Advertisement

அத்தியாயம் பதினாறு :

திரு அவளின் கை பிடித்து சில அடிகள் நடக்க வைக்க, தெளிந்தவள் அவனிடமிருந்து கைகளை விலக்கிக் கொண்டு அவளாக நடக்க ஆரம்பிக்க, பார்வை மகளின் புறம் தானாத் திரும்பியது.

அடுத்த நிமிடம் உணர்வுக்கு வந்து விட்டாள். ஆம்! மகள் தான் அப்படி அழுது கொண்டிருந்தாளே, மகளை நோக்கி அப்படி வேகமாகச் செல்ல,

எதற்கு இப்படி செல்கிறாள் என்று திருவும் பின்னோடு சென்றான்.

துளசி அருகில் சென்றதும் மீனாக்ஷி அம்மாவை அணைத்துக் கொண்டு அப்படி ஒரு அழுகை!

திரு அருகில் வரவும், அங்கே இருந்த ரத்னா சற்று தள்ளி சென்றார்.

“ஒன்னுமில்லை மீனா, அம்மா அழலை பாறேன்! நீ இப்படி அழக் கூடாது” என துளசி மெல்லிய குரலில் மகளை சமாதானம் செய்ய,

அதே குரலில் மகள் சொன்ன வார்த்தை, திரு அப்படியே நின்று விட்டான்!

ஆம்! மீனாக்ஷி துளசியிடம் “மா, நாம ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடலாமா” என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

திருவின் இதயம் நின்று பின் துடித்தது. துளசி சுற்றும் முற்றும் பார்த்தாள், யார் காதிலாவது விழுந்து விட்டதா என்று.

எல்லோரும் இவர்களை தான் பார்த்து இருந்தனர். ஆனால் மீனாக்ஷி அதை மிகவும் மெல்லிய குரலில் சொல்லியதால் யார் காதிலும் விழுந்து இருக்காது என்று புரிந்து ஆசுவாசமானவள்,

அங்கே இருந்தே ராதாவிற்கு “அண்ணி எல்லோருக்கும் என்ன வேணும்னு பாருங்க, நீங்களும் சாப்பிடுங்க, நடந்ததை பெருசு பண்ண வேண்டாம். இவருக்கு எப்பவுமே ரொம்ப டென்ஷன் ஆகிடும். நடந்ததை விடுங்க!” என்று மகளை அணைத்தவாறே சொல்ல,

சூழலை இலகுவாக்க “சாப்பிடுங்க” என்று தருணிடம் ராதாவும் சொன்னாள்.

தருண் உணவினை வாயினில் வைக்க அரைகுறையாக என்றாலும் உண்ண ஆரம்பித்தனர். திரு இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. மகளையும் மனைவியையும் வெறித்து பார்த்து இருந்தான்.

யாரின் கவனமும் கவராத வகையில் மெல்லிய குரலில் “அப்பாவை விட்டு அம்மா எப்போவும் எங்கேயும் போகமாட்டேன் சரியா. நான் மட்டுமில்லை மீனாக்ஷியும் போக மாட்டா” என்று சொல்லிக் கொண்டே பார்வையை சுழல விட,

அங்கே அகிலாண்டேஸ்வரியும் மேகநாதனும் பார்க்க இன்னும் பரிதாபமாக இருந்தனர்.

“அத்தை ஏன் இப்படி நிக்கறீங்க, நான் எங்கேயும் போக மாட்டேன் இந்த வீட்டை விட்டு. நான் போகலைன்னா இவரும் போக மாட்டார்” என்று அவரையும் உணர்வுக்கு கொண்டு வர பேசினாள்.

சற்று தெளிந்தாலும் இந்த சச்சரவுகளில் ஓய்ந்து போனர் பெரியவர்கள்.  ராதாவின் பார்வை முழுக்க அப்பா அம்மாவின் மீது தான்.

ராதா உண்டது போதும் என்று எழுந்து விட்டவள், “மா, கொஞ்சம் நேரம் உட்காரு” என்று அகிலாண்டேஸ்வரியை உட்கார வைத்தவள், தருணிடம் “நான் இங்கேயே இருக்கேன், நீங்க உங்க அம்மாவையும் பெரியம்மாவையும் கூப்பிட்டிட்டு போங்க” என்று சொல்லிக் கொண்டே மகனிடம் அதட்டினாள், “போடா, போய் தாத்தா பக்கத்துல உட்காரு” என்றாள்.

இப்போது பார்வை எல்லாம் அண்ணன் மீது, அதன் வட்டத்தில் தான் துளசியும் மீனாக்ஷியும் இருந்தனர். அவள் வளர்ந்த விதம் அந்த வீட்டினில் ஞாபகத்திற்கு வந்தது. சிறு சண்டையோ சச்சரவோ எதுவுமே கிடையாது. இளவரசியாய் வளர்ந்தால். இப்போது திருமணதிற்கு பின் தான் ஆட்களை உணர, பழக ஆரம்பித்து இருந்தாள். அவளுக்கெல்லாம் எதற்கும் அழுத மாதிரி கூட ஞாபகத்தில் இல்லை.

இப்போது தன் அப்பாவின் வீடு எப்போதும் சண்டையாக இருப்பது, அதுவும் தன் பெரியத்தை சின்ன அத்தையினால் அவளுக்கு ஒரு எரிச்சலை கொடுத்தது. என்னை அருமை பெருமையாய் வளர்த்த என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் நான் கொடுக்கும் நிம்மதி இதுதானா என்று தோன்ற இனி அந்த இடத்தினில் ஒரு பிரச்னையும் வரக் விடக் கூடவே கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

மெதுவான குரலில் வெகுவாக துளசி மகளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க “திரு” என்ற மனிதன் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தான்.

என்ன வாழ்க்கை என்னது என்ற எண்ணம் தான்

அப்பா அம்மாவிற்கும் நல்லவனாக முடியவில்லை, காதலித்த பெண்ணுக்கும் இல்லை, கட்டிய மனைவிக்கும் இல்லை இப்போது மகளுக்கும் இல்லை.

அமைதியாக ரூமின் உள் சென்று விட்டான்!

துளசி அவனை தான் பார்த்து இருந்தாள், அவனின் முகமே அவளை எதோ செய்தது. ஆனால் மகளை விட்டு விலக முடியவில்லை. மீனாக்ஷியுடனே இருந்து அவளை உண்ண வைத்து உறங்க வைத்தாள்.

ராதா அவர்களை வீட்டிற்கு அனுப்புவது போல ஏறக் குறைய துரத்தி விட்டவள், சாராதவிடம் சொல்ல முடியாது சித்ராவிடம், “அத்தை நீங்க விஷேஷம் அன்னைக்கு வந்தா போதும். வீட்ல இருங்க!” என்று பளிச்சென்று கூறினாள்.

சித்ரா மகனை முறைக்க, தருணை பார்த்த ராதா, “அப்புறம் அண்ணா கிட்ட வாங்கின பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கொடுத்திடுங்க! அப்போ தான் என்னை வீட்டுக்கு விடுவானாம் இல்லை விட மாட்டானாம், மதியமே அண்ணா என்கிட்டே சொன்னான்!” என்று மின்னாமல் முழங்காமல் தலையில் இடியை இறக்கியவள், “அதுக்காக தான் உங்களை இங்கே வரச் சொன்னான், ஆனா அவன் சொல்லும்முன்ன பிரச்சனையை நீங்க பெருசாக்கிட்டீங்க” என்று முடித்துக் கொண்டாள்.

உண்மையில் திரு அப்படி சொல்லியிருக்கவேயில்லை.

“திரு அப்படி சொன்னானா?” என்று நம்பாமல் தருண் கேட்க,

“வேணும்னா அண்ணாவை கூப்பிட்டு விடறேன் கேளுங்க” என்று சொல்லிவிட்டாள்.

“வேண்டாம்” என்று எரிச்சலாக அவளிடம் சொன்னவன்.

“ஆமாம், குடுக்கலைன்னா உன்னை இங்கேயே வெச்சிக்குவாங்களா” என்று கேட்டான்.

“அப்போ குடுக்கற ஐடியா இல்லை, என்னை இப்படியே தொலைச்சு தலைமுழிகிடலாம்னு பார்க்கறீங்க” என்று ராதா பேச்சினை மாற்றி அவனுடன் சண்டை பிடித்து உள்ளே சென்று விட்டாள்.

இனி இந்த சண்டையை திருவிற்கு தருண் பணம் கொடுக்கும் வரை கடை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். “என்னுடைய அப்பா வீட்டில் இருந்து எனக்கு தெரியாமல் நீ பணம் வாங்குவாயா” என்ற கடுப்பு ராதாவிற்கு இருந்தது. கூடவே திருவிடமும் சண்டை பிடித்து இருந்தாள். “எதுக்கு அவருக்கு பணம் கொடுத்தே, என் வீட்டுக்காரன்னு தானே, அப்போ ஏன் என்கிட்டே சொல்லலை” என்று.

“எனக்கு என்ன தெரியும், உனக்கு தெரியாம என்கிட்டே பணம் வாங்குவார்ன்னு” என்று திரு சொல்லியிருந்தான்.

வீடே கனமாகி விட்டது. ஆனாலும் வேலைகள் அது பாட்டிற்கு நடந்தது. வசுமதியும் மேகலாவும் தங்கள் கணவரிடம் இதனை மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே உண்ண,

“அக்காங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஆகிடுச்சு, என்னன்னு நாங்க கேட்கறோம்” என்று பேசினர்.

“வேண்டாம்” என்று மேகநாதன் ஒற்றை வார்த்தையில் முடித்து உறங்க சென்று விட்டார். பின்பு அவர்களும் உண்டு போக, ரத்னாவும் உண்டு சென்று விட்டார். 

கடைசியாக அங்கே இருந்தது அகிலாண்டேஸ்வரி, வெங்கடேஷ், ஷோபனா, ராதா மட்டுமே, மீனாக்ஷி உறங்க ஆரம்பிக்க துளசி அவளின் பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்.

திரு உள்ளே சென்றவன் வரவே இல்லை.

“துளசி அவ தூங்கிட்டான்னா வா சாப்பிடு” என்று அகிலாண்டேஸ்வரி அழைக்க,

“இன்னும் சரியா தூங்கலை அத்தை, நீங்க சாப்பிடுங்க” என்று துளசி சொல்ல, அதற்கு தக்கார் போல மீனாக்ஷி கண்விழித்து அவளின் அம்மா பக்கத்தில் இருக்கிறாளா என்று பார்த்தாள்.

“தூங்கு, தூங்கு, அம்மா இங்கேயே தான் இருப்பேன்” என்று மீனாட்சியிடம் சொல்ல பின் தான் கண்ணை மூடினாள்.

ராதா அங்கேயே அவளுக்கு கொண்டு போய் சாப்பிடக் கொடு என்று சொல்ல, துளசிக்கு ஒரு ப்ளேட்டில் வைத்துக் கொடுத்தாள்.

“உங்கண்ணா இன்னும் சாப்பிடலை அண்ணி” என்று திருவைச் சொல்ல,

“அம்மாடி நான் எல்லாம் அவனைக் கூப்பிட மாட்டேன், கோபப் படுவான்!” என்று ராதா சொல்லிவிட்டாள்.

“அத்தை நீங்க கூப்பிடுங்க அத்தை”  

“நான் கூப்பிட மாட்டேன், என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லிட்டான்” என்று அகிலாண்டேஸ்வரி ஆதங்கப்பட்டார்.

“அப்போ மீனாக்ஷி நல்லா தூங்கின பிறகு நான் போறேன், இதை மூடி வெச்சிடுங்க” என்று துளசி சொல்ல,

“துளசி” என்று ஒரு அதட்டலிட்ட அகிலாண்டேஸ்வரி, “சாப்பிடு முதல்ல, உனக்காக இல்லை. உன் பிள்ளைக்காக. அவன் சரியா சாப்பிடலை அவ்வளவு தான். ஆனா சாப்பிட்டான். ஒரு நாள் சாப்பிடலைன்னா ஒன்னும் ஆகிட மாட்டான். நீ சாப்பிடு!” என்று கோபமாய் பேசினார்.

அதற்கு பணிந்து மூன்று இட்லிகளை உள்ளே தள்ள, இன்னும் ஒரு இட்லியை அவளை கேட்காமலேயே ராதா வைத்தாள். அவர்களுக்குள் அப்படி பெரிய சிநேகிதம் இல்லாவிட்டாலும் பெரிதாக சண்டைகள் இருந்ததில்லை. அதுவும் ராதா பிள்ளை பெறுவதற்காக இங்கே வந்த போது துளசி அவளை அப்படி கவனித்து கொள்வாள் அகிலாண்டேஸ்வரியை விட.

“சாப்பிடுங்க” என்று ராதாவும் அதட்ட, எப்படியோ உண்டு முடித்தாள்.

ஷோபனா துளசியை தான் பார்த்து இருந்தாள். வீட்டில் உள்ள அத்தனை பேரும் அதட்டுகிறார்கள், ஆனாலும் சற்றும் முகம் சுளிக்காமல் எப்படி இருக்க முடிகிறது என்று.

மீனாக்ஷியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள். துளசி எழுந்து கை கழுவியவள் , “அத்தை, இன்னைக்கு இங்கே நான் படுத்துக்கறேன். மீனாக்ஷி என்னை தேடுவா.

இங்க கொஞ்சம் தள்ளி பெட் போட்டு படுத்துக்கறேன்” என்று சொல்லி ரூமின் உள் சென்றாள்.

Advertisement