Advertisement

திரு ரூமில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தான் , முகம் தலையணையில் முழுதாய் புதைந்து இருந்தது.

துளசி மெதுவாய் அவனை தொட அவனிடம் அசைவில்லை. விழித்து தான் இருக்கிறான் என்று தெரியும்.

“எழுந்துருங்க”

“என்னை கொஞ்சம் தனியா விடு, தூரப் போ, தொந்தரவு பண்ணாதே!” என்ற குரல் மட்டும் கேட்டது , சிறிது தலையை உயர்த்தி அதனை சொன்னவன் அவளின் முகத்தையும் பார்க்கவில்லை, அவளுக்கும் முகத்தினை காண்பிக்கவில்லை. மீண்டும் தலையணையினுள் முகத்தினை புதைத்து கொண்டான்

அவனின் குரலில் இருந்தது கலக்கமா, கோபமா, துளசியால் இனம் காண முடியவில்லை.

“சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா, நீங்க அதுக்கு கவலைப்பட வேண்டாம்” என்று சொல்ல, திருவிடம் எந்த பதிலும் இல்லை.

“ப்ளீஸ் கோபப்படாதீங்க” என்றாள் மீண்டும்.

அவ்வளவு தான் படுத்து இருந்தவன் அப்படியே எழுந்த வேகத்தில் தன்னை அடிக்கப் போகிறானோ என்று துளசி பயந்தே விட்டாள்.

“என்ன தாண்டி நினைச்சிட்டு இருக்க நீ. அவ உனக்கு மட்டும் தான் பொண்ணா? எனக்கு இல்லையா? என் பொண்ணை கோபப்பட வேண்டாம்னு என்கிட்ட சொல்வியா. அவ பேசினது என்னால இல்லை. உன்னால!”

“நீ வீட்டை விட்டு போய் அவளுக்கு ஒரு மோசமான எக்சாம்பிள்லா இருந்திருக்க. உனக்கு கோபமா இருந்த போது என்கிட்டே சண்டை போட்டிருந்தா என் பொண்ணும் என் கிட்ட சண்டை போடுவா. அப்படி தான் கோபத்தை காட்டுவா. இப்படி வீட்டை விட்டு போகலாம்னு இல்லை”

“போய்டு, என் கண்முன்னாடி நிக்காத போய்டு” என்று அவன் அவ்வளவு கோபமாகப் பேச,

“அம்மா திரும்பவும் நானா? என்மீது குற்றச்சாட்டா!” மனது மிகவும் தளர்ந்து போனது. அந்த நிமிடம் உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை!

கண்களில் நீர் நிறைய அவனை பார்க்க,

“என் முன்னாடி அழுது எனக்கு எரிச்சல் கிளப்பாதே! அப்புறம் இன்னொரு தடவை என்னை சாப்பிடு சொன்ன, என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. நீ இனிமே எனக்கு சாப்பாடு போடவே கூடாது. என்னவோ என்னை கல்யாணம் பண்ணினதே அதுக்கு தான்ற மாதிரி நீ அதை செஞ்சிட்டே இருக்க. வேண்டாம் போடி. என் முன்னாடி நிக்காத போடி” என்று கத்தினான்.

கதவு லேசாக திறந்திருக்க வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டு விடும் என்று அவன் முன் நிற்காமல் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து உள்ளிருத்த ரூமின் உள் புகுந்து கொண்டாள்.

அப்படி ஒரு அழுகை, உயிர்வாழும் ஆசையே விட்டது, எப்படி அவனிடம் நடந்து கொள்வது என்று தெரியவேயில்லை.

திருவிற்கோ “எனக்கு யாரும் தேவையில்லை, நான் இருந்து கொள்வேன், மனைவியும் தேவையில்லை மகளும் தேவையில்லை, இவர்கள் எல்லாம் ஒன்று! நான் வேறா? அப்படி தான் என் மகளின் மனதினில் இருக்கிறதா? எனக்கு அப்படி யாரும் வேண்டாம்!”  என்ற மனப்பான்மை தான் இடைவிடாது மனதினில் ஓடியது. நடப்பது அனைத்திற்கு மனது துளசியை தான் குற்றம் சொன்னது.

மூன்றே நாட்கள் விஷேஷதிற்கு இருக்க, அடுத்த நாள் காலையில் அப்பாவிடம் சொல்லிவிட்டான் “விஷேஷம் நடக்கட்டும், ஆனா சீர்ன்னு யாரும் செய்யக் கூடாது. அது துளசியோட அப்பா வீடா இருந்தாலும் சரி. உங்க கூட பொறந்தவங்களா இருந்தாலும் சரி சொல்லிடுங்க. செலவெல்லாம் என்னோடது மட்டும் தான். நமக்கு யார் சீர் செய்யற முறைன்னாலும் சொல்லிடுங்க, சீர் செஞ்சா தான் வருவோம்னு சொன்னா யாரும் வரவே வேண்டாம்!” என்று விட்டான் முடிவாக.

“திரு இது மரியாதையை இல்லை, அதுவும் துளசியோட அப்பா வீடு சீர் செய்யறது முறை. அதை நாம வேண்டாம்னு சொல்லக் கூடாது”

“எனக்கு எந்த மரியாதையும் தெரிய வேண்டாம், நான் யாருக்கும் இனி மரியாதை குடுக்கற மாதிரி இல்லை” என்று சொல்லி உணவு மேஜை முன் அமர்ந்தான்.

துளசி பரிமாற வர அவனின் ஒற்றை பார்வையில் தள்ளி போய்விட்டாள். அவனாகவே போட்டு சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டான். யார் பேசியும் சீர் செய்வதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

வேலவனும் ரத்னாவும் அவனை மில்லிற்கே சென்று பார்த்தனர், “ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? தாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிப்பு கூட கேட்டுக் கொள்கிறோம்” என்று கேட்டனர்.

“இல்லை அப்படி எதுவுமில்லை, நீங்கள் ஒருவர் செய்தால் அது தொடரும், என் அத்தைகள் செய்வார்கள், பின் எல்லோரும். நீங்கள் என்னை கொஞ்சமாவது மாப்பிள்ளை என்று நினைத்தீர்களானால் இதற்கு கட்டு பட்டு தான் ஆக வேண்டும். நான் வேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் விஷேஷதிற்கு வரமால் இருந்து கொள்ளுங்கள்” என்று சொல்ல விட்டான்.

என்ன செய்வார்கள் அவர்கள், மௌனமாக திரும்பிவிட்டனர். பிரசன்னாவிடமும் மீராவிடமும் சொல்ல, “எப்படி சொல்றாங்களோ அப்படி செய்ங்கம்மா” என்று மீரா சொல்ல,

“இப்போ தான் செய்யணும்னு இல்லைம்மா, வேற ஏதாவது சந்தர்பத்துல மீனாக்கு செஞ்சிக்கலாம் விட்டுடுங்க!” என்று அவனும் சொல்லி விட்டான்.

துளசியால் எதுவுமே செய்ய முடியவில்லை. வெறும் பார்வையாளர் மட்டுமே!

ஆம், திரு திரும்பவும் அவளிடம் பேசுவதே இல்லை!

மூன்று நாட்களாக வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட அவளுக்கு தெரியாது. ஒரு மோன நிலையிலேயே இருந்தாள். என்னவோ சரியில்லை என்று எல்லோருக்கும் புரிய அவளை யாரும் அதிகம் தொந்தரவு செய்யவில்லை.

ராதா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள் உடன் ஷோபானவையும் வேலை வாங்க , எல்லாம் அதன்படி நடந்தது. ராதா அவளின் வீடிற்கு போகவில்லை.   

விசேஷ நாள் காலையில் புண்ணியாதானம் செய்யப்பட்டது. வீட்டு ஆட்கள் சத்தியநாதன் கமலநாதன் குடும்பத்தினர் கூட வேலவன் வீட்டினர். வேறு யாரையும் வாருங்கள் என்று சொல்லப் படவில்லை. முதல் முறையாக தங்கை வீட்டினர் இல்லாமல் மேகநாதன் வீட்டினில் நடக்கும் விஷேஷம்.    

மதியமாக மண்டபத்தில் விஷேஷம், பார்லரில் இருந்து வந்து மீனாக்ஷியை அலங்கரித்து கொண்டிருக்க, மீரா அவளுடன் துணையிருந்தாள். வெகு மாதங்களுக்கு பிறகு பார்க்கும் சித்தியுடன் “சித்தி” என்று மீனாக்ஷி வாய் பேசிக் கொண்டிருக்க, துளசிக்கு மகள் தன்னை தேடாதிருப்பது அப்படி ஒரு ஆசுவாசத்தை கொடுத்தது .

மூன்று நாட்களாக அப்படி படுத்தி எடுத்து விட்டிருந்தாள். திருவின் புறம் பார்க்கவேயில்லை. திரு காலையில் சென்றால் அவன் இரவு தான் வருகிறான், அதற்குள் மீனாக்ஷி உறங்கி விடுகிறாள்.

காலையில் திரு அவளின் அருகில் இரண்டு நாட்களாக நிற்க, அப்போது துளசியும் அங்கே தான் இருந்தால், மீனா “அப்பா” என்று அவள் சொல்ல, மீனா திரும்பவேயில்லை.

“மீனா” என்று துளசி அதட்ட திரு சென்றிருந்தான்.

மூன்று நாட்களாக அப்பாவிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று தனிமை கிடைக்கும் போதெல்லாம் துளசி மகளுக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். எந்நேரமும் யாராவது இருப்பதால் அவளால் அதிகம் இதனைப் பற்றி பேச முடியவில்லை.

இப்போது அப்பாவிற்கும் மகளிற்கும் இடையில் எப்படி சரி செய்வது என்ற தலை வேதனை தான் துளசிக்கு.

திரு அவள் மீது சுமத்திய குற்றங்களை ஞாபகப் படுத்தக் கூட நேரமில்லை. 

எல்லோரும் மண்டபத்திற்கு சென்று விட, மீனாக்ஷிய பிரசன்னாவும் மீராவும் அவன் வந்திருந்த காரில் அழைத்துச் கூட வேலவனும் ரத்னாவும். அவர்கள் ஐந்து பேருக்கு அந்த கார் சரியாக இருந்தது.   

எல்லாம் சென்று சேர்ந்த பிறகு பார்த்தால் துளசி இன்னும் வந்திருக்கவில்லை.

அகிலாண்டேஸ்வரி திருவை கேட்க, திரு “நீங்க கூட்டிட்டு வரலையா” என்றான்.

இல்லையே அவ மீனாக்ஷி கூட வருவா இங்க மண்டபத்துல அழைக்க ஆள் வேணும்னு நான் அப்பா வெங்கடேஷ் ஷோபனா ராதா அப்பாவோட அம்பாசிடர் ல வந்துட்டோம்.

சித்தப்பா வீடு எல்லாம் அவங்க அவங்க வந்துட்டாங்க என்று அகிலாண்டேஸ்வரி சொல்ல     

“எங்க ப்ரசன்னா துளசி?” என்றான் திரு.  

“அவ உங்க கூட வருவான்னு  நினைச்சேன்” என்றான் அவன்.

“அக்கா வந்தா நான் தான் இடம் பத்தாது நீ மாமாவோட வான்னு சொன்னேன். நீங்க கூட்டிட்டு வரலையா” என்று மீரா கேட்கவும்,

“அச்சோ” என்றானது அகிலாண்டேஸ்வரிக்கும் திருவிற்கும். “நான் மண்டபத்திற்கு செல்கிறேன்” என்று திரு சொல்லியிருந்தால், “நானும் வருகிறேன்” என்று துளசி சொல்லியிருப்பாள் ஆனால் திரு தான் சொல்லவேயில்லையே!

அகிலாண்டேஸ்வரி அவனை பார்த்த பார்வையில் திரு பஸ்பமாகாமல் தப்பித்து கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும்.

“போடா போய் கூட்டிட்டு வா” என, திருவும் உடனே கிளம்பினான். மண்டபம் வீட்டிலிருந்து சற்று தூரம்.

பாதி வழி வரும் போதே துளசி நடந்து வந்து கொண்டிருப்பது தெரிய, அப்படி ஒரு கோபம் வந்தது திருவிற்கு. துளசி மேல், கூடவே அவன் மேலும்.

ஆம்! ஒரு நிராதரவான தோற்றத்தில் துளசி வந்து கொண்டிருந்தாள். எதிரில் வரும் இவனை கவனிக்கக் கூட இல்லை.  

அருகில் சென்று இவன் பைக்கை நிறுத்த யாரோ என்று பதறி விலகினாள்.

பின் இவனை பார்த்ததும் ஆசுவாசமாகி நிற்க,

“ஏன் ஏறுன்னு சொன்னா தான் ஏறுவியோ?” என்று திரு வார்த்தைகளை கடித்து துப்ப, பதில் பேசாமல் ஏறி அமர்ந்தாள்.         

Advertisement