தான் அவன். அப்போது தான் அவனை அவனின் உடையை கவனித்து பார்த்தாள். அது அவனிற்கு பொருந்தியிருக்க அவனையே பார்த்திருந்தாள்.

துளசி என்ன செய்கிறாள் என்று பார்க்க வந்த திரு, அவள் விழித்திருப்பதை பார்த்ததும் அவளை கவனிக்காதவன் போல, உடை மாற்றுவதற்காக சட்டையை கழற்ற அவனையே தான் பார்த்திருந்தாள்.

திருவை ரசித்தபடியே “ஷப்பா, எப்படியோ விஷேஷத்தை நல்ல படியாக நடத்தி முடித்து விட்டான்” என்பதாக.

திரு உடைமாற்றுகிறான் என்பதே இல்லாமல் அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள், அவன் இவளுக்கு திரும்பி தான் நின்றிருந்தான். ஆனால் திரு மாற்றிய இடத்தினில் பெரிய வுட்டன் கபோர்ட் இருக்க அதில் ஆளுயர கண்ணாடியும் இருக்க, துளசி அவனை பார்த்துக் கொண்டு இருப்பது அவனின் பார்வைக்கு தப்பவில்லை.

துளசிக்கு அது கவனத்தில் பதியவில்லை.

விடாமல் தன்னை பார்க்கும் மனைவியை தான் அவனும் விடாமல் பார்த்து இருந்தான். விஷேஷம் எந்த பிரச்சனையுமின்றி நன்றாக நடந்தது அவனுக்குள் ஒரு அமைதியை கொடுத்திருக்க, மகளோடு பேசியது அவள் சரியாக எடுத்தாளா இல்லையா என்று தெரியாத போதும் ஒரு நிம்மதியை கொடுத்திருக்க, மனைவியின் பார்வை ஒரு உற்சாகத்தை கொடுத்தது.

“இவ என் முன்னாடி டிரஸ் மாத்த மாட்டா திரும்பி நின்னு மாத்துவா, நான் முன்ன போய் நின்னாலும் புடவையை எடுத்து மேல போர்த்துவா. ஆனா இவ மட்டும் என்னை பார்ப்பளாமா” என்ற எண்ணம் ஓட கண்ணாடியில் அவளை பார்த்திருந்தான்.

திரு உடை மாற்றுகிறான் என்பது துளசியின் கவனத்தில் கிஞ்சித்தும் இல்லை. ஆனாலும் பார்வை எல்லாம் அவன் மீதுதான்.

“சைட் அடிக்கறா, ஆனா கொஞ்ச மாட்டா இவ, இவ கொஞ்சாம நான் இனி இவ பக்கத்துல போகவே மாட்டேன், சன்னியாசம் வாங்கற நிலைமை வந்தாலும் சரி! பார்ப்போம், இவளா நானான்னு! ஸ்டெடியா இருக்கணும் திரு. அவ பக்கத்துல நீ போயே நாலு மாசம் ஆச்சு, தடுமாறிடாதே! சொல்லியும் அவ உன் பக்கத்துல கூட வரலை!” என்ற யோசனையோடும் ஏக்கத்தோடும் திரு கண்ணாடி வழியாக பார்த்திருக்க,

இதனை சற்றும் அறியாத துளசியின் பார்வை கணவனை மட்டுமே பார்த்திருந்தது.   

 

Advertisement